Skip to content
Post Views: 83
அத்தியாயம் 27
சிட்டு குருவிகள் தலைக்கு மேல் வட்டமிட்டு ஆலம் சுற்றி வரவேற்க, அவள் வாழ்வின் புதிய விடியலில் மீண்டும் கேட்டது பூபாளம்.
Advertisement
“உள்ள வா இவங்க மட்டும் இல்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.. எனக்கு இத்தனை நாள் துணையே இவங்க தான்.. என்று சொல்லி பரணி வரவேற்க
சிறிய தலையசைப்புடன் உள்ளே வந்தவள் வீட்டை சுற்றிப் பார்க்க, அவன் கூறியது போல் இன்னும் மூன்று குருவி கூடுகள் அதை பார்த்துக் கொண்டிருந்தவளிடம்
Advertisement
Advertisement
“வர மாட்டனு நெனச்சேன்…” என்று பரணி சொல்ல
வீட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் முகம் பார்க்க “இல்ல நான் கூப்பிட்டு நீ வரமாட்டனு நினைச்சேன்…” என்று பரணி புன்னகையுடன் சொல்ல
Advertisement
தலையை குனிந்து கொண்டவள் “நீங்க எப்ப கூப்பிடுவீங்கனு காத்திருந்தேன்…” என்று மறைக்காமல் அவள் மனதை சொல்ல
பரணியின் மனதும் மகிழ்ச்சியில் துள்ளியது. அந்த துள்ளலுடனே “ஓய் சாரப்பாம்பு…” என்று அழைக்க
அவனை உறுத்து பார்த்த துர்க்காவின் கண்களில் அவன் எதிர்பார்த்த அந்த முறைப்பு இல்லை.
“என்ன இப்படி கூப்பிட்டதும் படபடனு பட்டாசா பொறியுற துர்க்கா எங்க?…” என்று கேட்க
“தெரியல.. தொலைச்சிட்டேன் போல…” என்றவள் குரல் சற்று உள்ளே போக
பேச்சை மாற்றும் பொருட்டு “புடிச்சிருக்கா?…” என்று கேட்க
“ஹா!…” என்று அவள் விழிக்க
“வீட்ட புடிச்சிருக்கானு கேட்டேன்…” என்றவன் உதட்டில் நமட்டு சிரிப்பு .
அவன் புன்னகையே எதை கேட்டான் என்பதைச் சொல்ல, அவன் முகம் பார்க்காமல் வீட்டை சுற்றி கண்களை சுழல விட்டவள் “ம்ம்.. புடிச்சிருக்கு…” என்று சொல்ல
“வீட்டையா!…” என்று அவன் அழுத்தி கேட்க
‘அச்சோ என்ன இவரு இப்படி பேசுறாரு…’ என்று அவள் தவிக்க,
அவளை காப்பாற்றவே அவனின் இரண்டாவது தங்கை தர்ஷனா “அண்ணா!…” என்றவாறு வீட்டிற்குள் வந்தாள்.
வந்தவள் இருவரையும் பார்த்துவிட்டு “என்ன ண்ணா நான் வார வரைக்கும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி இருக்கலாமே.. ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிட்டு இருப்பேன்ல…” என்று கடிந்து கொள்வது போல் சொல்ல
“அதெல்லாம் வேணாம்டா.. துர்க்காக்கு போட்டுக்க துணி வாங்கணும், டவுனுக்கு போய் வாரன்னா ஒரு நாள் எடுக்கும்.. இங்க ரெண்டு தெரு தள்ளி ஒரு வீட்டுல புடவை விக்கிறாங்கல…” என்று கேட்க
“ஆமா ண்ணா.. வாங்க போய் எடுத்துட்டு வந்துடலாம்…” என்று தர்ஷனா அழைக்க
பரணி துர்க்காவிடம் “வா உனக்கு தேவையான துணிய எடுத்துட்டு வரலாம்…” என்று அழைக்க
“இல்ல நான்..நீங்களே எடுத்துட்டு வாங்களேன்…” என்று தவிப்பாக சொல்ல
அவள் தயக்கம் புரிந்தவன் “சரி, தனியா இருந்துப்பியா? சீக்கிரம் வந்துடுறேன்…” என்று கேட்க
அப்போது அதிரடியாக உள்ளே நுழைந்தனர் அஞ்சனாவும் நித்தியாவும்.
“ஏன்டி உன்ன ஆரத்தி எடுக்க சொன்னேன்ல்ல…” என்று அஞ்சனா தங்கையை கடிந்து கொள்ள
“அக்கா நான் வர முன்னாடியே அண்ணா உள்ள வந்துட்டாங்க…” என்று தர்ஷனா சொல்ல
“ஏன் ண்ணா அவசரம்…” என்று பரணியிடம் கேட்டவள் “சரி சரி பிறகு திருஷ்டி சுத்திக்கலாம்.. இப்போ நீங்க புடவ எடுத்துட்டு வாங்க.. உங்க பொண்டாட்டிய நாங்க பத்திரமா பாத்துக்குறோம்…” என்று சொல்ல
பரணி “வாலு!…” என்று அஞ்சனாவின் தலையில் கொட்டியவன், சிரித்தபடி “சரி இருங்க வாரேன்…” என்று பொதுவாக சொன்னாலும் பார்வை துர்க்காவிடம் இருந்தது.
அவளும் சரி என்று தலையசைக்க தர்ஷனாவுடன் தன்னவளுக்கு புடவை எடுக்க சென்றான்.
நித்தியாவோ கையில் வைத்திருந்த பையை துர்க்காவிடம் நீட்டி “இந்தா இதுல அஞ்சு புது ஜாக்கெட் இருக்கு.. நீயும் என் சைஸ் தானே கரெக்டா இருக்கும்.. புது புடவை எடுத்தாலும் உடனே எப்படி உடுத்துவ.. எப்படியோ இந்த மாற்றம் நடக்கும்னு தெரியும் எப்படி என் சாமர்த்தியம்…” என்று சொல்லி இல்லாத காலரை தூக்கிப் பிடிக்க
“நீ கெட்டிகாரி தான்.. யார் இல்லைன்னா.. வாங்க.. என்ற அஞ்சனா நித்தியா துர்க்கா இருவரையும் கூட்டிக்கொண்டு அந்த வீட்டை சுற்றி காட்டி, எது எது எங்கு உள்ளது என்று கூறினாள்.
பரணி ஒரு மணி நேரத்திலேயே நல்லதாக இரண்டு புடவையும், மேலும் ஐந்து புடவைகளுடன் வீடு வந்து சேர்ந்தான்.
முதல் முறை தான் வாங்கிக் கொடுத்து, தன் பிரியமானவள் கட்டப் போகும் சேலை என்பதால், அவளை கடைசியாக கண்களுக்குள் நிறைத்த சிகப்பு தாவணியை மனதில் கொண்டு வந்து, அதே நிறத்தில் தங்க ஜரிகை வேலைப்பாடு கொண்ட செமி சில்க் புடவை ஒன்றே எடுத்து இருந்தான்.
அந்த புடவையை தனியாக கையில் எடுத்தவன் “துர்க்காம்மா!…” என்று உருகும் குரலில் அழைக்க,
அண்ணிகளின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந்தவள் மின்சாரம் தாக்கியது போல் திரும்பி பார்த்தாள்.
பிரபாகரனும் இப்படித்தான் கூப்பிடுவான். ஆனால் பரணி கூப்பிடும்போது உயிரைச் சென்று தாக்கியது அந்த அழைப்பு .
கண்கள் மின்ன அவள் அவனைப் பார்க்க, கையில் வைத்திருந்த புடவையை அவளிடம் நீட்டி “இத கட்டிக்க.. அப்புறம் இதுக்குள்ள மீதி புடவை இருக்கு.. ரெண்டு நாள் கழிச்சு டவுன் போகும்போது உனக்கு தேவையானது, வேற ஏதாவது இருந்தா எடுத்துக்கலாம்…” என்று சொல்ல
ஆசையாக…
மகிழ்ச்சியாக… கண்களில் நீர் கோர்க்க இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டாள்.
ஆசையுடன் ரசனையாக அந்த புடவையை வருடி பார்த்தாள்.
“அம்மாடி அண்ணியாரே ரசிச்சது போதும்.. வா புடவைய மாத்திட்டு வரலாம்…” என்று நித்தியா துர்க்காவை அழைத்துக் கொண்டு செல்ல
“அண்ணா நீங்களும் புது துணி இருந்தா போட்டுடு வாங்க.. பெரியப்பா, பெரியம்மா படத்துக்கு முன்னாடி விழுந்து ஆசீர்வாதம் வாங்கீங்க…” என்று அஞ்சனா சொல்ல
பரணியும் தன்னிடம் இருந்த சந்தன நிற சட்டையும் வேஷ்டியும் அணிந்து வர,
அவன் வாங்கிக் கொடுத்த செஞ்சாந்து நிற புடவையில், சித்தன்னவாசல் சித்திரம் போல், அழகு பதுமையாக வந்து நின்றாள் அவன் மணவாட்டி.
நொற்றியில் புருவங்களுக்கு மத்தியில் அளவான வட்ட வடிவ சிகப்பு பொட்டு, நித்தியா கொண்டு வந்திருந்த ஜாக்கெட்டில் ஒன்று அந்த புடவைக்கு கச்சிதமாக பொருந்தி இருக்க, அத்தனை பந்தமாக அச்சில் வார்த்தது போல் இருந்தாள் துர்க்கா.
தன் உயிரானவளின் மீது இருந்து பார்வையை விலக்க முடியாமல், கண்களை அவளிடமே குத்தகைக்கு கொடுத்துவிட்டு உறைந்து நின்றிருந்தான் உற்றவன்.
பரணி, துர்க்கா தயாராகும் இடைவெளியில் தர்ஷனாவை அனுப்பி பூ வாங்கி வர வைத்திருந்தாள் அஞ்சனா.
உறைந்து நின்றிருந்தவனின் தோளை தொட்டு உசுப்பி “அண்ணா போதும், இனி அவ உங்க கூட தான் இருக்க போறா.. ஆச தீர அப்புறமா ரசிச்சுக்கோங்க.. இந்தாங்க இப்ப இந்த பூவ அவ தலையில வச்சு விடுங்க…” என்று சொல்லி பூச்சரத்தை அவன் கையில் கொடுக்க
அவன் அழகியை ரசித்து ஆசை தீர்ந்து விடுமா என்ன, இதோ அவன் கையால் பூ வைக்க வேண்டும் என்று சொன்னதுமே, அவள் உடுத்து இருந்த புடவையின் வண்ணத்துக்கு அவள் முகம் சிவந்து, கன்னங்கள் இரண்டும் ஜொலித்தன. எத்தனை அழகு! அத்தனையும் அவனுக்கு மட்டுமே.
நாணம் தாங்காமல் தலை குனிந்து நின்றவளை நெருங்கியவன், “திரும்பு…” என்று சொல்ல
அவளுக்கு கால்கள் நகர்வேனா என்றது. நித்தியா தான் அவளை பிடித்து திருப்பி விட,
நெகிழ்ந்த மனதுடன்…
பூரித்த சிரிப்புடன்… அந்த பூச்சரத்தை அவள் தலையில் சூட்டினான்.
அவனை முதலில் ஈர்த்த அந்த கார்குந்தல், இப்போதும் அவனை கவர்ந்தது.
துர்க்காவிற்குமே தலைவனின் கையினால் மலர் சூட்டிய அந்த நொடி, மறுமுறையும் பெண்ணாய் பூத்த நொடி, உடல் மொத்தமும் சிலிர்த்தது.
“விட்டா ரெண்டு பேரும் இப்படியே நிப்பாங்க.. பிரிச்சு விடு அஞ்சு…” என்று நித்தியா சொன்ன பின்னர் தான் துர்க்காவின் தலையில் இருந்து கையை எடுத்தான் பரணி.
இருவருக்குமே நிமிர்ந்து மற்றவர்களின் முகத்தை பார்க்க முடியவில்லை.
“சரி சரி நேரமாகுது.. அண்ணி விளக்கேத்துங்க…” என்று தர்ஷனா சொல்ல
துர்க்காவும் சுவாமி மாடத்தில் இருந்த காமாட்சி விளக்கையும் ஏற்றி, பரணியின் தாய் தந்தையரின் முன் இருந்த விளக்கையும் ஏற்றினாள்.
அனைவரும் தெய்வத்தையும், தெய்வத்திடம் சென்றடைந்தவர்களையும் வணங்க,
பரணியும் துர்க்காவும், தங்கவேல் மீனம்மாள் படத்தின் முன்பு விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
அதன் பின் அஞ்சனா தீபாரதனை காட்டி, அனைவரிடமும் நீட்ட, தொட்டு வணங்கிக் கொண்டனர்.
பரணியிடம் “அண்ணா குங்குமத்த எடுத்து துர்க்கா நெத்தி வகுட்டுல வச்சு விடுங்க…” என்று சொல்ல
பரணியும் இரு விரல்களுக்கு இடையில் குங்குமத்தை கிள்ளி எடுத்து, துர்க்காவின் நெற்றி வகுட்டில் அழுத்தி வைத்து விட, இதுவரை அடக்கி வைத்திருந்த ஆனந்தக் கண்ணீர் அவளின் கன்னம் தொட்டது.
உரிமை பட்டவன் பெயர் சொல்லி அந்த குங்குமத்தை சூட்டிக்கொள்ள முடியாமல் அவள் தவித்த தவிப்புகள் அவளுக்கு மட்டும் தானே தெரியும்.
தன் பிரியமானவளின் கண்ணீரை கண்டு “துர்க்காம்மா!…” என்று கனிவுடன் அதட்டல் கலந்து பரணி அழைக்க
கண்களை துடைத்துக் கொண்டவள், அவன் கால்களில் விழுந்தாள் ஆசீர்வாதத்திற்காக.
“ஹேய் என்னடா இதெல்லாம்…” என்று அவளை தூக்கி நிறுத்தியவன் “இன்னும் நூறு வருஷத்துக்கு சுமங்கலியா இருந்து, எனக்கு வாழ்க்க குடு…” என்று சொல்லி அவள் உச்சந்தலையில் கையை வைத்து ஆட்ட, அனைவரும் சிரித்து விட்டனர்.
அவனவளின் இதழ்களிலும் அவன் எதிர்பார்த்த அந்த ஆத்மார்த்தமான அழகிய புன்னகை.
சொல்லப்போனால் அஞ்சனாவிற்கு கூட கண்கள் கலங்கும் போல இருந்தது. துர்க்காவை இந்த கோலத்தில் பார்க்க அவள் தவித்த தவிப்புகள் கொஞ்சம் இல்லையே. நித்தியா கூட துர்க்காவை ஆசையாக பார்த்திருந்தாள்.
அஞ்சனாவோ “இந்த கோலத்துல உன் அண்ணங்க ரெண்டு பேரும் உன்ன பாக்கணும் துர்க்கா.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க…” என்று நெகிழ்ந்து சொல்ல
“அண்ணங்களும் வந்திருக்கலாமே…” என்று துர்க்கா சற்று வாட்டமாக சொல்ல
“அவங்க வயலின் வாசிச்சிட்டு இருக்காங்க…” என்று நித்தியா சொல்ல சட்டுனு யாருக்குமே புரியவில்லை.
“அதாம்மா ஃபீலிங்ல இருக்காங்க.. ஒரே ஒரு தங்கச்சிய வீசுன கையும் வெறுங்கையுமா அனுப்பியாச்சே.. சீர் செய்யலேன்னு கவலை…” என்று நித்தியா சொல்ல
“அஞ்சு அந்த வீட்டுல இருந்து ஒரு குண்டு மணி கூட இங்க வரக்கூடாது.. எனக்கு தேவை என் பொண்டாட்டி மட்டும்தான்.. சீர் செய்ய வேணும்னு நினைக்கிறது அவங்க உரிமையா இருக்கலாம் ஆனா அங்க புலன்குற எல்லா காசும் பரம்பரை சொத்தால வந்தது.. கண்டிப்பா அதுல ஒத்த ரூபா கூட சீரா இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது…” என்று தீர்க்கமாக சொல்ல
“உங்கள பத்தி உங்க பிரண்டுக்கு தெரியாதா ண்ணா.. அதான் எதுவும் பேசாம துர்க்காவ கூட்டிட்டு போக சொல்லிட்டாரு.. இப்ப கூட உங்க கிட்ட பேசி சரி கட்டணும்னு நினைக்கல.. நீங்க இதெல்லாம் எதிர்பார்க்க மாட்டீங்கன்னு தெரியும், ஏத்துக்க மாட்டீங்கன்னும் தெரியும்.. அதனால தான் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருக்காங்க…” என்று அஞ்சனா சொல்ல
“என்ன பண்ணாலும் என் முடிவுல இருந்து நான் மாற மாட்டேன்னு தெளிவா சொல்லிடு…” என்றவன்
“துர்க்கா போட்டு இருக்கிற ஜாக்கெட் நான் வாங்கிட்டு வரல.. ரெடிமேட் தான் வாங்குனேன் இது யார் கொண்டு வந்தா?…” என்று கேட்க
நித்தியா “நான் தான் ண்ணா…” என்று சொல்ல
தன் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்தவன், அவளிடம் நீட்டி “இந்தாடா ஜாக்கெட்க்கான பணம்…” என்று கொடுக்க
“அண்ணா இது துர்க்காக்காக தான் தெச்சு வச்சது…” என்று நித்தியா சங்கடமாக சொல்ல
“தெரியுதுடா.. உன் பாசத்துக்கு நான் இத தரல.. ஆனா என் பொண்டாட்டிக்கு எதுவா இருந்தாலும் என் பணத்துல செய்யனும் என்கிற ஆசையில் தான் ஜாக்கெட்டுக்கான பணத்த குடுக்கேன்.. ஃபீஸ்டா வாங்கிக்க…” என்று சொல்ல
நித்தியா அஞ்சனாவை பார்க்க, அவளும் வாங்கு எனும் விதமாக சைகை செய்ய வாங்கிக் கொண்டாள்.
“சரி இருங்க வாரேன்…” என்ற பரணி சமையலறை சென்று, இனிப்புக்கா கேசரி செய்யலாம் என ரவையை வருக்க,
அங்கு வந்த அஞ்சனா “அண்ணா ஸ்வீட் செய்ய வேணும்னு சொல்லி இருந்தா நான் செஞ்சிருக்க மாட்டேனா.. இங்க குடுங்க…” என்று அவன் கையில் இருந்த கரண்டியை வாங்க
“இல்ல அஞ்சு நான் பண்றேன்…” என்று பரணி சொல்ல
அவள் கேட்கவில்லை.
“போங்க போய் உங்க பொண்டாட்டிய ரசிங்க.. நான் செஞ்சு எடுத்துட்டு வாரேன்…” என்று அண்ணனை விரட்டியவள், பத்து நிமிடங்களில் கேசரியுடன் ஹாலுக்கு வரவும்,
பெண்கள் மூவரும் தான் அமர்ந்திருந்தனர். பரணியை காணவில்லை.
“அண்ணா எங்க?…” என்று அஞ்சனா கேட்க
“ஹா! அவரு அவரோட பொண்டாட்டிக்கு அறை வசதியா இருக்க ரெடி பண்றாரு…” என்று நித்தியா சொல்ல
“நித்தி அண்ணி சும்மா இரு…” என்று துர்க்கா சினுங்க
“உண்மைய தானேடி சொல்றேன்…” என்று நித்தியா சொல்லிக் கொண்டிருக்கும்போது பரணி அறையில் இருந்து வெளியே வர
“அண்ணா நீங்களும் துர்க்காவும் வாசலுக்கு வாங்க.. முதல்ல திருஷ்டி சுத்திட்டு அப்புறமா சாப்பிடலாம்…” என்று சொல்லி மறுத்த பரணியை விடாமல் இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவள், துர்க்காவையும் அவன் அருகில் நிற்க வைத்து, பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி, இருவருக்கும் மூன்று முறை திருஷ்டி சுற்றி தெருவில் போட்டு உடைத்தாள்.
அதன் பின்னர் உள்ளே வந்து அனைவரும் கேசரியை சாப்பிட, துர்க்கா தனக்கு தந்ததை கையில் வைத்துக்கொண்டு அப்படியே இருக்க, பரணியும் சாப்பிடாமல் அவளைத்தான் பார்த்திருந்தான்.
அவளை ஏன் சாப்பிடவில்லை என்ற காரணம் புரிந்தாலும் “என்னாச்சு துர்க்காம்மா.. சாப்பிடு…” என்று சொல்ல
“இத்தன நாள் சீக்கு பிடிச்சவ மாதிரி ஒரப்பு இனிப்பு சாப்பிட்டதில்லல அதுதான் அம்மணி கேசரிய முறைச்சு பாத்துட்டு இருக்காங்க…” என்று நித்தியா நக்கல் பேச
துர்க்கா அவளை பாவமாக பார்க்க
“என்ன பாக்குற எத்தன நாள், நான் ஸ்வீட் காரம் குடுத்து இருப்பேன் பெரிய இவ மாதிரி சாப்பிட மாட்டேன்னு இருந்த இல்ல.. இனி எல்லாமே சாப்பிட்டு தான் ஆகணும்.. அண்ணா உங்க பொண்டாட்டிக்கு நீங்களே ஊட்டி விடுங்க…” என்று நித்தியா சொல்ல
பரணியும் தன் கையில் இருந்ததில் கொஞ்சமாக எடுத்து துர்க்காவின் செம்பவள இதழ் அருகே கொண்டு செல்ல,
விழி விரித்து அவனை பார்த்தாலும் இதழ்கள் தானாக திறந்து கொண்டன. அவனும் இதழோரம் துளிர்த்த புன்னகையுடன் அவள் வாயினுள் தித்திப்பை புகட்டி விட,
நீண்ட வருடங்கள் கழித்து அவள் நாவு உணர்ந்த முதல் சுவை. அதுவும் அவளவன் கையினால், அமுதமாகவே தீத்தித்தது.
இருந்தும் அதிகமாக சாப்பிட முடியவில்லை. உமட்டிக் கொண்டு வரும் போல் இருக்க, மூன்று வாயிலேயே போதும் என்று சொல்லி விட்டாள். பரணியும் அவள் நிலை உணர்ந்தவன் போல் விட்டு விட்டான்.
ஆனால் நெஞ்சுக்குள் முனு முனுவென்று இருந்த வலியை மட்டும் குறைக்க முடியவில்லை. அதனால் அவன் மேற்கொண்டு சாப்பிடவில்லை. செல்வ சீமாட்டி எப்படி இருந்தால் என்ன நிம்மதியாக உண்டு உறங்கி இருப்பாள் என்று நினைத்திருந்தான். ஆனால் சுவை நரம்புகள் செத்துவிடும் அளவிற்கு அவள் வாழ்வு இருந்தது தெரியாமலே போனதை எண்ணி மிகவும் வருந்தினான்.
“சரி ண்ணா.. நாங்க கிளம்புறோம்.. குழந்தைகள விட்டுட்டு வந்தது.. அதுக்கு மேல உங்க மச்சானுங்க ரெண்டு பேரையும் போய் சமாதானப்படுத்தணும்…” என்று சொல்லிக்கொண்டு அஞ்சனாவும் நித்தியாவும் புறப்பட, தர்ஷனாவும் அவர்களுடனே சென்று விட்டாள்.
இப்போது கணவன் மனைவி இருவரும் தனிமையில். துர்க்காவிற்கு உள்ளுக்குள் குறுகுறுப்பும், படபடப்பும் சேர்ந்து வந்தது.
பரணியோ மனது ரெக்கை கட்டி பறக்க, தனக்கான ஒருத்தி, தன் மனைவியாக தன்னுடன் இருக்கின்றாள் என்ற பரவசத்தில் இருந்தான்.
வார்த்தைகள் இல்லை…
பார்வைகள் இல்லை… ஆனால் அழகிய மௌனம் இருவரையும் ஆரத்தழுவி நின்றது .
error: Content is protected !!