Skip to content
Post Views: 96
அத்தியாயம் – 2
அதிகப்படி வகுப்புகள் என்பதால் பெரும்பாலான டிபார்ட்மெண்ட் மாணவர்கள் வரவில்லை. வகுப்புகளுக்கும் நேரக் கட்டுப்பாடு இல்லை. வழக்கமான உணவு இடைவேளை வரும் முன்னரே மணிமாலாவிற்கு கிளாஸ் முடிந்து விட, அவள் எழுந்துக் கொண்டாள்.
அவளின் தோழிகள் சிலர் “மணி, என்ன அதுக்குள்ளே எழுந்துட்ட? லஞ்ச் ஹவர் ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கே” என்றனர்.
“இல்லைபா. கொஞ்சம் டையர்டா இருக்கு. சோ மெஸ்லே சாப்பிட்டு, ரூமில் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரேன்” என்றாள்.
Advertisement
மற்றவர்கள் தோளைக் குலுக்க, மணிமாலா மட்டும் தனியாகக் கிளம்பினாள். எழிலன் கூறியபடி ஜியாலஜி டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப் ரூம் சென்று நின்றாள். அங்கே டிபார்ட்மெண்ட் ஹெட் மட்டும் அமர்ந்திருக்க, வேறு யாரும் இல்லை.
“மே ஐ கம் இன் மேடம்?” என வினவினாள் மணிமாலா.
நிமிர்ந்து பார்த்த டிபார்ட்மெண்ட் ஹெட், “கம் மா” என்றார். அவர் தான் மலர்விழி. எழிலனின் அன்னை.
Advertisement
தயங்கியபடியே உள்ளே வந்த மணிமாலா, “எழிலன் சர் உங்களைப் பார்க்கச் சொன்னார் மேடம்” என்றாள்.
Advertisement
மலர்விழிக்கு இன்றைக்கு வகுப்புகள் இல்லை. வீட்டில் தான் இருந்தார். ஒரு மணி நேரம் முன் எழிலன் தன் அன்னைக்கு கல்லூரிக்கு வருமாறு மெசேஜ் அனுப்பியிருந்தான்.
மலர்விழியிடம் மணிமாலா உணவு இடைவேளை முழுதும் பேசிவிட்டு வெளியே வந்தாள். தன்னுடைய வகுப்பிற்கு மணிமாலா செல்ல, மலர்விழியும் உடன் வந்தார்.
வகுப்பறையின் வாசலில் “தைரியமா இரு. உன்னை மீறி எதுவும் நடக்காது. நான் சீக்கிரமே உன்னோட பேரண்ட்ஸ் கிட்டே பேசறேன்” என்றார் மலர்விழி.
Advertisement
“தாங்க்ஸ் மேம்.” எனக் கூறி வகுப்பறைக்குச் சென்றாள் மணிமாலா.
அதன் பின் மலர்விழி ஸ்டாஃப் ரூம் செல்ல, எழிலன் காத்திருந்தான்.
தன் அன்னையைக் கண்டதும், “என்ன பிரச்சினைமா அந்த பெண்ணிற்கு?” எனக் கேட்டான்.
“ஹாஸ்டல்லே நிறையப் பிரச்சினைகள் இருக்கு. நம்ம ஹாஸ்டல் ஸ்டூடண்ட்ஸ் சிலர் சரியில்லை. அவங்களை ஐடென்டிபை பண்ணச் சொல்லிருக்கேன். வார்டனுக்குத் தெரியாம பாய்ஸ் கூட அவுட்டிங் போயிருக்காங்க. அவங்க ரோல் கால் கரெக்ட் பண்ண, அட்மின் ஸைட்லர்ந்தும் யாரோ ஒருத்தர் ஹெல்ப் பண்ணறாங்க. அவங்க அந்த ஸ்டூடண்ட்க்கு ரிலேடிவ் போலிருக்கு. அதுக்கு கேட்கீப்பரும் கூட்டு. மணிமாலா அதை எல்லாம் பார்த்திருக்கா. அதை வெளியில் சொன்னா, அவளையும் சேர்த்து இதில் இழுத்து விட்டுடுவோம்னு மிரட்டிருக்காங்க. அந்த ஸ்டூடண்ட்டோட ரிலேடிவ் கிட்டேச் சொல்லி, இவளையும் அந்த தப்பில் சேர்த்திடுவோம்னு சொல்றாங்களாம். இவ அதை வெளியில் சொல்ல முடியாம, வீட்டில் சொல்லி, தனி வீடு எடுத்துத் தங்க பர்மிஷன் கேட்டிருக்கா. அவங்க ஹாஸ்டல் விட்டு வெளியில் வந்தால் எங்களுக்கு சமாளிக்க முடியாது. படிக்கவே வேண்டாம். நீ ஊருக்கு வந்திடு.அப்படினு மணிமாலா பேரண்ட்ஸ் சொல்றாங்க.”
“அம்மா, இது எப்படி இவ்ளோ நாள் நம்ம அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மெண்ட்டுக்குத் தெரியாம இருந்தது?”
“அடிக்கடி நடக்கலை. ஆனால் வாரம் ஒரு முறை அதிலும் ஹாலிடேஸ்லே நடந்திருக்கு. அதனால் வார்டன் கவனத்திற்கு வரலை.”
“யாரு இப்படிப் பண்ணறாங்க?”
“இந்த வருஷம் வந்த ஸ்டூடண்ட்ஸ் தான் இப்படி ஆரம்பிச்சு இருக்காங்க. ஃபர்ஸ்ட் இயர் தனி பில்டிங் தானே. அது அவங்களுக்கு வசதியா இருந்திருக்கு.”
“இதை முதலில் சரி செய்தாகனும். காலேஜ் நேம் கம்ப்ளீட்டா போயிடும்”
“ஆமாம். இன்னிக்கே பிரின்சிபால் கிட்டேப் பேசணும்.”
எழிலன் யோசனையோடு “நம்ம மேஜர்லே உள்ள பொண்ணுங்க யாரும் அந்த மாதிரி தெரியலையே?” என்றான்.
“அதை மணிமாலா கிட்டே கேட்டேன். எங்க கிளாஸ் இல்லை மேடம்னு தான் சொன்னா. மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட் போலிருக்கு”
“ம். எப்போதும் அந்த டிபார்ட்மெண்ட்டுக்கு மட்டும் தனி சட்டம் தான்” என எழிலன் கடுப்படித்தான்.
“என்ன செய்ய? அவங்களுக்கு பீஸ் கூட. அதனால் நிறைய சலுகைகள். மேனேஜ்மெண்ட் சில விஷயங்களில் அவங்களுக்கு வளைஞ்சு கொடுக்காறாங்க. மற்ற ஸ்டூடண்ட்ஸ் விட இவங்களுக்கு டைமிங் எல்லாமே வேறே. அதை அவங்க அட்வாண்டேஜ் எடுத்துக்கறாங்க” என்றார் மலர்விழி.
“அதுவும் சரிதான். இதுக்கு இந்த பொண்ணு ஏன் இவ்ளோ பயப்பட்டாளோ?” என்றான் எழிலன்.
“அந்த பொண்ணு குடும்ப விவரங்கள் தான் உனக்கும் தெரியுமே. இந்த பிரச்சினை எல்லாம் கேட்டு, இப்போ அவங்க வீட்டில் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு பேச்சு வார்த்தை நடக்குதாம். அவ சொந்த மாமாவிற்கு தான் போலிருக்கு. இவ படிச்சு வேலைக்குப் போகணும்னு சொல்றா. வீட்டில் கேட்கலை. அதான் என்ன செய்யறதுனு பயந்து போயிருக்கா” எனப் பெருமூச்சுடன் கூறினார் மலர்விழி.
“அவ இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர். பதினெட்டு வயசே ஆகியிருக்காதே” எனச் சந்தேகமுடன் கேட்டான் எழிலன்.
“ம். போன மாசம் கம்ப்ளீட் ஆகியிருக்கு”
“இன்னும் நம்ம மக்கள் எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? இப்போ இருபத்தி ஒண்ணு தானே சட்டம்.”
“அது யாராவது கம்ப்ளைண்ட் பண்ணினா போலீஸ் கேப்பாங்க. பதினெட்டு வயசானா மேஜர் தானே. அந்த பொண்ணுக்கு சம்மதம்னா செல்லும்னு தான் நினைக்கிறேன். வீட்டில் அதுக்குதான் மணிமாலாவை கம்பல் பண்ணறதா சொல்றா.”
“அந்த பொண்ணு ஸ்டேடியா இருந்தா பிரச்சினை இல்லைமா”
“அவளுக்கு அடுத்து ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கனு சொல்லி கார்னர் பண்ணறாங்களாம். மாமாவையேக் கல்யாணம் பண்ணினா, சப்போர்ட்டா இருப்பார்னு அவங்க அம்மா சொல்றாங்களாம்.”
“ம்ச். மணிமாலாவே வேலைக்குப் போனா யார் தயவும் தேவையில்லையே.”
“அதையும் அந்தப் பொண்ணு சொல்லிருக்கா. பொண்ணு சம்பாத்தியாத்தில் சாப்பிடக் கூடாதுனு ஏதோ சொல்றாங்க.”
“அவங்க அம்மா தன் தம்பி கிட்டே ஹெல்ப் வாங்கிக்குவாங்க. ஆனா பெத்த பொண்ணு கிட்டே ரோஷம் பாக்குறது எல்லாம் என்ன மென்டலிட்டி?”
“கரெக்ட் தான். எவ்ளோ தான் விழிப்புணர்வு கொடுத்தாலும், நம்ம மக்கள் சில பேசிக் எதிக்ஸ்லர்ந்து லேசில் மாறமாட்டாங்க.”
“சரி இப்போ என்ன செய்யலாம்?”
“நான் அவங்க அம்மா கிட்டே பேசிப் பாரக்கறேன். அப்படியே அவங்க தம்பியும் வரச் சொல்லிப் பேசிப் பார்ப்போம். முடிஞ்ச அளவு படிப்பை கன்டினியூ பண்ண அஷ்யூரன்ஸ் வாங்கலாம்” என்றார் மலர்விழி.
“என்னவோ போங்க. சரி நாம இன்னிக்கேப் பேசலாம்” என்றான் எழிலன்.
அம்மாவும், பிள்ளையும் பேசியது போல, அன்று மாலை கல்லூரியிலிருந்தே மணிமாலா வீட்டிற்கு போனில் பேசினர். முதலில் அவளின் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை. அவர் தன் மகளுக்கு எதுவும் ஆகிவிடுமோ எனப் பயந்தார்.
மலர்விழி, எழிலன் இருவரும் அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. மணிமாலா பெயர் வெளியில் வராமல், ஹாஸ்டல் விஷயம் பற்றி நடவடிக்கை எடுக்கிறோம். மணிமாலாவை வேறு பில்டிங் கூட மாதிரி விடுகிறோம் என்று எல்லாம் பேசினார்கள். மணிமாலாவின் மாமாவும் பேராசிரியர்கள் பக்கமே பேசவும், கொஞ்சம் இறங்கி வந்தனர் அவளின் பெற்றோர்.
இளங்கலைப் படிப்பு முடியும்வரை மணிமாலாவின் திருமணம் பற்றிப் பேசுவதில்லை என்றும், அவளும் படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற உத்தரவாதத்தோடும் படிப்பைத் தொடர அனுமதி கொடுத்தார் அவளின் அன்னை.
பெரும் நிம்மதியுடன் வீடு திரும்பிய இருவரும், அன்றே தற்போதைய கல்லூரி முதல்வரான எழிலனின் தந்தையோடுப் பேசினார்கள். கல்லூரிக்குள் ஒரு கவுன்சிலிங் டிபார்ட்மெண்ட் உருவாக்கவும், குறிப்பாக மாணவிகளின் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தவும் அவசியத் தேவை என விவாதித்தார்கள். அவரும் கல்லூரித் தாளாளரிடம் பேசுவதாகக் கூறினார்.
மறுநாள் முதல் கல்லூரியில் மாணவிகளுக்கு எனத் தனி கவுன்சிலிங் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பில் மலர்விழியும், அவருக்கு உதவியாக வேறு துறைகளில் இருந்து இரு பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடத்திலும் ஒரு மாணவியும் அதில் உறுப்பினராகச் சேர்த்தனர்.
அந்த அட்மின் நபர் யார் என உடனடியாக கண்டுபிடித்தனர். அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றினார் முதல்வர். கேட் கீப்பருக்கும் அதே தான். தவறு செய்த மாணவிகளை கல்லூரி முதல்வரே நேரடியாகக் கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்தார். அதே போல கல்லூரி விடுதியின் வாசல் மற்றும் பொதுப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தப்பட்டது. அதன் ரெகார்டிங் வார்டன் மற்றும் கவுன்சிலிங் குழுத் தலைவருக்கும் வாரம் ஒருமுறைச் சரிபார்த்து ரிப்போர்ட் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
பொதுவான பிரச்சினைகள் மட்டுமல்லாது, அந்தரங்கத் தொந்தரவுகளுக்கும் அந்த குழுவின் மூலம் தீர்வுகள் கிடைக்கப் பெற்றதால், இவர்கள் கல்லூரிக்கு வெளியில் இன்னுமே நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது.
இதை எல்லாம் எழிலன் வீட்டில் இவர்கள் கலந்து பேசினர்.
அப்போது “இப்போதுள்ள பெண்களுக்கு கல்வி எத்தனை அவசியம்னு ஏன் முந்தைய தலைமுறைக்குப் புரிய மாட்டேங்குது. மணிமாலா பிரச்சினை நம்மகிட்டே வந்ததும் சால்வ் பண்ணியாச்சு. இதுக்காகப் பயந்து அந்தப் பெண்ணின் படிப்பை நிறுத்தப் பார்த்தது எல்லாம் எவ்ளோதூரம் தப்பு. அதிலும் கல்யாணம் வேறே. என்ன பேரண்ட்ஸ் மென்டலிட்டியோ?” என அங்கலாய்த்தான் எழிலன்.
மலர்விழி “நாம புரொஃபசர் மென்டலிட்டிலே யோசிக்கிறோம். பேரண்ட்ஸ் பசங்க சேஃப்டி மட்டும் தான் பார்ப்பாங்க. அதைத் தப்புச் சொல்ல முடியாது. எடுத்துச் சொன்னா ஒரு சிலர் புரிஞ்சிக்குவாங்க. இங்கே மணிமாலா பேரண்ட்ஸ்க்கு ஒரு சப்போர்ட் தேவைப்பட்டது. அதை நாம கொடுத்ததும் அவ படிப்பு தப்பிச்சது” என்றார்.
செழியன் “இதே சப்போர்ட் இன்னும் ஆறு வருஷம் முன்னாடியே நாம நிலாவிற்கு கொடுத்திருந்தா அவளையும் மேலே படிக்க விட்டிருப்பாங்களோ என்னவோ. அதனால் நமக்கும் இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காது” என்றார்.
மலர்விழி, எழிலன் இருவரும் பதில் சொல்லாமல் இருக்க, செழியன் “என்னவோ, இன்னும் காலம் கடக்கலை. சீக்கிரம் நல்ல முடிவு எடுங்க” எனக் கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பின் மலர்விழி “எழிலா, உனக்கும் முப்பது வயசு ஆகப் போகுது. இன்னும் உன் வாழ்க்கைப் பற்றி எந்த முடிவும் எடுக்காம இருக்கிறது சரி கிடையாது. அப்பா சொல்றதுக்காக மட்டும் சொல்லலை. பாப்பாவோட எதிர்காலமும் இதில் இருக்கு. பார்த்துக்கோ” எனக் கூறிவிட்டுச் சென்றார்.
எழிலன் மனதில் தன் தந்தை கூறியதே ஓடிக் கொண்டிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன் எழிலனின் முடிவுகளுக்கு செழியன் அத்தனை எளிதில் சம்மதித்திருக்கவில்லை. எழிலனின் தாத்தா அவனுக்காகப் பேசியும் செழியன் ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் எழிலனின் விருப்பம் மட்டுமே அவர் சம்மதிக்க முக்கியக் காரணம். இளவயதின் காரணமாக எழிலனால் சமாளிக்க முடியாது என்று தான் செழியன் தயங்கினார் என இப்போது அவனுக்குப் புரிந்தது.
எழிலனுக்குள் ஓவர் கான்ஃபிடன்ஸ். தன்னால் எல்லாம் முடியும் என்று நினைத்திருந்தான். ஆனால் விதியின் கணக்கு வேறாக இருக்கும் என அப்போது வரை அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை..
வரவேற்பறையில் நெடுநேரம் யோசனையோடு அமர்ந்திருந்த எழிலன், தனக்குள் ஒரு முடிவு எடுத்தவனாகத் அறைக்குத் திரும்பினான்.
இரவு வீடியோ காலில் “செல்லத்துக்கு இன்னிக்கு என்ன பாட்டு வேணும்” எனக் கேட்டான் எழிலன்.
இளங்குரல் ஒன்று “லாலி ‘ லாலி பாட்டு வேணும்” எனக் கேட்க, எஸ்பிபி வெர்ஷன் “வரம் தந்த சாமிக்கு இதமான லாலி” பாடல் பாடி தனது தேவதையைத் தூங்க வைத்தான் எழிலன்.
அந்த வருடம் முடிவதற்கு காத்திருந்த எழிலன், பரீட்சைகள் ஆரம்பிக்கும் முன் தனது ஒவ்வொரு வகுப்பு மாணவர்களிடமும் தான் வேறு கல்லூரிக்குச் செல்லப் போவதாக அறிவித்தான்.
மாணவர்கள் ஆட்சேபித்துக் காரணம் கேட்க, மேலும் ஒரு ஆராய்ச்சிப் படிப்பிற்காக சில வருடங்கள் தலைநகரில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கூறினான்.
எழிலனின் ஆராய்ச்சிகள் பற்றி மாணவர்களுக்கும் தெரியும் எனவே, மாணவர்களால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை.
எழிலன் கல்லூரியிலும் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்க, சக பேராசரியர்கள் வருத்தம் தெரிவித்தனர். கல்லூரி தாளாளர் ராஜினாமாக் கடிதத்தை ஏற்கவே மறுத்தார்.
செழியன் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி எழிலனின் நிலையை எடுத்துக் கூறவே, தாளாளர் ஒத்துக் கொண்டார்.
கல்லூரி பரீட்சைகள் முடியும்வரை மாணவர்களோடு கலந்து நின்றவன், அதற்கு பின் தன்னுடைய வாழ்க்கையை நோக்கி மாநிலத்தின் தலைநகருக்குச் சென்றான் எழிலன்.
-தொடரும் –
error: Content is protected !!