மறப்பதில்லை மதிமுகம்-20
அத்தியாயம்-20
கடந்த காலம் – பெங்களூரில்
நிஷா கட்டிலில் சாய்ந்து கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ஆவேசமாக அவளது அறைக்குள் நுழைந்த மதி,.
Advertisement
“அக்கா, நீ எப்படி அப்படிச் சொல்லலாம்..?” என்றாள் கோபத்தில் சிவந்த முகத்துடன்.
“எப்படிச் சொன்னேன்?” நிஷா கூலாகக் கேட்டாள்.
“ஆதி சாரைப் பத்தி.. ‘கே’ (gay) அது இதுன்னு கண்றாவியா..?”
Advertisement
நிஷா ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, பிறகு மிகவும் சீரியஸான குரலில்,
Advertisement
“மதி, இங்க வந்து உட்காரு..” என்று சொல்லி, அவள் அமருவதற்குப் படுக்கையில் இடம் ஒதுக்கினாள்.
“இங்க பாரு.. நீ எவ்வளவு நாளா அவர்கிட்ட டியூஷன் போற?”
“கிட்டத்தட்ட ஆறு மாசமா..”
Advertisement
“இவ்ளோ நாள்ல, என்னிக்காவது நீ அழகா இருக்க, இல்ல உன் டிரஸ் நல்லா இருக்குன்னு அந்த மாதிரி ஏதாவது உன்கிட்ட சொல்லியிருக்காரா?”
“சீச்சீ.. ஆதி சார் அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டாரு,” அவசரமாக மறுத்தாள் மதி.
“சரி அதை விடு.. உன்கிட்ட என்னிக்காவது ஃபிலர்ட் (flirt) பண்ணி இருக்காரா? உனக்காக ஸ்பெஷல் அட்டென்ஷன் ஏதாச்சும் கொடுத்திருக்காரா?”
துரதிர்ஷ்டவசமாக, எல்லா கேள்விகளுக்கும் பதில்
“இல்லை” என்பதாகவே இருந்தது.
“பார்த்தியா.. இப்போ நீயே ஒத்துக்கிறியா? அவருக்குப் பொண்ணுங்க மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் கிடையாதுன்னு?அப்புறம் நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு? நீ வேணா அவரை க்ளோஸா வாட்ச் பண்ணிப் பாரு, ஏதாவது க்ளூ கிடைக்கும்..”
நிஷா, மதியின் மனதில் சந்தேகத்தை விதைத்தாள்.
அவளின் யோசனை மிகுந்த முகத்தைப் பார்த்ததும் நிஷா மனதிற்குள் நக்கலாகச் சிரித்துக் கொண்டாள்.
‘டேய் ஆதி.. என்கிட்டயே உன் ஆட்டிட்யூட்டைக் காட்டுறியா? உன்னை ரெண்டே நாள்ல என் காலடியில விழ வைக்கிறேன் பாரு…’ என்று வன்மத்துடன் நினைத்துக் கொண்டாள்.
“நீ என்ன சொன்னாலும், என்னால இன்னும் இதை நம்ப முடியல..” இம்மென்றால் அழுதுவிடுவாள் போல் இருந்தாள் மதி.
“நீ நம்பலைல்ல? நான் உனக்கு நிரூபிச்சுக் காட்டுறேன்.. நான் சொல்ற மாதிரி செய்..” நிஷா சொன்னதைக்கேட்டு மதியின் வயிறு அசவுகரியத்தில் கலங்கியது.
மதி தன் புதிய உடையில் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள். இந்தத் திடீர் மாற்றத்துடன் ஆதித்யாவின் முன்னால் செல்ல அவளுக்கு நடுக்கமாக இருந்தது.
அவள் மெதுவாகப் படிகளில் ஏறிச் சென்றாள். அவளது குட்டைப்பாவாடை முழங்கால் அளவு கூட இல்லாததால், அதை லேசாகக் கீழே இழுத்துவிட மேலே வயிறு தெரிந்தது, உடலை ஒட்டியிருந்த ஸ்லீவ்லெஸ் டேங்க் டாப்பும் அவளது எகிறும் இதயத் துடிப்பைக் குறைக்க எந்த வகையிலும் உதவவில்லை.
தன் வாழ்க்கையில் இவ்வளவு கவர்ச்சியான உடையை அவள் அணிந்ததே இல்லை, ஏன் கற்பனை கூடச் செய்ததில்லை. ஆனால் இப்போது நிஷாவின் கட்டாயத்தால் அந்த உடையில் இருந்தாள்.
“இங்க பாரு மதி.. உனக்கு உண்மை தெரிஞ்சுக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்,நீ கொஞ்சம் கூட அட்ராக்டிவா இல்லைன்னா எந்த பையன் தான் உன்னைப் பார்ப்பான்? இதெல்லாம் பண்ணாதான் பசங்கள ஈர்க்க முடியும். இதுக்கும் அவன்கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்லைன்னா, கண்டிப்பா அவன் ‘அது’ தான்..” நிஷாவின் வார்த்தைகள் அவள் மனதில் எதிரொலித்தன.
“ஏன் தான் இந்த நிஷாக்காவோட பிளானுக்கு ஒத்துக்கிட்டியோன்னு தெரியல?” தன் வீணாப்போன மூளையை மீண்டும் ஒருமுறை திட்டிக் கொண்டாள்.
மொட்டைமாடியை அடைந்ததும் டென்ஷனில் நகத்தைக் கடித்தாள். ஆதி அவளுக்கு முதுகைக் காட்டியபடி யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருக்க,அவன் திரும்புவதற்காக இதயம் படபடக்க காத்திருந்தாள்.
“டேய், ஸாரிடா மச்சி.. கோவிச்சுக்காத..” என்று போனில் அவன் குழைந்து கொண்டிருந்தான்.
யாரிடம் இப்படி கொஞ்சிக்கொண்டிருக்கிறான் என்று அவள் புருவத்தை உயர்த்தினாள்,
“ஒட்டுக்கேட்பவர்கள் எப்போதுமே நல்ல விஷயத்தைக் கேட்பதில்லை” என்ற உண்மையை மறந்துவிட்டு, மறுமுனையில் யார் என்று அறியத் தீவிரமாகக் கவனித்தாள்.
“டே ஸாரிடா,மீ டூ மிஸ் யூ டா..நவீன்… என் தங்கம்ல.. செல்லம்ல.. ப்ளீஸ்.. இந்த ஒரு முறை அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.. இதுக்கு ஈடா நான் திரும்பி வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தர்றேன்.. ஓகே?”
‘நவீன்? ஆம்பளை பேராச்சே..’
“சிவ சிவா..” என்று அதிர்ச்சியில் காதைப்பொத்திக்கொண்டாள்.
பின்னால் குரல் கேட்டதும் ஆதி திரும்பி பார்க்க, அவனது பார்வை தன் மேல் பட்டதும் அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. தன் புதிய தோற்றத்தைப் பார்த்து அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று இமைக்கவும் மறந்து அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பியவன்,ஒரு கணம் மதியைப் பார்த்துவிட்டுச் சாதாரணமாகத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஆனால் அடுத்த கணமே அவளிடம் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்து. நவீனிடம் ‘பை’ சொல்லி ஃபோனை வைத்துவிட்டு நன்றாக திரும்பி மதியைப்பார்த்தான்.
அழகாகத் தெரிய அவள் எடுத்த பல மணிநேர முயற்சிக்கு அவனிடம் ஒரு சிறு ரியாக்ஷன் கூட இல்லையே என்று ஏமாற்றத்தில் உதட்டைப் பிதுக்கினாள் மதி.
ஆதியின் மனமோ, ‘என்ன கருமம் இது’ என்று அலறியது.
“மதி… என்ன குப்பை டிரஸ் இது…” என்றான் அதட்டலாக
ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருந்த மதிக்கு, அவனது கத்தல் எரிச்சலைத் தந்தது.
“ஏன்? நல்லாத்தானே இருக்கு..” என்றாள் வெடுக்கென்று.
தன் கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்தான்.
“இங்க பாரு.. இது டியூஷன் கிளாஸ், ஃபேஷன் பரேட் கிடையாது இப்படிச் சுத்துறதுக்கு. போய் உருப்படியா ஏதாவது மாத்திட்டு வா.. அப்படியே மூஞ்சியில இருக்கிற பெயிண்ட்டையும் கழுவிட்டு வா.”
‘பெயிண்ட்டா? ஒரு மணி நேரமா உட்கார்ந்து பண்ண மேக்கப் இவருக்கு பெயிண்ட்டா?’ என்று ஆத்திரத்தில் தரையை உதைத்துவிட்டு அங்கிருந்து போனாள்.
‘இவள் மனதில் என்னதான் ஓடுகிறது? ஏன் திடீரென்று இப்படி விசித்திரமாக நடந்துகொள்கிறாள்..?’என்று ஆதி குழம்பினான்.
அவளது அழகை மெருகேற்ற இதெல்லாம் தேவையில்லை, அவள் இயல்பாகவே பேரழகு என்று அவளிடம் யார் சொல்வது?’
சில நிமிடங்கள் கழித்து, அவள் தன் வழக்கமான உடைக்கு மாறித் திரும்பினாள். ஆனாலும் முகம் வாடியே இருந்தது.
“மதி..இப்போ எதுக்கு இந்தத் திடீர் மாற்றம்?” என்று சற்று நிதானமான குரலில் கேட்டான்.
“நிஷா அக்காதான் சொன்னாங்க, பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும்னு..” என்று பாதி உண்மையை மட்டும் சொன்னாள். “அப்பதான் பசங்க பார்ப்பாங்க” என்ற மிச்சப் பகுதியைச் சொல்லாமல் விழுங்கியிருந்தாள்.
“கடவுளே! மறுபடியும் நிஷா அக்காவா..” அவன் ஆத்திரத்தில் பற்களைக் கடித்தான்.
“மதி, நீ இதெல்லாம் பண்ண வேண்டிய அவசியமே இல்லை.. இந்த மேப்-அப் சேன்ஞ் ஓவர்லாம் இல்லாமலே நீ அழகுதான்..” என்றான் மென்மையாக,
“நீங்க என்னைச் சமாதானப்படுத்தச் சொல்றீங்க.. எனக்குத் தெரியும் நான் அவ்வளவு அழகில்லைன்னு..” என்றாள் சோர்ந்த முகத்துடன்,
“யாரு சொன்னா? நீ ரொம்ப அழகுதான்..” அவன் வேகமாய் மறுத்த விதம் அவனையே திடுக்கிட வைத்தது.
“பொய்.. என்கிட்ட அப்படி என்ன அழகு இருக்கு?” என்று நம்பிக்கையில்லாமல் கேட்டாள்.
‘என்ன அழகா?’ – ஆதியின் மனம் தானாக வர்ணிக்கத் தொடங்கியது, ‘ரொம்ப உயரமும் இல்லை, குட்டையும் இல்லை,எனக்காகவே அளவெடுத்து செதுக்கிய கச்சிதமான உயரம்.. கொடிபோன்ற மென்மையான உடல்வாகு,பால் போன்ற பளபளப்பான சருமம், காற்றில் அசையும் போது என் இதயத்தையும் சேர்த்து அசைத்துப் பார்க்கும் சுருள்முடி.. முத்தமிட வாகான பிறை நெற்றி, என்னை தாக்கி வீழ்த்தும் வில் புருவங்கள்.. மூர்ச்சையடைய வைக்கும் படபடக்கும் இமைகள், மூழ்கடிக்கக் காத்திருக்கும் கடலை விட ஆழமான கரிய விழிகள், மூக்கோடு மூக்கு உரசி விளையாட அழைக்கும் அழகிய குட்டி மூக்கு, விரல்கள் வருடத் தவிக்கும் மிருதுவான பட்டு கன்னங்கள், மூச்சுமுட்ட முத்தமிடத் தூண்டும் சிவந்த மொட்டு இதழ்கள்..வெண்சங்கு கழுத்து..
அவளது அழகை வர்ணிக்கும்போது அவன் பார்வை அவளது ஒவ்வொரு பாகத்தையும் வருடியது.
தறிகெட்டு ஓடும் கற்பனையை நிறுத்திவிட்டு சுயநினைவுக்குத் திரும்பியவன், ‘எனக்கு ஏன் இப்படி சென்சார் பண்ற அளவுக்கு தாட்ஸ் வருது ?’ என்று திடுக்குற்றான்.. நல்லவேளையாக இதையெல்லாம் வெளியே சொல்லவில்லை என்று நினைத்து அவன் நிம்மதியடைய,
ஆதியின் மனதைப் படிக்கும் அளவுக்கு மதி புத்திசாலி இல்லை என்றாலும், அவனது விழுங்கும் பார்வையில் அவளுக்குள்ளும் ஏதோ வேதியியல் மாற்றம் நிகழத்தான் செய்தது.முக சிவப்பைக் கட்டுப்படுத்தத் தன் கன்னங்களை உள்ளுக்குள் கடித்துக் கொண்டாள். ஆனாலும் காது வரை முகம் சிவப்பதையும், உள்ளுக்குள் ஒருவிதத் தகிப்பு பரவுவதையும் உணர்ந்தாள்.
“மதி.. என்ன இது தேவையில்லாத வேலை.. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, சரியா…” முயன்று வரவழைத்த அதிகாரத் தொனியில் தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டான்.
நிஜமாகவே மதியின் நிஷா அக்கா, ஆதியின் பொறுமையை ரொம்பவே சோதித்துக் கொண்டிருந்தாள். தினந்தோறும் ஏதாவது ஒரு தகிடுதத்தம் செய்து வகுப்பிற்கு இடையூறு விளைவித்துக் கொண்டே இருந்தாள்.
மதியை சின்ன சின்ன வேலை செய்ய ஏவி வெளியே அனுப்புவது, அவனிடம் வேண்டாத விஷயங்களை அரட்டை அடிப்பது என அவளது தொல்லை அதிகரித்துக் கொண்டேபோக, தன் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்குள் ஆதி பெரும்பாடுபட்டான்.
‘என் மதியை ஏதோ மெயிட் மாதிரி அத்தனை வேலை வாங்குறா அவளுக்கு எவ்வளவு தைரியம்?’ என்று உள்ளுக்குள் குமைந்தான்.
ஏதோ ஒரு அற்பக் காரணத்தைச் சொல்லி மதியை வெளியே அனுப்பிவிட்டு, அவனிடம் நெருங்க முயற்சிப்பதும், அவன் அதை லட்சியம் செய்யாமல் அவளது மூக்கை உடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் அவளோ கஜினி முகமதுவைப் போல, தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்துக்கொண்டேயிருந்தாள். அவளது இந்த விடாமுயற்சி அவனுக்கு இன்னும் எரிச்சலைக்கூட்டியது. மதிக்காக மட்டுமே அவன் அமைதி காத்தான். தான் நிஷாவை ஏதேனும் சொன்னால் மதி வருத்தப்படுவாள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, அவளது இம்சைகளை பொறுத்துப்போனான்.
இப்போதும் கூட, ஏதோ அவசரமாக கால் செய்ய வேண்டும் என்று சொல்லி மதியைத் தன் மொபைலை எடுத்து வர அனுப்பியிருந்தாள்
“இந்த நிஷாவுக்கு என்ன கை கால் விளங்காமையா இருக்கு?அவ போய் எடுத்துக்க மாட்டாளா? இந்த முட்டாள் மதி வேற இவளுக்கு எடுபுடி வேலை செய்ய இப்படி ஓடுறா.” என்று அவன் ஆத்திரத்தில் பற்களைக் கடித்தான்.
நிஷா அவனைக் கணக்குப் போடும் பார்வையுடன் பார்த்தாள். அவனிடம் நெருங்க அவள் போட்ட திட்டங்கள் அனைத்தும் அவனது அலட்சியத்தால் தவிடுபொடியானது. இவ்வளவு கடினமான ஒரு ஆணை அவள் பார்த்ததே இல்லை.
ஆரம்பத்தில் தன்னை அவமானப்படுத்தியதற்காக அவனைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான் அவளது எண்ணம். அவன் தன் காலடியில் விழும்போது அவனை உதைத்துத் தள்ள வேண்டும் என்பதே அவள் திட்டம்; ஆனால் அது நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவளும் அவனை ஈர்க்க என்னென்னவோ உத்திகளை கையாண்டாள். அவனிடம் இனிமையாகப் பேசி சாக்லேட் கொடுத்தாள்; ஆனால் அவனோ அதைத் துச்சமாக மதித்து நிராகரித்தான். அவனிடம் பேச நெருங்கினாலே சுட்டெரிக்கும் பார்வையால் விலக்கி நிறுத்தினாள். மதியிடம் அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டாள்; ஆனால் அவளோ அவனது ஃபோன் நம்பர் கூட வைத்திருக்காததால் எந்தப் பயனும் இல்லை.
நாளை அவள் ஊருக்குத் திரும்புகிறாள். போவதற்கு முன் இறுதியாக தனது கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்த முடிவு செய்தாள். அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனும் ஒரு ஆண்தானே? ஒரு பெண்ணின் தொடுகையில் வீழாத ஆணே இல்லை என்று அவள் உறுதியாக நம்பினாள்.
முதலில் இந்த மதியை இங்கிருந்து விரட்ட வேண்டும். தன் மொபைலை ஜீன்ஸ் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டு, தேன் தடவிய குரலில் அதை எடுத்து வருமாறு மதியிடம்கூற. எப்போதும் போல அந்த முட்டாள் மதியும் மறுக்காமல் சென்றாள்.
நிஷா தன் இலக்கைப் பார்த்தாள். அவன் கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தான். அவள் மெதுவாக முன்னோக்கி நகர்ந்தாள், தரையில் இருந்த ஒரு சிறு கல்லில் கால் தடுக்கியது போல நடித்து, அவன் மேல் விழுந்து அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
திடீரென நிஷா தன் மேல் விழுந்ததில் ஆதி திடுக்கிட்டுப்போனான். ஆனால் அவள் தற்செயலாகத் தடுக்கி விழுந்ததாக நினைத்து, அவள் கீழே விழாமல் இருக்க அவளது தோளைத் தாங்கிப் பிடித்தான். நிஷா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். வேண்டுமென்றே அவனது கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுத் தன்னோடு இழுத்தாள்.
கடந்த இரண்டு நாட்களாக மதிக்கு மனமே சரியில்லை. நிஷாக்காவின் வருகையை அவள் இப்போது வெறுக்கத் தொடங்கியிருந்தாள். நிஷா அக்கா ஆதி சார் மேல் ஆசைப்படுகிறாள் என்பதையும், அவருடன் தனிமையில் இருக்கத் துடிக்கிறாள் என்பதையும் அவளால் உணர முடிந்தது.
ஆதி சாரது நன்னடத்தையின் மேல் அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது, இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. நிஷா சோபாவில் ஆதி சார் மேல் ஒட்டிக்கொண்டு அமர்வதையோ, அவனிடம் உரிமையுடன் பேசுவதையோ அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதி சார் அவளைக் கண்டு கொள்ளவில்லைதான் என்றாலும், மதியின் மனவலி சிறிதும் குறைந்தபாடில்லை .
நாளுக்கு நாள் ஆதி சாரிடமிருந்து தான் அந்நியப்பட்டுப் போவது போல் உணர்ந்தாள். இது அவளது இதயத்தைப் பிழிந்தது. அவன் மேல் இவ்வளவு ஆழமான காதலைத் தான் வைத்திருப்போம் என்று அவளே நினைத்திருக்கவில்லை.
ஒருவேளை அவன் நிஷாவின் அழகில் மயங்கிவிட்டால்? அந்த நினைப்பிலேயே அவளது இதயக்கூடு காலியானது. அப்படி மட்டும் நடந்துவிட்டால் அதைத் தன்னால் தாங்கவே முடியாது என்று அறிந்தாள்.
மனதில் இத்தனை எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, அவளது கைகளும் கண்களும் மொபைலைத் தேடின. ஃபோன் எங்கு தேடியும் கிடைக்காததால், அவளிடமே கேட்கலாம் என்று மீண்டும் மாடிக்குச் சென்றாள்.
அங்கே மாடியில், ஆதி சாரது அணைப்பில் நிஷா அக்கா இருந்த காட்சி அவளை நிலைகுலையச் செய்தது. சட்டென்று அவளது கண்கள் குளமாக காட்சி மங்கலாகத் தெரிந்தது. இன்னும் ஒரு நொடி அங்கே நின்றால் கூட தன் இதயம் சுக்குநூறாக உடைந்துவிடும் என்று, உடனடியாகத் திரும்பி மாடிக்கதவின் பின்னால் நின்றுகொண்டு வலிக்கும் இதயத்தைத் கைவைத்து அழுத்திக்கொண்டாள், மூச்சு திணறியது, சூடான கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. அவளால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. அவளது கால்கள் பலமிழந்து ஜெல்லி போல ஆகின. மதி உடைந்து போகும் தருவாயில், ஆதியின் கடுமையான வார்த்தைகள் அவளது காதில் விழுந்து அவளை மீட்டெடுத்தன.
தொடரும்..

