Skip to content
Post Views: 120

அத்தியாயம்-21
கடந்தகாலம் பெங்களூரு..
ஆதி முதலில் நிஷா தன்மீது விழுந்தது ஒரு விபத்து என்றுதான் நினைத்தான். ஆனால் அவள் முகத்தில் தெரிந்த அந்த வெற்றிப் புன்னகை அவனது கழுகுப் பார்வையில் இருந்து தப்பவில்லை. இதெல்லாம் நாடகம் என்று புரிந்ததும், ஆத்திரத்தில் அவளைத் தூக்கி எறிவது போலத் தள்ளிவிட்டான். அவள் கீழே விழுந்து அடிபட்டதில் வலியில் அலறினாள்.
Advertisement
“என்னடா பண்ற சைக்கோவா நீ..?”
“வெட்கமா இல்ல உனக்கு! ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா..? உன் அழகான முகம் உன் அசிங்கமான மனச மறைச்சிடும்ன்னு நினைச்சியா? எவ்ளோ கேவலமா இறங்கிட்ட? மதிக்காக மட்டும்தான் உன் இம்சையை பொறுத்துக்கிட்டேன். ஆனால் நீ லிமிட்ட கிராஸ் பண்ணிட்ட.. இனி ஒரு நொடிகூட உன்னை என்னால சகிச்சிக்க முடியாது. நீ ஊருக்கு போற வரைக்கும் மதி எங்க வீட்டுக்கு வந்து டியூஷன் படிக்கட்டும்,” என்று அருவருப்பான பார்வையை அவள் மீது வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
தன் கனவு கலைந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த மதிக்கு, அவனது கோபமான குரல் சஹாரா பாலைவனத்தில் சாரக்காத்து வீசியது போல குளு குளுவென்று இருந்தது. மாடிக்கதவின் பின்னால் இருந்து வெளியே என்ன நடக்கிறது என்று மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
Advertisement
ஆனால் அவள் எதையும் பார்ப்பதற்கு முன், கதவு பலமாகத் திறக்கப்பட, அந்த வேகத்தில் அவள் பின்னோக்கித் தூக்கி எறியப்பட்டாள்.
Advertisement
“ஆஆஆ…” என்று அலறியபடி நிலைதடுமாறிப் பின்னால் விழப் போனாள். ஏதாவது பிடிமானம் கிடைக்குமா என்று கைகள் காற்றில் அல்லாட
கண் இமைக்கும் நேரத்தில் ஆதி அவளது கையைப் பிடித்து இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்திருந்தான்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளை இன்னும் அழுத்தமாக இறுக்கிக்கொண்டான். அவள் தன் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அந்த அணைப்பு அவனுக்குதான் அதிகமாக தேவைப்பட்டது. அந்த அளவுக்கு அவள் படிக்கட்டில் விழப்போன காட்சி அவனது உயிரையே உலுக்கியிருந்தது.
Advertisement
மதியை தன் அரவணைப்பிற்குள் மிக நெருக்கமாக இருத்திக்கொண்டவன், அவளை இனி எப்போதும் விட்டுவிடக் கூடாது என்பது போலப் பாதுகாப்பாக அணைத்திருந்தான்.
மதியும் உயிர் பயத்தில் அவனது சட்டையைப் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தாள்.
தன்னை நெருக்கமாக அணைத்திருந்தவனின் இதயம் படபடப்பதை அவளால் உணர முடிந்தது. அவனது அந்தப் பிடிவாதமான அணைப்பும், பதற்றமான வேக மூச்சுகளும் அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உரக்கச் சொன்னது.
தன் இதயத்திற்குச் சிறகுகள் முளைத்து காற்றில் பறப்பது போல உணர்ந்தாள் தண்மதி. அவனது கதகதப்பான அணைப்பும், வேகமான இதயத்துடிப்பும் அவளது பதற்றத்தைத் தணித்து மனதை மகிழ்ச்சியால் நிறைத்தது. இன்னும் அதிகமாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.
ஒருயுகம் போல் தோன்றிய சில வினாடிகள் கழித்து, அவன் அவளை லேசாகப் பிரித்தான், ஆனாலும் தன் பிடியிலேயே வைத்திருந்தான். அவள் நலமாக இருக்கிறாளா என்று உறுதி செய்வது போல அவனது கண்கள் அவளை வருடின. அந்த அணுக்கத்தில், அவனது மூச்சுக்காற்று முகத்தில் மோத அவள் உடல் ஒருகணம் சிலிர்த்து அடங்கியது.
அவளை கண்ணோடு கண் பார்த்து, “ஆர் யூ ஓகே?” என்று கவலையுடன் கேட்க,
‘பெட்டர் தென் எவர்..” என்று மனம் கூவினாலும் குரல் ஒத்துழைக்காமல் போக ஆமாம் என்று அழகாகத் தலையாட்டினாள்.
அவன் நிம்மதிப் பெருமூச்சுடன் அவளது நெற்றியில் மிக மென்மையாக முத்தமிட்டுவிட்டு,
“பார்த்துப் போ..” என்று சிசுகிசுத்துவிட்டு வேகமாகக் கீழே இறங்கி சென்றுவிட்டான்.
தன் உயிரின் ஒரு பாதி அவனுடன் செல்வதுபோன்ற பிரம்மையில் உறைந்து நின்றாள் மதி.
சென்னையில் தற்போது..
தர்ஷாவின் சிரிப்பு சத்தம் அந்த இடமெல்லாம் எதிரொலித்து கேண்டீனில் இருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்ததை மதி கவனித்தாள். ஆதியும் தர்ஷாவும் கவுண்டர் அருகே நின்று மதிய உணவை ஆர்டர் செய்து கொண்டிருந்தார்கள் போலத் தெரிந்தது. அங்கிருந்த பலரது பார்வையும் அவர்கள் பக்கமே இருந்தது.
‘ஜோக்கர்ஸ் மாதிரி சிரிக்க அப்படி அங்க என்னதான் இருக்கோ..’ என்று எரிச்சலுடன் நினைத்தாள் மதி.
ஆதி அருகில் நின்று கொண்டு, அவனிடம் இவ்வளவு சகஜமாக தர்ஷா பேசும் காட்சியை வெறுப்புடன் பார்த்தாள். இது போன்ற ஒரு நெருக்கத்தை அவளால் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாதே.
கடந்த இரண்டு நாட்களாக, எங்கு பார்த்தாலும் அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றித்திரிவது போன்றே தோன்றியது. அவர்கள் சிரிப்பது ஏதோ தன்னை எள்ளி நகையாடுவது போன்ற பிரமையைத் தந்தது.
ஆனால் இதையெல்லாம் பார்த்து உள்ளுக்குள் புகைவதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. தர்ஷாவும் ஆதியும் கல்லூரி நண்பர்கள் என்று நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தாலும், அது அவளது தணலாய் எரியும் மனதைத் தணிக்க எந்த வகையிலும் உதவவில்லை.
அவள் கண்களால் அவர்கள் மேல் ஈட்டி எறிந்து கொண்டிருந்தபோது.
“என்ன மதி, காதுல இருந்து புகை வர்ற மாதிரி இருக்கு..?” நவீன் சகஜமாக சிரித்துக் கொண்டே, அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு வசதியாக அமர்ந்தான்.
“கடுப்பேத்தாதீங்க நவீன்.. யாரு அந்த டம்போ? ஆதி சார் மேல அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கா..” எரிச்சல் ததும்பும் குரலில் கேட்டாள்.
“அவங்க அவ்ளோ குளோஸா பழகுறதைப் பார்த்தா தெரியலையா? இதையெல்லாமா கேப்பாங்க மதி.. நீ புத்திசாலினு நினைச்சேன், ஆனா உன் பேருக்கு ஏத்த மாதிரி மதி இல்லை போலயே..” என்று தலையைத் தொட்டுக்காட்டி கிண்டல் செய்தான் நவீன்.
“என்ன சொல்றீங்க நவீன்ன்ன்…?” அதிர்ச்சியில் கத்தியிருந்தாள் அவள்.
அவளது அந்த முகபாவனையைக் கண்டு நவீன் சிரித்துத் தீர்த்தான்.
“மதி.. பதற்றப்படாதே, கூலா இரு.. ஆதியும் தர்ஷாவும் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்ன்னு சொன்னேன்ல.. அவ்வளவுதான், அதுக்கு மேல வேற ஒன்னும் இல்லை. உனக்கு ஆதியைப் பத்தித் தெரியும்ல.. அவன் எவ்வளவு ரிசர்வ்டு டைப்னு. பொண்ணுங்கன்னா பத்தடி தள்ளி நின்னுதான் பேசுவான். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவன் ஃப்ரண்டா இருக்கிற ஒரே பொண்ணு தர்ஷா மட்டும்தான்..அவனுக்கு பொண்ணுங்க ஃப்ரண்ட் இருக்கறதே உலக அதிசயம், இதுல மத்ததுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை…”
“நவீன், நீங்க ஆதி சாரோட காலேஜ் மேட்டா?”
“இல்லை,ஸ்கூல் மேட், நாங்க ரெண்டு பேரும் எல்.கே.ஜி-ல இருந்து டுவெல்த் வரைக்கும் ஒன்னாதான் படிச்சோம். ஆனா காலேஜ் போகும்போது அவனோட மார்க்குக்கு அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைச்சது.. நம்ம மார்க்குக்கு லோக்கல் ஐயனார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜில தான் கிடைச்சது..” என்று அவன் முகம் வாட சொன்னவிதம் மதிக்குச் சிரிப்பை வரவழைத்தது.
நவீன் அவளைக் கண்களில் கரிசனத்துடன் பார்த்தான். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது. ஒருவேளை அவனுக்கு உடன்பிறப்புகள் இல்லாததால், ஒரு தங்கை வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கு இருந்திருக்கலாம். தனக்கு ஒரு தங்கை இருந்தால், அது மதி போலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.
தூய்மையான உள்ளம், அழகு, துறுதுறுப்பு என செல்லும் இடமெல்லாம் பாசிடிவ் எனர்ஜியை பரப்பிக்கொண்டே இருக்கும் பெண் மதி.
மிகக் குறுகிய காலத்தில், அவள் மேல் ஒரு அண்ணனுக்குரிய பாசம் அவனுக்கு வந்துவிட்டது. அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அவளது வாடிய முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை.அவன் பங்கிற்கு அவளை சற்று தேற்றிவிட்டு போனான்.நவீன் கிளம்பிப்போன பின்பு அவர்களது உரையாடலை மனதில் மீண்டும் ஓட்டிப்பார்த்தவளுக்கு, அப்போது தான் நவீன் என்ன சொல்ல வந்தான் என்பது புரிந்தது. ‘கடவுளே, அவர் ஆதி சாருக்கும் தர்ஷாவுக்கும் நடுவுல பெருசா எதுவும் இல்லைன்னு என்னைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறாரா? அந்த அளவுக்கா நான் என் உணர்ச்சிகளை வெளிப்படையா காட்டுகிறேன்?’ என்று அவள் அதிர்ந்தாள்.
“எல்லாம் இந்த ஃபெவிகால்னால வந்தது பச்க் பசக்ன்னு ஆதி சார்மேல ஒட்டிக்கறா…” என்று தர்ஷாவை முறைத்தாள்.
பார்வையாலேயே தர்ஷாவை எரித்துக் கொண்டிருந்த அந்தத் தீவிரத்தில், தன் அருகில் வந்து அமர்ந்து கையாட்டியவனை அவள் கவனிக்கவில்லை.
“ஹாய், ஹல்ல்லோ.. யாராவது இருக்கீங்களா?”
சத்தம் கேட்டு திரும்பியவள், விக்கியைப் பார்த்ததும்
“ஹாய் விக்கி..” என்றாள் சுரத்தே இல்லாத குரலில்,
“என்ன கொடுமை சார் இது.. இந்தச் சோபமில்லாத வரவேற்புக்கு அப்புறம் மானம் உள்ள எவனாவது இங்க இருப்பானா?”
“அதான் நீ இருக்கியே..” என்றாள் ஏளனமாக
“கிரேட் இன்சல்ட்.. என்னப்பண்றது ஃப்ரண்ட்ட போயிட்ட, அதனால உன்னை மன்னிக்கிறேன்..”
“இப்போ யாரு உன்கிட்ட மன்னிப்பு கேட்டா?”
“கேட்காட்டியும் மன்னிக்கிற பெரிய மனசு எங்களுக்கு இருக்கு..”
“வலிச்சாலும்.. வலிக்காத மாதிரியே சீன் போடுவியே.. சரி இப்போ என்ன வேணும் உனக்கு?”
“நான் ஏன் வந்தேன்னு அப்புறம் சொல்றேன்.. ஆனா நான் வரும்போது நீ ‘ஏதோ ஆழ்ந்த சிந்தனை’ மோடுல இருந்தியே, என்ன விஷயம்? ஏதும் சீரியஸா?” அவனது கேலியான பேச்சுக்கு பின்னால் இருந்த அக்கறைய அவளது இதயத்தை நெகிழச் செய்தது.
அவனை யோசனையுடன் பார்த்தவளின் கண்கள் குறும்பில் மின்னியது.
“அது ஒன்னும் இல்லை விக்கி, சம்பந்தமே இல்லாம யார் யாரோ வந்து என்னோட பர்சனல் விஷயத்துல மூக்கை நுழைக்கிறாங்க.. அந்த மூக்கை எப்படி கட் பண்ணிவிடலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..” என்று கேலியாக புருவத்தை உயர்த்தினாள்.
உடனே விக்கி தன் மூக்கைப் பொத்திக் கொண்டு,
“அம்மா தாயே, ஆளை விடு.. இனிமே உன்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.. என்னை ஆம்பள ‘சூர்ப்பனகை ஆக்கிடாதம்மா..” என்று அவன் பயந்தது போல நடிக்க, இருவரும் சிரித்தனர்.
மனம் விட்டுச் சிரித்தது மதியின் மனதில் இருந்த அத்தனை அழுத்தங்களையும் போக்கியது போல் இருந்தது. ‘கவலைகள் ஏதுமின்றிச் சிரிப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது? வாழ்க்கை ஏன் இந்தச் சிரிப்பைப் போல எளிமையாக இருக்கக் கூடாது?’ அவள் ஒரு பெருமூச்சு விட்டாள்.
ஆதித்யாவின் காதுகளில் அந்தச் சிரிப்பு சத்தம் குத்தீட்டியைப் போலப் பாய்ந்தது. அவன் கையில் மதிய உணவுத்தட்டுடன் அமர்வதற்கு ஒரு மேசையைத் தேடிக்கொண்டிருந்தான். மதியின் மேசைக்கு அடுத்த மேசை மட்டுமே காலியாக இருந்தது. வேறு வழியின்றி, தன் தலைவிதியை நொந்துகொண்டு, மதியை நேருக்கு நேர் பார்க்காதவாறு அவளுக்கு முதுகுகாட்டி அமர்ந்தான். அவனது அருகாமையை உணர்ந்து அவளது உடல் விரைத்தது.
“மதி..” என்று அழைத்து அவளது கவனத்தை தன்வசம் திருப்பி,
“சாட்டர்டே என்ன பிளான்?” என்று கேட்டான் விக்கி.
“என்ன பிளான்னா?”
“எங்கயாவது வெளிய போறியா?”
“இல்லை, ஏன் கேட்குற?”
“உனக்கு வேற எதுவும் பிளான் இல்லைன்னா.. நாம ஒரு மூவி போலாமா?”
“என்ன திடீர்னு.. எல்லாரையும் விட்டுட்டு என்கிட்ட கேக்குற?” என்றாள் யோசனையாக,
“ஒரு நல்ல படம் வந்திருக்கு.. உன்கூடப் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு.. இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற? நான் மேட்னி ஷோ தான் கூப்பிடுறேன்.. நைட் ஷோ இல்லை.. அவ்வளவு சீப்பாதான் நீ என்னை நினைச்சிட்டு இருக்கியா?” என்றான் அடிபட்ட குரலில்.
“ஐயோ விக்கி, நான் இப்படித் தனியா யார் கூடவும் போனது இல்லை.. அதான் ஒரு மாதிரி இருந்தது.. நான் உன்னைத் தப்பாலாம் நினைக்கல..” என்று அவசரமாக விளக்கினாள்.
அவன் சமாதானமானதாகத் தெரியவில்லை. “சரி விடு, நான் கேட்டிருக்கக் கூடாது.” அவன்முகம் டல்லடித்தது.
அவள் எதாவது சொல்வதற்கு முன், தர்ஷாவின் உரத்த குரல் அவர்கள் காதில் விழுந்தது.
“ஆதி, ‘சரி’னு சொல்லு ப்ளீஸ்..”
“நோ தர்ஷா.. எனக்கு விருப்பம் இல்லை..”
“ஏன் இப்படிச் சந்நியாசி மாதிரி இருக்க? வெளிய போய் பாரு உன் வயசுல எல்லாரும் லைஃபை எப்படி என்ஜாய் பண்றாங்கன்னு..”
“நான் இப்போ இருக்கிற விதத்திலேயே சந்தோஷமாதான் இருக்கேன்..”
“எனக்காகச் சரின்னு சொல்லு ஆதி.. நான் எவ்வளவு எக்சயிட்டடா இருக்கேன் தெரியுமா..? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம காலேஜ் ஃப்ரண்ட்ஸை மீட் பண்ணப் போறோம்.. அதுவும் மகாபலிபுரம் மாதிரி ஒரு லொகேஷன்ல… நீ கண்டிப்பா வரணும்..”
“நீ வேணா போ.. என்னை ஏன் கம்பல் பண்ற? எனக்கு பார்ட்டிலாம் பிடிக்காது..”
“முடியாது.. உன்னோட எந்த சாக்குப்போக்கையும் நான் கேட்க மாட்டேன்.. சனிக்கிழமை காலைல 10 மணிக்கு ரெடியா இருப்பேன்.. நீ வந்து என்னைப் பிக்-அப் பண்ணிக்கிற. ஜி.ஆர்.டி ரிசார்ட்ல ஃப்ரண்ட்ஸை மீட் பண்றோம். நைட் பார்ட்டி அட்டெண்ட் பண்ணிட்டு, நாளைக்கு காலைல 10 மணிக்கெல்லாம் திரும்பிடலாம்.. நீ வந்தே ஆகணும்.. அவ்வளவுதான்.. முடிவு எடுத்தாச்சு, இதைப் பத்தி இனிமே பேச்சில்லை..”
அவளது அடாவடியான பேச்சைக் கேட்டு மதியின் உடல் முழுவதும் பொறாமையில் எரிந்தது.
‘பார்ட்டி அட்டெண்ட் பண்றாங்களாம்.. அதுவும் அந்த ஒட்டுண்ணி கூட நைட் ஸ்டே வேற..’
அவளது ஒவ்வொரு நரம்பிலும் கோபம் ஊடுருவியது. ஆத்திரத்தில் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“விக்கி.. நான் வர்றேன்.. நாம மூவி போலாம்,” என்று உறுதியான குரலில் சொன்னாள் மதி.
தொடரும்..
error: Content is protected !!