Skip to content
Post Views: 181
ஓம் ஸ்ரீ சாய்ராம்
நிழலாடும் நினைவுகள்
சொன்னதை விட கால்மணி நேரத்திற்கு முன்னமே வந்திருந்தான் ஷ்ரவன். பெற்றவர்கள் தேர்வு செய்திருக்கும் பெண்ணை முதன்முதலாக நேரில் சந்திக்கப்போகும் ஆர்வத்தில் எல்லாம் இல்லை. நல்ல நேரத்தில் கிளம்பு என அம்மா விரட்டி விட்டதனால்.
‘ஜாதகம் பொருந்தி இருந்தால் மட்டும் போதுமா! நிறைவேறாமல் போன என் காதலை ஜீரணித்துக்கொள்ளும் அளவிற்கு மனப்பக்குவம் வேண்டுமே!’ எனச் சிந்தனையில் கலந்தான்.
Advertisement
அவன் பார்த்துப் பேசும் எட்டாவது பெண் இவள். இதற்கு முன் வந்தவர்கள் எல்லாம், காதல் தோல்வி என்ற வார்த்தையைக் கேட்ட மறுகணமே, ஏதோ செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டதாக ஆவேசம் பொங்க சாபமிட்டு சென்றிருந்தனர். இவளிடம் என்ன பேச்செல்லாம் வாங்கப் போகிறேனோ எனத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“ஹாய் ஷ்ரவன்!” கணீரென்ற குரலில் சுயத்திற்கு வந்தான்.
தினப்படிக்கு அணியும் சாதாரண காட்டன் சுடிதாரில் தயாராகி வந்து நிற்கும் இவள்தான் மணப்பெண்ணா என யோசித்தான்.
Advertisement
முப்பது வயதில் திருமணம் என்பதால் தோன்றும் அலட்சியமா! அல்லது, தன்னைப் போலவே பெண் பார்க்கும் படலம் என்ற பெயரில் அனுபவித்த வலிகளா என, சிந்தனைப் பட்டியல் அவள் பக்கம் திசைதிரும்பின.
Advertisement
பதில் வணக்கம் கூடச் சொல்லாமல், தன்னையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தவனுக்கு எதிரில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தவள்,
“உங்கள பத்தி சொல்லுங்க ஷ்ரவன்,” என்றாள் அதிகாரமாக.
வாழ்க்கைத்துணையை முதல்முறை சந்தித்துப் பேசும் ஆசையும் ஆர்வமும் கொஞ்சம்கூட இல்லையே இவளிடம்,’ என அவன் வியக்க,
“ஹெலோ மிஸ்டர்,” முகமருகே சொடுக்குப்போட்டு கவனத்தைத் திருப்பினாள்.
Advertisement
“ஹான்! என்ன கேட்டீங்க!” விழித்தான் அவன்.
“உங்கள பத்தி சொல்லுங்க,” என்றாள் அழுத்தமாக.
குடும்பம், படிப்பு, வேலை எனச் சுற்றிவிட்டு வருவானேன் என யோசித்தவன், “நீங்க என்னைப் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. அதுக்கு ஓகேன்னா மத்ததை அப்புறம் பேசிக்கலாம்,” தொடங்க,
“லவ் ஃபெயிலியரா?” குறுக்கிட்டாள் அவள்.
திடுக்கிட்டவன், ஆம் என்று தயங்கித் தயங்கித் தலையாட்டி, “அது வந்து… நானும் அவளும்…. அது… தப்பு என்மேல… அது…” எதில் தொடங்குவது எனப் புரியாமல் திணறினான்.
“உங்க கடந்த காலத்தைப் பற்றி எனக்குக் கவலையில்ல ஷ்ரவன். நீங்க இன்னும் அந்தப் பெண்ணை காதலிக்குறீங்களா? அதைமட்டும் சொல்லுங்க,” என்றாள் கறாராக.
கைகூடாத காதலை எண்ணி வருந்துவதால் எதுவும் மாறப்போவது இல்லை என்று மனதளவில் நிரந்தர பக்குவம் வந்த பிறகுதான் திருமணத்திற்கே சம்மதம் சொல்லியிருந்தான் ஷ்ரவன். அதனால் அவள் கேள்விக்கு, திடமாக ‘இல்லை’ எனப் பதிலளித்தான்.
அவன் பாவனைகளை எல்லாம் அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
திருமணம் என்ற பந்தத்தில் இணைய விழைந்தவளுக்கு ஆண்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டியதில் உண்டான வலி அது.
எத்தனை நற்குணங்கள் இருந்து என்ன பயன்; நட்பென்னும் அழகான உறவை ஏற்கமுடியாத குறுகிய மனம் படைத்தவர்களாக இருக்கிறார்களே என ஆண் வர்கத்தின் மீதே சலிப்புத்தட்டும் அளவிற்கு அத்தனை விதமான வியாக்கியானப் பேச்சுகளைக் கேட்டிருந்தாள், இதுவரை அவளைப் பெண் பார்க்க வந்த பதின்மூன்று ஆடவர்களிடமிருந்து.
அதேசமயம், தன் தந்தையைப் போல… தன் நண்பனைப் போல யோசிக்கும் ஒருவரை வாழ்க்கைத்துணையாக அடைவேன் என்ற நம்பிக்கையும் நெஞ்சில் ஓர் ஓரமாய் மின்னிக் கொண்டுதான் இருந்தது.
அனுபவம் தந்த பாடம், சந்திக்க வரும் மாப்பிள்ளைகளிடம் வெட்டொன்று துண்டு இரண்டு எனப் பேசுவதில் தெளிவாக இருந்தாள். அதைக் காட்டிலும், அவர்கள் பதில்கள் எதுவாக இருந்தாலும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொண்டிருந்தாள்.
“ஓகே! என் பக்கத்து எதிர்பார்ப்புகளை கேளுங்க. உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் உங்கள கல்யாணம் செய்துக்கிறதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லை,” என்றவளை பிரமிப்பாக ஏறிட்டான்.
“எனக்கொரு நண்பன் இருக்கான். பரிட்சை எழுதப்போன இடத்துல பிறந்த நட்பு அது. நாலு வருஷமா பழகுறோம். எக்ஸாம் டைம்ல எங்க வீட்டுல வந்து தங்கி என்கிட்ட பாடம் கத்துப்பான்; நான் ரொம்பத் தூரம் எங்கேயாவது போகணும்னா என்னை டூ வீலர்ல அழைச்சிட்டுப் போவான்..இப்படி நிறைய இருக்கு… எங்க நட்புக்கு கல்யாணம் ஒரு இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நான் எதிர்பார்க்கிறேன்,” அவள் கூறவும்.
“இவ்வளவுதானே! எனக்கு ஓகே!” என்றான் ஷ்ரவன்.
‘இமைக்கும் நொடியில் பதில்சொல்லும் இவன் உண்மையிலேயே நான் சொன்னதை உள்வாங்கிக்கொண்டானா,’ எனக் கடுப்பானவள்,
“எங்க உறவைப் பற்றி என்ன நினைக்குறீங்க நீங்க?” என்றாள்.
“என்னங்க நீங்க! வார்த்தைக்கு வார்த்தை நண்பன்னு சொல்றீங்க. அப்போ இது ஃப்ரெண்ட்ஷிப் தானே!,” ஷ்ரவன் சிரிக்க, கொஞ்சம் ஆடித்தான் போனாள் ரம்யா.
“என்ன மிஸ்டர் ஷ்ரவன்! என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணறீங்களா,” முறைத்தாள்.
“இதுல இம்ப்ரெஸ் பண்ண என்ன இருக்கு ரம்யா,” தோள்களைக் குலுக்கிச் சலித்துக்கொண்டான் ஷ்ரவன்.
அவன் தோரணையிலேயே அவன் நடிக்கவில்லை என உணர்ந்தாள். என்றாலும், தன் சந்தேகத்தை நேரடியாகவே கேட்டுக்கொள்வது நல்லது எனத் தீர்மானித்தாள்.
“எங்க உறவில் நட்பு மட்டும்தான் இருக்குதுன்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”
“என்னங்க நீங்க. மறுபடியும் மறுபடியும் அதையே கேக்குறீங்க,” நமுட்டாகச் சிரித்தவன், “உங்களுக்குள்ள சகோதர பாசமா இருந்திருந்தால், உடன் பிறவா அண்ணன் இல்ல தம்பின்னு அறிமுகம் செஞ்சு வச்சிருப்பீங்க, அதுவே உங்களுக்குள்ள காதல் இருந்திருந்தால், நீங்க ஏன் என்னைக் கல்யாணம் செஞ்சுக்க நினைக்கப்போறீங்க. இத்தனை வெளிப்படையா பேசுற நீங்க உங்க காதலைப் பற்றி வீட்டுல சொல்ல தயங்குவீங்களா என்ன,” என்றதும் அந்த நொடியே அவனிடம் மனத்தைப் பறிக்கொடுத்தாள் பாவை.
“எனக்கு உங்கள கல்யாணம் செஞ்சுக்கிறதுல பரிபூரண சம்மதம்,” என்றவளின் முகம் புன்னகையில் விரிந்தது.
இம்முறை ஆடிப்போனது ஷ்ரவன்.
“ நீங்க உணர்ச்சிவசத்தில் முடிவெடுக்குறீங்களோன்னு தோணுது ரம்யா. உங்க ஃப்ரெண்ட்ஷிப் அளவுக்கு என் லவ் ஃபெயிலியர் அவ்வளவு சிம்பிள் இல்ல. அதனால, என் கடந்த காலத்தையும் கேட்டுட்டு அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க,” என்றான் நிதானமாக.
“சிம்பிளா???” கொந்தளித்தவள், “ரெண்டு வருஷமா எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க ஷ்ரவன். பெரும்பாலானவங்க, ‘அது எப்படி காதல் இல்லாமல் இருந்திருக்கும்,’ சொல்லி நழுவினாங்க. சிலர், பெருந்தன்மையா பேசுறதா நெனச்சு, ‘தம்பி மாதிரின்னு சொல்லுங்க,’ அப்படின்னு சொல்லிட்டு, குடைஞ்சு குடைஞ்சு கேள்விகள் கேட்டும், கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருக்கணும்னு ஜாடைமாடையா நிபந்தனை இட்டும்…சொல்லவே வாய் கூசுது,” எனத் தலையைத் தொங்கப்போட்டாள்.
அவரவர் வலிகள் அவரவருக்குத்தான் தெரியும் என உணர்ந்தவன், “ஓகே ரம்யா. ஐ டேக் பேக் மை வர்ட்ஸ்,” எனத் தழைந்துபோனான்.
அவள் ஆச்சரியத்தில் மிதக்க, “ஆனாலும் நீங்க என் ப்ரேக் அப் ஸ்டோரிய கேட்டுட்டுத்தான் ஆகணும்,” தீர்மானக் குரலில் சொன்னான் ஷ்ரவன்.
“கேக்குறேன்! ஆனால் என் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது.” அவளிடமும் அதே திடம்.
“நாங்க பிரியுறதுக்குக் காரணம் என் பிடிவாதம்னு சொன்னாலும் கூடவா?”
“யெஸ்!” நிமிர்ந்து உட்கார்ந்தாள் பேதை.
காதல் தோல்வி எனச் சொன்னவுடனே நழுவிய பெண்களுக்கு மத்தியில், பிசிரற்ற குரலில் சம்மதம் சொல்லும் இவள் மனவுறுதி அவனை அசைத்தது. அதுவரை யாரிடமுமே சொல்லாத உண்மையைச் சொல்ல விழைந்தான்.
மேஜை மேலே தன் இடது கைவிரல்களை பரப்பியவன், “அவ போட்ட மோதிரம் உறுத்திய கோபத்துல இந்த விரலை வெட்டிட்டேன். தற்கொலை முயற்சின்னு கூடச் சொல்லலாம்,” என்றான்.
“உண்மையைச் சொல்லும் உங்க கண்ணியம் பிடிச்சிருக்கு ஷ்ரவன்,” கண்சிமிட்டினாள் அவள்.
பெண்ணவளின் கனிவில் அவன் இதயமும் அவள் பக்கம் சரியத் தொடங்கியது.
ஆனால் பெரியதும் முக்கியமானதுமான தன் முட்டாள்தனத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என மனத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டவன்,
“அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்னு நிரூபிக்க… அவளோட பயத்தைப் போக்க…” சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தான்.
“சொல்லுங்க ஷ்ரவன்! என்ன முட்டாள்தனம் செஞ்சீங்க,” வெகு இயல்பாக எடுத்துக்கொடுத்தவளின் பாவனையில் மிரண்டவன்,
“குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிகிட்டேன் ரம்யா,” அவள் முகம் பார்க்க துணிவில்லாமல் தலைகுனிந்தான்.
அத்தனை நேரம் பதிலுக்குப் பதில் பேசி வாயடைத்துக் கொண்டிருந்தவளும் அமைதி காக்க, எல்லாம் முடிந்தது எனப் புறப்பட்டான்.
“எனக்கு ஷ்ரவன ரொம்பப் பிடிச்சிருக்கு. உடனே கிளம்பி வாங்க,” ரம்யா யாருடனோ அலைபேசியில் பேசுவதைக் கேட்க, குழம்பி நின்றான் ஷ்ரவன்.
மேலும் சில நிமிடங்கள் அலைபேசியில் பேசிவிட்டு, ஷ்ரவன் அருகே நடந்தவள் அவன் இரு கரங்களின் விரல்களையும் படர பிடித்துக்கொண்டு, “உங்களோட குடும்பம் நடத்த எனக்கு இந்த ஒன்பது விரல்கள் போதும் ஷ்ரவன்,” என்றாள் யாசிக்கும் குரலில்.
கண்களில் நீர் கட்டிக்கொண்டது அவனுக்கு.
“குடும்பம் நடத்தும் அளவுக்கு…” தொடங்கியவனின் வாயைப்பொத்தியவள்,
“கல்யாணமான எல்லாருக்கும் குழந்தை பிறக்குறதில்ல ஷ்ரவன்,” பக்குவமான முடிவு என்று உணர்த்தினாள்.
தன்னை முழுமனத்துடன் ஏற்கத் துடிக்கும் பாவையிடம் அவன் எந்தச்சூழ்நிலையில் அவற்றைச் செய்தான் என விளக்க விரும்பினான்.
“என் பாஸ்ட் லவ் பற்றி கேட்டுட்டு…” என்றவனின் இதழ்களை மீண்டும் உள்ளங்கையில் சிறை செய்தவள்,
“பாஸ்ட் இஸ் பாஸ்ட்ன்னு கடந்து செல்லும் ஆளு நான், ஷ்ர்வன். நீங்களும் அந்தக் காதலை கடந்து வந்துட்டீங்க தானே,” சற்று குரலை உயர்த்தினாள்.
ஆம் என்று அவன் தலையசைக்க, “குட்! இனி நம்ம வாழ்க்கையைப்பற்றி மட்டும் பேசலாம். உங்களை மீட் பண்ண என் ஃப்ரெண்ட் வந்துட்டு இருக்கான். நம்ம ரெண்டு பேரோட பேரன்ட்ஸ்க்கும் தகவல் சொல்லி அவங்களையும் அழைச்சிட்டு வரச் சொல்லியிருக்கேன்,” என அவனை வியப்பில் ஆழ்த்தியவள், அவர்கள் வருவதற்குள் புடைவை உடுத்திக்கொண்டு வருவதாகக் கண்சிமிட்டி, தன் அறையை நோக்கி மாடி ஏறினாள்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய இருவரின் பெற்றோரும், அன்றே முறைபடி நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் எனக் கலந்துபேசி, அதற்கான பொருட்களை வாங்க கடைவீதிக்குச் செல்ல தீர்மானித்தனர்.
இருப்புக்கொள்ளாதவனாய் “ரம்யா! ரம்யா!” என்ற கூக்குரல்களுடன் உள்ளே நுழந்தவனைக் கண்ட ஷ்ரவன்,
“தருண்! நீ எங்கடா இங்கே?” முழித்தான்.
“நீங்க ஓகே சொல்லியிருக்கிறதே என் ஃப்ரெண்டுக்குத் தான் பிரதர்,” கண்சிமிட்டி கட்டியணைத்தான்.
‘அவள் சுலபமாகச் சம்மதம் சொன்னதற்கு இதுதான் காரணமா!’ எனக் கோபம் தலைக்கேறிய ஷ்ரவன், “நான் சொன்ன எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டும்போதே இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு சந்தேகப்பட்டேன்,” பெருங்குரலில் கர்ஜித்தான்.
“இல்லடா! நான் சொல்றத கேளு,” தருணின் ஸ்ருதி இறங்கிய குரலை மொத்தமாய் விழுங்கியது ரம்யாவின் உறுமல்.
“அண்ணனும் தம்பியும் நல்லா நாடகம் ஆடுறீங்க. இந்த கல்யாணம் நடக்காது. ரெண்டு பேரும் வெளியே போங்க,” மரக்கைப்பிடிகளில் ஊன்றியவாறு மாடிப்படிகளிலிருந்து பத்திரகாளியாக முறைக்கும் தோழியைக் கண்டுகொண்ட தருண்,
“ரம்யா! நீயாவது நான் சொல்றத கேளு,” கெஞ்ச,
“இனி என் முகத்திலேயே முழிக்காதே டா,” வெறுத்துப் பேசி தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
திரும்பிப் பார்ப்பதற்குள் ஷ்ரவனும் வெளியேறியிருந்தான்.
வீட்டில் அண்ணனுக்குத் திருமணப் பேச்சுகள் தொடங்கியதுமே, தருணுக்குத் தோழியை உறவாக்கிக் கொள்ளும் ஆசை மலர்ந்தது. அண்ணனிடம் பொத்தாம் பொதுவாகப் பேச்சுக்கொடுத்தான். தருணின் நட்பு வட்டாரத்தில் தன் காதல் கதை பரவுவதை விரும்பாத ஷ்ரவன், முன்பின் தெரியாத ஒருத்தியை தான் மணந்துகொள்வேன் எனத் திட்டவட்டமாக உரைத்திருந்தான்.
ரம்யாவோ, தங்கள் நட்பை அண்ணி என்ற இன்னொரு கோணத்தில் பார்க்க விருப்பமில்லை என்றும் தங்கள் நட்பை நட்பாக மட்டுமே பாவிக்கும் முன்பின் பழக்கமில்லாத ஒருத்தரையே மணம் முடிப்பேன் என்றும் நிர்தாட்சண்யமாக மறுத்திருந்தாள்.
அவர்கள் விருப்பத்தை மதிக்கவே செய்தான் தருண். என்றாலும், தோழியின் திருமணம் தள்ளிப்போய் கொண்டு இருப்பதற்குத் தங்கள் நட்புதானே காரணம் எனக் குற்றவுணர்ச்சி மேலோங்கியது.
அதேசமயம் அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று யோசித்தவன், இருவரின் பெற்றோருடனும் கலந்துபேசி, எதேச்சையாக அமைந்த வரன் என ஜோடித்து இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான்.
தன்னைக் கண்டதும் சண்டைக்கு வருவார்கள் என்று மனதளவில் தயாராகத் தான் நுழைந்தான். ஆனால் எரிமைலையாக வெடிப்பார்கள் எனக் கனவிலும் எண்ணவில்லை.
இருதுருவங்களாக முறுக்கிக்கொண்டிருப்பவர்களில் யாரை முதலில் சமாதானப்படுத்துவது என வாசலையும் மாடியையும் மாறி மாறி பார்த்தான்.
பஞ்சாயத்தை இந்த இடத்திலேயே இந்த நிமிடத்திலேயே தீர்க்க வேண்டுமெனெ உறுதிபூண்டவன், அண்ணனை எட்டிப்பிடித்தான்.
கார் சாவியை லாவகமாகப் பிடுங்கினான். அதற்கெல்லாம் சற்றும் அசரவில்லை ஷ்ரவன். விருட்டென வண்டியிலிருந்து இறங்கி நடந்தான்.
பின்தொடர்ந்து ஓடிச்சென்று தருண், “நம்புடா! நீதான் என் அண்ணன்னு நான் இங்க வரவரைக்கும் அவளுக்குத் தெரியாது,” கெஞ்சியும் பிரயோஜனமில்லை.
“உனக்குச் சம்மதம் சொன்னவ, என்னைப் பார்த்ததும் இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு ஏன் ஆர்ப்பாட்டம் செய்யணும்,” அடிவயிற்றிலிருந்து நொந்து கத்த, ஷ்ரவனின் நடையின் வேகம் குறைந்தது.
அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட தருண், இருவரின் விருப்பத்தையும் மனத்தில் கொண்டு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு என்று ஒன்றுவிடாமல் விளக்கினான்.
ஷ்ரவன் மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டான் என அவனது இறுகிய முகமே காட்டிக்கொடுத்தது.
“அவளும் உன்னை மாதிரியே தப்பா புரிஞ்சிட்டிருக்கா. வா புரியவைக்கலாம்,” அண்ணனின் கையை இழுத்தான் தருண்.
“ம்ஹூம்! நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் மறுபடியும் என்னால அவமானப்படமுடியாது,” எத்தனித்தான் ஷ்ரவன்.
“நீ எதுவும் பேசவேண்டாம் ஷ்ரவன். என்னோட வந்தால் மட்டும் போதும். நான் கேக்குற ஒரே கேள்வில அவ மனச மாத்திக்குறாளா இல்லையான்னு மட்டும் பாரு,” சவால் விட,
ஏறிட்டுப் பார்த்தானே ஒழிய, மௌனம் சாதித்தான்.
“சரி! அப்படி அவ மனசு மாறலேன்னா, ‘உன் சகவாசமே வேண்டாம்னு’ எங்க ஃப்ரெண்ட்ஷிப்க்கு பெரிய முழுக்குப் போட்டுட்டு வந்துடறேன்,” என்றான் தருண்.
சற்றுமுன் இவர்கள் நட்பைப்பற்றி ரம்யா பாடிய புகழாரங்களை அசைபோட்ட ஷ்ரவனுக்கு, இவர்கள் தோழமையின் வலிமையை நேரில் காணவேண்டுமென உந்துதல் ஏற்பட்டது.
“சரி வா! ஒரேவொரு கேள்விதான் கேட்கணும். அதுவும் கெஞ்சவோ கட்டாயப்படுத்தவோ கூடாது,” ஷ்ரவன் கூடுதல் நிபந்தனைகள் இட,
“டீல்!” கட்டைவிரலை உயர்த்திக் காட்டி இளித்தான் தருண்.
அவள் அறை வரை கம்பீரமாக நடந்து வந்த ஷ்ரவனின் கால்கள், உள்ளே செல்லத் தயங்கியது. கதவருகிலேயே மறைவாக நின்றுகொண்டவனை தருணும் வற்புறுத்தவில்லை.
தருணைக் கண்டுகொண்டவள், “நீ கூட என் உணர்வுகளைப் புரிஞ்சுக்காம என்னை ஏமாத்திட்டீயே தருண்,” கண்ணீர் மல்க அவன் கரங்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
முகத்திலேயே முழிக்காதே எனக் கூறிவிட்டு, அவனிடமே ஆறுதல் தேடுகிறாளே என இருவரின் நட்பைக் கண்டு வியந்தான் ஷ்ரவன்.
“உன்னை புரிஞ்சுகிட்டதுனால இப்படியொரு சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சேன் ரம்யா. ரெண்டுபேரும் என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகி நின்னப்பவே புரிஞ்சிருக்க வேண்டாமா, நான் யார்கிட்டயும் எதையும் சொல்லன்னு,” அவன் கேட்கவும், வெடுக்கென்று நிமிர்ந்தவள், தலையை இரு கைகளாலும் அழுந்த பிடித்து நடந்த ஒவ்வொன்றையும் நிதானமாக அசைபோட்டாள்.
சுற்றி வளைக்காமல் கேள்வியைக் கேள் என தம்பிக்கு கண்ணசைத்தான் ஷ்ரவன்.
“என் அண்ணன்ற ஒரே காரணத்துக்காக உன் மனசுக்குப் பிடிச்சிருந்தும் பிடிக்கலன்னு சொல்றீயே. உனக்கு ஏன் இத்தனை ஈகோ ரம்யா?” அவன் கேட்டதுதான் தாமதம்.
“ஈகோலாம் இல்லடா. அவரைப் பிடிச்சிருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனால் வெளியே போன்னு துரத்திவிட்ட மனுஷன்கிட்ட எந்த முகத்தை வச்சுகிட்டுப் பேசுவேன்,” தேம்பி அழுதாள் பாவை.
ஒரே கேள்வியில் அவளை மனம்திறந்து பேச வைத்துவிட்டானே என அவர்கள் புரிதலில் மலைத்து நின்றான் ஷ்ரவன்.
தோழியின் மனத்தை வென்ற கர்வம் முகத்தில் வழிந்தோட, “தி பால் இஸ் இன் யுர் கோர்ட் பிரதர்,” என ஷ்ரவனிடம் உள்ளே வருமாறு கையசைத்தான் தருண்.
ஷ்ரவனை அங்கு எதிர்பார்த்திராத ரம்யா, திடுக்கிட்டு விழித்தாள்.
அவள் கண்பார்த்துப் பேச தோதாக அவளெதிரே மண்டியிட்டு அமர்ந்துகொண்ட ஷ்ரவன், ”எனக்கு என் பொண்டாட்டிக்கிட்ட தனியா பேசணும். நீ கொஞ்சம் வெளியே போகுறீயா,” நமுட்டுச் சிரிப்புடன் தம்பியை விரட்டினான்.
“அடப்பாவி அண்ணா!” தருண் அவன் தோளினை உலுக்கிச் சீண்ட,
இருவரின் பரிபாஷைகளைக் கண்ணீரும் சிரிப்புமாய் ரசித்த ரம்யா, “உங்களுக்கு என்மேல கொஞ்சம் கூடக் கோபமே இல்லையா ஷ்ரவன்,” என்றாள் கம்மிய குரலில்.
“ம்ஹூம்” இதழோர புன்னகையுடன் தலையாட்டி அவள் விரல்களை வருடினான் ஷ்ரவன்.
“என்னடா நடக்குது இங்க?” நடுவில் அமர்ந்த தருண், இன்பதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் இருவரையும் மாறி மாறி ஏறிட்டான்.
“நீ இன்னும் வெளியே போகலையா?” என்றவனின் விழிகள் மட்டும் தன்னவளிடம் சிறையாகி இருந்தது.
“என் ஃப்ரெண்ட் சொல்லட்டும். நான் போகுறேன்,” தருணும் அண்ணனுக்கு இணையாக வம்புசெய்ய,
“வெளியே போடான்னு விரட்டிவிடு ரம்யா,” எடுத்துக்கொடுத்தான் ஷ்ரவன்.
“விளையாட்டுக்கும் என்னால அப்படிச்சொல்ல முடியாது ஷ்ரவன்,” வாஞ்சையாகத் தோழனின் கன்னத்தில் வருடினாள் ரம்யா.
“பிரதர்! அவ முதல்ல எனக்கு ஃப்ரெண்ட்; அதுக்கப்புறம் தான் உங்க மனைவி,” எனத் தோழியின் பதிலில் தலைகால் புரியாத சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் தருண். என்றாலும், அவர்களுக்குத் தனிமையைக் கொடுக்க விரும்பியவன், கைக்கடிகாரத்தைப் பார்த்து,
“கால்மணி நேரம்தான் டைம். அதுக்குள்ள பேசிட்டு கீழே வாங்க,” நிச்சயதார்த்தாம் செய்யும் கிளர்ச்சியில் வந்துகொண்டிருக்கும் பெற்றவர்களைப் பற்றி நினைவூட்டினான்.
கதவு அடைக்கும் சப்தம் கேட்டதும், “உண்மையைச் சொல்லுங்க ஷ்ரவன். நான் அழதுட்டு இருந்ததுனால தானே என்மேல பரிதாபப்பட்டு கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருக்கீங்க,” கசந்த குரலில் கேட்டாள் ரம்யா.
“ம்ஹூம்!” என அவள் கைகளைத் தன் கைக்குள் பூட்டிக்கொண்டவன், “உன்மேல மலர்ந்த காதலில் சம்மதம் சொன்னேன்,” என்றான்.
பூரிப்பில் மின்னியது அவள் கண்கள்.
“திடீர்ன்னு எங்கிருந்து வந்துது இந்தக் காதல்?” முகம் சுருக்கினாள்.
“உனக்கு ஏன் இத்தனை ஈகோன்னு உன் ப்ரெண்ட் கேட்டதுக்கு, அடிமனசுலேந்து நீ சொன்ன பதிலில் வந்த காதல் இது,” என காதலாய் அவள் நெற்றி முட்டினான்.
‘உன் ப்ரெண்ட்’ என சொன்ன விதத்திலேயே எந்தளவிற்குத் தன் உணர்வுகளை மதித்துப் பேசுகிறான் என நெக்குருகிப் போனவள் அவன்மேல் பெருங்காதல் கொண்டாள்.
“இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா ஷ்ரவன்,” மெய்மறந்து கேட்டாள்.
அவனும் அதே உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித்தவித்தான் தான் என்றாலும், முதல் காதலின் சுகமும் துக்கமும் கண்முன் நிழலாட, மீண்டும் ஒரு பிரிவை எதிர்கொள்ள விரும்பாதவன்,
“அதுக்குமுன்னாடி நீ என் கடந்த காலத்தைப் பற்றி ஒண்ணு விடாம தெரிஞ்சுக்கணும்னு விரும்புறேன் ரம்யா,” என்றான் கசந்த குரலில்.
“ம்ப்ச்! அதான் பாஸ்ட் இஸ் பாஸ்ட்ன்னு சொல்லிட்டேன்ல ஷ்ர்வன்,” சிடுசிடுத்தவளைச் சற்றும் பொருட்படுத்தவில்லை அவன்.
“இல்ல! நீ தெரிஞ்சிட்டுத்தான் ஆகணும்,” பிடிவாதமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
உம்மென்ற அவன் முகத்தைக் கண்பார்க்க ஏந்தியவள், “சரி கேக்குறேன். ஆனால் இப்போ இல்ல,” தாஜா செய்தாள்.
பிடிகொடுக்காமல் அவன் நிற்க, “அட! எனக்கொண்ணுமில்லப்பா! உங்க தம்பி கொடுத்த கால்மணி நேரக் கெடு முடிஞ்சிடுத்து. அவன் வந்து கதவைத் தட்டுறதுக்குள்ள நாமளே டீசன்டா வெளியே போயிடலாம்,” எனக் கண்சிமிட்டவும், ஷ்ரவின் வீம்பு எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் போனது.
கடந்த காலத்துக் கசப்புகளை மறந்துவிடு;
காதலுடன் வாழலாம் எனக் கைகோத்தாய் நீ!
காரிகை உனக்குக் கொடுத்த வாக்கை மறந்து,
காயங்களை ஆற்ற வழி தெரியாமல் -விடை தேடுகிறேன்
கண்மணியே! நிழலாடும் நின் நினைவில்…
error: Content is protected !!