Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 23

அத்தியாயம் 23

வளையல் கடையில் முகம் கசங்கி யோசனையாக நின்று இருந்தான் பிரபாகரன்.



Advertisement

அஞ்சனா பரணி கூறியதை ஒன்று விடாமல் சொன்ன பின்னர் தான் அவனுக்குமே நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சில விடயங்கள் புரிந்தது.

“மாமா!…” என்று அவன் சிந்தனையை அஞ்சனா கலைக்க

Advertisement

Advertisement

“அவன் சொன்னது சரிதான்.. சில ஜென்மங்கள் என்ன செஞ்சாலும் திருந்தாதுங்க .. அதுலயும் அப்பா விஷயத்த நானே ஹேண்டில் பண்ணி இருக்கணும்.. உன் கையில விட்டு இருக்க கூடாது.. சரி இன்னும் அஞ்சு நாள் தானே அதுவரைக்கும் எதுவும் பண்ணாம இருப்போம்.. கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு பிறகு நானே பார்த்துக்கிறேன்…” என்று முகம் வாட சொல்ல

அவன் மன வருத்தத்தை தாங்க முடியாதவள் “சரி மாமா, இனி எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணலாம்.. அத விடுங்க.. எனக்கு என்ன வளையல் வாங்குனீங்க…?” என்று கேட்க

Advertisement

“நான் எங்க வாங்க.. நீ வந்ததும் செலக்ட் பண்ணலாம்னு இருந்தேன்.. நீயே உனக்கு புடிச்சதா பாத்து எடுத்துக்க…” என்று சொல்ல

“அதெல்லாம் முடியாது நீங்களே உங்களுக்கு புடிச்ச மாதிரி எனக்கு எடுத்து தாங்க…” என்று அஞ்சனா கேட்க

சரி என்ற பிரபாகரன் அங்கு இருந்த வலையல்களை கண்களால் அலசிக் கொண்டிருக்க ,

அஞ்சனா அருகில் வந்து நின்ற நித்தியா “என்னடி வளையல் வாங்குறியா?…” என்று கேட்க

“ம்ம்.. ஆனா நான் வாங்கல.. மாமா வாங்கி குடுக்குறாங்க…” என்று வளையல்களை ஆராயும் பிரபாகரனை பார்வையால் தீண்டி சொல்லி “நீ எங்க போன?.. வளையல் வாங்கலயா?…” என்று அஞ்சனா கேட்க

“நீ குடுத்து வச்சவ.. வளையல் செலக்ட் பண்ண ஆள் இருக்கு.. எனக்கு நான் தான் வாங்கிக்கணும்…” என்ற நித்தியா அங்கு இருந்த சிகப்பு நிற கண்ணாடி வளையல்களை எடுத்து தன் கையில் போட போக,

அவள் பின் இருந்து ஒரு வலிய கரம் அதை அவள் கையில் போட்டு விட, அது யார் என்று புரிய விழி விரித்து தன்னவனை திரும்பி பார்த்தவள் “ஏங்க இப்படி எல்லாம் அதிர்ச்சி குடுக்காதீங்க.. பொட்டுனு போய் சேந்துடுவேன்…” என்று சொல்ல

அவள் தலையில் தட்டியவன் “லூசு என்ன பேச்சு இது…” என்று சொன்னவாறு மஞ்சள் நிற வளையல்களை எடுத்து அவள் மற்ற கையில் போட்டு விட

நடு ஊரில், பொது சந்தையில் கிருபாகரனிடம் இருந்து இந்த செயலை எதிர்பார்க்காதவள் அவனை ஆசையாக பார்க்க,

வேறு வளையல் தேடுவது போல் அவள் காதருகில் குனிந்தவன் “நீ பாக்குற பார்வைய பாத்தா இன்னும் ரெண்டு டசின் வளையல் வாங்கணும் போலயே…” என்று சொல்ல

அவன் பேச்சில் முகம் சிவந்தவள், அதை மறைத்து “அந்த அளவுக்கு ஒன்னும் நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணல.. வளையல் நொருங்குற சீன் எல்லாம் இங்க நடக்காது…” என்று சொல்ல

“சரி விடு.. உனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்.. ரொம்ப நாள் கழிச்சு ஹேவியா பர்பாம் பண்ணலாம்னு இருந்தேன்…” என்று சொல்லி அவன் கண்ணடிக்க

“ஐயோ சாமி எதுவா இருந்தாலும் நிதானமா பண்ணுங்க.. இப்படி ஒரேடியா சேஞ்ச் ஆனா எப்படி…” என்று சொன்னாலும் முகம் மலர்ந்து இருந்தது, மகிழ்ச்சியாக கணவனுடன் சேர்ந்து தனக்கு வேண்டியவற்றை வாங்கினாள்.

அஞ்சனாவோ பச்சை நிற வளையல்களை எடுத்து பிரபாகரனிடம் “இது நல்லா இருக்குல மாமா…” என்று கேட்க

அவளை செல்லமாக முறைத்தவன் “ஏன்டி எனக்கு பச்ச பிடிக்கும்னு எல்லாமே பச்சையாவே எடுப்பியா…” என்று திட்ட

“ஓஹோ, அப்போ எனக்கு பிடிச்ச கலர்ல நீங்களே எடுத்து குடுங்க…” என்று சொல்ல

“அடி போடி!.. எனக்கு பச்ச கலர் பிடிக்கும் என்றதே உன்னால தான் தெரியும்.. இதுல உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு நான் எப்படி கண்டுபிடிக்க…”

“கண்டுபிடிக்கலாம் மாமா.. அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்ல…” என்று அவள் சொல்ல

“அதெல்லாம் கண்டுபிடிச்சாச்சு.. ஆனா கரெக்டானு தெரியல…” என்றவன் ஒற்றை கையை மார்பின் குறுக்கே கட்டி, அதில் மற்ற கையை குற்றி, நாடியை நீவியவாறு அங்குள்ள வளையல்களில் தேடி நாவல் நிற வளையலை எடுக்க, கண்கள் விரித்து ஆச்சரியமாக அஞ்சனா அவனைப் பார்க்க,

“என்ன கரெக்டா?…” என்று கேட்டவாறு அவள் கைகளில் வளையலை போட்டு விட

“எப்படி மாமா?…” என்றாள் சந்தோஷமாக

“பச்சைக்கு காம்பினேஷனா இந்த கலரதான் நீ அதிகம் பயன்படுத்துவ.. அதுதான்…” என்று சொல்லி கண் சிமிட்ட

“ம்ம் கில்லாடி தான்…” என்று அஞ்சனாவும் பாராட்டினாள்.

மேலும் தேவையான பொருட்களை இரு ஜோடிகளும் வாங்கிக்கொண்டு, ஜீப்பில் ஏறிக்கொண்டனர். வரும் வழியில் ஆதூரியையும் ஏற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்கு முன்பே கொதி நிலையில் வீட்டிற்கு வந்திருந்தார் முருகானந்தம்.

ஊர் தலைவர் ஆயிற்றே எனவே அவரும் சந்தை அமைந்த மைதானத்திற்கு வந்து இருந்தார். அவரை பார்த்தும் எப்போதும் மரியாதையாக, பவ்வியமாக நடந்து கொள்ளு மக்கள் இன்று ஏலனமாக பார்ப்பது போல் தோன்றியது.

உண்மை என்னவென்றால் அவரது கௌரவம், அந்தஸ்து என்ற இறுமாப்பினால் யாரையெல்லாம் இழிவுபடுத்தினாரோ அவர்களது பார்வை மட்டுமே அவரை குத்தி துளைத்தது.

அதிலும் அவருடன் கூடவே இருப்பவர்கள் தான் ஏளனம் செய்து பேசினார்கள்.

“என்ன தலைவரே!.. பிரபா தம்பி இப்படி பண்றாரு.. இனிமே ஒரு பயன் உங்க பேச்ச கேட்க மாட்டான்.. எதுவா இருந்தாலும் நம்ம கைக்குள்ள இருக்கணும்.. இப்ப பாருங்க இந்த ஊர் தலைவர்னு உங்களுக்கு எவன் மரியாத கொடுக்க போறேன்…” என்று ஒருவன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேச

மற்றும் ஒருவனோ “ஐயாவ சொல்லி என்ன பண்ண.. பொண்ணால தான் ஒரு நேரம் அசிங்கப்பட்டு நின்னார்னு பாத்தா.. மல போல நம்பி இருந்த பையனும் இப்படி பண்றானே…” என்று எப்போதோ நடந்த துர்க்காவின் செயலையும் இழுத்து வைத்து பேச

இதற்காக தானே தனக்கொரு மகள் இருக்கின்றாள் என்பதே தெரியாத அளவிற்கு மறைத்து வைத்திருந்தார் முருகானந்தம்.

இதோ அஞ்சனாவின் ஒற்றை செயலால் அவர் குடும்பம் சந்தி சிரிக்கின்றது. அதற்கு காரணமானவளை சும்மா விடுவாரா என்ன, வீட்டுக்கு வரும்போதே அவளுக்கு ஒரு வழி செய்துவிட்டு தான் வந்தார்.

அதூரியை தூக்கிக்கொண்டு அஞ்சனாவுடன் பிரபாகரன் தனது அறைக்கு செல்ல போக, ஹாலில் அமர்ந்திருந்த முருகானந்தம் “பிரபா!.. கணக்குப்பிள்ளைய வர சொல்லி இருக்கேன்.. இந்த முற தென்னந்தோப்பு மாந்தோப்பு விளைச்சல கணக்கு பாக்கணும்…” என்று சொல்ல

“நாளைக்கு தானே பாக்கிறதா சொன்னீங்க.. இன்னைக்கு என்ன?…” என்று பிரபாகரன் கேட்க

“இப்போ வர சொல்லிட்டேன்.. வந்து உட்காரு…” என்று சற்று அதிகாரமாக சொல்ல

அஞ்சனாவிடம் ஆதூரியை கொடுத்தவன் “செல்லம்மா ரூமுக்கு போ.. நான் வர்றேன்…” என்றவன் முருகானந்தத்தின் அருகில் அமர்ந்து கொண்டான்.

கிருபாகரனும் அண்ணனுடன் அமர்ந்து கொள்ள நித்தியா மகனை பார்க்க பிரேமாவதியை தேடிச் சென்றாள்.

அதூரியை தூக்கிக்கொண்டு அறைக்கு வந்த அஞ்சனாவுக்கு பரணி சொன்னதே யோசனையாக இருந்தது.

அகிலனுக்கு ஏதோ ஒரு மூலையில் வலிக்க வேண்டும் என்பதற்காகவே எதைப் பற்றியும் யோசிக்காமல் பிரபாகரனுடன் சேர்ந்து அப்படியொரு நாடகத்தை நடத்தினாள்.

ஆனால் அதை ஊர்பார்க்க செய்திருக்கக் கூடாதோ என்று இப்போது தோன்றியது. இருந்தும் யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தது போல் செய்திருந்தால் அகிலன் கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான்.

ஏன் அவன் நம்பும் வகையில் இருந்தும் கூட உன்னை விவாகரத்து செய்ய முடியாது, கூடவே வைத்திருந்து சித்திரவதை செய்கின்றேன் என்று சொன்னவன் தானே,

எனவே அவனை நம்ப வைக்க, தான் செய்தது சரிதான் என்றாலும் அவள் செய்த செயல் இருமுனை கத்தி போன்றே, அவளையும் சற்று கீறத்தான் செய்தது.

இருந்தும் வேறு வழி அவளுக்கு தோன்றவில்லை. இப்போது சிந்தித்து என்ன பயன் என்று நினைத்து பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், அதூரியை குளியலறை தூக்கி சென்று கால், கை, முகம் கழுவி வந்தவள் கட்டிலில் அவளை நிறுத்திவிட்டு, அவளுக்கான உடையை எடுத்து மாற்றி விட்டுக் கொண்டிருக்க,

இங்கு ஹாலில் அமர்ந்திருந்த பிரபாகரனுக்கு முருகானந்தத்தின் உடல் மொழி ஏதோ சரியில்லாதது போல் தோன்றியது.

எனவே உடனே தனது அலைபேசியில் இருந்து கணக்கு பிள்ளைக்கு அழைப்பை எடுத்தான். அவரும் அந்தப் பக்கம் ஏற்றவுடன் “அங்கிள் எங்க இருக்கீங்க?…” என்று கேட்க

அவரோ “தோட்டத்துல தான் இருக்கேன் தம்பி.. ஏதும் விஷயம்ங்களா?…” என்று கேட்க

முருகானந்தத்தை பார்த்துக் கொண்டே “அப்பா வீட்டுக்கு வர சொல்லி இருந்தாங்களா?…” என்று கேட்க

“இல்லைங்களே தம்பி.. நாளைக்கு தானே கணக்கு பாக்குறதா சொன்னாங்க…” என்று சொன்ன மறுகணம் நொடியும் தாமதிக்காது வேகமாக எழுந்து தனது அறையை நோக்கி சென்றான் பிரபாகரன்.

கிருபாகரனுக்கு எதுவும் புரியவில்லை, அவனும் அண்ணனை பின் தொடந்தவன் பாதியிலேயே நின்று விட்டான்.

பிரபாகரன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும், அதூரி நின்றிருந்த கட்டிலில் பெரிய நாகப்பாம்பு ஊர்ந்து வரவும் சரியாக இருந்தது.

அஞ்சனா அதை கவனிக்காமல் அவளும் ஆதூரியை நெருங்கி நின்று அவளுக்கு உடை மாற்றிக் கொண்டிருக்க, தன் உயிரானவர்கள் இருவருக்கும் அருகில் உயிரை எடுக்கும் விஷப்பாம்பை கண்ட மறுநொடி பிரபாகரனின் இதயம் நின்று துடித்தது.

சத்தம் போட்டு சொல்லி, அவர்கள் அசையும் நேரம் பாம்பு தீண்டி விட்டால் எல்லாம் போய்விடும் என்பதால், எதுவும் கூறாமல் மெதுவாக அவர்களை நோக்கி அவன் நகர்ந்து வர,

அதற்கு இடையில் அஞ்சனாவும் கட்டிலில் இருந்த பாம்பை பார்த்தவள் திடுக்கிட்டு “ஆதூ!…” என்று குழந்தையை அணைத்து தூக்கிக்கொண்டாள்.

அஞ்சனா குழந்தையை நெஞ்சோடு அணைத்து தூக்கிக் கொள்ள, பிரபாகரனும் அஞ்சனாவையும் குழந்தையும் சேர்த்தது போல் அணைத்து தன்னுடன் சேர்த்து பிடித்தவன், கட்டிலில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து பாம்பின் மீது மூடி விட்டான்.

பாம்பு நகர்வதற்கு முன்பே அதன் தலையில் ஒரு கையும், வாலுக்கு சற்று மேல் ஒரு கையுமாக அழுத்தி பிடித்து பாம்பை தூக்கினான்.

இதைக் கண்ட அஞ்சனா உயிர் நடுங்க “ஐயோ மாமா!.. கடிச்சிட போகுது…” என்று பதற

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “கடிக்கணும்னு தான் நம்ம அறைக்குள்ள இத விட்டதே…” என்று ஆத்திரத்தோடு சொன்னவன் அந்த பாம்பை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேறினான்.

நித்தியா தூங்கிக் கொண்டிருந்த விகர்ணனை எழுப்பி தோளில் போட்டுக் கொண்டு வந்தவள் யோசனையாக நின்றிருந்த கணவனிடம் என்னவென்று கேட்க

“தெரியல நித்தி.. அண்ணா திடீரென அவசரமா அறைக்கு போனான்.. என்னவா இருக்கும்னு தெரியல…” என்று நித்தியாவிடம் கூறிக்கொண்டு இருக்கும் போது அறையில் இருந்து கையில் பாம்புடன் வந்த பிரபாகரனைப் பார்த்து அதிர்ந்தவன்

“அண்ணா!.. என்ன இது.. அடிச்சு கொல்லாம கையில ஏன் புடிச்சீங்க…?” என்று கேட்க

தம்பிக்கு பதில் சொல்லாமல் பிரபாகரன் போய் நின்றது என்னவோ தன் திட்டத்தை கண்டுபிடித்து விட்டானோ என்று வெளிறிய முகத்துடன் அமர்ந்திருந்த முருகானந்தத்தின் முன்புதான்.

மகன் கையில் தான் அஞ்சனாவிற்காக ஏற்பாடு செய்த விஷ பாம்பு இருப்பதை பார்த்தவர் அதிர்ச்சி, பதட்டம், சற்று பதைபதைபுடன் எழுந்து நின்றார்.

“பிரபா என்ன இது விபரீத விளையாட்டு.. சீக்கிரம் கொண்டு போய் வெளியே விடு…” என்றவர் “டேய் மாரி!…” என்று தோட்டக்காரனை பாம்பை அடிப்பதற்கு அழைக்க

“கொண்டு போய் வெளியே விடணுமா.. இல்ல இவ மேல விடணுமா?…” என்று தன் பின்னே பதட்டமாக ஓடி வந்த அஞ்சனாவை காட்டிக் கேட்க

“என்னடா பைத்தியமா உனக்கு.. பாம்ப கையில வச்சுட்டு என்ன என்னமோ உளர்ற.. முதல்ல அத தூக்கி போடு…”

“ரொம்ப நடிக்காதீங்கப்பா.. இத நீங்க தான் பண்ணுனீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.. இவள எதுக்கு கொல்ல பாக்குறீங்க, இதெல்லாம் பண்றது நான் தானே.. என்ன வெச்சு தானே எல்லாமே நடக்குது.. முதல்ல பரணி இப்போ இவ.. இன்னும் யாரெல்லாம் என்னவெச்சு அழிய போறாங்கன்னு தெரியல.. அதுக்கு நான் போய் சேந்துடுறேன்…” என்றவன் பாம்பின் தலையை தன் கழுத்துக்கு கிட்டே கொண்டு செல்ல,

பிரபாகரனை நெருங்கி அவன் கையை தடுத்து பிடித்துக் கொண்டார் முருகானந்தம். அவருக்கு மகன் அவ்வளவு முக்கியம் போலும்.

இதற்கு இடையில் பிரேமாவதியும் சகுந்தலாவும் ஹாலுக்கு வந்தனர். அதில் பிரேமாவதி தன் தலைமகன் கையில் பாம்பை பார்த்து விட்டு “ஐயோ பிரபா!…” பதற

சகுந்தலாவும் ஒரு நொடி ஆடித்தான் போனார்.

“எதுக்குப்பா தடுக்குறீங்க?.. என்னால தான் எல்லாம்னு தெரிஞ்சும் எதுவுமே பண்ண முடியாம.. உங்கள தடுக்கவும் முடியாம.. இதோ உங்கள மீறி என் நண்பனுக்கு எதுவுமே பண்ண முடியாம.. உங்கள மீறி என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்க முடியாம.. உங்கள மீறி நான் நேசிச்சவள கை பிடிக்க முடியாம.. இப்படி நிற்குறதுக்கு காரணமே நான் உங்க மேல வச்சிருக்கிற பாசம் தான்..

…அதனால தான் என்ன நேசிக்கிறவளோட மானத்த பத்தியோ.. எங்களுக்குள்ள இருக்கிற புனிதமான காதல பத்தியோ யோசிக்காம, எந்த ஊர் முன்னாடி அவள அசிங்கப்படுத்தி என்ன விட்டு பிரிச்சிடுவேன்னு சொன்னிங்களோ.. அதே கெட்ட பேர் அவளுக்கு கிடைச்சாலும் அவள விட்டு நான் விலக மாட்டேன் என்றத உங்களுக்கு புரிய வைக்க தான் இவ்வளவும் பண்ணுனோம்.. இப்ப கூட உங்களுக்கு எதுவும் புரியல..

…இந்த பாம்ப என் அறைக்குள்ள விட்டு இருக்கீங்க.. நான் போகும் போது இது என் பொண்ணு பக்கத்துல இருந்துச்சு.. அந்த அறையில் தான் உங்க பேத்தியும் இருக்கானு உங்களுக்கு யோசிக்கணும்னு தோணலல.. அவ்ளோ கொல வெறியா ப்பா.. எப்போ உங்க ஆத்திரமும் ஆணவமும் உங்க வாரிச பத்தி கூட யோசிக்க விடாம பண்ணிச்சோ இதுக்கு மேல பொறுமையா உங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க எதுவும் இல்ல..

…இப்பவே உங்கள என்னால ஒரு வழி பண்ண முடியும்.. ஆனா இப்போ இல்ல.. இன்னும் அஞ்சு நாள் எவ உயிரோடவே இருக்க கூடாதுன்னு நினைச்சீங்களோ, முறைப்படி அவள கல்யாணம் பண்ணி இந்த வீட்டு மருமகளா கூட்டி வந்ததுக்கு பிறகு பாத்துக்கிறேன்.. தயவு செஞ்சு அதுக்கு இடையில திருந்திடாதீங்க கண்டிப்பா தண்டனை உண்டு…” என்றவன் பாம்பை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல

நித்தியா கிருபாகரனை திரும்பி அர்த்தமாக பார்த்துவிட்டு தனது அறைக்கு செல்ல, கிருபாகரனும் தந்தையை வெறுப்பாக பார்த்துவிட்டு மனைவியை பின் தொடர்ந்தான்.

தோட்டக்காரன் மாரியும் பாம்பை அடிக்க தயாராக இருக்க “இல்ல மாரி ண்ணா.. அடிக்க வேணாம்.. ஒரு கோணி பை எடுத்து வாங்க, உள்ள போட்டு எடுத்துட்டு போய் தூரமா காட்டுப்பகுதியில எங்கையாவது விட்டுட்டு வாங்க…” என்று சொல்ல அவரும் அதே போன்று செய்தார்.

அஞ்சனா எதுவும் பேசவில்லை. மிகவும் பயந்து போய் இருந்தாள். குழந்தையை கீழே இறக்கவே இல்லை.

பாம்பை கண்டதுமே ஆதூரியை தோளில் முகத்தை வைத்து அணைத்து பிடித்ததால் குழந்தை பாம்பை பார்த்திருக்கவில்லை. ஆனாலும் ஏதோ சரியில்லை என்பது புரிய அஞ்சனாவுடன் அப்படியே ஒன்றிக் கொண்டாள் சிறியவள்.

பிரபாகரன் உள்ளே வந்து குளித்துவிட்டு வந்த மறு கணம் குழந்தையோடு பாய்ந்து அவனை கட்டிக் கொண்டாள் அஞ்சானா.

அவனுக்குமே அந்த அணைப்பு தேவையாக இருந்தது. தான் ஒரு நொடி சுதாரிக்காமல் விட்டிருந்தாலும் விபரீதமாக எதேனும் நடந்திருந்தால்… நினைக்கவே உடல் நடுங்கியது.

தன் வாழ்வின் ஆதாரமான இரு கண்மணிகளையும் கைகளுக்குள் பதுக்கிக்கொண்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

இங்கோ ஹாலில் இருந்த மூன்று பெரியவர்களும் ஒவ்வொரு மனநிலை இருந்தனர்.

பிரபாகரன் கையில் இருந்த பாம்பையும் அவன் சொன்ன என் பொண்ணு பக்கத்துல இது இருந்துச்சு என்ற வார்த்தையும் இரு பெண்களையும் உலுக்கி போட்டது.

பிஞ்சி மொட்டை அந்த நாகம் மட்டும் தீண்டியிருந்தால் அவர்கள் குடும்பத்தின் முதல் வாரிசு நிலைமை என்னவாகி இருக்கும்… நினைக்கவே உள்ளம் நடுங்கியது.

முருகானந்தத்தை பொறுத்த வரை அஞ்சனாவை மட்டும் தான் அறையினுள் அனுப்ப திட்டம், ஆனால் ஏற்கனவே பிரபாகரனை தடுத்து நிறுத்தி இருக்க, பேத்தியையும் வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டால் சந்தேகம் வரும் என்று விட்டுவிட்டார்.

அவரின் ஆத்திரம் கண்ணை மட்டும் இன்றி புத்தியையும் மறைத்து விட்டது போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!