Skip to content
Post Views: 98
அத்தியாயம்: 19
பேருந்து நிறுத்ததை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தாள் சுருதி.
Advertisement
அன்றைய நாள் அவளுக்கான நாளாக இல்லை. முகத்தில் ஒருவித சோர்வு. நடையிலும் அது பிரதிபலிக்க, கனத்த இதயத்துடன் நிறுத்தத்தில் வந்து நின்றாள்.
சாலையை வெறித்தபடி இருந்தளுக்கு, தூரத்தே கேட்ட ஸ்ப்லெண்ட் பைக்கின் ஒலிப்பான் சத்தம், எதுவோ நினைவுப் படுத்தியது. உடனே அலைபேசியில் படிப்ஸ் என்று சேமித்திருந்த எண்ணைத் தொட்டாள்.
Advertisement
Advertisement
கடந்த சில ஆண்டுகளாக அந்த எண்ணுக்கும், எண்ணியிருந்தும், எந்தக் குறுந்தகவலும் வந்தது இல்லை. இருந்த பழைய செய்திகளை வாசிக்கத் தொடங்கினாள்.
“முடிவா என்ன சொல்ற?” என்று அவன் கேட்டதற்கு,
Advertisement
“என்னோட குடும்பத்துக்கு நான் தான் அச்சாணி. அவங்கள அம்போன்னு விட்டுட்டு என்னால உன் பின்னாடி வரமுடியாது.” என்று திட்டவட்டமாக கூற, இவளை அம்போ என்று விட முடிவு செய்து,
“குட் பாய்.” என்று அனுப்பி, உறவு முறிக்கப்பட்டிருந்தது.
இத்தோடு எத்தனை முறை அதைப் படிப்பாள் என்று தெரியாது. ஆனால் படித்துப் பார்த்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாள். கண்கள் குளமாகின. அன்றே சொன்னானே,
“உன் குடும்பத்துக்கு நீ தேவையில்ல. உன் பணம் மட்டும் இருந்தால் போதும். நீ அதை எப்படிச் சம்பாதித்துக் கொடுக்கிறாய் என்பது அவங்களுக்குத் தேவையில்லாத ஒன்று. உனக்கு உன் குடும்பம் வழங்கியிருப்பது பொருளாதார சுதந்திரம் அல்ல. அது சுரண்டல்.” என்று.
இல்லை என்று அடித்துச் சொன்னவள், ‘போடா… நீ இல்லன்னா எனக்கு வேற யாரும் கிடையாதுன்னு நினைச்சிட்டியா. நீயே மூவ் ஆன் ஆகும் போது நான் ஆக மாட்டேனா!’ என்று விட்டேத்தியாகத் தான் நினைத்து கடந்தாள்.
ஆனால் இன்று, அது உண்மை என்று கண்முன்னே காட்சிகள் விவரிக்கும் போது, அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்துப் பார்த்து படித்துப் படித்து அழுதாள். விழப் போகிறேன் என்றிருந்த கண்ணீரைக் கைக் குட்டைக்குள் வாங்கினாள்.
அப்பொழுது அவளுக்கு அழைத்த மனோகரி, “பாத்தியா? பேசுனியா?” என்று விசாரிக்க, உதட்டோரம் துடித்தது. ‘என்னை விட்டு விடுங்களேன்.’ என்று அலறும் அளவிற்கு கோபம் வந்தது. ஆனாலும் எதுவும் சொல்லாது அலைபேசியை அணைத்து வைத்தாள்.
மனோகரி, மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாராம். எப்படி!! இரு குழந்தைகளுடன் இருக்கும் ஆடவனுக்கு இரண்டாம் தாரமாக!!
இன்று அவனையும் அவன் குழந்தையையும் பார்த்து பேசினாயா? என்பதை அறிய அழைத்துள்ளார்.
சில நாட்களாக நடந்து கொண்டிருப்பது தான் இது.
மகள் பணம் அனுப்பவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியதும், மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டார்.
“இதுல ஒருத்தன பாத்து சொல்லு. ரெண்டு மாசத்துக்குள்ள உனக்குக் கல்யாணத்த முடிக்கணும்னு ஜோசியக்காரன் சொன்னான்.” என்று சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.
“என்னம்மா இது?” என்று வெடித்தாள் முதல் முதலில் அவர் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து.
“பசங்க ஃபோட்டோ டி. இருபத்தி எட்டு வயசுக்கு மேல இருக்குற பொண்ணுக்கு நாப்பது வயசு பசங்க ஜாதகம் தான கிடைக்கும். குமரனா கிடைக்கும்.” என்றார் மனோகரி.
அவர் அனுப்பிய ஆடவனுக்கு 48 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“வயசு கம்மியா!! 35 40 வயசுக்குள்ளன்னா! குழந்தை வச்சிருக்குற ரெண்டாந்தாரத்துக்கு இருக்கு. பாக்கட்டுமா?” என்ற போது கண்கள் உவர்முத்தைத் திரட்டிக் கொண்டு நின்றன.
அந்த அளவிற்கு கல்யாண சந்தையில் தரம் இறங்கி விட்டோமா?
“பவுனு இல்லன்னா என்ன? பொண்ணு லட்சக்கணக்குல சம்பாதிக்கிறா. காலம் முழுக்க உழைச்சிக் கொண்டு வந்து கொட்டுவா. வேற என்ன வேணும். எங்க குடும்பமே அவளோட சம்பாத்தியத்த நம்பித்தான் இருக்கு. அதுனால கல்யாணத்துக்கப்றம் அவளோட சம்பள பணத்துல பேர்பாதிய எங்களுக்குக் குடுத்திடுவா. மீதி முழுசும் மாப்ள வீட்டுக்குத்தான். நாங்க எதுவும் கேக்க மாட்டோம்.” என்று மகளின் உழைப்பைப் பங்கு போட்டுத் தேடினால் இப்படிப்பட்ட வரன்கள் தானே வரும். இல்லை இப்படிப்பட்ட வரன்களைத்தான் எதிர் பார்த்து இந்த நிபந்தனைகளை முன் வைத்தாரே என்னவே!
அது தெரிந்ததும் மனம் விட்டுப் போயிற்று சுருதிக்கு. ‘காலம் முழுக்க உழைத்துக் கொட்டவா என்னைப் பெற்றனர். அதிலும் அவருக்குப் பாதி, வரும் கணவனுக்குப் பாதி என்று என் சம்பாத்தியத்தை என் அனுமதியின்றி பிரித்துக் கொள்கின்றனரே! இவரெல்லாம் தாயா.’ என்றிருந்தது.
அவர்களுக்குத் தர அவளும் தான் முன் வந்தாள். ‘காதலைத் திருமணமாக மாற்றி புது வாழ்வு தொடங்களாமா?’ என்று கேட்டவனிடம், மனோகரி சொன்னது போல், ‘என் பாதி சம்பளம் என் குடும்பத்திற்கு தான்’ என்று நிபந்தனை விதித்தவள் அவள்.
அதை மறுத்ததால் தானே அவனையே நிராகரித்தாள். அதையெல்லாம் நினைக்கும் போதே மனம் சுண்ணாம்புக்கல் இட்ட நீராய் கொதித்தது.
தினமும் மனோகரி புகைப்படம் அனுப்புவதை நிறுத்தவில்லை.
எதுவும் சொல்லாது தாய் அனுப்பிய படங்களுக்குக் கட்டைவிரலை கவிழ்த்தது போல் ரியாக்ஷனைக் கொடுத்து விட்டு அமைதியாக இருந்தாள். ஆனால் மனோகரி விடுவதாக இல்லை.
“இந்தப் பையனுக்கு ஏற்கனவே ரெண்டு குழந்த இருக்கு. அதுனால நீ பெத்து குடுக்கணுங்கிற அவசியம் இல்லை. வேலைக்குப் போறதால வீட்டுல வேலை செய்ய வேண்டியது இல்லை. பையனோட அம்ம பாத்துப்பா. இல்லன்னா நாத்தனாருங்க இருக்காளுக. நீ எந்தக் கவலையும் இல்லாம வேலைய மட்டும் பாத்தா போதும்.
பிள்ளைப்பெக்க போறேன்னு லீவ் போட வேண்டியதில்லை. பிள்ளைங்களுக்கு செலவு செய்றேன்னு உங்காச செலவழிக்க வேண்டியதில்லை. அவங்கப்பெ செய்வான் எதுனாலும். சம்பளத்தப் பத்தி நீயும் ஒருக்க அந்தத் தம்பிட்ட பேசிட்டு சரின்னு சொல்லிடு. இந்த வாரம் பூ வச்சிட்டு, கல்யாணத்தேதி முடிவு பண்ணுவோம். உன்னை நேர்ல பாக்கணும்னு சொன்னாப்ல. ஹாஸ்பிட்டல் அட்ரஸ்ஸ குடுத்திகேன்.” என்று திட்டங்களை வகுத்துக் கொண்டே இருந்தவரை, எதிர்க்கும் திராணி இல்லாது அழுகை தான் வந்தது சுருதிக்கு.
இன்று முன் மாலைப் பொழுதில் வந்தான் அவன்.
நான்கு வயது மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் சிரித்த முகமாய்ப் புகைப்படத்தில் இருந்தவன், நேரிலும் அழகனாகத் தான் தெரிந்தான். பேசிப் பார்த்தாள். பேச்சிலும், குணத்திலும் குறை காண முடியவில்லை அவளால். மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்டாளாம். அவனுக்கு மனைவி தேவை என்பதால் திருமணத்திற்கு பார்க்கிறேன் என்றான்.
பிள்ளைகளும் நல்ல விதமாகத்தான் தெரிந்தது. அவளைப் பார்த்து புன்னகைக்கையில் உள்ளம் உருகியது அந்தப் பிள்ளைகளின் நிலையைக் கண்டு.
அதற்காக திருமணம் செய்து கொள்ளலாமா? அதிலும் விஷ்ணுவை மறந்தது.
மறக்கக் கூடியவனா அவன், என்று உள்ளம், அவனுடன் பேசிய காதல் கதைகளை நினைவு படுத்தியது.
பல ஆண்டு காதல் இருவருடையது.
அன்று பூங்காவில் தனியாக அவனைச் சந்தித்த போது சுருதி கேட்டது இதைத்தான்.
“எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு. உனக்கு?” என்றது.
அவள் எந்த அர்த்தத்தில் அதைக் கேட்கிறாள் என்று விளங்காது, அவனின் முகம் பிரகாசிக்க, பதில் சொல்லும் முன் ரிதன்யா இழுத்து வந்திருந்தாள்.
ஆதலால் பதில் அப்போது கிடைக்கவில்லை. அதன் பின் இருவரையும், “தனிமையில் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது!” என்று அடித்துத் துவைத்ததெல்லாம் நமக்குத் தெரியுமே.
அன்று, வயதுக் கோளாறில் ஏற்பட்ட பிடித்தம், காதலா என்று கணிக்கும் முன்னேயே, பிரிந்து விட்டனர். விஷ்ணுவிற்கு அவளைத் தேடி மதுரை வரவேண்டும் என்ற ஆசை இருந்த போதும், அவனின் தந்தைக்குப் பயந்து வராமல் இருந்தான். ஆனாலும் சுருதியை மறக்க அவனால் முடியவில்லை. மனத்தில் ஏதோ ஒரு மூளையில் அவளின் நினைவுகள் மட்டும் நிழலாக உலாவிக் கொண்டே இருந்தது.
எப்படி அவளைத் தொடர்பு கொள்வது என்று அவனுக்கும் தெரியவில்லை.
இளநிலை மருத்துவ பட்டம் பெற்றபின், பொது மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு முதுகலை சிறப்பு பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் வெளி நாட்டில் சென்று படிக்க.
சென்னை வந்ததில் இருந்து அவனைத் தான் தேடிக் கொண்டிருந்தாள் சுருதி. அங்கு தான் அவன் தந்தை கடைசியாக மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தது என்று தெரிந்த நாளில் இருந்து, சென்னையில் தான் வேலை செய்வேன் என்று பிடிவாதமாக வந்தவள், வார இறுதி நாள்களில் ஏரியா ஏரியாகச் சென்று அவனைத் தேடினாள்.
அன்றும் அப்படித் தான், கண்கள் கூட்டத்தில் அவன் தென்படுகிறானா என்ற பரபரப்பில் அழைபாய்ந்து கொண்டே இருக்க, தன்னைக் கடந்து சென்றது அவனா என்ற சந்தேகத்தில் ஓடிச் சென்றவள், தவறி கீழே விழுந்து விட்டாள்.
கையில் நல்ல அடி. அத்தோடு நடு சாலையில் அவள் விழுந்ததால் அவளைக் கூட்டம் சூழ்ந்து கொண்டு திட்டத் தொடங்கியது.
அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தான் விஷ்ணு.
“வி…ஷ்…ணு!!” என்ற உதடுகள் அவனை நம்ப மறுத்து ஏக்கத்துடன் வார்த்தைகளை வடித்தன.
“சுருதி! நீ எப்படி இங்க? எந்திரி… அடி பலமா பட்டிருக்கா?” என்றபடி அவளின் கரம் பற்றி எழுப்பி விட்டான். அப்பொழுது தான் உணர்ந்தாள், விழுந்த தான் இன்னும் எழாது இருக்கிறோம் என்பதை.
“கவனமா வரமாட்டியா!!” என்று கடிந்தபடி, கைத்தாங்களாக அவளைப் பற்றி, சாலையின் ஓரமாக அழைத்து வந்தவன், தன் பைக்கில் அவளை அமர வைத்து விட்டு, அருகில் இருந்த மருந்துக் கடையில் முதலுதவிப் பொருள்களை வாங்கி கையைச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.
பாலகனாக இருந்த போது, மெல்லிதாக அரும்பியிருக்கும் மீசை இப்போது முழு வளர்ச்சியை எட்டி, அடர்ந்து அவனின் ஆண்மைக்கு பொருத்தமாக இருந்தது. நெடுநெடுவென வளர்ந்திருந்த தேகம் தேக்கை ஒத்த வனப்புடன் இறுகி இருந்தது. கருகருவென வளர்ந்து காற்றில் கவிதை சொல்லிய கோசம், தாடியற்ற பளிங்கு தாடை, பெரிய நாசி, உருண்டோடிய திராட்சையென விழிகள், வில்லை போல் வளைந்த புருவம் என்று அருகில் தெரிந்த அவனின் உருவத்தை, பசிக்குப் பருகும் பாலைப் போல் பட்டென பருகிக் கொண்டிருந்தன அவளின் கண்கள்.
இதழ் குவித்து அவளின் காயத்தை ஊதித் தள்ளியவன், உண்மையான விஷ்ணு தானா! என்ற சிந்தனையில் இருக்க, டெட்டால் பட்டதும் எரிந்த காயம் சொல்லியது அவன் நிஜம் என்று.
“யாரோன்னு நினைச்சு வந்தேன். நீன்னு எதிர்பாக்கல. சர்ப்ரைஸ்ஸா இருக்கு. உன்ன நான் இங்க பாப்பேன்னு நினைக்கவே இல்லை சுருதி.” என்றபடி மருந்திட்டுக் கொண்டிருந்தான்.
“நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சுக்க நான் ட்ரெய் பண்ணேன். ஆனா முடியல. ரிது கிட்ட கேட்டேன். அவ பதிலே சொல்லாம வச்சிட்டா. இனி அவளப் பத்தி பேசுறதா இருந்தா கால் பண்ணாதன்னும் சொல்லிட்டா. எனக்கு வேற வழியே தெரியல.” என்றவன் மருந்திட்டு முடித்து விட்டான் போலும். அவளின் முன் வந்து நின்று, அவளின் முகம் பார்த்தபடி,
“என்ன பண்ற சுருதி? இங்க எந்த விசயமா வந்திருக்க?” என்று கேட்டுக் கொண்டே போக, அவள் பார்வையை அவனிடம் பதித்து விட்டு வார்த்தைகளுக்குப் பூட்டுப் போட்டிருந்தாள்.
“சுருதி… சுருதி…” என்று இருமுறை அழைத்த பின் தான் அவனின் பால் மயங்கிய மதியை இழுத்து வந்தாள்.
“*** ஹாஸ்பிடல்ல நர்ஸா ஜாயின் பண்ணிருக்கேன். ஹாஸ்டல்ல தங்கிருக்கேன். ஆறு மாசமாகுது சென்னை வந்து.”
“எந்த ஹாஸ்டல்?” என்றவனுக்கு விடுதியின் பெயரைச் சொல்லி விட்டு, சினேகப் புன்னகை ஒன்றை தந்து,
“தேங்க்ஸ் விஷ்ணு… நான் கிளம்புறேன்.” என்று ஆட்டோவிற்கு கைக் காட்டினாள்.
அவனைப் பார்த்தும் ஆசையையும் நேசத்தையும் முந்திக் கொண்டு, நடந்த அவமானங்கள் தான் வந்து நின்றன. எத்தனை பேச்சை அவனின் அப்பா பேசியிருப்பார். தகுதி… தராதம் என்றெல்லாம் பேசி தன் ஒழுக்கத்தை விமர்சித்து என்று அவர் பேசியதும் அண்ணாமலையார் பேசியும் காதில் கேட்டது. தன் தந்தை வாடி நின்றதும் அவர்களின் பேச்சால் தானே.
இவன் வேண்டாம். அவனிடமிருந்து விடுபட்டு ஓட முயன்றவளை நிறுத்தி, அவளின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான். அடுத்தநாள் காலையிலேயே அவளுக்கு அழைப்பு வந்தது,
“ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டியா?” என்று கேட்டு.
இல்லை என்று அவள் சொன்னதும்,
“நான் வெய்ட் பண்றேன். சீக்கிரம் வா. நாம ஹாஸ்பிட்டலுக்குச் சேர்ந்தே போகலாம்.” என்றான்.
தன்னைத் தேடி வந்திருக்கிறானா? என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, அங்கு பைக்கில் காத்துக் கொண்டிருந்தவனைக் காண்கையில் மனம் பூப்பூத்ததாலும் மெல்லிய தயக்கம் அவளை வியாபித்தது.
கூடவே, அவனின் தந்தை பேசிய பேச்சுக்கள், ‘இவரு மகெ எப்படிப் பட்ட சூரன்னு பழகிப் பாத்து தெரிஞ்சுக்கிறேன்.’ என்ற வீம்பும் தோன்ற, பழக முடிவெடுத்தாள்.
விடுதி வாசலுக்கு வந்தவளின் கவனத்தை, அவன் அடித்த ஸ்ப்லெண்ட்ர் பைக்கின் ஹாரன் ஈர்த்தது. சின்னச் சிரிப்புடன் தயக்கம் ஏதுமின்றி அவனின் பைக்கில் ஏறி அமர்ந்தாள். உடலும் உள்ளமும் அவனின் அண்மையில் பரவசமடைந்ததைப் போல் ஓர் உணர்வு.
அதை அனுபவிக்க வேண்டி, அவள் சரியாக பேசாது இருக்க, விஷ்ணு பேச்சைக் கையில் எடுத்துக் கொண்டான். தினமும் விடுதி வாசலுக்கு வந்து நின்றான். அவன் பணி செய்யும் மருத்துவமனையிலேயே அவளையும் சேந்து விட்டான். அது மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் என்பதால் சம்பளம் கூடியது.
“எனக்கு உன்னைப் பிடிக்கும் சுருதி. எந்த அளவுக்குப் பிடிக்கும்ன்னு கேட்டா… கல்யாணம் பண்ணிட்டு உங்கூட கடைசி வரை வாழ்ந்து சாகுற வரை.” என்றவன் அவளிடம் வாழத் துடித்தான்.
நட்பு காதல் என்ற வரையறைக்குள் சென்று அழகாய் நகர்ந்தன நாள்கள்.
அன்று அவனுடன் கழித்த பொழுதுகளையெல்லாம் நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தவளின் முன், இன்று தன் பைக்கை நிறுத்தி ஹாரனை அழுத்தினான் விஷ்ணு.
“ஏறு…” என்று கட்டளையாகச் சொல்ல, பதில் சொல்லாது அமைதியாக நின்றாள்.
“ஏற மாட்ட!!” என்றதும் ஆம் என்பது போல் தலை அசைக்க, ஆத்திரம் வரப் பெற்றவன்,
“அப்படி என்னடி கோபம் உனக்கு எம்மேல? எத்தனை தடவ தாண்டி மன்னிப்பு கேக்குறது உங்கிட்ட.” என்றபடி பைக்கில் இருந்து இறங்கினான். இவள் சுற்றம் முற்றம் பார்த்து விட்டு,
“விஷ்ணு ப்ளீஸ்… பப்ளிக் ப்லேஸ்…” என்றாள் சின்னக் குரலில்.
தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், கேசத்தை அழுத்திப் பிடித்தபடி நிழற்கூடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
“யார் அது?”
மாலையில் அவளைக் காண வந்தவனைத் தான் கேட்கிறான் என்று புரிந்தது.
“எனக்கு… எனக்கு…” எனும் போதே நா ஒட்டிக் கொண்டது. அவளின் தவிப்பைச் சுவாரசியமான ரசித்தவன், அவளே சொல்லட்டும் என்று காத்திருக்க,
“எனக்குப்… பாத்து வச்சிருக்க பையன்.” என்று திக்கித் தினறி, ஒருவழியாகச் சொல்லி முடித்து விட்டாள்.
“ஓ… கைல குழந்தையோட ஹாஸ்பிடல்ல வச்சி பெண் பார்க்கும் படலமா!” என்று ஏளனமாகச் சொன்னவன்,
“தேர்வு உன்னோடதா… இருக்காதே. உனக்கு என்னைத் தவிர வேற யாரையும் பிடிக்காது. எனக்கு அது உறுதியாத் தெரியும்.” என்று கர்வமாகவே சொன்னான்.
“உங்கம்மா பாத்து அனுப்புன ஆளா?” என்க, தலை அசைந்தது ஆம் என்று,
“உங்குடும்பத்துக்காக உன்னையே தியாகம் செய்யத் துணிஞ்சிட்ட. அவ்ளோ நல்லவங்க நீங்க?” என்று நக்கலாக கேட்டான். அவள் அப்பொழுதும் மௌனமாக நிற்க, விருட்டென்று எழுந்தவன், அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டு,
“எனக்கும் உன்னை மட்டும் தான் சுருதி பிடிக்கும். இப்ப இல்ல… அன்னைக்கி பார்க்ல வச்சி நீ கேட்டப்பவே எனக்குப் பிடிக்கும். அப்ப வளராத பையன்… முடிவெடுக்க தெரியாத சூழ்நிலை. என்னால எதுவும் பண்ண முடியாம அப்பா பின்னாடி அமைதியா போய்ட்டேன். ஆனா இன்னைக்கு அப்படி இல்லை. நீ ம்ன்னு சொல்லு… உன்னைக் கூட்டீட்டு போய் வாழ வக்கிற அளவுக்கு எங்கிட்ட திராணி இருக்கு.” என்று தன் காதலை யாசகமாக கேட்க, உதடுகள் துடித்தன.
அவள் வேண்டி விரும்பிய ஒரே ஆண் மகன் என்றால் அது விஷ்ணு மட்டும் தான். அவனே நேரடியாக வந்து தன்னைத் திருமணத்திற்கு கேட்கிறான் என்றதும், உள்ளம் உணர்ச்சிவசப்பட, சிறு கேவலுடன் அவனின் தோளில் முட்டிச் சாய்ந்து கொண்டாள். உடல் உரசாது உச்சந்தலையை மட்டும் அவனின் தோள்பட்டையில் வைத்தவை, அணைக்கச் சொல்லித் துடித்தக் கரத்தைக் கட்டுப்படுத்தி வைத்தான். அவளின் அணைப்பு ஆசையாக வந்தது இல்லை. ஆதரவுக்காக வந்தது என்ற காரணத்தால்.
அந்த ஆதரவைத் தந்து விட்டால் அவன் இறங்கிச் செல்வது போலாகி விடும். அவள் ஏறி வர வேண்டும் என்பது தான் அவனின் நோக்கம். ஆதலால் அவளே தெளிவுக்கு வரட்டும் என்று விட்டு விட்டான்.
உலகம் மறந்து அவனுடன் ஒன்றிவிட மாட்டோமா என்று ஆசை இருந்த போதும், வேகமாக அவனைவிட்டு விலகியவள், எதுவும் சொல்லாது ஆட்டோவில் எறிச் சென்றாள்.
செல்லும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்ணு…
கானம் இசைக்கும்…
error: Content is protected !!