Skip to content
Post Views: 107
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்பனுக்கு சிகிச்சைகள் யாவும் மிகவும் தீவிரமாய் நடந்து கொண்டிருந்தது. இன்பனின் நிலையை எண்ணி கவலையில் மூழ்கியிருந்த ஆறுமுகமும் அவரருகில் நின்றிருந்த ராணியும் நீலவேணியும் ஆழினியின் வருகைக்காக காத்து கொண்டிருக்க, சற்று நேரத்தில் ஆழினியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
ஆழினியை கண்டதும் அவளருகில் வேகமாய் ஓடியவள்
Advertisement
“அக்கா, இன்பாவுக்கு பிரேயினுக்கு போற ஆக்சிஜன் சப்ளை கொஞ்சம் கொஞ்சமா குறையுதாம்…. சீக்கிரமா ஆப்ரேஷன் பண்ணனும் இல்லன்னா காப்பாத்துறதே ரொம்ப கஷ்ட்டம்னு டாக்டர் சொல்றாங்க…. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு….” என்று நீலவேணி கூறியவாறு அவளை அணைத்து அழ ஆரம்பிக்க, அவள் கூறியதை கேட்ட ஆழினி அதிர்ச்சியில் சிலையாய் நின்றிருந்தாள்.
அச்சமயத்தில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மருத்துவர் வெளியில் வர, அவரருகில் கலக்கத்துடன் சென்றவள்
Advertisement
Advertisement
“டாக்டர்…. இன்பாவுக்கு என்னாச்சு?” என்று வினவிய ஆழினியிடம்
“ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்காங்க…. மூளைக்கு போற ஆக்சிஜன் சப்ளை கொஞ்சம் கொஞ்சமா குறையுது, இன்னும் லேட்டானா பிரெயின் செல் டேமேஜாக ஆரம்பிச்சிடும்…. மைனர் சர்ஜரி பண்ணியும் எக்ஸ்பெக்டெட் ரிசல்ட் கிடைக்கல, முக்கியமா பிரெயின் பிரெஷர் வேற இன்னும் குறையல…. இப்போ மேஜர் நியுரோ சர்ஜரி பண்றது மட்டும் தான் ஒரே வழி…. நாளைக்குள்ள அட்வான்ஸ் அமௌன்ட் கட்டிடுங்க…. அதுக்கு பிறகுதான் சர்ஜரி ப்ராஸஸ் ஸ்டார்ட் பண்ண முடியும்….” என்று மருத்துவர் கூறியதை கேட்ட நால்வரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றிருந்தனர்.
Advertisement
அவர்களில் முதலில் சுயமடைந்தவள் தன்னெதிரில் நின்றிருந்த மருத்துவரிடம்
“ஆப்ரேஷனுக்கு எவ்வளவு செலவாகும் டாக்டர்?” என்று ஆழினி வினவ
“ஆப்ரேஷனுக்கு ஏழிலிருந்து பத்து லட்சம் வரை செலவாகும் ஆனா ஐ.சி.யு ஸ்டே, வென்டிலேட்டர் சப்போர்ட், மெடிசன்ஸ் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட முப்பது லட்சம் வரை செலவாகலாம்.… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணத்தை கட்டிடுங்க லேட் பண்ணா அப்புறம் பேஷ்ன்டோட உயிருக்கு தான் ஆபத்தா முடியும்….” என்று கூறிய மருத்துவர் அவ்விடத்திலிருந்து சென்றுவிட, இங்கு நால்வரும் அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
இன்பனின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த பங்கென்று நீலவேணியின் நகைகளை ஆறுமுகமும் ராணியும் ஆழினியிடம் கொடுக்க, அதனை வாங்க மறுத்தவள்
“வேண்டாம் மாமா…. ஏற்கனவே நீங்க நிறையா செலவு பண்ணிட்டீங்க, இது நீலவேணி கல்யாணத்துக்காக நீங்க சேர்த்து வச்சது…. இதை போய் எப்படி? வேண்டாம் அத்தை, பிளீஸ்….” என்று கூறிய ஆழினியிடம்
“அப்படி சொல்லாத ஆழினி…. நாங்க யாருக்கு இதை செய்யுறோம்? என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போறவரை காப்பத்துறதுக்கு தான? தயவுசெய்து இதை ஏத்துக்கோம்மா….” என்று ராணி கூற, அவரை ஆழினி தன் கண்கள் கலங்க நன்றியுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
“ஆனா இதெல்லாம் வித்தாக்கூட ஆறு லட்சம் தான் வரும்…. மீதி பணத்துக்கு என்னப்பா பண்றது?” என்று நீலவேணி வினவ
“முதல நகையை வித்து பணத்தை கட்டுவோம், மீதி பணத்தை எப்படியாவது ரெடி பண்ணிடலாம்…. ஆண்டவன் கண்டிப்பா ஏதாவதொரு வழியை நமக்கு காட்டுவான்…. ஆழினிம்மா, நானும் ராணியும் இந்த நகையை வித்துட்டு பணத்தை வாங்கிட்டு வந்துடுறோம்…. நீலவேணி நீ எங்க கூட வா, உனக்கும் ஆழினிக்கும் குடிக்க காபி வாங்கி தரேன்…. ஆழினி நீ இங்கேயே இரும்மா, கொஞ்ச நேரத்துல நீலவேணியும் வந்துடுவா நீங்க ரெண்டுப்பேரும் இன்பனை பார்த்துக்கோங்க, நானும் அத்தையும் சீக்கிரமே வந்துடுறோம்….” என்று கூறிய ஆறுமுகம் தன் மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட, இங்கு ஆழினியோ அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து தன் கண்களை மூடி இன்பனை காப்பாற்றி தருமாறு இறைவனிடம் மன்றாடி கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ஆழினியின் தோள்களை யாரோ தொட்டு அழைப்பதை போல் உணர, கலங்கிய தன் விழிகளை துடைத்தவள் நீலவேணி தான் வந்திருக்கிறாள் என்று எண்ணியவாறு கண்களை திறக்க நாற்பது வயது தொடக்கத்திலிருக்கும் செவிலியர் ஒருவர் அவளெதிரில் நின்றிருந்தார்.
அவரை கண்டதும் நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்தவள்
“சிஸ்டர்…. டாக்டர் எதாவது சொன்னாங்களா? இன்பா…. இன்பா நல்லாயிருக்கான் தான?” என்று ஆழினி பதட்டமாக வினவ
“இல்ல, நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்ல…. அது வந்து…. நான் உங்க கிட்ட தான் பேச வந்தேன்…. கொஞ்சம் தனியா பேசணும்…. இங்க டாக்டர்ஸ் எப்பயுமே இருப்பாங்க அதுனால இந்த இடத்துல பேசமுடியாது…. இப்போ மணி பத்தரையாகுது, பதினொரு மணிக்கு பார்க்கிங் பக்கத்திலிருக்க டீ கடைக்கு வரீங்களா?” என்று வினவிய செவிலியரை குழப்பமாக பார்த்தவள்
“என்ன? என் கிட்ட என்ன பேசணும்? எனக்கு புரியல?” என்று ஆழினி கேட்க
“நீங்க அங்க வாங்க, நான் எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்….” என்று செவிலியர் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிட, அவர் செல்லும் திசையை புரியாமல் பார்த்து கொண்டிருந்த ஆழினியின் மனமானது பல்வேறு சிந்தனைகளில் சுழல ஆரம்பித்துவிட்டது.
தனக்கும் ஆழினிக்கும் தேநீர் வாங்கி கொண்டு அதை தன் கைகளில் ஏந்தியவாறு இன்பன் அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு நீலவேணி வருகை புரிய, அவள் அளித்த தேநீரை அருந்தியவள் இன்பனுக்கு காவலாய் நீலவேணியை அவ்விடத்தில் விட்டுவிட்டு செவிலியர் கூறிய இடத்திற்கு சென்றிருந்தாள். ஆழினி அங்கு செல்வதற்கு முன்பே அவளின் வருகைக்காக தேநீர் கடையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அச்செவிலியர் காத்திருந்தார்.
ஆழினியை கண்டு மெலிதாக சிரித்தவர்
“வாம்மா, உட்காரு…. டீ குடிக்கிறீங்களா?” என்று வினவிய செவிலியரை கண்டு மறுப்பாக தலையசைத்தவள்
“என்ன ஏன் வர சொன்னீங்க? அதை முதல சொல்லுங்க?” என்று ஆழினி வினவ
“நீ முதல உட்க்காரு, நான் சொல்றேன்….” என்று கூறிய செவிலியரின் கூற்றிற்கு இணங்க அவரெதிரில் ஆழினியும் அமர்ந்து கொண்டாள்.
“நான் வாணி, இந்த ஹாஸ்பிடல்ல மூணு வருஷமா நர்ஸா வேலை பார்க்குறேன்…. உன் தம்பிக்கு ஆப்ரேஷன் பண்ண உனக்கு பணம் தேவைப்படுது தான? நான் உனக்கு உதவி பண்றேன்….” என்று கூறியவரை குழப்பமாக பார்த்து கொண்டிருந்தவளிடம்
“எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டருக்கு உடனடியா சர்ரோகேட் மதர் அதாவது வாடகை தாய் தேவைப்படுது…. நீ சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசலாம்….” என்று வாணி கூற, அவரை ஆழினி அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தாள்.
“என்ன? என்ன சொல்றீங்க சிஸ்டர்? இதுக்கு தான் என்னை இங்க வர சொன்னீங்களா?” என்று கோபமாக வினவிய ஆழினியிடம்
“கோபப்படாதம்மா, எனக்கு உன் நிலைமை தெரியும்…. உன் அப்பா அம்மாவுக்கு என்னாச்சு, உன் தம்பியோட கண்டிஷன் எல்லாமே எனக்கு தெரியும்…. ஆப்ரேஷனுக்கு பணம் ஏற்பாடு பண்றதுக்கு நீயும் உன் வீட்டாளுங்களும் எவ்வளவு கஷ்ப்படுறீங்கன்னு நான் பார்த்தேன்…. நீ நர்ஸுக்கு படிச்சிருக்க, உனக்கு சர்ரோகேட் மதர் பத்தின விளக்கத்தை நான் சொல்லி தான் தெரியனும்னு இல்ல…. நான் உன்னை கம்பெல் பண்ணலம்மா, நீ சம்மதிச்சா நாளைக்கே உன் கைக்கு நீ கேக்குற பணம் வந்து சேரும்…. உனக்கு இதுல சம்மதம் இல்லன்னா எனக்கொரு பிரச்சனையுமில்ல…. நீ உன் வேலையை பார்த்துட்டு போ, நான் என் வேலையை பார்த்துட்டு போறேன்…. உனக்கு பணம் கிடைக்குமேன்னு தான் சொன்னேன், அப்புறம் உன் இஷ்ட்டம்….” என்று வாணி கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்து செல்ல
“சிஸ்டர், ஒரு நிமிஷம்….” என்று அழைத்த ஆழினியின் குரல் அவரை தடுத்து நிறுத்தியது.
தன்னெதிரில் நின்றிருந்த ஆழினியை என்ன என்பதை போல் பார்த்து கொண்டிருந்தவரிடம்
“என்…. என் தம்பி ஆப்ரேஷனுக்கு பணம் கண்டிப்பா கிடைக்கும்ல?” என்று நாதழுதழுக்க வினவிய ஆழினியிடம்
“கண்டிப்பா கிடைக்கும், நான் உன்னை ஏமாத்துறேன்னு நினைக்காதம்மா உன் தம்பியோட ஆப்ரேஷனுக்கு பணம் கிடைச்சிடுச்சுன்னு நம்பு…. மதியம் ரெண்டு மணிக்கு என் ஷிப்ட் முடியுது, நீ என்னோட வா நான் உன்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போறேன் அவங்க உன் கிட்ட மத்த விஷயத்தை சொல்லுவாங்க….” என்று வாணி கூறிவிட்டு வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து சென்றுவிட, இங்கு ஆழினியோ மனதில் எழுந்திருக்கும் பல போராட்ட உணர்வுகளுடன் இன்பனை அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள்.
ஆழினியின் வருகைக்காக அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியில் ஆறுமுகமும் ராணியும் வெகுநேரமாய் காத்திருந்தனர். மனதில் குழப்பத்துடன் அவ்விடத்திற்கு வந்தவளின் மனநிலையை அறியாதவர்
“ஆழினி, எங்கடா போன? நகையை வித்து பணம் வாங்கிட்டு வந்துட்டோம் ஆனா அஞ்சு லட்சம் தான் கிடைச்சிருக்கு…. இப்போ இதை முன் பணமா கட்டிடலாம் மீதியை எப்படியாவது நாம புரட்டிப்போட்டு வாங்கிடலாம்….” என்று கூறிய ஆறுமுகத்தை கலங்கிய விழிகளுடன் பார்த்தவள்
“ஆப்ரேஷனுக்கு பணம் கிடைச்சிடுச்சு மாமா….” என்று கூறியவள் சற்று நேரத்திற்கு முன்பு வாணியுடன் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்திருந்தாள்.
ஆழினி கூறியதை கேட்டு ஆறுமுகம் மட்டுமல்லாது அவரருகில் நின்றிருந்த ராணியும் நீலவேணியும் கோபத்தில் கொத்தித்தெழுந்துவிட்டனர்.
“உனக்கென்ன பைத்தியமா ஆழினி? யாரோ எவளோ சொன்னான்னு வாடகை தாயாகப்போறேன்னு வந்து நிக்குற?” என்று ராணி கேட்டு கத்த ஆரம்பிக்க
“எனக்கு வேற வழி தெரியல அத்தை…. இன்பனை காப்பாத்த என் கிட்டயிருக்க ஒரே வழி இது தான்….” என்று கண்கலங்க கூறிய ஆழினியிடம்
“இது வேண்டாம்மா, நீலவேணி மாதிரி நீயும் எனக்கொரு பொண்ணு தான் என்னால இதை ஏத்துக்கமுடியாது…. அவசரப்படாத ஆழினி, நாம பணத்துக்கு வேறெங்காவது ஏற்பாடு பண்ணலாம்….” என்று ஆறுமுகம் கூற
“எங்க மாமா ஏற்பாடு பண்றது? எல்லார் கிட்டயும் கடன் வாங்கியாச்சு இதுக்கு மேல யார் நமக்கு கடன் தருவாங்க? அப்பாவும் அம்மாவும் வாங்கின நிலத்தை நம்பி தான் இன்பன் ஆப்ரேஷனுக்கு பணம் இருக்குன்னு தைரியமா இருந்தேன், இப்போ அதுவும் இல்லாம போயிடுச்சு…. சரி, அந்த நிலத்தை வித்தாங்களே அந்த காசு என்னாச்சுன்னு தெரியுமா? எங்களுக்காக இப்போ நீங்களும் கடனாளியா நிக்குறீங்களே மாமா என்னால அதை தாங்கிக்க முடியல…. ‘ஆண்டவன் கண்டிப்பா ஏதாவதொரு வழியை நமக்கு காட்டுவான்னு’ சொன்னீங்க தான? அந்த வழி இது தான்னு நான் நாம்புறேன் மாமா….” என்று ஆழினி தீர்க்கமாக கூற, அவளிடம் என்ன கூறுவதென்று அறியாத ஆறுமுகமும் ராணியும் அமைதியாய் நின்றிருந்தனர்.
ஆழினியின் கைகளை இறுக்கமாக பற்றியவள்
“அம்மா அப்பா சொல்றதை கேளுங்க அக்கா…. இது வேண்டாம், உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு….” என்று கூறிய நீலவேணியை கண்டு இயலாமையுடன் புன்னகைத்தவள்
“வாழ்க்கையா? எனக்கா? அதெல்லாம் எதுவுமில்ல நீலா…. உனக்கு உன் இன்பா வேண்டாமா? என் தம்பி எப்படியாவது உயிர் பிழைக்கனும், பழைய மாதிரி என் கிட்ட அவன் பேசி சண்டை போடனும், முக்கியமா நீயும் இன்பாவும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும்…. அதுவே எனக்கு போதும்….” என்று நாதழுதழுக்க நீலவேணியிடம் கூறிவிட்டு இன்பனை காண்பதற்கு அறைக்குள் செல்லும் ஆழினியின் நிலையை எண்ணி மற்ற மூவரும் மனம் கலங்கி நின்றிருந்தனர்.
மருத்துவ பரிசோதனை கருவிகளின் சத்தங்கள் மட்டுமே அந்த அமைதியான அறையின் நான்கு திசைகளிலும் ஒளித்து கொண்டிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் உடல் முழுவதும் குளுமை பரவ ஆரம்பிக்க, குளிரால் மட்டுமல்லாது பயத்திலும் உடல் நடுங்கியவாறு தன் தம்பி படுத்திருந்த மெத்தையை நோக்கி சென்றிருந்தாள் ஆழினி.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சேட்டை செய்து தன்னை வம்பிழுக்கும் ஆருயிர் தம்பியின் முகத்தில் ஆங்காங்கே சிராய்ப்புகளுடன் தலையில் பெரிய கட்டுகளிட்டு வாடிய கொடியாய் படுத்திருப்பவனின் நிலையை கண்டதும் ஆழினியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள் யாவும் அவளது கன்னத்தை தீண்டி சென்றது.
இன்பனின் கைகளை மென்மையாக பற்றியவாறு
“இன்பா…. டேய் பன்னு…. நான் பேசுறது உனக்கு கேட்குதா?” என்று நாதழுதழுதக்க வினவியவாறு, சில நிமிடங்கள் அழுகையில் கரைந்தவள்
“ரொம்ப…. ரொம்ப பயமாயிருக்கு பன்னு…. அப்பாவும் அம்மாவும் தான் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க…. அவங்களை மாதிரி…. அவங்களை மாதிரி நீயும் என்னை விட்டுட்டு போயிடாத பன்னு…. நீயும் போயிட்டா அப்புறம் நான்…. நான் உயிர் வாழுறதுக்கான அர்த்தமே இல்லாம போயிடும்…. பிளீஸ் இன்பா…. என் கிட்ட வந்துடுடா….” என்று திக்கி திணறி அழுகையுடன் கூறிய ஆழினி அறையிலிருந்து வெளியில் சென்றுவிட, தன் கண்களை மூடியிருந்த இன்பனின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள் ஆழினியின் குரலை கேட்டிருந்த காதினை நோக்கி ஒற்றைக்கோட்டாய் வழிந்தோடியது.
ஒளி வீசும்….
error: Content is protected !!