Skip to content
Post Views: 99
ஆகாயமே என் ஆதாரமே 9
உள்ளே நுழைந்த ராகவனுக்கு பேசுவதற்கு அவ்வளவு தயக்கம். பெண்ணின் அழகோ,நிறமோ, அவளது படிப்போ, வேலையோ ,சம்பளமோ அதைப் பற்றிய கவலை எல்லாம் அவனுக்கு நிச்சயமாக கிடையாது.அவன் தேடுவது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் பயணம் செய்ய தயாராக இருக்கும் ஒரு தோழியை. அவனுக்கு நிறைய பிரச்சனைகள் உண்டு. சிஏ பாஸ் செய்துவிட்டான். அவன் படித்ததும் நல்ல கல்லூரியில் தான். இப்போது வேலையிலும் நல்ல சம்பளம் வருகிறது. பிரச்சனை என்னவென்றால் அவனுக்கு ஹிந்தி வரும் அளவுக்கு ஆங்கிலம் வரவில்லை. அவன் கடந்து வந்த பாதை அப்படி பட்டது.அவனது அப்பாவுக்கு இந்தியாவின் வடக்கில் உள்ளே குக்கிராமங்களில் கூட வேலை மாற்றல் கொடுப்பார்கள். அவர் ஒரு மத்திய அரசு பணியில் இருந்தவர்.
இவனுக்கும் இவன் தங்கைக்கும் ஆறு வருஷ வித்யாசம் என்பதால் இவன் தான் பள்ளி செல்லும் பொழுது அதிக அழுத்தத்திற்கு உள்ளானான். ஒவ்வொரு முறை மாற்றல் ஆகும் பொழுதும் குடும்பமே பெட்டியை கிளப்பிக் கொண்டு கிளம்பவேண்டும். பணத்திற்கு வேறு தட்டுப்பாடு .அந்த காலத்தில் மனைவி கணவனை விட்டு இருப்பதெல்லாம் வரவேற்கப் படவில்லை. புருஷனுக்கு சமைத்துப் போடவேண்டியவள் பெண்டாட்டி எனும் நம்பிக்கை.
ராகவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது மீண்டும் அவனது தந்தைக்கு வேலை மாறுதல். இவனுக்கு பள்ளிகளில் கிடைப்பது கஷ்டமாக இருக்க இவனது அம்மாவோ,பிள்ளை பள்ளிக்கு சென்றால் போதும் என்று தமிழ்வழி கல்வியில் சேர்த்துவிட அத்தனை வருஷங்கள் ஆங்கிலமும்,ஹிந்தியும் படித்தவனுக்கு எல்லா பாடங்களும் தமிழில் என்றால் நினைத்துப் பாருங்கள். நல்லவேளையாக ஆறாம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் இருந்ததால் தமிழ் தெரியும். தங்கைக்கு ஆரம்பம் முதலே ஆங்கிலவழி கல்வி கிடைக்க இவனது நிலைமை பந்தாட பட்டிருந்தது.
Advertisement
இப்போது அலுவலகத்தில் இவனது ஆங்கில புலமை குறைவு காரணமாக கிளைண்ட்ஸ் புகார் சொல்கிறார்கள். இவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை.திருமணம் முடியவேண்டும் என்று பொறுமையாக இருக்கிறான். கணக்கும், வரியும் இவனுக்கு நன்றாகவே வரும். அதனால் கோவையில் இருக்கும் நிறுவனத்தில் இன்டெர்வியூ சென்று வந்திருக்கிறான். கிடைத்தால் அங்கே சென்று விடுவான். இப்போது செய்யும் வேலை நிரந்தரம் இல்லை.இவற்றை எல்லாம் பெண்ணிடம் எப்படி சொல்ல முடியும் என்றுதான் யோசனை.குறைந்தபட்சம் பெண்ணிடமாவது சொல்லிவிட வேண்டும். இன்னமும் இவற்றை எல்லாம் அம்மாவிடம் கூட சொன்னதில்லை.
இவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ஜானகி. “என்கிட்ட ஏதாவது சொல்லனுமா..எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க?”— ஜானகி.
ராகவன் ஒருவழியாக பேச ஆரம்பித்தான்.”ஹாங்..கண்டிப்பா பேசணும். என்னை பற்றி சொல்லனும்னா நா படிச்சிருக்கறது பிகாம், சிஏ சிஎம்ஏ. இப்போ வேலைல இருக்குறது **** நிறுவனத்துல. ஆனா, கல்யாணம் முடிஞ்சா ,இங்கேந்து வேற வேலை பார்த்துட்டு போய்டுவேன். அப்பா இறந்துட்டாங்க.ஒரே தங்கை.கல்யாணம் ஆகி இப்போ வெளிநாட்டுல இருக்கா.சோ, கடைசி வரைக்கும் அம்மாவை என்னோட தான் வச்சிப்பேன் . அதேமாதிரி,சின்னவயசுலேந்து பணத்துக்கு ரொம்ப கணக்கு பாக்க வேண்டிய நிலை.அதனால அதிக சம்பளம் கிடைச்சா இந்தியாவோட எந்த மூலைக்கு வேணும்னாலும் போவேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க.கல்யாணம் செஞ்சுக்கலாம்.எனக்கு மனைவி மட்டும் இல்ல.நல்ல தோழியும் தேவை. இங்கிலிஷ் அவ்ளவா வராது. கோச்சிங் போறேன். முதல்முறையா இவ்ளோ நேரம் பேசறேன்.ரொம்ப பேசி பழக்கம் இல்ல” என்று விட்டு லேசாக சிரித்தான்.
Advertisement
நிதானமாக தலையை ஆட்டிய ஜானகி, “வீட்டுல கல்யாணத்துக்கு பேச சொல்லுங்க. வேலை மாறுவது பற்றி எதுவும் சொல்லிக்க வேணாம்”என்று முடித்தவளை ஆச்சர்யமாக பார்த்தான் ராகவன். தன்னுடைய அலைபேசி எண்ணை கொடுத்த ஜானகி,”உங்களுக்கு என்கிட்ட பேசணும்னு தோணிச்சுன்னா பேசலாம்”என்றுவிட்டாள் . வெளியே வந்தவன். “எனக்கு ஜானகியை பிடிச்சிருக்கு. நீங்க கலந்து பேசிட்டு சொல்லுங்க”என்றுவிட்டான். திருமணம் உறுதியாகாமல் பெண்ணிடம் பேசி அவளது மனதை அலைக்கழிக்க அவனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. அதனால் தனது எண்ணை அவளிடம் கொடுக்கவில்லை.
Advertisement
ஜானகிக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.தங்கள் வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயம் வேறு அலைக்கழித்தது. ராகவனுடன் வாழ்ந்து பார்த்துவிட துடிக்கும் மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தவித்தாள். அவர்கள் கிளம்பும்பொழுது ராகவனுடன் தானும் சென்றுவிடலாமா.. “என்று கூட தோன்றியது. வீட்டிலோ,கிருஷ்ணனுக்கு ராகவனை பிடித்த அளவுக்கு ராதாவுக்கு பிடிக்கவில்லை. பையன் ரொம்ப உயரம்.அதோட பாக்கவும் கலரா ,அழகா இருக்கான்.நம்ம ஜானகி பாக்க கொஞ்சம் சுமார் தான். கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா… நம்ம பொண்ணோட வாழ்க்கை? இப்போ கல்யாணம் ஆனா போதும்னு ஓகே சொல்றவங்க,கல்யாணத்துக்கு பிறகு வேறே மாதிரி யோசிச்சா…நம்ம சீதாவுக்கு பாக்குறதுன்னா நா இவ்ளோ யோசிக்க மாட்டேன்”என்று கணவரிடம் ராதா சொல்லிக்கொண்டிருக்க தனது அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஜானகியின் மனம் சுக்கு நூறாக உடைந்தது.அதிலும் சீதாவுக்குப் பார்ப்பது பற்றிய பேச்சுக்கள் அவளை நிலைகுலைய செய்தது. ஏற்கனவே ராதாவை அவ்வளவாக நெருங்க யோசிக்கும் ஜானகிக்கு இப்போது அம்மாவின் மீது கோவம் அதிகமாக வந்தது.தன்னை விட அம்மாவுக்கு சீதாதான் முக்கியம் என்ற அவளது எண்ணமும் உறுதி பெற்றது. ராதையின் கண்களில் விழாமல் உலகின் எந்த மூலைக்கு அழைத்தாலும் செல்வதற்கு மனதளவில் தயாராகி விட்டாள் ஜானகி.
இதற்க்கு மேலும் அமைதியாக இருந்தால் ஒருவேளை ராகவனை இழக்கும் அபாயம் இருப்பதாக உணர்ந்த ஜானகி தனது அறையிலிருந்து வெளியே வந்தவள் “எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்குப்பா.அவருக்கும் என்னை பிடிச்சிருக்கு.பேசிப்பார்த்ததுல நல்ல டைப்பா இருக்காரு. ஜாதகமும் பொருந்தியிருக்கும். அதனாலே தானே வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர சொன்னீங்க. சீரும் கேக்கலையே. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா”என்று தந்தையின் முகம் பார்த்து சொல்லிவிட்டு ஜானகி மீண்டும் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
Advertisement
பெண்ணின் பேச்சை கேட்ட ராதாவுக்கு தான் என்ன சொல்வது என்று புரியவில்லை. ஏதோ மனதுள் பயம் கவ்வியது. ஜானகியும் ராகவனும் அருகருகே நின்றால் நிச்சயம் பார்ப்பவர்கள் புறணி பேசுவார்கள்.அந்த அளவுக்கு வெளிப்படையாகவே தெரியும் வித்தியாசம் .அப்படி யாராவது பேசினால் இவள் தாங்குவாளா…காலம் முழுமைக்கும் தொடரும் பிரச்சனை ஆயிட்டே. இன்று அந்த பையன் சரி என்று சொன்னாலும் நாளை இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டோமே என்று மற்றவர்களின் பார்வையை வைத்து அவன் யோசித்தால் நம் பெண்ணின் நிலைமை என்னவாகும்?என்று பயந்தாள் ராதா. இது சரி தவறு என்பதை விட பெற்றவளின் எண்ணங்கள்,பயம் என்று தான் நான் பார்க்கிறேன்.
கிருஷ்னனுக்கு இதுபோன்ற பயமெல்லாம் இல்லை. பெண்ணுக்கு பிடித்திருக்கிறது.பையனுடன் பேசியதில் அவன் மீது மரியாதை உருவாகியிருந்தது.ராகவனின் அம்மா நேராகவே சொல்லிவிட்டார்.”அவனோட அப்பா போய் பதினோரு வருஷம் ஆகுது. பெண்ணை பெற்றவர் இவனுக்கும் அப்பா ஸ்தானத்துள்ள இருந்து கைட் பண்ணனும்.பொண்ணை கல்யாணம் செஞ்சு குடுத்து பத்து வருஷம் ஆகுது. அவளால எந்த தொந்திரவு இல்லை. வெளிநாட்டுல இருக்கா. உங்க பெண்ணை என்னோட பெண்ணாவே பார்ப்பேன்.யோசிச்சு சொல்லுங்க என்று.அதை சொல்லும் பொழுது அவரது கண்கள் கலங்கி இருந்தது. தனியாக நின்று கணவர் போன கையோடு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இருந்தார்.இப்போது தானே பிள்ளைக்கும் திருமணத்திற்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார். மனிதர்கள் நல்லவிதமாக தோன்றினார்கள். சீர் பற்றியெல்லாம் ஒன்றுமே பேசவில்லை.
“நாங்க எதுவும் கேட்க மாட்டோம்.வீடு நிறைய பாத்திரம் இருக்கு. தேவையான பிரிட்ஜ்,வாஷிங் மெஷின் ,கிரைண்டர் எல்லாமே இருக்கு. உங்க பொண்ணு கொண்டுவரணும்னு ஏதும் இல்லை. உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்பமோ அதை செய்யுங்க. சாமான் வாங்கி பணத்தை செலவு செய்யறதை விட அவள் பெயரிலேயே டெபாசிட் செஞ்சு குடுங்க.அவளுக்கு அதுதான் நல்லது” என்றார் ராகவனின் மாமா.
திருமணத்திற்கு பரஸ்பர நம்பிக்கை தவிர வேறே எதுவும் வேண்டாம் என்று யோசித்தவராக,”நம்ம பொண்ணுக்கு பிடிச்சிருக்கு.அந்த பையனுக்கும் சம்மதம்.இதுக்குமேல யோசிக்க வேணா.கல்யாணத்துக்கு பேசுவோம் “என்றுவிட்டார் கிருஷ்னன். ராதாவுக்கும் உள்ளே மனதில் இந்த வரனை விட இஷ்டம் இல்லை.நடப்பது இறைவன் செயல் என்று அமைதியாக இருந்துவிட்டாள் .
தினமும் தனது இளைய மகளிடம் பேசுவது போல அன்று இரவும் பேசிய ராதா , “உங்க அக்காவுக்கு இந்த பையன ரொமபவே பிடிச்சிருக்கு போல சீதா.நேராவே எங்ககிட்ட வந்து கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிங்கன்னு சொல்லிட்டா. பையன் எவ்ளோ அழகு தெரியுமா… ரொம்ப பாந்தமா வேறே இருக்கான். எனக்கும் அப்பாவுக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல வேலை,சம்பளம்.சொந்த வீடு இருக்கு. பையனோட தங்கைக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பி பத்து வருஷம் ஆகுது. பிக்கல் பிடுங்கல் இல்ல. மேற்கொண்டு நிச்சயதார்த்த விழாவுக்கு ஏற்பாடு செய்யணும். உன்னால லீவு போட்டு வர முடியுமா டி ..”என்றாள் .
“என்னம்மா இப்படி கேக்குற. நா எப்படிம்மா வர முடியும்? கல்யாணத்துக்கே வர முடியுமான்னு நிச்சயம் சொல்ல முடியாது. என்னோட நிலைமை தெரியும் தானே! ஒருவேளை கல்யாணத்துக்கு வர முடிஞ்சா அவ்ளோ நல்லா இருக்கும். இங்கே தனியா இருக்கேன். உங்களை எல்லாம் மிஸ் பண்றேன் தெரியுமா? வீட்டு மனுஷங்களை பாக்கவும் ,உன்னோட கையாள சாப்பிடவும் ஏங்குதும்மா…” என்று சீதா சொல்லி முடிக்கும் முன்பே அவளது கன்னத்தில் கண்ணீர் இறங்கிவிட்டது. மகளை பிரிந்திருக்கும் ராதாவுக்கும் அதே நிலைமை தான்.வெளியே காண்பித்துக் கொள்ளாவிட்டாலும் மகளை தனியாக அந்நிய தேசத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு கிருஷ்ணனும் தவிக்கிறார்.அவர் சீதாவிடம் வாரத்திற்கு ஒரு முறை பேசுவதுடன் சரி. தினமும் ராதா வேறு பேசுகிறாளே !
ஜானகி தங்கையிடம் எப்போதாவது ஒருமுறை பேசுவதுடன் சரி. ஏனோ,அம்மாவின் வார்ப்பாக பிறந்திருக்கும் தங்கையிடம் அவ்வளவு சுலபமாக பேசுவதற்கு ஜானகிக்கு வரவில்லை. அதோடு இப்போது தங்கை அதிகம் படித்து நிறைய சம்பாதிக்கிறாள் .அம்மாவும் தங்கையை தூக்கி கொண்டாடுகிறாள் .இயற்கையாகவே நிகழும் ஒரு விலகல் தன்மை ஏற்பட்டிருந்தது.
இதெல்லாம் சிறு வயதில் இருக்கும் பொழுது அவ்வளவாக ஜானகிக்கு தெரியவில்லை.இப்போது திருமணத்திற்கு என்று பார்க்கும் பொழுது அம்மா ,அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தது வரை அவளது மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. தனக்கு பிடித்த ஒருவரை தங்கைக்கு இணை என்று ஒரு பேச்சுக்கு சொன்னதை கூட ஜானகியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதில் போட்டு புதைத்துக் கொண்டாள் .இவர்களை விட்டு கொஞ்ச நாட்களாவது தள்ளி இருந்தால் தான் தன்னால் சுவாசிக்க முடியும் என்பது போன்ற எண்ணக்குவியல்கள்.
ராகவனிடமிருந்து அடுத்து வந்த நாட்களில் அலைபேசி அழைப்பை எதிர்பார்த்தவளுக்குள் மெல்லிய ஏமாற்றம்.தனக்கு இருப்பது போன்ற எதிர்பார்ப்புகள் அவனிடம் இல்லை என்பதே அவளுக்கு மனதில் நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. “இந்த திருமணம் நடக்குமா “என்ற கேள்வி அவளுக்குள்.
மாலை வீட்டுக்கு சென்றவள் வழக்கம் போல தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் .ஹாலில் ராதாவின் முணுமுணுப்பு கேட்டுக்கொண்டிருந்தது.”எப்போ பார்த்தாலும் கதவு சாத்தி தாழ்ப்பாள் போட்டுக்கறா.இருக்குற அந்த பத்துக்கு பத்து ரூம்ல அப்படி என்னதான் ஒளிச்சு வச்சி இருக்காளோ … வீட்டுக்கு வந்தோமா..முகம் காய் கால் கழுவிட்டு அம்மாவுக்கு வீட்டு வேலை ஏதாச்சும் செஞ்சு கொடுத்தோமா…எதுவும் இல்ல.கல்யாணம் செஞ்சுக்கிட்டா மட்டும் போதுமா?அங்கே வேலையெல்லாம் யாரு செய்வாங்க? ஒருநாள் கூத்தா இது ?பொறுப்பே இல்ல…”
‘அம்மா சொல்வது நிஜம் தான்.அங்கே சென்றால் வீட்டு வேலைகள் செய்தாக வேண்டும்.ஆனால் ,அது என்னுடைய வீடாக இருக்கும்.அங்கே யாரின் அனுமதியும் எனக்கு தேவை இல்லையே…இங்கே ,இது அம்மாவின் வீடு.ஒவ்வொரு விஷயம் செய்வதற்கும் அம்மாவின் முகத்தை பார்க்கவேண்டும். அதோடு அம்மாவுக்கும் உரிமை உணர்வு அதிகம்.தனது அடுக்களைக்குள் வேறு யாரும் நுழைந்தால் பிடிக்காது’என்றெல்லாம் மனதில் நினைத்தவள் புதியதாக வாங்கி வந்திருந்த ‘மில்ஸ் அண்ட் பூன்ஸ் ‘ கதையில் தன்னை நுழைத்துக் கொண்டாள் . ஆன்டி ஹீரோ கதை வகை. அந்த ஹீரோவை கதை ஆரம்பிக்கும் பொழுதே ஜானகிக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ் கற்பிக்க பட்ட பொழுதும் ஆங்கிலம் அளவுக்கு அவளுக்கு தமிழ் வரவில்லை. எப்படியோ போட்டடித்து பாஸ் செய்தது தான். அதற்கு அப்படியே எதிர்மாறு ராகவன்.ஆங்கிலத்துடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறான். கதையில் படிக்கும் ஹீரோவின் முகத்துக்கு ராகவனின் முகம் வெகுவாக பொருந்தி போனது. அதில் அவளது ரசிப்பும் கூடியது ஆச்சர்யம்.
error: Content is protected !!