Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 25

அத்தியாயம் 25

விடிந்ததோ விடியவில்லையோ, வெளியே வர மாட்டேன் என்ற சூரியனை கூட தலையில் தட்டி எழுப்பி விட்டும் பரபரப்பில் இருந்தாள் நித்தியா.



Advertisement

துர்க்கா அஞ்சனா இருவரையும் எழுப்பி, கோயில் செல்வதற்கு தயாராக சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

இன்று எப்படியாவது துர்க்காவையும் பரணியையும் ஒன்று சேர்த்து வைத்து விட வேண்டும் என்பது அவளது ஆவலாக இருந்தது.

Advertisement

Advertisement

ஒரு வழியாக அஞ்சனாவும் துர்க்காவும் தயாராகி வர ,

பெண்கள் மூவரும் கோயிலுக்கு செல்ல இருப்பதை பார்த்த பிரபாகரனும் கிருபாகரனும் துர்க்கா பரணி விடயத்தை பேச இருந்ததை தள்ளி போட்டு, நேற்றைய நாளின் தாக்கத்தை அஞ்சனாவும் துர்க்காவும் முதலில் கோயில் சென்று மனதை சமன் செய்து கொண்டு வந்த பின்னர் பேசலாம் என்று முடிவெடுத்து கொண்டனர்.

Advertisement

மூன்று பெண்களும் புறப்படும் நேரம் எப்படி வந்தாரோ தெரியவில்லை அவர்கள் முன்பு வந்து நின்ற சகுந்தலா அவர்களை தடுத்து

“நான் இல்லாம துர்க்காவ எங்க கூட்டிட்டு போறீங்க?…” என்று கேட்க

நித்தியாவோ உடலை சற்று பின்னுக்கு வளைத்து, கழுத்தை திருப்பி, படி ஏறிக்கொண்டிருந்த பிரபாகரனிடம் “மாமா துர்க்கா எங்க கூட வரக்கூடாதா என்ன?…” என்று கேட்க

நித்தியாவின் குரலில் நின்று திரும்பிய பிரபாகரன் “அத்த!…” என்று இறுகிய குரலில் அழைக்க

“இல்ல பிரபா அண்ணாக்கு தெரிஞ்சா…” என்று இழுக்க

“உங்க முகத்திரை எல்லாம் எப்பவோ கிழிஞ்சிருச்சு.. இனி என் தங்கச்சிக்கு என்ன செய்யணும்மோ அத நான் தான் முடிவெடுப்பேன்.. வேற யாரும் தலையிடக்கூடாது.. தலையிடவும் விடமாட்டேன்…” என்று அழுத்தமாக சொல்ல

“சரி சரி. நான் ஒன்னும் சொல்லல…” என்று பிரபாகரனிடம் இறங்கிய குரலில் சொன்ன சகுந்தலா

“துர்க்கா என் உருத்திராட்ச மாலை காணாம போச்சு.. நீயே உன் கையால பூஜை அறையில் இருந்து ஒன்னு எடுத்து குடு.. வா!…” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க

எதற்கு தனியாக கூப்பிடுகின்றார் என்பது புரிந்த துர்க்கா பாவமாக அஞ்சனா நித்தியாவை பார்க்க

அஞ்சனா “இல்ல…” என்று தடுக்க வரவும்

“போ துர்க்கா எடுத்து கொடுத்துட்டு வா…” என்று நித்தியா சொல்ல சரியென சகுந்தலாவுடன் துர்க்கா பூஜை அறை செல்ல

“எதுக்குடி அந்த கிழவியோட அவள போக விட்ட.. நல்லா தூபம் போட்டு அவ மனச கலைச்சு விட்டுடும்…” என்று அஞ்சனா நித்தியாவை கடிந்து கொள்ள

“பிரபா மாமா பேச்ச பாத்தாலே தெரியல.. கிளடுங்க மூணுக்கும் வெயிட்டா வச்சிருக்காரு.. அத விட என்ன நடந்தாலும் இன்னைக்கு நம்ம நாத்திய புகுந்த வீட்டுக்கு துரத்தி விடுறதுல நான் உறுதியா இருக்கேன்.. அதனால அந்த கிழவி கடைசியா எவ்வளவு வேணும்னாலும் வேதம் ஓதட்டும்.. பாத்துக்கலாம்…” என்று நித்தியா சொல்ல

மெலிதாக சிரித்த அஞ்சனா “வேதம் ஓதுறாங்களா.. அப்போ அவங்கள சாத்தான்னு சொல்றியா?…” என்று கேட்க

“இல்லைய பின்ன…” என்று நித்தியாவும் சகுந்தலாவை திட்டி தீர்க்க

இங்கு பூஜை அறையில்

“இங்க பாரு துர்க்கா கோயிலுக்கு போணோமா சாமிய கும்பிட்டமான்னு வீடு வந்து சேர பாரு.. இந்த தாலிய நினைச்சு தேவை இல்லாத ஆசைகள மனசுல வளத்துக்காத.. உன் வாழ்க்க இதுதான்னு கடவுள் நிர்ணயிச்சத நீ மாத்த முயற்சி பண்ணாத.. இல்லன்னா பாரு உன் கழுத்துல தாலி ஏறுன பிறகு எப்பவோ உன்ன விட்டுட்டு ஓடினவன் கொடூரமான சாவ சந்துச்சு இப்ப வந்து சேரணுமா..

…இந்த தாலிக்கான வாழ்க்க உனக்கு நிரந்தரம்னா போனவன் அப்படியே போய் இருக்கணும்.. இல்ல கண்ணுல படாம எங்கேயாவது செத்திருக்கணும்.. ரெண்டும் இல்லாம அவன் உசுரு போன சேதி உன் காத வந்து ஏன் சேரனும்.. உன்ன தொட்ட பாவத்துக்கு ஒருத்தன் அழுந்தியே போய் சேந்துட்டான்.. கட்டுன பாவத்துக்கு இன்னொருத்தன காவு வாங்கிடாத…” என்று சகுந்தலா சொல்ல

துர்க்காவின் கையில் இருந்த உருத்திராட்ச மாலை நழுவி கீழே விழுந்தது. இதயம் வேகமாக துடிக்க, நெஞ்சில் இரு கைகளையும் வைத்துக் கொண்டாள்.

அவளின் அதிர்ந்த தோற்றத்தை திருப்தியாக பார்த்த சகுந்தலா அவள் காலடியில் கிடந்த ருத்ராட்ச மாலை எடுத்துக்கொண்டு விஷம புன்னகையுடன் வெளியேறினார்.

சிறிது நேரம் கண்கள் அலைப்புற, ஏதேதோ எண்ணங்களை கொண்டு மனதை கூறு போட்டவள், வெளிறி ரத்த பசையற்ற முகத்துடன் வெளியே வர

அவளைப் பார்த்த நித்தியா அஞ்சனாவின் தோளில் இடித்து “ஹெவியா வேப்பில அடிக்கணும் போலயே…” என்று சொல்ல

“இதுக்கு தான் அவள அனுப்பாதன்னு சொன்னேன்…” என்று அஞ்சனா திட்ட

“அடியே நீ வேற.. இங்க ஒரு சகுந்தலா தான்.. அண்ணாவோட சேந்து வாழ ஆரம்பிக்கும் போது ஊரோட ஒத்து தான் வாழனும்.. இந்த ஊருக்குள்ள நூறு சகுந்தலா இருக்காங்க.. அவங்க எல்லாரையும் சமாளிக்க வேணாம்.. ஒவ்வொருத்தரும் ஏதாவது சொல்லும்போது இவ திரும்பத் திரும்ப ஓட்டுக்குள்ள ஒழிஞ்சுக்குவாளா.. யார் என்ன சொன்னாலும் நம்ம வாழ்க்கைய நம்ம தான் வாழனும்.. பாக்கலாம் இதுல இருந்து அவளா வெளிய வராளா இல்லையானு…” என்று நித்தியா சொல்ல

“சரி வா!.. நான் அண்ணாவ ஏற்கனவே வர சொல்லிட்டேன்.. போகலாம்…” என்று அஞ்சனாவும் சொல்ல, துர்க்காவிடம் எதுவும் கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு கோயில் வந்திருந்தனர்.

பரணி ஏற்கனவே கடையில் தான் இருந்தான். பிரபாகரன் வீட்டு கார் கடையை கடக்கவும், தனது ஊன்று கோலின் உதவியுடன் எழுந்தவன் மெதுவாக கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காரில் இருந்து பெண்கள் மூவரும் இறங்கிக் கொண்டனர். தங்களுக்கு பின் நடந்து வரும் பரணியை கண்டு கொண்ட நித்தியா, கால் கழுவும் இடத்தில் தாங்கள் நின்று இருக்க “துர்க்கா நீ இங்கேயே இரு.. நாங்க பூ வாங்கிட்டு வாரோம்…” என்று சொல்லி சற்று தள்ளி இருந்த பூ கடை நோக்கி போக

“ஏய் அவள ஏன் தனியா நிக்க சொல்ற?…” என்று நித்தியாவுடன் நடந்தவாறு அஞ்சனா கேட்க

“நானும் நீயும் பூவ வாங்கி தலையில வச்சுப்போம்.. அவ வச்சுப்பாளா?.. இல்லல.. அதான் தள்ளி நிக்க சொன்னேன்…” என்று நித்தியா கூறிய பதில் துர்க்காவின் காதிலும் விழுந்தது .

இன்றும் எப்போதும் போல் தான் வந்திருந்தாள். அதே காவி நிற உடை, அதே கருப்பு பொட்டு, அவளுக்கும் சுமங்கலி கோலத்தில் தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆசைதான்.

ஆனால் எத்தனையோ இன்னல்களைக் கடந்து அவள் மீண்டும் சூட்டப்போகும் அந்தப் பூச்சரம் அவள் கணவன் கைதொட்டு கொடுத்ததாக இருக்க வேண்டும் என்பது அவள் அடிமன ஆசை.

அது நிறைவேறுமா இல்லையா! இப்போது சவுந்தலா பேசிய பேச்சுக்களின் பின் இப்படி ஒரு ஆசை தனக்கு வரலாமா இல்லையா என்று என்னென்னவோ சிந்தனைகளில் இருந்தவள் பரணி அவளை நெருங்கியதை உணரவில்லை .

பரணிக்கு துர்க்காவை பார்த்து அத்தனை மகிழ்ச்சி, அஞ்சனா மட்டும் தான் வருவாள் என்று அவன் நினைத்து இருக்க, தான் தாலி கட்டிய தாரகையை பாத்ததும் செந்தாமரையை கண்ட சூரியன் போல் அத்தனை பிரகாசம் அவன் முகத்தில்.

பூக்கடையில் நின்று கொண்டு பூக்களை வாங்கி தலையில் சூட்டிக் கொள்ளும் அஞ்சனாவையும் நித்தியாவையும் பார்த்தபடி நின்றிருந்த துர்க்காவைத்தான் அளவெடுத்தன பரணியின் கண்கள்.

எப்போதும் போல் அவளது துறவி தோற்றம் அவன் மனதில் சுருக்கென்ற வலியை உண்டாக்க,

அவளிடம் “இங்க ஏன் தனியா நிக்கிற?…” என்று கேட்க

திடீரென பேச்சு குரல் கேட்கவும் திடுக்கிட்டவள், திரும்பிப் பார்த்து, பின் பரணி என்றதும் இதயம் அதிவேகமாக துடிக்க, படபடப்புடனே அவன் கேட்ட கேள்வியை மூளையில் திரும்பவும் ஓட்டி பார்த்து

“அ..அது.. பூ.. அண்ணிங்க…” என்று துண்டு துண்டாக பதில் சொல்ல

எத்தனையோ வருடங்கள் கழித்து அவனிடம் அவள் பேசுகின்றாள், அதே தேன் குரல் தான். சற்றும் மாற்றமில்லை, என்னவென்று அவனிடம் எகிரிபாயும் அந்த குரல் இன்று பம்மி நிற்கின்றது.

மெலிதாக சிரித்தவன் “நீயும் போயிருக்கலாமே…” என்று சொல்ல

அவனது இயல்பான அணுகுமுறையில் படபடப்பு சற்று குறைய “இல்ல.. பூ.. வைக்க…” என்றவள் முழுதாக முடிக்காமல் தயங்கி நிற்க

அஞ்சனாவும் நித்தியாவும் அவர்களிடம் வந்து சேர, அவசரமாக காலை கழுவிக்கொண்டு அவர்களுடன் கோயிலுக்குள் சென்று விட்டாள்.

தயக்கமாக, தவிப்பாக செல்பவளையே பரணி பார்த்துக்கொண்டு நின்றிருக்க, கோயில் வாசலில் கால் வைக்கும் நேரம் லேசாக திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வை அவனை ஏதோ மாயம் செய்ய, இதயம் சட்டென பூத்தது. அந்த குண்டு கண்கள் ஏதோ செய்தியை அவன் இதயத்திற்கு கடத்தியது. என்னவென்று அவன் மூளைக்கு தான் தெரியவில்லை.

பரவசமாக அவளையே பார்த்து இருந்தவனிடம் அந்த பூக்கடையில் இருந்த பெண்மணி “என்ன பரணி அப்படியே பாத்துட்டு நிக்கிற.. அந்த துர்க்கா பொண்ணு கழுத்துல உன் கையால தான் தாலி ஏறிச்சு.. இப்போ அவ உன் பொண்டாட்டி.. புருஷன் கையால தான் பொண்டாட்டி தலைல பூ ஏறணும்.. துர்க்காக்கு நீயே பூ வாங்கி குடு.. அவ வச்சுப்பா…” என்று சொல்லவும் தான் அவனுக்குமே தோன்றியது.

தான் தானே அவளை மாற்ற வேண்டும். தன் நெற்றியை நீவி கொண்டவன், அவரிடம் சென்று தன் மனைவிக்கா, தன்னவளுக்காக கை நிறைய பூச்சரத்தை வாங்கிக் கொண்டு கோயிலினுள் சென்றான்.

சன்னிதானத்தின் முன்பு நின்றிருந்தனர் பெண்கள் மூவரும். அம்மனை தொழுது விட்டு கண்களைத் திறந்த அஞ்சனா பரணியையும், அவன் கையில் இருக்கும் பூச்சரத்தையும் பார்த்துவிட்டு, நித்தியாவின் தோளை தட்டி காட்ட

அவளும் பரணியை பார்த்து மகிழ்ந்தவள், அஞ்சனாவிடம் கண்களினாலேயே துர்க்காவை தனியாக விட்டுச் செல்லலாம் என்று சொல்ல அதை புரிந்து கொண்ட அஞ்சனாவும் அவளுடனே சென்றாள்,

இப்போது துர்க்கா மட்டும் கண்களை மூடி, தன் அலைபாயும் மனதுக்கு ஒரு ஆறுதலை கேட்டு நின்றிருந்தாள் அந்த அம்பிகையிடம்.

பரணியும் அவள் முன்பு வந்து நின்றவன், அவள் கண்களை திறக்கும் வரை அவளையே ஆசையாக பார்த்திருந்தான்.

வேண்டுதலை முடித்துக் கொண்டு கண்களைத் திறந்த துர்க்காவிற்கு ஆனந்த அதிர்ச்சி தான். கடவுளே உன் கலக்கத்திற்கு விடை இதுதான் என்று கண் முன் காட்டியது போன்று இருந்தது .

துர்க்கா தன்னைப் பார்க்க, அவனது அதே கீற்று போன்ற புன்னகையுடன், மலர்ந்த முகமாக அவள் கண்களையே பார்த்துத் கொண்டு “இந்த பூவ வாங்கி தலையில வச்சுக்க…” என்று சொல்லி பூச்சரத்தை நீட்ட

தான் காண்பது நிஜமா!…

தன் காதுகள் கேட்டது சத்தியமா!… புரியாமல் உறைந்து நின்றாள் பாவை.

உடலில் உள்ள ஒட்டுமொத்த செல்களும் ஒவ்வொன்றாக பூத்துக் கொண்டிருந்தன.

அளவிற்கு மீறிய ஆனந்தத்தை தாங்க முடியாமல் கண்கள் கலங்கும் போல் இருந்தது. முயன்று கட்டுப்படுத்தினாள், அன்று தாலி ஏறிய போதும் அழுததால் தான் பரணியால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனதோ என்ற ஒரு எண்ணம் இருந்தது, அதனால் இன்று அழ கூடாது என்பதில் திண்ணமாக இருந்தாள்.

விதி யாரை விட்டது…

“என்ன வாங்கு…” என்று பரணி சொல்ல

துர்க்கா கை பூவை நோக்கி நீளும் நேரம், குழந்தை ஒன்று அவர்களுக்கு குறுக்காக ஓட, பரணியின் கையில் இருந்த பூச்சரம் கை தவறி விழ, க்ஷண நேரத்தில் அதை குனிந்து பிடித்து இருந்தான் பரணி.

அதில் அவன் தடுமாறி, தன் ஊன்று கோலை சரி செய்து நிலையாக நின்று துர்க்காவை பார்க்க

கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிய அவன் முகம் பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓடி, கோயிலை விட்டு வெளியேறி, காரில் ஏறிக் கொண்டாள்.

உடன் வந்த அண்ணிகளை பற்றி கூட யோசிக்காமல், டிரைவரிடம் சொல்லி காரை எடுக்க சொல்ல, அவரும் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட, போகும் அவளை உள்ளம் தைக்க பார்த்திருந்தான் பரணி.

குழந்தை இடையில் ஓடியதால் அவள் வாங்க முற்பட்டதையும் அவன் காணவில்லை. முதன் முதலில் தன்னவன் குடுத்த பூச்சரம் தன் கைக்கு வராமல் தடங்கல் ஆனதில் தான் கலங்கி அழுதாள் என்பதையும் உணரவில்லை.

ஆக மொத்தம் அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவனும்… தனக்கு விதிக்கவில்லை என்று அவளும் தவறுதலாகவே புரிந்து கொண்டனர்.

தூரத்தில் இருந்து இவர்களை பார்த்திருந்த அஞ்சனாவும் நித்தியாவும் வருவதற்கு முன் விதியின் விளையாட்டு அரங்கேறி முடிந்திருந்தது .

கசங்கிய முகமாக நின்றிருந்த பரணி அஞ்சனா வரவும் “நான் சொன்னேன் இல்ல அஞ்சு.. அவளுக்கு என்ன புடிக்கல.. குழந்த இடையில ஓடினதுக்கே தடுமாறி நின்னேன்.. அதான் என்ன பாக்க கூட பிடிக்காம போய்ட்டா போல…” என்று வருத்தமாக சொல்ல

“நீங்க வேற ஏன்ண்ணா.. உங்க பொண்டாட்டி தான் விரிசம்பழம்னா நீங்க வாழப்பழமா இருப்பீங்க போல.. அவ அப்படியெல்லாம் நினைச்சு இருக்க மாட்டா.. நீங்க சரியா பூ கொடுக்கும் போது குழந்த வந்து தட்டி விட்டுருச்சா.. கடவுளே தனக்கு கிடைக்கக்கூடாதுனு தடுத்தா, ஏதோ ஒன்னு கரெக்டா தப்பா கெஸ் பண்ணி இருப்பா லூசு…” என்று நித்தியா சொல்ல

“இல்லம்மா…” என்று பரணி மறுத்து பேச வரவும்

அஞ்சனாவோ “அண்ணா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. துர்க்காவுக்கு இந்த பத்து வருஷமா என்ன நடக்குதுன்னு தெரியுமா?…” என்றவள்

துர்க்கா சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்ததில் இருந்து… இன்று வரை என்னவெல்லாம் அனுபவிக்கிறாள் என்று ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தாள்.

தனக்கு முன்னாடியே தெரிந்த விடயங்களை பரணியிடம் கூறியிருக்கலாம் தான். ஆனால் துர்க்கா எந்த அளவிற்கு சிரமப்படுகின்றாள் என்பது தெரிந்து, பரிதாபத்தின் பெயரில் அவளை பரணி ஏற்றுக் கொண்டதாக இருக்கக் கூடாது என்பதால் கூறவில்லை.

இப்போதுதான் முழு மனதாக அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டானே, அதனால் தடைகளை உடைத்துக் கொண்டு துர்க்கா வெளி வராமல் இருப்பதற்கான காரணங்களையும், அவன் தான் அவளை அதிலிருந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தையும் கூறி முடித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!