Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ.. Epi 21

 

விழி கொல்லும் விஷமா நீ..

Episode 21



Advertisement

 

“அவன் பாட்டுக்கு மீட்டிங் அர்ரேன்ஞ் பண்ண சொல்லிட்டான், இடையில ஹோட்டல் கான்ட்ரேக்ட்டுக்கு சம்பந்தப்பட்ட ஆளுங்ககிட்ட பேசவும் சொல்றான். எனக்கென்ன பத்து தலையா இருக்கு? காதலுக்காக என்னெல்லா பண்ண வேண்டியதா இருக்கு”

 

Advertisement

உள்ளுக்குள் புலம்பியபடி அவன் சொன்ன ஃபைல்களை எடுத்துக்கொண்டு யாதவ்வை தேடி ஹோட்டலுடைய ரெஸ்டாரென்ட் பகுதிக்குச் சென்றாள் நிஹாரிகா.

Advertisement

 

‘இங்கதானே இருப்பேன்னு சொன்னான்…’ உதட்டை சுழித்தபடி சுற்றிமுற்றி தேடிக்கொண்டிருந்தவளின் பின்னே, “ஹ்ர்ம் ஹ்ர்ம்..” என்ற செருமல் சத்தம் கேட்டது.

 

Advertisement

யாதவ்வை எதிர்பார்த்துக்கொண்டு நிதானமாக திரும்பியவளுக்கு தன்னெதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.

 

ஆம் அது சாட்சாத் ஆரவ்வேதான்.

 

“நீ.. நீ இங்க என்ன பண்ற?” அவளுடைய வார்த்தைகள் பதற்றமாக வர, ஆரவ் சொல்வதற்குள், “ஹெலோ மிஸ்டர் ஆரவ்” என்ற குரலில் இருவருமே ஒருசேர திரும்பிப் பார்த்தனர்.

 

“ஹெலோ மிஸ்டர் யாதவ், அதிகமா கிரிக்கெட் பார்க்க மாட்டேன், பட் உங்க விளையாட்டுக்கு நான் பெரிய ஃபேன்” அவன் சொல்லிக்கொண்டே யாதவ்வோடு கைக்குலுக்க, “மிஸ்டர் மஹாதேவன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணாரு, அவரோட ஷெயார்ஸ்ஸ நீங்க வாங்கிட்டீங்கன்னு. எனிவேய், வெல்கம், வாங்க உக்கார்ந்து பேசலாம்” என்றவன் மீட்டிங்காக ஏற்பாடு செய்திருந்த லாபியின் பக்கம் சென்றான்.

 

அந்த தனிப்பட்ட இடத்தில் இருவரும் அமர்ந்திருக்க, நெற்றியில் பூக்கும் வியர்வையை புறங்கையால் துடைத்தபடி பதற்றமாக நின்றிருந்தாள் நிஹாரிகா.

 

ஆரவ்வுடைய பார்வை அவள் மீதே பதிந்திருக்க, அதை யாதவ் கவனிக்காமலில்லை.

 

கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன் வியாபாரத்தை பற்றி பேச்சை ஆரம்பிக்க, அவனுடைய செக்கரெட்ரி என்ற முறையில் சிந்தனையை வேறு திசைக்கு திருப்பிவிட்டு வேலையில் மூழ்கினாள் நிஹாரிகா.

 

புது ஹோட்டலுக்கான கட்டுமான வேலைகளையும் தன் யோசனைகளையும் அவனிடம் யாதவ் கலந்துரையாட, பல வருடங்களாக வியாபார துறையில் கொடிகட்டி பறக்கும் ஆரவ்வின் யோசனைகளும் இலாப உத்திகளும் சற்று வித்தியாசமாகவே இருந்தன.

 

அந்த யோசனைகள் நிஹாரிகாவையும் ஆச்சரியப்படுத்தியது என்னவோ உண்மைதான்.

 

இருபது நிமிடங்கள் சென்ற பேச்சு வார்த்தை ஒருவழியாக முடிய, யாதவ்வின் பின்னால் செல்லப் போனவளை அழைத்து நிறுத்தினான் ஆரவ்.

 

“நீ இதை எதிர்பார்க்கலல்ல நீஹா!” அவன் கேலியாக இதழை வளைத்தபடி கேட்க, இப்போது பயம் விட்டு நிதானமாக திரும்பிப் பார்த்தாள் அவள்.

 

“நெஜமாவே ஆச்சரியமாதான் இருக்கு, பிஸ்னன்ல இவ்வளவு க்ளெவரா யோசிக்குற நீ லைஃப்ல யோசிக்காம இருக்கியேன்னு”

 

அவள் சொல்லிவிட்டு செல்ல, போகும் அவளை இறுகிய முகமாக பார்த்தான் ஆரவ்.

 

அதேநேரம் ஆதிரா கம்பனிக்குள் நுழைந்ததும் முதலில் வருணைதான் தேடினாள்.

 

அவனோ ஃபோட்டோ ஷூட்கள் நடக்கும் ஹாலில் இருக்க, சுற்றியிருப்பவர்களோ அவளை விழிகளால் காட்டி தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர்.

 

இதை பெண்ணவளும் உணராமலில்லை. ஊர் வாயை மூட முடியாது என்று அறியாதவளா அவள்!

 

வருணைத் தேடிச் சென்றவள், அவன் வேலையில் மூழ்கியிருப்பதை பார்த்துவிட்டு அவனருகே சென்று நிற்க, அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தவனின் புருவங்கள் கேள்வியாக முடிச்சிட்டன.

 

அவனுடைய பார்வையில் ஒரு அலட்சியம்.

 

“என்ன?” என்று அவன் கேட்க, “இன்னைக்கு எனக்கு ஆட் ஷூட் ஏதாச்சும் இருக்கா?” என்று கேட்டாள் அவள்.

 

அவனோ போலியாக யோசித்தபடி, “நோ..” என்றுவிட்டு திரும்பிக்கொள்ள, புரியாமல் பார்த்தவளோ மீண்டும் ஏதோ பேச வர, “வருண்…” என்றழைத்தபடி அங்கு வந்தான் சித்தார்த்.

 

அவனைப் பார்த்ததுமே ஆதிராவுக்கு நடந்தது அனைத்தும் ஞாபகத்திற்கு வர, அவளுடைய உடல் இறுகியது.

 

சித்தார்த்தும் அவளை எதிர்பார்க்கவில்லை. அவனிதயத்தை குற்றவுணர்ச்சி குத்திக் கிழித்தது.

 

“அது.. அது வருண்.. ஆதிராவுக்கு கொடுத்த ஆட்ஸ்ல இப்போ வேறொரு மாடல அஸைன் பண்ணியிருக்க. ஏன்?” இப்போது சித்தார்த்தின் குரலில் கோபம் மிதக்க, வருணோ நிதானமாகப் பார்த்தவன், “ஷீ இஸ் நொட் ஃபிட் ஃபார் மாடலிங்” என்றான் ஏளனமாக.

 

ஆதிராவுக்கு அடிக்குமேல் அடியாக இருந்தது.

 

ஆதிரா மேல் காதல் இல்லையென்றால் அவளை வருண் ஒரு பொருட்டாகவே மதித்திருக்க மாட்டான் என்று மட்டும் புரிந்துக்கொள்ள முடிந்தது அவளால்.

 

“வாட்! இத்தனைநாள் நல்லா தெரிஞ்சவ இப்போ ஃபிட் இல்லன்னு தோனுதா?  எனக்கென்னவோ அவ மேல தப்பா தெரியல, உன் பர்சனல் நீட்காக அவள யூஸ் பண்ணியிருக்கன்னு தோனுது”

 

சித்தார்த்தின் வார்த்தைகள் காட்டமாக வந்தன.

 

வருணோ கோபமாக அவனைப் பார்த்தவன், “ஆமா.. நான் காதலிச்ச ஒரே காரணத்துக்காக மட்டும்தான் இந்த கம்பனிக்குள்ள இவள வர வச்சேன், இப்போ இல்லைன்னு ஆனதும் எதுக்கு? நம்ம கம்பனிக்குன்னு ஒரு ப்ரெஸ்டிஜ் இருக்கு. எல்லாரும் நம்ம கம்பனியோட பர்ஃபெக்ட் மாடலாகிர முடியாது” என்று ஏளனமாகப் பேசிச் செல்ல, ஆதிராவின் இதழ்கள் விரக்திப் புன்னகை புரிந்தன.

 

விழிகளிலிருந்து விழிநீர் ஓட, அதை அழுந்தத் துடைத்துக்கொண்டவள், “இனாஃப்!” என்று இயலாமையோடு கத்திவிட்டு வாசலை நோக்கித் திரும்ப, மறுகணம் அவளுடைய கால்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றன.

 

“அப்பா…” இதழ்கள் பயத்தோடு முணுமுணுக்க, உடல் உதறத் தொடங்கியது அவளுக்கு.

 

அங்கு அந்த ஹால் வாசலில் அருவாள் இல்லாத அய்யனார் போல நின்றிருந்தார் மார்த்தாண்டம்.

 

ஆதிரா சிலைபோல் நிற்பதை கவனித்துவிட்டு அவள் பார்வை செல்லும் திசையைப் பார்த்த சித்தார்த்திற்கு ஆரம்பத்தில் அது யாரென்று புலப்படாவிட்டாலும் ஆதிராவின் முகபாவனைகளே அது யாரென்று அவனுக்கு உணர்த்தியது.

 

“ஆமா… யார் இந்த ஆளு, இவர் எப்படி இங்க வந்தாரு? செக்யூரிட்டா…” என்று வருண் கத்தி முடிக்கவில்லை, மின்னல் வேகத்தில் மகளை நெருங்கியவர் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த அறையில் மொத்தப் பேருமே திகைத்துவிட்டனர்.

 

இதை ஆதிரா எதிர்பார்த்ததுதான்.

 

“பொட்ட சிறுக்கி, எம்புட்டு தைரியம்டீ உனக்கு? உன்னையெல்லா பட்டணத்து பக்கமே அனுப்பியிருக்க கூடாது. ச்சீ… ஊருக்கு போனதும் நம்ம ஆளுங்களையே ஒருத்தன புடிச்சு உனக்கு கட்டி வச்சாதான்டீ உனக்கு புத்தி வரும், வாடீ”

 

அவர் அந்த இடமே அதிர கத்திவிட்டு அவள் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு செல்ல, சில கணங்கள் சிலை போல் நின்றிருந்த சித்தார்த்திற்கு தன்னை சுதாகரிக்கவே சில கணங்கள் எடுத்தன.

 

“அவ அப்பனே வந்து கூட்டிட்டு போயிட்டான், நல்லதா போச்சு” என்று வருண் நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு செல்லப் போக, “இதுக்கு நான் அல்லோவ் பண்ண மாட்டேன், இந்த கம்பனில எனக்கும் ஷெயார்ஸ் இருக்கு, ஆதிராவும் இந்த கம்பனி மாடல்ல ஒருத்திதான். அவ இல்லன்னா ஐ டேக் மை ஷெயார்ஸ் பேக். கொட் இட்!” என்றவன் ஆதிரா சென்ற திசையை நோக்கி செல்லப் போனான்.

 

வருணோ எரிச்சலோடு பார்த்தவன், “அதுக்கு இப்போ அவ அப்பன் ஒத்துக்கணும்” என்று ஏளனமாக சொல்ல, “அதை நான் பார்த்துக்குறேன்” என்ற சித்தார்த் மார்த்தாண்டத்தை நோக்கி வேகமாக ஓடினான்.

 

லிஃப்டுக்காக காத்திருக்காமல் மாடிப்படிகளில் மின்னல் வேகத்தில் இறங்கினான் சித்தார்த், அவனுக்குள் ஏனென்று தெரியாத ஒரு பதற்றம்.

 

அவர்கள் லிஃப்டிலிருந்து இறங்கி வாசலை நோக்கி செல்வதற்குள், கீழ்தளத்திற்கு வந்தவன் மார்த்தாண்டத்தின் முன்னே முட்டியில் கையை ஊன்றி மூச்சு வாங்கியபடி நின்றான்.

 

தன் பையிலிருந்த தண்ணீர் போத்தலை அவனிடம் நீட்டியவர், மொதல்ல இதை குடிங்க தம்பி..” என்று அந்த கோபத்திலும் அக்கறையோடு சொல்ல, அதை வாங்கி மடமடவென குடித்தவன் ஆதிராவை ஒரு பார்வைப் பார்த்தான்.

 

அவளோ அவனை கொஞ்சமும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

 

“அங்கிள், நா.. நான் உங்ககிட்ட ஆதிராவ பத்தி பேசணும். ப்ளீஸ்” அவன் கெஞ்சலாக சொல்ல, “தம்பி பேசுறதுக்கு எதுவும் இல்ல, நீங்க பட்டணத்துலயே வளர்ந்தவரு உங்களுக்கு எல்லாமே சாதாரணம்தான். ஆனா எங்களுக்கு அப்படி கெடையாது.  எங்க குடும்பத்துல எவனும் பத்தாங் க்ளாஸ தாண்டினது கெடையாது. ஆனா என் பொண்ணு நல்லா படிக்கிறாளேன்னு இவள பட்டணத்துக்கு படிக்கிறதுக்காக அனுப்பினேன். படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்த கட்டிகொடுக்க சொல்லி ஊர்க்காரங்க சொன்னப்போ இவ விருப்பத்துக்காக இங்கேயே வேலைக்கு போக சம்மதிச்சேன். ஆனா இந்த பொட்ட கழுதை…” என்று பற்களைக் கடித்தார் மார்த்தாண்டம்.

 

ஆதிரா ஒரு வார்த்தை மறுத்துப் பேசவில்லை.

 

“இதுக்கப்பறம் இவள இங்க விட முடியாது, என் பொண்ணு அரைகுறையா உடுத்து ஃபோட்டோக்கு போஸ் கொடுக்குறான்னு தெரிஞ்சா என் மானமே போயிரும். கிராமத்துல வளர்ந்திருந்தா எங்க பாரம்பரியம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். நகருங்க தம்பி”

 

அவர் பேச வேண்டியதை பேசிவிட்டு செல்லப் போக, மீண்டும் பிடிவாதமாய் அவரெதிரே சென்று நின்றான் சித்தார்த்.

 

“அங்கிள் ப்ளீஸ்! நா.. நான் பேசுறத கொஞ்சம் கேளுங்க, ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கேட்டவன் தூரமாக இருந்த சோஃபாவில் அமரும்படி காட்டினான்.

 

அவன் யாரிடமும் இதுபோல் பேசியது கிடையாது. முதல் தடவையாக தன்னிலை இறங்கினான் சித்தார்த், அதுவும் அவனவளுக்காக.

 

குற்றவுணர்ச்சியா இல்லை காதலா என்று அவன் மனம் மட்டுமே அறியும்.

 

மார்த்தாண்டமோ சில கணங்கள் யோசித்தவர் பின் சம்மதமாக தலையசைத்தபடி சோஃபாவில் சென்றமர, அவரெதிரே அமர்ந்துக்கொண்டான் அவன்.

 

“அங்கிள், மாடலிங்குறது நீங்க நினைக்கிற அளவுக்கு தப்பானது கிடையாது. ஆதிராவுக்கு இதுல ஆர்வம் ஜாஸ்தியா இருக்கு, கண்டிப்பா இந்த ஃபீல்ட்ல அவளுக்கு ப்ரைட் ஃப்யூச்சர் இருக்கும்” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட மார்த்தாண்டமோ, “அப்போ எங்க வீட்டு பொண்ணு விளம்பரங்குற பேருல கண்டத உடுத்துக்கிட்டு ஆடுவா, அதை எங்க ஊர்சனங்க பார்த்துக்கிட்டு இருப்பாங்களா? உங்க அக்காளையோ தங்கச்சியையோ இப்படி விடுவீங்களா நீங்க?” என்று பதிலுக்குக் கத்தினார்.

 

சித்தார்த்திற்கு இந்த கிராமத்தாளோடு பேசுவது பேரும் போராட்டமாகத்தான் இருந்தது.

 

“உங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்கும் போது நீங்க ஏன் மத்தவங்க பேசுறத பத்தி யோசிக்குறீங்க, பேசுற எவரும் உங்களுக்காக வர போறதில்ல அங்கிள். என்ட், இந்த வேலையில எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க, கல்யாணம் ஆனவங்க, ஆகாதவங்க, குடும்பத்துக்காக உழைக்கிறவங்கன்னு நிறைய பொண்ணுங்க மாடலிங்ல இருக்காங்க. நீங்க இப்போ பேசுறது அவங்களையும் கொச்சப்படுத்துற மாதிரி இருக்கு, எந்த வேலையும் தப்பானது கிடையாது”

 

அவன் நிதானமாக அதேசமயம் அழுத்தமாக சொல்ல, மார்த்தாண்டமோ அதிர்ந்துவிட்டார்.

 

“இல்ல தம்பி.. நா.. நான் அப்படி சொல்ல வரல. அது வந்து..” அவருடைய வார்த்தைகள் தடுமாறின.

 

“இங்க பாருங்க அங்கிள், அவளுக்கு இந்த ஃபீல்ட் ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப நல்லாவே ஆர்வமா பண்றா. என்ட், இதுவரைக்கும் நாங்க ஆதிராவுக்கு கொடுத்த ஆட்ஸ் ரொம்ப ட்ரெடிஷனலா தான் இருக்கு. இதுக்கப்பறமும் அவ விருப்பம்தான். மத்தவங்க பேசுறத பத்தி யோசிக்காதீங்க, அவளுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு மட்டும் பாருங்க, மகளுக்காக ஊர்க்காரங்க பேச்ச மீறி இத்தனையும் பண்ணியிருக்கீங்க. இதையும் அவ விருப்பத்துக்கே விடலாமே!”

 

என்று சித்தார்த் பேசி முடிக்க, பெரியவர் தீவிர யோசனையில் இருப்பதை அவருடைய முகமே அப்பட்டமாகக் காட்டியது.

 

அவனும் ஆர்வமாக அவருடைய பதிலையே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சட்டையை உதறியவாறு எழுந்து நின்றவர், “நான் வர்றேன் தம்பி” என்றுவிட்டு மகளை அழைத்துக்கொண்டு முன்னே சென்றார்.

 

சித்தார்த்திற்கு இதையும் தாண்டி என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

போகும் அவரை இயலாமையோடு அவன் பார்த்துக்கொண்டு நிற்க, ஆதிராவின் முகம் அப்போதும் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.

 

வாசல் வரை சென்றவர், திடீரென என்ன யோசித்தாரோ!

 

மகளின் புறம் திரும்பி, “நீ நடிச்ச விளம்பரத்த நான் பார்க்கலாமா?” என்று அவர் கேட்டதும், “அப்பா…” என்று அதிர்ச்சியாகப் பார்த்தாள் ஆதிரா.

 

அவருடைய முகத்தில் முழு மகிழ்ச்சிக்கான சாயல் இல்லைதான்.

 

ஆனால், மகளுக்காக அவர் சம்மதமாக தலையசைக்க, “இல்லப்பா, உங்களுக்கு பிடிக்கலன்னா.. என… எனக்கும் வேணாம்” என்றாள் அவள் மனம் கேட்காமல்.

 

அவரோ வாஞ்சையோடு மகளின் தலையை தடவிவிட்டவர், “பிடிக்கலதான், ஆனா… என் பொண்ண நான் ஒழுக்கமாதான் வளர்த்திருக்கேன்னு நம்பிக்கை எனக்கிருக்கு. நம்ம பாரம்பரியத்த கலாசாரத்த எல்லாருக்கும் தெரியப்படுத்துற மாதிரி உன் வேலைய அமைச்சுக்க. வரம்பு மீற மாட்டேன்னு நம்புறேன்” அவரின் வார்த்தைகள் அவள் மனதில் அழியா சுவடாய் பதிந்தன.

 

மார்த்தாண்டமோ திரும்பி சித்தார்த்தைப் பார்த்தவர் தன் பெரிய மீசையை முறுக்கி விட்டவாறு புன்னகைக்க, ‘ஊஃப்ப்…’ என்று இடுப்பில் கைக்குற்றி பெருமூச்சு விட்டுக்கொண்டான் அவன்

 

அந்த ஒரு புன்னகையே அவனுக்கு அவர் முடிவை உணர்த்த, அவன் பார்வை இப்போது ஆதிராவின் மீது ஆர்வத்தோடு பதிந்தது.

 

ஆனால், அவள்தான் அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லையே!

 

முட்டை விழிகளை உருட்டி தன்னை பார்ப்பவள் இப்போது வெகுவாக மறுப்பதை சித்தார்த்தால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

மனதால் சோர்ந்தவன் சிறு புன்னகையை சிந்திவிட்டு செல்ல, கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் கழிந்த நிலையில்,

 

யாதவ்வின் வீட்டில், தன்னறையிலிருந்து வெளியில் வந்தவனோ உணவு மேசையில் வழக்கம் போல் தனக்காக  காத்திருந்த வசுந்தராவை சிறு ஆச்சரியத்தோடு பார்த்தான்.

 

கிட்டத்தட்ட பல வருடங்கள் கழிந்துவிட்டன.

 

அவன் அவரை ஒருபோதும் கண்டுகொண்டதே இல்லை. ஆனால், இரத்த உறவே இல்லாதிருந்தும் எப்படி இவரால் சளைக்காமல் பாசத்தை காண்பிக்க முடிகிறது?

 

குறையாத ஆச்சரியத்தோடு வாசலை நோக்கி செல்லப் போனவன், பின் என்ன நினைத்தானோ!

 

கால்களை பின்னோக்கி நகர்த்தி வசுந்தராவுக்கு எதிரே அமர்ந்துக்கொண்டான். பெரியவருக்கு ஆச்சரியம் தாளவில்லை.

 

அவருடைய கரங்கள் பரபரத்தன. ஏனென்று தெரியாமல் பதற்றமானார் அவர்.

 

“தே.. தே.. தேனு, தம்பி உக்கார்ந்திருக்கு, சீக்கிரம் சூட சாம்பாரை கொண்டு வா! இது ஆறி போயிருக்கு. தம்பிக்கு தக்காளி சட்னிதான் பிடிக்கும். சீக்கிரம்டீ!”

 

அவர் பதற்றமாக சொல்லிக்கொண்டு சமையலறைக்கும் உணவு மேசைக்கும் மாறி மாறி ஓட, யாதவ்விற்கு தன்னை மீறி சிரிப்புதான் வந்தது.

 

அவனுக்காக பார்த்துப் பார்த்து அவர் பரிமாற, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் உண்டு முடித்தவன், அமைதியாக அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.

 

“தம்பி வாய்ல முத்து கொட்டிருமோ, சிரிக்கவே மாட்டேங்குது” சமையலறையிலிருந்த தேன்மொழி நாடியில் கை வைத்தபடி அங்கலாய்க்க, “அவன் சிரிச்சுட்டுதான் இருக்கான் தேனு, எனக்கு தெரியும்” என்றார் வசுந்தரா ஆனந்தமாக.

 

மற்றவளோ முகவாயை தோளில் இடித்து நொடிந்தபடி சென்றுவிட, திடீரென நெஞ்சுக்குள் சுருக்கென்ற வலி அவருக்கு.

 

இடதுபக்க நெஞ்சைப் பிடித்துக்கொண்டவர், மூச்சு விடுவதற்கே சற்று சிரமமாகி பின் சில நிமிடங்கள்  கடந்தே ஆசுவாசமானார்.

 

அவரின் பார்வையோ சிரித்த முகத்தோடு ஆளுயர புகைப்படமாக ஹாலில் தொங்க விடப்பட்டிருக்கும் தன் கணவரை நோக்கிதான் பதிந்தது.

 

 

***********

 

 

-Sheha zaki..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!