Skip to content
Post Views: 100
அத்தியாயம்: 28
எங்கு வரமாட்டேன் என்று நேற்று முறுக்கிக் கொண்டாளோ அங்கு தான் அமர்ந்திருக்கிறாள் ரிதன்யா.
Advertisement
அதான் பத்ரியின் குவார்ட்டர்ஸ்.
நீள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அறைக்குள்ளிருந்த கட்டிலில் கவிழ்ந்து படுத்து உறங்கும் இவனைக் காணவா இவ்வளவு தூரம் வந்தேன் என்றிருந்தது ரிதன்யாவிற்கு.
Advertisement
Advertisement
மனம் முழுவதும் எரிச்சல் மண்டிக்கிடந்தது. அதுவும் காலையில் இருந்து தன் கையை மீறி நடந்து கொண்டிருப்பதைக் காண்கையில், ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அது காட்டப்பட வேண்டியவனோ நித்திரையில் இருக்கும் போது, என்ன செய்வது. பசி வேறு வயிற்றைக் கிள்ள, இரையும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள். உச்சுப் பொழுதிற்கும் சாயங்காலப் பொழுதிற்கும் இடைப்பட்ட நேரம். இரண்டு மணி.
காலையில் சாப்பிடுகிறாயா? என்று கேட்ட, தாயிடம் மறுத்து விட்டு ஒன்பது மணிக்கே ரயில் ஏறி விட்டாள். பத்து மணிக்குள் அவனைப் பார்த்துவிடலாம். பன்னிரெண்டு மணிக்குள் மீண்டும் ரயில் ஏறி ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடலாம் என்று கணக்கிட்டு செல்ல, அவள் கணக்கைத் தப்புக் கணக்காக்கி விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறான்.
Advertisement
பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத விமானநிலையத்தில், தேனீயின் சுறுசுறுப்பில் பறந்து கொண்டிருந்தது ஜனம். ஆனால் இவளோ, திருவிழா கூட்டத்தில் காணாது போன சிறுமி போல் நின்றிருந்தாள், நுழைவு வாயிலில்.
பத்ரிக்கு எத்தனையோ முறை முயன்று விட்டாள். ஆனால் அது செல்லவே இல்லை. அவன் இன்னும் விமானத்தில் தான் இருக்கிறான் என்பது புரிந்து காத்திருக்கத் தொடங்கினாள்.
அவன் என்ன பயணியா! நான்கு மணி நேரத்தில் விமானம் தறையிறங்கியதும் பாய்ந்து கொண்டு ஓடி வர. அவன் விமானி. விமானத்தின் நிலை எம்மாதிரி உள்ளது என்று தன் குழு உறுப்பினருடன் சேர்ந்து ஒவ்வொரு பயணம் முடியும் போது, அறிக்கை தயாரித்துக் கொடுக்க வேண்டும். அதன் பின்னும் அவனுக்கெனப் பணிகள் வரிசையில் இருக்குமென நினைத்துக் கொண்டு அவள் இருக்கையைப் பிடித்து அமர்ந்து கொள்ள,
“ஆர் யூ தன்யா!!” என்று ஒரு பெண் குரல் கேட்டது. விமான பணிப் பெண் போன்ற உடையில் ஒரு மெழுகுச் சிலை அவள் பெயரைச் சொன்ன விதத்திலேயே புரிந்து கொண்டாள், இவள் பத்ரியை அறிந்தவள் என்று.
நான் தான் தன்யா என்று தலையசைக்க,
“ஐ ஆம் ப்ரஷ்ஷா. சீப் ஏர் ஹோஸ்டர்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பொது மக்கள் நடமாடும் landside-ல் இருந்து, விமானி மற்றும் பணியாளர்கள் புழங்கும் airside-க்கு அழைத்துச் சென்றாள்.
அந்தச் சிலை நுனி நாக்கில் வைத்திருந்த ஆங்கிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக துப்பிக் கொண்டே வந்தது. அதன் சாராம்சம், அவளும் பத்ரியும் ஒன்றாக படித்தவர்களாம். கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களாம். அவனை நன்கு தெரியுமாம் அவளுக்கு.
முழு மூச்சாக அவனின் அருமை பெறுமைகளைச் சொல்லி முடித்தவள், ரிதன்யாவைப் பற்றி கூறியிருக்கிறான் என்றாள். இன்று அவளின் வருகையைப் பற்றியும் சொன்னானாம். அவனின் விமானம் துபாயின் வானிலை மாற்றம் காரணமாக ரெண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாம். சரியாக இருபது நிமிடத்தில் ஓடுதளத்தை அடையும் என்று கூறி ஒரு கண்ணாடி அறையில் அவளை அமர வைத்து விட்டுச் சென்றாள்.
“இந்த ரன் வே-ல வந்து இறங்குறது தான் பத்ரி ஓட்டிட்டு வர்ற ப்ளைட்.” என்று கண் சிமிட்டி விட்டு செல்ல, அவள் காட்டிய இடத்தைப் பார்த்தபடி அவளும் அமர்ந்திருந்தாள்.
சிலை சொன்ன நேரத்திலிருந்து பத்து நிமிடங்கள் தாமதமாகவே கண்ணில் தெரிந்தது ஒரு விமானம். அதை ஓட்டி வருபவன் பத்ரி என்றதும் அவளையும் அறியாது, இதழ்கள் முணுமுணுக்கத் தொடங்கின, பத்திரமாக தரையிங்க வேண்டும் என்று.
அதிலும் சக்கரத்தைத் தரையில் இறக்குகையில் விமானம் சில அடி தூரம் குதித்துக் குதித்து ஓட, இவளுக்கு நடுக்கம் அதிகமாகவே இருந்தது.
பயணிகள் இறங்கி, பணிப் பெண்களும் இறங்கி, கடைசியாக கண்ணில் தெரிந்தவனை ஒருவித ஆசுவாசத்தோடு கண்டாள்.
அவன் ஃபோனை எடுப்பதை உள்ளிருந்து கண்டவள், தன் அலைபேசியை வேகமாக எடுக்க, அவன் தான் அழைத்தான்.
“சாரி தன்யா லேட்டாகிடுச்சி… மெசேஜ் போடணும்னு நினைச்சேன். பட் முடியல. இப்ப நீ எங்க இருக்க? ப்ரஷ்ஷா உன்ன டேக் ஓவர் பண்ணாளா?”
“ம்… பண்ணாங்க.” என்றவள் இடத்தைச் சொல்ல, அவளின் கண்ணாடி கூண்டை நோக்கி திரும்பியவன்,
“எனக்கு நீ எங்க இருக்கன்னு தெரியல தன்யா. உனக்கு நான் தெரியுறேனா… ஹாய்…” என்று இரு கரத்தையும் தூக்கி அசைத்துக் காட்ட, மெல்லிய புன்னகை அரும்பியது.
“தெரியுறீங்க.” என்றவளின் குரலில் இருந்த புன்னகையை உணர்ந்தவன்,
“கொஞ்சம் வெய்ட் பண்ணு தன்யா. நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வர்றேன்.” என்று விட்டு நடப்பது தெரிந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் தான் வந்தான். அவனின் அக்மார்க் சாரியுடன்.
தாடி இல்லாத தாடையும், சீராக வெட்டப்பட்டிருந்த சிகையும், சதையே போடாத அவனின் தேகமும் அதன் வனப்பை எடுத்துக்காட்டும் இறுக்கமான சீருடையுடன், அடர் மீசைக்கு மத்தியில் தாராளமாக புன்னகைத்தபடி வந்தவனைக் காண்கையில்,
“சுண்டி விட்டா இரத்தம்.” என்று சுருதி சொன்னது தான் நினைவு வந்தது.
கன்னங்கள் சட்டென சூடாக, முகம் திருப்பி அதை அவனுக்குக் காட்டாது மறைத்தாள்.
“இவ்வளோ நேரம் ஆகும்னு நினைக்கல தன்யா… தெரிஞ்சிருந்தா இன்னொரு நாள் வரச் சொல்லிருப்பேன். சாரி.” என்றபடி அவன் நெருங்கி வருவதற்குள் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டவள்,
“இட்ஸ் ஓகே… சரிகாக்கு ஸ்கூல் முடியுறதுக்குள்ள நான் வீட்டுக்குப் போகணும். சோ…”
“ஓ… பேசணும்னு சொன்னேல…” என்றவன் இரு அடிகள் முன்னால் எடுத்து வைத்திருப்பான். பின் திரும்பி, “சாப்டியா?” என்க, ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“எனக்கும் பசிக்குது. லன்சுக்கு இன்னும் டயம் இருக்கு. லைட்டா இங்க எதையாவது சாப்டுட்டு போகலாமா?” என்றவன் முகத்தில் தெரிந்த கலைப்பில் மறுப்பு சொல்ல முடியாது, உடன் நடந்தாள். இல்லை ஓடினான். அவனின் வலிய நீண்ட கால்கள் எடுத்து வைக்கும் நடைக்கு ஈடாக இவள் ஓடினால் தான் சரியாக இருக்கும்.
செல்லும் போதே, அனைவரின் பார்வையும் அவளை மேய்வதைக் கண்டவள், ஏன் இந்தப் பார்வை என்று புரியுது சிறு சங்கட்டத்துடன் சென்றாள். பத்ரிக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை போலும். சிற்றுண்டியை ஆர்டர் கொடுத்து விட்டு,
“என்ன பேசணும் தன்யா?” என்க, அவள் பார்வை அவனிடம் இல்லை. அவர்கள் இருவரையும் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் மீது தான் இருந்தது.
“தன்யா!!!” என்று மேஜையைத் தட்ட,
“ஹாங்…” என்று திடுக்குற்றவளிடம்,
“என்னாச்சி?”
“ஏன் எல்லாரும் நம்மல ஒருமாதிரி பாக்குறாங்க?” என்று கேட்டு விட,
“ஒரு பொண்ணு சிரிச்சு பேசினா இப்படித்தான் பாப்பாங்க. அதுவும் ப்ளைட்ல இருந்து வேகவேகமாக ஓடி வந்து, கேண்டின்ல கார்னர் சீட் பிடிச்சு தனியா உக்காந்தா, பாக்கத் தான் செய்வாங்க.”
“என்ன மேன்! சிங்கிள் க்ளாஸ் டூ ஸ்ட்ராவா!” என்று கண்சிமிட்டியவன்,
“பை தி என்னோட பேரு கேப்டன் அமர்நாத் கோசிங்கே. உன்னோட பேர் என்னம்மா?” என்றான் நாற்பது வயதைத் தொட்ட மனிதன். அவள் பத்ரியைப் பார்த்தாள்.
என்ன சொல்லி தன்னை அறிமும் செய்வது? என்பது போல்.
தோழியா? இல்லை…
“பேரு ரிதன்யா கேப்டன். இன்னும் கொஞ்ச நாள்ல மிஸஸ் ரிதன்யா பத்ரி நாராயணன் ஆகப்போறவங்க.” என்று பட்டென்று அறிமுகம் செய்து அவளின் இதயத் துடிப்பை வேகமெடுக்கச் செய்தான் பத்ரி.
“வாவ் எங் மேன்… குட் நியூஸ் சொல்லிருங்க.” என்றுவிட்டு,
“எவ்ரி படி லிசன்… இவங்க தான் மிஸஸ் பத்ரி நாராயணனாம்.” என்க, பலர் கைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.
“கேப்டன் பத்ரியோட மேரேஜ் நியூஸ்னால, இன்னைக்கு என்னோட ட்ரீட்.” என்று பிரகடனப்படுத்தினார்.
‘என்னது மிஸஸ் பத்ரி நாராயணனா! அவன் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அறிமுகப்படுத்தினா! இவரு மனைவியாவே அறிமுகம் செஞ்சி வைக்கிறாரு.’ என்று உள்ளுக்குள் கவுண்டர் போட்டுக் கொண்டிருக்கும் போதே, மொத்த ஆள்களும் கூடி விட்டனர் வாழ்த்துக்களைச் சொல்ல.
எப்பொழுது கல்யாணம்? எப்படி இது நடந்தது? என்று கேட்டு, சந்தோஷமாக, கோபமாக, பொறாமையாக என்று பலர் ரிதன்யாவிற்கு கைக் கொடுத்தும், பத்ரியைக் கட்டி அணைத்தும் மகிழ்ச்சியைப் பகிர, அவர்கள் அனைவருக்கும் பத்ரி, ரிதன்யாவின் தோளில் கரம் பதித்து, நெஞ்சோடு நிறுத்தி, ஜோடியாக தன் சகாக்களுக்குக் காட்சி தந்து கொண்டிருந்தாள்.
நடப்பதையே விளங்காது பேரமைதியோடு பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் கரம் பட்டதும் அன்னிச்சை செயலாக உடல் ப்ரிட்ஜ்ஜில் இருந்து எடுத்து வைத்த பனிக் கட்டி போல் விரைத்து கொண்டது. முகமும் கலக்கத்தைத் தத்தெடுக்க, அதைத் தட்டி விட்டு கலவரம் செய்யாது நின்றாள்.
‘ஏன் இப்படி நிற்கிறாள்?’ என்று காரணம் தெரியாத போதும் பிடியின் இறுக்கத்தைக் கூட்டி, அவளை அணைத்தவாறு பார்க்கிங்கை நோக்கிச் சென்றான்.
ரோபோ போல் தள்ளிச் செல்லலாம். ஆனால் தூக்கி பைக்கில் வைக்க முடியுமா என்ன?
அவளின் மின்சார தாக்குதல் கோலம் கண்டு,
“தன்யா!!! என்னாச்சி?” என்று முகத்திற்கு முன் விரல்களை அசைத்து கேட்க, சுயம் பெற்றவள், எங்கே இருக்கிறோம் என்று சுற்றி சுற்றி பார்த்தாள்.
“ஏர்பேர்ட் தான். தாஜ் மகால் இல்லை.” என்றபடி ஏறி அமர்ந்து கொண்டு, ஏறு என்பது போல் அவளைப் பார்க்க, அவள் கோபமாக முறைத்தாள்.
‘தோளத்தான தொட்டேன். அதுக்கே இவ்ளோ ரியாக்ஷனா!’ என்று முணுமுணுத்தவன்,
“மொட்ட வெயில்ல நின்னு நிலாக் காயாம ஏறி உக்காந்தா, எங்கையாது நிழல்லா பாத்து நிப்பாட்டுவேன். பேசலாம்.” என்று சொல்லி ஸ்டார்ட் செய்தான்.
அவளுக்கும் நடுங்கும் உடலைச் சீர்படுத்த நேரம் வேண்டும்.
அவனுடன் ரசாபாசம் செய்யாது ஏறி அமர, வண்டி எங்கேயும் நிற்காது சென்று கொண்டே இருந்தது. வெகு நேரமாக அதைக் கவனித்தவள்,
“எங்க கூட்டீட்டு போறீங்க?” என்று கிட்டத்தட்ட கத்தினாள்.
தன் கையை மீறி நடக்கும் அனைத்திற்கும் இவன் தானே காரணம் என்ற ஆத்திரம், கொட்டத் தயாராக இருந்தது.
“குவாட்டஸ்க்கும்.” என்றான் காதை ஒரு விரலால் மூடியபடி,
“நான் அங்க வரமாட்டேன்னு சொன்னேன்ல.”
“ஆனா வேற எங்க வச்சி பேசினாலும் அது ரோட் ஷோ காட்டுன மாதிரி இருக்கும். பரவாயில்லையா?.”
“அதுக்குன்னு… வீட்டுக்கு…” என்று இழுக்க,
“அது ஒன்னும் என்னோட சொந்த வீடு கிடையாது. வாரத்துல ரெண்டு நாள் அதை தூங்க மட்டும் தான் யூஸ் பண்றேன். வேற இடம் மாறும் போது வீடும் மாறும்.” என்றவன், அடுத்து அவள் பேச வாய்ப்பு தராது,
“எனக்கு வண்டி ஓட்டும் போது பேசுறது பிடிக்காது தன்யா. இறங்கவும் நம்ம பேச்ச தொடருவோம்.” என்று கமா வைக்க, வீடு வந்ததும் அது முற்றுப் புள்ளியாகிப் போனது.
குவாட்டஸ்ஸிலும் தன் மனைவி தன் மனைவி என்றபடியே காண்போரிடம் அறிமுகம் செய்தான்.
‘ஏன் இப்படி?’ என்று நொந்து கொண்டவள்,
“இப்ப இத அவசியம் சொல்லணுமா?”
“வேண்டாங்கிறியா! சரி ரிசப்ஷன் வச்சுச் சொல்லிக்கலாம்.” என்று இன்னும் முடிவாகாத திருமணத்திற்கு மேடை போட்டுக் கொண்டிருந்தான்.
வீடு வந்ததும், “தன்யா டூ மினிட்ஸ். ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்.” என்று விட்டு குளியலறை புகுந்தான்.
இரண்டு நிமிடங்கள் என்று விட்டு சென்றவன், வருவான் வருவான் என்று இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறாள். ஆனால் அவன் வரவே இல்லை.
குளித்து விட்டு வந்தவன், கட்டிலில் கவிழ்ந்தடித்துக் கொண்டு உறங்குவான் என்று கனவா கண்டாள்.
இப்படியே ஓடி விடலாமா என்றிருந்தது. ஆனாலும் அவனிடம் பேச வேண்டும். எனக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பதை தெளிவாகச் சொல்லி இந்தக் கல்யாணப் பேச்சை உடனே நிறுத்தியாக வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறாள்.
வயிறு என்னைக் கவனி என்க, இதற்கு மேல் பொறுக்காது எழுந்து சென்றாள் சமையலறைக்கு. பாத்திர பண்டங்கள் இருந்த போதும் பசியார துரித உணவுகளைத் தவிர எதுவும் இல்லை.
அவன் அழைத்து வந்த போது, கடை ஒன்று கண்ணில் பட்டது. வீட்டைப் பூட்டி விட்டு, வேகமாக அரிசி, பருப்பு மற்றும் இருக்கும் காய்களில் எதையாவது இரண்டை வாங்கி கொண்டு வந்தாள்.
உலை வைக்கும் போது தனக்கு மட்டும் வைக்க மனம் வரவில்லை. “லைட்டா சாப்டுட்டு போவோமா?” என்று அவன் ஆர்டர் செய்து வந்த உணவை உள்ளிறக்கும் முன் அமர்நாத் வந்து விட்டார். அனைவரின் வாழ்த்து மழையில் நனைந்தவனுக்குச் சிற்றுண்டி தேவையில்லாது போனது.
தன்னைப் போலவே இவனும் நேற்று இரவு தான் உண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவள், பருப்பையும் அரிசியையும் மின்சார அடுப்பில் வேக வைத்து, உருளைக் கிழங்கை வறுவல் செய்து, பீன்ஸ்ஸை பொரியல் வைத்தாள். அப்பளத்தை எண்ணெயில் போட்டெடுக்காது. சுட்டு எடுத்து, அறு சுவை உணவு தயார் என்ற திருப்தியுடன் திரும்ப, நிலைக் கதவில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் பத்ரி. உதடுகளில் ஒருவித மோகனப் புன்னகை.
அது அவன் மன நிறைவுடன் இருக்கிறான் என்றது. தனக்கான தன் சமையலறையில் நின்று சமைக்கும் பெண். அது ஆடவனுக்குள் கர்வத்துடன் சொல்லும் செய்திகள் ஏராளம்.
உயர்த்தித் தூக்கிச் சொருகிய புடவையும், அரும்பி வடிந்து, கச்சையை ஈரம் செய்திருந்த வியர்வையும், தனக்காக அவளின் மெனகெடுதலைச் சுட்டிக் காட்டி, ஊசியாய் உணர்வுகளை அவனுள் புகுத்தி, மயிர்கால்களை முழு நீளத்திற்கு நிமிர்வுடன் நிற்க வைத்தது.
இரு கரத்தையும் கட்டிக் கொண்டு அசையாது அவளின் அசைவுகளையே பார்த்தபடி இருந்தவனை, கையில் பாத்திரங்களை ஏந்திக் கொண்டு திரும்பியவள் பார்த்து விட்டு தலையை வேகமாக கவிழ்த்திக் கொண்டாள்.
அவனுடன் மட்டும் தனித்து இருக்கும் சமயங்களில் உண்டாகும் சஞ்சலம், அவர்களுக்குள் இருக்கும் தூரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தது.
அவனுடன் அவனின் சமையலறையில் நிற்கும் போது அசௌகரியமாக உணர்ந்தாள். அனைத்திற்கும் மேலாக ஆண் என்ற அவனின் தேஜஸ்ஸும், ஆளுமையான பார்வையும் அவளுக்குள்ளும் எதுவோ செய்தது.
‘இதுவரை இல்லாத உணர்வு. யாருக்கும் கொடுக்காத இடத்தை நீ அவனுக்குக் கொடுத்ததால் இந்த உணர்வை நீ எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்றது.’ என்றது அவளின் மனம்.
பத்ரியின் வசீகரம் அவளை ஈர்க்கிறது என்பதை அவள் மட்டுமல்ல பத்ரியுமே உணர்ந்திருந்தான்.
அவனைத் தள்ளி வைத்தால் எதுவும் நேராது என்றும் மனம் சொல்ல, இருவேறு மனநிலையில் குழப்பத்துடன் அவள் நின்றாள்.
கையில்லாத டேங்க் டாப் போட்டு, சாட்ஸ் அணிந்து நின்றவனை முழுதாக ஏறிட முடியாது அவள் தடுமாற,
“ஆர்டர் போடணும் நினைச்சேன் தன்யா. நீயே சமைச்சிட்ட… தேங்க்ஸ் தன்யா.” என்று இலகுவாகச் சொல்லி விட்டு, அவளிடமிருந்த பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு உணவு மேசைக்கும் நடந்தான்.
அவள் வருகிறாளா என்றெல்லாம் பார்க்காது, தட்டில் வைத்து உண்ண, தேவாமிர்தமாக இருந்தது சுவை.
நெய் விட்டு பிசைந்து ரசித்து உண்டான்.
தனக்கு ஏதாவது மிஞ்சுமா? என்ற ரீதியில் அமர்ந்திருந்தளிடம்,
“சாப்பாடு சூப்பரா இருக்கு தன்யா. டேஸ்ட் இஸ்… வாவ்…”
‘இந்தப் பாராட்டுக்கு நான் நன்றி சொல்லணுமா!’
“சாரி… ரொம்ப நாளுக்கு அப்றம் நல்ல சாப்பாட பாக்குறேன். அதான்… பட் உனக்கும் இருக்கு. கம்…” என்றவன் தட்டில் போட்டு அவளுக்கு நீட்டினான்.
‘உனக்கு வடிச்சுக் கொட்டி, பாராட்டு பத்திரம் வாங்கி, உங்கூட உக்கார்ந்து சாப்பிடவா வந்தேன்.’ என்று கருவியபடியே உண்டு முடித்தாள்.
உணவு முடிந்தது.
பிறகென்ன!
பேச வேண்டியதே பேச வேண்டியது தானே!
“நல்லா சாப்பாடு. இந்த சாப்பாடு செமிக்க ஒரு வாக் போலாமா தன்யா?” என்க, மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தவள், எதுவும் சொல்லாது வேகவேகமாக நடக்க,
“தன்யா… எங்க போற?” என்ற பின்னாலேயே ஓடினான்.
“வீட்டுக்கு…”
“பட் நீ பேசணும்னு சொன்னியே!”
“எனக்கு அதுக்கு நீங்க வாய்ப்பு தரப்போறதில்லன்னு நல்லா புரிஞ்சிடுச்சி. நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. நீங்க விரிக்கிற வலைல சிக்கிக்க.”
“வலையா… யாரு விரிச்சா! அப்படிலாம் இல்ல.”
“அப்படித்தான்… உங்களுக்கு சமைச்சி போட்டு, வாக்கிங் கூட்டீட்டு போக ஒன்னும் நான் வரல. நான சொல்ல வந்தது என்னென்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. என்னோட நேரத்த வீணாக்கி என்ன டயர்டாக்குறீங்க. என்னால இந்தக் கல்யாணத்த மட்டுமில்ல, உங்களயும் ஏத்துக்க முடியாது.
எனக்கு அட்வான்ஸ் வேண்டாம். நான் வீட்ட காலி பண்றேன்.” என்றவள் தன் முடிவு இது தான் என்று அறிவித்து விட்டு நடைபோட,
“நீ அவசரப்பட்டு முடிவெடுக்குற. நாம இதை பேசித்தான் சரி பண்ண முடியும். பேசுவோம் தன்யா.”
“நான் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் வரல. ஸ்கூல் முடியுற நேரமாச்சி. சரிகா தனியா இருப்பா…” என்றபடி கதவைத் திறக்க, அதைப் பட்டென்று மூடியவன்,
“உனக்கு பிள்ளைங்கள நினைச்சு தான கவல. இரு…” என்றவன் அதிதிக்கு அழைத்து சரிகாவை பிக்கப் செய்து கொள்ளச் சொன்னான். கூடவே சுதாவிற்கு கால் செய்து,
“ம்மா, தன்யா எங்கூட தான் இருக்கா. நீங்க லெட்சுமி அத்தைட்டா சொல்லி, சரிகாக்கும், தன்யாக்கும் ரெண்டு நாளுக்குத் தேவையான டிரெஸ்ஸ பேக் பண்ணச் சொல்லுங்க.
கணேசனுக்குச் சொல்லிட்டேன். அதி ஸ்கூல்ல இருந்து வந்ததும், அவங்கள கூட்டீட்டு, கார எடுத்திட்டு வந்திடுவாரு. நீங்க அத்தைய துணைக்கு வச்சுக்கங்க. நாங்க மூணு நாள்ல வந்திடுவோம். எதுனாலும் கால் பண்ணுங்க.”
“என்ன பண்றீங்க?” என்றாள் அதிர்ச்சி விலகாத குரலில்.
“நாளைக்கி உனக்கு லீவ் தான தன்யா. உனக்கு மட்டுமில்ல பிள்ளைங்களுக்கும் வரிசையா மூணு நாள் லீவ். என்னால அங்க வரமுடியாது. எனக்கு டியூட்டி இருக்கு. அதான் அவங்கள இங்க வரவச்சேன். நீயும் டென்ஷன் இல்லாம இருப்ப. நமக்கும் பேசுறதுக்கு மூணு நாள் கிடைக்கும். ஓகே தான.” என்றவன், அவளை யோசிக்க விடாது.
“ஒரு மணி நேரத்துல வந்திடுவாங்க. நீயே பாத்த! வீட்டுல ஒன்னும் கிடையாது. வா… சாப்பிங் போய்ட்டு வந்திடுவோம். என்னென்ன தேவைன்னு லீஸ்ட் போடுவோம். அதிக்கு நான் பிடிக்கும். ரெடிமேட் பேட்டரா வாங்குவோமா இல்ல ஹோம் மேடா செஞ்சிடலாமா?” என்றவன் அவளை நிற்கவே விடாது துரத்தினான்.
மாலிலும் அப்படித்தான் செய்தான். என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்காது எதையும் கூடையில் எடுத்துப் போடுவதே இல்லை. அவனின் பேச்சில் அவளை நுழைத்து அவளுக்குத் தன்னையும், தங்களுக்குள் பிறக்கப் போகும் புது உறவையும் புரிய வைக்க முயன்றான்.
பிரிந்தது.. ஆனால் அதை ஏற்க முடியாதவளாய் அவள் இருக்க, மாலையில் வந்து சேர்ந்த அதிதி அத்தை என்று கட்டிக் கொண்டாள் உரிமையுடன். பத்ரி கல்யாணத்திற்கு சம்மதம் என்ற போது அத்தை என்று அழைக்கத் தொடங்கிவிட்டாள்.
எதற்கும் அனுமதி தேவையில்லை. என் மாமன் சம்மதித்து விட்டான். இனி அனைத்தையும் என் மாமன் பார்த்து கொள்வான் என்பது போல் இருந்தது.
அதை விட பெரிய அதிர்ச்சி, சரிகா பத்ரியை அப்பா என்று அழைத்துக் கட்டிக் கொண்டது.
எங்கு சென்றாலும் அவளை பத்ரி கைகளுக்குள் தூக்கிக் கொண்டே சென்றான். தீம் பார்க் கூட்டிச் சென்றான். ஏன் விமானத்தின் கார்பிட்டுக்கு கூட்டிச் சென்றதோடு மட்டுமல்லாது. தன் குடும்பம் இந்த விமானத்தில் பயணம் செய்கிறது என்று அறிவித்து சரிகாவை ஸ்பெசலாக கவனித்தான்.
அனைத்தையும், கரண்டவளுக்கு, உள்ளுக்குள் எதுவோ உடைந்தது.
சரிகாவிற்கு தந்தை வேண்டும்…
மூன்று நாள்கள் இருந்தும், ரிதன்யா பேச வேண்டி வந்த வார்த்தைகள் அவளுள்ளேயே புதைந்து போனது.
பத்ரி, தான் ஏன் இந்தத் திருமணத்தை முன்னெடுக்கிறேன் என்பதை செயலில் காட்டியிருந்தான்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!