ஆஷிகாவின் சந்திப்பையும் அவளுடன் நடந்த உரையாடலையும் ஒன்றுவிடாமல் ஆழினியிடம் கூறியவன் இத்தனை நேரம் தன்னிடம் வைத்திருந்த காகிதத்தை எடுத்து ஆழினியின் கைகளில் திணித்துவிட்டு
“இது ஆறு வருஷத்துக்கு முன்னாடி நீ சைன் பண்ண அக்ரிமென்ட் பேப்பர்ஸ்…. ஆதவ் என் பையன், நீ அவனுக்கு வெறும் வாடகை தாய் மட்டும் தான்…. நீ எங்க போனாலும் இது தான் உண்மை, ஏனா உனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லன்னு நீயே கையெழுத்து போட்டிருக்க…. இனிமேல் ஆதவ்…. சாரி, விஜய ஆதவ் கிருஷ்ணன் என் கூட தான் இருப்பான்…. இனிமேல் அவனுக்கு நான் தான், நான் மட்டும் தான் எல்லாம்….” என்று உறுதியுடன் கூறிய விஜய சிவமாறனின் கூற்றை கேட்டு கண்கள் கலங்கியவாறு பேரதிர்ச்சியில் நின்றிருந்தவளின் மனமும் மூளையும் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டது.
Advertisement
தன்னை கடினப்பட்டு மீட்டெடுத்தவள் கலங்கிய விழிகளுடன் தன்னெதிரில் நின்றிருந்தவரிடம்
“நீ…. நீ சொல்றது நான்…. நான் எப்படி நம்புறது? ‘என் பையன கொடுன்னு’ நீ சொன்னா நான் கொடுக்கனுமா? இத்தனை…. இத்தனை வருஷம் எங்க சார் போனீங்க? என்…. என் வயித்துல வளர்ந்த குழந்தையை அபார்ட்…. அபார்ட் பண்ண சொன்ன ஆளு தான நீ? எந்த உரிமையில என் பையன நீ சொந்தம் கொண்டாட வர? நான்…. நான் உன்னை சும்மா விடமாட்டேன்…. நான் இப்போவே….” என்று திக்கி திணறிய ஆழினி ஏதோ கூற வருவதற்குள்
Advertisement
Advertisement
“என்ன? போலீஸ் கிட்ட போகப்போறியா? போ, எங்க வேணாலும் போ…. ஆனா எங்க போனாலும் எனக்கு சாதகமா தான் கேஸ் வரும்…. உன்னால் முடிஞ்சதை பண்ணிக்கோ….” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு ஆதவ் கிருஷ்ணனை அழைத்ததுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட, அவன் சென்ற திசையை வெறித்தவள் இத்தனை நேரம் வெறும் பார்வையாளராக நின்றிருந்த இன்பனின் அருகில் சென்றிருந்தாள்.
“இன்பா…. அவன்…. அவன் என்ன சொல்லிட்டு போறான் பார்த்தியா? ஏன்டா அமைதியா இருக்க? நீ வா, நாம போய் ஆது கூட்டிட்டு வரலாம்….” என்று ஆழினி கூறியதை கேட்டவன்
Advertisement
“அவரோட பையன அவர் கூட்டிட்டு போறாரு, நாம ஏன் தலையிடனும் ஆழினி? இன்னும் சொல்லப்போனா, அக்ரிமென்ட் படி அவரோட பையன் அவர் கிட்ட தான இருக்கனும்?” என்று வினவிய இன்பனை விழியகலாமல் பார்த்தவள்
“ஓஹோ, எல்லாரும் எனக்கு எதிரா திரும்புறீங்களா? இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன்…. என் பையன என் கிட்ட எப்படி கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்….” என்று உறுதியாக கூறிய ஆழினி அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஜய சிவமாறனின் இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தாள்.
இல்லத்தின் கூடத்தில் அமர்ந்திருந்த பருவதம்மாவின் அருகில் மூச்சிறைக்க வேகமாக சென்றவள்
“அம்மா…. என்…. என் பையன்…. ஆதவ் எங்க?” என்று ஆழினி திக்கி திணறியவாறு வினவ, அவளை இமைக்காமல் பார்த்தவர்
“என் பையனும் பேரனும் வெளிய போயிருக்காங்க…. உனக்கு என்ன வேணும்மா?” என்று வினவிய பருவதம்மாவை அதிர்ச்சியாக பார்த்தவளிடம்
“எங்க கைக்கு முன்கூட்டியே வந்திருக்க வேண்டியவன் ஆனா இத்தனை வருஷம் கழிச்சு வரவேண்டியதா போச்சு…. பரவாயில்லை, இத்தனை வருஷம் நீ அவனை பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிம்மா…. என் பேரனை எங்க கிட்ட கொடுத்துடு ஆழினி, நாங்க அவனை பார்த்துக்குறோம்….” என்று கூறியவரை விழியகலாமல் பார்த்தவள் இதற்கு மேல் பேசி பயனில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.
கால் போன போக்கில் எங்கெங்கோ சுற்றியவள் இறுதியாய் தன் இல்லத்திற்கு வந்தடைந்துவிட்டாள். தன் அறையிலுள்ள கட்டிலில் சாய்ந்தவாறு தரையில் அமர்ந்து கால்களை குறுக்கி முகத்தை அதில் புதைத்து அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள் ஆழினி.
நேரம் தான் சென்றதே தவிர, ஆழினியின் நிலை சிறிதேனும் மாறாமல் பித்து பிடித்தார் போல் அமர்ந்திருப்பதை கண்டு நீலவேணியும் அவளின் பெற்றோர்களும் அவளை நினைத்து கலங்கி நிற்க, அவர்களின் நிலையை காட்டிலும் ஆழினியை கண்டு மனமுடைந்தவன் அவளது வாழ்வு நன்முறையில் அமையவேண்டுமென்றால் சில இன்னல்களை அவளுக்கு துணையாக தானும் தாங்கித்தான் கடந்தாகவேண்டும் என்று எண்ணி தன் மனதை கல்லாக மாற்றி கொண்டான் இன்பன்.
காரிருளை பூசிக்கொண்ட வானமும் ஒளிவீசும் நிலவினை மேகத்திற்குள் பூட்டி வைத்து மழை வருவதற்கான அறிகுறிகளை அளித்து கொண்டிருந்தது. தன் அறையில் அடைந்து கிடந்தவளின் செவிகளில்
“அம்மா….” என்று ஆதவ் கிருஷ்ணனின் குரலை கேட்டு நிமிர்ந்தவள் தன்னருகில் ஓடிவரும் தன் மகனை கண்டதும் ஓடி சென்று காற்றும் நுழைய முடியாத அளவிற்கு அவனை தன்னுடன் இறுக்கமாக அணைத்து கொண்டு அழ தொடங்கிவிட்டாள்.
ஆழினியின் நிலையை கண்ட விஜய சிவமாறனும் இன்பனும் மனதில் வலியுடன் அறையின் வாயிலில் நின்றிருந்தனர். தலைமுடியெல்லாம் கலைந்து அழுது வீங்கிய முகத்துடன் யாரேனும் தன் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாரோ என்ற பயத்தில் பித்து பிடித்தவர் போல் ஆதவ் கிருஷ்ணனை தனக்குள் அணைத்திருந்தவளை கண்டு இதற்கு மேல் தன்னால் பொறுக்க இயலாது என்று நினைத்து மனமுடைந்த இன்பனோ நீலவேணியின் மடியில் முகம் புதைத்து அழுது தீர்க்க, அறையின் வாயிலில் நின்றிருந்தவன் ஆழினியின் இந்நிலைக்கு காரணமான தன்னை வெறுத்து அவளிடம் மனதளவில் தன் மன்னிப்பை வேண்டி கலங்கி நின்றிருந்தான் விஜய சிவமாறன்.
ஆனால் அதை தனக்குள் மூடி மறைத்தவன் ஆழினியின் மனதை இன்னும் இரணமாக்க தயாராகியிருந்தான். ஆழினியின் அருகில் சென்றவன் அவளது கைகளில் சிறையாகி அமர்ந்திருந்தவனிடம்
“ஆது கண்ணா, உங்களோட டாய்ஸ் எல்லாம் கார்ல வச்சிட்டு வந்துட்டீங்க, போய் அதெல்லாத்தையும் எடுத்துட்டு வந்து உன் பன்னு மாமா, வேணி அத்தை கிட்ட காட்டுங்க….” என்று விஜய சிவமாறன் வினவியதை கேட்டவள் எங்கே தன் மகனை தன்னிடமிருந்து பிரித்துவிடுவானோ என்று எண்ணி ஆதவ் கிருஷ்ணனை மேலும் இறுக்கமாக பிடித்து கொண்டாள்.
ஆழினியின் செயலை கண்டு மனமுடைந்தவன் அதிலிருந்து சிரமப்பட்டு மீண்டவாறு
“ஆதவ் இங்க தான் இருப்பான், நான் கூட்டிட்டு போகமாட்டேன்…. அவனை விடு ஆழினி, நான் உன் கிட்ட தனியா பேசணும்….” என்று ஆழினியை நேருக்கு நேர் பார்த்து தீர்க்கமாக கூறிய விஜய சிவமாறனின் கண்களில் என்ன தெரிந்ததோ? தன்னுள் சிறை வைத்திருந்த அவளின் மகனை விடுவிக்க, அங்கு நடப்பதை அறியாத நீலநிற கண்களையுடைய மாயக்கண்ணனோ அவ்விடத்திலிருந்து துள்ளி குதித்தவாறு ஓடிவிட்டான்.
ஆதவ் கிருஷ்ணன் சென்றதும் தன்னெதிரில் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்றவன்
“ஆழினி…. நான்….” என்று ஏதோ கூற வருவதற்குள்
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்….” என்று உறுதியாக கூறிய ஆழினியின் கூற்றை கேட்டு அதிர்ச்சி அடைந்திருந்தான் விஜய சிவமாறன்.
தன்னை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்த விஜய சிவமாறனை தீர்க்கமாக நோக்கியவள் தன் கண்களில் வழிந்த கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்துவிட்டு சட்டென எழுந்து அவன் முன்பு நிமிர்வுடன் நின்றிருந்தாள் ஆழினி.
“என்ன பார்க்குற? காலையிலிருந்து என்னை இந்த வார்த்தையை சொல்ல வைக்க தான இப்படி அலையவிட்ட? அதான் நான் உன்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டேன்ல? இதுக்கு அப்புறம் உனக்கென்ன வேணும்?” என்று கோபமாக வினவியவளின் கண்கள் மீண்டும் கண்ணீர் சிந்த தொடங்க, அவளை கண்டு பதறியவன்
“ஆழினி….” என்று கூறியவாறு அவளருகில் செல்ல, அவனை தன் பார்வையால் தள்ளி நிறுத்தியவளின் கோப விழிகளை கண்டு விஜய சிவமாறனின் மனம் ஒருநொடி நின்று துடித்தது.
தன்னெதிரில் நின்றிருப்பவனை தீர்க்கமாக பார்த்தவள்
“எனக்கு என் ஆதவ் வேணும்…. அவனுக்காக நான் என்னவேணாலும் செய்வேன், ஆனா அவனை என் கிட்டயிருந்து பிரிக்க மட்டும் நினைக்காதீங்க….” என்று ஆழினி கூறியதை கேட்டு மனமுடைந்தவன்
“ஆழினி, நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாண பண்ணனும்னு நினைக்கல…. எனக்கு ஆதவ் மட்டுமில்ல நீயும் முக்கியம் தான், ஏனா நான்….”
“போதும்…. எதுவும் பேசவேண்டாம்…. அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேனே அதுக்கு வேண்டிய ஏற்பாட பண்ணுங்க….”
“உனக்கு என்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டாமா? என் பாஸ்ட் பத்தி உன் கிட்ட சொல்லனும் ஆழினி….”
“அதை பத்தி தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்? முக்கியமா, எனக்கு அது தேவையில்லாதது….” என்று முடிவாக கூறிவிட்டு அறையிலிருந்து சென்ற ஆழினியை விழியகலாமல் பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.
ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஆழினி அமைதியாக நின்றிருந்தால், விஜய சிவமாறன் தன் கடந்தகாலத்தை பற்றி எதையும் மறைக்காமல் அவளிடம் ஒன்றுவிடாமல் கூறியிருப்பான். ஆனால், அவன் மீது கொண்ட கோபம் அவளது கண்களை முற்றிலுமாக மறைத்துவிட, பிற்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை அறியாத பேதை பெண்ணவளை கண்டு விதியென்னும் சதிகாரன் ஏளனமாக சிரித்து கொண்டிருந்தான்.
திருமணத்திற்கு ஆழினி சம்மதம் தெரிவித்ததை அறிந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் சுழன்றிருக்க, விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் மனம் மட்டும் ஒருநிலையில் நில்லாமல் தவித்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து ஏற்பாட்டுகளையும் முடித்தவன் அனைவரது ஆசிர்வாதத்துடன் ஆழினியை மனமுடித்து தன்னவளா(னா)க்கி கொண்டான் விஜய சிவமாறன்.
இவை அனைத்தையும் நினைத்து மனம் கலங்கியவன் அறையின் மெத்தையில் தன் மகனை இறுக்கமாக அணைத்தவாறு படுத்திருந்த ஆழினியை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். இரண்டு நாட்களில் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை நினைத்து கொண்டு கண்கள் கலங்கியவாறு படுத்திருந்தவள் எதேச்சையாக திரும்பும் போது தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த விஜய சிவமாறனது விழியினை கண்டு ஒருநொடி திகைத்து தான் போனாள்.
இருவரது கண்களும் சிலநொடி கதைகள் பேசிக்கொள்ள, தன்னை அவனது பார்வையிலிருந்து சிரமப்பட்டு மீட்டெடுத்தவள் தன் கண்களை இறுகமூடி உறங்க முயற்சிக்க, சிறிது நேரத்தில் அதில் வெற்றியும் கண்டிருந்தாள். தன்னவள் உறங்கும் வரை அமைதியாக நின்றிருந்தவன் அறைக்குள் சென்று ஆதவ் கிருஷ்ணனின் அருகில் படுத்து கொண்டான்.
குழந்தை போல் உறங்கும் தன் மனையாளையும் அவளருகில் தன் கட்டைவிரலை சப்பிக்கொண்டு உறங்கும் மகனையும் கண்டவனின் மனமானது இன்று ஏனோ சொல்லமுடியாது மகிழ்ச்சியில் கரைப்புரண்டு ஓடியது. எத்தனை வருட கனவு இது, கிடைக்காது என்று நினைத்த பொக்கிஷமானது இன்று அவன் அருகில் இருப்பதை பார்க்க பார்க்க உலகத்தை வென்றது போல் கர்வம் பிறந்தது விஜய சிவமாறனுக்கு.
தன் வலது முழங்கையை ஊன்றி மெல்லமாக எழுந்தவன் தன்னருகில் துயில் கொள்ளும் ஆதவ் கிருஷ்ணனின் சுருள் முடியை மென்மையாக வருடியவாறு அவனது நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்துவிட்டு, அவனருகில் படுத்திருந்த தன்னவளை விழிநிறைய ரசித்து கொண்டிருந்தான்.
அவளை முதல் முறை சந்தித்த நிகழ்வானது அவன் மனக்கண்ணில் தோன்றி மறைய, அந்நொடி அவனது இதழ்களில் அழகான குறுநகையும் தோன்றியிருந்தது. தன்னவளை காதலுடன் இரசித்தவன் பூவின் இதழ்களின் மென்மை கூட தோற்றுப் போகும் அளவிற்கு காதலைத் தேக்கி வைத்து அவனவளின் நெற்றியில் தன் முதல் முத்திரையை ஆழமாக பதித்திருந்தான் ஆழினியின் விஜய சிவமாறன்.