முதல் காதலை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும் கணவன், தன் காதலை உணர்வானா எனத் தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கும் அவனை நெருங்க துணிவில்லை. எதுவாக இருதாலும், ஷ்ரவனே முன்வந்து கேட்கட்டும் எனக் காத்திருந்தாள்.
ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு அவள் மனத்தைப் புண்படுத்தி விடப்போகிறேனோ என்ற பயத்திலேயே ஷ்ரவன், பெரும்பாலான பொழுதுகளை உறங்குவதுபோல நடித்துக் கழிக்க, மருத்துவ வாசமும் முடிந்தது.
Advertisement
அந்த வாரக் கடைசியில் ஷ்ரவன் வீட்டிற்கு வரவும், திலகாவும் தாமோதரனும் ஊருக்குத் திரும்பவும் சரியாக இருந்தது. அவன் சமீபகாலத்து நிகழ்வுகளை மறந்துவிட்டான் என்றும், அதுவும் தற்காலிகமான மறதி மட்டுமே என ரம்யாவும் தருணும் வீட்டின் பெரியவர்களிடம் கட்டுக்கதைகள் சொல்லிச் சமாளித்தனர். அதனால் நோயாளி – செவியலரைப்போல அளவாய்ப் பேசி உறவாடிய ஜோடிகளின் மனப்போராட்டங்களைக் கவனிக்கத் தவறினார்கள்.
தருணும், வீட்டுப் பொறுப்புகளை அம்மாவிடமும், அலுவல் வேலைகளை அப்பாவிடமும் கைமாற்றிவிட்டு, மனையாளைக் காண தஞ்சாவூருக்குச் சென்றிருக்க, அது இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தை தங்குதடையின்றி தொடர வெகுவசதியாகிப் போனது.
விடிந்தும் விடியாமலும் காய்ந்த எண்ணெயின் வாசம் காற்றில் வீச, தூக்கம் கலையாத நிலையில் சமையலறையை நோக்கி நடந்தாள் ரம்யா.
Advertisement
மருமகளைக் கண்டதும், “குட் மார்னின் ரம்யா,” என்ற திலகா, “இட்லியும் தேங்காய் சட்னியும் அரைச்சு வச்சிருக்கேன்; லன்ச்க்கு கேரட் கூட்டும் மிளகு ரசமும் செஞ்சிட்டேன்; சாதம் மட்டும் சூடா வச்சுக்கோ. எங்களுக்காக காத்திருக்காம நேரத்துக்குச் சாப்பிடுங்க,” வடைகளை எண்ணெயில் இட்டபடி பட்டியலிட்டார்.
Advertisement
“ஏன்ம்மா?” அடுப்பையும் மாமியாரையும் மாறி மாறி பார்த்து விழித்தாள்.
‘மணியடித்தால் சோறு!’ என்ற ரீதியில் மூன்று மணி நேரத்திற்கொரு முறை, உணவுத்தட்டுடன் டானென்று வந்து நிற்கும் மனைவியின் பழக்கத்தில் ஒரு வாரமாக ஊறிப்போயிருந்தான். வாய்திறந்து கேட்கவோ, ருசியைப் பற்றி விமர்சிக்கவோ கூட இடம்தராமல் தன் விருப்பு வெறுப்புகளை அறிந்து உபசிரிக்கிறாள் எனவும் உணர்ந்திருந்தான்.
“கதவைத் தட்டலாமா, அம்மாவைக் கேட்கலாமா, தானே பரிமாறிக் கொள்ளலாமா,” என சாபூத்ரீ போடாத குறையாக மூளையைக் கசக்கியவன், உணவு மேஜை அருகே நடந்தான்.
சாப்பிட அமர்ந்தவனுக்கு வழக்கத்தை மாற்ற மனம் இடம் கொடுக்கவில்லை. தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தான். சிந்தனையில் கலந்திருந்தவன், காலியான டம்ளரைக் கை தவறி தட்டிவிட, அது தரையில் உருண்டோடிய சத்தத்தில் பதறியடித்து வெளியே வந்தாள் ரம்யா.
கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள், மடமடவென்று ஐந்து இட்லிகளைத் தட்டில்வைத்து, மூன்று தேக்கரண்டிகள் சட்னியை அதன்மேல் படாமல் ஊற்றி அவனுக்குப் பரிமாறினாள்.
அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள் என அவள் உப்பிய கண்கள் பறைசாற்றின.
பகல் பொழுதில் படுத்துறங்கும் ரகமில்லை அவள் என்று சொல்லும் அளவிற்கு அவளைப்பற்றி அந்த ஒரு வாரத்தில் கற்றிருந்தான் ஷ்ரவன்.
“உடம்புக்கு முடியலையா ரம்யா,” தன்னையும் மீறி அவன் கவலை வார்த்தைகளாய் உருமாற,
இருபத்து மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னை பெயர் சொல்லி அழைத்துப் பேசும் கணவனின் கரிசனத்தில், தேக்கிவைத்த ஏக்கம் எல்லாம் மடம் திறந்த வெள்ளமாய் அவள் கண்களின் வழியே வழிந்தது.
தன் அனுமானங்கள் யாவும் எத்தனை தவறானது என நொந்துகொண்டவன், “உன் மனசை புண்படுத்தும்படி ஏதாவது பேசிடப்போகுறேன்ற பயத்தில்தான்…” தயங்க, அவன் கோணத்திலும் சிந்தித்தவள்,
“ம்ம்.. புரியுது,” என கண்களைத் துடைத்துக்கொண்டு மென்னகைத்தாள்.
“நீயும் சாப்பிடு,” என்றவன் அமரச்சொல்லி கண்ணசைக்க, உடனே வலப்புறம் அமர்ந்தவள், அவன் தட்டைத் தன்பக்கம் தள்ளிக்கொண்டு, அவனுக்கு வேறொரு தட்டில் ஐந்து இட்லிகளையும் மூன்று தேக்கரண்டிகள் சட்னியையும் ஊற்றி பரிமாறினாள்.
‘என்ன செய்கிறாய்!’ என அவன் கண்களில் தொக்கி நிற்கும் வினாவினைக் கண்டுகொண்டவள்,
“மறுபடியும் இட்லி சட்னியில் ஊறினால் நான் பொறுப்பில்ல. சீக்கிரம் சாப்பிடுங்க,” செல்லமாய் மிரட்டினாள்.
தன் விருப்பு வெறுப்புகளை எந்தளவிற்கு நுணுக்கமாக அறிந்துவைத்திருக்கிறாள் என மெய்சிலிர்க்க, ஒரு துண்டு இட்லியை பிய்த்து சட்னியில் லேசாகத் தோய்த்து வாயிலிட்டுக்கொண்டவன், அவளைக் கவனித்தான்.
“நீ இதை பிடிச்சு சாப்பிடுறீயா, இல்ல வேறவழியில்லாம சாப்பிடுறீயா,” கனத்த மனத்துடன் கேட்டான்.
“எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயமா இருந்தால் மட்டும்தான் காம்ப்ரமைஸ் பண்ணுவேன்,” என்றவளின் பதில் இட்லி சட்னிக்கு மட்டுமில்லை எனப் புரிந்துகொண்டான் ஷ்ரவன்.
“அப்போ என் விஷயத்தில்…” அவன் மென்று விழுங்க,
பார்வையால் சுட்டெரித்தவள், இட்லி சட்னி கலவையைப் பிசறி வேகவேகமாக உண்டுமுடித்து, “இத்தனை நடந்திருந்தும் இந்த வீட்டை விட்டுப் போகணும்னு ‘எனக்கு’ தோணல,” எனக்கு என்ற வார்த்தையை அழுத்திக் கூறி, தன் மனநிலையைத் தெளிவுபடுத்தி சமையலறைக்குள் நகர்ந்தாள்.
திலகா அவன் அலைபேசிக்கு அழைத்து நலன் விசாரிக்க, அன்னையும் தந்தையும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள் என அறிந்தான். மனையாளின் எதிர்பார்ப்பை ஓரளவிற்குப் புரிந்துகொண்டதில், அவளிடம் தனிமையில் பேச இதைவிட வேறு பொருத்தமான சந்தர்ப்பம் அமையாது என உணர்ந்தவன், மனதளவில் ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பாத்திரங்களைக் கழுவி சமையலறையை சுத்தம் செய்து முடித்தவள், தன் அறைக்குள் புகும் வழியில், தொலைக்காட்சி முன் மூழ்கியிருந்த கணவனிடம், “பதினோரு மணிக்கு வந்து மாதுளை ஜூஸ் போட்டுத்தரேன்,” கூறி நழுவினாள்.
“உன்கிட்ட கொஞ்சம் மனசவிட்டுப் பேசணும்னு நினைக்கிறேன் ரம்யா,” முதல் அடியெடுத்து வைத்தான் ஷ்ரவன்.
மனதளவில் நெகிழ்ந்தவள், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அவனெதிரே வந்தமர்ந்தாள்.
“இத்தனை நடந்திருந்தும் இந்த வீட்டை விட்டுப் போகத்தோணலேன்னா, உனக்கு என்னை எந்தளவுக்குப் பிடிச்சிருக்குன்னு புரியுது ரம்யா,” அவள் சொன்னதையே திருப்பிச் சொன்னவன்,
“இல்ல ரம்யா. நீ எனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யும்போது, உன்னைப்பற்றி எதுவுமே தெரியலையேன்னு குற்றவுணர்ச்சியா இருக்குது,” மனம் நொந்தான்.
கூனுக்குருகி உருகும் அவனருகில் மண்டியிட்டவள், “இதுல கில்டியா ஃபீல் பண்ண ஒண்ணுமே இல்ல ஷ்ரவன். விபத்து நடக்குறதுக்கு முன்னாடி நீங்க பேசிட்டு இருந்தது ஷர்மிலாவோட; பேசினது உங்க காதல் நாட்களைப்பற்றி; மயக்கத்துல் கேட்டது அவள் குரலை,” நினைவூட்டியவள், அனைத்தும் அவன் கடைசியாக அனுபவித்த ஆழ்மனத்தின் பிரதிபலிப்பு என விளக்க, அவன் குற்றவுணர்ச்சி மேலோங்கியதுதான் மிச்சம்.
இத்தனை புரிதலுடன் ஒருத்தியா என நெக்குருகிப் போனவனுக்கு, அவர்கள் எப்படித் திருமணம் பந்தத்தில் இணைந்தார்கள் எனத் தெரியாமல் தலையே வெடித்தது.
“ஒண்ணேவொண்ணு மட்டும் சொல்லு ரம்யா. நம்ம கல்யாணம், லவ் மேர்ஜா அரேஞ்ச்ட் மேரேஜா?” கண்களைச் சுருக்கிக் கெஞ்சினான்.
அவன் முகபாவனையை உளமார ரசித்தவள், “அம்மா வாய்க்குச் சர்க்கரைதான் போடணும்,” முணுமுணுத்துக்கொண்டே எழுந்து அவனருகில் அமரவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
வெகுநாட்களுக்குப் பிறகு தனிமையில் கணவனுடன் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தவளுக்கும் லேசாக வெட்கம் எட்டிப்பார்க்கவே செய்தது.
“ஜூஸ இங்கேயே குடிக்கட்டுமா இல்ல ரூமுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா,” அவன் மேலும் சீண்ட,
“அடேய்! நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் இங்க எதுவும் நடக்கல. எங்க கல்யாணம் லவ் மேர்ஜா அரேஞ்ச்ட் மேரேஜான்னு கேட்டுட்டு இருந்தாரு,” கணவரை ஓரக்கண்ணால் விழுங்கியபடி பேசினாள் ரம்யா.
தயக்கத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த அவன் மனநிலையை உணர்ந்திருந்தவள் அந்தப் புகாரை ஒரு மென்சிரிப்பில் கடந்தாள்.
“நம்மளுது அரேஞ்ச்ட் மேரேஜ்தான் ஷ்ரவன். அரேஞ்ச் பண்ண பெருமை எல்லாம் இவனைத்தான் சேரும்,” என தருணை செல்லமாக முறைத்தாள்.
“ நீயாடா!” ஷ்ரவன் வியக்க,
ஆம் எனப் பெருமிதம் பொங்க புன்னகைத்தவள், “நல்ல வரன் வந்திருக்குன்னு..,” மேலும் விவரிக்கத் தொடர,
“அட! நீ என்ன சின்ன பிள்ளைங்களுக்குக் கதை சொல்ற மாதிரி ஒப்பிச்சிட்டு இருக்குற,” இடைபுகுந்தான் தருண்.
“வேற என்ன செய்யணும்,” அவள் முகம் சுருக்க,
“எதுவா இருந்தாலும் ரீக்ரியேட் பண்ணணும்னு ஷர்மிலா சொல்லியிருக்காங்களா இல்லையா,” மிரட்டலாக நினைவூட்டினான்.
ரம்யா அசடுவழிய, இருவரையும் கண்கள அகல ஏறிட்டான் ஷ்ரவன்.
அடுத்த அரைமணி நேரத்தில் இருவரையும் அவர்கள் முதல் முதலில் சந்தித்திருந்த ரம்யாவின் வீட்டில் இறக்கிவிட்டவன்,
“அன்னைக்குத் தந்த அதே ரெண்டுமணி நேரம்தான்,” அன்புக்கட்டளையிட்டு நகர்ந்தான்.
அதே நிசப்தமான சூழல். அவர்கள் இருவர் மட்டும் என எல்லாம் அன்றுபோலவே தானாக அமைய, அவள் நினைவுகளும் அந்த நாளை நோக்கி பின்னோக்கிச் சென்றது. நடித்துக்காட்டும் பெண்ணவளின் பாவனையிலும் பேச்சிலும் கலந்தவனாய் உடன் பயணித்தான் ஷ்ரவன்.