Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 46

அத்தியாயம் – 46

 

“என்ன நிதின்! எங்க அண்ணி முகமே சரி இல்ல, என்ன சொன்னீங்க அவங்க கிட்ட?” என்று சம்யுக்தா தன் காதலனை முறைத்தபடி கேட்க,
​”நானா? நான் ஒன்னும் சொல்லலயேம்மா… உன் அண்ணனுக்கும் எனக்கும் உள்ள நட்பை பத்தி தான் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன்,” என்று கூறிய நிதின், “அப்படி தானேம்மா?” என்று மிருதுளாவிடம் கேட்க, அவளும் தன் மனவலியை மறைத்து முகத்தை இலகுவாக்கிக் கொண்டு ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்…

​நிதின் எதார்த்தமாகச் சொல்லும் விஷயங்கள் கூட மிருதுளாவின் மனதை அடியோடு கிளறுகின்றன என்பதைப் பாவம் அவன் அறியவில்லை, அவன் பாட்டிற்கு ரன்வீரின் நினைவுகளைச் சொல்லிக்கொண்டே போனான். ஆனால், சம்யுக்தா தன் அண்ணியின் வாடிய முகத்தைக் கண்டே ஏதோ சரியில்லை என்பதை அறிந்து கொண்டாள்.



Advertisement

​”இல்ல இல்ல… அண்ணி முகமே சரி இல்ல” என்று சம்யு மீண்டும் அழுத்தமாக சொல்ல, “அதெல்லாம் எதுவும் இல்ல சம்யு, நான் நல்லா தான் இருக்கேன்,” என்று மழுப்பிய மிருதுளா, “நான் கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்துக்கட்டுமா?” என்றாள். அவளுக்கு அமைதி தேவைப்பட்டது…

​”சரி வா உட்கார்ந்து பேசுவோம்,” என்று நிதின் அழைக்க, “இல்ல அண்ணா… நீங்க போங்க, சம்யு கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க, நான் கொஞ்ச நேரம் இங்கே தனியா உட்கார்ந்திருக்கேன்,” என்று அவர்களை அனுப்பி வைக்க முயல,.. ​”சரி… நீ போன் வச்சிருக்க தானே?” என்று பாதுகாப்பு கருதி நிதின் கேட்க, “இல்லையே… நான் கொண்டு வரல, வினோத் தான் கொண்டு வந்தான்,” என்றாள் மிருதுளா.

​”சம்யு, நீயாவது கொண்டு வந்தியா?” என்று நிதின் கேட்க, அவளும் “இல்லையே” என்று அவளும் உதட்டைப் பிதுக்கிட,.. ​”சரியா போச்சு போ! ரெண்டு பேருமே கொண்டு வரலையா? சரி, வினோ எங்கே?” என்று நிதின் தேட, “அவன் ஐஸ்கிரீம் சாப்பிட போறேன்னு ஓடிட்டான்,” என்று சம்யு கூறினாள்.

Advertisement

​நிதின் யோசிக்காமல் தனது போனை எடுத்து மிருதுளாவிடம் கொடுத்தவன்,.. “இந்தா, போனை வச்சுக்கோ. நாங்க உனக்குச் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரோம்,” என்று சொல்ல, சம்யு இடைமறித்து, “நான் வேணும்னா அண்ணி கூட இருக்கேனே?” என்றாள் அக்கறையுடன்.

Advertisement

​”சம்யு ப்ளீஸ்… கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கேனே,” என்று மிருதுளா கெஞ்சும் குரலில் கேட்கவும், அவளது மனநிலை புரிந்த சம்யுவும் நிதினோடு சற்று தள்ளி இருந்த கடைகளை நோக்கிச் சென்றாள்.

நிதின் கொடுத்த போனை கையில் வைத்தபடி, கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. அந்த போன் லாக் செய்யப்படாமல் இருக்க, திடீரென ஒரு மெசேஜ் வந்த சத்தம் கேட்டுச் சாதாரணமாகப் பார்த்தவள், திரையில் ரன்வீர் என்ற பெயரைப் பார்த்ததும் அவளது இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது,

தன்னை அறியாமலேயே அந்த வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனைத் திறந்து பார்க்க, ​ரன்வீர் நிதினிற்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பது தெரிந்தது, இங்குள்ள பிசினஸ் விஷயங்களை நிதின் கவனித்துக் கொள்வதால், அது தொடர்பான தகவல்கள் தான் அதில் இருந்தன. அவளுக்கு அந்த பிஸ்னஸ் விவரங்கள் தேவையில்லை, அவளது ஆன்மா ஏங்கியது அவனது குரலுக்காக மட்டுமே. கண்கள் கலங்க, மீண்டும் மீண்டும் அந்த மெசேஜைப் பிளே செய்து கேட்டவளுக்கு பல மாதங்களுக்குப் பிறகு அவன் குரல் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

Advertisement

​அவளது தேடல் அந்த ஒரு மெசேஜோடு நிற்கவில்லை, ஆர்வ மிகுதியால் பழைய மெசேஜ்களையும் தேடிச் சென்றாள். அப்படித் தான் ஒரு குறிப்பிட்ட வாய்ஸ் மெசேஜ் அவளை சுருக்கென்று தாக்கியது.

​அந்த மெசேஜில் நிதின், “ரன்வீர், விஷ்வா தான் கொலை செய்தான் என்பதற்கான வீடியோ ஆதாரம் கிடைச்சிருச்சு, மிருதுளா உண்மையை உணர்ந்து இப்போ உன்னைப் பார்க்கத் துடிக்கிறா… உடனே ஊருக்குக் கிளம்பி வா,” என்று உருக்கமாகக் கேட்டிருக்க,..
​அதற்கு ரன்வீர் அனுப்பிய பதில் தான் மிருதுளாவை நிலைகுலையச் செய்தது..

​”ஆதாரம் இருந்தா தான் அவ என்னை நம்புவாளா நிதின்? நான் எத்தனை முறை அவகிட்ட கெஞ்சினேன்? ஒருமுறையாவது என் வார்த்தையை அவ நம்பினாளா? ஆதாரத்தோட நம்பின பிறகு தான் அவ என்னை ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை, எனக்கு அவளைப் பார்க்கவோ, அவளோட வாழவோ இஷ்டம் இல்லை, இனிமே அவளைப் பத்தி என்கிட்ட பேசாத!”
​அவன் குரலில் இருந்த அந்த ஆழமான வலியும், பிடிவாதமும் மிருதுளாவைத் தூக்கி எறிந்தது.

‘ஆதாரம் இருந்தால் தான் நம்புவாளா?’ என்ற அவன் கேள்வி அவளது மனசாட்சியைச் சுட்டது. உண்மைதான், அன்பு இருக்கும் இடத்தில் ஆதாரங்களுக்கு வேலை இல்லையே! அவன் எத்தனை முறை மன்றாடி கூறினான், ஆனால் அவள் தான் அவனை நம்பவே இல்லையே,..

இப்போது ​அவன் சொல்வதிலும் தவறு இல்லையே! தன் மீது அத்தனை காதல் வைத்திருந்தவன், தன் வார்த்தையைத் தன் மனைவி நம்பவில்லை என்ற ஆதங்கத்தில் தான் இவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறான்.

அந்த மெசேஜைக் கேட்டு சிலையாக அமர்ந்திருந்த மிருதுளாவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக மணலில் விழுந்தது, சரியாக அந்த நேரம், நிதினும் சம்யுக்தாவும் கையில் ஐஸ்கிரீமுடன் அவளை நோக்கி வருவதைக் கண்டதும், சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள், உள்ளுக்குள் ரணமாய் வலித்தாலும், அவர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காகத் தன் வலியை மறைத்துக்கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி சாப்பிடத் தொடங்கியவளுக்கு, அந்த ஐஸ்கிரீமின் இனிப்பு கூட கசப்பாகவே இருந்தது.

​நாட்கள் மெல்லக் கடந்தன. மிருதுளா இப்போது ஆறு மாதக் கர்ப்பகாலத்தைத் தாண்டி ஏழாம் மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள், வீட்டில் உள்ளவர்களுக்கு அவளது உடல்நிலை மற்றும் மனநிலை மீது பெரும் கவலை இருந்தது. எப்படியாவது அவளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்த பெரியவர்கள், அவளுக்குச் சீமந்தம் செய்யலாம் என்று ஆர்வமாகப் பேசி முடித்தனர்.

​காயத்ரி, சுமதி மற்றும் சமுத்திரவேல் மூவரும் மிருதுளாவின் இதனை பற்றி கூற, அவளோ… ​”வேண்டாம் அத்த… எனக்கு எந்த விசேஷமும் வேண்டவே வேண்டாம்,” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

​”ஏம்மா… இது ஒரு மங்கல விசேஷம், உன் நல்லதுக்குத் தானே சொல்றோம்,” என்று சுமதி எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை.

​”அவர் பக்கத்துல இல்லாம, நான் மட்டும் சந்தோஷமா விசேஷத்தை கொண்டாடுறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்லை, அவர் இல்லாத எந்த கொண்டாட்டமும் வேண்டாம், ப்ளீஸ்… என்னை வற்புறுத்தாதீங்க,” என்று கைகூப்பி அழுதாள்.

​இந்த சீமந்தத்தின் மூலமாவது அவளது முகத்தில் ஒரு புன்னகையைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, அவளது மறுப்பு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இருப்பினும் அவளது விருப்பத்தை மீறி எந்த ஏற்பாட்டையும் செய்ய அவர்கள் விரும்பவில்லை.

குழந்தை பிறக்கும் நேரம் ரன்வீர் வந்துவிடுவான் என்றுதான் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்தனர், எவ்வளவுதான் கோபங்கள் இருந்தாலும், தன் ரத்தமான குழந்தையைப் பார்க்கவாவது அவன் ஓடி வருவான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது, மிருதுளாவிற்கு அந்த நம்பிக்கை முழுதாக இல்லையென்றாலும், வீட்டின் பெரியவர்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளால் அவளுக்குள்ளும் ஒரு சிறு நம்பிக்கை துளிர்விடத்தான் செய்தது.

​ஆனால், ரன்வீரின் உயிர் இந்த உலகத்தில் ஜனித்த பிறகும் அவன் வரவில்லை. ஆம், சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு மிருதுளா ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள், அந்தக் குழந்தை அப்படியே தன் தந்தை ரன்வீரைத் தான் உரித்து வைத்திருந்தது, தங்கள் வீட்டின் அடுத்த வாரிசைப் பார்த்ததும் குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் ஆனந்தம் தாண்டவமாடியது.

“அப்படியே ரன்வீர் குட்டி எப்படி இருப்பானோ, அதே மாதிரி இருக்கான்!” என்று சமுத்திர வேல் நெகிழ்ந்து போனார்..

​தன் மகனின் வாரிசை கையில் ஏந்திய காயத்ரிக்கு, பேரன் பிறந்த சந்தோஷத்தை விட, மகன் இப்போது கூட வராமல் போய்விட்டானே என்ற வேதனை தான் மேலோங்கியது, அவரது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரை வடித்தன, ரன்வீரின் இந்த நீண்ட கால மௌனத்தையும் பிடிவாதத்தையும் மிருதுளாவை தவிர வேறு யாராலும் ஆற்ற முடியாது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது..,..

ஓரிரு மணி நேரத்திற்கு பிறகு ​மிருதுளா மயக்கம் விடுபட்டு படுக்கையில் அமர்ந்திருக்க, அவளது கையில் அவள் குழந்தையைக் கொடுத்தனர், அந்த பிஞ்சு முகத்தைப் பார்த்த மிருதுளாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி பொங்கினாலும், மறுபுறம் தன்னவன் அருகில் இல்லையே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது.

அதே நேரம் லண்டனில், தன் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக அந்தப் பனி தேசத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரன்வீர், அங்கிருக்கும் குளிர் அவன் உடலை மட்டும் தீண்டவில்லை, அவன் இதயத்தையும் உறைந்து போகச் செய்திருந்தது.

​’மிருதுளாவுக்கு நாளைக்கு டெலிவரி டேட், உன் குழந்தை இந்த உலகத்துல வந்து ஜனிக்கிற நாள், வராம இருந்துடாத ரன்வீர்… உனக்காக நாங்க எல்லாரும், உன் குழந்தையும் காத்துட்டு இருப்போம்’ என்று அவன் அன்னை நேற்று போனில் கூறிய வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரமிட்டன. ஆனாலும், அப்போதும் அவன் ஒரு கற்சிலையாகத்தான் நின்றான்.

​’ஒரு கொலைகாரனை என் குழந்தை அப்பான்னு கூப்பிட போகுது, இது எவ்வளவு பெரிய கொடுமை’ என்று மிருதுளா அன்று ஆத்திரத்தில் வீசிய வார்த்தைகள், அவனுக்குள் இருந்த மென்மையான ரன்வீரை என்றோ கொன்றுவிட்டன. அந்த ரணம், அவன் மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட பெரியதாக அவனுக்குத் தெரிந்தது.

​அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அந்தத் தருணம், மேஜை மேல் இருந்த அவன் போன் மெசேஜ் வந்ததற்கான ஒலியுடன் அதிர்ந்தது. ‘யாராக இருக்கும்?’ என்ற மெல்லிய சலனத்துடன் போனை எடுத்துப் பார்க்க, அது நிதினிடம் இருந்து வந்திருப்பது தெரிந்தது…

​”கங்கிராட்ஸ் மச்சான்! உனக்கு பையன் பிறந்திருக்கான்…”
​என்ற வாழ்த்தோடு, கீழே ஒரு புகைப்படமும் பதிவாகி இருந்தது. நடுக்கத்தோடு அந்தப் புகைப்படத்தைத் தொட்டுத் திறந்த ரன்வீர் அங்கே, மெல்லிய வெள்ளை துணியில் சுற்றப்பட்டு, கண்கள் மூடிய நிலையில் ஒரு பிஞ்சு உயிர் இருப்பதை கண்டு திகைத்து போனான்,..

அந்த குழந்தை ​அப்படியே அவனை தான் உரித்து வைத்திருந்தான், ரன்வீரின் அதே நெற்றி, அதே மூக்கு, அதே இதழ்கள்… தன் ரத்தத்தை, தன் பிம்பத்தை அந்த சின்னஞ்சிறு உருவத்தில் கண்ட மாத்திரத்தில், ரன்வீரின் கல் மனம் ஒரு நொடியில் சுக்குநூறாக உடைந்து சிதறியது.

நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்தவனின் கண்கள், அடுத்த கணம் அருவியாய் நீரைச் சொரிந்தன. திரையில் தெரிந்த அந்த சிறு பிம்பத்திற்குப் பல முத்தங்கள் கொடுத்து, போனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ரன்வீர்.

​அந்த பிஞ்சு முகத்தைப் பார்க்கவும், தன் கைகளில் ஏந்தித் தூக்கிக்கொள்ளவும் அவன் மனம் துடியாய்த் துடித்தது. ஒரு தந்தையாக அவனது ஒவ்வொரு நரம்பும் தன் மகனைச் சேர ஏங்கின. ஆனால், அவன் வளர்த்து வைத்திருந்த அந்த இரும்பைப் போன்ற பிடிவாதம் அவனை நகர விடவில்லை.

​மிருதுளா சொன்ன அந்த ஒற்றை வாக்கியம், அவன் இதயத்தில் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்தது, அவனது ரோஷம்,  தந்தையின் பாசத்தை விட சற்று ஓங்கி நின்றது.

​’சாரிடா கண்ணா… உன் அப்பாவை ஒரு கொலைகாரன்னு இந்த உலகம் சொன்னாலும் பரவாயில்லை, ஆனா உன் அம்மா சொன்னதை மட்டும் என்னால தாங்கிக்க முடியல. உன்னைப் பார்க்க துடிக்கிறேன், ஆனா அவ முகத்துல முழிக்க எனக்கு விருப்பம் இல்லை’ என்று அவன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து வலியுடன் கூறினான்,..

இப்போதும் ​அவன் ஊருக்கு போக போவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, போனை மேஜையில் வைத்துவிட்டு மீண்டும் ஜன்னல் வழியே வெறித்துப் பார்க்கத் தொடங்கினான். ஆனால், இப்போது அவன் பார்வை வெறுமையாக இல்லை, அது தன் மகனின் உருவத்தையே அங்குத் தேடிக்கொண்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!