Skip to content
Post Views: 68
அத்தியாயம் 28
அமைதி இம்சை செய்யுமா…
செய்தது பரணி, துர்க்கா இருவரையும்.
Advertisement
“துர்க்காம்மா! வா வீட்ட சுத்தி காட்டுறேன்…” என்று தன் மணவாட்டியை அழைத்தான் பரணி.
Advertisement
அஞ்சனா எல்லாவற்றையும் காட்டி இருப்பாள் என்று தெரியும், ஆனாலும் தன்னையும் இயல்பாகி கொண்டு அவளையும் இயல்பாக வேண்டும் என்பதால் அவளை அழைத்துக்கொண்டு அறைக்கு வந்தான்.
Advertisement
இது நாள் வரை அவனது அறை, இன்று அவளுடையதும். அறையில் ஒரு கட்டில் ஒருவர் தாராளமாக படுக்க முடியும், இருவர் கட்டிக்கொண்டு தூங்கலாம்.
Advertisement
ஒரு பக்கமாக இரண்டு அடைப்பு அலமாரி, அதை திறந்து காட்டியவன் “உன்னோட துணி எல்லாம் இதுல வச்சுக்கோ…” என்று சொன்னான்.
ஏற்கனவே அவன் துணிகளை ஒரு பக்கமாக வைத்திருந்தான். இப்போது தாராளமாக அவள் புடவைகளுக்கு இடமிருந்தது. சரி என தவையை மட்டும் ஆடினாள் துர்க்கா.
“அப்புறம் பாத்ரூம் தனியா தான் பின்னுக்கு இருக்கு.. கிணறு இருக்கு அங்க தான் துணி துவைச்சுப்பேன்.. நீ என்ன வேணும்னு சொல்லு அதெல்லாம் வாங்கிடலாம்.. இதுனால் வரைக்கும் என் ஒருத்தனுக்கு எதுக்கு சொகுசுனு எதுவும் வாங்கிக்கல…” என்று அவன் சொல்ல
“இல்ல இதுவே போதும்…” என்றவளுக்கு உண்மையாகவே அந்த வீட்டில் எந்த குறையும் தெரியவில்லை.
14 வருடங்களுக்கு முன்பு ஒற்றை அறையில் எந்த வசதியும் இல்லாமல் அவள் பட்ட கஷ்டங்கள் வார்த்தையால் சொல்லிவிட முடியாது.
அதன் பிறகு தன் பிறந்த வீட்டில் பளிங்கு அறையில் இருந்தாலும் அவள் எதையும் ஆழ்ந்து அனுபவித்தது கிடையாது.
இப்போது அவள் புகுந்த வீடு சொர்க்கமாக தெரிந்தது. ஒவ்வொரு இடமும் அவ்வளவு பிடித்தது. அதிலும் பேசியபடி பரணி வீட்டின் பின்புறம் கூட்டிக்கொண்டு காட்ட ,
அகண்ட பணிந்த ஆழமான கிணறு. அதன் அருகில் துணி துவைக்கும் கல், கிணற்றை சுற்றி வாழை மரங்கள் பாக்கு மரம், அதனோடு சேர்த்து மல்லிகை செடி, செவ்வந்தி செடி என்று அந்த இடமே அவ்வளவு ரம்யமாக இருந்தது .
“ரொம்ப அழகா இருக்கு…” என்று உணர்ந்து அனுபவித்து சொன்னாள் பெணணவள்.
“எனக்கும் இந்த கிணத்தடி ரொம்ப பிடிக்கும்.. எப்பவும் இங்க இருந்துட்டு தான் நிறைய விஷயம் யோசிப்பேன்.. அஞ்சுக்கும் பிடிக்கும், சின்ன வயசுல இங்கல்லாம் விளையாடி இருக்கோம்…” என்று அவனும் சாதாரணமாக பேச்சு கொடுக்க
“என்னலாம் விளையாடுவீங்க?…” என்று துர்க்காவும் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தாள்.
அவனும் தன் சிறுவயது வீர தீர பராக்கிரமங்களை சொல்ல ஆரம்பித்தான். பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. மதிய வெயில் சுள்ளென்று உச்சியில் தாக்கவும் தான் “டைமாச்சு துர்க்காம்மா…” என்று சொல்லி அவளை வீட்டின் உள்ள அழைத்து வந்தான்.
“டிவி கூட இல்ல உனக்கு பொழுது போக.. கொஞ்ச நேரம் இரு நான் சமைச்சிடுறேன்…” என்று சொல்ல
“இல்ல நான் சமைக்கிறேன்…” என்று துர்க்கா சொல்ல
“எப்படி உப்பு ஒரப்பு இல்லாமலா.. உன்னால இனிப்பையே சரியா சாப்பிட முடியல.. எப்படி ருசி பாத்து சமைப்ப…” என்று பரணி கேட்க
“கையளவு மாறாதே.. நான் எப்பவும் போல சமைக்கிறேன்.. நீங்க ருசி பாத்து சொல்லுங்க…”
“இல்லடா அம்மு.. இன்னைக்கு நானே சமைக்கிறேன்.. நாளையில இருந்து நீ பண்ணு.. வேணும்னா இப்போ காய்கறி வெட்டி கொடு…” என்று பரணி சொல்ல
சரி என்று அவளும் ஒப்புக்கொள்ள, மதிய சமையலுக்கு தேவையான காய்கறி வெட்டுவது, தேங்காய் துருவுவது என்று அனைத்து வேலைகளையும் துர்க்கா செய்து கொடுக்க, பரணி அடுப்பில் வைத்து கிளறி ருசி பார்த்து இறக்கினான்.
தடபுடலாக சைவ விருந்து ரெடியானது. வீட்டில் டைனிங் டேபிள் இல்லை, ஹாலில் நான்கு கதிரைகளும், நடுவில் டீபாயும் இருக்கும். கீழே அமர்ந்தால் எழுந்து கொள்ள சிரமப்படுவான் என்பதால் அதில் வைத்து தான் பரணி சாப்பிட்டுக் கொள்வான்.
இப்போதும் இரண்டு தட்டுகளில் சாப்பாடை போட்டு எடுத்தவன் துர்க்காவிடம் அதை கொடுக்க, அவளும் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
ஆனால் சாப்பாட்டில் கை வைக்கவில்லை. பொரியல், கூட்டு, சாம்பார் என்று பதார்த்தங்கள் நிறைந்திருந்த தட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவற்றையெல்லாம் அவள் சாப்பிட்டு பத்து வருடங்கள் ஆகின்றன. சீர்திருத்த பள்ளியில் இருந்த போது கூட தேவையான உணவுகள் கிடைத்தது. ஆனால் தன் வீட்டில், தான் எப்படி இருந்திருக்கின்றோம் என்பதே அவளுக்கு நெஞ்சை உறுத்தியது.
தட்டை பார்த்திருந்த அவள் முன்பு பரணியின் கை சாப்பாட்டுடன் நீண்டது. “ம்ம், சாப்பிடு…” என்று கனிவுடன் சொல்ல
அவளும் வாயை திறந்து வாங்கிக் கொண்டாள். உணவின் சுவை நாவின் நரம்புகளை தாக்கிய மறுநொடி புறையேறி இரும ஆரம்பித்தாள் துர்க்கா.
உடனே அவசரமாக தண்ணியை அவளுக்கு பருக கொடுத்து, தலையில் தட்டிக் கொடுத்த பரணிக்கு மனது கனத்துப் போனது.
பார்த்து பார்த்து கொஞ்சமாக பருப்பை குழைத்து தான் வாய்க்குள் வைத்தான். அந்த உணவில் இருந்த காரத்தையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
பெற்ற தாயே, தான் பெற்ற பிள்ளைக்கு இப்படி ஒரு செயலை செய்ய முடியுமா, பிரேமாவதி மீது ஆத்திரமாத்திரமாக வந்தது.
தண்ணியை குடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
மிகவும் மிதமான உப்பு, காரம் தான் அந்த சாப்பாட்டில் இருந்தது. அதைக் கூட அவள் நாவால் சட்டென ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“சரிடா அம்மு.. தயிர் இருக்கு, தயிர் சாதம் செஞ்சு தரட்டுமா?…” என்று “ஸ்ஷ்” என்று வாயால் காற்றை உள் இழுத்துக் கொண்டிருந்தவளிடம் கேட்க
“இல்ல பரவால்ல..பழகத்தானே வேணும்.. நீங்க குடுங்க நான் சாப்பிடுறேன்…” என்று ஒரு வித பிடிவாதத்துடன் கூறினாள்.
எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்க முடியும். இனி அவள் தானே அவனை பார்த்துக் கொள்ள வேண்டும், அதில் ஒன்று அவள் ஆசையாக சமைத்துக் கொடுக்க அவன் திருப்தியாக உண்ண வேண்டும் என்பது, எனவே தன் சுவை நரம்புகளை சீர்படுத்திக் கொள்ள இப்போதே தயாராகி விட்டாள்.
பரணிக்கும் அவள் கூறுவது சரி என்று பட, சாதத்துடன் கொஞ்சமாக கறிகளை வைத்து அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.
ஒவ்வொரு வாய் மென்று விழுங்கும் போதும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட, அவளும் புறங்கையினால் துடைத்துக்கொண்டே சாப்பிட, அடுத்த கை சாப்பாட்டை அவள் வாயில் வைத்தவன், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர, எட்டி அவனே துடைத்து விட்டான் அவன் இதழினால். ஆம் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அவன் அதரம் ஒற்றி உலர்த்தி விட்டது.
பெண்ணவள் தான் காரத்தினால் சிவந்ததா, இல்லை கண்ணாளன் செய்த மாயத்தினால் சிவந்ததா என்று புரியாமல் கன்னங்கள் இரண்டும் சூடேறி செம்மையில் ஜொலிக்க, இமை குடைகளை படபடவென அடித்து அவனை பார்த்திருந்தாள்.
அவளின் திகைத்த தோற்றத்தை பார்த்து இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் “என்ன? சாப்பிடு…” என்றான்
அவளும் வேறு வழியின்றி கைகள் இரண்டையும் இறுகக் கோர்த்துக்கொண்டு, தன்னுள் கிளர்ந்தெழுந்த உணர்வுகளை வெளிக்காட்டாமல், குறுகுறுத்த மனதுடன் சாப்பிட்டாள்.
பரணி தன் இருக்கையை இன்னும் அவளுடன் ஒட்டி போட்டவன், ஒவ்வொரு வாய் உணவிற்கும் தன் சொந்தமானவள் இரண்டு கன்னங்களுக்கும் இச் இச் வைக்க, அதன் பின்னர் கண்ணீர் வருமா என்ன.
இறுதி வாய் உணவை நெற்றி முத்தத்தோடு கொடுத்து முடித்தவன், அதன் பின்னர் தான் தன் உணவை சாப்பிட்டான்.
அவன் என்னவோ இயல்பாக தான் இருந்தான். இருப்பது போல் காட்டிக் கொண்டான் என்று சொல்லலாம்.
இப்போது அவன் தொண்டை குழியில் இறங்கும் உணவு அவனுக்கு சுவைக்கவில்லை. இதற்கு முன் நான் சுவை பார்த்த அப்பிள் கன்னங்கள் இன்னும் வேண்டும் என்றது அவன் உதடுகள்.
அவளின் மென்மையும், நெற்றி முத்தம் வைக்கும் போது அவளிலிருந்து வந்த அந்த வாசனையும், அவனை என்னென்னவோ செய்தது.
அது எதையும் வெளிக்காட்டாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, துர்க்கா நீரை அருந்தி கொண்டே அவனைத்தான் குறுகுறுவென பார்த்திருந்தாள், எப்படி இந்த கள்வனால் எதுவும் நடக்காதது போல் இருக்க முடிகின்றது என்று.
இப்போது கூட அவளால் நிலை கொள்ள முடியவில்லை. ஏதோ மாய உலகத்தில் சிக்கிக் கொண்டது போல் தத்தளித்து தவிக்கின்றது அவள் பெண்மை.
பரணி சாப்பிட்டு முடிக்கவும் அவன் தொலைபேசிக்கு கடை பையனிடமிருந்து அழைப்பு வரவும் நேரம் சரியாக இருந்தது.
எடுத்து என்னவென்று பரணி கேட்க, அந்த பையனுக்கு பரணி ஏன் வீட்டில் இருக்கின்றான் என்பது தெரிந்தாலும் தயக்கமாகவே கடைக்கு வர முடியுமா என்று கேட்க,
இவனும் வருவதாக சொன்னான். பரணியும் அந்த பையனும் மட்டுமே அந்த கடையை பார்த்துக் கொள்கின்றனர். பரணி இல்லாமல் தனியாக அந்த பையனால் கடையை கொண்டு செல்ல முடியாது என்பது தெரியும்.
எனவே தன் பழைய ஃபோன் ஒன்றை தேடி எடுத்தவன், அதில் தன்னிடம் இருந்த இன்னொரு சிம்மை மாற்றி போட்டு, துர்க்காவிடம் நீட்டி “துர்க்காம்மா இந்த ஃபோன வச்சுக்க.. நான் இப்போ கடைக்கு போகணும்.. இருட்டுனதும் சீக்கிரம் கடைய அடைச்சிட்டு வர பாக்கிறேன்.. அதுக்கு முன்னாடி எதுவும்னா இதுல என் நம்பர் இருக்கு எனக்கு கூப்பிடு.. ரெண்டு நாள் கழிச்சு டவுன் போகும்போது உனக்கு புது ஃபோன் வாங்கி தாரேன்…” என்று சொல்ல
“இல்லை இதுவே போதும்…” என்று துர்க்கா சொல்ல
“என்ன வேணாம்.. இது பட்டன் ஃபோன், இப்ப எல்லாரும் டச் ஃபோன் தான் பாவிக்கிறாங்க.. உனக்கு ஒன்னு வாங்கனும் இல்ல…” என்று சொன்னவன்
தன் தலையில் தட்டிக் கொண்டு “இல்ல நீ இந்த ஃபோன வச்சுக்கோ.. இதுல யூடியூப்ல படம் பாக்க முடியும்.. நான் வார வரைக்கும் உனக்கு பொழுது போகணுமே…” என்று சொல்லி தான் வைத்துக் கொள்ள இருந்த டச் ஃபோனை அவளிடம் நீட்ட
“இல்ல எனக்கு இத எப்படி பயன்படுத்தனும்னு தெரியாது…” என்று அவசரமாக மறுக்க
“என்ன அப்போ உன்கிட்ட ஃபோன் இருக்கலயா?…” என்று கேட்க
இல்லை என்று தலையாட்டியவள் “நித்தியா அண்ணி பாவிக்கும்போது பாத்திருக்கேன்.. ஆனா நான் தொட்டதில்ல…” என்று சொல்ல
‘இத கூட கவனிக்காம இருந்திருக்கான்…’ என்று நண்பனின் மீது கோபமாக வந்தது.
“சரி எப்படி படம் பாக்கணும்னு நான் சொல்லி கொடுக்கிறேன்.. நீ பாத்துட்டு இரு…” என்று சொல்ல
“இல்ல வேணாம்.. நான் இருந்துப்பேன், நீங்க போயிட்டு வாங்க…” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தாள் .
பரணிக்கு மனைவியை விட்டுச் செல்ல மனமே இல்லை, ஆனாலும் தொழிலை கவனிக்க வேண்டுமே அதனால் கடைக்கு சென்றான்.
பரணி சென்ற பின்னர் துர்க்கா வீட்டை தான் சுத்தப்படுத்த தொடங்கினாள்.
என்னதான் முடிந்தவரை பரணி எல்லாவற்றையும் சரியாக வைத்திருந்தாலும், ஒரு பெண் வீட்டை தூய்மையாக, நேர்த்தியாக வைத்திருப்பது போல் வராது அல்லவா.
அவன் அம்மா இருக்கும்போது அந்த வீடு எப்படி இருந்தது அப்படியே தூசு படியாமல் பார்த்துக் கொண்டான் அவ்வளவே. வேறு எந்த மாற்றமும் அவன் செய்யவில்லை. செய்யும் அளவிற்கு அவன் மனநிலை இருந்ததும் இல்லை.
இப்போது துர்க்கா தனக்கு பிடித்தவாறு அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருள்களையும் மாற்றி வைத்து, எல்லா இடத்தையும் துடைத்து தூசு தட்டி, நேர்த்தியாக வைத்து என்று அவளது மணித்துளிகள் கடந்ததே தெரியவில்லை.
இதோ இருட்டி விட்டிருந்தது. வேலைகள் எல்லாம் முடிய குளித்துவிட்டு வேறு ஒரு மஞ்சள் நிற புடவை உடுத்திக் கொண்டாள்.
கண்ணாடி முன்பு நின்று நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்தவளுக்கு கணவனின் நினைவு மேலோங்க, உதடு கடித்து வெக்கப் புன்னகை பூத்தாள்.
எத்தனை உரிமையாக மதியம் முத்தங்களை வாரி வழங்கினான். அப்படி இருக்க இன்று இரவு கணவன் மனைவிக்கான தாம்பத்தியம், அதை நினைக்கும் போதே உடல் நடுங்கியது.
எவ்வளவு முயன்றும் அவளது பழைய அந்த அகோரமான நினைவுகளில் இருந்து வெளிவர முடியவில்லை. சத்தியமாக பரணியை அப்படி ஒரு நிலையில் எப்படி அணுகுவது என்று அவளுக்கு தெரியவில்லை. மனது ஒற்றை அறையில் அவனை எதிர்கொள்ள போகும் அந்த நிமிடத்தை நினைத்து படபடவென்று அடித்துக் கொண்டாலும் அவன் வருகையை வெகுவாகவே எதிர்பார்த்தது.
அவள் எதிர்பார்ப்புக்கு உரியவனும் நேரத்துடனே கடையை அடைத்து விட்டு, வீட்டிற்கு வந்திருந்தான். அவன் வீட்டின் நுழையும் போது புன்னகை முகமாக பளிச்சென வரவேற்றாள் அவன் சுந்தரி.
சுந்தரன் அவன் மனதில் அத்தனை இதம். எத்தனை நாட்கள் இருண்ட வீட்டை வேண்டா வெறுப்பாக திறந்து உள்ளே வந்து இருப்பான். இப்போது அவனை வரவேற்க அவன் ஆருயிர் மனைவி, வீடும் புது கலையுடன் ஜெலிக்க, அவன் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா.
பரணி கையில் கடலை மிட்டாய். துர்க்கா சின்ன வயதில் விரும்பி சாப்பிடுவது, அதை அவளிடம் கொடுக்க, சாப்பிடும் ஆசை வந்ததோ இல்லையோ அதை வாங்கி தந்தவன் மீது கொள்ளை கொள்ளையாக ஆசை பிறந்தது.
பரணி குளித்து விட்டு வர, துர்க்கா தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். பின் இருந்து பார்த்தவனுக்கு முதலில் கண்ணில் பட்டது அவள் கூந்தல் தான். அதனால் “ஏய் சாரப்பாம்பு என்ன பண்ற?.. நான் வந்து சமைச்சிருப்பேன் தானே…” என்று கேட்க
அவனை திரும்பி அவள் முறைத்து பார்க்க, அவன் எதிர் பார்த்த பார்வையல்லவா அது, எனவே அவனோ பட்டென்று கண்ணடித்து விட,
உள்ளம் தட்டி துடிக்க திரும்பி கொண்டவள்
“தோச தானே.. நானே ஊத்திட்டேன்…” என்று மெலிய குரலில் கூற
“சரி நான் சட்னி அரைக்கேன்…” என்றவன் அவளுக்காக காரம் இல்லாமல் தேங்காய் சட்னியை அரைத்தான்.
இருவரும் சாப்பிட அமர, “ஊட்டி விடவா?…” என்றான் கள்ளப் புன்னகையுடன்
அணங்கவளின் கன்னங்கள் அந்தி வானமாக சிவந்து போக
“இல்ல வேணாம்…” என்றவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“கார சட்னி அரைச்சிருக்கணுமோ…” என்று அடுத்த சீண்டல் அவனிடம் இருந்து.
“அச்சோ!” என்றவளால் அங்கு இருந்து ஓடவும் முடியவில்லை.
இப்போதே ஆரம்பித்து விட்டான். இன்னும் சற்று நேரத்தில் என்ன செய்வானோ, மீண்டும் பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
வேகமாக சாப்பிட்டு முடித்தவள் அறைக்கு செல்லாமல் சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டிருக்க,
அவள் தவிப்பை புன்னகையுடன் ரசித்திருந்தவன், அவளை படுத்தியது போதும் என்று நினைத்து “துர்க்காம்மா என்ன பண்ற.. உள்ள போய் படுத்துக்கோ…” என்று சொல்ல
“ம்ம்…” என்றவள் கால்கள் அறையை நோக்கி நடைப்பயிலும் போதே, எப்போதும் போல அவன் கயிற்று கட்டிலை எடுத்து முற்றத்தில் போட்டு அதில் படுத்துக்கொள்ள,
அறைவாசலில் நின்றவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அவள் தன்னை பார்ப்பது தெரிந்து, அவளை பார்த்தவன் “நீயா கூப்பிடாம நான் அங்க வரமாட்டேன்.. நிம்மதியா போய் படுத்து தூங்கு.. குட் நைட்…” என்று சொல்ல
அவளும் அழகிய புன்னகையுடன் அறையினுள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். நீண்ட காலம் கழித்து மெத்தையில் படுத்ததால் உறக்கம் வர நேரம் எடுத்தது.
அப்போது முற்றத்தில பரணியின் ஃபோனில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் அவள் காதில் விழுந்தது
இருவிழி மலர்ந்தது உன் முகம் காண…
இடைவெளி ஆனது இதற்காக தானா…
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்…
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்…
கண்ணும் கண்ணும் கலந்ததுனாலே கண்ணன் மனம் கவி பாட…
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனை தேட…
ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கை தோணுதே…
பாடல் வரிகளில் லயித்திருந்த இரு உயிர்களும் உறக்கத்தை தழுவின.
error: Content is protected !!