Skip to content
Post Views: 39
ரிதம் 23
அது இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடுதான். ஆனாலும், மகள்களோடு தாயும் ஒன்றாக ஒரே அறையில்தான் படுத்துக்கொள்வார்.
Advertisement
ராகினிக்குத் தமக்கையிடம் பேச வேண்டும். அறையில் பேச முடியாது. ‘பிறகு என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவள்,
“கொஞ்ச நேரம் மொட்டை மாடியில இருந்துட்டு வரலாமா அக்கா? காத்து வாங்கணும் போல ஆசையா இருக்கு. ரொம்ப வெக்கையா வேற இருக்கு” என்றாள்.
Advertisement
Advertisement
“இன்னைக்கு எதுக்குச் சின்னக்குட்டி? காலைல இருந்து வேலை அதிகம். நாளைக்கு அவள் அகாடமி போகணும், கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கட்டுமே?” என்றார் புஷ்பவல்லி.
“நான் கூடத்தான் வேலை செஞ்சேன்? என்னமோ உங்க பெரிய பொண்ணு மட்டும்தான் வேலை செஞ்ச மாதிரி சொல்றீங்க?” — அவ்வப்போது அவள் இழுக்கும் வம்புப் பேச்சுதான் இது.
Advertisement
“அதுக்குச் சொல்லலடி” என்று புஷ்பவல்லி எதையோ கூற வர.
“அம்மா, நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன். எனக்குமே காத்து வாங்கணும் போல இருக்கு” என்று நத்தாஷா தாயை அடக்கிவிட்டாள்.
பிறகு சகோதரிகள் இருவரும் மொட்டை மாடியை நோக்கிச் சென்றனர்.
“முதல்லயே சொல்லி இருந்தா ப்ரீத்தியையும் கூப்பிட்டிருக்கலாம்” என்றாள் நத்தாஷா.
‘கெட்டுச்சு போ!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், வேண்டுமென்றேதான் ப்ரீத்தி சென்ற பிறகு இந்தக் கோரிக்கையை வைத்தாள்.
“அக்கா, அவங்க கல்யாணமானவங்க. நைட்டு உங்க கூடப் பேசிட்டிருந்தாங்கன்னா, அப்புறம் அண்ணனை யார் கவனிக்கிறது?” — அவள் என்னமோ சாதாரணமாகத்தான் பேசிவைத்தாள்.
ஆனால், அது சுருக்கென்று தைத்தது நத்தாஷாவிற்கு. தான் கவனிக்காத ஒன்றைத் தங்கை கவனித்துக் கூறுகிறாள். இனி பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்; தன் தோழி தனக்கு மட்டும் தோழியல்ல, ஒரு குடும்பத்தின் தலைவி. கணவனை, மாமனாரைப் பார்த்துக்கொள்ளும் பெரிய பொறுப்பு இருக்கிறது.
“போன வாரத்துல ரமேஷ் அண்ணனோட அப்பா பேசினதை நான் கேட்டேன். ‘அதுதான் இத்தனை மாசம் ஆயிடுச்சே, நத்தாஷா தனியா போய்க்க மாட்டாளா? நீயும் கூடப் போய்த்தான் விட்டுட்டு வரணுமா? என் காலம் முடியறதுக்குள்ள ஒரு பேரனையோ பேத்தியையோ பாக்கணும்னு ஆசையா இருக்குமா’ன்னு சொன்னாரு.”
அதிர்வுடன் தன் தங்கையைப் பார்த்தவள், “அப்புறம் ப்ரீத்தி என்ன சொன்னாள்? அங்கிள் கோவப்பட்டாங்களா”? என்று தவிப்பாகக் கேட்டாள்.
‘தன்னால் தன் தோழிக்கு பிரச்சனையா? தன்னால் அவர்களின் திருமண வாழ்க்கையோ அல்லது குழந்தை பிறப்போ பாதிக்கப்படக்கூடாது’ என்று மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டாள்.
“’இன்னும் கொஞ்ச நாள் போயிட்டு வரேன் மாமா. நாங்களும் குழந்தைக்குப் பிளான் பண்ணிட்டுத்தான் இருக்கோம்’னு சொன்னாங்க. ஆனா அங்கிள் என்ன சொன்னாங்க தெரியுமா? ‘குழந்தைக்குப் பிளான் பண்றவங்க இதுபோல டிராவல் பண்ணக் கூடாது’ன்னு சொன்னாரு. அவர் சொல்றதும் எனக்குச் சரிதான்னு பட்டுச்சு. அம்மாவுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க, அதான் உங்க காதுல போட்டுவைக்கலாம்னு நினைச்சேன். உங்களுக்கு இப்பத் தனியா போகத் தெரியும் தானே அக்கா”? என்று கேட்டு வைக்க. அவள் தனியாகப் போக வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டாள்.
ராகினி தமக்கையை மேலே அழைத்து வந்தது கௌதமைப் பற்றிப் பேசுவதற்காகத்தான். ‘அவர் எப்படிப்பட்டவர்? தமக்கையிடம் எப்படிப் பேசுவார்? மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்? கேர்ள் ஃபிரண்ட் யாராவது இருக்கிறார்களா?’ — இதுபோல இன்னும் பல கேள்விகளை அவள் கேட்டுக்கொண்டிருக்க, நத்தாஷா எந்த விகற்பமும் இல்லாமல் பதிலளித்துக்கொண்டிருந்தாள்.
அவளும் சாதாரணமாகக் கேட்க, இவளும் தனக்குத் தெரிந்ததைச் சாதாரணமாகக் கூறினாள். கேட்ட வரையில் எந்தச் சந்தேகமும் ராகினிக்கு ஏற்படவில்லை. அவன் தவறானவனாக இருப்பானோ என்ற பிம்பத்தைக் கூட நத்தாஷாவின் பேச்சு கலைத்திருந்தது. ‘பிறகு அவன் பார்வையின் அர்த்தம் என்ன? பேச்சின் பொருள் என்ன?’ என்று புரியவில்லை ராகினிக்கு.
“எதுக்கும் கவனமா இருங்க அக்கா. எல்லாரையும் நம்பிடாதீங்க. ஆம்பளைங்க எப்பத் தங்கள் நிறத்தை மாத்துவாங்கன்னு சொல்ல முடியாது. பெரும்பாலும் நம்ம மனசை உடைக்கிறது, நாம நம்பிக்கை வச்சிருக்கிற ஆளுங்கதான்” என்றாள் ராகினி.
“நீ யாரைச் சொல்ற?” என்று யோசனையாக நத்தாஷா கேட்க,
“நான் யாரையும் சொல்லல அக்கா, பொதுவாத்தான் சொல்றேன். ஆம்பள துணை இல்லாம இருக்கிறவங்களை டார்கெட் பண்ணுவாங்க. இது நம்ம ஊரும் கிடையாது, நாம சென்னைக்கு புதுசு. ரெண்டு பொண்ணுங்க மட்டும்தான், அதுவும் ரெண்டு பேரும் அழகா இருக்கோம். கவனமா இருக்க வேண்டியது நம்மளோட கடமை தானே?” என்ற தங்கையை ஆதுரமாகப் பார்த்தாள் நத்தாஷா.
“நீ காலேஜுக்குப் போகும்போது நான் சொன்ன அதே டயலாக்கை எனக்கே நீ திருப்பி அடிக்கிறியா? சரிங்க மேடம், நாங்க கவனமா இருந்துக்குறோங்க மேடம்” என்று வாயில் கையை வைத்துப் பவ்யமாக நத்தாஷா சொல்ல, சகோதரிகள் இருவருக்குமிடையே சிரிப்பலை பரவியது.
தமக்கையிடம் பேசியாகிவிட்டது; ‘பிறகு, ப்ரீத்தி அக்காவிடம் போட்டு வாங்க வேண்டும்’ என்று மனதிலும் கணக்குப் போட்டபடிதான் அன்று உறங்கச் சென்றாள் ராகினி. முதலில் கௌதமைப் பார்த்த ஆர்வம், சந்தோஷம் எல்லாம் வடிந்து, இப்பொழுது ஆராயும் மோடிற்குச் சென்றிருந்தாள் ராகினி.
‘இனி அக்காவுக்கு ஒரு துரோகம் நடக்க நான் விடமாட்டேன். இந்தக் குடும்பம் மட்டுமில்ல, அக்காவும் என் பொறுப்பு. அவர் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிப்பேன். நல்லதா இருந்தா நானே முன்ன நின்னு நடத்தி வைப்பேன். அப்படி இல்லனா திரும்பவும் அக்காவை இந்த இடத்துல இருந்து கூட்டிட்டுப் போயிடுவேன்’ என்று தனக்குள் ஆயிரம் சங்கல்பங்களை எடுத்துக்கொண்டாள் ராகினி. தன் தந்தையிடம் மானசிகமாகப் பேசினாள்.
அடுத்து வந்த வாரங்களில், நத்தாஷா என்றெல்லாம் அகாடமி செல்கிறாளோ, அன்றெல்லாம் ‘என்ன நடந்தது?’ என்று சாதாரணமாக கேட்பது போல விஷயங்களைக் கறந்து விடுவாள். முதலில் நத்தாஷாவிற்குப் புரியவில்லை.
“கௌதம் சாரைப் பாத்து ரொம்ப ஜொள்ளுவிடுற, இது சரி கிடையாது. அவங்க நமக்குக் கடவுள் மாதிரி, நமக்கு வாழ்க்கை கொடுத்தவங்க. அவங்க வாழ்க்கையில நாம விளையாடக்கூடாது. அவங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. இன்னைக்கு ‘வீட்டுக்கு வாங்க’ன்னு கூப்பிடுறவங்க, ‘வரவே வராதீங்க’ன்னு தலை மேல கை எடுத்து கும்பிடு போடுவாங்க. ஜாக்கிரதை ராகினி, ஏதும் ஆசையை வளத்துக்காதே. அவங்களோட ஸ்டேட்டஸ் வேற, நம்மளுடையது வேற” என்று தங்கைக்கு அறிவுரைகள் கூறிக்கொண்டிருந்தாள்.
“ச்சேச்சே, அப்படி எல்லாம் இல்ல. பார்க்காத போது பிரமிப்பா இருந்துச்சு. அவர் நம்ம வீட்டுக்கு வந்து சகஜமா பேசி, பழகிப் போயிட்ட பிறகு அந்தப் பிரமிப்பு உடைஞ்சிடுச்சு. அதனால இப்ப அவர் மேல எந்தக் கிரேஸும் இல்ல. பட், உங்களுக்கு அகாடமி சேஃபா இருக்கா? யாராலும் எதுவும் பிரச்சனை வரலையான்னு ஒரு சின்ன என்குயரி அவ்வளவுதான்” என்றாள் ராகினி.
“என்குயரியா? என்னோட சேஃப்டிக்கா?” என்று யோசனையாகப் புருவங்களை இடுக்கினாள் நத்தாஷா.
“ஆமா, அப்பா என் கனவுல வந்தாரு. ‘பொண்ணு வாழ்க்கையை நான் பாழாக்கிட்டேன். இனிமே உன் அக்கா உன் பொறுப்பு. அவளை நல்லபடியா பார்த்துக்கோ, அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடு, அவளைப் பாதுகாப்பா பார்த்துக்கோ’ன்னு…” என்று அவள் முடிப்பதற்கு முன்னால் இடைப்புகுந்தாள் நத்தாஷா.
“நல்ல வாழ்க்கையா”? என்று கேள்வியாக நிறுத்தினாள்.
“அது… அது வந்து… நல்ல வாழ்க்கைனா சந்தோஷமா வாழ்வது. அதுல எந்தப் பிரச்சனையும் வராம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. உனக்கு அண்ணன்-தம்பி இல்லைன்னு வருத்தப்படாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமைதான்” என்று அவள் எதையோ கூறிச் சமாளித்தாள்.
புன்னகையோடு தங்கையைப் பார்த்தவள், “நான் இப்பயும் சந்தோஷமாத்தான் இருக்கேன். என் வாழ்க்கை இப்போதான் சரியான நேர்கோட்டில் என்னுடைய இலக்கை நோக்கிப் போகுதுன்னு தோணுது. எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல், இந்த நிமிஷத்தை உணர்ந்து சந்தோஷமா வாழுறேன். என் கூட இருக்கிறவங்களும் எல்லாம் நல்ல மாதிரிதான் தோணுது. இதுவரைக்கும் எனக்கு யாரையும் சந்தேகிக்கத் தோணல. அதுக்குக் காரணம் கௌதம் சாரோட கட்டமைப்பாவும் இருக்கலாம், அங்க எல்லாரும் நல்லவங்களாத்தான் இருக்கிறாங்க” என்று சொன்னவளின் மனதினுள் கௌதமின் பார்வையும் தலையசைப்பும் வந்து சென்றது.
சிறிது நாட்களாக அவன் பார்வைக்கும், பேச்சுக்கும், செயல்களுக்கும் அவள் காரணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறாள். ‘அது தேவையில்லாதது’ என்று பல நேரங்களில் ஒதுக்கி வைக்கிறாள். அவனாக அவளைத் தேடி வந்து பேசுவதில்லை. அவர்கள் சந்தித்துக்கொள்வது சொற்ப நேரங்களே என்றாலும், அந்த நேரங்களில் ஏதோ அவன் பூடகமாகப் பேசுவது போலத் தோன்றுகிறது. ஆனால், அவன் பார்வையில் கண்ணியம் நிலைத்திருப்பதால், அவளால் அவனைச் சந்தேகிக்கத் தோணவில்லை. தன் மனம்தான் குழம்பிய குட்டையாக எதையோ சிந்தித்து புலம்புகிறது என்று தன்னைத்தானே அடக்கிக்கொண்டாள்.
தங்கை தன்னையே ஆழப் பார்த்துக்கொண்டிருப்பது புரிய, தன்னை மறைத்துக்கொண்டு புன்னகை பூத்தாள் தங்கையிடம்.
“எல்லாம் இப்பச் சரியிருந்தாலும் பின்னாடி ஏதாவது பிசகு நடக்கலாம். நான் சேஃப்டிக்குத்தான் கேக்குறேன். என் செல்ல அக்கா எதையும் மறக்காமல் என்கிட்ட சொல்லணும்” என்று தமக்கையின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியபடி கூறினாள்.
அவளும் சரி என்று சம்மதம் சொன்னாள்.
……
சொன்னது போல அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை பதினோரு மணியைப் போலக் கௌதம் வீட்டுக்குக் கிளம்பினார்கள். விருந்தோம்பும் விதமாகப் பழங்கள், பூக்கள் என்று வாங்கிக்கொண்டு அங்கு சென்று சேரும்போது பன்னிரண்டு மணியைக் கடந்துவிட்டிருந்தது.
எப்பொழுதும் போல வாசலுக்கே வந்து வரவேற்றார் மகாலட்சுமி. அவனும் கேஷுவலில் இருந்தான்.
அனைவருக்கும் முன்பாக இறங்கிச் சென்று, அவன் முன்பாக நின்று கைகளைக் குலுக்குவதற்காக நீட்டினாள் ராகினி. ‘ஆர்வக்கோளாறு’ என்று நினைத்தவன் அவள் வலக்கையைப் பற்றினான். ஆனால், அது ஆர்வக்கோளாறல்ல, ஆராயும் கோளாறு என்று பின்னாளில் தெரிந்து கொள்வான்.
உபசரிப்புக்குப் பிறகு சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, அதன் பிறகு இரண்டு மணி போலத்தான் சாப்பிடச் சென்றார்கள். கலகலப்பான பேச்சுக்களோடு சாப்பாடு பரிமாறப்பட, “ஐயோ நீங்க உக்காருங்க சார், நான் பரிமாறுறேன்” என்றபடி எழுந்து நின்றாள் நத்தாஷா.
“உங்க வீட்ல நீங்கதானே மேடம் பரிமாறுனீங்க? அப்ப இந்த வீட்டுல நான் தானே பரிமாறணும்? விருந்தோம்பல் மேடம்” என்று அவன் பாவனையாகக் கூற, அதற்கு மேல் அவளும் சங்கடமாக அமர்ந்துவிட்டாள். அவன் என்னமோ விளையாட்டு போலத்தான் கூறினான், ஆனால் அவ்வளவு உயரத்தில் இருப்பவன் எந்தக் கூச்சமும் இல்லாமல் தங்களுக்குப் பரிமாறுகிறானே என்று ஆச்சரியமாக அவனைப் பார்த்தனர்.
உணவு வேளையும் நன்றாகவே சென்றது. ரமேஷின் குடும்பத்திற்காகவே தடபுடலாக நான்வெஜ்ஜும் செய்யப்பட்டிருந்தது. தாயும் இரு மகள்களும் ஒரு புறம் அமர்ந்துகொள்ள, அவர்கள் மூவரும் மறுபுறம் அமர்ந்துகொள்ள, இவர்கள் இருவரும் பரிமாறிவிட்டு, அந்த இரு குடும்பத்திற்கும் இடையில் எதிரெதிரே அமர்ந்தார்கள்—அப்போதுதான் அவ்வப்போது மற்றவர்களுக்குப் பரிமாற முடியும் என்று.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த வீட்ல இந்த டைனிங் டேபிள் நிரம்பியிருக்கு. இவன் அகாடமியை அங்க மாத்தின பிறகு இங்க ஆளுங்க வர்றதே குறைஞ்சிடுச்சு. எனக்கும் போரடிக்க ஆரம்பிச்சிருச்சு, சமைக்கிறதுக்கும் சலிப்பா இருந்தது. மதியத்துக்குச் சமைச்சு இவனுக்கும் இவங்க அப்பாவுக்கும் கட்டிக் கொடுத்துட்டு நான் அங்க வீட்டுக்குப் போயிடுவேன்” என்று மகாலட்சுமி லகுவாகக் கூறினார்.
“எப்படி மேடம் ரெண்டு வீட்டையும் சமாளிக்கிறீங்க? ஒரு வீட்டைப் பாத்துக்குறதுக்கே மூச்சு தள்ளுது. அதுவும் இவ்வளவு பெரிய வீடு வேற, நாக்கே தள்ளிடுமில்ல”? என்று ப்ரீத்தி கேட்க,
“உங்க வீட்டுக்கு வரும்போது ஆண்ட்டி, இந்த வீட்டுக்கு வந்தா மேடமா? ஆண்ட்டினே கூப்பிடு, அதான் ஒன்னுக்குள்ள ஒண்ணா பிரண்ட்ஷிப் ஆயிட்டோம்ல?” என்று கண்சிமிட்டினார் மகாலட்சுமி.
“அது கௌதம் சார் நல்லா பேசிப் பழகினதனால உங்ககிட்டயும் வீட்ல சகஜமா பழக முடிஞ்சுது. அதேபோல அங்க நீங்க வரும்போது பெருசா எதுவும் வித்தியாசம் தெரியல, ஒன்னுக்குள்ள ஒண்ணா தோணுச்சு. அதனால ஆண்ட்டியும் சகஜமா வந்துருச்சு. இந்த வீட்டைப் பார்த்தவுடனே தானாவே மேடம் வருது” என்று இளித்து வைத்தாள் ப்ரீத்தி.
“அது எப்படி வரலாம்? இனிமே வரக்கூடாது” என்று கண்டிக்கும் விதமாகக் கூறினார்.
அந்த உணவு வேலை மட்டுமல்ல, அதன் பிறகும் அவர்களின் நேரம் கலகலப்பாகவே சென்றது. முன்பே பேசிப் பழகியதால் அனைவருக்கும் அவர்களுடன் சகஜ நிலை ஏற்பட்டது. ராஜேஷ் மட்டும்தான் சற்றுச் சங்கடமாக இருந்தார். ‘பெரிய வீடு, பணம் படைத்தவர்கள்; என்னதான் இலகுவாகப் பழகினாலும், தாங்கள் தங்கள் நிலையில் இருப்பது நல்லது’ என்று நினைத்தார். அதனால் சற்று ஒதுக்கம் காட்டினார்.
“உங்க வீடு அழகா இருக்கு ஆண்ட்டி” என்று ராகினி கூற,
“வீடு மட்டும்தானா? வீட்ல இருக்க மனுஷங்க இல்லையா”? என்று வம்பிழுத்தான் கௌதம். பெண்களின் பார்வையை புரியாதவன் அல்ல அவன். ஆனால் அப்படி ஒரு பார்வையை நத்தாஷா பார்க்க மாட்டாளா? என்ற ஏக்கம் அவனுக்குள் இப்பொழுது அதிகரித்திருந்தது. அவன் பார்த்த பெண்களில் வித்தியாசமான பெண் அவள் மட்டும் தான்.
“ஐயோ, உங்க அம்மாவைப் போலத்தான் நீங்க இருக்கீங்க, உங்களைப் போலத்தான் உங்க அம்மா இருக்காங்க. ரெண்டு பேரோட அழகைப் பத்திச் சொல்றதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு? அப்படியே நான் ஏதாவது குற்றம் குறையா சொன்னா உங்க ரசிகர்கள் என்னை விட மாட்டாங்க” என்று அடக்கி வாசித்தாள் ராகினி.
“உங்க வீட்ல பேச்சு வேற விதமா இருந்தது, இங்க வந்ததும் வேற விதமா இருக்கு. என்ன ஆச்சு ராகினி”? என்று சகஜமாகக் கேட்டுவிட்டான் கௌதம்.
அந்த வீட்டில் அவள் அவனை ஆர்வமாகப் பார்த்தாள், இந்த வீட்டில் அவனை அவள் ஆராய்ச்சியாகப் பார்க்கிறாள். அதை ‘அவன் கண்டுகொண்டு விட்டானோ?’ என்று பரிதவிக்க, அது அவள் முகத்தில் தெரிய, அதையும் அவன் கண்டுவிட்டான்.
“ராகினி, நீ ஆர்வமா வீட்டைப் பார்க்கிறாய். உனக்கு வீட்டைச் சுத்திக் காட்டவா”? என்று கேட்டு வைத்தான் கௌதம்.
ஆர்வக்கோளாறில் ‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டாள் ராகினி. பிறகு, “நான் மட்டுமா?” என்று கேள்வி எழுப்பினாள்.
“அவங்க எல்லாம் ஏற்கனவே பார்த்திருக்காங்க. ரமேஷ் பார்த்ததில்லை. ரமேஷ், நீங்களும் வர்றீங்களா?” என்று கேட்டான் கௌதம்.
அவனும் ப்ரீத்தியும் எழுந்துகொள்ள, மூவரையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
அந்தப் பெரிய அறையினுள்ளே நுழைந்ததும், ஆர்வமாக ஒவ்வொரு இன்ஸ்ட்ருமென்ட்டாக ரமேஷ் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அகாடமியை அங்க மாத்திட்ட பிறகும் ரூமை அப்படியே வச்சிருக்கீங்களே சார்? இங்கேயும் கம்போசிங் பண்ணுவீங்களா”? என்று ஆர்வமாகக் கேட்டாள் ப்ரீத்தி.
“இது என்னோட ஃபேவரட் ரூம் ப்ரீத்தி. என்னோட ஆதி, அந்தம் எல்லாமே இங்கதான். என்னோட மூச்சு இருக்கிற வரைக்கும் நான் இங்க கம்போசிங் பண்ணுவேன். இதை நான் செட்டப் பண்ணும்போது நான் மட்டும்தான் இந்த ரூமை உபயோகிச்சேன். அப்பப் பொருளாதாரம் கொஞ்சம் இடிச்சதுனால மத்தவங்களை இதுல சேர்த்துக்கிட்டேன். இப்பத் தனியா ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் என்னோட வேலை இங்க தொடர்ந்து கிட்டேதான் இருக்கு. அம்மா போயிட்ட பிறகு மேக்ஸிமம் ஒரு மணி வரைக்கும் இங்கதான் இருப்பேன். கம்போசிங், லிரிக்ஸ் எல்லாமே இங்கதான் எழுதுவேன்” என்றான் கௌதம்.
கணவன் மனைவி இருவரும் ஒரு பக்கம் நின்று பியானோவில் கையை வைத்து வாசிக்கத் தெரியாமல் வாசித்துக் கொண்டிருக்க, ட்ரம்ஸ் அருகில் நின்று கொண்டிருந்தாள் ராகினி.
அவளை நோக்கிச் சென்றவன், அவள் அருகில் நின்று சிறு குரலில், “வாட்ஸ் ஈட்டிங் யூ ராகினி? போன வாரம் பார்வையிலிருந்த பாஷை வேறயாகவும், இப்ப ஆராய்ச்சியாவும் இருக்கு? மனசுக்குள்ள எதையும் வெச்சு குழப்பிக்காத. எதுவா இருந்தாலும் ஸ்ட்ரெயிட்டா டீல் பண்ணு” என்று கேட்டுவிட்டான்.
அவள் திகைத்து விழித்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல சார். நீங்க ஏதோ தப்பா எடுத்துக்கிட்டீங்க” என்று அவள் எதையோ கூறிச் சமாளித்தாள்.
“உன்னை விட எனக்கு மனுஷங்களைப் பத்தி அனுபவ அறிவு கொஞ்சம் அதிகம்தான் ராகினி. அத்தனை ஏற்ற இறக்கங்களை தாண்டி, அத்தனை மனிதர்களைக் கடந்து வந்திருக்கேன், பார்வையோட அர்த்தங்கள் புரியாம இல்ல. ஆனா, உனக்கா சொல்லணும்னு தோணும்போது சொல்லு, நான் கம்பெல் பண்ண மாட்டேன். இல்ல என்கிட்ட கேட்கணும்னு தோணும்போது கண்டிப்பா என்கிட்ட கேட்கலாம். நீ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல நான் காத்துட்டிருக்கேன்” என்று கூறிவிட்டு அகன்றுவிட்டான். அவள் வாய்ப்பிழந்து நின்றாள்.
‘என்னிடம் பேசுவதற்காகத்தான் மேலே அழைத்து வந்தாரா?’ என்ற சந்தேகம் கூட எழுந்தது அவளுக்கு.
error: Content is protected !!