Skip to content
Post Views: 556
லதா மாடிக்கு சென்று கதவை தட்டி பார்த்தாள். சரவணன் கதவை திறக்கவேயில்லை. மீண்டும் கீழே வந்தவள், அழுதுக் கொண்டே “மாமா, நீங்களாச்சும் சரவணன் கிட்ட பேசுங்க” என்றாள் நடராஜனிடம்
“லதா அலமேலுவோட புத்தி நாய் வாலு மாதிரி, அதை நிமிர்த்தவே முடியாதுனு விட்டு தொலைச்சிட்டேன். ஆனா நீயும் அவ கூட சேர்ந்துக்கிட்டு இவ்வளவு பெரிய காரியத்தை பண்ணியிருக்கேனு தெரிஞ்சதும் எனக்கே அதிர்ச்சியா இருக்கு. சரவணனுக்கு எப்படியிருக்கும்? இப்போ கோவத்துல பேசறான். கொஞ்ச நாளைக்கு நீ உன் அம்மா வீட்ல இரு. அவனை சமாதானம் செஞ்சி அனுப்பி வைக்கிறேன்”
Advertisement
“மாமா, நான் பண்ணது தப்பு தான். அதுக்காக அவர் என்னை நாலு அடி அடிச்சா கூட பரவாயில்ல. பிரிஞ்சிடலாம்னு சொன்னா எப்படி மாமா? அவரையும் ஆதிக்கையும் பிரிஞ்சி என்னால இருக்க முடியாது. நான் இல்லாம ஆதிக் என்ன பண்ணுவான்?”
Advertisement
“ஆதிக் இங்கே இருந்தா தான் அம்மா வேணும்னு கேப்பான். அப்போ தான் சரவணன் சீக்கிரம் மனசு மாறுவான். அதனால நீ மட்டும் கிளம்பு, நானே உன்னை வீட்ல விட்டுட்டு வரேன்” என்று நடராஜன் சொல்ல வேறுவழியில்லாமல் லதா மாமனாருடன் கிளம்பினாள்.
Advertisement
ரஞ்சனி அலமேலுவை ஏளனமாக பார்த்து, “நீயெல்லாம் திருந்தவே மாட்டியாம்மா? அம்மாவா இருக்கறவரைக்கும் நல்லவளா இருக்கறீங்க, மாமியாரா ஆயிட்டா மட்டும் எப்படி வில்லியா மாறிடுறீங்க? நாளைக்கு நான் கல்யாணமாகி போனாலும் எனக்கும் இதே நிலைமை தான்னு உனக்கு தெரியாதா? மாப்பிள்ளைய பாக்கறதுக்கு முன்னாடி மாமியார் மாமானார் இருக்காங்களானு இந்த காலத்து பசங்க கேக்கறதுக்கு காரணம் உங்கள மாதிரி ஆளுங்கனால தான்.
Advertisement
நீயெல்லாம் வீட்டுக்கு மட்டும் சாபமில்ல, சமுதாயத்துக்கும் சாபம். உங்கள மாதிரி மாமியாரால எல்லாரும் அப்படித்தான்னு ஒரு முடிவுக்கு வந்து மத்த நல்ல மாமியார் மாமனாருங்களையும் யாரும் கவனிக்க மாட்டேங்கிறாங்க” என்று திட்டிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டாள்.
மனைவியை உரிமையுடன் திட்டிய சரவணன் அன்னையை எதுவுமே கேட்கவில்லை, ஏன் திரும்பி கூட பார்க்கவில்லை. கட்டிய புருஷனோ நாய் வாலுடன் அவரை ஒப்பீடு செய்து விட்டு போகிறார். பெற்ற மகளே கேவலமாக திட்டிவிட்டு போகிறாள். அலமேலுவை சொல்லொணா துயரம் சூழ்ந்துக் கொண்டது. தளர்வுடன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்து தன் கண்களில் கண்ணீர் தீரும் வரை தேற்றுவாரின்றி அழுது தீர்த்தார்.
சின்னபொண்ணு படிக்கும் கோச்சிங் கிளாஸில் தாமதமானதால் வசீகரன் மனைவிக்காக காத்திருந்து அவளுடன் வெளியே சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.
வீட்டிற்குள் ஒரு மயான அமைதியை உணர்ந்தவன் புருவமுடிச்சுடன் அலமேலுவின் அறையை எட்டி பார்த்தான். அறையில் விளக்கு போடாமல் இருட்டாக இருந்தது. அலமேலு தூங்கி கொண்டிருக்கிறார் போலும் என்று நினைத்து மாடிக்கு சென்றான்.
சரவணனின் அறை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே உள்பக்கம் தாழிடப்பட்டிருப்பதை கண்டு யோசனையுடன் அறைக்குள் சென்றான். அன்று அதிகமான வேலை பளுவில் இருந்ததால் படுத்தவன் உடனே உறங்கி விட்டான்.
சிறிது நேரத்திலேயே சின்னபொண்ணு அவனை உலுக்கினாள்.
“மாமு, எந்திரிங்க”
“சின்னு, இன்னைக்கு நீயே படிச்சுக்கடி. மாமுவுக்கு டயர்டா இருக்கு” என்று குப்புற படுத்துக் கொண்டான்.
“மாமு, ஆதிக் ரொம்ப நேரமா அழுதுட்டே இருக்கான், என்னனு தெரியல”
“அவன் அம்மா இருக்காங்கடி பாத்துப்பாங்க, நீ படிக்கற வேலைய பாரு”
“அம்மா வேணும்னு தான் அழுதுட்டு இருக்கான் மாமு. அக்கா ரூமுக்குள்ள இல்லனு நினைக்கிறேன்”
வீட்டிற்குள் வந்த போது தோன்றிய அசாதாரண சூழ்நிலை மனதை இப்போது பிசைய, தூக்கம் தெளிந்து எழுந்து வெளியே சென்றான்.
“சரவணா” அறைக்கதவை தட்டினான்
“சொல்லுடா” உள்ளேயிருந்து குரல் மட்டும் வந்தது
“ஆதிக் ஏன் அழுதுட்டே இருக்கான்? அண்ணி எங்கே?”
“அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா”
“என்ன திடீர்னு? அதுவும் குழந்தைய விட்டுட்டு போயிருக்காங்க?”
சரவணனனிடம் பதில் இல்லை
“டேய் உன்னை தான்டா கேக்கறேன், பதில் சொல்லு? அண்ணி எங்கே?”
“அவ இனிமே வரமாட்டாடா, வீட்டை விட்டு துரத்திட்டேன். போதுமா? போய் தூங்கு”
“என்னடா உளர்ற? கதவ தொற” என்று வசீகரன் பலமாக கதவை தட்ட சரவணன் குழந்தையுடன் கதவை திறந்தான்.
அழுது கொண்டிருந்த ஆதிக் வசியின் பின்னாலிருந்த சின்னபொண்ணுவை கண்டதும் அவளிடம் தாவிக் கொண்டு சென்றான். அவள் குழந்தையை வாங்கி கொண்டு கீழே சென்றாள். “பசிக்குதா குட்டி, சித்தி பால் கலந்து தரட்டுமா?” என்றபடி சமையலறைக்குள் சென்றாள்.
வசீகரன் சரவணனின் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா பிரச்சனை?”
சரவணன் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்ல, “அறிவிருக்காடா, இதுக்கெல்லாமா டைவர்ஸ் பண்றேன்னு சொல்லி அண்ணிய வீட்டை விட்டு அனுப்புவ” என்றான் எரிச்சலுடன்
“இதென்ன சாதாரண விஷயமா? வாழ்ற வீட்ல எவ்வளவு பெரிய பொய்யான நாடகத்தை போட்டிருக்கா. அதுவும் எதுக்கு? வேண்டா இந்த வீட்டு மருமகளா வரக்கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக. அவளும் நானும் லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வீட்ல எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் நாங்க மேஜர் எங்க கல்யாணத்தை நாங்க முடிவு பண்ண எங்களுக்கு உரிமை இருக்குனு பேசி தானே கல்யாணம் நடந்துச்சு?
அப்படியிருக்கறப்போ, உன்னோட கல்யாணத்தை தடை செய்யறதுக்கு அவளுக்கென்னடா உரிமை இருக்கு? எம்எல்ஏ பொண்ணுனா தலைல ரெண்டு கொம்பா இருக்கு? அவ்வளவு அந்தஸ்து பாக்கறவ சாதாரண புரபசர் கூட ஏன் வாழணும்? அதான் அனுப்பிட்டேன்”
“சரவணா, என்னால உங்களுக்குள்ள பிரச்சனைனா கஷ்டமாயிருக்குடா. என்னைமீறி உனக்கெப்படி இந்த விஷயம் தெரிஞ்சுச்சு?”
“உன்னை மீறியா?, அப்போ உனக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் அப்படித்தானே? நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுடா” சரவணன் தம்பியை அதட்டினான்.
வசீகரன் பதில் சொல்லாமல் தொண்டையை செரும, “அம்மாவும் லதாவும் நாடகமாடினது உனக்கு ஏற்கனவே தெரியும். அதனால தான் நீயும் நவ்யாவ கட்டிக்கறதா சொல்லி நாடகமாடி அவங்களுக்கு செக் வச்சிருக்கே, கரெக்ட்டா?” சரவணன் உறுத்து விழித்தான்
வசீகரன் பெருமூச்சுடன் ஆமாம் என்று தலையசைத்தான்.
“அப்போ நீயும் விஷயம் தெரிஞ்சு அமைதியா இருந்திருக்க, நானும் ரஞ்சனியும் அப்பாவும் மட்டும் அம்மாவுக்கு எதுவும் ஆயிடுமோனு பயந்து கலங்கி போயிருந்தோம். அப்படித்தானே?” சரவணன் கோபமாக கேட்க
“அப்படியில்லடா”
“வேறெப்படிடா? அவங்க ரெண்டு பேரும் எங்களை ஒரு விதமா ஏமாத்தியிருக்காங்க. நீ விஷயம் தெரிஞ்சும் எங்க கிட்ட சொல்லாம வேற விதமா ஏமாத்தியிருக்கே. நாங்க மூணு பேரும் தான் முட்டாளா இருந்திருக்கோம்”
“சரவணா, எனக்கும் ஆரம்பத்துல தெரியாதுடா. அப்பாவும் ரஞ்சனியும் கன்வின்ஸ் பண்ணதுல கல்யாணத்துக்கு கூட ஒத்துக்கிட்டேன். அன்னைக்கு ஆப்ரேஷன் பண்ற இடத்துல ரஞ்சனி இருக்க கூடாதுனு அண்ணி ரொம்ப தீவிரமா இருந்தாங்க. அப்போ தான் எனக்கு கிளிக் ஆச்சு. அவங்களுக்கு தெரியாம அவங்களை நோட் பண்ணேன். அவங்களும் ஆப்ரேஷன் முடிஞ்சதுனு ரெண்டு நாள்ல நாடகத்தை முடிச்சிடவும் நானும் அவங்க போக்குலயே விட்டுட்டேன்”
“நாங்க மூணு பேரும் பைத்தியக்காரங்க மாதிரி, ஊர்ல இருக்கற தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கிட்டு அம்மாவுக்கு குணமாயிடணும், ஆப்ரேஷன் சக்ஸஸா முடியணும்னு நெருப்பு மேல இருக்கற மாதிரி இருந்தோம். நீங்க மூணு பேரும் கூலா இருந்திருக்கீங்க. அப்படித்தானே” சரவணன் மூக்குவிடைக்க கேட்க
“சரவணா”
“ஏன்டா என்கிட்ட அப்பவே சொல்லல?” சரவணன் கத்தினான்
“சொன்னா என்னடா பண்ணியிருப்பே? இன்னைக்கு ஆத்திரப்பட்டு அண்ணிய அனுப்பின மாதிரி அப்பவே அனுப்பியிருப்பே, அதான் சொல்லல. நான் உண்மைய சொல்லி உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வரக்கூடாதுனு தான் சொல்லல போதுமா?” என்று வசீகரனும் கத்தினான்.
அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் சத்தம் தரைதளத்திலும் நன்றாகவே கேட்டதால் ரஞ்சனியும் அலமேலுவும் அறையிலிருந்து வெளியே வந்திருந்தார்கள்.
குழந்தைக்கு பாலை புகட்டிக் கொண்டிருந்த சின்னபொண்ணுவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இத்தனை பிரச்சனைக்கும் மூலக்காரணம் தான் தானே என்ற குற்றஉணர்ச்சி அவளை வாட்டி வதைத்தது.
நடராஜன் சோர்வுடன் வீட்டிற்கு வந்தார். அலமேலு கணவரின் களைப்பை கண்டு அவசரமாக தண்ணீர் கொண்டு வந்து நீட்ட, “சின்ன மருமகளே, கொஞ்சம் தண்ணி கொண்டாம்மா” என்றார் மனைவியின் முகத்தை திரும்பியும் பார்க்காமல்
சின்னுவிடமிருந்து ரஞ்சனி குழந்தையை வாங்கி கொள்ள, அவள் அவசரமாக சென்று ஒரு கையில் சாப்பாடு தட்டும், இன்னொரு கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தாள்.
“மாமா, சாப்பிடுங்க” என்று அவரிடம் கொடுத்தாள்
மறுக்காமல் வாங்கி சாப்பிட்டவர், “மேலே இருக்கறவனுங்களையும் கூப்பிட்டு சாப்பாடு போடு. அவனுங்க சண்டை போடறது வாசல் வரைக்கும் கேக்குது” என்றார்.
அவள் மாடிக்கு சென்றபோது இருவரும் மூலைக்கொருவராக முறுக்கி கொண்டு நின்றிருந்தனர்.
“மாமு, மாமா, உங்க ரெண்டு பேரையும் பெரிய மாமா சாப்பிட கூப்பிடறாரு”
“எனக்கு வேணாம்” ரெண்டு பேரும் கோரசாக கூற, “நீங்க வந்தா தான் ரஞ்சனியும் அத்தையும் சாப்பிடுவாங்க” என்று கூறவும் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்.
வசீகரன், சரவணன், ரஞ்சனி மூவரும் சாப்பிட அமர்ந்ததும் சின்னபொண்ணு அலமேலுவையும் அழைத்தாள். “அத்தே சாப்பிட வாங்க”
அலமேலு தன் மூன்று பிள்ளைகளையும் கணவரையும் பார்க்க, அவர்கள் நால்வரும் அலமேலுவின் பக்கம் திரும்பவே இல்லை. அவர்களும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக சாப்பிட்டனர்.
ஆளாளுக்கு அலமேலுவை கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருந்தால் கூட அவர் மனம் சமாதானம் ஆகியிருக்கும். ஆனால் அவர்கள் யாரும் எந்த கேள்வியும் கேட்காகமல் மெளனமாக இருந்தது அலமேலுவுக்கு மிகுந்த குற்ற உணர்ச்சியை தந்தது. ஆனால் அவர்களிடம் சென்று பேசும் துணிவு இல்லை. தலைகுனிந்து அமர்ந்திருந்தார்
சின்னபொண்ணுவிற்கு மனம் கேட்காமல் தட்டில் சாப்பாடு போட்டு வந்து அலமேலுவிடம் கொடுத்தாள். “அத்தே ராத்திரியில மாத்திரை போடணுமில்ல? வெறும் வயித்தோட மாத்திரை போடக்கூடாது. அதுக்காகவாவது சாப்பிடுங்க” என்று அவரிடம் தட்டை நீட்டினாள்.
சொல்லிவைத்தாற் போல நால்வரும் அலமேலுவை திரும்பி பார்க்க, அவர் சட்டென சின்னபொண்ணு நீட்டிய தட்டை வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டு முடிந்ததும் அனைவரும் தூங்க சென்றுவிட சரவணன் குழந்தையை வாங்க கைநீட்டினான், அவன் வராமல் சித்தியின் தோளில் சாய்ந்து கொள்ளவும், “மாமா, ஆதிக் என்கூடவே இருக்கட்டும். நான் பாத்துக்கறேன்” என்று சின்னு குழந்தையை தன்னிடம் வைத்துக் கொண்டாள்.
சரவணன் பதில் பேசாமல் உறங்க சென்றுவிட, சின்னு தங்கள் அறைக்குள் ஆதிக்கை மடியில் வைத்தபடி, “மாமு எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம், எல்லாம் என்னால தானே” என்று ஆரம்பிக்க,
“சின்னு, தேவையில்லாதத போட்டு மூளைக்குள்ள திணிக்காம படிக்கற வேலைய பாரு. சரவணன் பண்ண வேலையால ஆல்ரெடி காண்டுல இருக்கேன்டி, நீயும் ஆரம்பிக்காதே, கடிச்சு வச்சிடுவேன் பாத்துக்க. இவன் அப்பன்கிட்ட கத்தி பேசினதால சாப்பிட்டது ஜீரணமாகி இன்னொரு முறை சாப்பிட்டு வந்திருக்கேன். இப்போ இவன்கூட போராடி இவன வேற தூங்க வைக்கணும்” என்று அவள் மடியில் இருந்த ஆதிக்கை தூக்க முயன்றான்
“ஒன்னும் வேணாம் நீங்க தூங்குங்க. நான் பாத்துக்கறேன்”
வசி பதில் பேசாமல் மனைவியை முறைக்கவும் ஆதிக்கை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் புத்தகத்தை எடுத்த மடியில் வைத்துக் கொண்டாள். அவன் சித்தியிடமே போக வேண்டும் என்று அடம்பிடிக்க, “டேய் நானே இன்னும் அவ மடியில படுத்ததில்லடா” என்றபடி குழந்தையை தன் நெஞ்சில் போட்டு தட்டி கொடுத்தான்.
சிறிது நேரத்திலேயே ஆதிக்கும் வசியும் உறங்கிவிட, சின்னு இருவரையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நள்ளிரவு வரை படித்து விட்டு உறங்கினாள்.
மறுநாள் வசீகரன் சரவணனிடம் சென்று, “சரவணா எப்போ போய் அண்ணிய கூட்டிட்டு வரப்போறே?”
“இப்போதைக்கு ஐடியா இல்ல” விட்டேற்றியாக பதில் வந்தது.
“டேய் உங்க சண்டையில குழந்தை என்னடா பண்ணுவான்?”
சரவணன் பதில் சொல்லவில்லை. குழந்தையை வசீகரனிடமிருந்து வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்று விட்டான்.
வேறுவழியின்றி வசீகரன் சின்னபொண்ணுவை அழைத்து சென்று கல்லூரியில் டிராப் செய்துவிட்டு, “சின்னு பிரேக் டைம்ல ஆதிக்கை பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
அன்று மதிய இடைவேளையின் போது புது எண்ணிலிருந்து சின்னபொண்ணிற்கு வீடியோ கால் வரவும் தயக்கத்துடன் அதை ஏற்றாள்.
“வேண்டா” லதா பேசவும்
“மேடம் நீங்களா? என் நம்பர் எப்படி?”
“மேடம்னு சொல்லாத அக்கானு சொல்லு. உன் நம்பரை ரஞ்சனிகிட்ட வாங்கினேன்”
“குழந்தைய பாக்கணுமா? இருங்க கூட்டிட்டு வந்து காட்றேன்”
“நான் உன்கிட்ட பேசணும்னு தான் போன் பண்ணேன்”
“சொல்லுங்கக்கா”
“நடந்ததெல்லாம் நீயும் கேள்வி பட்டிருப்பே. அதை நியாயப்படுத்தி பேச மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புனு எனக்கு நல்லாவே புரிஞ்சது. நானும் சரவணனும் லவ் பண்ணும் போது பணம் ஸ்டேட்டஸ்லாம் ரெண்டாம் பட்சமா எனக்கு தோணுச்சு. ஆனா அந்த வீட்டோட மருமகளா ஆன பிறகு பணம் ஸ்டேட்டஸ முக்கியமா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அதுல வந்த குழப்பத்துல உன்னையும் வசியையும் பிரிக்க நினைச்சிட்டேன். என்னை மன்னிச்சிடு வேண்டா”
“அக்கா, என்கிட்ட போய் ஏன்க்கா மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க?”
“செஞ்ச தப்பு இப்போ தான் புரிஞ்சிருக்கு. அதான் உடனே மன்னிப்பு கேட்டுடலாம்னு போன் பண்ணேன். ஆதிக் எப்படியிருக்கான்?”
“காலேஜ்ல சமத்தா உட்கார்ந்துட்டு மாமா பாடம் எடுக்கறத பாத்துட்டு இருக்கான். நீங்க எப்போ வீட்டுக்கு வர்றீங்க?”
“அப்பாவும் புள்ளையும் என்னை தேடவே இல்லையா” என்றாள் பெருமூச்சுடன்
“அக்கா உங்க ஞாபகம் வரும் போதெல்லாம் ஆதிக் மாமாகிட்ட கூட போகாம என்கிட்டயே தான் இருக்கான். நான் தான் அம்மா ஊருக்கு போயிருக்காங்க வந்திடுவாங்கனு சொல்லி வச்சிருக்கேன்”
“சரி வேண்டா, அவனை நல்லா பாத்துக்கோ. சரவணன் கோபம் குறைஞ்சதும் நான் வீட்டுக்கு வந்துடுவேன். குழந்தைக்கு தாய்ப்பால் மறக்க வைக்கறதுக்காக வந்திருக்கறதா எங்கவீட்ல சொல்லியிருக்கேன்”
“சரிங்கக்கா, மாமா உங்களை கூட்டிட்டு போற வரைக்கும் நீங்க வீடியோ கால்ல குழந்தைய பாருங்க. உங்கள பாத்து அவன் கேட்க ஆரம்பிச்சா மாமா உங்களை கூட்டிட்டு வர வாய்ப்பிருக்கு” என்றவள் அன்றிலிருந்து ஆதிக்கை வீடியோ காலில் லதாவிடம் பேச வைத்தாள்.
இப்படியே நாட்கள் கடந்தது, பகலில் சரவணன் குழந்தையோடு கல்லூரியில் பாடம் நடத்தினான். ஆதிக்கும் பெரிதாக அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை. காலையில் புது இடத்திற்கு செல்வதும் அவ்வப்போது சித்தி வந்து சாப்பாட்டை ஊட்டி விட்டு சென்றதும் வகுப்பு மாணவர்களுடன் அவனும் சமத்தாக உட்கார்ந்துக் கொண்டு தந்தை எடுக்கும் பாடத்தை கவனிக்க தொடங்கியிருந்தான்.
இரவில் இரு அறைகளும் அவனுக்காக பூட்டாமலே இருக்கும். அதனால் அவனுக்கு அம்மா ஞாபகம் வரும் போது எழுந்து வசீகரன் அறைக்கதவை திறந்துக் கொண்டு சின்னுவிடம் தஞ்சமடைவான். மற்ற நேரங்களில் சரவணனுடன் தூங்கிவிடுவான். இதுவே வழக்கமாகி விட சரவணன் லதாவை அழைத்து வருவதாக தெரியவில்லை என்பதால் வசீகரன் கடுப்பாகி விட்டான்.
“என்னடி புள்ள இவன்? அம்மா வேணும்னு அழுவான்னு பாத்தா, சமத்தா இருக்கான்? உன்கிட்ட ஒட்டிக்கிட்டதால தான் பிரச்சனை. பேசாம நீ இவனை கிள்ளி விட்ரு சின்னு. அப்போ தான் உன்கிட்ட வராம சரவணன்கிட்ட போய் அம்மா வேணும்னு தொல்லை பண்ணுவான்” என்றான் வசி.
“அச்சோ, குழந்தைய போய் கிள்ள சொல்றீங்களே, போங்க மாமு. அவன் தினமும் வீடியோ கால்ல அக்காவ பாத்துட்டு தான் இருக்கான்”
“இது எப்போலருந்து?”
லதா தன்னிடம் பேசியதை கூறினாள்
“தினம் வீடியோ கால்ல பாக்கறதே போதும்னு இந்த வாண்டு அம்மா வேணும்னு கேக்காம இருக்கானா?” என்று அவன் ஆதிக்கை செல்லமாக கிள்ளினான்.
நாட்கள் வாரங்களாகி ஒரு மாதம் ஆகிவிடவும் லதா பொறுக்க முடியாமல் சரவணன் பணிபுரியும் கல்லூரிக்கே வந்தாள். கடைநிலை ஊழியர் மூலம் லதாவின் வருகையை அறிந்துக் கொண்ட சரவணன் விருந்தினர் அறையில் அவளை காண சென்றான்.
“சரவணன் நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நான் யார் கால்ல வேணும்னாலும் விழுந்து மன்னிப்பு கேக்கறேன். என்னை பாக்காம என்கிட்ட பேசாம இருக்காதீங்க. என்னால உங்களையும் குழந்தையையும் பாக்காம இருக்கவே முடியல” என்றாள் அழுதுக் கொண்டே
“குழந்தை வேணும்னா உன்கூட தூக்கிட்டு போயிடு. குழந்தைய காரணம் காட்டி என்கூட சேர்ந்து வாழலாம்னு மட்டும் நினைச்சிடாத” என்றவன் சொன்னது போலவே ஆதிக்கை தூக்கி வந்து அவளிடம் கொடுத்துவிட்டு செல்ல லதா விக்கித்து போய் விட்டாள்.
சின்னபொண்ணுவின் மூலம் விஷயம் கேள்விபட்ட வசீகரன், சரவணனிடம் வந்தான்.
“டேய், என்னடா நினைச்சிட்டு இருக்கே? தப்பு செஞ்சிட்டு மன்னிப்பும் கேட்டாங்க இல்ல? இன்னும் எதுக்கு முறுக்கிக்கிட்டு திரியறே”
“போய் உன் வேலைய பாருடா, எனக்கு பின்னாடி பொறந்துட்டு பெரிசா புத்தி சொல்ல வந்துட்டான்” என்றுவிட்டு சரவணன் தன் வகுப்பிற்கு சென்றுவிட வசீகரனுக்கு அண்ணனின் மீது மிகுந்த கோபமாகி விட்டது. எப்படியோ போகட்டும் என்று தன் தொழிலை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.
இப்படியே அவரவர் பிரச்சனைகளில் அவரவர் மூழ்கிவிட நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றது. வீட்டினர் அனைவரும் ஒரு மனதாக அலமேலுவிடம் மட்டும் பாராமுகமாக இருக்கவும், தான் செய்தது மிகப்பெரிய தவறு என்று உணர ஆரம்பித்திருந்தார்.
இத்தனை வருட திருமண வாழ்க்கையில் நடராஜன் ஒருநாள் கூட மனைவியிடம் பேசாமல் இருந்ததில்லை. ஆனால் இப்போது மனைவி எதிரில் நின்றிருந்தாலும் மெளனமாக கடந்து சென்று விடுகிறார். மனைவியின் கையால் தண்ணீரை கூட குடிப்பதை முற்றிலும் தவிர்த்தார்.
சரவணன் மனைவியுடன் இருந்த பிரச்சனையில் எதையும் கவனிக்க வில்லை. வசீகரனுக்கு அண்ணன் மேல் கோபம் அத்தோடு வேலை பளுவும் அதிகமாக இருந்தது. ரஞ்சனியும் சின்னபொண்ணும் படிப்பில் முழ்கியிருக்க அலமேலு கவனிப்பாரின்றி தனக்குள் பலத்த யோசனையிலேயே இருந்தார்.
நடந்த பிரச்சனையால் லதாவும் குழந்தையும் இல்லாமல் வீட்டில் அனைவருமே கடமைக்கு வாழ்வது போல சென்று வந்து கொண்டிருந்தார்கள். அலமேலுவுக்கு குற்ற உணர்ச்சி ஒருபுறம், தன்னால் சரவணனனும் லதாவும் பிரிந்து வாழ்கிறார்களே என்ற கவலை மறுபுறம் என்று மனதை வாட்டி வதைத்தது.
இவையனைத்தையும் விட கேள்வி கேட்க வேண்டிய வேண்டா இதுவரையில் அலமேலுவை ஒரு வார்த்தை கூட என்னவென்று கேட்கவில்லை. அவளின் மெளனம் வேறு அவரை வதைத்தது. மாறாக அவள் தான் தினமும் அவர் சாப்பிட்டாரா? மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாரா என்று கவனித்துக் கொண்டாள். சின்னபெண்ணிடம் மன்னிக்க சொல்லி யாசிக்க மனது இடம் தரவில்லை. அதே சமயம் அவள் செய்யும் பணிவிடைகளை ஏற்கவும் குற்றஉணர்ச்சியாக இருந்தது. மறுத்தால் அவள் மனது சங்கடப்படுவாளோ என்றும் தோன்றியது.
ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கிவைத்ததால் ஏற்பட்ட மனஅழுத்தம், இரவின் தனிமையில் பலவிதமான எண்ணங்கள் தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்ததால் நெஞ்சு வலியாக உணர்ந்தார். அன்று வீட்டில் யாருமில்லை. வெளியே வசியின் குரல் கேட்டது, அழைக்கலாம் என்றால் வலியில் உயிர் போனது, சத்தமாக அழைக்க முடியவில்லை. எழ முயன்று முடியாமல் தரையிலேயே மடிந்து அமர்ந்தார்.
“சின்னு, கோச்சிங் கிளாஸ் லீவுனு கிச்சன்ல வேலை பாக்க கிளம்பிடாதே. படிச்சிட்டு இரு. நான் வேலை முடிஞ்சதும் வந்துடறேன்” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்புவது தெரிந்தது.
சின்னபொண்ணு ஹாலில் யாருமில்லாததால் மாடிக்கு செல்ல எத்தனித்தாள். ‘காபி போட்டு அத்தைக்கும் கொடுத்துட்டு நாமளும் குடிச்சிட்டு அப்புறம் படிக்கலாமே’ என்று தோன்ற மீண்டும் கீழே வந்தவள் சமையலறைக்குள் சென்று இருவருக்கும் காபியை கலந்து, ஒரு கப்பை மட்டும் எடுத்துக் கொண்டு அலமேலுவின் அறைக் கதவை தட்டினாள்.
“அத்தே சாரி, மேடம் காபி”
உள்ளேயிருந்து எந்த சத்தமும் வராமல் போகவே மெல்ல கதவை கொஞ்சமாக திறந்து எட்டி பார்த்தாள்.
அலமேலு தரையில் குப்புற படுத்து கிடப்பதை பார்த்து காபி கப்பை அப்படியே கீழே போட்டுவிட்டு, “ஐயோ என்னாச்சு அத்தே” என்று பதட்டத்தோடு ஓடி அவரை தூக்கி தன் மடியில் கிடத்தினாள்.
அலமேலுவால் பேச முடியவில்லை. நெஞ்சை தொட்டு காட்டினார்
“நெஞ்சு வலிக்குதா?”
“ம்” அலமேலு முனகவும் அவசரமாக தன் சுடிதார் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து வசீகரனுக்கு போன் செய்தாள்.
“மாமு, அத்தைக்கு நெஞ்சு வலியாம், கொஞ்சம் சீக்கிரம் வாங்க”
“சின்னு, வீட்ல யாரும் பேசறதில்லனு அவங்க மேல அட்டென்ஷன கொண்டு வர்றதுக்காக நடிப்பாங்கடி. நீ அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே. போய் படிக்கற வேலைய பாரு” என்று வசீகரன் போனை கட் செய்தான்.
முதல்முறை நெஞ்சுவலி என்று சொன்ன போது வசீகரன் துடித்த துடிப்பும் அவருடைய பெரிய உருவத்தை தூக்கி கொண்டு அவன் பதட்டத்துடன் ஓடி அவரை காரில் ஏற்றியதும் அலமேலுவின் நெஞ்சில் நெருஞ்சிமுள்ளாய் குத்தியது. அது மேலும் நெஞ்சை அழுத்த, கதறி அழக்கூட முடியாமல் மூச்சுக்கு திணறினார். உடல் வியர்க்க தொடங்கியிருந்தது
(தொடரும்)
error: Content is protected !!
Karma returns alamu