Skip to content
Post Views: 45
அத்தியாயம்: 11
மஞ்சள் வண்ணப் பலகையில் கருப்பு நிறத்தில் செங்கல்பட்டு என்ற எழுத்தை மூன்று மொழிகளில் கண்டதும்,
Advertisement
“பாப்பா… பாப்பா… எழுந்திரி. நாம இறங்க வேண்டிய இடம் வரப் போது. முகம் கழுவி, வாய்க் கொப்பளிச்சிட்டு வா.” என்று உசுப்பி விட்டாள் ரிதன்யா.
“ம்ச்…” என்றவள் எழாது இருக்க, தோளில் சத்தென அடித்து, குரல் உயர்த்தி அதட்டினாள்.
Advertisement
Advertisement
“போம்மா…” என்று சின்னச் சடைப்புடன் எழுந்து கழிவறைக்குள் சென்றாள் சிறுமி. அவள் திரும்பி வரும் முன் உடமைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தாள் பெரியவள்.
மூன்று பெட்டிகள். இரு தோள் பைகளும் அடக்கம்.
Advertisement
“நான்… நான்…” என்று சிறுமி ஒரு பெட்டிப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்ள, கவனமாக தாம்பரத்தில் இறங்கினர் தாயும் மகளும். அப்பொழுது தான் விடியல் தொடங்கியிருந்த காரணத்தாலும், மழை ஓய்ந்திருந்தன் காரணத்தாலும், நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
தன் கைப் பையில் இருந்த அலைபேசியைத் துளாவி பெரியவள் எடுக்கும் முயற்சியில் இருக்க, சிறுமி உற்சாகக் குமிழுடன், சக்கரங்கள் பொருத்திய பெட்டியில் தொங்கிக் கொண்டு, சர் சர் என்று இங்கும் அங்கும் வளம் வந்தாள்.
“பாப்பா, அந்த யெல்லோ லயன் தாண்டி போகாத.” என்ற தாயின் எச்சரிக்கைக் குரலில் அடக்கி வாசித்தவள்,
“ம்மா… ம்மா… அங்க பாரு எலக்ட்ரிக் ட்ரெயின்.”
“ம்…”
“பறக்கும் ரயில்ன்னு நியூஸ்ல சொல்லி கேட்டிருக்கேன். நிறைய படத்துல பாத்திருக்கேன். இப்பத்தான் நேர்ல பாக்குறேன். நாம வந்தது டீசல் ட்ரெயினா?”
“இல்ல. அதுவும் எலக்ட்ரிக் தான். இப்ப டீசல் என்ஜின் கிடையாது. அந்தப் பறக்கும் ரயில்ல தான் நாம இப்ப வண்டலூர் போகப்போறோம்.”
“வண்டலூரா? அந்த நேம் போர்ட்ட க்ராஸ் பண்ணித்தான நம்ம ட்ரெயின் வந்தது?” என்றதும் மகளின் கூர் பார்வையைச் சிலகித்தவள், அவளின் தலையை வருடி,
“நாம வந்த ட்ரெயின் அந்த ஸ்டாப்ல நிக்காது. அதுனால தான் எலக்ட்ரிக் ட்ரெயின்ல போகப்போறோம்.”
“மெட்ரோ?”
“இன்னும் வண்டலூருக்கு விடல.”
“விட்டா! என்னைய அதுல கூட்டிட்டு போவிங்களா?” என்று கொஞ்சிக் கேட்க,
“கவர்மென்ட் விட எவ்ளோ நாள் ஆகும்னு தெரியல பாப்பா. ஆனாலும் நாம போகலாம். கொஞ்ச நாள் போட்டும். வீடு, வேலை, உன்னோட ஸ்கூலுன்னு எல்லாம் செட்டில் ஆனப் பின்னாடி நான் உன்னைச் சென்னை சிட்டிக்குள்ள கூட்டீட்டு போறேன்.” என்றதும் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று பட்டியல் போட்டப்படி தாயுடன் நடந்தாள் சிறுமி. இல்லை பெட்டியின் மேல் படுத்துக் கொண்டே ஊர்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் வண்டலூர் ரயில் நிலையத்தை அடைந்திருந்தனர். அங்கு வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பலர் இருக்க, ரிதன்யா, ஸ்டேசனை விட்டு வெளியேறி ஃபோனில் சுருதி சொன்ன இடத்திற்கு உடமைகளுடன் வந்தாள்.
“இவ்ளோ தான் லக்கேஜ்ஜா? நான் நிறைய கொண்டு வருவன்னு நினைச்சு டாக்ஸி ஏற்பாடு பண்ணேன்.” என்றபடி வரவேற்றாள் சுருதி.
“நேத்து காலைலயே ஸ்பீடு பார்சல் சர்வீஸ்ல எல்லாத்தையும் ஏத்தி விட்டுடேன். இன்னைக்கி சரியா பதினோரு மணிக்கு வீட்டில இருக்கும்.” என்றவள் பெட்டியை கார் டிக்கியில் அடுக்கினாள். தாய்க்கு உதவுகிறேன் என்று சேட்டை செய்து கொண்டிருந்த சிறுமியைப் பிடித்து,
“ஹாய் சரிகா… நான் யாருன்னு தெரியுமா?” என்று சுருதி கேட்க, சிறுமி மௌனச் சாமியார் ஆனாள்.
“தெரியாதா! உங்கம்மா என்னைப்பத்தி எதுவும் சொல்லலயா? இருக்கட்டும். நான் சுருதிகா. உன்னோட சித்தி.” என்று அறிமுகம் செய்து கரம் நீட்ட, விழிகளை மட்டும் உருட்டி, தாயைச் சிறுமி பார்த்தாள்.
“எங்கூட பேசக் கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்காளா உங்கம்மா?” என்று சிறுமியிடமே கேட்க, இல்லை என்று வேகமாக தலையசைத்தாள்.
“அப்றம் ஏன் பேசவே தெரியாதவ மாதிரி அவளப் பாக்குற? என்னைப் பாத்து பேசு. நீ வாயாடின்னு எனக்கு தெரியும். நான் உங்குரல்ல கேட்டிருக்கேன். தெருவே கேக்கும் நீயும் உங்கம்மாவும சண்டை போடுற சத்தம்.” என்க, அதற்கு சிறுமி சிரிப்பை மட்டுமே சிந்தி விட்டு காருக்குள் சென்றாள்.
“என்ன ரிது இது? உன்னைத் தவிர வேற யார் கிட்டயும் பேச மாட்டாளா!” என்று ரிதன்யாவைப் பார்க்க, அவள் எதையும் கண்டு கொள்ளாது காரில் ஏறி அமர்ந்தாள்.
‘அம்மா மக-ன்னு ரெண்டு பேரும் ஒரே மாதிரி போல. பேசுறதுக்குக் காசு கேக்குறாளுக. நமக்கு ஒரு பேச்சுத் துணையா இருக்கும்னு நினைச்சது தப்போ!’ என்ற யோசனையோடே காரில் ஏறினாள்.
“நேத்தே நான் சாவி வாங்கி, வீட்ட க்ளீன் பண்ணிட்டேன் ரிது. ஜாமன் வந்ததும் பால் காய்ச்சுற வேலை மட்டும் தான் இருக்கும். சொல்ல மறந்திட்டேன். ஒரு சிலிண்டர் தான் வாங்க முடிஞ்சது. அதுக்கே பத்ரி சார் தான் ஹெல்ப் பண்ணாரு. காலியான மாத்து சிலிண்டர் இல்லை. அதுனால எலக்ட்ரிக் ஸ்டவ் வச்சி கொஞ்சம் சமாளி.” என்று வளவளத்துக் கொண்டே வந்தாள்.
இடைப்பட்ட இந்தச் சில நாள்களில் ஜெயசுதாவின் அறிக்கைகளைப் பகிர்ந்து கொண்டதால், பத்ரியுடன் நல்ல நட்பு வளர்ந்திருந்தது சுருதிக்கு. அந்த நட்பு அப்படியே தொடரவேண்டும் என்று நினைத்தவள்,
“வீட்டுல என்ன சொல்லிட்டு வந்திருக்க ரிது?” என்றாள் சின்னக் குரலில்.
“எதுவும் சொல்லல.”
“அப்ப நீ இங்க இருக்குறது…”
“யாருக்கும் தெரியாது. நீயும் அதையே மெயின்டன் பண்ணு.” என்றாள் கட்டளையாக.
“ஓகே… பெரிம்மாகிட்டவாது சொல்லிட்டு வந்திருக்கலாம்ல…” என்றதும் விருட்டென அவள் திரும்பி பார்க்க, அவளின் பார்வையில் அமைதியாகிப் போனாள்.
ரிதன்யா சோர்வுடன் தலையைப் பின் இருக்கையில் சாய்க்க, சரிகா அவளின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அந்தக் கோலமே சொல்லும் சண்டை போட்டுவிட்டு வந்துள்ளாள் என்று.
ஆதலால் அவளின் வேதனையைத் தோண்டித் துருவாது அமைதியாகிப் போனாள் சுருதிகா.
அவள் துருவாது இருக்கலாம். ஆனால் அவளின் மனம் அப்படி அமைதியாக இருக்குமா? உழன்று கொண்டே இருந்தது.
என்னதான் சிபாரிசின் பேரில் வேலை உறுதி என்றாலும், எந்த அலுவலை ரிதன்யாவிற்கு ஒதுக்க என்று தீர்மானிக்க, ஆன்லயனில் நேர்காணல் உள்ளது என்று மின்னஞ்சல் மூலமும், அலைபேசி மூலமும் அந்தப் பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தியது.
ஆனால் அட்டன் செய்யத்தான் மனம் வரவில்லை ரிதன்யாவிற்கு. தாய் அல்லவா! தனியே மகளுடன் பயணித்தால் என்னென்ன பிரச்சனைகள் எங்கிருந்து முளைக்கும். அப்படித் துளிர்விடும் களேபரங்களை எப்படி? யாரின் உதவியும் இல்லாது சமாளிப்பது என்று பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
வெற்றுப் புள்ளிக்கு 360 கோணங்கள் உள்ளன என்பதுபோல், தனியாக வாழும் பெண்ணிற்கு அத்தனை பக்கங்களில் இருந்தும் அம்புகளை வீசுமே இந்தச் சமூகம். ஆதரவாக இல்லையென்றாலும் அரணாக இருக்கும் தன் குடும்பத்தை விட்டுச் செல்ல அவள் வெகுவாக யோசித்தான்.
தாங்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தோல்வி அடைவதை விரும்பவில்லை அண்ணாமலை.
எத்தனை கோபதாபங்கள் இருந்தாலும் கணவனை உதறித் தள்ளக் கூடாது என்பவர் முத்து லெட்சுமி. அவர்களுக்கு கோர்ட்டில் வழங்கப்பட்ட விவாகத்தெல்லாம் ஒரு பொருட்டே அல்ல… சில நாளில் மகளின் கோபத்தைத் தணிய வைத்து மீண்டும் விக்ரமின் வசம் ஒப்படைத்து, மகளை வாழ வைக்கலாம் என்ற நிம்மதியில் இருந்தவர்களுக்கு மகளின் மறுமண முடிவு ஆத்திரப்பட வைத்தது.
மற்றவர்கள் சண்டையிட்டாலும் மகளின் மறுமண முடிவை முத்துலெட்சுமி ஆதரித்தார்.
“நீ எடுத்திருக்குறது முடிவு சரின்னு தோணுது ரிது.”
“ம்மா… நான் இன்னொரு கல்யாணம் பண்ணும்னு நினைச்சதே இல்லை. இதெல்லாம் சும்மா…”
“தப்பில்லம்மா… பொண்டாட்டி சரியில்லன்னு குறை சொல்ற ஆம்பளங்க வெளில தேடிக்கிறதும், மனைவி துணைவின்னு வச்சுக்கிறதும் எல்லாக் காலத்துலயும் சகஜம் தான். அதைத் தப்பா ஒரு நாளும் இந்த ஊர் விமர்சிக்காது. வீட்டுல பொண்டாட்டி விருந்து சமைக்கல, கிடைக்கிற இடத்துல சாப்பிடுறான்னு சப்பக்கட்டு கட்டும். இல்லன்னா பெண்கள் எப்படி இருக்கணும்னு புராணகாலத்த உதாரணமா காட்டும்.
அவங்களுக்குப் புரியாது, புராணக்கதைகளும் இதிகாசங்களும் இப்படிப்பட்ட பெண்கள் வாழ்ந்தாங்கங்கிறதுக்கான ஒரு முன் உதாரணமே தவிர, இப்படித்தான் பெண்கள் வாழ வேண்டும்னு ஒரு காட்டாயப் பாதைய வகுக்குறது இல்லன்னு.
உனக்கு புருஷன் சரியில்ல. அனுசரிச்சி வாழ முடியல. அதுனால பிரிஞ்சிட்ட. எல்லாம் சரி… ஆனா இப்படியே காலம் முழுக்க இருந்திட முடியுமா? நீ ஒரு புது பாதைய உண்டாக்கு.
”
“ம்மா… என்னால இப்படியே வாழ்ந்திட முடியும். சிங்கிள் பேரண்ட்டிங் இப்ப ரொம்ப காமன். ஸ்கூல், காலேஜ்ல குடுக்குற பார்ம்ல கூட எங்களுக்குன்னு ஒரு இடம் ஒதுக்கிருக்காங்க. தெரியுமா.”
“தெரியும்மா… ஆனா கடைசி வரைக்கும் முடியுமாங்கிறது தான் கேள்வி.”
“என்ன சொல்ல வர்றீங்க?”
“உடம்பையும் மனசையும் அடக்கி வைக்கிற வயசு கிடையாது உனக்குன்னு சொல்றேன்.”
“என்னால முடியும். இப்படியே கடைசி வரை எம்பொண்ணுக்காக வாழுற தைரியமும் திடமும் எனக்கு இருக்கு. நீங்க அப்பாட்ட பேசி, அண்ணனயும் அண்ணியையும் மட்டும் கொஞ்சம் அடங்கி வச்சி, சப்போர்ட் பண்ணுங்க. அது போதும்.”
“எத்தனை பேர் எத்தனை விதமா சப்போர்ட் பண்ணாலும் அது புருஷனுக்கு ஈடாகாது. ஆம்பளத் துணையில்லன்னு, உனக்கு புருஷங்கிற ஸ்தானத்தையும் உம்பொண்ணுக்கு அப்பாங்கிற இடத்தையும் பிடிக்க, கண்டவனுங்க போட்டி போடுவானுங்க. எல்லாரையும் சமாளிக்க உன்னால முடியாது. அதுனால உனக்கு ஒரு துணை அவசியம் தேவை தான்.” என்றவர் மகளின் முடிவிற்கு ஆறுதல் சொல்ல, ரிதன்யாவால் ஏற்க முடியவில்லை அவரின் பேச்சை.
அப்பாவிடமும் தமயனிடமும் முரண்பாடாக வாதம் செய்யும் போது உடையாதவள், தாயின் வார்த்தையில் உடைந்து போனாள்.
தாயும் தகப்பனும் தற்காலிக கூடாரம் தான். நிரந்தரம் உன் வாழ்க்கைத் துணைதான் என்று பொட்டில் அறைந்தது போல் கூறிவிட்ட பின் அங்கிருப்பது உசிதமல்லவே.
சிறிய காலணி போல் இருந்தது. அதில் கடைசி வீடு தான் ஜெயசுதாவுடையது. அக்கம் பக்கம் யாருமில்லாத தனி வீடு அது.
லெவண்டர் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்த வீட்டைக் கண்டதும் அத்தனை நேரம் கொதித்துக் கொண்டிருந்த மனத்தில் ஒரு வித அமைதி. அதுவும் கேட்டைத் தாண்டி உள்ளே காலடி எடுத்து வைக்கும் போது கண்ட துளசி செடியின் வாசத்தில் உடலில் ஒரு சிலிர்ப்பு. ஏன் என்று தெரியாத போதும் இனி தன் வாழ்க்கையில் எவ்வித பிரச்சினையும் வரவிடாது அரணாக இந்த வீடு இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. நிம்மதி உதயமானது.
சுருதி, “மாடி வீடு ரிது. நான் சாவி வாங்கிட்டு வர்றேன்.” என்க, ரிதன்யா பெட்டிகளை மாடி ஏற்றினாள்.
“ஐ… படிக்கட்டு வெளி…” என்று சரிகா துள்ளி குதித்து கையிடியில் சறுக்கி விளையாடத் தொடங்கினாள்.
பார்சல் செய்து அனுப்பிய பொருட்களும் சரியான நேரத்திற்கு வந்து சேர, மனை, வீடாக மாறியது.
சுருதியின் உபாயத்தால் வீடு சுத்தமாகவே இருந்தது. கொண்டு வந்த மீனாட்சி அம்மனின் படத்தை செல்ஃபில் வைத்து, வெண்கல காமாட்சி விளக்கை வைத்து, விளக்கேற்றி, மின்சார அடுப்பில், அதற்குரிய பாத்திரத்தை வைத்து பால் காய்ச்சப்பட்டது. அதை இரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஜெயசுதாவைச் சந்திக்கச் சென்றாள் ரிதன்யா.
அழைப்பு மணியை அழுத்த, திறந்தது அதிதி.
ஒல்லியான ஒடிசலான உடல்வாகுடன் பெரிய சைஸ் கண்ணாடி இருந்தவள், காதை மறைத்திருந்த ஹெட்ஃபோனை இறக்கி, “யார் வேண்டும்?” என்று ஆங்கிலத்தில் சின்னக் குரலில் கேட்டாள்.
“எம்பேரு ரிதன்யா. மாடில புதுசா குடி வந்திருக்கேன். இந்தா! எடுத்துக்க.” என்று பால் டம்ளரை நீட்ட,
“சாரி அன்டி. எனக்குப் பால் பிடிக்காது.” என்றாள் அஷ்டகோணத்தில் முகத்தை வைத்துக் கொண்டு.
“இட்ஸ் ஓகே. உங்க பாட்டி இல்லையா?”
“இருக்காங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. வரச் சொல்றேன்.” என்று விட்டு உள்ளே சென்றாள்.
மாமனின் அனுமதி இல்லாது யாரையும் உள்ளே விடக்கூடாது என்ற கட்டளை உள்ளது.
சில நிமிடங்களில், “அடடே… நீ தான் ரிதன்யாவா! உன்னைப் பத்தி சுருதி பொண்ணு நிறைய சொன்னா. வீடெல்லாம் பாத்தியா? சௌகரியமா இருக்கா?” என்று கேட்டபடி, ரிதன்யா நீட்டிய பால் டம்ளரை எடுத்துக் கொண்டு, தன் உடலை ஊஞ்சலில் பொருத்திக் கொள்ள, அது அசைந்தாடியது.
அக்கம் பக்கத்தில் உள்ள காய்கறிக் கடைகள், கோயில் உள்ளிட்டவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டாள் ரிதன்யா. இருவரும் பொதுவாக சில விடயங்களைப் பாலுடன் சேர்த்து உள்ளிறக்கிக் கொண்டிருக்க, “புருஷன் இல்லன்னா பிள்ளைய வளக்குறது ரொம்ப கஷ்டம். அதுவும் சொந்தகாரங்க சப்போட் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது.” என்று பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டார்.
இந்தச் சுருதி, அவரின் கருணைப் பார்வை கிடைக்க எகப்பட்ட பிட்டுகளை நங்கூரம் போல் இறக்கி விட்டாள் போலும். அவரின் பரிதாபத்தில் அமைதியாக இருந்த ரிதன்யாவின் கரத்தை அழுத்திப் பற்றியவர்,
“நானும் புருஷன இழந்தவ தான்ம்மா. ஆனாலும் உன் வயசுல விதவையாகுறது ரொம்ப கொடும. இந்தப் பிள்ள விவரம் தெரியாத அளவுக்கு சின்னப் பிள்ளையா இருந்தாலாவது வேற ஒரு வாழ்க்கை அமைச்சுக்கலாம். இப்ப… ஒன்னும் பண்ணமுடியாது.
ஹிம்… எல்லாம் விதி. நீ அதைப் பத்தியெல்லாம் கவலப்படாத. என்ன உதவி வேணும்னாலும் உடனே வந்து கதவத் தட்டு. நான் இங்க தான் இருப்பேன்.” என்று ஆறுதல் சொல்ல, அவரின் விதவை என்ற வார்த்தையில் ஒரு கனம் அதிர்ந்து தான் போனாள்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!