Skip to content
Post Views: 292
அத்தியாயம் 26
துர்க்காவைப் பற்றிய அனைத்து மறைக்கப்பட்ட பக்கங்களையும் நித்தியாவும் அஞ்சனாவும் சொல்லி முடிக்க,
Advertisement
பரணியின் மனதில் என்ன உணர்வென்றே சொல்ல முடியவில்லை.
“அது மட்டும் இல்ல ண்ணா இதுவரைக்கும் அவள் கண்ணீர் வடிக்கிறது தாலி ஏறுனதால இல்ல.. முதல் முறையாக கழுத்துல ஏறுன தாலி தன்ன விட்டுப் போயிடுமோ என்ற பரிதவிப்புனால தான்.. அவள் பாவம் ண்ணா.. அவள வாழ வைங்க…” என்று நித்தியா சொல்ல
Advertisement
Advertisement
அஞ்சனாவும் அவனை கெஞ்சலாக பார்த்தவள் “அண்ணா நீங்களும் துர்க்காவும் சேந்து சந்தோஷமா வாழனும்னு தான் நாங்க ஆசைப்படுறோம்.. நீங்களாவது அவள பெரிய வீட்டு பொண்ணா பாக்காம, வாழ்க்கையில விதியால நிந்திக்கப்பட்ட சாதாரண பொண்ணா பாருங்க.. அவ கழுத்துல நீங்க போட்ட தாலி இருக்கு உங்க பொண்டாட்டியா பாருங்க…” என்று அஞ்சனா சொல்ல
“புரியுது அஞ்சு.. இதுக்கு மேல என் பொண்டாட்டி என் கூட தான் இருப்பா…” என்றவன் முடிந்தவரை வேகமாக துர்க்காவின் வீட்டை நோக்கி நடந்தான்.
Advertisement
ஒவ்வொரு அடிக்கும் அவள் இதுவரை பட்ட கஷ்டங்களும், துன்பங்களும் மனதில் வந்து போனது. அதே நேரம் 14 வயதான பெண்ணாக, பள்ளி பருவத்தில் அவனுடன் முறுக்கிக் கொள்ளும் அவள் தோற்றமும் கண்முன் வந்தது. அந்த நொடியே தன் கைக்குள் அவளை பொத்தி வைக்க வேண்டும் என்கின்ற ஆவேசம் பிறந்தது.
பரணி வீட்டினுள் நுழையும் போது ஹாலில் யாரும் இருக்கவில்லை. கண்களால் வீட்டை துலாவியவன் படிகளில் ஏறிக்கொண்டே “துர்க்கா!…” என்று அழைக்க
தன் கை சேர இருந்த பூச்சரத்தை தட்டி விட்டது குழந்தை அல்லவா, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே, ஆக கடவுளே அவள் ஆசைக்கு தடை போட்டதாக ஏதேதோ நினைத்து அழுது கொண்டிருந்தவள்
தன் மன்னவனின் குரல் கேட்டு, காந்தவிசை போல் அவன் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்தாள்.
முதலாவது தளத்தில் ஆண்மையின் இலக்கணமாக, அரவணைக்கும் உற்ற உயிராக நின்றவனை நோக்கி படிகளில் இறங்க,
கடைசி படியில் அவள் கால் வைத்த மறு நொடி, புயலென நெருங்கி பூங்கொடியாளை தன் ஒற்றை கையால் வளைத்து சிறை பிடித்துக் கொண்டான் காளையவன்.
அவனது ஆளுமையின் வேகம் தாங்காமல் ஒரு நொடி துர்க்காவின் உடல் பின் சென்று முன் வந்தது.
கண்ணீரில் நனைந்து இருந்த அவள் காந்த கணகளை பாத்துக் கொண்டே, அவள் நுதலில் முதல் முத்திரையை அழுத்தி வைத்தான்.
அவள் இமைகளில் தேங்கி இருந்த கடைசி துளிகள் அவள் கண்களை மூட, கன்னத்தில் உருண்டது. அதுவே அவளது கடைசி துன்பத்தின் துளியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவன் இதழ் தன் நெற்றி தொட்டதும் மொத்த உடலும் சிலிர்த்தது துர்க்காவிற்கு.
இருவருக்குமே அது முதல் முத்தமாக தெரியவில்லை, முழு உரிமையின் அடையாளமாக தெரிந்தது.
அவள் நெற்றியில் இருந்து தனது அதரத்தை பிரித்து எடுத்தவன், அவள் கண்களை பார்த்தவாறே “ஊர் அறிய உன்ன என் பொண்டாட்டின்னு சொல்லி இங்க இருந்து கூட்டிட்டு போக எனக்கு தைரியம் இருக்கு.. என் கூட குடும்பம் நடத்த உனக்கு சம்மதமா?…” என்று கேட்க
அவன் முத்தத்தில் உண்டான அதிர்ச்சியிலிருந்து அவள் இன்னுமே வெளிவரவில்லை . இதில் தடாலடியாக தனுடன் வாழவா என்றால் என்ன சொல்வாள்.
பெண்ணவளோ அவன் கண்களையே பார்க்க, அவள் இடையை சுற்றி பிடித்து இருந்த தன் கையை எடுத்து அவள் முன் நீட்டினான். அவன் கையை நீட்டிய மறு நொடியே, அவன் கரத்தின் மீது தன் கரத்தை (நீ தான் தஞ்சம்) என்னும் வகையில் அழுத்தமாக வைத்தாள் .
பரணியை முன் போக விட்டு பின் வந்த நித்தியாவும் அஞ்சனாவும் கண்டது கணவன் மனைவி கைகள் பிணைந்த தருணத்தை தான். இருவரின் இதழ்களிலும் அழகிய புன்னகை.
துர்க்காவை அழைத்துக் கொண்டு பரணி ஹாலுக்கு வர, அப்போது தான் வெளியே சென்றிருந்த முருகானந்தம், பிரபாகரன் கிருபாகரன் உள்ளே வர,
தங்கள் அறையில் இருந்த பிரேமாவதி சகுந்தலாவும் வெளியே வந்தனர்.
துர்க்காவின் கையை பிடித்து நின்றிருந்த பரணியை கண்டதும் ஆத்திரம் கண்மண் தெரியாமல் வந்தது பெரியவர்கள் அனைவருக்கும்.
முருகானந்தம் பல்லை கடித்து கொண்டு பரணியை அடிக்க முன்னேற, தந்தை கை வைக்க முன்னே பிரபாகரன் முன் சென்று பரணியின் மார்பில் கையை வைத்து பின் தள்ளி “என்னடா இது?…” என்றான். அவன் வார்த்தையில் இருந்தது இயலாமை தான்.
பிரபாகரன் பின் தள்ளியதில் “டேய்!” என்று அடிக்க முருகானந்தம் நீட்டிய கை பரணியில் படவில்லை.
இது போல் தான் அன்றும் கோயிலில் மற்றவர்கள் நண்பனை தாக்கும் முன் தானே கை வைத்து தடுத்து இருந்தான்.
ஆனால் இந்த முறை பரணி பிரபாகரனை நண்பன் என்று பார்க்கவில்லை. பின் சென்ற வேகத்தில் முன் வந்து, துர்க்காவை விட்டு, பிரபாகரனின் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தான்.
“என்னடா வா.. என் பொண்டாட்டிய அழைச்சிட்டு போக வந்திருக்கேன்.. என் நண்பன் என்ற நினைப்பு கொஞ்சமா ஓட்டிட்டு இருந்ததால தான் ஒரு சிலர் இன்னும் முழுசா இருக்காங்க…” என்று சொல்லி முருகானந்தத்தை பார்த்தவன்
“இனிமேல் நண்பன்னு உன்னையும் பாக்க போறதில்ல.. மத்தவங்களையும் சும்மா விட போறதில்ல…” என்றவன் பார்வை உக்கிரமாக முருகானந்தம், பிரேமாவதி சகுந்தலாவை தொட்டு வந்தது.
“என்ன அண்ணன் டா நீ!.. இருந்திருந்து தங்கச்சி கழுத்துல தாலி ஏறுனா.. அத இறக்கறதுக்கு உன் அப்பன் நாள் பாப்பான்.. நீ வாய மூடிட்டு இருப்ப இல்ல.. வீட்டுல என்ன நடக்குது வெளியில என்ன நடக்குது எதையுமே தெரிஞ்சுக்க நீ முயற்சி பண்ணலல.. இதுனால் வரைக்கும் எப்படி இவள கண்டுக்காம இருந்தியோ இப்பவும் அப்படியே இரு.. என் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும்…” என்று பரணி அழுத்தமாக சொல்ல
பரணியை நெருங்கிய அஞ்சனா “அண்ணா மாமா மேல தப்பு இருக்குதான்.. ஆனா துர்க்காவே அவ வாயால அவ விருப்பம்னு சொன்னதுக்கு பிறகு ஆழமா எதையுமே அவருக்கு விசாரிக்க தோனல.. இதுல மொத்தமா ஒருத்தர் மேல தப்பு சொல்ல முடியாதுண்ணா.. ப்ளீஸ் விடுங்க…” என்று சொல்ல
பரணிக்கும் அது உண்மைதான் என்பது புரிந்தது. ஒற்றை சொல்லில் மளிகை கடை வை, இந்த இடத்தில் சரக்கு எடு, என்று சொன்னது போல துர்க்கா சரியில்லை என்று ஒற்றை வார்த்தையில் சொன்னான் தானே, இவனும் வேறு கோணத்தில் யோசிக்கவில்லையே.
பிரபாகரன் சட்டையை விட்ட பரணி “இனியாவது ஒரு முடிவெடு.. சில காயங்களுக்கு உடனே மருந்து போடணும்.. விட்டோம்னா உயிரையே எடுத்துடும்…” என்று பூடகமாக சொன்வன் துர்க்காவின் கையை பிடித்துக் கொண்டு முன்னேற
“நில்லுடா பரதேசி நாயே.. உன்ன நொண்டியா சுத்த விட்டும் உன் கொழுப்பு அடங்கலல.. உனக்கு என் பொண்ணு கேக்குதா?…” என்று முருகானந்தம் பரணியை அடிக்க பாய
பரணியின் முன் வந்து நின்ற பிரபாகரன் “அப்பா!…” என்று கர்ஜிக்க, அதற்கும் மேல் சத்தமாக “அப்பா…!” என்று ஒரு குரல்.
வேறு யாரும் இல்லை துர்க்கா தான். அவளை எவ்வளவு வேண்டுமோ வார்த்தையால் வதைத்தனர், கஷ்டப்படுத்தினர், பொறுத்துக் கொண்டாள்.
அவளவனை ஒரு சொல் சொல்லியது பொறுக்க முடியவில்லை. துர்க்காவின் இந்த பரிமாணத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. நித்தியாவே வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவளை.
“போதும் இன்னொரு வார்த்த என் புருஷன பத்தி உங்க வாயில இருந்து வந்துச்சு நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.. என்கிட்ட கோவில்ல வச்சு கேட்டீங்க இல்ல இந்த தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்க போறேயான்னு…” என்று சொல்லி தன் கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி காட்டியவள்
“அன்னைக்கு நான் சொன்னது என்னோட முடிவு கிடையாது..அத்தையோட முடிவு, உங்களோட முடிவு.. என் முடிவ இப்ப சொல்றேன் கேளுங்க எனக்கு இந்த தாலி வேணும், என் புருஷனோட போகணும்.. பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு திரும்ப வரும்போது ஒரு விஷயம் சொன்னீங்க ஞாபகம் இருக்கா?.. உங்க கட்டுப்பாட்டுக்கு கீழ இருக்கிறதா இருந்தா இங்க இருக்கலாம் இல்லனா எப்படியோ எங்கேயோ போய் தொலைனு சொன்னீங்க…”
கையெடுத்து கும்பிட்டவள் “இப்போ சொல்றேன் என்ன விட்டுடுங்க.. நான் போயிர்றேன்.. பெரிய வீட்டு பொண்ணு என்ற பேர்ல சிறைவாசம் அனுபவிக்குறதுக்கு நீங்க சொன்ன பரதேசி என்கிறவரோட பொண்டாட்டியா இருக்கிறது சந்தோஷத்த தரும்னு தோணுது.. இப்ப கூட உங்கள தல குனிய வச்சிட்டு நான் போகலப்பா, என் புருஷன் கைய புடிச்சிட்டு தலை நிமிர்ந்து தான் நான் போறேன்…” என்றவள் பார்வை சகுந்தலாவில் படிந்தது.
“அத்த எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும் அத்த.. இந்த பத்து வருஷத்துல நீங்க எனக்கு எவ்வளவு பேசி இருந்தாலும், நான் வாழ்க்கைய தொலைச்சிட்டு நின்ன மாதிரி தான் நீங்களும் ஏதோ ஒரு வகையில வாழ்க்கைய பறி கொடுத்துட்டு இருக்கீங்க, உங்க மனசுக்கு என்ன வதைக்கிறது சந்தோஷத்த தரும்னா அப்படியாவது நீங்க சந்தோஷமா இருக்கட்டும்னு தான் விட்டுட்டேன்..
…உங்க நாத்தனார் பையன் அந்த அகிலன் மேலே இருக்கிற பாசம் ஏன் அத்த உங்க அண்ணன் பொண்ணு என் மேல இல்லாம போச்சு.. அப்படி பாசம் இருந்திருந்தா நீங்க அனுபவிச்ச கஷ்டத்த நான் அனுபவிக்க கூடாதுனு தானே நினைச்சு இருக்கணும்.. அத விட்டுட்டு நீங்க அனுபவிச்ச அதே வேதனையையும் கஷ்டத்தையும் எனக்கு தந்து இருக்கீங்க.. எனக்கு புரியுது பெத்த பொண்ணு மேலையே எந்த அக்கறையும் அனுதாபமும் இல்லாத ஒருத்தர், பெத்த பொண்ணோட உணர்வுகள புரிஞ்சுக்காத ஒருத்தர் தங்கச்சியான உங்கள பத்தி யோசிச்சிருக்க மாட்டார்.. அது ஏன் உங்களுக்கு புரியல..
…உங்க அண்ணன் சரியான நேரத்துல உங்க வாழ்க்கைக்கு கை கொடுக்கலன்றதுக்காக என்ன தண்டிச்சிட்டீங்க இல்ல.. உங்க அண்ணன் சட்டைய புடிச்சு கேட்டிருக்கணும் அத்த, உங்களுக்கு என்ன வேணும்னு.. அத விட்டுட்டு மொத்த வன்மத்தையும் என் மேல கொட்டிட்டிங்க.. இப்ப கூட நீங்க காலையில சொன்னத நினைக்கும் போது உடம்பு எல்லாம் நடுங்குது.. அதெல்லாம் தாண்டி எப்படி என் வாழ்க்கை வாழ போறேன்னு எனக்கு தெரியல.. ஆனா நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நல்லா வாழ்வேன்.. ரொம்ப ஆசையா இருக்கு அத்த நானும் மத்த பொண்ணுங்க மாதிரி சந்தோஷமா வாழனும்னு.. தயவு பண்ணி இப்பவாச்சும் உங்க மனசுல இருக்குற ஆதங்கத்த வெளிப்படையா கொட்டிருங்க.. உள்ளுக்குள்ள வெச்சிட்டு என்ன சபிக்காதீங்க…” என்று சொன்னவள் பார்வை திரும்பியது என்னவோ தன் தாயின் மீது தான்.
அவரை அவள் ஊன்றிப் பார்த்த அந்தப் பார்வை, பிரேமாவதியை நிலத்தை பார்க்க வைத்தது.
பரணியின் கையில் இருந்து தன் கையை உருவி கொண்டவள், அவர் முன்பு போய் நின்றாள்.
“எனக்கு உன்கிட்ட தான் மா என்ன பேசுறதுன்னு தெரியல.. 14 வருஷத்துக்கு முன்னாடி நான் தடம் மாறி போனதுக்கு முக்கால்வாசி பங்கு நான் தான்.. ஆனா அந்த காவாசி பங்கு யார் தெரியுமா? நீ தாம்மா…” என்று சொல்ல பிரேமாவதி நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க,
“என்ன செய்றதையும் செஞ்சிட்டு உன் மேல பழி போடுறன்னு நினைக்கிறியா? சத்தியமா இல்ல.. அந்த வயசுல அப்பா எதுக்கு அடிச்சாருன்னு எனக்கு தெரியல..அண்ணங்க ரெண்டு பேரும் ஏன் திட்டுனாங்க புரியல.. ஒரு அம்மாவா நீ என்ன அரவணைச்சு இதுதான் விஷயம், நீ இப்படித்தான் இருக்கணும்னு சொல்லி இருக்கலாம்ல.. ஆனா நீ என்ன பண்ணுன, அறையில போட்டு பூட்டி வச்ச, கேவலமா திட்டுன.. நீ சொன்ன வார்த்தைகளோட அர்த்தம் கூட எனக்கு அப்போ தெரியாதும்மா..
…சரி விடு அப்போ நான் இப்படி பண்ணுவேன்னு நீ கூட எதிர்பார்த்து இருக்க மாட்ட.. கோவத்துல ஏதோ பண்ணிட்ட.. ஆனா மத்தவங்கள விடுமா நீ ஒரு பொண்ணுல இழக்க கூடாத வயசுல வயித்துல இருந்த ஒரு உயிர இழந்துட்டு, உயிருக்கு போராடிட்டு இருந்தேன்.. அந்த நிலைமையில என்ன பாத்ததுக்கு பிறகும் எப்படி உன்னால என்ன தினம் தினம் வார்த்தையால குத்தி கிழிக்க முடிஞ்சுது..
பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு வந்தப்போ நீ அத்த பேச்ச கேட்டு பேசலாம்மா, உன் மனசுல கூட நான் அப்படித்தானு பதிஞ்சு போச்சு அதான் நெருப்பா வார்த்தைய கொட்டிட.. நீ சொல்லி சொல்லியே உண்மையாவே குடும்ப வாழ்க்கைன்னா அருவருப்பாவே இருந்துச்சு ம்மா.. ஏன்னா 14 வயசுல நான் பாத்ததும் அப்படியான ஒரு வாழ்க்கைய தான்.. ஆனா இப்போ கொஞ்ச நாளா அந்த அருவருப்பு இல்ல.. நீ சொல்லும்போதெல்லாம் அப்படி என்ன தப்பு, நானும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ எந்த வகையில குறைஞ்சு போயிட்டேன்னு தோணும்.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நானும் என் புருஷன் கூட சந்தோஷமா வாழ்வேன்.. நீ சொன்ன கிடைக்காது நிலைக்காதுன்னு சொன்ன அந்த வாழ்க்கை எனக்கு கண்டிப்பா நிலைக்கும்.. ஒன்னுக்கு நாலு பிள்ளைகளா பெத்துப்பேன்…” என்று கல்வெட்டு சாசனம் போல் கூறியவள்
சென்று பரணியின் கையைப் பிடித்துக் கொண்டு “இதுக்காக தான் காத்துட்டு இருந்தேன்.. இந்த முறை நானா வீட்ட விட்டு போகல.. என் புகுந்த வீட்டுக்கு என் புருஷன் கைய புடிச்சுட்டு போக போறேன்…” கர்வமாக கூறியவள்,
திரும்பி ஒன்றாக நின்ற அண்ணிகள் இருவரையும் பார்த்து “தேங்க்ஸ் என்ற ஒத்த சொல்லு உங்களுக்கு போதுமானு எனக்கு தெரியல.. அதுலயும் நித்தியா அண்ணி, கணவன் மனைவி பந்தம் எவ்வளவு அழகானதுனு புரிய வச்சது நீதான்.. சட்டுனு சரியாவேனா தெரியாது ஆனா நீங்க ஆசைப்பட்ட மாதிரி கண்டிப்பா என்ன மாத்திக்கிட்டு சந்தோஷமா வாழ்வேன்…” என்றவள்,
அண்ணன்களிடம் “மன்னிச்சிடுங்க ண்ணா.. இப்பவும் மனசுக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே தான் இருக்கு.. இவர் வந்து இப்ப கூப்பிடலைன்னா கண்டிப்பா என் மனச திறந்து யாருகிட்டயும் எதுவும் சொல்லி இருக்க மாட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு தரணும்னு நிறைய தடவை கேட்டு இருக்கீங்க.. என்னால அம்மா, அத்தையோட வார்த்தைய தாண்டி ஒரு அடி கூட எடுத்து முன்னாடி வைக்க முடியல.. இப்போ உங்கள தாண்டி தான் போக போறேன் மன்னிச்சுடுங்க…” என்று சொல்ல
“துர்க்காம்மா!…” என்று பிரபாகரன் தங்கையை அணைத்துக் கொள்ள, கிருபாகரனும் அவளை தோளோடு அணைத்து தலையை தடவி கொடுக்க,
பிரபாகரன் “எதுவும் இல்லடா.. நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற.. நான் தான் உன்ன விட்டுட்டேன்.. அம்மா இருக்காங்க தானேனு நினைச்சேன்.. ஆனா அவங்களே உன்ன மனசளவுல சிதைச்சிருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல…” என்று சொல்ல
கிருபாகரன் “எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லடா.. நாங்களே இந்த முடிவுல தான் இருந்தோம்.. நீ சந்தோஷமா கிளம்பு…” என்று சொல்ல
பக்கம் பக்கமாக துர்க்கா பேசிவிட்டால் மட்டும் முருகானந்தம் திருந்தி விடுவாரா என்ன,
“என்ன எல்லாரும் நாடகம் போட்டு என் மான மரியாதைய குழி தோண்டி புதைக்கிறதுக்கு முடிவு பண்ணிட்டீங்களா?.. இவன் எப்படி அவள கூட்டிட்டு போறான்னு நானும் பாக்குறேன்…” என்று மல்லுக்கு நிக்க
நித்தியாவோ “அய்யய்ய.. இந்த மாமனார் அடங்குறாரா பாருடி.. நானும் எவ்வளவு நேரம் தான் வாய மூடிட்டு நிக்கிறது.. செவில்லேயே ஒன்னு போடலாம் போல இருக்கு…” என்று சொல்ல
“சும்மா இருடி…” என்ற அஞ்சனா ஏதோ பேச வாய் திறக்க
அதற்கு முன் பிரபாகரன் “பரணி நீ துர்க்காவ அழைச்சிட்டு போ.. அப்படி என்ன பண்ணிடுறார்னு நானும் பாக்கிறேன்…” என்று தந்தையை முறைத்துக் கொண்டு நிற்க
அஞ்சனாவும் நித்தியாவும் “அண்ணா நீங்க கிளம்புங்க…” என்றவர்கள் துர்க்காவை அணைத்து விடுவிக்க
பரணி துர்க்காவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அந்த பளிங்கு சிறையில் இருந்து வெளியே கூட்டி வந்தான்.
ஊரில் இருக்கும் அனைவரும் பார்க்க, தன் மனைவி கையை பிடித்து அவளோடு ஜோடியாக நடந்து வந்தான் பரணி.
அந்த தெருவில் அவனது வீடு சிறிய ஓட்டு வீடு, இரண்டு அறைகள் மட்டும் கொண்டது. மழையின் சாரல் ஆகட்டும் வெயிலின் வெம்மையாகட்டும் அத்தனையும் அந்த வீட்டின் மையத்தில் ஒருங்கே சேரும் முற்றம் நடுவில்.
கதவை திறந்து இருவரும் ஒரு சேர வலது காலை உள்ளே எடுத்து வைக்க, கதவு நிலையின் மேல் கூடு கட்டி இருந்த சிட்டுக்குருவிகள் இரண்டும் வட்டமாக சுற்றி, சிறகடித்து, தங்களது கீச்சு குரலால் சீங்காரம் எழுப்பி இருவரையும் வரவேற்றது.
துர்க்கா அவற்றை நிமிர்ந்து பார்க்க “சிட்டுக்குருவி கூடு கட்டி இருக்கு.. கூட்டக் கலைக்க கூடாது இல்ல அதான் அப்படியே விட்டுட்டேன்…” என்று சொன்னான் பரணி.
அந்த சிட்டுக்குருவிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட அவளுக்கு இருந்தது இல்லையே. தனக்கான இணையைத் தேடி சேர்த்துக்கொண்டு, தனக்கான அழகிய கூட்டை அமைத்து, அழகிய குடும்பமாக அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
அவைகளுடன் சேர்ந்து அவளும் தனக்கான கூட்டினுள் அடைக்கலமாக இருந்தாள் .
error: Content is protected !!