Skip to content
Post Views: 825
அலமேலு நடராஜனை பாவமாக பார்க்க, “வசி கேக்கறதுல நியாயம் இருக்கு அலமு. அவனோட ஆசைய நமக்காக தியாகம் பண்ணான். அவன இப்படி ஊரக்கூட்டி கேலி கூத்தாக்கி நிக்க வச்சிருக்கே. மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா அது பொண்ணுக்கு மட்டும் அவமானமில்ல, மாப்பிள்ளைக்கும் தான். பொண்ணு ஏன் மண்டபத்துக்கே வரல, மாப்பிள்ளைக்கு என்ன பிரச்சனையோனு பேச ஆரம்பிச்சிடுவாங்க”
“கல்யாணம் நின்னுடும்னு நீங்களாவே முடிவு பண்ணி பேசினா எப்படிங்க. லதாவுக்கு போனை போடுங்க. எனக்கு உண்மையாவே நெஞ்சுவலி வந்துடும் போலருக்கு”
Advertisement
“உண்மையாவே நெஞ்சுவலியா? அப்பா முன்னாடி வந்தது?” என்று வசீகரன் கூர்பார்வை பார்க்க, அலமேலுவின் நெஞ்சில் நீர்வற்றி போனது.
“ரெண்டாவது முறை நெஞ்சுவலி வந்துடும்னு சொல்றதுக்கு, உண்மையாவே வந்துடும்னு சொல்லிட்டேன்டா”
Advertisement
Advertisement
“நீ பண்றதுக்கு எனக்கு தான் நெஞ்சுவலி வரப்போவுது” என்றான் கோபத்துடன்
“என்னங்க லதாவுக்கு போனை போடுங்க” ஈனஸ்வரத்தில் முனகினார்.
Advertisement
அவரும் போன் செய்து ஸ்பீக்கரில் போட்டார். “மாமா, சரவணனனை எதுக்கு அனுப்பி வச்சீங்க? அவர் இங்கே வந்து கத்திட்டு இருக்காரு” என்றாள் லதா
“நாங்க யாரும் அனுப்பலயேம்மா”
“இருங்க, சத்தம் கேட்டு மினிஸ்டரும் மஞ்சுளாம்மாவும் வெளிய வர்றாங்க. லைன்லயே வெயிட் பண்ணுங்க” என்றாள்.
“என்ன இங்கே கூச்சல்?” அமைச்சர் பொன்னுரங்கம் கேட்க,
“கூச்சலா? கல்யாண ரிசப்ஷன்ல என் தம்பி அங்கே தனியா நின்னுட்டு இருக்கான். நீங்க யாரும் இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான் சரவணன் ஆக்ரோஷத்துடன்
“சாரி மிஸ்டர் சரவணன், இந்த கல்யாணம் நடக்காது”
“ஏன்?” சரவணன் அதிர்ச்சியாக கேட்க, இந்தப்பக்கம் வசீகரனை தவிர அனைவரும் அதிர்ந்தார்கள்.
“கொஞ்ச முன்னாைடி தான் சென்ட்ரல் மினிஸ்டர் வந்தாரு. அவரோட பையனுக்கு எங்க நவ்யாவ ரொம்ப பிடிச்சிருக்காம். கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு கேட்டாரு”
“எது? நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு இன்னைக்கு பொண்ணு கேட்டாரா?” சரவணன் சீற்றத்துடன் வினவ,
“ஆமா, நாங்களும் எக்ஸ்பெக்ட் பண்ணல. ரிசப்ஷனுக்கு தான் ரெடியாயிட்டு இருந்தோம். சென்ட்ரல் மினிஸ்டர் வந்துட்டாரு, எலக்ஷன்ல எங்க கட்சி தோத்து போற மாதிரி இருக்கு. அவரோட சம்மந்தம் வச்சிக்கிட்டா அடுத்த எலக்ஷன்ல எனக்கு அதே பதவி வர்ற மாதிரி பேவர் பண்றதா சொல்லியிருக்காரு”
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க அங்கிள்?” லதா பதற்றத்துடன் கேட்டாள்
“என்ன சொல்லுவேன்? கல்யாணத்துக்கு ஓகேனு சொல்லிட்டேன்”
“எங்க தம்பிக்கு உங்க பொண்ணு நவ்யாவ கொடுக்கறதா வாக்கு கொடுத்திருக்கீங்களே, அது மறந்து போச்சா?” சரவணன் காட்டமாக கேட்க
“என்ன மிஸ்டர் சரவணன் இந்த காலத்துல போய் வாக்கு அது இதுனு பேசிட்டு இருக்கீங்க. எலக்ஷன் முன்னாடி எவ்வளவோ வாக்கு கொடுக்கறோம். அதையே நாங்க ஞாபகம் வச்சிக்கறதில்ல, மக்களும் மறந்திடுவாங்க. நீங்க என்னமோ சின்னபுள்ளதனமா பேசிட்டு இருக்கீங்க” பொன்னுரங்கம் நக்கலாக கேட்க
“உங்க பதவிக்காக பெத்த பொண்ணோட வாழ்க்கைய அழிக்கலாமா சார்? நவ்யா இதுக்கு எப்படி ஒத்துப்பாங்க? கூப்பிடுங்க அவங்கள”
“என் பொண்ணு நவ்யாவுக்கும் மினிஸ்டர் மகன் ராகவ்வ பிடிச்சிருக்கு. அதனால தான் முழுசம்மதம்னு சொன்னேன். உங்க தம்பி எதுவுமில்லாம லோன் வாங்கறதுக்கு அலைஞ்சிட்டு இருந்தப்பவே என் பொண்ணு ஆசப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டவன் நானு. இப்பவும் அவ சம்மதத்தோட தான் இந்த சம்மந்தத்தை பேசி முடிச்சேன். நவ்யா டெல் ஹிம்”
“ஆமா. டாடி சொல்றது கரெக்ட் தான். வசீகரனை விட ராகவ் தான் என்னோட டைப்ல இருக்காரு. அன்ட் அப்பாவுக்கும் இதுல பெனிபிட் இருக்கு. நீங்க வசிக்கு வேற பொண்ணை பாருங்க, நான் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க”
“யு பிட்ச், சாரி சொல்லிட்டா எல்லாம் சரியாயிடுமா? அங்கே கல்யாண ரிசப்ஷன்ல எல்லாரும் உட்கார்ந்துட்டு இருக்காங்க, அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது?” சரவணன் நவ்யாவை பார்த்து பற்களை நறநறத்தான்
“ஹலோ மிஸ்டர், எங்க பக்கம் தப்பாயிடுச்சுனு தான் கேட்டுக்குள்ள நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன். இல்லனா நீயெல்லாம் கேட்டுக்கு வெளியே நிக்க வேண்டியவன். என் முன்னாடியே என் பொண்ணை கேவலமா திட்டுவியா நீ? எவ்வளவு செலவாச்சுனு சொல்லு, கொடுத்துடறேன். அதுக்கு தானே வாள்வாள்னு கத்திட்டு இருக்கே. மஞ்சு அந்த செக் புக்கை எடுத்துட்டு வா” என்று பொன்னுரங்கம் எகிற
“உன் பணம் யாருக்குடா வேணும். கொடுத்த வாக்கை காப்பாத்தணும்ங்கிற மரியாதை தெரியாத மனுஷன் கிட்ட பேச வந்தேன் பாரு? என்னை சொல்லணும்” என்று சரவணன் ஏக வசனத்தில் திட்ட
“செக்யூரிட்டி கால் த போலீஸ்” என்று அமைச்சர் குரல் கேட்டதும், இங்கே வசீகரனுக்கு நரம்புகள் புடைத்துக் கொண்டது. சரவணன் அங்கே சென்று தனக்காக அவமானப்பட்டு நிற்பதை அவனால் தாங்கவே முடியவில்லை. அங்கே இருந்த நிலைக்கண்ணாடியில் ஓங்கி குத்த கையில் ரத்தம் தெரித்தது.
அந்த பக்கம் லதாவும் அவள் அப்பாவும் அமைச்சரையும் சரவணனையும் மாறி மாறி சமாதானம் செய்துக் கொண்டிருந்தனர்.
மகன்களை விட நடராஜன் கோபத்தின் உச்சியில் இருந்தார். அவர் கோபம் எல்லாம் மனைவி அலமேலுவின் மீது தான்.
“அடப்பாவிங்களா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுத அலமேலு, “இப்போ என்னங்க பண்றது?” என்று கணவரை பார்த்து கேட்க
“போய் சாவுடி” என்று நடராஜன் மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.
வசியும் ரஞ்சனியும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் நினைவு தெரிந்த நாள் முதல் நடராஜன் மனைவியை அதட்டி பேசிக்கூட பார்த்ததில்லை. இன்று வளர்ந்த பிள்ளைகள் முன்பு மனைவியை அறையவும் வசிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“நீயே எல்லா முடிவையும் எடுக்கறது, என்கிட்ட ஒரு வார்த்தை கூட கலந்து பேசறது இல்ல. நீ ஒருத்தனுக்கு பண்ண துரோகம் தாண்டி இப்போ உனக்கே திருப்பி அடிக்குது. உனக்கு பொறந்த பாவத்துக்கு என் புள்ளைங்க ரெண்டு பேரும் அவமானப்பட்டு நிக்கறானுங்க.
நான் முன்னாடியே சொன்னேன், கர்மா விடாது, நாம செய்யறதும் சொல்றதும் நமக்கே திருப்பி அடிக்கும்னு சொன்னேனே கேட்டியா? அந்த முத்து மாணிக்கத்துக்கு நீ செஞ்ச துரோகத்தால தாண்டி நமக்கு இந்த நிலைமை”
அலமேலு கன்னத்தை பற்றிக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
“யாருப்பா முத்து மாணிக்கம்?” வசீகரன் அழுத்தமான குரலில் கேட்டான்.
“நம்ம வீட்ல வேலை செஞ்சாளே சின்னபொண்ணு அவளோட அப்பா தான்டா. பணம் தேவைக்காக அவர் பொண்ணை உனக்கு கட்டித்தரதா என்கிட்ட கேக்காம கூட வாக்கு கொடுத்துட்டா. அப்புறம் பணத்தை கொடுத்துடறேன், இந்த சம்மந்தம் வேணாம்னு சொல்லிட்டா. பாவம் அந்த மனுஷனும் போய் சேர்ந்துட்டாரு. அவர் பொண்ணே நம்ம வீட்டுக்கு அநாதையா வந்து நின்னப்போ ஐயோனு இருந்துச்சு. அப்பவும் இவ அவள வெளிய அனுப்பறதுலயே குறியா இருந்தா. நானும் இவள அதட்டி பேசி பழக்கமில்லாததால புத்திமதி சொல்றதோட நிறுத்திட்டேன். அது தப்புனு மண்டைல அடிச்ச மாதிரி நவ்யாவோட குடும்பம் எனக்கு நல்ல பாடத்தை கொடுத்துட்டாங்க. பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப என்னங்க பண்றதுனு என்னை கேட்டுட்டு இருக்கா” என்று மனைவியின் இன்னொரு கன்னத்தில் அறைந்தார்.
“அப்பா” வசி அதட்டினான்.
“எப்பவோ அடிச்சிருக்க வேண்டயதுடா. இப்பவாச்சும் அடிக்கலனா இவ திருந்தமாட்டா” என்று மகனிடம் சொல்லிவிட்டு மனைவியை பார்த்து ஒற்றை விரலை நீட்டி கோபமாக பேசினார்.
“இந்த கல்யாணம் நடக்கலனா வசி உன்னை சும்மா விடறானாே இல்லையோ தெரியாது. ஆனா நான் உன்னை சும்மா விட மாட்டேன். விடிஞ்சா வசியோட கல்யாணம் நடக்கணும். இல்லனா நான் கட்டின தாலிய பிடுங்கிட்டு உன்னை வீட்டை விட்டு துரத்தி அனுப்பிடுவேன். ஜாக்கிரதை” என்று உறுமி விட்டு கோபத்தோடு வெளியே சென்றார்.
வசீகரனே தந்தையின் அவதாரத்தை கண்டு மலைத்து விட்டான். அலமேலுவை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது. ஆனால் தன் அன்னை பணத்தேவைக்காக தான் தன்னை பேரம் பேசியிருக்கார் என்ற கதை அவனுமே அறியாதது. லதாவுடன் சேர்ந்து கொண்டு நெஞ்சுவலி ஆப்ரேஷன் என்று நாடகமாடவும் அவனுக்கு மனம் விட்டு போயிருந்தது. எதுவரைக்கும் செல்கிறார்கள் பார்க்கலாம் என்று தான் கண்டும் காணாமல் இருந்துக் கொண்டு அவர்கள் வழியை பின்பற்றி அவர்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தான். அதனால் அன்னையை சமாதானம் செய்யாமல் சிலையாக நின்றிருந்தான்.
ரஞ்சனி தான் அலமேலுவை தேற்றினாள்.
“அம்மா, அப்பாவோட கோவம் நியாயமானது, நீ செஞ்சது தப்பும்மா. முத்தமாணிக்கம் மாமா அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரே அவர் தானே? ரொம்ப வெள்ளந்தியான மனுஷன், அவரை நீ ஏமாத்தி இருக்க கூடாது. அவர் பொண்ணு தான் சின்னபொண்ணுனு தெரிஞ்சும் நீ அவளை வேலைக்காரியா நடத்தியிருக்கே. பாவம் விஷயம் தெரியாம நானும் அவள திட்டியிருக்கேன். நம்ம வீட்ல இருந்தவரைக்கும் அவ, தான் யாருனு காட்டிக்காம இருந்திருக்கா. அதுவே அவளோட நல்ல குணத்தை காட்டலயா? வசியும் அவள விரும்பி இருக்கான், அதனால தான் டிரஸ் எடுத்து கொடுத்திருக்கான் போல. வீட்ல உன் மரியாதைய காப்பாத்திக்கணும்னா நீ அந்த பொண்ணையே வசிக்கு கட்டி வச்சிடும்மா”
அழுது கொண்டிருந்த அலமேலுவுக்கும் வேறு வழியிருப்பதாக தெரியவில்லை. “இப்போ நான் அவள எங்கனு போய் தேடுவேன்” என்றார் தேம்பிக் கொண்டே
“சரவணன் அண்ணாகிட்ட அவ பேசிட்டு இருந்தத நான் பாத்தேன். ரிசப்ஷன் ஹால்ல தான் இருப்பானு நினைக்கிறேன். நீயே போய் அவள கூப்பிட்டு வசிய கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேளும்மா”
அலமேலு தயக்கத்துடன் ரஞ்சனியை பார்க்க, “அவ வசிக்கு பொண்டாட்டியா ஆனா தான் நீ அப்பாவுக்கு பொண்டாட்டியா வாழ முடியும். அதுக்கப்புறம் உன் இஷ்டம்”
“ரஞ்சு, உன் அப்பா லேசுல கோவப்பட மாட்டாரு, கோபப்பட்டா மனுஷனாவே இருக்கமாட்டாரு. சின்னபொண்ணுகிட்ட பேசறதுக்கு நீயும் என்கூட வாடி” என்று மகளை அழைத்தார்.
வசீகரன் முறுவலுடன் கழட்டி வீசியிருந்த கோட்டை எடுத்து மாட்டினான்.
மாணவர்களுடன் மாணவியாய் கூட்டத்தில் அமர்ந்திருந்த சின்னபொண்ணு, அலமேலுவும் ரஞ்சனியும் தன்னை நோக்கி வருவதை கண்டு தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.
“சின்னபொண்ணு கொஞ்சம் தனியா வாம்மா, உன்கிட்ட பேசணும்” என்று அழைக்க, தடுமாற்றத்துடன் அவர் பின்னால் சென்றார்.
“மேடம், நான் சரவணன் சார் ஸ்டுடென்ட்டா தான் கல்யாணத்துக்கு வந்தேன். ஹாஸ்டல்ல இருந்துட்டு வரலனு சொன்னதால பிரெண்ட்ஸ் எல்லாம் என்னைய விடாம கூட்டிட்டு வந்துட்டாங்க. என்னால எந்த பிரச்சனையும் வராது மேடம். ஒரு ஓரமா இருந்துட்டு கல்யாணம் முடிஞ்சதும் போயிடுவேன்”
“நான் அதப்பத்தி கேக்கறதுக்கு வரலம்மா. என் மகன் வசிய கட்டிக்க சொல்லி கேக்க தான் வந்தேன்”
“என்னையா? நானா?”
“ஆமா, என் மகன் வசிய கல்யாணம் பண்ணிக்கிறீயா?”
“ஏன் நவ்யா மேடம் வரலயா?”
ரஞ்சனி சுருக்கமாக நடந்ததை சின்னபொண்ணிடம் கூறினாள்.
“நான் உன்கிட்ட நடந்துக்கிட்டத மனசுல வச்சுக்காம மணமேடைல வந்து வசி பக்கத்துல நில்லும்மா. காலைல உனக்கும் வசிக்கும் கல்யாணம்”
“மேடம், நான் இன்னும் படிச்சு முடிக்கல. எனக்கு அக்காங்க நாலு பேரு இருக்காங்க, அவங்க யாருமே இல்லாம இப்போ எப்படி என் கல்யாணத்தை பத்தி நானே எப்படி முடிவெடுக்க முடியும்? ” என்றாள் பதட்டத்தோடு
“உன் நிலைமை எனக்கு புரியுதும்மா. ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல. இந்த கல்யாணம் நடக்கலனா வசிக்கு அவமானம், எங்க குடும்ப மானமே போயிடும். உன் அப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேத்தறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு.
நான் உன்னை வீட்ட விட்டு துரத்த நினைச்சேன், இப்போ நீ வசிய கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நானே அந்த வீட்ல இருக்க முடியும். முடியாதுனு மட்டும் சொல்லிடாதம்மா” என்று அலமேலு சின்னபொண்ணுவின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீருடன் கேட்க, அவளால் மறுக்க முடியவில்லை, அதே சமயம் முடிவெடுக்கவும் தைரியமில்லாமல் மெளனமாக தலை கவிழ்ந்தாள்.
அவள் மெளனத்தை சம்மதமாக கருதி, ரஞ்சனி சின்னபொண்ணுவின் கரம் பற்றி மணமகள் அறைக்கு அழைத்து சென்றாள். அதே புடவையில் அவளுக்கு அவசரமாக மெல்லிய அலங்காரம் செய்து தலையில் பூச்சூட்டி மணமேடைக்கு அழைத்து வந்தாள்.
அலமேலு சின்னபெண்ணிடம் பேசியதை கவனித்த நடராஜன் வசீகரனை தயாராக சொல்ல நினைத்து அவன் அறையை நோக்கி சென்றார். மாப்பிள்ளை எப்பவோ ரெடி என்பது போல வசீகரன் புதுபொலிவுடன் அறையை விட்டு வெளியே வந்திருந்தான்.
நடராஜன் புன்னகையோடு மணமேடைக்கு செல்லுமாறு கைக்காட்ட, அதே நேரம் சின்னபொண்ணு ரஞ்சனி செய்த சிறு அலங்காரத்தில் குட்டி தேவதையாக தலையை குனிந்தபடி நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
வசீகரன் அவளின் கரம்பற்றியவுடன் பதற்றத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருபுருவங்களையும் ஏற்றி இறக்கி ரகசிய வெற்றி புன்னகையை அவளிடம் வீசினான்.
அவள் குழப்பத்துடன் அவனை பார்த்து பின்பு அந்த ஹாலை ஒருவித மிரட்சியுடன் பார்த்தாள். அரங்கத்திலிருந்த அனைவரும் வியப்புடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கூச்சத்தில் நெளிந்தாள். உடன் இருந்த மாணவர்கள் எல்லாம், “சின்னபொண்ணு எப்போ கல்யாண பொண்ணாச்சுடா” என்று உரக்க கத்தி தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்கள்.
இத்தனை பேர் மத்தியில் மேடையில் வசீகரனுடன் சேர்ந்து நிற்பது வெட்கத்தையும் கூச்சத்தையும் தர தன்னை மறந்து அவன் முழங்கையை பற்றி அவன் பின்னால் முகத்தை மறைத்து கொண்டு நின்றாள்.
வசி தலையை பக்கவாட்டாக அவள் பக்கம் சரித்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக மிகவும் மென்மையான குரலில் “சின்னு, நான் உனக்கு யாருனு இப்போ சொல்லு” என்றான்
(தொடரும்)
error: Content is protected !!