Skip to content
Post Views: 567
நாணமும் சங்கடமுமாக அறைவாசலுக்கு வந்த சின்னபொண்ணுவை ஏளனமாக பார்த்து, “மாமா, உன்னை ரஞ்சனி ரூம்ல தானே ரெஸ்ட் எடுக்க சொன்னாரு? அதுக்குள்ள அவசரமா?” என்று லதா நக்கலாக கேட்க,
“அவசரம் தான், அதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா அண்ணி?” என்றபடி வசீகரன் வந்தான்.
Advertisement
சின்னபொண்ணு வசீகரனை பார்த்து அமைதியாக இருக்கும்படி கண்களால் கெஞ்ச, அவன் அதை கண்டு கொள்வதாக இல்லை
Advertisement
“எனக்கென்ன பிரச்சனை? கீழே யார் யாரோ கும்பலா டொனேஷன் கேக்கற ஆளுங்க மாதிரி வந்திருக்காங்க. மாமா உங்களுக்கு போன் பண்ணாரு, நீங்க எடுக்கலனு என்னை அனுப்பி கூட்டிட்டு வரச்சொன்னாரு” என்றவள் மனதிற்குள் ‘இந்த மகாராணிய நான் வந்து கூப்பிடணும், எல்லாம் என் தலையெழுத்து’ என்று முனகி கொண்டு சென்றாள்.
Advertisement
வசீகரன் சின்னபொண்ணுவின் தோளில் கைப்போட்டுக் கொண்டு படிகளில் இறங்கினான். ஹாலில் அமர்ந்திருந்தவர்களை கண்டு அவன் விழிகள் இடுங்க, அவளின் விழிகளோ அகல விரிந்து கொண்டது. “அக்கா” என்று படிகளில் புள்ளி மானாய் குதித்து ஓடினாள்.
Advertisement
காவேரியும் ஜமுனாவும் ஹாலின் நடுவில் இருந்த படிக்கட்டில் இளவரசி போல இறங்கிவரும் தங்கையையும் அவளுடன் ஆளுமையுடன் படியிறங்கி வரும் வசீகரனையும் கண்டு “அக்கா வேண்டாவுக்கு வந்த வாழ்வை பாத்தியாக்கா” என்று காவேரி ஜமுனாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“ஆமாடி, பெரிய பங்களா மாதிரி வீடு, கார்னு பெரிய இடமா இல்ல இருக்கு? நம்மகிட்ட கடன் வாங்கனவங்கனு நான் கூட இவங்கள பத்தி பெரிசா யோசிக்கல” என்றாள் ஜமுனா
அவர்களின் பொறாமையை உணராத சின்னுவோ, இருவரின் கைகளை பற்றிக் கொண்டாள்.
“நீங்க வருவீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லக்கா. என் மேல கோபமா இருப்பீங்கனு நினைச்சேன்” என்றாள் விரி்ந்த புன்னகையுடன்
“என்ன பண்றது? சொல்லிக்காம போயிட்டியேனு கோவமா தான் இருந்துச்சு. அதுக்காக கூட பொறந்தவள விட்டுட முடியுமா? அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம். ஒரு வார்த்த கூட சொல்லாம கண்ணாலம் கட்டிக்கிட்டதனால உன் மாமனுங்களுக்கு இன்னும் உன் மேல கோவம் தான். சேதி தெரிஞ்சதும் நாங்க தான் என் தங்கச்சி கண்ணாலத்தை போய் பார்த்தே தீருவோம்னு வம்படியா கிளம்பி வந்தோம். மூணாவது மனுஷங்க மாதிரி கல்யாணம் முடிஞ்சதும் ஊருக்கு போக மனசு வரல. அட்ரஸை விசாரிச்சு இங்கன வர்றதுக்கு இம்புட்டு நேரமாயிடுச்சு. நீ வாக்கப்பட்ட இடத்துக்கு பொறந்த வீட்டு சார்பா நாங்க வந்தா தானே உனக்கும் எங்களுக்கும் மருவாதி. அதான் கெளரவம் பாக்காம வந்தோம்”
“நீங்க வந்தது ரொம்ப சந்தோசம்மா” என்ற நடராஜன் அலமேலுவை அழுத்தமாக பார்க்க, “நின்னுட்டே இருந்தா எப்படி? உட்கார்ந்து பேசுங்க. லதா வந்தவங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வாம்மா” என்று அலமேலு சின்ன மருமகளிடம் பேச முகமில்லாமல் லதாவை ஏவ, “குழந்தை முழிச்சிட்டானானு பார்த்துட்டு வரேன் அத்தே” என்று அறைக்குள் சென்றவள் கதவை சாத்திக் கொண்டாள்.
அவளின் குணம் ஏற்கனவே அறிந்திருந்ததால் இனி அவள் வெளியே வர மாட்டாள் என்று அலமேலுவுக்கு புரிந்து போனது. “எல்லாருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வந்து கொடு” என்று சின்னபொண்ணிடம் கூறினார். அவளும் சம்மதமாக தலையை அசைத்து சமையலறைக்கு சென்றாள்.
சின்னபொண்ணுவின் அக்கா காவேரி, ஜமுனா மற்றும் அவர்களுடன் வந்திருந்த சில நெருங்கிய உறவினர்கள் அரை வட்டமாக இருந்த நீள்இருக்கையை ஆச்சரியமாக பார்த்தபடி அமர்ந்தனர்
அக்காக்கள் இருவரும் வீட்டின் ஆடம்பரத்தை விழிகளால் அளந்தபடி “ஏன் அத்தை உங்க மகனுக்கு என் தங்கச்சிய கேட்டிருந்தா நாங்க இல்லனா சொல்லிடப் போறாம்? நீங்க கூட ஒரு வார்த்தை சொல்லாம என் தங்கச்சிய உங்க வீட்டு மருமகளாக்கிக்கிட்டீங்களே, அன்னைக்கு அப்பா காரியத்துக்கு வந்தப்பவே எங்க கிட்ட சொல்லியிருக்கலாமில்ல” என்றாள் காவேரி
அலமேலு பதில் சொல்லமுடியாமல் கணவரை பார்க்க, “வேண்டா காலேஜ் படிச்சிட்டு இருந்தாளே, படிப்பு முடிஞ்சதும் பொண்ணு கேக்கலாம்னு இருந்தோம். அதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சு, அதனால தான் சொல்ல முடியலம்மா தப்பா எடுத்துக்காதீங்க”
“என்னாது? காலேஜ்ல படிச்சிட்டு இருந்தாளா?”
“ஆமா, சென்னையில பெரிய காலேஜ்ல படிச்சிட்டு இருந்தா. என் பெரிய மகன் சரவணன் அந்த காலேஜ்ல புரபசரா இருக்கான்”
“அப்படியா?” என்று வாயை பிளந்த ஜமுனாவின் காதை கடித்தாள் காவேரி, “அக்கா நீ பேசிட்டு இரு, நான் உள்ளாற போய் சின்னபொண்ணுகிட்ட பேசறேன்”
ஜமுனா தலையசைக்கவும் காவேரி சமையலறைக்குள் சென்றாள்.
“சின்ன பொண்ணு பெரிய ஆள்டி நீ, புளியம்கொம்பா பிடிச்சிட்டு இருக்கே” என்றபடி தங்கையின் அருகில் வந்தாள் காவேரி.
சின்னு பதிலேதும் சொல்லாமல் காவேரியிடம் ஜூஸை நீட்டினாள்.
“சின்னபொண்ணு எனக்கொரு சந்தேகம், அப்பா உசுரோட இருக்கும் போதே அலமேலு அத்தைக்கிட்ட கடனா பணம் கொடுக்கும் போது இவங்க பையனுக்கு உன்னை பேசினாரா?”
ஆமாம் என்பதாக தலையை மேலும் கீழும் அசைத்தாள்.
“ம், நினைச்சேன். போறதுக்கு முன்னாடி அவருக்கு புடிச்ச பொண்ணான சின்னபொண்ணுக்கு எல்லாத்தையும் ஏற்பாடு செஞ்சு வச்சிட்டு தான் போயிருக்காரா? ஆனா அவருக்கு எங்க ரெண்டு பேரை பத்தியும் எப்பவும் எந்த கவலையும் இல்ல. எங்க மேல மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனைனு தெரியல” என்றாள் பெருமூச்சுடன்
“ஏன்க்கா அப்படி சொல்றீங்க? அப்பா நம்ம எல்லாருக்கும் ஒரே மாதிரி தானே பாத்து பாத்து செஞ்சாரு?”
“என்ன செஞ்சாரு? பெரிய மகளுங்க ரெண்டு பேரையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்துட்டாரு. அவளுங்க ஜம்முனு இருக்காளுங்க. இதோ உனக்கு இந்த இடத்தை முடிச்சுவிட்டு போயிருக்காரு. ஆனா எனக்கும் ஜமுனாவுக்கும் மட்டும் குடிகாரனுங்கள பாத்து தலையில கட்டிட்டாரு”
“நீங்க ரெண்டு பேரும் தானேக்கா அவங்களை தான் கட்டிக்குவேன்னு சொன்னீங்க? அப்பாவும் அவங்கள பத்தி விசாரிச்சு முடிவெடுக்கலாம்னு சொன்னாரு. சொந்தத்துல எதுக்கு விசாரிக்கணும், அவங்க நல்லவங்க தான்னு வாய அடைச்சிட்டீங்க. அப்பாவும் உங்க இஷ்டம்னு விட்டுட்டாரு. அவரை இப்போ குறை சொன்னா எப்படி?”
“ஏன் பேச மாட்டே? அவரு உனக்கு வக்காலத்து வாங்கறதும் நீ அவருக்கு வக்காலத்து வாங்கறதும் புதுசா என்ன? அது போகட்டும் உன் புருஷன் என்ன வேலை பாக்கறாரு? எவ்வளவு சம்பளம் வாங்கறாரு?” என்று விசாரிக்க, சின்னபொண்ணு தனக்கு தெரிந்த வகையில் வசீகரன் செய்யும் தொழிலை பற்றி சுருக்கமாக கூறினாள்.
“அடேங்கப்பா, கவர்மெண்ட் பிராஜெக்ட் எடுத்து செஞ்சா நல்லா காசு வருமே. நம்மூர்ல ரோடு போடற கான்டிராக்ட் எடுத்தவன் எல்லாம் ரோடு போட்டு முடிக்கறதுக்குள்ள அவன் வீட்டை கட்டிப்புடறான். ஏன் வேண்டா, உன் புருஷன் செய்யற பிசினஸ்ல உங்க மாமனுங்க ரெண்டு பேரையும் பார்ட்னரா சேர்த்துக் சொல்லேன்” என்றபடி ஜூஸை பருகினாள்.
“நான் அவர் பிசினஸ்ல எல்லாம் தலையிட மாட்டேன்கா தப்பா எடுத்துக்காதே. அப்பா கிட்ட வாங்கின முப்பது லட்சம் பணத்தை அத்தை திருப்பி கொடுத்தாங்களே, அத மொத்தமா வாங்கி மாமாங்க ரெண்டு பேரும் பிசினஸ் தொடங்கப் போறதா சொன்னாங்களே? அது என்னாச்சு?”
“அத ஏன் கேக்கறே? ரெண்டு பேரும் குடிச்சிட்டு சுத்திட்டு இருந்தா தொழில் உருப்படுமா? மொத்த பணத்தையும் தொழில் தொடங்கறேன்னு கோட்டை விட்டுட்டானுங்க, அதான் உன்னான்ட பேசலாம்னு வந்தோம்”
“என்னக்கா கோட்ட விட்டுட்டாங்கனு இவ்வளவு சாதாரணமா சொல்றே? கடைசியா நமக்குனு இருந்த பூர்வீக சொத்த வித்த பணம் அது, எனக்கில்லனா கூட நீங்களாவது அதை வச்சு முன்னேறட்டும்னு தான் நான் எதுவும் கேக்காம கிளம்பி வந்தேன். இப்போ அந்த பணத்தை தொலைச்சிட்டதா சொல்றீங்க?” சின்ன பொண்ணு அதிர்ச்சியுடன் கேட்க
“என்னய என்னடி பண்ண சொல்றே?” என்று கண்ணை கசக்கினாள் காவேரி.
“சரிக்கா அழாத. அவங்களுக்கு தொழில் எல்லாம் சரிவராது, உள்ளூர்லயே கூலி வேல பாக்க சொல்லு”
“உன் புருஷன் ஆரம்பிச்சிருக்கற கம்பெனியில வேலையாவது போட்டு தர சொல்லேன்”
“அது முடியாதுக்கா”
காவேரியின் முகம் கருத்துவிட்டது. அவள் பதில் சொல்வதற்குள் வசீகரன் உள்ளே வந்திருந்தான்.
“சின்னு, ஜூஸ் குடிச்சதும் கிளம்பிட போறாங்க, சாப்பிட்டு போக சொல்லு. அவங்கள பஸ் ஏத்த சொல்லி டிரைவர்கிட்ட சொல்லியிருக்கேன்” என்றான் வசீகரன். காவேரியை பார்க்காமல் அவன் மனைவியிடம் மட்டும் பேசியதும், அவர்களை சாப்பிட்டு விட்டு கிளம்புமாறு மறைமுகமாக சொல்வதும் காவேரிக்கு முகத்தில் அடித்தாற் போல இருந்தது.
“மாப்பிள்ளை எங்க பொண்ணை அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது. மொத ராத்திரி எங்க ஊர்ல பொண்ணு வீட்ல நடக்கறது தான் வழக்கம். உங்களுக்கு அங்கே சரிப்படாதுனு தான் நாங்களே கிளம்பி வந்தோம். பொண்ணை அலங்காரம் பண்ணி நலங்கு வச்சு முறைப்படி உங்க கிட்ட அனுப்பி வச்சுட்டு காலைல அவளை குளிக்க வச்சுட்டு தான் கிளம்புவோம்” என்று நேரடியாக காவேரி வசீகரனிடம் பேசினாள்
“இத்தனை நாளா நீயே தானே குளிச்சிட்டு இருந்தே? ஏன் காலைல நீயே குளிச்சுக்க மாட்டியா சின்னு?” என்றான் மனைவியிடம்
காவேரிக்கு வசீகரன் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மனைவியிடம் மட்டும் பேசியது அவமானமாக இருக்கவே வெளியே சென்று விட்டாள். அவளோ சங்கடத்துடன் வசியை பார்த்து கண்களால் கெஞ்சினாள்.
“அக்காகிட்ட ஏன் மாமு இப்படி பேசறீங்க? தப்பா எடுத்துக்க போறாங்க” மெல்லிய குரலில் கேட்டாள்
“ஊருக்குள்ள நீ ஓடி போயிட்டதா வாய் கூசாம சொல்லிட்டு இருந்திருக்காங்க, உனக்கு சேர வேண்டிய பணத்தை செலவழிச்சிருக்காங்க. உன் மேல அக்கறையே இல்லாம உன்னை ஏமாத்தறவங்க கிட்ட வேற எப்படி பேச சொல்றே?”
கணவன் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் அமைதியாகி விட்டாள். அவளை பின்னால் இருந்து அணைத்தான். வசீகரனின் வலிய கரங்கள் அவளை சுற்றி வளைத்ததில் கோழிகுஞ்சாய் அவன் கைகளுக்குள் அடைக்கலமாகி இருந்தாள்.
“சின்னு அவங்க ஆசைக்கு நலங்கு வச்சுட்டு உன்னை என் ரூமுக்கு அனுப்பட்டும், காலைல வரைக்கும் இங்கேயே தங்கட்டும். ஆனா நான் தான் உன்னை குளிப்பாட்டுவேன்” என்று தன் பிடியை இறுக்கி அவளின் கழுத்து வளைவில் இதழ்பதித்தான்.
வசியின் சூடான அணைப்பிலும் ஈரமான இதழ் ஒற்றலிலும் வசீகரமான பேச்சிலும் சப்தநாடியும் ஒடுங்கிவிட ஜூஸை ஊற்றி கையில் எடுத்த கண்ணாடி டம்பளரை கீழே நழுவ விட்டாள். வசி சட்டென்று அதை விழாமல் பிடித்திருந்தான். அதிலிருந்த பழரசத்தை பருகியவன் அவளின் கன்னத்தை அழுந்த பற்றி தன்பக்கம் திருப்ப இமைகளை மூடிக் கொண்டாள். வசியிடமிருந்து பழரசம் அவளின் இதழ்களுக்குள் இறங்குவதை கண்டு விழி விரித்தாள். அவளை பார்த்து கண்சிமிட்டி விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
காவேரி வசீகரன் தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி ஜமுனாவிடம் சொல்ல, “சரி இதை பெரிசாக்காதே அப்படியே விடு, பாத்துக்கலாம்” என்று அவள் சமாதானம் சொன்னாள்.
லதாவிற்கு வந்திருந்தவர்களிடம் பேச பிடிக்காததால் குழந்தையுடன் அறைக்குள்ளேயே இருந்துவிட்டாள். இயல்பாகவே வேலை செய்து பழக்கமாகியிருந்ததால் வந்திருப்பவர்கள் தன் சொந்தம் என்பதாலும் சின்னபொண்ணு காளியப்பாவுடன் சேர்ந்து இரவு உணவை தயாரித்தாள்.
வசீகரன் எங்கேயோ வெளியே சென்று விட்டதால் மனைவி வேலை செய்து கொண்டிருப்பதை அவன் அறியவில்லை. திரும்பி வந்து மாடிக்கு சென்றவன் குளித்து தயாராக சென்றான். சின்னபொண்ணுவும் முன்பு அவள் தங்கியிருந்த அறைக்கு குளிக்க சென்றாள். அந்த அறையின் அலமாரியில் வசீகரன் வாங்கி கொடுத்திருந்த புது வெள்ளை நிற சுடிதார் ஒன்று இருக்க அதை எடுத்து அணிந்து கொண்டாள். பெண்கள் ஹாலில் நலங்கு வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, வசீகரன் தன் மனைவி இருந்த அறையின் கதவை தட்டினான். தலைக்கு குளித்து விரிந்த கூந்தலுடன் புது சுடிதாரில் வந்து நின்றவளை விழுங்குவது போல பார்த்தான்.
“சின்னு, இப்பவாவது என்னை உள்ளே விடுவியா? இல்ல கதவ சாத்திடுவியா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான்.
அவளோ பதில் சொல்லாமல் நாணத்துடன் தலைகவிழ, “ஆனா, நான் உன்னை மாதிரி இல்ல, உனக்காக ரூம் கதவ திறந்து வச்சுட்டு வாசல்லயே காத்திட்டு இருப்பேன்”
“மாமு, ஹால்ல எல்லாரும் இருக்காங்க, கிளம்புங்க, நான் ரெடியாகணும்” என்று கதவை சாத்த போனாள்.
“இருடி, இந்த சுடிதார்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, புதுபுடவை எடுத்துட்டு வந்திருக்கேன். இதை கட்டிக்காே” என்று அவளிடம் கவரை நீட்டினான். அவள் அதை வாங்க முயற்சிக்க, அதை அவளிடம் கொடுக்காமல் அவளின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.
அதே சமயம் சரவணனனும் ரஞ்சனியும் வீட்டிற்குள் நுழையவும் அவள் கெஞ்சலுடன் கணவனை பார்க்க, தன் பிடியை தளர்த்திக் கொண்டு அவர்களிடம் சென்று பேசினான்.
நடராஜனும் அவர்களோடு பேச்சில் கலந்து கொண்டார். “சரவணா நீயும் லதாவும் ரஞ்சனி ரூம்ல மாடியில இருந்துக்கோங்க. இனி ரஞ்சனி உங்க ரூம்ல தங்கிக்கட்டும்”
“சரிப்பா”
“லதா எங்கே? நம்ம வீட்டு சார்பா மூத்த மருமக தானே வேண்டாவுக்கு அலங்காரம் பண்ணனும், நலங்கு வைக்கணும். எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வேண்டாவோட அக்காங்க எல்லாம் அவங்க முறையை செய்ய வந்திருக்காங்க. நாமளும் வந்தவங்க முன்னாடி நம்ம முறையை கரெக்டா பண்ணனும் சரவணா”
“சரிப்பா” என்றவன் தன் அறைக்குள் சென்றான். லதா நைட்டியுடன் அமர்ந்து கைப்பேசியில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“லதா வெளியே என்ன நடக்குதுனு போய் பார்க்க மாட்டியா? அம்மாவோட விருப்பமில்லாம நடந்த கல்யாணம்னு அவங்க பெரிசா எதுலயும் கலந்துக்காம ஒதுங்கி நிக்கறாங்க. ரஞ்சனி கல்யாணம் ஆகாத பொண்ணு. நீ தானே பக்கத்துல இருந்து எல்லாம் பாக்கணும்?”
‘நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க? அந்த வேலைக்காரிய சீவி சிங்காரிச்சு உங்க தம்பி ரூமுக்கு அனுப்பி வைக்க சொல்றீங்களா? அதுக்கு அவசியமே இல்ல, மதியானமே உங்க தம்பி அவள அவர் ரூமுக்குள்ள கூட்டிட்டி போயிட்டாரு. இப்பவும் அவருக்கு கூட்டிட்டு போக தெரியும், நீங்க உங்க வேலைய பாருங்க’ என்று லதாவிற்கு கத்த வேண்டும் போல இருந்தது.
ஆனால் மதியமே சரவணன் சாப்பாடு விஷயத்தில் அவளிடம் கோவித்துக் கொண்டது நினைவு வர, “எனக்கு மதியத்துல இருந்து வயிறுவலிங்க, அதான் வெளியே வரல. அத்தைய பாத்துக்க சொல்லுங்களேன்” என்றாள் நலிந்த குரலில்
“அத முதல்லயே சொல்லக்கூடாதா? ஆஸ்பிட்டல் போகலாம் கிளம்பு” என்றான் சரவணன்
“வேணாங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்”
“லதா உனக்கொரு குட் நியூஸ், கீழே அம்மா அப்பா இருக்கறதால கம்பர்டபிளா இல்ல மாடிக்கு போயிடலாம்னு சொல்லிட்டு இருந்தே இல்ல. எனக்கு கேக்கறதுக்கு சங்கடமா இருந்துச்சு. அப்பாவே என்னை கூப்பிட்டு நம்மள மாடிக்கு ஷிப்ட் பண்ணிக்க சொன்னாரு”
“ஏன் திடீர்னு?”
“மாடியில வசியும் வேண்டாவும் தங்க போறாங்க, கல்யாணம் ஆகாத பொண்ணு ரஞ்சனி அங்கே இருக்கறத விட கல்யாணமான நாம அங்கே இருந்தா தானே சரியா இருக்கும், அதான் இந்த ஏற்பாடு”
கணவனின் கோபத்தை பொருட்படுத்தாமல் “மத்தவங்க கம்பர்டபிளுக்காக எல்லாம் என்னால ரூம் சேன்ஜ் பண்ண முடியாது, நான் இங்கே தான் இருப்பேன். உங்க தம்பியையும் அந்த வேலைக்கார பொண்ணையும் வேணும்னா அவ முன்னாடி தங்கியிருந்த ஸ்டோர் ரூம்ல தங்கிக்க சொல்லுங்க” என்றாள் எரிச்சலுடன்
“லதா இப்போ எல்லாம் நீ பேசறதும் நடந்துக்கறதும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. நான் லவ் பண்ண லதாவா நீனு எனக்கு சந்தேகமா இருக்கு” என்று கோபமாக சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். “சரவணா, உன் பொண்டாட்டி எங்கே டா, சாப்பிட கூப்பிடு, எல்லாரும் ஒண்ண சாப்பிடலாம்” என்றார் நடராஜன்
சரவணன் கோபத்தை விட்டு லதாவை சாப்பிட அழைக்க, “அந்த கும்பல்ல எல்லாம் என்னால சாப்பிட முடியாது. நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்றாள் அவள்.
வெளியே வந்தவன், “அவளுக்கு வயிறு சரியில்லையாம்பா, நம்மள சாப்பிட சொல்லிட்டா” என்றபடி சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான்.
சின்னபொண்ணு வசி கொடுத்த இளம் ஆரஞ்சு நிற மைசூர் சில்க் புடவையை கட்டிக் கொண்டு ஈரத் தலைமுடியை தளர விட்டு கீழே முடிச்சிட்டு இருந்தாள். அந்த புடவை அவளின் உடலை ஒட்டி தழுவியிருந்ததில் மனைவியின் லாவண்யங்களை யாருமறியாமல் ரசித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தான் வசீகர கள்வன். புதுப்பெண் என்று எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்கனவே அனைவருக்கும் சாப்பாடு பறிமாறிய அனுபவம் இருந்ததால் அவளாகவே அனைவரையும் கவனித்து சாப்பாடு பறிமாறினாள்.
அலமேலுவிடம் பழங்கதைகளை பேசிக் கொண்டே உறவினர்கள் சாப்பிட்டு முடித்தனர். ரஞ்சனி தூங்க சென்றபின் வசீகரனையும் சின்னபொண்ணையும் அருகருகே அமர வைத்து பெண்கள் நலங்கு வைத்தனர்.
நடராஜன் அலமேலுவை அழுத்தமாக பார்த்த பார்வையில் அவரும் இருவரையும் ஆசிர்வாதம் செய்து விட்டு, “ரஞ்சனி தனியா இருக்கா, மத்த விஷயங்கள நீங்களே பாத்துக்கோங்க” என்று விட்டு தன் அறைக்குள் சென்று விட்டார்.
சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது வசீகரன் “சின்னு சீக்கிரம் மேல வா” என்றுவிட்டு மாடியேறினான்.
“சின்னபொண்ணு, ஏன் உன் மாமியாரும் ஓரகத்தியும் பட்டும் படாம எதிலயும் ஒட்டாம இருக்காங்க” என்றாள் காவேரி சின்னுவின் தலையை பின்னலிட்டுக் கொண்டே.
“அப்படியெல்லாம் இல்லக்கா, எல்லாருக்கும் கல்யாண வேலையால அலுப்பு, அதான்”
“இவங்களுக்கு இந்த வீடு மட்டும் தான் இருக்கா? இல்ல இன்னும் எதாச்சும் சொத்து பத்து இருக்கா” ஜமுனா கேட்க
“எனக்கெதுவும் தெரியாதுக்கா”
“அதெல்லாம் விசாரிச்சு தெரிஞ்சு வச்சுக்கோ, பெரிய மருமக எம்எல்ஏ பொண்ணாமே, வெளியவே வரலயே அவ. திமிர்பிடிச்சவளா?”
“அப்படியெல்லாம் இல்ல. அவங்க கைகுழந்தைய வச்சிட்டு இருக்காங்க”
“என்னவோ, பெரிய இடத்தை புடிச்சிட்டே, எங்களுக்குனு யார் இருக்கா சொல்லு, பெரியவளுங்க ரெண்டு பேரும் இந்தியா பக்கம் திரும்பி கூட பாக்க மாட்றாளுங்க. நாம மூணு பேரும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும். அதுக்கு தான் நீ சொல்லிக்காம ஊருக்கு போனத கூட மனசுல வச்சுக்காம உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் கிளம்பி வந்துட்டோம். மனசு கேக்காம பொறந்த வீட்டு சார்பா சீர் செய்யலாம்னு உனக்கும் உன் புருஷனுக்கும் புதுத்துணி எடுத்துட்டு வந்தோம், ஆனா நீ உன் புருஷன் வாங்கிட்டு வந்த புடவைய கட்டிக்கிட்ட”
“அதுக்கென்னக்கா, காலைல நீங்க எடுத்துட்டு வந்த புடவைய கட்டிக்கறேன். எனக்காக நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றிக்கா”
“அதெல்லாம் நமக்குள்ள எதுக்கு? உன் மாமனுங்க உருப்படற மாதிரி தெரியல. அவங்களையும் பிசினஸ்ல பார்னரா சேர்த்துக்க சொல்லி உன் புருஷன் கிட்ட பேசிப்பாரேன், நாங்க வேணும்னா கொஞ்சம் பணம் தரோம்”
“அக்கா அதையெல்லாம் நான் அவர்கிட்ட கேக்க முடியாதுக்கா. அவரே இப்போ தான் பிசினஸ் ஆரம்பிச்சிருக்காரு”
“சரி போகட்டும், ரோடு கான்டிராக்ட் வேலையாச்சும் அவங்ககிட்ட கொடுக்க சொல்லு”
“மாமாங்களை பத்தி தெரிஞ்சும் நான் இதையெல்லாம் கேக்க முடியாதுக்கா”
“நானும் பலதடவை உதவினு கேக்கறேன். முயற்சி பண்றேன்னு கூட சொல்லாம முகத்துல அடிச்ச மாதிரி முடியாதுன்னே சொல்லிட்டு கிடக்கற. பணக்கார வீட்ல வாக்கப்பட்டுட்டோம்னு பகுமானமா பேசறீயா?” என்று ஜமுனா கோபத்தில் சீறினாள்
“அக்கா மெதுவா பேசுங்க, எல்லாரும் இன்னும் தூங்கியிருக்க மாட்டாங்க” என்றாள் சின்னபொண்ணு கெஞ்சலாக
“நீ என்ன தான் பேசி மழுப்பினாலும் எல்லா விஷயமும் எங்களுக்கும் தெரியும்டி. எல்லாம் விசாரிச்சுட்டு தான் வந்தோம். நாங்க வேணாம்னு போட்ட துணிய நீ போட்ட்டு திரிஞ்ச மாதிரி, எவளோ வேணாம்னு விட்டுட்டு போன மாப்பிள்ளைய தான் உனக்கு கட்டி வச்சிருக்காங்க. அப்பாகிட்ட சம்மந்தம் பேசினதுக்காக இந்த கல்யாணம நடக்கல, வேற வழியில்லாம சொந்தக்கார பொண்ணாச்சேனு புடிச்சு கட்டி வச்சிருக்காங்க. உனக்கு வந்து நலங்கு வைக்கறதுக்கு கூட இந்த வீட்டோட மூத்த மருமக வெளிய வரல. அலமேலு அத்தை யாருக்கு வந்த விருந்தோனு ஏனோ தானோனு இருக்கு.
புதுப்பொண்ணுங்கிற மோகத்துல உன் புருஷன் மட்டும் தான் உன்னை சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கான், மத்தபடி இந்த வீட்ல கூட நீ வேண்டாத மருமக தான்னு நல்லாவே தெரியுது. என்னவோ படிக்கறேன் கிழிக்கறேன்னு ஊரவிட்டு சொல்லிக்காம ஓடி வந்தே? வந்தவ ரெண்டே வருஷத்துல தாலி கட்டினு நிக்கிறே. இதுக்கு தான் என் வூட்ல படிக்கணும்னு அம்புட்டு ஆர்பாட்டம் பண்ணியா?” ஜமுனா எகிறினாள்.
“கல்யாணம் ஆனாலும் படிக்கலாம்னு அவர் சொல்லியிருக்காருக்கா”
“அப்படியே நீ போய் மிச்சமிருக்கற ஒரு வருஷத்த முடிச்சிட்டு என்ன பண்ண போறே? கலெக்டர் உத்தியோகமா பாக்க போறே? இந்த வீட்ல சம்பளமில்லாத வேலைக்காரியா தானே இருக்க போறே? நாங்க படிக்காம செய்யற வேலைய நீ படிச்சுட்டு செய்ய போறே. வேறே என்ன புதுசா சாதிக்க போறே சொல்லு? இதுல பெரிய இவளாட்டம் உதவி கேட்டா முடியாதுனு சொல்றே. உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு கேட்க வந்தோம் பாரு, எங்கள சொல்லணும்? நீ எந்த உதவியும் பண்ண தேவையில்ல, நாங்களே பாத்துக்கறோம், கிளம்புடி ஜமுனா” என்று காவேரி கோபமாக கூறிவிட்டு, அனைவரையும் கிளம்ப சொன்னாள்.
அவர்களை தடுத்து நிறுத்தவோ சமாதானம் செய்யவோ சின்னபொண்ணுவிற்கு தோன்றவில்லை. மாறாக உடன் பிறந்தவர்களுக்கு எப்போதுமே அவள் மீது உண்மையான அன்பே தோன்றாதா? ஆதாயத்திற்காக மட்டும் தான் அவளை அவர்கள் நாடுவார்களா? அவளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் அவர்களுக்கு அவள் வேண்டாம் என்கிற உண்மை அவளை சுட்டது.
கண்கள் கலங்கினாலும் இறுகிய பாறை போல் நின்றிருந்தாள்.
“காவேரி, அவளுக்கே இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு. உடனே புருஷன் கிட்ட கேக்க முடியுமா? கொஞ்ச நாள் போகட்டும் பேசிக்கலாம், சரி தானே வேண்டா” ஜமுனா தணிவாய் பேச
“இல்ல என்னால எப்பவுமே உங்களுக்கு உதவி செய்ய முடியாது. நீங்க கிளம்புங்க” என்றாள் உறுதியான குரலில்
“வேண்டா, காவேரி பேசனத கேட்டு கோவம் வந்துடுச்சா, இதப்பத்தி நாம அப்புறமா பேசிக்கலாம். நீ முதல்ல மாடிக்கு போ மாப்பிள்ளை வெயிட் பண்ணிட்டு இருக்காரு பாரு”
“நான் கோவத்துல பேசல. தெளிவா யோசிச்சு தான் பேசறேன். அப்பாவ ஏமாத்தி, இருக்கறதெல்லாம் எடுத்துட்டு போறப்போ நான் ஏன்னு கேள்வி கேக்கல. ஏன்னா அங்கே உங்களுக்கு உரிமை இருந்துச்சு. அதே மாதிரி என் புகுந்த வீட்லயும் உங்கள சுரண்டவிட்டு வேடிக்கை பாக்க மாட்டேன். உங்க வாழ்க்கைய நீங்க தான் வாழணும், எப்பவுமே யாராச்சும் உதவணும்னு எதிர்பார்க்காதீங்க, கிளம்புங்க”
“என்னடி போனா போகட்டும் சின்ன பொண்ணுனு பார்த்தா ரொம்ப பேசறே? பெரிய இடத்துல வாக்கப்பட்டுட்டோம்னு மிதப்புல பேசறீயா? நாளைக்கு இங்கே எதாச்சும் உனக்கு பிரச்சனைனாலும் நாங்க தான்டி வந்து நிக்கணும்” என்று ஜமுனா மீண்டும் எகிற
“அதுக்கு அவசியமே இருக்காது, நீங்க கிளம்பலாம்” என்ற வசீகரனின் குரலில் அனைவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள். மாடியின் வளைவில் நின்றபடி அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். பேச்சு முற்றிக் கொண்டே போவதை கண்டு வேகமாக படிகளில் இறங்கியபடி அவன் பேசியிருந்தான்.
“வேற வழியில்லாம வேண்டா கழுத்துல நான் தாலி கட்டல. அவளே தான் வேணும்னு தாலி கட்டியிருக்கேன். என் வேண்டாவை எனக்கு வேண்டியவளாக்கறதுக்காக ஆதியூர்ல இருந்து சென்னைக்கு வரவச்சு அவள சொந்தமாக்கிக்கிட்டேன்” என்று அலமேலு மற்றும் லதாவின் பேருக்கு பங்கம் வராமல் தன் செயலை சுருக்கமாக கூறினான்.
“நேத்துவரைக்கும் இருந்த என் சின்னுவோட நிலமைக்கு நீங்க தான் காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்களோட புத்தி தெரிஞ்சும் இவ்வளவு நேரம் உங்கள வீட்டுக்குள்ள விட்டதுக்கு காரணம், என் சின்னு உங்கள பார்த்ததும் அக்கானு ஆசைய ஓடி வந்தா. அதுக்காக தான் நானும் அமைதியா இருந்தேன். ஆனா நீங்க உங்க புத்திய எப்பவும் விட போறதில்லனு நல்லாவே தெரியுது. இனி தங்கச்சி பாசம்னு வேசம் போட்டுட்டு வர வேலை வச்சிக்காதீங்க, கிளம்புங்க” என்றான்
வசீகரனின் பேச்சை கேட்டு ஆச்சர்யமும் திகைப்பும் அடைந்தவர்களால் பதில் சொல்லமுடியாமல் போகவே தலையை குனிந்தபடி வெளிவாசலை நோக்கி நடந்தனர்.
“நில்லுங்க” என்றான் வசீகரன்
அப்படியே நின்று அவனை திரும்பி பார்த்தார்கள்.
“என் சின்னுவுக்கு சேர வேண்டிய முப்பது லட்சம் பணத்தை சீக்கிரம் அவ பேர்ல செட்டில் பண்ணிடுங்க. இல்லனா உங்க வீட்டுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும்” என்றான்.
“இங்கே வராம வீட்டுக்கு போகலாம்னு சொன்னேன் கேட்டியா? உதவி செய்வாங்கனு வந்தா, பொண்டாட்டியோட முப்பது லட்சம் பணத்தை திருப்பி கேக்கறாரு” என்று ஜமுனா காவேரியை திட்டிக் கொண்டு வெளியே சென்றாள்.
ஹாலில் நடந்த உரையாடல் லதா மற்றும் சரவணனின் காதில் தெளிவாக கேட்டிருந்தது. தனக்கே தெரியாமல் வேண்டாவை கல்லூரியில் சேர்த்து அவளை கரம்பிடித்திருக்கும் தம்பியின் தந்திரத்தை கண்டு மலைத்தாலும் அவன் வேண்டாவின் மீது வைத்த காதலை நினைத்து மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
லதாவிற்கும் வசியின் தந்திரத்தை கண்டு திகைப்பாக இருந்தது. ‘இவன்கிட்ட நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். அத்தையும் நானும் போட்ட நாடகத்தை கண்டுபிடிச்சிட்டானா இல்லையானு தெரியல. கண்டுபிடிச்சு சரவணன் கிட்ட சொல்லிட்டா அவ்ளோ தான்’ என்று மனதிற்குள் பயந்தாலும் சரவணன் முன்னால் தன்னை நல்லவளாக காட்டிக் கொள்ளும் பொறுட்டு, “சொந்த அக்காங்களே இப்படியிருக்காங்களே ச்சே என்ன மனுஷங்க இவங்கெல்லாம்?” என்று சின்ன பொண்ணுவிற்கு பாவம் பார்ப்பது போல மெல்லிய குரலில் பேசினாள்.
“ஆமாமா, உனக்கே அக்காங்களா இருப்பாளுங்க போலருக்கு” என்று நக்கலாக சொல்லி விட்டு சரவணன் திரும்பி படுத்துக்கொண்டான்.
“எனக்கு அக்காங்களா? வசி பொண்டாட்டிக்கு தானே அக்காங்க” என்று அவள் குழப்பத்துடன் கேட்க, அவன் பதில் சொல்லவில்லை.
அனைவரும் வெளியேறியதும் வசீகரன் சென்று வெளிவாசல் கதவை சாத்திவிட்டு வந்தான்.
சின்னபொண்ணு அசையாமல் அதே இடத்தில் நின்றிருக்கவும் அவளின் தோளை தொட்டு, “சின்னு” என்றான்
அடுத்த நொடி அவன் மார்பில் சாய்ந்து சத்தமில்லாமல் கண்ணீர் விட்டாள். சிலநிமிடங்கள் அவளின் தலையை கோதிவிட்டபடி அவளை சமாதானம் செய்தான். கீழே விழுந்து விட்டு எழுந்த குழந்தை அழாமல் தான் இருக்கும், ஆனால் தாயை கண்டதும், தான் விழுந்து விட்டதை எண்ணி வீறிட்டு அழும்.
அதுபோல தான் சின்னபொண்ணும் வசீகரன் வருவதற்கு முன்பு அவர்களை எதிர்த்து தைரியமாக பேசியவள் இப்போது அவள் மாமுவின் மார்பில் சாய்ந்து குழந்தையென தேம்பிக் கொண்டிருந்தாள்.
அவளை நடுஹாலில் வைத்து சமாதானம் செய்ய முடியாமல் அவளை ஒரு குழந்தை போல தூக்கி தோளில் போட்டுக் கொண்டு மாடியேறினான்.
அறைக்குள் நுழைந்ததும், “சின்னு, உன்னை கடத்திட்டு போயிடுவேன், தூக்கிட்டு போயிடுவேன்னு உன்கிட்ட அடிக்கடி சொல்வேனே, இப்போ பாத்தியா நிஜமாவே என் ரூமுக்கு உன்னை கடத்திட்டு வந்துட்டேன்” என்றபடி கதவை சாத்தி தாழிட்டான்.
(தொடரும்)
error: Content is protected !!
Vasi innum nalla naalu kelvi kettu irukkanumda nee