Skip to content
Post Views: 74
ரிதம் 40
எபிளாக்
Advertisement
அந்தப் பெரிய திருமண மண்டபம் களைகட்டியிருந்தது. பெரிய பெரிய திரைப்பிரமுகர்கள் எல்லாம் வந்தவண்ணம் இருந்தனர்.
மேடையின் மேல் பட்டுவேட்டி சட்டை சரசரக்கக் கம்பீரமாக நின்றிருந்தான் கௌதம். அவனைப் பார்த்துத் தனக்குள் ரசித்தபடியே தன் தங்கையை மேடையை நோக்கி அழைத்து வந்து கொண்டிருந்தாள் நத்தாஷா.
Advertisement
Advertisement
அவர்கள் வருவது தெரிந்து அவனும் தன் பார்வையைத் திருப்பினான். அழகாக இருந்த மணப்பெண்ணை விட, அவன் கண்களைக் கவர்ந்தது அவனுடைய மனையாள் தான். எப்பொழுதும் அவனுக்கு அவள் மட்டும்தான் அழகாக தெரிவாள்.
அவள் பார்வை தன்னையே பார்ப்பதை உணர்ந்து புருவங்களை ஏற்று இறக்கினான் கௌதம்.
Advertisement
அவள் ஒன்றும் இல்லை என்று சிறு வெட்கத்தோடு தலையசைத்துவிட்டு தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
‘பார்ப்பாள், சைட்டடிப்பாள், ரசிப்பாள். ஆனா கிட்ட போனா?? அப்படியே ஃப்ரீஸாயிடுவாள். இவள வச்சுட்டு, காலத்துக்கும் நீ பிரம்மச்சாரி தான்டா’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான் கௌதம்.
“கௌதம் மைண்ட் வாய்ஸுனு நினைச்சு கொஞ்சம் சத்தமா பேசுற” என்று நமட்டுச் சிரிப்புடன் கூறினான் ரமேஷ்.
“சிரிங்க சிரிங்க, என் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுல்ல??” என்று அவன் விரக்தியாகக் கூறினான்.
“நான் சொன்னேன் நீ தான் கண்டுக்கல” என்றான் ரமேஷ்.
“என்ன?? அந்த எண்பதுகளில் வர இத்துப்போன டயலாக் தானே??”
“அதே அதே” என்று தலையாட்டினான் ரமேஷ்.
“மத்த பொண்ணுங்களுக்கு அந்த டயலாக் செட்டாகலாம். ஆனா என் பொண்டாட்டிக்கு அது செட்டாகாது. அவளுக்கு நோன்னா நோ தான். எஸ் எல்லாம் கிடையாது” என்றான் கௌதம்.
“ஒரு வாட்டி ட்ரை பண்ணிப்பாரு. வொர்க்கவுட் ஆகலனா என்கிட்ட வந்து கேளு. இல்லனா இன்னைக்குக் கல்யாணம் பண்ற உன் மச்சினிச்சி, அடுத்த பத்து மாசத்துல, வயித்தைத் தள்ளிட்டு நிப்பாள். நீ இதே போல நோ மீன்ஸ் நோன்னு சொல்லிட்டேயிருக்க வேண்டியதுதான்” என்று ரமேஷ் கூற,
அதைத் கற்பனை செய்து பார்த்தவன், தலையை உலுக்கினான்.
“அது தப்பில்லையா??” அப்பொழுதும் பாவமாகக் கேட்டான் கௌதம்.
“நீ காலத்துக்கும் பிரம்மச்சாரி தான் போ” என்று கூறிவிட்டு ரமேஷ் நகர்ந்துவிட்டான். இவன் திரும்பி தன் மனைவியை ஏக்கமாகப் பார்த்தான். அவளோ இப்போது தங்கையின் திருமணத்தில் கவனமாக இருந்தாள்.
அவன் என்று நத்தாஷாவைத் திருமணம் செய்தானோ, அன்றிலிருந்து தன்னைப் பெயர் சொல்லி அழைக்கும்படிக் கட்டளை பிறப்பித்தான் ரமேஷிடம்.
“நீங்க பெரிய ஆளு” என்று அவன் தயக்கமாக இழுக்க,
“நீ என் மனைவியோட அண்ணன், இனிமே என்னைப் பேர் சொல்லித் தான் கூப்பிடணும்” என்று ஒரே கோடாகப் போட்டுவிட்டான் கௌதம்.
“அப்ப நான் எப்படி கூப்பிடுறது??” என்று கேட்ட பிரீத்தியிடம்,
“அண்ணன்னு கூப்பிடு” என்றான்.
ஒரு காலத்தில் அவனை சைட்டடித்தவள், இப்பொழுது எப்படி அண்ணா என்று கூப்பிட முடியும்?? அதை நினைத்துத் தலையை உலுக்கிக் கொண்டவள்,
“இல்லல்ல, இதுதான் நல்லாயிருக்கு. நான் இப்படியே கூப்பிட்டுக்குறேன்” என்று கூறிவிட்டாள். அதிலிருந்து ரமேஷ் மாறிவிட்டான். பெயரைச் சொல்லி கூப்பிடும் அளவுக்கு, அதனால் அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் ஏற்பட்டிருந்தது.
ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பித்துவிட்டார். மலர்ந்த முகமாக ஸ்ரீதர் மண்டபத்தில் அமர்ந்திருக்க, கௌதமும் மற்றவற்றை ஒதுக்கிவிட்டு அவர்களின் திருமணத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
அதைப் பார்க்கும்போது அவனுடைய திருமண நிகழ்வும் ஞாபகம் வந்தது. எத்தனை காத்திருப்பு, எத்தனை வருட தவம்?? எல்லாம் அந்த நாளில் முற்றுப்பெற்றது. ஆனால் அவன் பிரம்மச்சரியம் மட்டும் முற்றுப்பெறவில்லை.
டெல்லியில் இருந்து திரும்பி வந்தவுடன், அவள் சம்மதத்தோடு இரு குடும்பத்தாரும் திருமண வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ரமேஷ் முன் நின்று எல்லாவற்றையும் செய்தான். செலவுகள் கௌதமுடையது தான்.
‘தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்கிறோம்’ என்று புஷ்பவல்லி கேட்டார்.
‘அடுத்து ராகினியின் திருமணத்திற்குச் செய்து கொள்ளுங்கள்’ என்று அவன் கூறி முடித்துக் கொண்டான். ஏற்கனவே ஸ்ரீதர் – ராகினியின் திருமணத்தைப் பற்றிய பேச்சுக்கள் சுமுகமாக நடந்து முடிந்திருந்ததால், அவரும் அமைதியாகக் கடந்துவிட்டார்.
அடுத்த ஒரு மாதத்தில் மிக விமர்சையாக அவன் திருமணமும் நடந்து முடிந்தது. பல செய்தி சேனல்களில் அது பிரசுரமுமானது. அவன் தந்தையும் வந்திருந்தார், அவனை ஆசீர்வாதமும் செய்தார்.
தன்னைக் கேட்காமலே எல்லாவற்றையும் செய்யும் அவன் மீது அவருக்குக் கோபம் இருந்தாலும், நத்தாஷாவைப் பற்றித் தெரிந்து கொண்ட பின், அவர் கோபம் மட்டுப்பட்டது. தன் மகனைப் பெருமிதமாக நினைத்தார். எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டையாகத் தான் இருப்பதால், இதையும் தடுப்பேன் என்று நினைத்திருக்கிறான் போல?? ஆனால் அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.
மகனின் விருப்பம்தான் முதன்மை பெற்றது. அதனால் அவருமே திருமணத்தில் இறங்கி வேலை செய்தார். ஆனால் செலவுகள் அவன் பொறுப்பில்தான் இருந்தது. அவருடைய பணத்தை வாங்க மறுத்துவிட்டான் கௌதம்.
அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும், “போடா, நான் என் பேரன் பேத்திக்குக் கொடுத்துக்கிறேன். நான் இப்படித்தான் இருப்பேன். என்னை மாத்தணும்னு முயற்சி பண்ணாத” என்று கூறிவிட்டு, அவர் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
திரை ஜாம்பவான்கள் கூட அவன் திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் சென்றனர். ஆனால் மனைவியின் கடைக்கண் பார்வை மட்டும் கிடைக்கவில்லை.
ஆவலாக முதல் இரவிற்குச் சென்றவனிடம், நேரம் கேட்டாள் நத்தாஷா.
“ஓகே, டேக் யுவர் ஓன் டைம்” என்று ஜென்டில்மேனாக நடந்து கொண்டான்.
அவள் அவனைப் பார்த்துப் பார்த்து உபசரித்தாள். கணவனுக்கு ஆசையாக எல்லாவற்றையும் செய்தாள். இவனோ அவளை ஓரப்பார்வை, திருட்டுப்பார்வை, கள்ளப்பார்வை என்று ரசிக்க ஆரம்பித்தான். இவ்வளவு நாள் உரிமை இல்லை, இப்போது வந்துவிட்டது என்று அத்துமீறிய பார்வைகளும் இடம்பெற்றிருந்தது.
அது அவளுக்கும் புரிந்துதான் இருந்தது. கணவனைக் கண்டிக்கும் எண்ணம் இல்லை. அதே சமயத்தில் அர்ப்பணிக்கவும் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது.
ராகினியின் கன்னிகாதானத்தைக் கௌதமும்- நத்தாஷாவும் முன்நின்று செய்தனர். பாத பூஜையும் அவர்கள் தான் வாங்கினார்கள். ஆசீர்வாதம் மட்டும்தான் புஷ்பவல்லி செய்தார். இரண்டு மகள்களின் மணவாழ்க்கையையும் கண்குளிரப் பார்த்து நிம்மதி அடைந்தார். கணவனிடம் மனதோடு பேசினார்.
நத்தாஷாவின் வாழ்க்கை தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாமல் இருப்பது அவருக்குத் தெரிந்தாலும், மருமகன் எல்லாவற்றையும் பார்த்துச் சரி செய்துவிடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு மலையளவு இருந்தது. அதனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
நல்லபடியாகத் திருமணம் முடிந்தது. மறுவீடு, மாப்பிள்ளை வீடு என்று எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்துவிட்டு வீட்டிற்கும் வந்து சேர்ந்தார்கள்.
கண்கலங்கத் தன் கணவனின் படத்திற்கு முன்னால் நின்றிருந்த தன் மாமியாரின் தோள் பற்றி நின்றான் கௌதம்.
“அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சே, இன்னும் என்ன கவலை??” என்று மகாலட்சுமி கேட்டார்.
“இது கவலை இல்லை அண்ணி, ஆனந்தக் கண்ணீர். அவர் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கல. ஆனா அவர் இருந்தா இது நடந்திருக்குமானு தெரியல” என்றார்.
அவர் சொல்வது நியாயம் தான் என்று தோன்றியது நத்தாஷாவிற்கு. காதல் திருமணத்தை அவர் ஒத்துக் கொள்ள மாட்டார். மகள்கள் காதலிக்கவில்லை, மருமகன்களாகக் காதலித்துத் தேடி வருகிறார்கள் என்றாலும் சாதி, மதம் என்று பார்ப்பார்.
ஆனால் புஷ்பவல்லிக்கு மகள்களின் சந்தோஷமும் நிம்மதியும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
திரும்பியவர் கௌதமின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“உங்களால தான் இது எல்லாமே சாத்தியமாச்சுப்பா. நீங்க எங்க வாழ்க்கையில கொஞ்சம் முன்னமே வந்திருந்தா, என் கணவரும் எங்க கூட இருந்திருப்பாரோ என்னவோ?? உங்களைப் பார்த்துப் பேசினா, வேணாம்னு சொல்ல யாராலயும் முடியாது” என்று மனமாரக் கூறினார்.
“எதுக்கும்மா இப்ப அழறீங்க?? சந்தோஷமான நேரத்துல சந்தோஷமா இருக்கணும்” என்றான் கௌதம்.
சற்று இடைவெளி விட்டு நின்றிருந்த நத்தாஷா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கைகளைப் பற்றிய மகாலட்சுமி,
“உன் தங்கச்சி நல்ல செய்தி சொல்றதுக்கு ஒரு நாள் முன்னாடி நீ சொன்னா நாங்க சந்தோஷப்படுவோம்” என்று கூறினார். அவள் எப்போதும் போலத் தலை கவிழ்ந்தாள்.
“விடுங்கம்மா, அதது நடக்கும்போது நடக்கட்டும். அவளை எம்பாரஸிங் ஆக்காதீங்க. இப்ப என்ன?? எனக்கும் ஸ்ரீதருக்கும் ஒரே வயசுதானே?? எனக்கு முன்னாடி அவன் அப்பாவானா எனக்குச் சந்தோசம்தான். ரொம்ப வாலாட்டிக்கிட்டு இருக்க ராகினி அப்பயாவது அடங்குறாளான்னு பார்க்கலாம்” என்று இலகுவாகப் பேசினான் கௌதம்.
உண்மையில் அவர்கள் பேசியதை விட, இப்பொழுது அவன் பேசுவதுதான் சங்கடத்தைக் கொடுத்திருந்தது நத்தாஷாவிற்கு.
எல்லாவற்றிற்கும் பொறுத்துப் போகும் துணை கிடைப்பது வரமன்றோ?? அந்த வரம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அவன் பொறுத்து மட்டுமா போகிறான்?? அவளுக்காக எல்லாவற்றையும் மாற்றியமைத்திருக்கிறான். எதிர்பாராத காதலை இன்றளவும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்கிறான். அவள் வாழ்க்கையில் ரிதமாக வந்திருக்கிறான். அவனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவனுடைய மனையாள்.
அவர்களின் திருமணம் முடிந்த போதே புஷ்பவல்லியை தங்கள் வீட்டிற்கு வந்து விடும்படி அழைத்திருந்தார் மகாலட்சுமி. ஆனால் ராகினியின் திருமணம் முடியட்டும் என்று அவர் கூறி விட.
அதற்கு ஒப்புக்கொண்ட கௌதம். சரியாக திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் எல்லா பொருள்களும் எடுத்து வந்து தன் வீட்டில் வைத்து விட்டான். அங்கிருந்தபடியே தான் திருமண வேலைகளை நடத்தினார்கள். அதன் பிறகு, மகாலட்சுமி கணவனை பார்த்துக்கொள்ள. நத்தாஷாவுடன் தங்கிவிட்டார் புஷ்பவல்லி.
………
“ம்ப்ச்” என்று சலித்தபடியே, பாத்ரோப்பில் குளியலறையில் இருந்து வெளியில் வந்தான் கௌதம்.
“என்ன ஆச்சு?? உள்ள டவல் இல்லையா?? இல்ல டிரஸ் எடுத்துட்டு போகலையா??” என்றபடி பதற்றமாக அவனை நோக்கி நடந்து வந்தவள், புடவை இடறி விழப்போனவளை, ஓடிச் சென்று கையில் தாங்கினான் கௌதம்.
“உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்?? எல்லாத்துக்கும் பதற்றப்படாத, நான் பாத்துக்குறேன்னு?? நீ இங்க வர்றதுக்கு முன்னாடி வரைக்கும், என் வேலையை நான் தான் செஞ்சிட்டிருந்தேன். இப்பயும் என்னால செஞ்சுக்க முடியும். கல்யாண வேலைல, கலைப்புல மறந்துட்டிருப்ப. அதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம்??” என்று கேட்டபடி அவளை நிமிர்த்தி நிற்க வைத்தான்.
அவனுடைய ஸ்பரிசம் பட்ட இடங்கள் எல்லாம் ஐஸ்கட்டியாய் அவளைக் குளிரவைத்து, உருக வைத்துக் கொண்டிருந்தது. நாடி நரம்பெல்லாம் பட்டாம்பூச்சிகள் படபடத்துக் கொண்டிருந்தது.
அவனோ அதை அறியாமல், இன்னும் அவள் வயிற்றில் கையை வைத்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் அஞ்சன விழிகள் படபடத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு, உடலில் சூடேறியது. அப்போதுதான் வழவழப்பான அவளுடைய தேகத்தை உணர்ந்தான் கௌதம்.
உரிமையான அந்தப் பிரதேசத்திலிருந்து கைகளை விலக்கிக் கொள்ள அவனால் முடியவில்லை. மெல்லத் தடவ ஆரம்பித்துவிட்டான்.
‘விலகிச்செல்’ என்று மூளை கட்டளையிட்டுக் கொண்டிருக்க, மனமோ அதை ரசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தது நத்தாஷாவிற்கு.
எப்போதும் பதட்டமாக இரண்டடி பின்னால் தள்ளி நிற்பவள், இன்று தன் கையணைப்பில் உருகிக் கரைந்து கொண்டிருப்பது கௌதமுக்கு புரிந்தது.
அதற்கு மேல் காளையவனுக்கு எந்த அனுமதியும் தேவைப்பட்டிருக்கவில்லை. மெல்ல அவன் தன் வலது கரத்தை மேல் நோக்கி உயர்த்திக் கொண்டே வந்தான். தன் இடது கரத்தைக் கீழ்நோக்கி இறக்கிக்கொண்டே வந்தான். அவன் ஸ்பரிசம் பட்ட இடங்கள் எல்லாம் அவளுக்குப் புதுவிதமான உணர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அவன் விரல்களால், ‘சரிகமபதநி’ என்று ஏழு ஸ்வரங்களை, அவள் உடலில் மீட்ட ஆரம்பித்தான் கௌதம். ராகமாக அவள் இசைந்து கொடுக்க, தாளமாக அவன் மாறிப்போனான்.
‘சரிகமபதநி’ என்ற ஏழு ஸ்வரங்களும் ஒன்றிணைவதைப் போல, காதல், அன்பு, தாம்பத்தியம், காமம், கலவி, கூடல், புணர்தல் என ஏழு கவிதைகளையும் ஒன்றாகப் பாட ஆரம்பித்தான் கௌதம்.
……….
சிங்கப்பூரின் பலா வான் பீச்சில் காலை நனைத்துக் கொண்டிருந்தாள் நத்தாஷா. அவள் புடவையைத் தூக்கிப் பிடித்திருக்கும் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் கௌதம்.
“புருஷனா மாறிக்கூட, நத்தாஷாவை சைட் அடிக்கிறதை நிறுத்தலையா??” என்று கேட்ட ஸ்ரீதரைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.
“ஏன் நிறுத்தணும், எதுக்கு நிறுத்தணும்?? அப்பதான் உரிமை இருக்கு, இன்னும் நல்லா அடிக்கலாம்” என்றபடி விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
“அது சரி” என்று அவன் கூறும்போது, அவன் மனைவி அவனை நோக்கி நடந்து வருவது தெரிந்தது.
இருவருக்கும் இடையே இருக்கும் குறுகிய இடைவெளியில் அமர்ந்தாள் ராகினி.
“என்ன மாம்ஸ், பொண்டாட்டியை கரெக்ட் பண்ணிட்டீங்க போல??” என்று கிண்டலடித்தாள்.
“அப்படியா தெரியுது??” என்று அவன் கேட்டு வைக்க,
“ரொம்ப அப்பட்டமா தெரியுது. முதல்ல எங்களுக்கு மட்டும் ஹனிமூன் பேக்கேஜ் போட்டுட்டு, இப்ப எங்க கூடவே சேர்ந்து வந்திருக்கீங்கள்ல?? அதிலேயே தெரிஞ்சிருச்சு” என்றாள் ராகினி.
“தெரிஞ்சா தெரியட்டும். நான் உனக்கும் சீனியர்மா. கிட்டத்தட்ட 2 வருஷத்துக்கு மேல ஆகுது எனக்குக் கல்யாணமாகி” என்று நொடித்துக் கொண்டான்.
பேச்சுப் பேச்சாக இருந்தாலும், பார்வை மட்டும் மனைவியின் மீது தான் இருந்தது.
“உங்களைப் போலப் பொறுமைசாலி இந்த உலகத்துல இல்லன்னு சொன்னாங்க” என்று அவள் கிண்டலடிக்க,
திரும்பி அவளை முறைத்தவன், அவள் தலையில் நங்கென்று கொட்டினான்.
அதற்குள் நத்தாஷாவும் அவர்களை நோக்கி நடந்து வர ஆரம்பித்தாள்.
“உங்க பொண்டாட்டிகிட்ட கேட்டுத் தண்ணில குளிக்கிறதுக்குக் கொஞ்சம் பர்மிஷன் வாங்கித் கொடுங்களேன்?? இவ்வளவு தூரம் வந்துட்டு இந்தத் தண்ணில குளிக்கலனா ஹனிமூன் மாதிரியே இருக்காது மாம்ஸ்” என்றாள் ராகினி.
“அவள் ஒத்துக்கலைனா ஒன்னும் பண்ண முடியாது. ஒன்னு பண்ணலாம், நான் அவளைக் கூட்டிட்டு ரூமுக்கு போறேன். நீங்க ரெண்டு பேரும் ஜாலியா தண்ணில என்ஜாய் பண்ணிட்டுப் பொறுமையா வாங்க” என்றான் கௌதம்.
அது நல்ல ஐடியா என்று அதையே செய்தனர்.
“எல்லாரும் இருக்க, இப்ப போய் பகல்ல எங்க கூட்டிட்டு போறீங்க??” என்று கேட்ட மனைவிக்கு, ஏதேதோ காரணங்களைக் கூறி அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
அன்று வரை இரவில் எழுதிய இலக்கணத்தை அன்று பகலிலும் எழுத ஆரம்பித்தார்கள்.
இரு உயிர்களின் இணைவும்
ஒரே இசையாக மலர்ந்தது.
அவன் மூச்சு ரிதமாய்,
அவள் ஸ்பரிசம் தாளமாய்,
அவர்களின் நெருக்கம் சரிகமபதநியாய் சங்கமம் அடைந்தது.
…….
நன்றி வணக்கம், கதை இனிதே முடிவடைந்தது.
இந்த கதைக்கு ஆதரவு கொடுத்து படித்து வந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏
error: Content is protected !!