Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 13

லதா மற்றும் அலமேலு இருவரையும் முறைத்து “நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து பாத்த சம்மந்தம் எப்படி இருக்குனு பாத்துக்கோங்க” என்றான் சரவணன்.
“அவங்க வந்துட்டு இருப்பாங்கங்க, அதான் போனை எடுக்கலனு நினைக்கிறேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம், அவங்களே வந்துடுவாங்க” என்றாள் லதா


Advertisement

“சரி, அவங்க போன் பண்ணதும் எனக்கு இன்பார்ம் பண்ணு. நான் வந்திருக்கறவங்கள போய் கவனிக்கறேன்” என்று சரவணன் கிளம்பி விட்டான்.

Advertisement

மாமியாரும் மருமகளும் இடைவிடாமல் நவ்யாவுக்கும் அவள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் தொடர்ந்து போன் செய்து பார்த்தனர், யாருமே போனை எடுக்கவில்லை.

Advertisement

வசி அலமேலுவை தேடி வந்தான். “அம்மா உனக்கு இப்போ சந்தோசம் தானே? நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன், கோட் சூட் போட்டுக்கிட்டு மாப்பிள்ளையா தயாராகிட்டேன். பொண்ணு வர்றதுக்காக தான் வெயிட்டிங். என் டிரஸ் எப்படியிருக்கு?” என்றான் புன்னகையுடன்.

Advertisement

“நல்லா இருக்கு வசி தங்கம்” என்று மகனின் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தார்.
“ஆமா, நவ்யா ஏன் போனே எடுக்க மாட்டேங்கிறா? கிளம்பிட்டாளானு கூட தெரியல. உனக்கு மஞ்சுளா ஆன்ட்டி போன் பண்ணாங்களா?” என்றான் புருவம் சுருக்கி
“அது வந்து, வந்துட்டு இருக்காங்களாம், வர்ற வழியில டிராப்பிக்காம்”
“சென்னையிலயே இருந்துட்டு இன்னும் வரலனா எப்படிம்மா? டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் வீட்டு கல்யாணம், அவருக்கே டிராப்பிக் பிராப்ளமா? சீக்கிரம் வரச் சொல்லுங்க? என் பிரெண்ட்ஸ் எல்லாம் பொண்ணு எங்கேடானு கேட்டுட்டே இருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.
அலமேலு கைகளை பிசைந்து கொண்டு, “லதா என்னம்மா இது மணி ஒன்பதாக போவுது. அவங்க இன்னும் வரல, எந்த தகவலும் சொல்லல.  போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறாங்க, எனக்கென்னவோ வயித்த கலக்குதும்மா. நீ எதாச்சும் பண்ணேன்”
“அத்தே பதட்டப்படாதீங்க. நான் அமைச்சரோட பி.ஏ கிட்ட போன் பண்ணி விசாரிக்கிறேன்” என்றவள் போன் செய்தாள். அவர் போனை ஏற்றதும் ஸ்பீக்கரில் போட்டு, “சார், நான் எம்எல்ஏ பொண்ணு லதா பேசறேன். அமைச்சரும் அவர் குடும்பமும் கல்யாண மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்களா? போன் பண்ணா எடுக்கல, அதான் உங்களுக்கு போன் பண்ணேன்”
“இன்னும் அவங்க வீட்ல தான் மேடம் இருக்காங்க”
“ஏன் இன்னும் கிளம்பல? இன்னைக்கு ரிசப்ஷன்ங்க”
“திடீர்னு சாயந்திரம் சென்ட்ரல் மினிஸ்டர் வந்துட்டாரு. அவரோட பேசிட்டு இருக்காங்க. யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்க சொன்னாங்க”
“என்ன விஷயமா வந்திருக்காங்க?”
“அது தெரியல மேடம்”
“மீட்டிங் எப்போ முடியும்?”
“அதுவும் தெரியல. நைட் டின்னருக்கு சாப்பாடு ஆர்டர் பண்ண சொல்லி இப்ப தான் ஐயா போன் பண்ணாரு. அதவச்சு பாத்தா இன்னும் நேரமாகும்னு நினைக்கிறேன்”
“சார், அவர் பொண்ணுக்கும் என் மச்சினன் வசீகரனுக்கும் விடிஞ்சா கல்யாணம். இப்போ ரிசப்ஷனுக்கு ஊரே கூடியிருக்கு. அவங்க எந்த கவலையுமில்லாம போனை கூட எடுத்து பதில் சொல்லாம இருந்தா என்ன சார் அர்த்தம்?”
“என்கிட்ட கேட்டா இதுக்கு நான் என்னம்மா பதில் சொல்ல முடியும்? யாராச்சும் எங்கள உள்ள கூப்பிட்டா நீங்க போன் பண்ண விசயத்தை வேணும்னா சொல்றேன். அத தவிர என்னால எதுவும் பண்ண முடியாது” என்று பி.ஏ போனை வைத்துவிட்டார்.
அலமேலு நெஞ்சை பிடித்துக் கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்து விட்டார். “லதா எனக்கு நிஜமாவே நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு”
“அத்தே பயப்படாதீங்க. சென்ட்ரல் மினிஸ்டர் வீட்டுக்கு வந்திருக்கறப்போ அவங்களால அப்படியே விட்டுட்டு வரமுடியாது. எலக்ஷன் வேற வரப்போகுது. என்ன பிரச்சனைனு நமக்கும் தெரியாது. ரிசப்ஷனுக்கு வந்திருக்கறவங்கள முதல்ல சாப்பிட சொல்லுவோம். அதுக்குள்ள நான் என் அப்பாவ கூட்டிட்டு நவ்யா வீட்டுக்கு நேர்லயே போய் பார்த்து அவள மட்டுமாவது கூட்டிட்டு வரேன்”
“முதல்ல அத செய்மா. ஊர்உலகத்த கூட்டி வசியோட கல்யாணம் நின்னு போயிட்டா ரொம்ப அவமானமா போயிடும். உன் புருஷன், மாமனாரு, மச்சினன் மூணு பேரும் என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க. எதாச்சும் பண்ணி அவங்கள கையோட கூட்டிட்டு வந்துடும்மா” என்றார் இறைஞ்சலாக
“சரிங்க அத்தே. நீங்க பதட்டத்த முகத்துல காட்டாம சகஜமா இருங்க, நான் அப்பாவோட போயிட்டு நவ்யா வீட்ல இருந்து உங்களுக்கு போன் பண்றேன்”
அலமேலு பிபி மாத்திரையை போட்டுக் கொண்டு வெளியே வந்தார். நடராஜன், சரவணன், ரஞ்சனி மூவரும் அலமேலுவிடம் வந்தார்கள். 
“பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. மணி ஒன்பது ஆயிருச்சு, இன்னும் வரல, போன் கூட எடுக்கலன்னா என்ன அர்த்தம்? வசி முகத்தை பாக்க முடியல. ரொம்ப கோவமா இருக்கான். நீதானே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணே? நீயே போய் அவனை சமாதானம் செய்” என்றார் நடராஜன் எரிச்சலுடன்
“நான் அவன்கிட்ட பேசிக்கறேன்ங்க. சென்ட்ரல் மினிஸ்டர் அவங்க வீட்டுக்கு திடீர்னு வந்துட்டாங்களாம். சம்மந்தி இப்போ தான் போன் பண்ணாரு. பொண்ணை மட்டுமாவது அழைச்சுட்டு வரச் சொல்லி லதாவை அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கேன். அவ அப்பாவோட கிளம்பி போயிருக்கா, நீங்க போய் வந்தவங்கள சாப்பிட சொல்லி டைனிங் ஹாலுக்கு அனுப்பி வையுங்க, அவங்க சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள லதா நவ்யாவோட வந்திடுவா” என்றார் அலமேலு
“இதுக்கு தான் விரலுக்கேத்த வீக்கம் வேணும்னு சொல்லுவாங்க. நம்ம வசதிக்கு மீறின சம்மந்தம் பாத்தா இதான் நிலைமை. விடிஞ்சா கல்யாணத்தை வச்சுக்கிட்டு பொறுப்பில்லாம இருந்தா எப்படி? சென்ட்ரல் மினிஸ்டர் கிட்ட கல்யாண ரிசப்ஷன்னு சொல்லி அவரையும் கையோட அழைச்சிட்டு வந்திருக்கலாமே. என்னமோ மனசுக்கு சரியா படல அலமு” நடராஜன் சொல்ல
“ஐயோ நீங்க வேற பீதிய கிளப்பாதீங்க, போங்க போய் வந்தவங்கள கவனிங்க” என்ற அலமேலு வசியை தேடி மணமகன் அறைக்கு சென்றார்
அவன் ஆத்திரத்தோடு போனை கையில் ஏந்திக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான். அலமேலுவை கண்டதும் பொரிய தொடங்கி விட்டான்.
“அம்மா, நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன். நீ எனக்கு பாத்த பொண்ணு எங்கே?” என்றான் கோபமாக. அலமேலு தலையை கவிழ்ந்து கொள்ள, “இந்த கல்யாணம் நடக்குமா, நடக்காதா? அதையாச்சும் சொல்லு”
“ஆத்திரப்படாதடா. பொறுமையா இரு. உன் அண்ணி போயிருக்கா, நவ்யாவ கையோட அழைச்சிட்டு வந்துடுவா”
“ஆத்திரப்படாம பொறுமையா இருக்கணுமா? ஊரையே கூட்டி என்னை அவமானப்படுத்தணும்னு ரெண்டு பேரும் எவ்வளவு நாளா காத்திட்டு இருந்தீங்க? இப்பவே என் பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க. என்ன மச்சி மாப்பிள்ள பிடிக்கலனு பொண்ணு ஓடிருச்சானு கேக்கறானுங்க. எனக்கு இதெல்லாம் தேவையா?”
“வசி, நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீயே?”
“என்ன?”
“நீ நவ்யாவ மிரட்டி” அலமேலு முடிப்பதற்குள் வசீகரன் வெகுண்டெழுந்தான்.
“என்னை பொல்லாதவனாக்கி பாக்காதீங்கம்மா. நான் நவ்யாவ மிரட்டினா அவ சும்மா விட்ருவாளா? மினிஸ்டரோட பொண்ணு அவ, நேத்து வரைக்கும் என்கிட்ட நல்லா தான் பேசிட்டு இருந்தா. சந்தேகமா இருந்தா நான் அவகூட எடுத்துக்கிட்ட போட்டாவை பாருங்க” என்று தன் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை நகர்த்தி காட்டினான்.
வசியும் நவ்யாவும் தியேட்டர், சினிமா, பேட்மிட்டன் ஆடும் தளம் என பல இடங்களில் செல்பி எடுத்திருந்தனர், ஆனால் அவர்களுடன் இன்னொருவனும் இருந்தான். அது யார் என்று கேட்கும் மனநிலையில் அலமேலு இல்லை.
“நான் முதல்ல இந்த சம்மந்தம் வேணாம்னு சொன்னாலும் உனக்காக ஒத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் நவ்யாகூட தான் சுத்திட்டு இருந்தேன். என்னை போய் சந்தேகப்பட்டுட்ட இல்ல” என்றான் வருத்தமான குரலில்
“சரிடா, நான் உன்னை சந்தேகப்பட்டது தப்பு தான், இப்போ என்னடா பண்றது?”
“எனக்கு தெரியாது. காலைல என் கல்யாணம் நடந்தாகணும். இது என்னோட பிரஸ்டீஜ் பிராப்ளம். புதுசா தொழில் வேற தொடங்கி இருக்கேன், கல்யாணம் நின்னுபோனா எவனாவது என்னை மதிப்பானா? என் வாக்கை நான் காப்பாத்தின மாதிரி உன் வாக்கை நீ காப்பாத்தி ஆகணும், இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றான் அழுத்தமாக
“நீ டென்ஷனாகாதடா, நவ்யா வந்துடுவா, வர்றவரைக்கும் ரெஸ்ட் எடு. பசிக்குதா? சாப்பாடு கொண்டு வரட்டுமா?”
“எனக்கெதுவும் வேணாம் போ, மணமேடைக்கு என் கூட நிக்கறதுக்கு மணப்பொண்ணு வேணும். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது, பொண்ணோட என் முன்னாடி வா. இல்லனா வராத” என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.
அலமேலு சோர்வுடன் வெளியே வந்தால் மீண்டும் நடராஜன் அவரை நோக்கி வர, “ஐயோ, மறுபடியுமா? என்னால முடியல” என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.
“சம்மந்தி வீட்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்மா?” என்று இருவரும் கேட்க அலமேலுவுக்கு அழாத குறையாக போய் விட்டது. லதாவுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டார்.
“அத்தே, எங்கள உள்ளவே விட மாட்டேங்கிறாங்க. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறாங்க. நானும் அப்பாவும் இன்னும் வெளியே தான் இருக்கோம்” லதா கூறவும் பயத்தோடு கணவனையும் சரவணனையும் பார்த்தார்.
“என்கூட வேலை செய்யற புரபசர்ஸ், பிரின்சிபால், ஸ்டுடெண்ட்னு எல்லாரும் வந்திருக்காங்க. மானம் போவுது. வருவாங்களா இல்லையா?” என்று சரவணன் கோபத்தில் வெடித்தான்.
“சரவணா, அம்மாவுக்கு ஹார்ட் சர்ஜரி பண்ணியிருக்குடா, பொறுமையா பேசு” நடராஜன் அதட்ட, “உங்க பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஹார்ட் இருக்கா? எங்களுக்கெல்லாம் இல்லையா? எல்லாருக்கும் பதில் சொல்ல முடியாம பிபி எகிறுது. எனக்கே இப்படினா வசிய நினைச்சா கஷ்டமா இருக்கு” என்று தந்தையிடமும் முகத்தை காட்டி விட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்.
ஏதோ சலசலப்பு என்று புரிந்து கொண்ட சின்னபொண்ணு சரவணன் பின்னால் சென்றாள். “சார், ஏன் எல்லாரும் டென்ஷனா இருக்கீங்க? எதாச்சும் பிரச்சனையா?” என்று விசாரிக்க
“கல்யாண பொண்ணு நவ்யா இன்னும் வரலம்மா. போன் பண்ணாலும் யாரும் எடுக்க மாட்டேங்கிறாங்க” என்றான் அலுப்புடன்
“அச்சோ, என்ன பிரச்சனையோ தெரியலயே? நேர்ல போய் பாத்துட்டு வாங்களேன் சார்”
சரவணன் சற்று யோசித்து “நீ சொல்ற மாதிரி நேர்ல போனா தான் சரியா இருக்கும்” என்றவன் வேகமாக வெளியேறினான்.
நடராஜனும் ரஞ்சனியும் அலமேலுவை கைத்தாங்கலாக அறைக்குள் அழைத்துச் செல்ல வசீகரன் கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமான முகபாவத்துடன் நின்றிருந்தான். மகனை கண்டதும் அலமேலு மிடறு விழுங்கினார்.
“எங்கம்மா, நீ எனக்கு பாத்து வச்ச பொண்ணு? அவள நான் கட்டிக்கலனா உயிர விட்டுவேன்னு மிரட்டுனீங்க? உங்களால அவள மிரட்ட முடியலயா?” வார்த்தைகள் தெறித்து விழுந்தது.
“வசி” அலமேலு கண்கலங்க
“கல்யாண பேச்சு வேணாம், மூணு வருஷம் போகட்டும்னு சொன்னேன். என் பேச்சை கேக்காம ஆளாளுக்கு எமோஷனலா பிளாக்மெயில் பண்ணி குடும்பமா சேர்ந்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சீங்க. விடிஞ்சா என் கல்யாணம் நடந்தாகணும், இல்லனா நான் இனிமே யார் முகத்துலயும் இந்த ஜென்மத்துக்கும் முழிக்க மாட்டேன்” வசீகரனின் ஆணித்தரமான பேச்சில் அலமேலு விக்கித்து நின்றிருந்தார்.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!