Skip to content
Post Views: 191
அத்தியாயம் 24
எழிலரசி தனது தினப்படி வேலைகளை செய்து கொண்டிருந்தாலும், ரத்னாவின் ஊருக்கு எப்படி செல்வது என்று ஒரு பக்கம் யோசித்து கொண்டே இருந்தாள்.
Advertisement
இதற்கிடையில் கார்த்தியின் பரீட்சையும் முடிந்து விட்டது. கார்த்தியின் பரீட்சை முடிந்து, காம்ப்ஸ்சில் சென்னையிலே பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலையும் கிடைத்திருந்தது.
வேலையில் சேர இன்னும் ஒரு மாதம் இருந்த நிலையில், கார்த்தியை வற்புறுத்தி அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான் ருத்ரான்ஷ். அது லக்னோவ் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். அங்கே செல் போன் சிக்னல் சரியாக கிடைக்காது என்று செல்லும் முன்பாக ரத்னாவிடமும் எழிலிடமும் கூறியே சென்றிருந்தான்.
Advertisement
Advertisement
அன்று இரவு ரேவதி அடுப்படியை ஒதுங்க வைத்து கொண்டிருக்கையிலே எழிலும் தமிழும் தூக்கம் வருவதாக கூறி உள்ளே சென்று விட்டனர்.
“என்ன எழில் யோசனை எல்லாம் பலமா இருக்கு?” என்று ஆரம்பித்தாள் தமிழ்.
Advertisement
“அது நான் சொன்னேன் இல்ல, ரத்னா ஆன்ட்டி வீட்டுக்கு போகணும்னு.. அதை பத்தி தான். கார்த்தி வேற அடுத்த வாரம் வந்துடுவான். அவன் வரதுக்குள்ள போய்ட்டு வந்துடலாம்னா ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குது”
“பேசாம உங்க கல்யாண பத்திரிக்கை கொடுக்க கூட்டிட்டு போயிடு.. இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு யோசிக்கிற?”
“என்னை மாட்டிவிடாம நீ அடங்கவே மாட்ட போல..” என்று தலையணையை கொண்டு இரண்டு மொத்து மொத்தினாள்.
உள்ளே இருவர் பேச்சு சத்தமும் கேட்கவே,
“சும்மா தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு ரெண்டு கழுதையும் உள்ளே போயிடுச்சுங்க. என்னத்தை தான் குசுகுசுன்னு பேசுவாங்களோ.. ஒருத்தியாவது ஒரு ஹெல்ப் செய்றாளுங்களா? நானே தான் எல்லாம் செய்யணும் இந்த வீட்ல” என்று ரேவதி புலம்புவது கேட்கவும், இருவரும் கப்சிப் என தூங்குவதை போல கண்களை இறுக்க மூடி கொண்டார்கள்.
“விடு ரேவ்ஸ்.. சின்ன பிள்ளைங்க தானே. அவங்களுக்கு எதுக்கு வேலை சொல்ற? நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் தானே பிரீயா இருக்க முடியும்? நான் ஹெல்ப் பண்றேன் இப்ப” என்று ஆஜர் ஆனார் சரவணன்.
“உங்களுக்கு பாத்திரம் எல்லாம் கழுவ தெரியுமா? வந்துட்டார் வக்காலத்து வாங்கிட்டு” என்று சிடுசிடுத்தார்.
“நான் ஹோட்டல்காரன்டி, எனக்கு பாத்திரம் கழுவ தெரியாதா? இப்ப பாரு” என்று சிங்கில் இருந்த பாத்திரத்தை எடுத்து கழுவ ஆரம்பித்தார்.
“பார்றா.. இந்த பிரகாஷ் பொண்ணு வேலை செய்யும்போது எல்லாம் ஸ்பூனை கூட நகர்த்த தெரியாத ஹோட்டல்காரருக்கு அவர் பொண்ணுங்களை வேலை செய்ய சொன்னதும் தானே பாத்திரம் கழுவ தெரியும்னே எனக்கு தெரியுது?”
‘ஃபுல் பார்ம்ல இருக்கா போலவே’ என்று அமைதியாக பின் வாங்கிவிட்டார் சரவணன்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலை செய்வது ரேவதி மனதிற்கும் கொஞ்சம் இதமாக இருக்கவே அதன் பிறகு அவரும் இடக்கு மடக்காக பேசாமலே அமைதியாகவே எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தார்.
“அப்புறம் உங்க அண்ணாவும் கூட அங்க சாந்தி அக்காவுக்கு ஒத்தாசையா இருக்காங்களாம். நேத்து பேசும்பொழுது சந்தோஷமா சொன்னாங்க தெரியுமா?”
“எங்க அம்மா எங்களை அப்படி தங்கமா வளர்த்து இருக்காங்க ரேவ்ஸ். என்ன உங்களுக்கு எல்லாம் புரிஞ்சுக்க தான் நாள் ஆகுது”
“அடேங்கப்பா! பார்த்து.. தங்கம் விக்குற விலையை பார்த்து வெயிட்டா இங்க மூனு தங்க மூட்டைங்க இருக்குன்னு அண்ணன் தம்பி மூனு பேரையும் ஆள் வச்சு கடத்திட போறாங்க”
“ஹா ஹா.. அதுவும் சரி தான்.. சரி, தங்கம் இந்த விலை விக்குதே, உங்க கடையில இப்பவும் வியாபாரம் எல்லாம் பழைய மாதிரியே நடக்குதா என்ன?”
“வியாபாரத்துக்கு என்னங்க.. அது எல்லாம் நடக்குது தான். வாங்குறவங்க வாங்கிட்டு தானே இருக்காங்க”
“பெரிய மாமா இல்லாம ஹோட்டல்ல கஷ்டமா இருக்கா?”
“அண்ணன் இல்லாம ஒரு மாதிரி இருக்கு தான். ஆனா வேலை எல்லாம் சமாளிச்சிடறோம். பாலு இப்பலாம் நிறைய பொறுப்பா பார்த்துக்கிறான். எழில் கூட ஒத்தாசையா இருக்கு ரேவதி”
இருவரும் பேசிக்கொண்டே வேலைகளை முடித்து விட்டனர்.
“ஏங்க உங்களுக்கு பிடிக்குமே சுக்கு மல்லி காஃபி.. போடட்டுமா?” என்றார் ரேவதி கிசுகிசுப்பான குரலில்.
“இப்ப தானே வேலை எல்லாம் முடிக்கிற.. திரும்ப எதுக்கு வேலையை இழுத்து விட்டுக்கிற?” என்றார் சரவணன் களைப்பாக இருந்த மனைவியின் முகத்தை பார்த்து.
“நம்ம ரெண்டு பேரும் மட்டும் தனியா நைட் காஃபி குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு தானே..”
“சரி அப்ப நான் போட்டு கொண்டு வரேன் நீ ரூமுக்கு போ..”
“இல்ல நீங்க போடுங்க.. நான் இங்கவே கூட இருக்கேன்..” என்று அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்து கொண்டார்.
“பிள்ளைங்க தூங்கி இருப்பாங்கள்ல?” என்றார் சரவணன் இப்பொழுது ரகசிய குரலில்.
“அது எல்லாம் பேசாம ரெண்டு நிமிஷம் கண்ணை மூடினா ரெண்டும் தூங்கிடும்..”
“அப்படியே உன்னை மாதிரின்னு சொல்லு”
“உக்கும் ரொம்பத்தான், அது என்ன மிளகு எடுக்கறீங்க?”
“உனக்கு சளி பிடிக்கிற மாதிரி இருக்கு.. அதான் சிடுசிடுன்னு இருக்க.. ரெண்டு மிளகும் சேர்த்து தட்டி போட்டா, குடிக்கவும் நல்லா இருக்கும் உனக்கும் சளியும் பிடிக்காது பாரு?”
“என்னங்க.. நீங்க தானா இது? நம்பவே முடியலையே?”
“நான் வேணா உன்னை கிள்ளி காட்டவா?” என்றார் சரவணன் ஒற்றை கண்ணை அடித்து கொண்டே.
“ஆசை தான் போங்க.. அப்புறம், எங்க கடையில நாம போடற நகை சீட்டு இந்த மாசத்தோடு முடியுதுங்க.. எழிலுக்கு நகை கொஞ்சம் வாங்கிடலாம்.”
“இந்த வருஷம் தமிழுக்கு தானே?”
ஆம், பெண் பிள்ளைகளை பெற்ற பொறுப்பான பெற்றோர்கள் இருவரும்.
மாதம் மாதம் நகை சீட்டு ஒன்றை ரேவதி போட்டுவிடுவார். ஒரு வருடம் எழிலுக்கு எடுத்தால், ஒரு வருடம் தமிழுக்கு.
“இல்ல, ஒன்னு ரெண்டு வருஷத்துல எழிலுக்கு கல்யாணம் வந்துடும். அவளுக்கு வாங்கிடலாம். அதுக்கு அப்புறம் தமிழுக்கு தானே?”
“நீ யோசிச்சு தான் சொல்லுவ ரேவதி. இது எல்லாம் என்னை விட உனக்கு தான் நல்லா தெரியும். நீ சொல்ற மாதிரியே செஞ்சுடலாம்”
“அப்ப நாளைக்கு ஈவினிங் கடைக்கு நீங்களும் பிள்ளைகளும் வந்திடுங்க..”
“சரி மேடம், உத்தரவு..”
பேச்சு ஒரு பக்கம் சென்றாலும் சரவணன் கை அழகாக வேலைகளை செய்தது.
மல்லியை லேசாக வறுத்து, அதனுடன் மிளகு, சுக்கு சேர்த்து மூன்றையும் சிறிய கல்லுறலில் நன்றாக தட்டி, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த நீரில் போட்டு கொதிக்கவும், பனங்கற்கண்டு கொஞ்சம் சேர்த்து, பின் வடிகட்டி இரண்டு டம்ளர்களில் ஊற்றினார்.
இருவரும் எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றார்கள்.
திருமணமான புதிதில், மறுவீட்டின் பொழுது, ரேவதி அம்மா வீட்டில் சாப்பிட்ட அசைவ விருந்து சேராமல் அன்று இரவு சிரம பட்டார் சரவணன். இரவு நேரத்தில், ரேவதியின் அம்மா பக்குவம் கூற, ரேவதி சுக்கு மல்லி காஃபியை போட்டு சரவணனுக்கு கொடுத்தார். இருவரும் அவர்கள் வீட்டு தோட்டத்தில் தனியாக அமர்ந்து அதை குடித்தனர்.
முதன் முதலாக ரேவதி அவர் கையால் கணவருக்கு செய்து, இருவரும் முதன் முதலாக தனிமையில் குடித்த சுக்கு மல்லி காஃபி எப்பொழுதுமே இருவருக்கும் ஸ்பெஷல் தான்…
—————-
error: Content is protected !!