Skip to content
Post Views: 171
அத்தியாயம்: 14
ரிதன்யாவின் வார்த்தைகள் சுருதிக்குச் சம்மட்டியால் அடித்த வலியைத் தந்தது.
Advertisement
“போன தடவை மாதிரி இந்த தடவையும் இழுத்துவிட்டு நான் கஷ்டப்படுறத வேடிக்கை பாத்து உள்ளுக்குள்ள சந்தோஷப்படுறியா!” என்றது இடியை இறக்கியது.
சந்தோஷம்… பட்டாள் தான். இல்லை என்கவில்லை. ஆனால் அது அற்ப சந்தோஷம் என்று புரிந்த பின், வார்த்தைகளால் குத்துவதைத் தான் தாங்க முடியவில்லை சுருதிக்கு.
Advertisement
Advertisement
அன்று, விளைவுகளைப் பற்றி யோசிக்காது செய்தது, இன்று வரை கர்மாவாய்ப் பின் தொடரும் என்று நினைத்திருக்கவில்லை.
மனித மனம் வஞ்சம், கோபம், ஆற்றாமை, துரோகம், அன்பு என்று எல்லா உணர்வுகளையும் கலவையாகக் கொண்டது தானே. முழுக்க முழுக்க அன்பையும் கருணையையும் மட்டுமே கொண்ட உள்ளங்களைக் காண்பது அரிதினும் அரிது.
Advertisement
பொறாமை, வஞ்சகம் போன்ற தீய உணர்வுகள் எனக்குக் கிடையவே கிடையாது. நான் என்றும் நல்லவள். சுயநலம் பேணாதவள் என்று யாராலும் சொல்லிவிட முடியுமா?
முடியாதே…
சுருதிகாவும் தன்னையும் தன் உணர்வுகளையும் பெரிதாகக் கொண்டு செய்து வைத்தக் காரியம் தான், ரிதன்யா வாடி நிற்கக் காரணம்.
தன் எண்ணவோட்டத்தைப் பின்னால் திரும்பிப் பார்த்தாள் சுருதிகா.
சைக்கிள் பெல்லை விடாது அழுத்தி, “ரிது… இன்னுமா நீ ரெடியாகுற! வா டி. நேரம் வேற குதிரையாட்டம் ஓடுது. அது பின்னாடி நாம சைக்கிள்ல போனாத்தா பிடிக்க முடியும். இல்லாட்டி PT வாத்தியான் க்ரவுண்டுல ஓட விட்டுடும். உங்க வாத்தி நல்லவன். பயளுக முன்னுக்க முட்டி மட்டும் தான் போடச் சொல்லுவான். ஆனா எனக்குன்னு வாச்ச வாத்தி சுடிதார் நனையுற அளவுக்கு ஓடச் சொல்வான். கருணைனா கருணக்கிழக்கான்னு கேக்குற ரகம்.” என்று தன்பாட்டிற்கு புலம்பிய சுருதி, முடிவில்,
“ரிது… வா…” என்று கத்தினாள்.
சுருதி, அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். ரிதன்யா பன்னிரண்டு.
மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தவள், நேரம் எட்டைத் தொட உள்ளதைக் கண்டு,
“ரிது…உ…. ரிது..உ…” என்று ஏலம் போட,
“நிப்பாட்டு டி… நான் வந்திட்டேன்.” என்றபடி தன் பையைச் சுருதியின் சைக்கிளில் வைத்து விட்டு, தன் லேடி பேர்ட்டைச் சுருதியிடம் ஒப்படைத்தாள்.
அதில் சுருதி ஆசையுடன் ஏறி அமர, தனபாலன் முறைத்தபடி நின்றான்.
“ஏன்டி உங்கண்ணே நம்மல இந்தப் பார்வ பாத்து வைக்கிறான்?”
அவளிடம், “உன்னோட ஜாமாங்கள அவளுக்கு குடுக்காத. உடச்சிடுவா. பத்திரமா பாத்துக்க. உன்னிய ஏமாத்தி உங்காசுல சொகுசு வாழ்க்க வாழுறா. அவ கூட பழகாத…” என்று எச்சரித்ததை மீறி சைக்கிளை மாற்றிக் கொண்டு செல்வதால் முறைக்கிறான் என்று சொல்லாது,
“அவனுக்குக் கண்ணுல கோளாறு. நீ வா… இன்னைக்கி எனக்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் இருக்கு. ரெக்கார்ட் நோட் வேற எங்கைல இல்ல. யார் கிட்ட இருக்குன்னு க்ளாஸ்ல போய்த் தான் தேடணும்.”
“நல்ல கதையா இருக்கு. உன் நோட்டு உங்கிட்ட இல்லாம வேற யார்க்கிட்ட போச்சி…”
“அதத்தான்டி தேடணும்னு சொல்றேன். சீக்கிரம் அழுத்து.” என்று பெடலின் வேகத்தைக் கூட்டி, இருவரும் பள்ளிக் வந்து சேர்ந்திருந்தனர்.
அடுத்தடுத்த காம்பவுண்ட் சுவர் தான் பள்ளி என்பது, இருவருக்கும் வசதியாக இருந்தது.
பக்கத்து பக்கத்து வீடு. உறவினர்கள் வேறு…
சாமிநாதனும் மனோகரியும் சமையல் வேலைக்குச் சென்று விட்டால் பிள்ளைகள் மூவரையும் முத்து லெட்சுமி தான் பார்த்துக் கொள்வார். ஆதலால் சிறுவயதில் இருந்தே அண்ணாமலையாரின் வீட்டில் உரிமையுடன் வளம் வருவாள் சுருதி. அதிலும் ரிதன்யாவிடம் உரிமையை அதிகமாகவே எடுத்துக் கொள்வாள்.
மைதிலி, தங்கையான ரிதன்யாவைப் பார்த்துக் கொண்டது போல், ரிது சுருதியைக் கவனித்தாள். தங்கையாக மட்டுமல்ல தோழியாகவும் சுருதி இருந்தாள்.
ரிதன்யாவிற்கு அண்ணாமலையார் வாங்கித் தரும் அனைத்திலும் சுருதியின் கைப் பாடாது இருந்ததே இல்லை. பொருள்களை மட்டுமல்ல மனத்தையும் அவளிடம் பகிரும் அளவுக்கு நெருக்கம்.
காலையில் மட்டுமல்ல, மாலையிலும் இருவரும் சேர்ந்தே தான் வீடு செல்வர்.
சுருதிக்கு மாலை 5:30 க்கு சிறப்பு வகுப்புகள் முடியும். ரிதுவிற்கு 6 ஆகும். அதுவரை ரிதன்யா பள்ளியில் உள்ள மைதானத்தில் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். அதன் பிறகு இருவரும் சேர்ந்தே டியூஷனுக்குச் சென்று விட்டு வீடு திரும்ப மணி ஒன்பது ஆகும்.
அன்று, சுருதி, பள்ளி வராண்டாவில் உள்ள சறுக்கலான நடை பாதையில், தன் வாட்டர் பாட்டிலை உருட்டி விட்டு விளையாடிக் கொண்டிருக்க, ஒரு சிரிப்புச் சத்தம் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
தூரத்தே அங்கு, ஒரு மாணவன் இவளின் சிறு பிள்ளைத்தனத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“ஏய்… இங்கன என்ன தெருக் கூத்தா காட்டிட்டு இருக்காங்க. பல்லக் காட்டிட்டு சிரிக்கிறா?” என்று மிரட்டலாக கேட்டபடி அவனை நெருங்கினாள் சுருதி.
அவளின் அதட்டலில் அவன் பயந்து விட்டான் போலும். நகர்ந்து செல்ல நினைக்கும் போது, “ஏய் நில்லு. உன்னை இதுவரை நான் இந்த ஸ்கூல்ல பாத்தது இல்லயே. ஆள் புதுசா இருக்க… யாரு நீ? எந்த க்ளாஸ்?” என்று கேட்க, அவன் பேய்யைக் கண்டது போல் தெறிந்து ஓடி விட்டான்.
சுருதி, “யாரு டி அது?”
ரிதன்யா, “யாரக் கேக்குற?”
“காலைல ஒரு நோட்ட நீட்டு உங்கிட்ட பேசிட்டிருந்தானே! அவன்.”
“அவனா!! நியூ கம்மர். என்னோட க்ளாஸ் தான். என்னோட ரெக்கார்ட் நோட் அவன்ட்ட தான் இருந்திருக்கு. குடுத்திட்டு போனான்.”
“பேரு?”
“விஷ்ணுபிரியன். அப்பாவோட ஃப்ரெண்டு பையன்னாம். டிரான்ஸ்பர்ல இங்க வந்திருக்காங்கலாம். அவன் படிச்ச ஸ்கூல்ல அவன் தான் டாப்பராம்.”
“படிப்ஸ்ஸு.”
“ம்… வந்து ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள இதுவரைக்கும் நடத்துனது என்னன்னு நோட்ட வாங்கிட்டு போய் எழுதுறான்.”
“ம்… நல்ல பையன் போல. ஆனா கூச்ச சுபாவம் இருக்கு. மிரட்டுனா பயப்படுறான்ப்பா. நம்ம மிரட்டலுக்கும் பயப்படுற ஆளு, காலம் முழுக்க கிடைச்சா எப்படி இருக்கும்?” என்றவளை ஏற இறங்கப் பார்த்தாள் ரிது.
“என்ன! லுக்கு வித்தியாசமா இருக்கு?”
“வேணாம் டி… உன் பார்வையும் பேச்சும் வேற மாதிரி இருக்கும். மாத்திக்க. இல்லன்னா வெளக்கமாத்தடி கன்ஃபார்ம்.” என்று எச்சரித்துவிட்டு நகர்ந்தாள்.
அவளின் எச்சரிக்கையை எல்லாம் சுருதி தூசி என உதறித் தள்ளி விட்டு, மறுநாளும் விஷ்ணுவிடம் வழி மறித்துப் பேசினாள்.
விஷ்ணுவிற்கும் அவளின் தடாலடியானப் பேச்சு பிடித்திருக்க வேண்டும். சின்ன வெட்கச் சிரிப்புடன் அவளின் பேச்சை ரசிப்பான். அவள் வம்பு வளர்க்கட்டும் என்றே மைதானத்தில் உலாத்தினான்.
பார்வையிலும் சிலபல வேடிக்கைப் பேச்சிலும் இருவரின் நாள்கள் சென்றன.
“ரிது… ஹண்ட்பார வலது பக்கம் திருப்பு.”
“வலது பக்கமா! ஏன்?” என்றாலும் ரிது, சுருதி சொன்னது போல் திருப்பி, சிறு சந்திற்குள் சைக்கிளை விட்டாள்.
“இங்கன எதுக்கு டி வண்டிய விடச் சொன்ன?”
“இந்த டியூஷன்ல தான் படிப்ஸ் படிக்கிறானாம். சொன்னான். உனக்கு பிசிக்ஸ்ல சந்தேகம்னு சொன்னேல. வரட்டும் கேப்போம்.” என்று சென்டரின் வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு வாசலைப் பார்த்தபடி நின்றாள் சுருதி. அவளையே முறைத்தபடி நின்றாள் ரிது.
“லூசா டி… முட்டுச் சந்துக்குள்ள நிக்க வச்சி… எவன்ட்டயோ…”
“எவனோ இல்லடி… நம்ம படிப்ஸ்.”
“எனக்கு அவன் எவனோ தான். அவன் கூட நடு ரோட்டுல நின்று பேசுறேன்னு தெரிஞ்சா! எங்கப்பா என்னை உப்புக்கண்டம் போட்டிடுவாரு. எங்கண்ணே அதைக் கூவி கூவி விக்க ஆரம்பிச்சிடுவான்.” என்று புலம்பியபடி நகர முயன்றவளின் கையைப் பிடித்திழுத்து,
“காதலுக்கு மரியாதை பண்ணு ரிது…”
“காதலா!!”
“ம்… அப்பத்தான் உங்காதலுக்கு உதவ ஆளுங்க வருவாங்க.”
“நான்லாம் எந்த கருமத்தையும் செய்ய மாட்டேன். என்னை ஆளை விடு.” என்று சொல்லி செல்லும் முன், விஷ்ணுவின் தந்தை பைக் வந்து நின்றது.
“என்னம்மா இங்க நிக்கிற?” என்று ரிதன்யாவை அடையாளம் கண்டு பேசினார் நடேசன்.
“அது…” அவள் தடுமாறி நிற்கும் போதே,
“விஷ்ணு நோட்புக் ரிதுகிட்ட இருக்கு மாமா. அதான் குடுத்திடலாம்னு வந்தோம். நாளைக்கு அதை சப்மிட் பண்ணணுமாம்.” என்று அசால்ட்டாக பொய்யைச் சொன்னவளைத் திணறிப் போய்த்தான் பார்த்தாள் ரிது.
“என்னடி மாமாங்கிற!” என்று சுருதியின் காதில் கிசு கிசுத்தாள் ரிதன்யா.
“ம்… மாமனாரு காலிங் மாமா… நீ வசூல் ராஜா படம் பாக்கலயா?” என்றவள்,
“பொட்டப் பிள்ளைங்க! நாமலே தனியா டியூசன் வர்றோம். ஆம்பளப்பயெ… அவனக் கூட்டீட்டு போக அப்பெங்காரன் பைக்ல வந்து நிக்கிறான் பாரு. வீட்டுல அவ்ளோ கட்டுப்பெட்டியா வளக்குறாங்க போல.” என்று சுருதி கேலி செய்ய, அதைக் கேட்டு, சிரிக்கும் உதடுகளை வெளிக்காட்டாது நின்றாள்.
சில நிமிடங்களிலேயே விஷ்ணுவும் வந்து விட்டான். வந்தவன் இரு பெண்களையும் திரும்பிக் கூட பார்க்காது தந்தையின் பைக்கில் ஏறிக் கொண்டான்.
“ஏதோ நோட்ட விட்டுட்டு வந்திட்டாயாமே! ரிது கொண்டு வந்திருக்கா. வாங்கிக்க.” என்றதும், சுருதி ஒரு நோட்டை நீட்ட, வாங்கிக் கொண்டு குனிந்தவன் நிமிரவே இல்லை.
“இவென் என்ன டி இப்படி வெக்கம்படுறான்?” என்று ரிது சொல்ல,
“அப்பாக்கு பயப்படுவான் போல இருக்கு. பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.”
“எது!! அட்ஜஸ்ட்டா… நீ கட்டுற மணல் கோட்டைக்குள்ள வாழ முடியாதுடிம்மா… உன் ஆசைய பொதைச்சி தான் வைக்க முடியும்.” என்று வழமை போல் எச்சரித்தாள் ரிது.
இப்படியே நாட்கள் விழுங்கப்பட்டு மாதங்களாக ஏப்பம் விட்டு காற்றோடு கரைந்து போனது. விஷ்ணுவிடம் காதல் கீதல் என்று பிணாத்தவில்லை என்றாலும் உள்ளுக்குள் அது வெகு வேகமாக வளர்ந்து விரிந்தது. இனம் புரியாத பருவ உணர்ச்சிகளுக்குள், அதை ரசனையுடன் அனுபவித்தாள்.
சுருதி, விஷ்ணுவிற்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள். அதன் விளைவாக இருவரின் பொழுதுகளும் ஏகாந்தமாய் இனித்தது.
பொதுத் தேர்வு வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. பள்ளி, டியூசன் சென்டர் என்று மாறி மாறி சைட் அடித்துக் கொண்டிருந்தவர்கள், முதல் முறையாக தனியே வெளியே சந்திக்கத் திட்டமிட்டனர்.
வழமை போல் ரிதன்யாவையும் இழுத்துக் கொண்டு பூங்காவில் மூவருமாய்ச் சந்தித்தனர். ரிதன்யாவைக் காவலுக்கு வைத்து விட்டு, புதர் ஒன்றன் மறைவில் விஷ்ணுவே இழுத்துச் சென்றாள் சுருதி. விடயம் வீட்டிற்கு தெரியவந்தது. வேறு என்ன! ரிது சொன்னது போல் விளக்கமாறு பிய்யும் அளவிற்கு மனோகரியிடம் அடி வாங்கினாள் சுருதி.
“பள்ளிக் கூடத்துக்குப் படிக்க அனுப்பினா… நீ காதல் வளக்க பார்க்கு பார்க்கா போறியாக்கும். முளைச்சி மூணு இலை விடாத சிறுக்கிக்கு புதர் மறைவுல காதல் கேக்குதோ?” என்று சொல்லி அடிக்க,
“ம்மா… நாங்க எந்தத் தப்பு பண்ணலம்மா. பேசிட்டு தான்ம்மா இருந்தோம்.” என்று எதிர்த்து பேச,
“வீட்டு கஷ்டம் தெரியுமா டி உனக்கு. உன்னைய, உந்தங்கச்சி, தம்பிய படிக்க வைக்க நாங்க என்னென்ன பாடுபடுறோம். நீ என்னடான்னா குடும்ப மானத்த காத்துல விட்டுட்டு வந்து நிக்கிற. மூணு வேளையும் உங்க வயிறு வாடாம இருக்கத்தான் நாங்க ராப்பகல்னு பாக்காம அடுப்புல வேகுறோம்.
மூத்தவ, நீயே இப்படிப் பொறுப்பில்லாம கண்ட பயல்களோட ஊர் மேஞ்சிட்டு இருந்தா! உந்தங்கச்சி தம்பி வாழ்க்க என்னாகும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சி பாத்தியா? அவங்க ஒழுக்கத்தையும் கேலி பேசி சந்தி சிரிக்குமே.” என்று சொல்லி ஒப்பாரி வைத்தார்.
தாய் அடித்ததை விட, சாமிநாதன் அழுதது அவளை மிகவும் பாதித்தது. தந்தையின் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தவளுக்கு அவரின் கண்ணீர் முள்ளாய் குத்தியது.
துணையாக மகள் இருக்கிருக்கிறாள் என்ற நம்பிக்கையை அவ்வபோது, “நீ இருக்கியே பாப்பா… அது போதும் அப்பாக்கு.” என்று வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் பேசாது இருந்தது அவளை வதைத்தது.
அவரின் உடைந்த நிலைக்கும், அவளின் தடித்து வீங்கிய தேகத்திற்கும் யார் காரணம் என்று யோசிக்கும் போது ரிதன்யா தான் முன்னே வந்து நின்றாள். அவளைத் தவிர வேறு யாருக்கும் இது தெரியாதே!
“நான் உங்கிட்ட சொல்லத்தான செஞ்சேன். இந்தக் காதல் கீதல் வேண்டாம்னு. பாரு! அவனைப் பாக்கப் போய், நீ தான் அசிங்கப்பட்டு நிக்கிற. உங்கூட புதர்ல இருந்த அவன் தப்பிச்சிட்டான். ஸ்கூலுக்கு இனி வர மாட்டானாம். பரிச்ச மட்டும் எழுத பர்மிஷன் கேட்டிருக்காங்க. ஒழுக்கா படிக்கிற வேலைய விட்டுட்டு எதுக்கு டி இது.” எனும் போது, சுருதி பாய்ந்து விட்டாள் ரிதன்யாவின் மீது.
இருவரும் பள்ளியில் வைத்து சண்டை போட்டு ஒரேயடியாகப் பிரிந்தனர்.
சுருதிக்குத் தெரியாதது அவர்களைப் போட்டுக் கொடுத்தது விஷ்ணுவின் தந்தை நடேசன் என்று. மூவரையும் பார்க்கில் பார்த்தவருக்கு மகனின் விஸ்தரித்த சிரிப்பு உள்ளத்தில் இருந்து வந்தது என்று புரிந்தது. இரு பெண்களில் யாரைக் காதலிக்கிறான் என்று யோசித்தவருக்கு, சுருதி கரம் பற்றி இழுத்துச் சென்றது, சொன்னது பதிலை.
மகன் ரிதன்யாவைக் காதல் செய்திருந்தால் பிரச்சினையே இல்லை. அண்ணாமலையார் வசதி படைத்தவர். அவரின் சமூகம். ஆனால் சுருதி அப்படிக் கிடையாது. ஒரே சமூகமாக இருந்தபோதும் அந்தஸ்த்தின் கீழ் நிலையில் இருப்பவள். அவளை மருமகளாகவெல்லாம் அவரால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. ஆனால் அவரின் மகன் நினைக்கிறான் என்றதும், அண்ணாமலையாரைப் பார்த்து விடயத்தைச் சொன்னார்.
அவரோ, சாமிநாதனையும் மனோகரியையும் கூப்பிட்டு வைத்து, ‘உங்கள் மகளின் லட்சணத்தைப் பாருங்கள். உங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் ஆசைப் படச் சொல்லுங்கள்.’ என்று நடந்ததைக் கூறி எச்சரிக்க, சுருதியின் உடல் புண்ணானது.
கடைசி பரிச்சை எழுத வந்த போது தான் விஷ்ணுவைக் கடைசியாகப் பார்த்தாள். அவனின் பாரா முகத்தில் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. எங்கு சென்றான்? என்ன செய்கிறான்? என்று தொடர்பைத் தேடித் தேடி இரண்டு ஆண்டுகள் ஓடியன.
அது தான் பட்ட வேதனையையும், அவமானங்களையும் அந்தக் குடும்பமும் படவேண்டும் என்ற வன்மத்தை வளர்ந்தது.
தெருவே வேடிக்கைப் பார்க்க ரிதன்யா அடி வாங்க வேண்டும். என் தந்தையைக் கூப்பிட்டு வைத்து பஞ்சாயத்துச் செய்தது போல் அண்ணாமலையாரையும் இழுத்துச் செல்ல வேண்டும்.
அது தான் அவளின் இலக்காக இருந்தது.
அவள் தான் ஒரு பையனை விட்டு கடிதம் போல் எதையோ கிறுக்கி ரிதன்யாவிற்கு வந்தது போல் சித்தரித்தாள். ஆனால் அவள் நினைத்து போல் ரிதன்யா அடிவாங்கவில்லை. மாறாக விக்ரமுடன் திருமணம் செய்து வைத்தனர். அதில் ஏமாற்றம் தான் என்றாலும் ரிதன்யாவின் சிரிப்பற்ற முகம் அவள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அனுபவிக்கவில்லை என்றது.
ஆண்டுகள் நகர்ந்தன. நர்சிங் படிப்பின் இறுதியில் இருந்தாள். ரிதன்யாவின் கெட்ட நேரம் சுருதி பயிற்சி நிலையில் வேலைபார்க்கும் மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.
அவளிடம் சென்று நலம் விசாரிக்க மனமில்லை என்றாலும் எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தது.
தன் கஷ்டங்களைக் கேட்க ஆள் இல்லாது தவித்தவள், அனைத்தையும் சுருதியிடம் சொல்லி அழுதாள்.
“இப்ப எதுக்கு நீ இங்க வந்திருக்க?” என்றவளிடம் கருகலைக்க வந்துள்ளதாகச் சொன்னாள் ரிது.
ஆண் குழந்தை தான் வேண்டும் என்று அம்மா மகள் இருவரையும் புறக்கணித்தவனிடம், எந்த ஊர் ஜோசிக்காரன் சொன்னானே! அடுத்த குழந்தை ஆணாகத்தான் இருக்கும் என்று.
ஆதலால் கவனிப்பு அதிகப்படியாக இருந்தது.
பெண் பிள்ளை என்ற காரணத்தால் தன் மகளுக்குக் கிடைக்காத அன்பு, அடுத்து பிறக்கபோகும் குழந்தை பெறுவதில் ரிதன்யாவிற்கு விரும்பமில்லை. அது தன் மகளுக்குத் தான் செய்யும் துரோகம் என்று பட்டது. அத்தோடு விக்ரமைப் போல் விஷம மனம் படைத்த இன்னொருவனை ஈன்று மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சிதைக்க விரும்பமில்லை என்றாள்.
“அஞ்சி மாசம் ஆகப்போது. இந்த ஹாஸ்பிட்டல்லயும் ஹஸ்பெண்ட்ட கூட்டீட்டு வரச் சொல்றாங்க. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல!” என்றவளுக்கு உதவினாள் சுருதி.
உதவிய கையோடு விக்ரமிடம் சென்று பத்தவும் வைத்து அவளின் இலக்கை அடைந்தாள்.
தன் மகனைக் கொன்று விட்டாள் என்று விக்ரம் ரிதன்யாவை அடித்த அடியை அந்தத் தெரு நின்று வேடிக்கைப் பார்த்தது. கூடவே, தனக்குத் தெரிந்த நாலு பேரைப் பஞ்சாயத்துக்கு அழைத்து, அண்ணாமலையார் இடம், “மகளைச் சரியாக வளர்க்கவில்லை.” என்று குற்றம் சாட்டி, மன்னிப்பும் கேட்க வைத்தான் விக்ரம்.
சுருதியைத் தேடி வந்தவள், ஒரே ஒரு அடி… அதன் பின் அவளின் பக்கம் கூட திரும்பிப் பார்க்காது சென்று விட்டாள்.
மனம் கணத்தது ரிதன்யாவிற்கு… தான் நம்பி, தன் கஷ்டங்களைப் பகிர்ந்தவள் இப்படி ஒரு துரோகம் செய்வாள் என்று. யாருமில்லாத உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு தனிமையை உணர்ந்தாள். வெறுமைக்கும் மன வறுமைக்கும் இடையே நசுங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால் சுருதிக்கு எந்தக் கவலையும் இல்லை. “நீ செய்யாத எதையும் நான் சொல்லல. உண்மையத்தானச் சொன்னேன்.” என்றுவிட்டுப் புது வேலை தேடி தனக்கென்ன என்பது போல் சென்னை வந்து விட்டாள்.
ஆனால் இம்முறை எனக்கென்ன என்று இருக்க கூடாது என்று நின்று நினைத்தவள், பத்ரியைத் தேடிச் சென்றாள்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!