Skip to content
Post Views: 214
ஆகாயமே என் ஆதாரமே 13
இந்தியா வந்ததில் இருந்து சீதாவுக்கு மனம் கொள்ளவில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் மனம் முழுவதும் லியோ வசம். காதலின் வாசம் அவளை பித்து நிலைக்கே தள்ளியது. வீட்டிலும் வாய் திறந்து சொல்ல இயலாத நிலையை அறவே வெறுத்தாள் சீதா.
லியோ வேறு தினமும் அழைக்கும் நேரமெல்லாம் வீட்டில் நமது காதல் பற்றி சொல்லிவிட்டாயா என்று கேட்டான்.என்ன பதில் சொல்ல முடியும் அவளால். மென்று விழுங்கினாள்.
இதற்கெல்லாம் ஒரு நாள் முடிவு என்பது வந்து விட்டது. சீதா குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் லியோ வாட்சாப்பில் அழைப்பு விடுக்க , அந்நேரம் பார்த்து அவளது அறைக்குள் வந்த ராதா பார்த்தது சீதாவும் லியோவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த நெருக்கமான படத்தை தான் . லியோ எண்ணுக்கு சீதா அந்த படத்தை நிறுவி இருந்தாள் . லியோவின் அழைப்பு ஓய்ந்தாலும், ராதாவின் மனம் ஓயவில்லை. பெண் காதலில் சிக்குண்டு இருக்கிறாள் என்பதை அந்தபடம் தான் சொல்லிவிட்டதே! நேராக சீதாவிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் ராதாவின் பரிதவிப்பு மட்டுப் படுவதாக இல்லை.இரண்டாவது நாள் ரத்தக் கொதிப்பு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள் ராதா.
Advertisement
மூன்று நாட்களை மருத்துவ மனையில் கழித்துவிட்டு வந்த அம்மாவிடம் பெண்ணுக்கு வெகுவாக தயக்கம் வந்துவிட்டிருந்த நிலையில் இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. ஜானகியும் தனது கணவனின் அலுவகள பயணத்தில் தானும் சேர்ந்துகொண்டு சிம்லா சென்று இருக்கிறாள்.வருவதற்கு இன்னமும் ஐந்து நாட்கள் ஆகும்.மொத்தம் பத்து நாட்கள் பயணம். அலுவலக ஆடிட்டிங் சம்மந்தமான பயணம்.அவளுக்கு அழைத்து சொல்லலாம் என்றால் அழைப்பு செல்லவே இல்லை.ராகவனோ அழைப்பை ஏற்பதாக இல்லை. இதற்கு மேல் அவர்களை அழைப்பதால் ஒன்றும் பிரயோசனம் இல்லை எண்டு கிருஷ்ணனும், சீதாவும் விட்டுவிட்டார்கள்.சீதாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சுதாவும் அவள் கணவரும் உதவிக்கு வந்தார்கள். எல்லோருக்கும் வயதும் கூடுகிறது. குடும்ப பொறுப்புகளும் வேறு பரிமாணங்களை காட்டுகிறது.
அவர்கள் வீட்டில் பேரன் பேத்திகளை கவனிக்க வேண்டும். பிள்ளைகளும்,மருமகள்களும் வேலைக்கு செல்பவர்கள். இரண்டு நாட்களுக்கு சுதாவும்,அடுத்த இரண்டு நாட்களுக்கு அவள் கணவரும் மாற்றி மாற்றி வந்து சென்றார்கள். அடுத்த நான்காம் நாளில் ராதா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். இவையெல்லாம் முடிந்து சீதா அலுவலகம் செல்லவும் தொடங்கி விட்டாள் . இரவு நேரத்தில் லியோ அழைக்கும் நேரத்தில் அழுகையும் விசும்பலுமான நாட்கள்.
லியோ தனது பெற்றவர்களிடம் என்ன சொன்னான் என்று தெரியாது.அடுத்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று அனிதாவும் லூயிசும் லியோவும் சீதாவின் வீட்டு வாயில் காலிங் பெல்லை அழுத்திக் கொண்டு நின்றிருந்தார்கள்.
Advertisement
Advertisement
அன்று சீதாவுக்கு அலுவலக விடுமுறை என்பதால் வீட்டில்தான் இருந்தாள் .வாயிற்கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.இதையெல்லாம் அவள் இதுவரை யோசித்து இருக்கவில்லை. அவர்களை உள்ளே அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் அப்படியே நின்று விட்டாள் . வாசலில் அழைத்தவர்கள் யார் என்று வாசலுக்கு வந்த கிருஷ்ணனுக்கு வந்திருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. பார்க்க வெளிநாட்டவர்களாய் இருக்கவே தனது மகளுக்கு பரிச்சயம் ஆனவர்கள் என்பது வரை அவருக்குப் புரிந்தது.
மகளை ஒரு கேள்வியோடு கிருஷ்ணன் பார்க்க, சீதா அவர்களை உள்ளே வருமாறு வரவேற்றாள். அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததனாலேயே அவளுக்குள் பயப்பந்து உருண்டது.அதை அவளது முகம் அப்பட்டமாக எடுத்துக் காட்டியதில் நிச்சயம் லியோ குழம்பி போனான் .
அனிதாவுக்கு சீதாவின் நிலை புரிந்தது.இந்தியக் குடும்பங்களில் வெளிநாட்டு வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண்ணைக் கொடுப்பார்கள்.அதுவும் தேடித்தேடி. ஆனால் வெளிநாட்டை சேர்ந்த மாப்பிள்ளைக்கு கொடுக்க மாட்டார்கள்.அவர்களது கலாச்சாரம் வேறு என்று பேசுவார்கள். இதோ இதையெல்லாம் அனிதாவும் கடந்து வந்தவர் தாம். அவருக்கு தனது காதல் மீதான நம்பிக்கையும், மனதின் தைரியமும் இப்போது சீதாவுக்கு இருந்தால் நிச்சயம் இந்த திருமணம் நடக்கும்.பேசித்தான் பார்க்கவேண்டும்.சீதாவின் முகமோ பயத்தில் வியர்த்து வழிகிறதா இல்லை சென்னையின் தட்பவெப்ப நிலையான என்று கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. அடுக்களையில் இருந்து ராதாவின் குரல் யாரென்று விசாரித்தது. எதற்கும் சீதாவிடமிருந்து பதில் வரவில்லை. எல்லாவற்றையும் கிருஷ்ணன் குறிப்பு எடுத்துக்கொண்டு தான் இருந்தார்.
Advertisement
சீதா வந்தவர்களை உட்கார சொன்னாள் .உள்ளிருந்து ஒரு ட்ரேயில் மூன்று கப்புகள் நீரை எடுத்து வந்து கொடுத்தவளை கள்ளப் பார்வை பார்த்தான் லியோ.எந்த அலங்காரமும் செய்யாமல் சாதாரண ஒரு பருத்தி குர்தி பைஜாமா அணிந்து கொண்டு, தலைமுடியை காய வைக்கும் தோரணையில் ஒரு நுனி முடிச்சிட்டு தன் எதிரில் நின்று கொண்டிருப்பவளை அவ்வளவுக்காய் பிடித்தது அவனுக்குள்.
அனிதா தனது மகனின் பார்வையை கண்டு கொண்டவருக்கு மனதில் அவ்வளவு யோசனை. சமையல் அறையிலிருந்து தாளிப்பு வாசனை மூக்கை துளைத்தது. வெகுநேரமாக வீடு அமைதியாக இருப்பதை கவனித்துக்கொண்டே ஹாலுக்குள் வந்தாள் ராதா.வந்திருப்பவர்களை அவதானித்தவாறே மகளிடம் ,”யாரு இவங்க சீதா. பிரான்ஸ்ல பழக்கமானவங்களா..உன்னை பார்க்கவென்று வந்திருக்காங்களா…” என்று மெல்லிய குரலில் கேட்க அதுவும் அனிதாவின் காதுகளில் விழுந்தது. அனிதாவுக்கு தாயமொழியான பஞ்சாபியே அதிகமாக மறந்து விட்டது. ராதா பேசும் தமிழ் எப்படி புரியும்?
லியோ லேசாக சீதாவை நோக்கி ஒற்றை புருவத்தை தூக்கினான். அதில் மயங்க எத்தனித்த மனதை கடிவாளம் போட்டு இழுத்தவள், எதுவும் பேசுவதாக இல்லை. பொறுத்து பார்த்த லூயிஸ் தானே கிருஷ்னனிடம் தன்னையும் ,தனது குடும்பத்தையும் அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார்.அவரது ஆங்கிலத்தில் வெகுவாக பிரெஞ்சு வாசம். கிருஷ்ணன் அந்த வார்த்தைகளை உள்வாங்கியர் வெகுவாக மனதில் அதிர்ச்சி ஆனார். மகளின் முகத்தில் கலவரம்.
ராதாவுக்கு ஆங்கிலம் தான் புரியாதே தவிர , சூட்சுமம் அதிகம்தான். “என்ன சீதா… வந்திருக்கிற பையனோட காதலா..அதுக்குதான் அவங்க இங்கே வந்திருக்கங்களா ..என்று மகளின் முகத்தை பார்த்து மெல்லிய குரலில் கேட்க அவளது முகத்திலோ கலவரம்.
அதை குறித்துக் கொண்ட ராதா கணவரிடம் ,”அவங்ககிட்டே கோவமா ஏதும் பேசாதீங்க. யோசிச்சு சொல்ல ஒரு மாசம் நேரம் வேணும்னு கேளுங்க. நாங்களே போன் பண்றோம்னு சொல்லிடுங்க”என்ற மனைவியை வினோதமாக பார்த்த கிருஷ்னன் அப்படியே சொல்லிவிட்டார்.
வந்தவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் நன்றாகவே பேசி “இன்னும் நாங்க இதை பற்றி யோசிக்கல.சீதாவும் எதுவும் சொல்லல. எங்களுக்கு யோசிக்க அவகாசம் வேணும். ஒரு மாசம் டைம் குடுங்க”என்றவரை வந்த லியோவின் பெற்றவர்கள் மட்டும் அல்ல. சீதாவும் ஆச்சர்யமாக பார்த்தாள் .
அவர்கள் சென்ற பிறகு ராதாவும் கிருஷ்ணனும் தங்கள் மகள் சீதாவிடம் பேச்சு கொடுத்து லியோவுடனான காதல் பற்றி தெரிந்து கொண்டார்கள்.ராதாவுக்கு மகளின் மீது அவ்வளவு கோவம் வந்தது. இன்னும் சீதா லியோவுடன் ஏற்பட்டிருந்த உடல் சார்ந்த உறவு பற்றி எதுவும் சொல்லவில்லை.
ராதா மனதில் இதற்க்கு மேல் தான் டென்சன் கொண்டால் நிச்சயம் உடல்நிலை மோசமாக கூடும் என்று இந்த பிரச்னையை அமைதியாகவே கையாள நினைத்தாள் .வெளிநாட்டு வெள்ளைக்காரனை நம்பி தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லவே!
அதே சமயம் ,இரண்டு வருஷங்களில் சீதாவுக்கு வெளிநாட்டு வாசத்தின் பலனாக நல்ல தைரியம் வந்திருப்பதாக பெற்றவர்கள் உணர்ந்தார்கள். லியோவின் குடும்பம் ஒரு வாரம் இந்தியாவை சுற்றி பார்த்துவிட்டு கிளம்பி சென்று விட்டார்கள்.
சரியாக ஒரு மாதம் கழித்து லூயியிடம் வாங்கி வைத்திருந்த மெயில் ஐடிக்கு, “தங்களுக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் எண்ணம் நிச்சயம் இல்லை என்றும்,தயவு செய்து இனிமேல் தங்கள் பெண்ணுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து ,லியோவுக்கு சீக்கிரம் நல்ல பெண்ணுடன் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் ” என்று அனுப்பி வைத்தார் கிருஷ்னன்.
அதற்கு பிறகு லியோ மறந்தும் சீதாவுடன் தொடர்பில் வரவில்லை. அவளுடைய வாட்சாப் மெசஜுகளுக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை. இவள் அழைத்து பேச முயன்றாலும் இவளது அழைப்பை அவன் ஏற்கவில்லை.சீதா துவண்டு போனாள்.ஏறத்தாழ ஆறுமாத காலங்கள்,பைத்தியம் பிடித்தது போல இருந்தது சீதாவுக்கு.
வீட்டில் கிருஷ்னனும் ராதாவும் சீதாவிடம் லியோ பற்றி எந்த வார்த்தைகளையும் விடவில்லை.கண்டித்தும் பேசியது இல்லை. சீதா மனதில் கதறினாள். லியோ அவனுடனான அந்தரங்க நேரங்கள் அவளை மேலும் சோர்வு அடைய செய்தது. ஆறுமாதங்கள் கழித்து முகநூலில் அனிதா லூயி தம்பதி தங்களது மகன் லியோவின் திருமண படத்தை வெளியிட அதை பார்த்த சீதாவுக்கு பெரிய அதிர்ச்சி.அவளால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
அதற்குப் பிறகு துவண்டிருக்கும் மனதை வேலையில் செலுத்த,சம்பளம் அதிகம் ஆனது.ராகவன் அடிக்கடி அலுவலக வேலையாக சென்னை வந்து சென்றான். ஜானகி மறந்தும் சென்னை மண்ணை மிதிப்பதாக இல்லை. அவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வருஷங்கள் முடிந்திருக்க, ராகவனின் அம்மா,”டேய் ராகவா,கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சேப்பா.யாராவது நல்ல லேடி டாக்டரை பாருங்க.குழந்தை உண்டாகலையே! என்று ஆரம்பித்துவிட்டார். ராகவனின் மனத்திலும் இதுபற்றிய எண்ணங்கள் உண்டு. ஜானகி இன்னமும் ஒரு வருஷம் போகட்டுமே.இப்போ குழந்தைக்கு என்ன அவசரம் என்றுவிட்டாள் . மனைவியை இந்த விஷயத்தில் கட்டாயப் படுத்த ராகவனுக்கும் மனது இல்லை.
ஜானகி மாமியாரிடம் அதிகம் பேசுவதில்லை.அதுபோல் பெற்றவர்களிடம் அதிகம் வைத்துக் கொள்வது இல்லை.சென்னை வரும் சமயங்களில் அவன் மட்டும் சென்று மாமியார் மாமனாரை பார்த்துவிட்டு வருவான். அதைப்பற்றி கூட ஜானகி பெரியதாக கேட்டுக்கொள்ள மாட்டாள்.
ஆரம்ப காலங்களில் ராகவனுக்கு ஜானகி ஒரு புதிராக இருந்தாள் .இப்போது அவளின் குணம் பழகி விட்டது.இருவரும் குடும்பங்களில் நடந்த திருமண விழா, புது மனை புகுவிழா போன்றவற்றிற்க்கு செல்லும் பொழுது இன்னமும் குழந்தை இல்லையா என்ற கேள்வி வந்து நிற்க ஜானகிக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது. அதே சமயம் இன்னமும் சம்பளம் அதிகம் என்று ராகவன் பூனாவில் வேலை தேடிக் கொண்டான்.
இருவரும் அங்கே செல்லவும் பூனா முழுவதையும் இருவரும் சுற்றிப் பார்த்தார்கள். லோனவாலா ,மஹாபலேஸ்வர் ,மும்பை என்று அவர்களது பயணம் நீண்டது. அங்கே சென்ற பிறகு ராகவனின் சென்னை பயணங்கள் குறைந்து போனது. கணவன் மனைவி இருவருக்குமான நெருக்கம் அதிகமானது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஜானகி கரு தரித்தாள் .ராகவன் அவளை கொண்டாடினான்.
மசக்கை அவளை ஆட்டிப் படைக்க பாதிநேரம் மயக்கம், மீதி நேரம் தூக்கம், எழுந்து கொள்ளும் நேரம் வாந்தி என்று அவள் நாட்கள் ஓட தனியே சமாளிக்க முடியாமல் தவித்தான் ராகவன்.
தனது அம்மா ராதாவிடம் ஜானகி,”ம்மா…ரொம்பவே படுத்தி எடுக்குது.கொஞ்சநாள் இங்கே வந்து இருக்க முடியுமா உங்களால “என்று உதவியாகத் தான் கேட்டாள் .
ஏற்கனவே ஜானகி மீது இருந்த அதிருப்தி .கோவம்.ஜானகி மறுத்துவிட்டாள் .”இங்கே கல்யாணம் ஆகாம சீதா இருக்கா.அவளுக்கு வரன் பாக்கறோம்.அப்பாவும் தனியா இங்கே வேலைக்கும் போய்ட்டு வந்து…ப்ச்..நீயே சமாளிச்சுக்கோ. பிரசவம் பாக்க இங்கே வா. கடமையை செஞ்சு அனுப்பறேன்”என்றுவிட்டாள் .
தானும் அப்பாவும் வருஷ கணக்கில் சென்னையில் இருந்ததும், சீதாவும் அம்மாவும் பெங்களூருவில் இருந்ததும் ஞாபகம் வர, ஜானகி மனதில் கசப்பு வழிந்தது. ஒன்றும் சொல்லாமல் வைத்து விட்டாள் . அதேசமயம் ராகவன் தனது அம்மாவிடமும் தங்கையிடமும் புலம்பி தீர்த்தான். ராகவனின் தங்கை தனது அம்மாவிடம் பேசும்பொழுது ,”ம்மா…அவன் தனியா தவிக்கிறான்.அவளுக்கும் சுத்தமா முடியல.சொன்னாலும் சொல்லாட்டாலும் அவ வயத்துல இருக்குறது உன்னோட பேரனோ,பேத்தியோ தானே. கோவத்தை மூட்டை கட்டி வச்சிட்டு கிளம்புற வழிய பாரு” என்றாள் .
ராகவனின் அம்மாவுக்கு அங்கே செல்வது கடினம் இல்லை.மருமகளுக்கு தன்னை சுத்தமாக பிடிக்காது எனும் பொழுது தான் அங்கே சென்றால் வரவேற்பாளா..இப்போது இருக்கும் நிலையில் அந்த பெண் தேவை இல்லாத டென்சன் எடுக்க வேண்டாமே..என்றுதான் அமைதியாக இருப்பது.
ஒரு கட்டத்தில் ராகவன் ஓய்ந்து போய் தனது அம்மாவுக்கு அழைத்து விட்டான்.”ம்மா..வேலைக்கு போகவே பயந்து வருதும்மா..இவளை தனியா வச்சிக்கிட்டு .பாவமா இருக்கு. சுருண்டு கிடக்குறா”என்று சொல்லவும் அதற்க்கு மேல் தாமதிக்காமல் ராகவனின் அம்மா புனே சென்றார்.அன்று முதல் மருமகளின் உடல்நலம் அவரது பொறுப்பானது.
மாதங்கள் நகர ஜானகிக்கும் கொஞ்சம் மனதும் உடலும் தெளிந்தது. ஏழாம் மாதம் சடங்கு,சம்பிரதாயங்கள் முடிந்து ஜானகி சென்னை வரவும்,மகனுக்கு சமைத்து போட்டுகொண்டு ராகவனின் அம்மா பூனாவில் தங்கிவிட்டார். ஜானகிக்கு அம்மா வீட்டில் மனது ஒட்டவில்லை.
ஏற்கனவே அவள் வேலை பார்த்த மருத்துவவமனைக்கு சென்று மகப்பேறு மருத்துவரை பார்த்து செக் அப் செய்து கொண்டாள் . அந்த வருஷ மே மாத இறுதியில் ராகவனின் மகன் பிறந்தான்.ராகவனும்,அவன் அம்மாவும் வந்து பார்த்தார்கள்.ராகவனின் அம்மா பதினோராம் நாள் பெயர் சூட்டு விழாவுக்காக சென்னையில் தங்கிவிட ராகவன் மட்டும் அலுவலகம் காரணமாக பூனா சென்றான்.
error: Content is protected !!