Skip to content
Post Views: 187
அத்தியாயம் 25
“யார் வர்றது?” என்று கண்களை சுருக்கிக்கொண்டு இவர்கள் மூவரையும் பார்த்தார் தெய்வானை அம்மா.
Advertisement
ரத்னாவின் கண்ணீர் அவர் பார்வையை மங்கலாக்கவே அவரது நடை சற்று தடுமாறியது. அவரது கைகளை கெட்டியாக பிடித்து நடத்தி சென்றான் கார்த்தி.
“நாகு… நாகுவா?” என்றார் தெய்வானை கரகரத்த குரலில்.
Advertisement
Advertisement
கேட்டின் உள்பக்கம் அவர் நிற்க, இந்த பக்கம் இவர்கள் மூவரும் நின்றனர்.
அம்மா…
Advertisement
நேருக்கு நேர் இருபத்தைந்து வருடங்களுக்கு பின் சந்திக்கிறார்கள். இருவரிடமும் வார்த்தைகள் இல்லை.. கோவம் இல்லை.. வருத்தம் இல்லை.. பழசு எதுவும் நியாபகத்திற்கு வரவும் இல்லை.. ரத்னாவின் கண்களில் துடைக்க துடைக்க கண்ணீர் மட்டும் வந்துகொண்டே இருந்தது.
தெய்வானை அம்மாவின் கண்கள் லேசாக கலங்கியது. கார்த்தியையும் விக்கியையும் ஆராய்ச்சியாக பார்த்தார்.
வா என்று கூப்பிடவில்லை.. போ என்று விரட்டவும் இல்லை..
“அம்மா..” என்றார் ரத்னா தன்னை கொஞ்சம் சுதாரித்து கொண்டு.
“யார் வந்திருக்கிறது தெய்வா?” என்று குரல் கொடுத்துக்கொண்டே வெளியே வந்தார் சுப்பிரமணியன்.
“யாரு?” என்று தன் மூக்கு கண்ணாடியை தோளில் கிடந்த துண்டில் ஒரு முறை துடைத்து போட்டுகொண்டு மீண்டும் பார்த்தார்.
“நாகு.. எங்க நாகுவா?”
“அப்பா…”
அவரது எங்க நாகுவாவில் மனதளவில் உடைந்து போனார் ரத்னா.
“இத்தனை வருஷம் ஆச்சா இங்க வர்றதுக்கு? உள்ள வாங்க” என்றார் மெல்ல.
அவர் அழைத்த பின்பே அப்பொழுதும் முறைத்துக்கொண்டு கேட்டை திறந்தார் தெய்வானை.
“சரியான டெரர் பாட்டி போல” என்று விக்கி கார்த்தியின் காதில் கூறினான்.
வீடு இந்த காலத்து நவீன வீடு போல காட்சி அளித்தது.
வீட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று ரத்னாவின் கண்கள் தேடியது. நான் வளர்ந்த வீட்டின் சுவடு கொஞ்சமும் இல்லையே என்று ஏக்கமாக இருந்தது ரத்னாவிற்கு.
சில நிமிடங்கள் அமைதி மட்டுமே.
யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று அமைதியகவே சென்றது நிமிடங்கள்.
தாத்தாவும் பாட்டியும் இவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
கார்த்திக்கும் விக்கிக்கும் அசௌகரியமாக இருந்தது.
அப்பொழுது காலை பதினொரு மணி. மற்றவர்கள் வேலைக்கு சென்றிருக்க கூடும் என்று நினைத்துக்கொண்டார்கள்.
“எப்படி அப்பா இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா அம்மா?” என்று ரத்னாதான் தயக்கத்தை விட்டு முதலில் கேட்டார்.
“எங்களுக்கு என்ன குறைச்சல்? விட்டு போன ஒரு பிள்ளை பத்தின கவலையை தவிர பெருசா வேற கஷ்டம் இல்ல..” என்றார் தெய்வானை.
“என்னை பத்தி கவலைப்பட்டீங்களா அம்மா? என்னை நீங்க எல்லாரும் மறந்துட்டீங்கன்னு நினைச்சு நான் கவலை படாத நாளே இல்லை தெரியுமா?” என்றார் ரத்னா விசும்பலுடன்.
“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க.. நீ பண்ணின காரியத்துல கோவமா தான் இருந்தோம். நீ வந்தப்ப அந்த கோவத்துல திட்டினது உண்மை தான். அதுக்காக அப்புறம் அப்படியே ஒதுங்கி போயிடுவீங்களா? எங்க உன் புருஷன், வரலையா? இது உன் பிள்ளைங்களா?”
“ஆமா அம்மா, இவன் பெரியவன் கார்த்திகேயன், இவன் சின்னவன் விக்னேஷ்”
“பாசமா தூக்கி வளர்க்க வேண்டிய பேர பிள்ளைங்களை இப்படி வளர்ந்த பிள்ளைகளா அறிமுகப்படுத்துறியே நாகு?” என்றார் ரத்னாவின் அப்பா கரகரப்பாக.
“நான் தான் பிள்ளைங்க பொறந்தப்ப எல்லாம் லெட்டர் போட்டேன்னே அப்பா. நாங்க வீடு கட்டினப்ப கூட போட்டேன்.. ஒரு கடுதாசிக்கு கூட பதில் வரலை. அதனால நீங்க என்னை உண்மையாவே தலை முழுகிட்டிங்கன்னு எத்தனை நாள் அழுத்திருப்பேன் தெரியுமா? ”
“இல்லையே, இங்க லெட்டர் எதுவும் வரலையே” என்றனர் இருவரும் குழப்பமாக.
“லெட்டர்க்கு பதில் வரலைன்னா ஒரு எட்டு வந்து பார்த்திருக்கலாம் தானே? கடைசி வரை உன்னை பார்க்காமலே போயிடுவோமோன்னு நானும் உங்க அம்மாவும் புலம்பிட்டே இருப்போம்.”
ரத்னாவின் திருமணம் முடிந்த சில மாதங்களிலே, இவர்கள் ஊர் வழியாக தேசிய நெடுஞ்சாலை வந்ததால், அந்த பக்கம் சில இடங்கள் அரசாங்கத்துக்கு சென்றது. ஒரு ஏரியாவின் நடுவில் சாலை வந்ததால், அது இரண்டாக பிரிக்க பட்டு, இவர்கள் வீடு இருந்த பக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதனாலே பழைய விலாசத்துக்கு ரத்னா போட்ட கடிதம் இவர்களை வந்து சேரவில்லை.
“நீங்க நினச்சா என்னை கண்டுபிடிச்சிருக்கலாமே?”
“நீயா ஒரு நாள் வருவேன்னு நினைச்சோம்.. அதுவுமில்லாமல் உன் சின்ன அக்கா உன்னை பத்தி பேசவே கூடாதுன்னு அவ்வளவு ஆர்ப்பாட்டம்.. அவ புகுந்த வீட்ல ஆரம்ப நாள்ல அவ கொஞ்சம் கஷ்ட்டப்பட்டா, அதுக்கு நீ தான் காரணம்னு உன் மேலே அவ்வளவு கோவம் அவளுக்கு”
“இப்ப அக்கா நல்லா இருக்காங்களா அம்மா?” என்றார் ரத்னா உண்மையான வருத்தத்துடன்.
“அது எல்லாம் நல்லா இருக்கா.. ரெண்டு பெண் குழந்தைங்க.. அந்த சின்ராசுக்கு கல்யாணம் ஆகி, அவன் குணம் சரியில்லாமல் அவன் பொண்டாட்டி தற்கொலை செஞ்சுக்கிச்சு. அதுக்கு அப்புறம் தான், நல்ல வேலை நீ அந்த கல்யாணத்தை பண்ணிக்கலைன்னு நாங்க உண்மையா நினைச்சோம். நாங்க உன் விருப்பத்தை கேட்காம கல்யாண ஏற்பாடு செஞ்சதும் தப்புன்னு தோணவுமே உன்னை பார்க்க ஆசைப்பட்டோம்”
“பேசிட்டே இருக்காம, பிள்ளைகளுக்கு குடிக்க ஏதாவது கொடு தெய்வா..” என்றார் சுப்பிரமணியன் மனைவியிடம்.
“எங்க கண்ணன், வரலையா?” என்றார் மகளிடம்.
ரத்னா எப்படி சொல்வது என்று தயங்கவே,
“அப்பா இறந்து ஆறு வருஷம் ஆச்சு” என்றான் கார்த்தி மெல்ல.
“என்ன?” என்று பெரியவர்கள் இருவரும் விக்கித்து போய் விட்டனர்.
அவர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை.
கண்ணனுக்கு சொந்தபந்தம் யாரும் இல்லை என்று இவர்களுக்கு தெரியும். கணவனையும் இழந்து எப்படி மகள் சமாளித்தாள்.. எங்க கிட்ட அந்த சூழலிலும் வரணும் தோனலயா?
அதுவரை கொஞ்சம் திடமாக இருந்து இருவரும் தளர்ந்துபோய் அமர்ந்துவிட்டனர். மகள் தூரமாக இருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டாத நாளில்லயே?
“ஆறு வருஷம் ஆகிடுச்சு தாத்தா. நாங்க துக்கத்துல இருந்து மீண்டு வந்துட்டோம் பாட்டி.. வருத்தப்படாதீங்க” என்று கார்த்திதான் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.
கார்த்தியை பார்த்தால் சிறிய வயதில் கண்ணனை பார்த்த மாதிரியே இருந்தான். அதே நிறம்.. அதே உயரம்.. அதே நிதானம்.. என்று..
“எங்களை மறந்துட்டு இருந்தாலும் நீ நிம்மதியா இருப்பேன் இல்ல நினைச்சோம் நாகு” என்றார் தெய்வானை மிகவும் வருத்தமாக.
“கண்ணத்தான் இருந்த வரைக்கும் என்னை ராணி மாதிரி தான் ம்மா வச்சிருந்தாங்க. இப்ப பசங்களும் என்னை தங்கமா தாங்குறாங்க. நான் நிம்மதியா தான் இருக்கேன். என் கண்ணத்தான் என் கூடவே தான் இருக்கிறதா நான் நினைக்கிறேன். அவங்களுக்கு தான் உங்களை எல்லாம் கஷ்டப்படுத்திட்டோம்னு ரொம்ப வருத்தம். நான் இங்க வந்ததுல, அவங்க இருந்திருந்தா ரொம்பவே சந்தோசப்பட்டிருப்பாங்க தெரியுமா?” என்றார் ரத்னாவும் கண்ணனின் நினைவில்.
கண்ணன் மீது அவர்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கவே தான் இவர்கள் அருகிலே ஒரு வருடம் தங்க அனுமதித்து குடும்பத்தில் ஒருத்தராகவே நடத்தினர். மகளை கூட்டிக்கொண்டு கண்ணன் சென்றதை அவர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. ரத்னவிடமோ கண்ணனிடமோ இப்படி ஒரு செயலை அவர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த ஏமாற்றம் தான் கட்டுக்கடங்காத கோபத்தை அந்த நாளில் கொடுத்திருந்தது.
“பெரியவன் உன் புருஷன் மாதிரி இருக்கான். சின்னவன் நம்ம கதிர் மாதிரி இருக்கானே?” என்றார் தெய்வா பேரன்களை பார்த்து ஆசையாக.
“கதிர் எங்க அம்மா? எப்படி இருக்கான்?அக்காங்க.. அண்ணா அண்ணி.. எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“இருபத்தி அஞ்சு வருஷ கதை.. மெதுவா பேசலாம்.. இருங்க, உங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று எழுந்த அம்மாவை இருக்க சொல்லிவிட்டு, ரத்னாவே அடுப்படிக்கு சென்றாள்.
அவள் இருந்த போது புழங்கிய பாத்திரங்கள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது.
பின் அப்பா அம்மாவிற்கு பிடித்த பக்குவத்தில் ஆசை ஆசையாக காஃபி தயாரித்து அனைவருக்குமே எடுத்து வந்தார்.
“நாகு, உன் கையால காஃபி குடித்து எத்தனை வருஷம் ஆச்சு மா ?” என்றார் சுப்பிரமணியன். உடைந்து சிறு பிள்ளை போல அழ ஆரம்பித்துவிட்டார்.
மகள் கொடுத்த காஃபிய பார்த்து அவர் அழ, அவரை பார்த்து ரத்னா அழ, இவர்களை பார்த்து தெய்வானையும் அழ என்று உணர்ச்சி போராட்டமாக போனது.
கார்த்தியும் விக்கியும் இப்ப இதை குடிப்பதா வேண்டாமா என்று பாவமாக காஃபி கோப்பைகளை பார்த்து அமர்ந்திருந்தார்கள்.
“என்னை மன்னிச்சிடுங்க அப்பா.. மன்னிச்சிடுங்க அம்மா.. நான் போனது பெரிய தப்பு தான்.. அப்ப அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியலை. இப்பவும் கண்ணத்தானை கல்யாணம் செஞ்சது தப்புன்னு சொல்லலை.. நான் உங்ககிட்ட சொல்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பு.. அதுக்கப்புறம் நாங்க வந்து உங்களை பார்த்திருக்கணும். மன்னிச்சிடுங்க அப்பா.. மன்னிச்சிடுங்க அம்மா”
“சரி சரி.. பழசை பேசவேண்டாம்.. காஃபிய குடிங்க” என்று தெய்வா அதட்டலிடவும் அமைதியக அனைவரும் காஃபியை குடித்தார்கள்.
தெய்வா அதன் பிறகு ஒவ்வொருத்தரை பற்றியும் கூறினார்.
“பழைய வீட்டை மாத்தி இந்த வீடு கட்டி பதினெட்டு வருஷம் ஆச்சு.
இங்க கீழே நானும் அப்பாவும் தான் இருக்கோம். நாலு ரூம் இருக்கு பாருங்க. எங்களுக்கு ஒரு ரூம். மூனு பெண் பிள்ளைகளுக்கும் ஒரு ரூம்”
என்னை அவர்கள் எப்பவுமே விடவில்லையா? ரத்னாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“விசேஷம்னா எல்லாரும் இங்க தான். அப்புறம் முதல் மாடியில அண்ணன் குடும்பம், இரண்டாவது மாடியில கதிர் குடும்பம்”
“அண்ணி வீட்ல இருக்காங்களா அம்மா?”
“இப்ப காஃபி மெஷின்ல இருப்பா. ஷெட் இருந்த இடத்துல தனியா கட்டியாச்சு. ஆனா, வாசல் அந்த பக்கம்.”
“நீ இருக்கப்பவே கயல்விழி பொறந்துட்டா இல்ல, அடுத்து மலர்விழி. ரெண்டு பேரையும் கட்டி கொடுத்தாச்சு. கயலுக்கு ஆறுமாசம் முன்ன தான் குழந்தை பிறந்திருக்கு.”
தான் தன் குடும்பத்தில் இருந்து எத்தனை தூரம் சென்றுவிட்டோம் என்ற உண்மை தூரமாக இருக்கும்பொழுது புரியவில்லை. ஆனால் இப்பொழுது பூதாகரமாக தெரிந்தது.
கார்த்திக்கு எழில் பேசியது நினைவில் வந்தது.
“எங்க அம்மாவே ஒரு வேண்டாத குழந்தையா தானே வளர்ந்திருக்காங்க எழில். அதனால அவங்க கூட பேசாததனால பெரிய இழப்பு என்ன இருக்குன்னு இப்படி என்னை நச்சுபண்ற?” என்று கார்த்தி கோவமாக கேட்டிருந்தான்.
“உங்க அம்மா சொல்றது ஒரு பதின் வயது பெண்ணின் பார்வையில் இருந்து. இந்த காலம் மாதிரி அந்த காலத்துல குழந்தைகளே உலகம்னு எல்லாம் குழந்தைகளை வளர்க்க மாட்டங்க. அதுக்காக அவங்களுக்கு பாசம் இல்லைன்னு ஆகிடுமா? உறவுகள் இருந்தும் இல்லாமல் இருக்கிறது சாபம்”
“என்ன எழில் சாபம்னு எல்லாம் சொல்ற?”
“எல்லா உறவுகளும் நல்லதா இருக்காது தான் கார்த்தி. நிறை குறைகள் சேர்ந்தது தான் உறவுகள். சண்டைகளும் சமாதானங்களும் வாழ்க்கையை அழகாக்கும். கண்டிப்பா ஆன்ட்டியை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. அது
அவங்களுக்கு நிச்சயம் ஒரு நிம்மதியை தரும். சில முடிவு பெறாத வாக்கியங்களுக்கு முற்றுப்புள்ளி அவசியம். அதை தொடர்ந்து கட்டுரையா எழுதலாமா வேணாமான்னு யோசிக்கலாம். ஆனா, பாதில நிக்குற வாக்கியத்தை முடிச்சா தானே அதுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்”
எழில் சொன்னது எத்தனை உண்மை. இப்பொழுதும் கட்டிப்பிடித்து கொஞ்சி குலாவி என்று எல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், தாய் தந்தையாக அவர்களின் எண்ணங்கள், எங்கள் பேரன்களா இவர்கள் என்று அந்த பெரியவர்களின் பாச பார்வை ஒன்றுக்கு ஈடு இணை உண்டா என்று தோன்றியது கார்த்திக்கு.
எழிலின் பல விவாதங்களுக்கு பிறகே கார்த்தி ரத்னாவுடன் வருவதற்கு ஒத்துக்கொண்டிருந்தான். மனதிற்குள் தன்னவளுக்கு பல நன்றிகளை கூறிக்கொண்டான் இப்பொழுது.
“எல்லாரும் என்னை பார்த்தா என்ன சொல்லுவாங்களோ இல்ல அம்மா?” என்றார் ரத்னா ஏக்கமாக.
“ஏங்க மரகத்துக்கு போன் போட்டு வரச்சொல்லுங்களேன்” என்று கணவரை பெரிய மருமகளுக்கு போன் செய்ய கூறினார் தெய்வானை.
“கதிருக்கும் ரெண்டு பொண்ணுங்க தான் நாகு. பெரியவ பிளஸ் டூ, சின்னவ எட்டாவது . சரியான வாயாடி பெரியவ தான். நாகதாரா… உன் நியாபகமா தான் அந்த பேரை வச்சான். அவனுக்கு நீ தானே எப்பவுமே பிடிச்ச அக்கா.. “
நகரத்னாவிற்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.
“சின்னவ ஸ்ரீலேகா.”
“தம்பி மனைவி மா?”
“அவ டீச்சர். சாயந்தரம் தான் வருவா.. தம்பி ஈரோட்ல சொந்தமா தொழில் செய்றான்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அரக்க பறக்க கிட்டத்தட்ட ஓடி வந்து நின்றார் மரகதம்.
“நாகு…”
“அண்ணி..”
பின் அண்ணியுடன் ஒரு உணர்ச்சி போராட்டம். அவரும் கண்ணனின் மறைவை கேட்டு கலங்கி தான் போனார். கார்த்தியிடமும் விக்கியிடமும் ஆசையாக பேசினார்.
கதிருக்கு அழைத்து விஷயத்தை கூறாமல், வீட்டிற்கு வருமாறு கூறினார் அண்ணி.
அதுவரையிலும் உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும் பெரிதாக ரத்னம் கலங்க வில்லை. தம்பியை பார்த்ததும் “டேய் கதிரு” என்று அவரை கட்டிபிடித்து அப்படி ஒரு அழுகை.
வந்திருப்பது அக்கா தான் என்று அவர் அதிர்ச்சியாகி தெளியுமுன்பே ரத்னா அவரை கட்டிபிடித்து வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.
பின் இருவரும் அழுது முடித்து தேறி அமர்ந்து பின் பேசி என்று நேரம் சென்றது.
“என் மாப்பிளைகளா அக்கா? தாய் மாமா என் மடியில வச்சு நீ ஒண்ணுமே செய்யலையே?”
“இப்ப என்ன கதிர், ரெண்டு பேர் கல்யாணத்துலயும் நீ தான் தாய் மாமாவா எல்லாம் செய்யணும்.”
“என்னக்கா சின்ன அரவிந்த்சாமியா?” என்று கார்த்தியை பார்த்து கேட்டார். பின் “இது என்ன என்னை மாதிரியே எனக்கொரு மாப்பிள்ளை” என்று விக்கையையும் கார்த்தியையும் தோளோடு அணைத்து கொண்டார்.
பின் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை கூறினார்கள்.
“வழக்கம் போல நான் தான் ஆகாத பிள்ளை இந்த வீட்ல அப்படித்தானே ? கடைசியா தான் எனக்கு சொல்லுவீங்க இல்ல?” என்று முறுக்கிக்கொண்டு வந்தார்.
“இன்னும் அக்காவுக்கு எல்லாம் சொல்லல அண்ணா..” என்று கதிர் சொல்ல,
“உனக்கு சொல்லியாச்சு தானே..” என்றார் அவர் கடுப்பாக.
“அண்ணா.. நல்லா இருக்கீங்களா?” என்றார் ரத்னா மெல்ல.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான பிறகு தங்கைக்கு தான் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்ற உறுத்தல் அவருக்கும் சில நாட்களாக இருந்தது. இப்பொழுது கணவனை இழந்து வந்திருக்கிறாள் என்று தெரியவும் அவருக்கும் கண்கள் கலங்கித்தான் போனது.
“நல்லா இருக்கியா நாகு?” என்றார் தளுதளுப்பாக.
கார்த்தியையும் விக்கியையும் ஆசையாக பார்த்தார்.
கதிரை போல கலகலவென பேசாவிட்டாலும் ஆசையாக அளவாக பேசினார். தாய் மாமா நாங்க ரெண்டுபேர் இருந்தும், தனியா வளர விட்டுட்டீங்களே பிள்ளைகளை என்றார் ஆதங்கமாக.
பேச்சோட பேச்சாக இரண்டு அக்காக்கள் வீட்டிற்கும் தகவல்கள் சென்றது.
இருவரும் பக்கத்துக்கு பக்கத்து ஊர்கள் தான் என்பதால் இருவருமே கிளம்பி வந்துவிட்டார்கள்.
மாமாக்களை போல பெரியம்மாக்கள் பாசமாக எல்லாம் பேசவில்லை. நீ செஞ்சது தப்பு என்று ரத்னாவை தான் குறை சொன்னார்கள்.
ஆனால் கார்த்தியும் விக்கியும் ஒன்றும் சொல்லவில்லை. என்ன படிக்கிறார்கள் வேலைக்கு போகிறாரர்களா என்று விசாரணை நடத்தினார்கள்.
கார்த்தியின் படிப்பை கேட்டதும் “என்னை மாதிரி இருக்கியே.. என் ரத்தம் கொஞ்சம் இருக்கும் இல்ல, அதான் படிப்பு நல்லா வருது” என்றார் சின்ன அக்கா.
இரண்டு அக்காக்களுக்குமே ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் தான்.
“என்ன அண்ணா இது ஒரே லேடீஸ் குரூப்பா இருக்கும் போலவே..” என்றான் விக்கி கவலையாக.
நாகரத்னாவின் தொழிலை பற்றி அறிந்து அவர் அப்பாவுக்கு ஏக பெருமை. என் மகள் கஷ்டத்துலயும் தைரியமா நிமிர்ந்து நின்னு சாதிச்சிருக்கா என்று.
அன்று இரவே கிளம்புவதாக கூறியவர்களை விடவில்லை யாரும். மாலை பள்ளி முடிந்து பிள்ளைகள் எல்லாம் வந்து ஒரு முறை மீண்டும் அறிமுகப்படலம் நடந்தது.
பெரியம்மா பெண்கள் கார்த்தி விக்கியின் வயதை ஒத்து இருந்தனர். நால்வருமே ஆசையாக பேசினார்கள்.
கதிர் மாமா மகள்கள் நாகதாராவும் ஸ்ரீலேகாவும் அத்தான் அத்தான் என்று பேசினார்கள்.
எல்லாம் இளவயது பிள்ளைகள் என்பதால் கொஞ்ச நேரத்திலே கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சுப்பிரமணியனும் தெய்வானையும் பேரப்பிள்ளைகளை நிறைவாக பார்த்து அமர்ந்திருந்தார்கள்.
கயல்விழிக்கும் மலர்விழிக்கும் வீடியோ கால் செய்து பேசினார்கள்.
‘அத்தை அத்தை’ என்று பெண்கள் கூப்பிடவும் ரத்னாவிற்கு எழில் ஞாபகம் வந்துவிட்டது. அண்ணியிடம் எழில் பற்றியும் அவள் வற்புறுத்தலால் தான் வந்தேன் என்றும் கூறினார்.
“தங்கமான பிள்ளை போல.. என் சார்பா அதுக்கு ஒரு நன்றியை சொல்லு நாகு..”
அக்கா பிள்ளைகளும் “சித்தி, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று ஆசையாக கூறினார்கள்.
அவர்கள் அம்மாக்களை போல இல்லாமல் பாசமாக பழகினார்கள் மகள்கள்.
மகிழ்ச்சியாக இரவு பன்னிரண்டு மணி வரை தூங்காமல் அனைவரும் பல வருஷத்து கதைகளை பேசிக்கொண்டே இருந்தார்கள்.
கார்த்தி குறுஞ்செய்தியில் இங்கே நடந்தவைகளை எழிலுக்கு அனுப்பி கொண்டிருந்தான்.
——————–
error: Content is protected !!