Skip to content
Post Views: 255
படப்பிடிப்பு புயல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு மீதம் இருந்த நிலையில், எஞ்சிய காட்சிகளை எட்டு முதல் பத்து நாட்களுக்குள் முடித்துவிடும் வேகத்தில் இருந்தான் தமிழ்செல்வன்.
“ஏன் இந்த வேகம்? எங்களை என்ன மனுஷன்னு நினைச்சியா இல்ல மெஷின்னு நினைச்சியா நீ?” பேரழகன் வந்து தமிழிடம் கேட்க, செட் ஆர்கனைசரிடம் பேசிக்கொண்டிருந்தவன், “என்னய்யா உனக்கு இப்போ பிரச்சனை? பசிக்குதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“தமிழு, நீ ரொம்ப ஓவராதான் போற.”
“பெருசு, பசங்களை வரச் சொல்லு, ஒரு சீன் எடுக்கணும். நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்.”
Advertisement
அவன் முகத்தில் லேசான சோர்வு தட்டியிருப்பதை அவர் உணர்ந்தார். கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்பின் வேகம் மிகத் தீவிரமாக இருந்தது. எவ்வித காரணமும் கூறாமல், இரவு பகலாக படத்தின் வேலைகளைத் துரிதப்படுத்தியிருந்தான். ஆட்களை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டு, இவன் மட்டும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தான். இதனால் அவனுடைய உதவி இயக்குநர்களுக்கு ஓய்வே இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் முகத்தைத் தூக்கி வைத்தபடியே சுற்றினர்.
“அவனுங்க இப்போதான் எந்திரிச்சானுங்களாம், வரச் சொல்ல மாட்டேன். வேணும்னா நீயே போய் பாருடா” என்றார் அவர் கோபமாக.
பேசிக்கொண்டிருந்த டெக்னீஷியனைத் தன் கண் அசைவில் அனுப்பி வைத்தவன், “நானும் பார்க்கிறேன், ரெண்டு நாளா ஆளுக்கு ஒரு தினுசாதான் சுத்திட்டு இருக்கீங்க. எவனையும் நம்பி நான் வாழல, எவன் தயவையும் எதிர்பார்த்து இங்க நிக்கல” என்றவன், அவரை விட்டுத் திரும்பி தன்னுடைய இருக்கைக்கு அருகே இருந்த மைக்கை எடுத்து, “பேக் அப்!” என அறிவித்துவிட்டு, எவரையும் பார்க்காமல் அவ்விடத்திலிருந்து அகன்றான்.
Advertisement
அப்பொழுதுதான் மணி மதியம் மூன்றை நெருங்கியிருந்தது. “அதற்குள் பேகப்பா?” என்கிற சந்தேகத்தோடு அனைவரும் தமிழைப் பார்க்க, அவனோ அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.
Advertisement
“அங்கிள், என்னாச்சு செல்வாவுக்கு?”
பேரழகனிடம் வந்து நின்ற சக்தியைப் பார்த்தவர், “அவனுக்கு என்னம்மா… பைத்தியம், கிறுக்கு பிடிச்சு சுத்துறான். நீ போய் ஜாலியா இரு” என்று சிரிப்போடு கூறிச் சென்றார்.
அவர் குரலின் தொனி, அவர் கூறிய வார்த்தைகளுக்கு முற்றிலும் முரணாக இருப்பதை சக்தி உணர்ந்தாள்.
Advertisement
தமிழின் நடவடிக்கையும், இன்று இனி படப்பிடிப்பு இல்லை என்பதும் காட்டுத்தீயாகப் பரவியது. இச்செய்தி நிமலன் மற்றும் சுசிகரன் காதுகளுக்கும் எட்ட, அவர்கள் பேரழகனை அழைத்து விஷயத்தைக் கேட்டுவிட்டு, “நாங்க தேடுறோம்” என்று கிளம்பினர்.
அவர்கள் காடு, கண்மாய், குளக்கரை எனத் தேடித் திரிந்தனர். இறுதியில், “கோவிலுக்குப் போவோம்” என ஏதோ நினைவு வந்தவனாகப் பேரழகன் அழைக்க, ஊரின் கிழக்கு எல்லையில் இருந்த அந்தப் பழமையான கோவிலுக்குச் சென்றனர்.
அவர்கள் தேடி வந்தவன், கோவில் பின்பக்கத்தில் ஒரு மரத்தின் நிழலில் படுத்திருந்தான். காலடி ஓசை கேட்கவும், தன் கைகளையே கண்களுக்குப் போர்வையாக்கி படுத்துவிட்டான். வந்த மூவரும் அவனைத் தொந்தரவு செய்யாமல் அருகே அமர்ந்தனர். எவரும் பேசிக்கொள்ளவில்லை; அங்கே ஒரு பெரும் அமைதி நிலவியது. அருகே அமர்ந்திருப்பவர்கள் யார் என்பதை தமிழ் ஓரளவிற்கு யூகித்திருந்தான்.
“எவ்வளவு நேரம்டா இப்படியே படுத்திருப்ப?” பேரழகன் தான் பேச்சை முதலில் ஆரம்பித்தார்.
தமிழ்செல்வன் பேசவில்லை, அசையக்கூட இல்லை. “தல, எங்களைப் பாரேன்” – இது நிமலன்.
“தனியா இருக்க விடுங்கடா” என்றான் சலிப்பாக. அவனது குரல் நலிந்திருந்தது. சொல்ல முடியாத ஏதோ ஒரு துக்கம் தொண்டையை அடைப்பது போல இருந்தது.
அவனைப் பார்ப்பதற்கே அவர்களுக்கு மனபாரம் கூடியது; அவன் என்றுமே தனிமையை விரும்புபவன் கிடையாதே! பொதுவாக இவர்களே எழுந்து செல்லப் பார்த்தாலும், பிடித்து வைத்துக்கொண்டு உறக்கம் வரும்வரை விடமாட்டான்.
“அப்படியெல்லாம் விட முடியாது தமிழு” என்றார் பேரழகன்.
அவர் சில நேரங்களில் சிறு பிள்ளை போலத் தெரிந்தாலும், அவனைத் தன் மகன் போலப் பார்க்கும் அன்பு அவருக்கு உண்டு. அவன் கலங்கி நிற்கும் இந்த நேரத்தில் விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை.
“எவ்வளவு நாள்தான் கூடவே இருந்துடுவீங்க?” என்றான் சற்றே குரலைத் திடப்படுத்தி.
“என்னடா… பாதியிலேயே விட்டுட்டுப் போற ஆளுங்க மாதிரியா தெரியுறோம்?” என்றார் பேரழகன். தமிழ் இதழில் ஒரு கசந்த முறுவல் பூத்தது.
“ஏன் கண்டதைப் பேசிட்டு… தல, நேரடியாவே கேக்குறேன், உன்னைப் பார்க்குறப்போ எனக்கு வலிக்கிது. எப்படி எதுவுமே நடக்காத மாதிரி இருக்க?” என்றான் நிமலன் ஆற்றாமையுடன்.
தமிழ் மெல்லப் பேசத் தொடங்கினான், “சின்னக் குழந்தை வானத்துல பறக்குற ஏரோப்ளேனைப் பார்த்து இங்கிருந்து கை காட்டுற ஆசை போலடா என் ஒன்-சைட் லவ்.”
நிமலன் குறுக்கிட்டு, “நீ சொல்றதெல்லாம் எனக்குப் புரியாது. ஏரோப்ளேன் அளவு உனக்கும் சக்திக்கும் தூரம் இல்லையே. ஒரு போன் கால் டிஸ்டன்ஸ் தான?”
கைகளைத் தன் கண்களிலிருந்து எடுத்தவன் நிமலனைப் பார்த்தான். கண்கள் சிவந்து தடித்திருந்தன. அவன் அழுதிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது; அதை மறைக்கத்தான் கைகளை வைத்து மூடியிருக்கிறான்.
“அழுதிருக்கியா?” என்று கேட்ட சுசிகரனுக்கு தமிழ்செல்வன் மேல் சொல்லொண்ணா ஆத்திரம் வந்தது. தமிழ் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
“அழுது என்ன பிரயோஜனம்? சொல்லு சொல்லுன்னு எத்தனை தடவை சொன்னோம்? ஒரு தடவையாச்சும் கேட்டிருப்பியா? அப்படி என்னடா உனக்கு பிடிவாதம்?”
“விட்டுட்டுப் போய்டுவாளோன்னு பயம்டா” என்றான் தமிழ் மெல்லிய குரலில்.
“போகட்டுமே! இதோ, இப்போ சொல்லவே வழியில்லாம நிக்கிற… இப்போதும் அவள் போகத்தானே போகிறாள்?” பேரழகன் எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டினார்.
நிமலன் ஆறுதலாக, “ஒன்னும் கெட்டுப் போகல. நிலைமை இன்னும் கைக்குள்ளதான் இருக்கு. நாங்க பேசுறோம். முடிஞ்சா அவங்க வீட்டுலயும் பேசுறோம்” என்றான்.
அதுவரை படுத்திருந்த தமிழ்செல்வன் சட்டென எழுந்து அமர்ந்து நிமலனைப் பார்த்தான்.
“போய்க் கேளுங்க. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பதில் சொல்லுங்கடா. அவ அப்பா கிட்ட போய் பொண்ணு கேட்க எனக்கு என்ன அருகதை இருக்கு?”
ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. “உன்னை விடப் பெரிய மனசு எவனுக்குடா வரும்?” என்றார் பேரழகன்.
“மண்ணாங்கட்டி… என் மனசா சோறு போடும்?” எவரும் பேசவில்லை.
“மாளிகை மாதிரி வீடு அவளோடது. நினைச்ச நேரம் புது கார், வைரமும் வைடூரியமும் கொட்டி இருக்கு. அவ போடுற சாதாரண செருப்பே ஐயாயிரம், பத்தாயிரம் இருக்கும்.”
வேகமாகத் தன் கைபேசியை எடுத்து, “என் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு பாருங்க” என்று காட்டினான். அதில் இருந்ததோ வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே.
“அவளுக்குப் பார்த்திருக்கிற பையன், அவ அப்பாவை விட வசதியானவன்.”
“அப்போ பணம் தான் அந்தப் பொண்ணுக்கும் எல்லாமா?”
“அவளையறியாமலே அவளும் அந்தச் சொகுசான வாழ்க்கையில ஊறிட்டாடா. சிம்பிள் டிரஸ் போட்டு நம்ம கூட இருந்தா, அதையே அவளோட தகுதின்னு நினைச்சிட்டீங்களா?”
சுசிகரன், “அவ அண்ணனுக்குக் கட்டி வச்ச பொண்ணும் வசதி கம்மிதானே?” என்று கேட்டான்.
“பொண்ணு எடுக்குறது வேற, கொடுக்குறது வேறடா. எல்லாத்தையும் விடுங்க… முதல்ல அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கணுமே” என்றான் நலிந்த குரலில்.
நிமலன், “பிடிக்காமதான்…” என்று ஏதோ சொல்ல வர, அவனை இடைமறித்த தமிழ், “இல்லடா, என் அன்பின் எதிர்பார்ப்பே வேற. அவ என் மேல வச்சிருக்கிறது நம்பிக்கை. இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாம குழப்பிக்கிற ஆள் நான் இல்லை.”
பேரழகன் கேட்டார், “இப்போ என்ன சொல்ல வர்ற? விட்டுடப் போறியா? விட்டுட்டு நிம்மதியா இருந்துடுவியா?”
“ஹாஹா…” சத்தமாகச் சிரித்தவன் சட்டென நிறுத்தி, “செத்துட்டு இருக்கேன்” என்றான் கண்களில் அத்தனை வலியோடு.
“தமிழு…” பேரழகன் அவன் தோளில் கை வைக்க, அவன் கையை விலக்கிவிட்டு மீண்டும் கண்மூடிப் படுத்தான்.
மனதில் சொல்ல முடியாத வலி; கத்தி அழ வேண்டும் போல் இருந்தது, ஆனால் அழ முடியாத நிலையில் இருந்தான். யாரோ தன் உயிரைப் பிடித்து வேரோடு இழுத்து விளையாடுவது போன்ற ஒரு வேதனை.
“அவளை எப்போ முதல்ல பார்த்தேன்னு தெரியாதுடா… ஸ்கூல் ஆனுவல் டே பங்க்ஷனுக்கு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணும்போதுதான் பழக்கம். அப்போ பிப்த் படிச்சிட்டு இருப்போம். ஜோடி ஜோடியா அஞ்சு பசங்க, அஞ்சு பொண்ணுங்க. அவ வேற பையன் கூட, நான் வேற பொண்ணு கூட. இத்தனூண்டுதான் இருப்பா…” என்று ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் காட்டினான்.
“நான் சரியா ஆடலைன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்தா. அதைப் பார்த்துட்டு எங்க பேர் நல்லா இருக்குன்னு எங்களை சென்டர்ல ஆட விட்டாங்க. எதுக்கு நான் அடிக்கடி பழைய சாங் ரிங்டோனா வச்சிருக்கேன்னு கேட்பியே நிமலா…” ‘உனக்கும் எனக்கும்’ படத்தின் ‘உன் பார்வையில் பைத்தியமானேன்’ பாடலின் ஒரு பகுதியைத்தான் அவன் ஒலியாகக் கொண்டிருந்தான்.
“அந்தப் பாட்டுக்குத்தான் நாங்க முதல்ல ஆடுனோம். அவ மறந்துட்டா, ஆனா எனக்கு மறக்கல. அந்த வயசுல லவ் எல்லாம் வரல. ஆனா அதுக்கப்புறம் அடிக்கடி பேசுவோம். அவ அண்ணன் கட்டுப்பாடெல்லாம் தாண்டி என்னைத் தேடி வருவா. லெவன்த் படிக்கும்போது அது பிரெண்ட்ஷிப் இல்ல, அதையும் தாண்டிய ஒரு உணர்வுன்னு ஃபீல் பண்ணேன்.” தன் காதலை உணர்ந்த அந்தத் தருணங்களை நினைக்கும்போது இப்போதும் அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
“பத்து வருஷமா உள்ளேயே அடக்கி வச்சிருந்ததுனாலயோ என்னவோ, வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு அது பூகம்பமா வளர்ந்து நிக்குது. இப்போ மனசு சொல்ல நினைச்சாலும் மூளை அனுமதிக்க மாட்டேங்குது.”
“அப்போ விட்டுக்கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”
அவனது முதிர்ச்சியான சிந்தனைகளை விட, அவனது காதலுக்கு ஒரு வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் நிமலனிடம் இருந்தது. தமிழ்செல்வன் மீண்டும் சிரித்தான்.
“யாருடா இவன்… நம்மகிட்ட இருக்கிற பொருளைத்தான் விட்டுக்கொடுக்க முடியும். மனசுல அவ மேல அவ்வளவு காதல் இருந்தும், ஒரு நாளும் அவ கழுத்துக்குக் கீழ என் பார்வை போனது இல்லை. அவ என்னைக்குமே எனக்குச் சொந்தமில்லை, இதுல நான் எங்க விட்டுக்கொடுக்கப் போறேன்?”
இந்தக் கடைசி வாக்கியத்தைப் பேச அவன் மிகவும் சிரமப்பட்டான். மனதிற்குத் தெரிந்த உண்மையை நாவு சொல்லும்போது இதயம் பிழியப்பட்டது. எவராலும் பேச முடியவில்லை. அவனது வார்த்தைகளும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளும் மதிக்கத்தக்கதாக இருக்க, யாரிடமும் மறுப்பு இல்லை. இது இன்று நேற்றல்ல, பல வருடங்களாக நிதானமாக யோசித்து எடுத்த முடிவல்லவா!
“இப்போ நீ டைரக்டர் தல. கோடிக்கணக்குல சம்பாதிக்கப்போற. அவங்க அளவுக்கு இல்லனாலும் உனக்கு வருமானம் அதிகம் தானே?”
“திரும்பத் திரும்பப் பேசாதீங்கடா. அந்தப் பையன் ரொம்ப நல்லவன். என்னை விட அங்க அவ ரொம்பச் சந்தோஷமா இருப்பா. எல்லாருடைய காதலும் எல்லாரும் கை கூடிடாது.”
பேரழகன், “அப்போ நீ? உனக்குன்னு ஒரு வாழ்க்கை?”
“அவளை மறந்துதான் ஒரு வாழ்க்கை இருக்குன்னா, அதுக்கு நான் சாகுறதே மேல்.”
“தமிழு… தல… டேய்!” என அவர்கள் கோபத்தில் அழைக்க, தனியாக “தல” என்கிற பெண் குரல் கேட்டது.
நின்றது கவிதா தான். தமிழைப் பயத்தோடு பார்த்தவள், “நீங்க பேசினதெல்லாம் சக்தி கேட்டுட்டா” என்றாள்.
அச்செய்தி அனைவரையும் நிலைகுலையச் செய்தது, குறிப்பாக தமிழுக்கு. அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
“அவ எப்படி இங்க வந்தா?” – பேரழகன்.
“என் கூட” – கவிதா.
“உனக்கு எப்படி நாங்க இங்க இருக்கிறது தெரியும்?” – சுசிகரன்.
“நான்தான் சொன்னேன், ஆனா இவ மட்டும் வருவான்னு நினைச்சேன்” என்றான் நிமலன் கவிதாவை முறைத்தபடி.
“நீங்க இதெல்லாம் பேசிட்டு இருப்பீங்கன்னு யாருக்குத் தெரியும்? நான் கிளம்புறதைப் பார்த்துட்டு அவளே வந்துட்டா. உங்களை நிறுத்தலாம்னு பார்த்தா என்னை நகரவே விடல.”
“ஏன்மா, அவன் அப்செட்டா இருக்கிறது தெரியும் தான? யோசிச்சிருக்கலாம்ல” என்று பேரழகன் கடிந்துகொள்ள, தமிழ் சக்தி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினான். அவள் தூரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டே செல்வது தெரிந்தது.
ஓட்டமும் நடையுமாகச் சென்றவன், “சக்தி, நில்லு!” என்றான்.
அவளோ வேகத்தைக் கூட்ட, “ப்ளீஸ் சக்தி, ஸ்டாப்!” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினான். அவள் முகமே அழுகையில் சிவந்து போயிருந்தது.
“அங்க கேட்டதெல்லாம் மறந்துடு” என்று சொல்ல வந்தான். ஆனால் அவளிடம் அத்தனை கோபம் இருந்தது.
“என்னடா மறக்கணும்? உன்னையா… இல்ல நீ சொன்ன வார்த்தைகளையா?”
“சக்தி…”
“வேணாம் செல்வா. என்ன மாதிரி ஃபீல் பண்றதுன்னே தெரியல. எனக்குத் தலை தெறிக்குது” என்று தலையைப் பிடித்து ஆட்டியவளின் செய்கை அவனைப் பதற்றமடையச் செய்தது.
“கூல், ரிலாக்ஸ்… இங்க பாரு.” அவளோ அழுதுகொண்டே இருக்க, “சக்திம்மா, இங்க பாரு” என்றான்.
வலுக்கட்டாயமாகத் தன்னை நிமிர்ந்து பார்த்தவளிடம் பிரகாசமாகச் சிரித்துக் காட்டினான்.
“சீ, ஐ ஆம் வெரி குட். என்னைப் பத்தி கொஞ்சமும் யோசிக்காத. நீ ஹாப்பியா இருக்க வேண்டிய நேரம் இது. ஜஸ்ட் கோ வித் தி ப்ளோ” அவளுக்கே உரிய அந்தச் சிரிப்பை அவன் தன் இதழ்களில் வலுக்கட்டாயமாக வரவழைத்தான். அது அவளது நெஞ்சைப் பிசைந்தது. அவள் சிரிப்பைப் பார்க்க எந்த எல்லைக்கும் போகும் பிடிவாதம் அவனிடம் இருந்தது.
“எப்படி செல்வா… ஏன் இதெல்லாம் இத்தனை நாள் மறைச்ச? சரியோ தப்போ என்கிட்ட நீ பேசியிருக்கலாமே. என்னோட மனசை நான் புரிய வச்சிருப்பேன்.”
“சில விஷயங்கள் சொல்ல முடியாதது சக்தி. அதை உணர்ந்தால் மட்டும்தான் புரியும். மே பி என் லவ் உன்னை ரீச் ஆகாம இருந்திருக்கலாம்.”
“அப்படி இல்ல செல்வா. உனக்கு நான் கொஞ்சமும் தகுதி இல்லாதவளோன்னு இப்போ ஃபீல் பண்றேன். இப்போ கூட பாரு, என்னால நீ கஷ்டப்படுறியோன்னுதான் தோணுதே தவிர, நீ வருத்தப்படுறதை பத்தி நான் யோசிக்கவே” அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“இல்ல சக்தி, உன் தப்பு எதுவும் இல்லை. என் அன்பிற்கு ஒரு காரணம் தேவையில்லை, அதே சமயம் என் காதலுக்கு நிபந்தனைகளும் கிடையாது.”
“அப்போ நீ? உன்னோட சந்தோஷம்?” அவன் சில நிமிடங்களுக்கு முன் பேசிய வார்த்தைகள் அவள் செவிகளில் ரீங்காரமிட்டன.
“சந்தோஷம்ங்கிறது நமக்கு ஆசைப்பட்டது கிடைக்கிறதுல மட்டும் இல்லை… சில நேரங்கள்ல நாம உயிரா நேசிக்கிறவங்களோட சந்தோஷத்திலயும் இருக்கு.”
“நீ எல்லாத்தையும் ரொம்ப சிம்பிளா பேசுற செல்வா.”
“இல்லம்மா, நீதான் ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிற” என்று அவள் நெற்றியில் மெல்லத் தட்டினான்.
தலையைத் திருப்பி கண்களைத் துடைத்தவள், “நீ தனியாவே இருந்துட மாட்டேல்ல?” என்று கேட்டாள்.
“கண்டிப்பா இல்லை… என்னைச் சுத்தி எப்போதும் நூறு பேர், குறைஞ்சது அஞ்சு பேராவது இருப்பாங்க. அப்புறம் ஒரு கால் தூரத்துல நீ இருப்ப.”
“அது பத்தாது செல்வா.”
“வேற என்ன வேணும்?” எல்லாம் புரிந்தும் பேசுபவனிடம் அவள் வேறென்ன விளக்கம் கொடுக்க முடியும்? அந்தப் பேசாத வார்த்தைகளின் கணம் இருவருக்கும் இடையே பாரமாக அமைந்தது. அவளால் இன்னும் அவனுடைய உணர்வுகளின் ஆழத்தை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.
எங்கே, எப்போது அவன் தன் காதலை உணர்த்தினான்? இதற்கு முன்பு அதனைத் தான் உணர்ந்ததே இல்லையே என்கிற குழப்பம் அவளுக்குள் அலைமோதியது.
“ஏண்டா இப்படிப் பண்ற?”
“ஷ்… என்னைப் பத்தி ரொம்ப யோசிக்காதன்னு சொல்றேன்ல” தமிழ் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.
இயலாமையில் ஒரு சிறு பிள்ளையைப் போலக் கால்களைத் தரையில் உதைத்து அழத் தொடங்கினாள் சக்தி. தான் இல்லாமல் அவனது எதிர்காலம் என்பதைப் பற்றி அவன் சிந்திக்கவே இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“எப்பவும் இப்படியே இருந்துட முடியாது செல்வா. உன்னைச் சுத்தி இருக்கிற எல்லாரும் ஒரு நாள் கண்டிப்பா உன்னை விட்டுப் போவாங்க.”
“அப்போ மேடம் என்னையும் மறந்துடுவீங்களா?” என்று சிரித்துக்கொண்டே அவன் கேட்க, அவனது விரல்களைப் பற்றியவள் ஒரு பெருமூச்சோடு அழுது தீர்த்தாள்.
“ஒன்னுமில்லடா… டைம் ஹீல்ஸ் எவ்ரிதிங், ஓகே?” என்றான் தமிழ்.
“ஓகே இல்ல! நீ எப்பவும் இப்படித்தான். எல்லாத்தையும் உனக்குள்ளேயே வச்சுக்குவ. எதுவுமே நடக்காத மாதிரி, எதுவும் உன்னை பாதிக்காத மாதிரி நடிச்சு எங்களைச் சமாதானம் பண்ணுவ. ஆனா, யாரும் இல்லாதப்போ நீ உடைஞ்சு போய்டுவடா” அவனைப் பற்றித் தான் யோசிக்கவே இல்லை, தன்னை பற்றி மட்டுமே யோசிக்கிறேன் என்று அவள் கூறினாலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் அவனது நலனே நின்றது.
ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், “சரி… உனக்கென்ன, நான் மூவ்-ஆன் ஆகணும், அவ்வளவுதானே? சரி, கண்டிப்பா ஆகுறேன். ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ ஆகட்டும், நான் மாறிடுறேன்” என்றான்.
“சத்தியமா?” என்று அவள் கையை நீட்ட, அதைப் பிடித்துக் கை குலுக்கியவன்,
“கண்டிப்பா என் லைஃப்ல இன்னொரு காதல் வரும், ஓகேவா?” என்றான்.
ஓரளவு அவள் மனநிலை சீரானது. ஆனாலும் மனதில் ஏதோ ஒரு பெரிய நெருடல் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது.
அடுத்த நாளே சூப்பர்வைசிங் சவுண்ட் எடிட்டரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
“இன்னும் ரெண்டு நாள்ல ஸ்டூடியோ ரெடியாகிடும்மா, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்கப் போறோம்” என்றார் அவர்.
“இல்ல சார், இங்க இன்னும் ஷூட்டிங் முடியலையே?”
“அதெல்லாம் வேற ஆளை அனுப்பிட்டேன், நாளைக்கு அவன் வந்துடுவான். அவன்கிட்ட எல்லா சவுண்ட் ஃபைல்ஸையும் ஒப்படைச்சிடு” என்றார்.
சவுண்ட் இன்ஜினியரிங் என்பது அவள் விரும்பி ஏற்ற வேலை. பிடிவாதமாக இந்தப் படிப்பைப் படிக்க ஆரம்பித்ததற்குக் காரணமே செல்வா தான். ஒருமுறை அவன் அவளை ஒரு குயிலின் ஓசையைக் கண்மூடி கேட்கச் செய்தான்.
அமைதியாக அமர்ந்து கேட்ட அந்த ஓசை யாருடையது எனக் கேட்டபோது, தன் நண்பனும் சகோதரனுமான சவுண்ட் இன்ஜினியர் ஒருவரிடமிருந்து பெற்ற ஒலிக்கோப்பு அது எனக் கூறினான். ஏனோ அதைக் கேட்டவுடனேயே அதிலிருந்த ஒவ்வொரு நொடியும் அவள் மனதில் சட்டென்று ஒட்டிக்கொண்டது. அதுபோலப் பல ஆடியோக்களை வாங்கி ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினாள்.
முதலாம் ஆண்டு பி.ஏ படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, “இதற்குத்தான் படிப்பேன்” என வீட்டில் முரண்டு பிடித்துச் சென்னை கிளம்பினாள்.
வீட்டின் ஒரே பெண் என்பதால் அவளைச் செல்லமாக வளர்த்த பெற்றோருக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அவள் தன் அறையிலேயே முடங்கிக் கிடப்பதும், எந்நேரமும் அழுதுகொண்டே இருப்பதும் அவர்களைப் பாதிக்கவே, இறுதியில் சம்மதித்தனர்.
தமிழ்செல்வன் கூட அவளது இந்தப் பிடிவாதம் பிடிக்காமல் ஒரு மாதம் அவளுடன் பேசுவதைத் தவிர்த்திருந்தான். ஆனால், அவள் சென்னை கிளம்பும் செய்தி கேட்டு அவனே நேரில் வந்து பல அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தான்.
படிப்பை முடித்துவிட்டு அவள் வந்த நேரத்தில், தமிழ்செல்வன் படம் எடுக்கத் தொடங்கியிருந்தது அவளுக்கு வசதியாகப் போனது. தன் தொழிலை மிகவும் நேசித்துச் செய்யத் தொடங்கினாள். இன்றும் அதே வேலைதான், பிற்காலத்தில் சஞ்சீவிடம் கேட்டால் கூட மறுக்கப்போவதில்லை. ஆனாலும், என்றும் இல்லாத ஒரு தயக்கம் இன்று அவளுக்குள் இருந்தது; சென்னைக்குக் கிளம்ப மனமே வரவில்லை.
அவள் கண்கள் தமிழைத் தேடின. அவன் நிமலனை ஏதோ கேலி செய்துகொண்டிருந்தான். நிமலன் எவ்வளவோ பேசிச் சமாளிக்க முயன்றும் முடியவில்லை. தமிழிடம் பேசி யாரால் ஜெயித்துவிட முடியும்? நிமலனும் தோற்றுப்போனான். சக்தி தாராவின் கால்கள் தானாகவே அவன் இருந்த திசை நோக்கிச் சென்றன.
இவளைப் பார்த்ததும், “சொல்லு சக்தி” என்றான் இலகுவான குரலில்.
“ரெண்டு நாள்ல மணிகண்டன் சார் சென்னை வரச் சொல்றாங்க” என்றாள் எவ்வித உற்சாகமும் இன்றி.
“ஓ, சரி சக்தி. போயிட்டு வா. வேற ஆள் ஏற்பாடு பண்றார் தானே?” அவன் எப்போதும் போல இயல்பாகப் பேசினாலும், அவளுக்குள் ஒரு ஏமாற்றம். ‘இவ்வளவு சாதாரணமாக என்னை அனுப்பி வைக்கிறானே’ என்கிற எண்ணம் அவளை வருத்தியது.
“ம்ம்… நாளைக்கு வர்றாங்களாம்” என்றாள்.
“அப்போ சரி, நான் பேரழகன்கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ணச் சொல்றேன்.”
“இல்ல, நான் வீட்டுல சொல்லிட்டுப் போறேன்” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
இருவரையும் பார்த்த நிமலன், “எப்படி தல… வரச் சொல்லிட்டு இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற? பெரிய நடிகன்டா நீ” என்றான்.
“அவ போகட்டும்டா. இங்க இருந்தா ரொம்ப யோசிப்பா” என்றான் தமிழ்.
“நீ?”
“நானும் தான்” சுலபமாகத் தன் உணர்வை ஒப்புக்கொண்டவன், அடுத்த வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
error: Content is protected !!