Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-05

அத்தியாயம் – 5
அலுமினி பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய நிலவன் முகம் கடுகடுவென இருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்ததால், வீட்டில் மற்றவர்கள் உறங்கியிருக்க, ஏனோ நிலா மட்டும் உறங்காமல் தன் அறையில் விழித்து இருந்தாள்.
நிலாவின் அறையில் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டு, நிலவன் அங்கே சென்றான்.
நிலவன் அறைக் கதவைத் திறக்கும்போது “எனைத் தான் அன்பே மறந்தாயோ.. மறப்பேன் என்றே நினைத்தாயோ” என்ற வரிகள் கேட்க, அப்படியே கண் மூடி நின்றான்.


Advertisement

பாடல் முடியும் வரை உள்ளே செல்லவில்லை. பின் நிலவன் உள்ளே செல்ல, நிலா கண்களில் கண்ணீரைக் கண்டான்.
“நிலா” என மெதுவாக நிலவன் அழைக்க, சட்டென்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
பின் திரும்பி “அண்ணா, பார்ட்டி நல்லா நடந்துதா?” எனக் கேட்டாள் நிலா.

Advertisement

நிலாவையேப் பார்த்தபடி “ம். நல்லா தான் நடந்தது. நீ ஏன் இன்னும் முழிச்சிட்டு இருக்க?” எனக் கேட்டான் நிலவன்.

Advertisement

“தூக்கம் வரலை” என எங்கோ பார்த்தபடிக் கூறினாள் நிலா.
“ம். ஏன் உன் புருஷன் ஃபோன் பண்ணி பேசினாராக்கும்?”
மனதிற்குள் ‘அப்படி பேசினா நான் ஏன் சோகப்பாட்டு கேட்க போறேன்’ என நினைத்தாள் நிலா.

Advertisement

ஆனால் அண்ணனிடம் “அவர் என்கிட்டேப் பேசி ஐஞ்சு வருஷம் ஆகுது” என தலைகுனிந்தப் படிக் கூறினாள்.
நிலவனுக்கு இன்னும் கோபம் ஏறியது. வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தான்.
அதைக் கவனித்த நிலா, “பார்ட்டிக்குத் தானே போயிட்டு வந்தே. என்னவோ எதிரியைப் பார்த்திட்டு வந்த மாதிரி மூஞ்சை வச்சிருக்கியே. ஏன்?” எனக் கேட்டாள்.
“ம். பார்ட்டியில் எதிரியைத் தான் பார்த்திட்டு வந்தேன்”
“ஓ. யாரு?”
“உன் புருஷன் தான்” என்றவன், “என்ன தைரியம் இருந்தா மச்சான்னு கூப்பிடுவார்?” எனக் கடுப்புடன் கூறினான் நிலவன்.
நிலவன் கடுப்பாக, நிலாவோ சந்தோஷப்பட்டாள். அது அவளின் முகத்தில் தெரிய, அவளின் அண்ணன் “நானே கடுப்பிலே இருக்கேன். நீ என்னவோ இளிச்சிட்டு இருக்க?” என்றான்.
“அது..” என நெளிந்தாலும், “அவர் மச்சான்னு கூப்பிட்டார்னா, நான் இன்னும் அவர் மனைவியா இருக்கேன்னு தானே அர்த்தம். அதான்..” என்றாள் நிலா.
இந்த நிலாவைப் புதிதாகப் பார்த்தான் நிலவன். இதுவரை நிலாவிற்கும், எழிலனனுக்கும் பொருத்தம் இல்லை என்பதே நிலவன் எண்ணம். அவனைப் பொறுத்தவரை நிலா அவர்கள் வீட்டின் தேவதை. அவள் இருக்க வேண்டிய இடம் அந்த வானம் போன்ற உயரமான இடம் மட்டுமே.
நிலவனுக்கு எழிலன் மீது அந்த அளவு பிடித்தம் கிடையாது. நிலாவின் விருப்பபடிதான் திருமணம் நடந்தது என்றாலும், அது எழிலன் அவளை மயக்கி விட்டான் என்பதாகவே நினைத்தான் நிலவன்.
நிலாவிற்கு எழிலனை அத்தனைப் பிடிக்குமா என்பதையே இப்போதுதான் யோசித்தான். ஆனால் அதற்காக அந்த வீட்டில் எல்லாம் நிலாவால் வாழ முடியாது என்பது நிலவனுக்குத் திண்ணம். தானும், தன் பெற்றோரும் எடுக்கும் முடிவு தான் நிலாவிற்கு நல்லது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து கிடையாது.
நிலாவின் பிடித்தம் பற்றி மேலும் யோசிக்காமல் “சரி, சரி படுத்துத் தூங்கு. காலையில் காலேஜ் போகணும் தானே. இல்லை வேலையை விட்டுவிடுகிறாயா?” என்றான் நிலவன்.
நிலா ‘ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்’ என கவுண்ட்டர் கொடுத்தபடி “நான் ஏன் வேலையை விடப் போறேன்? காலையில் கிளம்பிடுவேன்” என்றாள்.
“அப்போ எதையும் யோசிக்காம படு. நானே காலையில் காலேஜ்லே டிராப் பண்ணறேன்”
“எப்பவும் போல் பஸ்லே போறேன். நீ பஸ் ஸ்டாப்லே மட்டும் விடு” என்றாள் நிலா.
“ம். ஜாக்கிரதையா இரு” எனக் கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான் நிலவன்.
நிலா உறங்க வர, அப்போது அவளின் வாட்ஸ்அப்பிற்கு மெசேஜ் வந்தது. யார் எனப் பார்த்தபோது எழிலன் எனக் காண்பிக்கவே, வேக வேகமாக லாக் ரிமூவ் செய்து படிக்க ஆரம்பித்தாள். எழிலனும் அவன் நம்பரை மாற்றவில்லை. நிலாவும் அதை பிளாக் செய்யவில்லை.
அந்தோ பரிதாபம்! எழிலன் தான் மெசேஜ் செய்திருந்தான். ஆனால் நிலாவிற்கு அல்ல. இவர்கள் பேராசிரியர்கள் குழுவிற்கு இரவு வணக்கம் என மெசேஜ் வந்திருந்தது. மற்றவர்கள் அதற்கு எமோஜிகளாகவும், பதில் மெசேஜும செய்திருந்தனர்.
நிலா இது ரொம்ப முக்கியம் என எண்ணியவளாக, எந்த பதிலும் அனுப்பவில்லை. ஆனால் அவள் கண்களில் நீர் கசிவதை அவளால் தடுக்க முடியவில்லை. எப்போதும் செய்வது போல அவளின் போனில் பிளேலிஸ்ட் ஒலிக்க வைத்தாள்.
பச்ச மலப் பூவூ பாடல் ஒலிக்க, அதில் வரும் ‘நிலவ வான் நிலவ நான் பிடிச்சு வாரேன்’ என்ற வரிகளின் போது எழிலன் கூறும் ‘நிலாவ தான் நான் பிடிச்சிட்டேனே’ என அவளைக் கட்டியணைக்கும் காட்சி நினைவில் வந்து சென்றது.
இந்தப் பாட்டுக்கள் செலக்ட் செய்து கொடுத்ததும் எழிலன் தான். அவன் தீவிர எஸ்.பி.பி அவர்களின் ரசிகன். வீட்டில் உள்ளவர்களையும் அதையேக் கேட்கப் பழக்கியிருந்தான்.
எழிலனின் அப்பா செழியனும் எஸ்.பி.பி ரசிகர் தான் என்றாலும் மற்ற பாடல்களையும் கேட்டு ரசிப்பார். எழிலனிடம் “மற்ற பாட்டுக்களையும் கேளேன் எழிலா” என்பார்.
எழிலனோ “அது தானா வரும்போது கேட்டுப்பேன். நான் சாங்க் பிளே பண்ணினா அவர் பாட்டு மட்டும் தான் ஓடும்” என்பான்.
இந்த உரையாடல்கள் நினைவில் வர, அவனை மறப்பது தான் கடினம் என்று நினைத்தால், நினைக்காமல் இருப்பது அதை விட கஷ்டம் என எண்ணினாள் நிலா.
எப்போதும் இப்படித் தான் என்றாலும் கூட, இன்றைக்கு எழிலனைச் சந்தித்ததில் இருந்து இன்னும் அதிகமாகவே அவனின் நினவை அசை போட்டாள் நிலா.
எழிலன் தன்னுடைய வீட்டில் உறங்கச் செல்லும் நேரம், மீண்டும் வாட்ஸ்அப் எடுத்துப் பார்த்தான்.
நிலாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ரிப்ளை செய்திருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.
“அழகி, நீ இன்னும் அப்படியே தான் இருக்க” என நினைத்தான்.
பின் தன் வீட்டிற்கு அழைத்தான். அவனின் தந்தை செழியன் தான் ஃபோன் எடுத்தார்.
“எழிலா, ஃபர்ஸ்ட் டே காலேஜ் எப்படி இருந்தது. அங்கே உனக்கு செட் ஆகுமா. இல்லை வேறே ஏதும் காலேஜ் பாக்கறியா?” எனக் கேட்டார் செழியன்.
“எப்போதும் போல் தான் இருக்குபா. எனக்கு எல்லாம் நல்லா செட் ஆகிடும்பா. நம்ம ஊரில் உள்ள அந்த அமைதி தான் மிஸ் பண்ணறேன். மற்றபடி எல்லாம் ஓகே.”
“சரி. பார்த்துக்கோ” என்றவர் தன் மனைவி மலரிடம் ஃபோனைக் கொடுத்தார் .
“எழில், வீடு எப்படி இருக்கு? உனக்கு கம்ஃபர்ட்டா இருக்குதானே?” எனக் கேட்டார் மலர்விழி.
“எல்லாம் மச்சான் ஏற்பாடு. வசதிக்கு என்ன குறைச்சல் வரப் போகுது?” என்றான் எழிலன்.
“என்னடா சொல்ற? நிலவன் வீடு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரா? எப்படி? உன்கிட்டே அவர் பேசறாரா என்ன?”
“ம்கும். பேசிட்டாலும்.” என்ற எழிலன், “எனக்குத் தான் வீடுனு தெரியாமலே மச்சான் சர் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கார்” என்றான்.
அத்தோடு விடாமல் “இன்னிக்குத் தாங்க்ஸ் மச்சான்னு சொன்னதும், அவர் முகம் போன போக்கைப் பார்க்கணுமே” எனக் கலகலவெனச் சிரித்தான் எழிலன்.
எழிலனின் சிரிப்பை செழியன், மலர் இருவரும் ஆசையாய்ப் பார்த்திருந் தனர். பின் மலர் தான் “டேய், சிரிக்காத. நிலா இதைப் பார்த்தா வருத்தப்படுவா தானே” என்றார்.
“யாரு? உன் மருமக தானே. ஆமாமா. அவ அண்ணனைச் சொன்னா மூக்குக்கு மேலே கோபம் வந்திரும்.”
“நிலா கிட்டேப் பேசினியா?”
“ம். பேசினேனே. மேடம் என்னோட ஜூனியர்னு சொல்லி வச்சிருக்காங்க. அதுக்கு மேலே எதுவும் சொல்லக் கூடாதுனு கண்ணாலே ஆர்டர் போட்டாங்க”
“எப்படியோ, பக்கத்தில் இருந்தாவது ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு சேர்ந்து வாழப் பாருங்க” என்றார் மலர்.
செழியன் “நிலவன் எதுவும் பிரச்சினை பண்ணறாரா எழிலா?” எனக் கேட்டார்.
“அவர் அப்படி டைப் எல்லாம் இல்லைபா. என்னவோ அவர் தங்கச்சிக்கு நான் பொருத்தமானவன் இல்லைனு ஒரு எண்ணம். அதோட நிலா எந்த விதத்திலும் கஷ்டப்படக் கூடாது. தலைவலி கூட வரக் கூடாது. அதுக்கு என்ன காரணம்னு கண்டுபிடிச்சி அதுக்காக எல்லாத்தையும் மாத்தற டைப். சொல்லப் போனா நிலா மேலே இருக்கிற பாசம், பொசஸிவ்வா மாறி எல்லாரையும் கஷ்டப்படுத்தறார். அவரும் கஷ்டப்படுறார்.” எனத் தெளிவாகப் பேசினான் எழிலன்.
எழிலனின் பேச்சின் பின், செழியன் அமைதியாகி விட்டார். நடந்தவைகள் எதற்கும் இவர்கள் யாரும் பொறுப்பல்ல என்றாலும், துன்பப்படுவது தங்கள் மகன் தானே என்ற வருத்தம் செழியன், மலர் இருவருக்கும் இருந்தது.
சொல்லப்போனால் செழியனை விட மலர் தான் நிலாவை நினைத்தும் அதிகம் வருத்தப்படுவார். ஒரு சில சமயங்களில் நிலா ஸ்ட்ராங்க்காக இருந்திருந்தால், இவர்களுக்குள் பிரிவு வந்திருக்காது என செழியன் கூறுவார். அப்போது மலர் தான் நிலாவின் சுபாவம் அப்படி. அவளின் சொந்தங்கள் அப்படி அவளை வளர்த்து இருக்கிறார்கள். நிலாவால் எந்த பக்கமும் செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறாள் என்பார் மலர்விழி.
எழிலன் பெற்றோரிடம் பேசிவிட்டு, வழக்கம்போல தன் பிளேலிஸ்ட் போட்டுவிட, ‘நிலாவே வா.. செல்லாதே வா’ என்ற பாடலுடன் ஆரம்பித்தது. இந்த செட் முழுதும் நிலாப் பாடல்கள். அதிலும் பாலு அவர்கள் பாடிய நிலாப் பாடல்கள் மட்டுமே.
இதை பிளே லிஸ்ட்டாக செட் செய்யும்போது நிலாவை எழிலன் அறிந்திருக்கவில்லை. அவனின் பத்தாம் வகுப்பு விடுமுறையில் சிடியில் பதிந்து வைத்தப் பாடல்கள். அந்த செட் அப்படியே தற்போது ஸ்போட்டிபை  பிளேலிஸ்ட்டாக மாறியிருக்கிறது.
ஆனால் நிலாவை அறிந்த பின், அவளின் மீதான விருப்பம் புரிந்த பின், இந்த பிளேலிஸ்ட் மட்டுமே எழிலனின் விருப்பமான ஒன்று.
இன்று காலையில் கல்லூரியில் அவளைப் பார்த்ததும், கட்டியணைக்கும் வேகம் தான் எழிலனுக்கு. இருக்கும் இடமும், பார்க்கும் வேலையும் மட்டுமே அவனைக் கட்டுக்குள் வைத்தது.
எப்போதுமே நிலா அளவிற்கு எழிலன் தன் அன்பை வெளிப்படுத்தியதில்லை. நீண்ட வருடங்கள் கழித்து பார்க்கும்போது தான் தன் மனது அவளை எந்த அளவு தேடியிருக்கிறது என்று உணர்ந்தான் எழிலன்.
மாலையில் ஆதிராவோடு அவளின் கிண்டல் எல்லாம் நினைத்துச் சிரித்தவனுக்கு அப்படியே பார்ட்டியில் நடந்ததை நினைத்து மீண்டும் சிரிப்பு வந்தது.
எழிலனை வரவேற்று நிலவன் பூங்கொத்துக் கொடுத்ததும், அவனை வரவேற்புரை வழங்க அழைத்தனர்.
இதற்கு முன் மற்றவர்களை வரவேற்பதில் நிலவனுக்கு ஏதும் சிக்கல் இல்லை. அவர்களின் பொதுவான விவரங்கள் கேட்டுவிட்டு, அதை வைத்து தன்னுடைய வார்த்தைகள் சிலவற்றைச் சேர்த்துப் பேசிவிடுவான்.
எழிலனுக்கும் அப்படி விவரங்களை நிலவனின் உதவியாளர் எடுத்து வைக்க, நிலவனுக்கு எரிச்சல் வந்தது. நிலவழகியோடு பிரிவிற்கு முன்னரே, இரண்டு முதுகலைப் படிப்பு மற்றும் ஒரு ஆராய்ச்சிப் படிப்பும் முடித்திருந்தான். தற்போது  மேலும் இரண்டு ஆராய்ச்சிப் படிப்புகள் முடித்துவிட்டு, சென்னையில் வேலை பார்க்க வந்திருக்கிறான். இந்தத் தகவல்கள் படித்ததும், இதுதானே இவனின் கர்வத்திற்கு காரணம். அவர்கள் மட்டுமே படிப்பாளி என்ற ஆட்டியுடு என்று நினைத்தான்.
உண்மையில் எழிலன் அப்படி நினைப்பவன் அல்ல. படிப்பு என்பது எல்லாருக்குமான அரண் என்ற நினைப்பு உண்டு. அதே போல ஆசிரியர் வேலையின் மீது மிகுந்த மதிப்பும் உண்டு. அதைப் பல இடங்களில் வெளிப்படுத்துவான். அவனின் வார்த்தைகளில் நிலவனாக சிலவற்றைத் தவறாக நினைத்துக் கொண்டான். இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையான உறவுச் சிக்கல்.
தற்போது வேறு வழியில்லாமல், கடனே என எழிலனை வரவேற்றுப் பேசி முடித்தான் எழிலன்.
அத்தோடு முடியாமல் நிலவனின் உதவியாளர் ஏற்பாடு செய்தபடி, தொகுப்பாளர் எஸ்பிபி அவர்களின் பாடல்கள் பாடுவது எழிலனின் தனித் திறமை எனக் கூறி, அவனை மேடை ஏறிப் பாடக் கூறினார். சொல்லப்போனால் இது நிலவனின் தனிச் சிறப்பு. ஒவ்வொருவரின் தனித் திறமை கண்டறிந்து அதை வெளிப்படுத்த வைப்பதில் கை தேர்ந்தவன். இது எல்லாம் அவனின் அட்மினிஸ்ட்ரேஷன் பாடங்களில் படித்தது. படித்ததைச் செயலிலும் கையாள்பவன். அந்தப் பழக்கத்தில் எழிலன் பற்றியும் அறிந்து நிலவனின் உதவியாளர் செய்த வேலை இது.
எழிலனும் பெயருக்குக் கூட மறுக்கவில்லை.
ஆனால் “ஹாய், எப்போதும் மெலோடி பாடல் தான் பாடுவேன். ஃபார் அ சேஞ்ச், நான் எஸ்பிபி அவர்கள் பாடிய துள்ளல் பாட்டு ஒண்ணு பாடட்டுமா. வித ஆல் யுவர் பர்மிஷன்” எனக் கேட்க, எல்லோரும் சம்மதித்தனர்.
“அட மாப்பிள்ளை, சும்மா முறைக்காத மச்சான் சொன்னா கேளு” எனப் பாடினான். அந்த பாட்டில் வரும் மற்ற குரல்களையும் மாடுலேஷன் செய்து எழிலனே பாட, பார்த்திருந்தவர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றான். அந்த அரங்கத்தில் ஒருவனைத் தவிர மற்ற எல்லோரும் அதை ரசித்தனர்
அந்த ஒருவன் நிலவன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? பாடல் முடிந்ததும் எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
பின் பஃபே முறையில் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, எல்லோரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அங்கே அங்கே அமர்ந்தனர்.
எழிலனின் சீனியர் ஒருவர் அவனை அழைத்தார். அவர் நிலவன் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். எழிலன் அங்கே செல்லவும்,  சீனியர் “எழிலன், மிஸ்டர் நிலவன் தான் நம்ம அலுமினி குரூப் இவ்ளோ ஆக்டிவ்வா இருக்கக் காரணம். உங்க ஸ்டூடண்ட் பீரியட்லே நீங்க யோசிச்சதை எல்லாம் இவரும் பேசுவார். உங்க ரெண்டு பேருக்குள் ஒரே வேவ் லெந்த் இருக்கு. சோ அதைச் சரியா பிராசஸ் பண்ணி, நம்ம குரூப் மூலமா இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கணும்னு ஆசைப் படறேன். அதை உங்க ரெண்டு பேர் கிட்டேயும் பெர்சனல் ரிக்வெஸ்ட்டாவும் கேட்கறேன்” என்றார்.
“முயற்சி பண்ணறேன் சர்” என நிலவன் கூற, எழிலனோ “சர், தயவு இருந்தா மலையே ஏறலாமே. கண்டிப்பா நல்ல முறையில் கொண்டு வரோம் சர்” என்றான்.
எழிலன் நிலவனை சர் எனக் கூறும்போதே மச்சான் என அவனைப் பார்த்து வாயசைத்திருக்க, நிலவனுக்கு பிபி எகிறியது.
இது இப்போது அல்ல. நிலாவிற்கும், எழிலனுக்கும் பிடித்தம் என இரு வீட்டினருக்கும் தெரிந்ததில் இருந்தே நிலவனைப் பார்க்கும்போது எல்லாம் எழிலன் மச்சான் சர் என்றே அழைப்பான். அது நிலவனுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், வேண்டுமென்றே அப்படித் தான் கூப்பிடுவான் எழிலன்.
இதைக் குறித்து நிலா, எழிலனிடம் சண்டையிட்ட போதும், மச்சான அண்ணன்னா கூப்பிட முடியும் அழகி எனக் கேட்டு அவளைச் சமாதானப்படுத்துவான் எழிலன். அவன் அழகி என அழைக்கும்போது  நிலாவிற்கு படபடவென வந்துவிடும். கன்னங்கள் சிவக்க, தலைக் குனித்துக் கொள்வாள். எழிலனோ அதை அவள் அறியாமல் ரசிப்பான்.
இப்போது அனைத்தும் எழிலனின் நினைவில் வர, “அழகியே உனைப் போலவே அதிசயம் இல்லையே’ என்ற வரிகள் அவனின் உதடுகள் முணுமுணுத்தது.
-தொடரும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!