Skip to content
Post Views: 78
“அம்மா… நான்” என்று நடந்ததை ஒன்றுவிடாமல் மரகத்தின் மடியில் தலைவைத்தவாறு சொல்லி அழுதாள் மதுரா!
மகளின் கதறலில் துடித்துப்போனார் மரகதம். அவளது தலையை வருடியவாறு, “உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு தெரியல மதுமா! நீ நினைச்சதும், ஆசைப்பட்டதும் தப்பு இல்லைடா! அதுபோல உன் காதலை நிராகரிச்சதும் தப்புன்னு சொல்ல முடியாது. அந்தத் தம்பி மனசுல உன்னை அப்படிப் பார்க்கல போல! விடுடா! எல்லாம் சரியாகிடும். உனக்காகப் பொறந்தவன் கண்டிப்பா உன்னை வந்து சேருவான். வலி நமக்கு புதுசு இல்லைடா, கொஞ்சம் பொறுத்துக்க, சீக்கிரமா இந்தக் காயம் சரியாகிடும். உன்னோட அன்றாட வேலைகளைத் தொடரு! எப்பவும் போல அந்தத் தம்பி கிட்ட பேசு! சரியாகிடும்மா” என்றவருக்கும் கண்ணீர் துளிகள் கண்களோடு நிற்க, கீழே விழுந்திடாமல் கவனமாகத் துடைத்துக் கொண்டார்.
மெதுவாக எழுந்து தனது கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தவள், “சின்ன வலிதான்மா சரியாகிடும். சரி பண்ணிடுவேன். நீ என்னோட இருக்கிற வரை என்னை எதுவும் பாதிக்காதுமா! நான் சீக்கிரமா மீண்டு வந்துடுவேன். என்னை நினைச்சு நீ கவலைப்படாதே! நான் ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வர்றேன் சாப்பிடலாம்” என்றாள்.
“நான் இன்னைக்கு உனக்காகச் சமைக்கட்டுமா?”
Advertisement
“வேணாம்மா! நீ இரு நான் சமைக்கிறேன். ஆனா எனக்கு நீதான் ஊட்டி விடணும் சரியா?” என்றதும் சந்தோஷமாகவே தலையை அசைத்தார்.
முகத்தைக் கழுவிக்கொண்டு தோசை வார்க்க ஆரம்பித்தாள். மகளை நினைத்து உள்ளுக்குள் கவலை கொள்பவருக்கு மேலும் கவலை கூடிப்போனது.
காதலை நிராகரித்துப்போன மதியூரனின் மேல் அவருக்குக் கொஞ்சமும் கோபம் இல்லை. அவரவர் விருப்பம்; இனி மகளைத் தேற்றி, அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவருக்கு அதைச் செயல்படுத்தத்தான் பெலன் இல்லை. அலைந்து திரிந்து மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க முடியாத நிலையே அவரை மேலும் வாட்டியது.
Advertisement
அலைபேசியில் நிறைய திருமணச் செயலிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மகளுக்காகப் பதிவுசெய்து வைத்திருக்கிறார். ‘அவளுக்காக ஒரு வரன் வந்திடாதா?’ என நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போய்விட்டார்.
Advertisement
புலனத்தில் புரோக்கர் குரூப்பில் வரன் வந்தாலும், அவர்களை அழைத்துப்பேசினால் “திருமணம் முடிந்தது” என்கிறார்கள். என்னத்தைச் சொல்ல? அப்படியே ஏதாவது வந்தாலும் வரதட்சணை ஒரு பக்கம், பொருத்தம் இல்லாமல் இருப்பது ஒரு பக்கம், தாயின் உடல்நிலையைக் கேட்டதும் மறுக்கும் பக்கம் எனச் சுத்திச் சுத்தி நிராகரிப்புதான்.
மகளது திருமணத்தைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம், நோயைவிட அதிகமாக வாட்டி எடுத்தது மரகத்திற்கு. மகள் அங்கே இல்லை என்றதும் நன்றாக மூச்சுவிடுவது போலக் கண்ணீர் விட்டுக்கரைந்தார். மகளின் அரவம் கேட்டதும், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிரித்த முகமாக அமர்ந்தார்.
அவரிடம் தோசைத் தட்டை நீட்ட, மகளுக்கு ஊட்டினார். அவளும் சிறுபிள்ளை போல வாங்கிக்கொண்டாள். பின் தாய்க்கு ஊட்டிவிட்டாள். தாயின் அரவணைப்பே மருந்தாகிப்போனதோடு இல்லாமல், அடுத்து எழுந்து ஓட ஊக்கமும் தந்தது. அவருக்கு மருந்துகள் கொடுத்துவிட்டு, அவருடனேயே அவரைக் கட்டியணைத்துப் படுத்துக்கொண்டாள்…
Advertisement
மதுராவிடம் பேசிவிட்டபின் வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்தவனின் கண்ணில், அவனது தங்கை மதிவதனியும் அவளது காதலன் அருணும் பட்டனர். பைக்கில் அருணைக் கட்டிக்கொண்டு செல்வதைக் கண் குளிரப் பார்த்தவனுக்கு, நரம்புகள் புடைக்கக் கோபம் வர, வேகமாக வண்டியை வீட்டிற்கு விட்டான்.
அங்கே அவனது தாயும் இல்லை. பக்கத்து வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கவனித்து உள்ளே சென்றவனுக்குக் கோபம் மட்டுப்படவில்லை. மணி எட்டரையானது, தாயும் வீட்டிற்கு வரவில்லை; தங்கையும் வரவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
வாசலில் வண்டியின் அரவம் கேட்க, வெளியே வந்து பார்த்தான். தாயும் மகளும் அவனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தான்…’அவனை இந்தக் குடும்பத்தில் ஓர் ஆளாக மதிப்பதில்லை’ என்பதற்கு இது ஒரு சான்றுதான்!
தாயும் மகளும் உள்ளே வந்தனர். “யா… யா… யா… யாரவன்? எ… எதுக்கு அ… அவன் கூ… கூட இ… இவ ஊர் சுத்திட்டு வர்றா? எ… என்ன ஏ… ஏதுன்னு நீ… நீங்க கே… கேட்காம அ… அவனோட சி… சிரிச்சுப் பேசிட்டு வர்றீங்க! எ… என்ன நடக்குது இங்க!”
மதிவதனி இவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல அறைக்குள் நுழைந்துகொள்ள, அவனோ தாயைப் பிடித்துக்கொண்டு கேட்க, அவரோ அலட்சியமாக,
“என்ன பொறுப்பான அண்ணன் நினைப்போ? கேள்வி எல்லாம் கேட்கிற?”
“நா… நான் பொ… பொறுப்பானவன்தான். இ… இந்த வீட்டோட ந… நலனுக்காகக் கேள்வி கே… கேட்கத்தான் செய்வேன்” என்றான்.
“கேள்வி கேட்கிறது மட்டும் பொறுப்பாகாது. வீட்டுக்குச் சம்பாதிச்சுக் கொடுக்கிறதும் ஒரு பொறுப்பான மகனோட கடமைதான். உன்னால அது முடியுமா? வேலைக்குப் போகாம ஊர் சுத்திட்டுத் திரிஞ்சிட்டு நீ பொறுப்பைப் பத்தி பேசுறியா?”
“க… கண்டிப்பா பே… பேசுவேன். எ… எனக்கு உரிமை இருக்கு! வே… வேலைக்கு போ… போறேன் போ… போகல! என் தங்கச்சி, க… கண்டவன் கூட ஊர் சுத்தினா அ… அண்ணனா கேட்கத்தான் செய்வேன்”
“அவன் ஒன்னும் கண்டவன் இல்லை! என் லவ்வர், இந்த வீட்டு மாப்பிள்ளை! மரியாதையா பேசு” என்று அங்கு வந்தாள் மதிவதனி.
“நீ… நீ… நீ இன்னும் ஒ… ஒரு டிகிரி முடிக்கல, அ… அதுக்குள்ள என்ன காதல் உனக்கு? ச… சரி அவனும் அதே நிலையிலதானே இருப்பான்? ப… படிக்கிற கா… காலத்துல ஒழுங்கா படிக்காம, ஊ… ஊர் சுத்தி வா… வாழ்க்கை கெ… கெடுத்துக்காத, ஒழுங்கா படி!” என்று எச்சரித்தான்.
“எங்களுக்குத் தெரியும், நீ சொல்லணும்னு அவசியம் இல்ல… அதேபோல அவர் உன்னைப் போல ஒன்னும் வெட்டியா ஊர் சுத்துறவர் இல்ல, என்னோட சீனியர். ஐடில வேலை பார்க்கிறார். மாசம் ஐம்பதாயிரம் சம்பளம். நான் படிச்சு முடிச்சதும் என்னைக்கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கார். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும். நீ அக்கறைப்படணும்னு அவசியம் இல்லை…” என அலட்சியமாகப் பதில் சொன்னாள்.
அவன் தாயைப் பார்க்க, அவரோ அலட்சியத்தின் திருஉருவமாக அமர்ந்திருந்தார்.
“ஓ… அ… அதனால் தான் ம… மகளை அ… அவனோட ஊர் சுத்த அ… அனுப்புறீங்களா?”
அவன் கேட்ட விதத்தில் அவருக்குச் சுர்ரென்று கோபம் வர, “இப்ப என்னடா! அவ காதலிக்கிறவன் தப்பானவனா இருந்தா கண்டிக்கலாம். அவ சரியானவனைத்தானே காதலிக்கிறா! அதுக்கு ஏன் கண்டிக்கணும்?! அந்தப் பையன்தான் இந்த வீட்டோட மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணியாச்சு. அதனாலதான் அந்தத் தம்பியோட அனுப்பினேன். என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாங்க, உனக்கு ஏன்டா வயிறு எரியுது?! தங்கச்சிக்கு உன்னைவிட நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகுதுன்னு வயித்தெரிச்சல்ல பேசுறியோ! உனக்கு அமைய இருந்த வாழ்க்கையை வேணாம்னு சொல்லித் தட்டிக்கழிச்சது நீ! அதே மாதிரி இவளுக்கு வந்த நல்ல வரனையும் தட்டிக்கழிச்சு வீட்டோட உட்கார சொல்றியா? நீ ஆம்பளையா தனிக்கட்டையா கிட! என் பொண்ணு நல்லா இருக்கணும்” என வழக்கம் போல வார்த்தைகளால் அவனைக் குத்த ஆரம்பித்தார்.
அவனோ தாயின் பேச்சில் சற்று அதிர்ந்துதான் போனான். தங்கையை நினைத்து அவனுக்குள் பதைபதைக்க, அவரோ எளிதாக வயித்தெரிச்சல் என்று சொல்லிவிட்டதோடு, அவள் மீது பொறாமைப்படுவதாகவும் அவளுக்குக் கெடுதல் நினைப்பதாகவும் பேசுகிறாரே!
தங்கையின் மீது அண்ணன் பொறாமைப்படுவானா? அவள் நன்றாக இருந்தால் பார்த்து மனம் நிறைப்பவன் எப்படிப் பொறாமைப்படுவான்? பெற்ற தாயின் பேச்சா இது? என நொந்துகொண்டவன்,
“எ… எனக்குப் பொ… பொறாமையா? எ… எனக்கு வ… வயித்தெரிச்சலா? அ… அவளுக்கு ந… நல்லது நடந்தா ச… சந்தோஷப்படுற முதல் ஆ… ஆள் நான்தான்மா! ஏ… ஏன் இப்படிப் பேசுறீங்க?! அ… அவ ந… நல்லா இருக்கணும்னு பேசிட்டு இருக்கேன். அ… அந்தப் பையன் ந… நல்லவன் இ… இல்லைன்னு சொ… சொல்லல. அ… அதுக்காகக் க… கல்யாணத்துக்கு முன்னாடி ஊ… ஊர் சுற்றுவாங்களா? க… கண்டிக்க வேண்டாமா? வழியனுப்பி வச்சேன் சொல்றீங்க, எ… என்ன அம்மா நீங்க?” என்றான்.
“என்னடா வார்த்தை ரொம்ப மீறுது?! நான் தாயா சரியாத்தான் இருக்கேன். என்கிட்ட கேட்டுட்டுத்தான் மாப்பிள்ளை அவளைக் கூட்டிட்டுப் போறார். உனக்கு என்னடா?! அப்படித்தான் அனுப்பி வைப்பேன்… என்ன பண்ணுவ? உன்னாலதான் என்ன பண்ண முடியும்?”
முகம் இறுக நின்றவன், “இ… இதுவே அ… அப்பா இருந்திருந்தா பொ… பொண்ணை இ… இப்படி அ… அனுப்பி வ… வச்சிருப்பீங்களா? இ… இல்லை போகத்தான் வி… விட்டிருப்பாரா? அ… அவரோட இ… இடத்துல இ… இப்போ நா… நான்தான் இ… இருக்கேன். இ… இந்தக் கு… குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்னு அப்பாக்கு ச… சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கேன்… ஒ… ஒழுங்கா எ… என் பே… பேச்சை இ… இவ கேட்டு ந… நடக்கணும்…” என்றான் அதிகாரமாய்.
“உன் பேச்சை கேட்டு நான் ஏன் நடக்கணும்? நீ ஒன்னும் எனக்கு அப்பா இல்லை! என்ன சொன்ன? இந்தக் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கியா?” என்று நக்கலாகச் சிரித்தவள், “வேலை வெட்டிக்குப் போகாம வீட்டுக்குள்ள இருந்து வீட்டைப் பார்த்துக்கிறேன்னா அப்பாகிட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்த?! வெளிய போய் சம்பாதிச்சு எங்களைக் காப்பாத்தத் துப்பில்லை, பேச வந்துட்ட!” என இளக்காரமாகப் பேசினாள் மதிவதனி.
முன்பு போல இருந்திருந்தால் கூனிக் குறுகிப் போய் நின்றிருப்பான். ஆனால் இப்போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டானே! அவனுக்கு என்று அடுத்தடுத்து விளம்பரங்களுக்கு டப்பிங் செய்ய அழைப்பு வர, ஒரு வினாடி விளம்பரங்களுக்கே அவன் பத்தாயிரம் வரை சம்பாதிக்க, இப்போது நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவர்கள் முன் நின்றவன்,
“எ… என்னால இ… இப்போ ச… சம்பாதிக்க மு… முடியும். நா… நான் இ… இப்போ ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்… ல… லட்சக்கணக்குல இல்லைனாலும் எ… என்னால ஆ… ஆயிரக்கணக்குல சம்பாதிக்க முடியும். இ… இந்த கு… குடும்பத்தை எ… என் சம்பாத்தியத்துல பா… பார்த்துக்க முடியும்… உ… உன்னால எ… என் பேச்சை கேட்டு ஒ… ஒழுக்கமா ந… நடந்துக்க முடியுமா?” எனக் கேட்க, இருவரும் அதிர்ந்து போனார்கள்.
அறைக்குள் சென்று அவன் சம்பாதித்த பணத்தை தாயின் கையில் வைத்தான்…
“எ… என்னால மா… மாசம் மாசம் சம்பாதிக்க முடியும். இ… இந்த குடும்பத்தை எ… என் சம்பாத்தியத்துல வ… வழிநடத்த முடியும். இவளை ஒ… ஒழுக்கமா இருக்கச் சொல்லுங்க” என்று உள்ளே சென்றான்.
கற்பகம் பேச்சற்று நின்றிருந்தார். கையில் பணம் வேறு இருந்தது. என்ன பேசுவதென்று குழம்பி நின்றார்.
“மா… பணம் சம்பாதிச்சா அவன் பேச்சை நான் கேட்கணுமா? இந்தப் பிச்சைக்காசைக் கையில கொடுத்துட்டு என்னை அருணோட பேசக்கூடாதுன்னு சொல்வானா? முடியாதுமா, என்னால அருணோட பேசாம இருக்க முடியாது! நான் பேசத்தான் செய்வேன், அவரோட ஊர் சுத்துவேன். மீறிப் பேசினா நான் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன்” என்று அவள் கோபத்தில் குதித்துவிட்டுச் செல்ல, கற்பகம் கண்கள் பளபளக்கத் தன் கையில் இருக்கும் படபடக்கும் காகிதத்தைப் பார்த்தார்.
அவரால் அந்தப் பணத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. அண்ணன் மகளைத் திருமணம் செய்வான், அதனால் வரும் லாபம் பன்மடங்கு என்று கட்டிய மனக்கோட்டையைத் தகர்த்திய மதியூரன் மேல் கோபமாக இருந்தார்.
அந்தக் கோபம் பஞ்சாகப் பறந்து போனது, அவன் வேலைக்குச் சென்று கத்தையாகப் பணத்தைக் கையில் கொடுப்பதைக் கண்டதும். இனி அவனைப் பணம் கறக்கும் மிஷினாகத்தான் பார்க்கப் போகிறார். அவனை அவ்வாறு கவனிக்கப் போகிறார்.
error: Content is protected !!