Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 27 Final

ஓம் ஸ்ரீ சாய்ராம்

அன்று ஷ்ரவனின் பிறந்தநாள். பிறந்தநாள் பரிசுடன், பிராயச்சித்தம் செய்யவும் வழிகாட்டுகிறேன் என அவனை பெங்களூருக்கு அழைத்து வந்திருந்தாள் அவன் தர்மபத்தினி. பக்திக்குப் பெயர்போனவள், பரிகாரம், விசேஷ பூஜை என ஏதாவது தனித்துவ சிறப்பு வாய்ந்த கோவில் குளத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் வந்தவன், அந்தக் காப்பகத்தைக் கண்டதுமே சற்று யோசித்தான்.

கல்லூரியில் பணியாற்றும் சகஊழியரின் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட போது அறிமுகமானவர் எனக் காப்பகத்தின் நிறுவனர் திருமதி.சுகந்தியை அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள்.

நிதி உதவி, கட்டிடம் எழுப்பித்தர உதவி என்ற கோணங்களில் யோசித்தவன், அந்த இடத்தினை பார்வையால் அளந்துகொண்டபடி உடன் நடந்தான்.



Advertisement

கைக்குழந்தைகள் பிரிவில், இருபதுக்கும் மேற்பட்ட தொட்டில்களைக் கண்டதும் ரம்யாவின் கண்கள் பூரிப்பில் பனித்தன.

“உங்க மனசுக்குப் பிடிச்ச ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கலாம் ஷ்ரவன்,” காதோரம் இசைத்த பாவையின் குரலில் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

இத்தனை பெரிய வாழ்க்கை முடிவை முன்னறிவிப்பு இல்லாமல் எடுக்கச் சொல்வாள் என அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

Advertisement

“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ரம்யா,” அங்கிருந்து புறப்பட நாசுக்காய் தவிர்த்தான்.

Advertisement

“உங்க பதற்றம் புரியுது மிஸ்டர்.ஷ்ரவன்,” இடைபுகுந்த சுகந்தி,

“எத்தனை குழந்தைகளோட வேணும்னாலும் எத்தனை நாள் வேணும்னாலும் வந்து பழகுங்க. இங்க இருக்குற குழந்தைகளைப் பிடிக்கலேனாலும் பரவாயில்ல.

சென்னையிலும் எனக்கு நிறைய கான்டாக்ட்ஸ் இருக்கு. ஐ கேன் ஹெல்ப் யூ,” அக்கறையாக நம்பிக்கையூட்ட,

Advertisement

அதில் ஷ்ரவனுக்குத் தன் மனத்தில் யூகித்த அனுமானம் ஊர்ஜிதமானது.

“எப்படியாவது ஒரு குழந்தையை எங்க தலையில் கட்டிடணும். அதுதானே உங்க இன்டென்ஷன்,” கொந்தளித்தான்.

“ஷ்ரவன்…” ரம்யா பதற,

“மேம்….” அங்கிருந்த ஊழியர் துளசி, சுகந்தியைக் கவலையுடன் நோக்கினாள்.

எத்தனையோ அவதூறு பேச்சுகளைக் கடந்து வந்திருந்த சுகந்திக்கு அவன் கொந்தளிப்பு ஒரு பிரச்சனையாகவே இல்லை.

“இதை ஒரு புனிதமான சேவையாத்தான் செய்துட்டு வரேன்,” பொறுமையாகவே பதிலளித்தார்.

“சர்வீஸ்ன்ற பேருல உங்கள மாதிரி ஆளுங்க ஊருக்கொரு அநாதை ஆசிரமம் நடத்திறதுனாலதான் தப்பு செய்யறவங்க பயமே இல்லாம குழந்தை பெத்துப்போட்டுட்டு அடுத்த ரிலேஷன் அடுத்த வாழ்க்கைன்னு போயிட்டே இருக்காங்க,” சிந்தனைகள் கடும்சொற்களாகச் சீறிப்பாய்ந்தன.

கோபம் தலைக்கேறிய துளசி, “படிச்சிருக்கீங்களே, பக்குவமா யோசிச்சு தத்தெடுத்துக்க வந்திருப்பிங்கன்னு நெனச்சா, இவ்வளவு கீழ்த்தரமா பேசுறீங்களே,” அவனுக்கு இணையாகச் சீறினாள்.

அதற்கெல்லாம் அவன் அசரவில்லை.

“ஓர் உயிரோட மதிப்பு என்னன்னு தெரியாம இந்தக் குழந்தைகளைப் பெத்துப்போட்டுட்டு போனவங்க செஞ்சது உங்களுக்குக் கீழ்த்தரமான காரியமா தெரியல… தத்தெடுத்துக்க விருப்பமில்லன்னு சொல்ற நான் கீழ்தரமானவனா?” சிறு பெண் என்று கூடப் பார்க்காமல் உறுமினான்.

“ஷ்ரவன்….” ரம்யா அவன் புஜத்தில் அழுத்தி கெஞ்ச,

“என்னை எதுக்குடி அடக்குற? இங்கதான் வரோம்ன்னு நீ முன்னாடியே சொல்லியிருந்தா நான் இந்தப் பேச்சை எல்லாம் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதுல,” அவளையும் உறுமி, வாசலை நோக்கி வேகநடையிட்டான்.

சுகந்தியிடமும் துளசியிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கணவனைப் பின்தொடர்ந்தாள் ரம்யா.


தங்கும் விடுதிக்குத் திரும்பியவர்கள் இருதுருவங்களாக முறுக்கிக்கொள்ள இரண்டு மணிநேரம் கடந்திருந்தது. திடீரென ஒலித்த அழைப்பு மணியில் யோசனையாகக் கதவைத் திறந்தான் ஷ்ரவன்.

“தப்பு செய்யறவங்கள என்கரேஜ் பண்ற மாதிரி நாங்க ஆர்ஃபனேஜ் நடத்துறதா சொன்னீங்களாமே மிஸ்டர்! எங்க சுகந்தி மேடத்தைப் பற்றியும் எங்க காப்பகத்தைப் பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்?” பொரிந்தாள், துளசியுடன் வந்திருந்த மற்றொரு பெண்.

‘யார் இவள்!’ என ஷ்ரவன் சிந்திக்க,

“பூங்கோதை! எதுக்கு வாசல்ல நின்னு கத்தி உன் மதிப்பைக் குறைச்சிக்குற?” என்ற துளசி, அவன் வழிவிட காத்திராமல் தோழியை உள்ளே இழுத்துச்சென்றாள்.

“அவர் விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்காத என்மேலத்தான் தப்பு துளசி. ப்ளீஸ் எந்தப் பிரச்சனையும் பண்ணாம இங்கிருந்து கிளம்பிடுங்க,” கை கூப்பி கெஞ்சினாள் ரம்யா.

“உங்களுக்கு எங்க சுகந்தி மேடத்தைப் பற்றியும் எங்க காப்பகத்தின் தனித்துவத்தைப் பற்றியும் தெரியும்தானே ரம்யா. உங்க புருஷன் அவ்வளவு கேவலமா பேசும்போது சும்மா நின்னுட்டு இப்போ எங்களை விரட்டுறீங்க!” எகிறினாள் பூங்கோதை.

கணவன் காட்டிய எதிர்வினையில் அவளுக்கே பேரதிர்ச்சிதான். தத்தெடுத்துக்கொள்ள விருப்பமில்லை எனத் தீர்மானமாக மறுப்பவன் எதையும் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை என்று நொந்துபோயிருந்தாள்.

“அப்படியென்ன பெரிய உலக மகா சாதனை செஞ்சிருக்கப் போறீங்க… பெருமையடிச்சுக்க,” சண்டைக்குப் பாய்ந்தான் ஷ்ரவன்.

“ஷ்ரவன் ப்ளீஸ்! அங்க இருக்குற குழந்தைகள் அத்தனை பேருமே, நோய்களுக்கும், இயற்கை சீற்றங்களுக்கும், சாலை விபத்துகளுக்கும்னு நம்ம கைக்கு மீறின காரணங்களுனால பெத்தவங்கள பறிக்கொடுத்தவங்க,” உண்மையை உடைத்தாள் ரம்யா.

“அதுமட்டுமில்ல! தகாத முறையில் பெத்தெடுத்த குழந்தைகளை எங்க காப்பகத்துல சேர்க்க நினைக்கிறவங்களுக்கு ரெண்டே ஆப்ஷன் தான்.

கவின்சிலிங்க் எடுத்துட்டு திருந்தி வாழணும்; இல்ல சட்டத்துக்கு அடிப்பணியணும். பரிதாபங்களுக்கோ, பச்சாதாபங்களுக்கோ இடமே இல்லை,” ரம்யா அறிந்திராத நிதர்சனத்தை அழுத்திக் கூறினாள் பூங்கோதை.

ஆத்மார்த்தமாகச் சேவை செய்து வருபர்கள், அலட்சிய குற்றச்சாட்டுகளுக்குக் கொந்தளிக்கத் தானே செய்வார்கள் என மனம் தெளிந்தவன்,

“ஓகே! ஐ டேக் பேக் மை வர்ட்ஸ். பொதுவான அபிப்பிராயத்தோட நான் அப்படிப் பேசினது தப்புதான்,” மன்னிப்பை யாசித்தான்.

இத்தனை எளிதில் அவன் தழைந்துபோவான் என எதிர்பார்த்திராத பெண்களுக்குப் பெரும் வியப்பாகவே இருந்தது.

வந்தவேலை முடிந்தது என அவர்கள் நகர,

“ஒரு நிமிஷம் லேடீஸ்,” தடுத்தான் ஷ்ரவன்.

திருதிருவென முழித்தவர்களை அமரச் சொல்லி, எதிரில் அமர்ந்துகோண்டவன், குழப்பத்தின் சிகரமாக நிற்கும் மனையாளின் கையைப் பிடித்துத் தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.

“இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்யற நீங்க, அந்த குழந்தைகளை ஏன் அவங்க உறவுக்காரங்களோட சேர்க்க முயற்சி எடுக்கல,” எனக் கேள்வியை எழுப்பினான்.
தன்னவனின் உள்ளத்தைப் படித்தாள் ரம்யா.

ஷர்மிலாவின் அக்காவின் திடீர் மரணம். தாயில்லா குழந்தைகளுக்காகப் பரிதவித்த உள்ளங்கள்; தெரிந்தவர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம் என அவற்றைப் பற்றி இரு பெண்களுக்கும் விவரித்த ரம்யா,

“ஷ்ரவன் சொல்ற மாதிரி, இந்தக் குழந்தைகளோட பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, அத்தை மாமான்னு ஏதாவது ஒரு உறவுக்காரங்களோட சேர்த்து வச்சா, அநாதைன்ற பேச்சுக்கே இடமில்லாம போயிடுமே!” சிந்திக்கச் சொன்னாள்.

பெரும்பாலான நேரங்களில், பணப் பற்றாக்குறை; வீட்டில் இடமில்லை எனப் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதே குறுகிய மனம் படைத்த உறவுக்காரர்கள் தானே என துளசி வருந்த,

இயற்கை சீற்றங்களிலும், பெரிய விபத்துகளிலும் அநாதையாகும் குழந்தைகளுக்கு உறவுக்காரர்கள் இருக்கிறார்களா எனக் கூடத் தெரிவதில்லை எனப் பெருமூச்சுவிட்டாள் பூங்கோதை.

“தெரியலன்னு சொல்லாதீங்க பூங்கோதை. தெரிஞ்சுக்கு நீங்க முயற்சி எடுக்கலன்னு சொல்லுங்க,” வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தினான் ஷ்ரவன்.

“அப்படியே தேடி கண்டுபிடிச்சாலும் அவங்களும் ஏதாவது சாக்குச் சொல்லித் தட்டிக்கழிக்கத்தான் போறாங்க. அதுக்கு குழந்தைகள் எங்க அரவணைப்பில் சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் வளருவாங்க,” அத்தனை வருடங்களாக அந்தக் காப்பகத்தில் பணியாற்றிய அனுபவத்தில் சலித்துக்கொண்டாள் துளசி.

மனோதத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, பள்ளிப் பருவத்துக் குழந்தைகளின் வழிகாட்டல் ஆலோசகராகப் பணியாற்றி வந்த பூங்கோதைக்கு, ஷ்ரவனின் யோசனையிலுள்ள பல நன்மைகள் கண்முன் விரிய,

“கண்டிப்பா முயற்சி செய்யறோம் சார்,” பேருவகையுடன் வரவேற்றாள்.

மென்னகையுடன் தலையசைத்தவன், “உங்களுடைய இந்த தேடல் பயணத்துக்குக் கைக்கொடுக்க நானும் என் மனைவியும் தயாரா இருக்கோம். எப்போ, எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க.

அதுமட்டுமில்ல, பொருளாதார பற்றாக்குறை மட்டும்தான் பிரச்சனைன்னு சொல்ற உறவுக்காரங்களுக்கு என்னாலான உதவியைக் கண்டிப்பா செய்யறேன்.

எங்களுக்கும் சொல்லிக்க உறவுக்காரங்க இருக்காங்கன்னு அந்தக் குழந்தைங்க முகத்தில் மலரும் சந்தோஷத்துக்காக எதையும் செய்ய நாங்க தயார்,” அடிமனத்திலிருந்து உரைத்தான்.

இத்தனை நல்லுள்ளம் படைத்தவன் ஓரிரு குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ள மறுப்பது ஏன் என வினவினாள் துளசி.

ரம்யாவுக்கும் அதுதானே புதிராகவே இருந்தது. கணவனையே ஆழமாகப் பார்த்தாள்.

அதற்கும் வசீகரமாய் புன்னகைத்தவன், “எங்க அன்புக்கு அடையாளமா பிறக்குற குழந்தைக்கும், தத்தெடுத்து அன்பு செலுத்துற குழந்தைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு துளசி.

ஓபனா சொல்லணும்னா, அந்த குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடும்போது அதை மனசார அனுபவிப்பேன்னான்னு கூடத் தெரியல,” வண்டாய்க் குடையும் பயம் கண்முன் நிழலாட, அவன் குரலும் சரிந்தது.

அவன் தடுமாற்றத்தை உணர்ந்து என்ன காரணம் என வினவினாள் பூங்கோதை.

“ஏன்னா, பிரிவின் வலியை ஒண்ணுக்கு ரெண்டுமுறை அனுபவிச்சிருக்கேன் பூங்கோதை. அவனோ அவளோ வளர்ந்ததுக்கு அப்புறம், எங்களுக்குள்ள ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு, நீ யாரு என் விஷயத்துல தலையிடன்னு கேட்டா எந்த உரிமையில் பதில் சொல்லமுடியும் சொல்லுங்க,” விரக்தியில் கண்கலங்கினான்.

பூங்கோதைக்குப் புரிந்ததோ இல்லையோ, ரம்யாவிற்கு அவன் மனப்போராட்டம் நன்றாகவே புரிந்தது.

“இவர் எப்பவுமே இப்படித்தான் பூங்கோதை,” கணவனின் தோளில் வருடியவள், இலகுவாய்ப் பேச்சைத் திசைதிருப்ப, அவர்களும் சில நிமிடங்கள் பேசிவிட்டுப் புறப்பட்டனர்.

கதவடைத்து வந்த மனையாளை மடக்கினான்.

“ரம்யா! பிராயச்சித்தம் தேட நான் ஒரு வழி யோசிச்சு வச்சிருக்கேன். இதை நாம ஏற்கனவே யோசிச்சிட்டிருந்த விஷயம்தான்,” என்றவன் திட்டத்தை நினைவூட்ட,

“இதை எப்படி மறந்தேன் ஷ்ரவன்,” பூரித்தவள், அவன் மார்பில் தலைசாய்த்துப் பூரித்தாள்.


தத்தெடுத்துக் கொண்ட குழந்தைகளுடன் வருவார்கள் என ஆவலாகக் காத்திருந்த குடும்பத்தினர், ஷ்ரவனின் முடிவைக் கேட்டு ஏமாற்றத்தில் தோய்ந்தனர்.

அந்த வாரயிறுதியில் நடக்கவிருந்த விரூபாவின் பிறந்தநாள் விழாவில் நற்செய்தியை அறிவிக்கத் திட்டமிட்டிருந்த தருணும் உத்ராவும், இந்த நிலையில் விழாவைக் கொண்டாட வேண்டுமா எனத் தயங்கினர்.

“எங்களை வாய்நிறைய பெப்பா மம்மான்னு கூப்பிட என் செல்லக்குட்டி இருக்கும்போது வேறென்ன வேணும்டா,” குழந்தையைத் தூக்கி நெற்றிமுட்டியவன், விழாவை ஜமாய்க்க வேண்டுமென தம்பிக்கு அன்புக்கட்டளையிட்டான்.

“அதுக்கில்லடா…. அன்னைக்கு வசுமதி கல்யாணத்துல பேசினா மாதிரி…..” தருண் தோழியைத் தயக்கத்துடன் பார்க்க,

“பேசுறவங்க பேசிட்டுத்தான் இருப்பாங்க தருண். எல்லாருக்கும் பதில் சொல்லணும்னு அவசியமில்ல; எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணணும்னு அவசியமில்ல; நாங்க இந்த விஷயத்துல க்ளியரா இருக்கோம்,” தீர்மானக் குரலில் பதிலளித்தாள் ரம்யா.

மனமொத்த தம்பதிகளின் முடிவில் தலையிடாதே என மகனைக் கண்டித்து, அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திலகா.

பிறந்தநாள் விழாவும் செவ்வனே நிகழ்ந்தது.

பிறந்தநாள் பரிசாக, குழந்தைக்குத் தன் சொந்தக் கற்பனையில் பிரத்யேகமாக வடிவமைத்திருந்த ட்ரீ ஹவுஸ் ஒன்றை வீட்டின் பின்புற தோட்டத்தில் கட்டித்தந்து அசத்தினான் ஷ்ரவன்.

வேப்பமரத்துக் காற்று, மரக்கிளைகளில் கூடுக்கட்டி வாழும் குருவிகளின் கீச்சுக்குரல், செயற்கையாகப் பொருத்தப்பட்டிருந்த நீரூற்றின் சலசலப்புச் சப்தம், இரவில் மின்மினி பூச்சிகளின் மினுமினுப்பு, நட்சத்திரங்களின் கீற்றொலி என அவ்விடமே குட்டி அமேசான் மழைக்காடு போலத்தான் காட்சியளித்தது.

நால்வர் தாரளமாகக் குடியிருக்கும் அளவிற்குப் பிரம்மாண்டமான அந்த வீட்டில்தான் பெரியப்பாவும் மகளும் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்தனர்.

இருட்டு, பூச்சி என எதற்கும் அசராத குழந்தை இரவு நேரத்தில் கூட, பெரியப்பா அவளுக்கெனப் பிரத்யேகமாக வடிவமைத்திருந்த கித்தான் படுக்கையில்(ஹேமக்) உறங்கவே விரும்பினாள்.

‘பகல் நேரத்தில் விளையாட மட்டுமே!’ என திலகா திட்டவட்டமாகக் கூறிவிட, பேத்தி அடக்கிவாசித்தாள்.


அன்று ஞாயிற்றுக்கிழமை. பொம்மை புத்தகம் பார்த்து மழலை மொழியில் கதைத்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு மாணவர்களாக மாறி தலையாட்டிக்கொண்டிருந்தனர் அண்ணனும் தம்பியும்.

“விரூகுட்டி! உன் க்ளாஸுக்கு இன்னும் ரெண்டு ஸ்டுடென்ட்ஸ் வந்திருக்காங்க பாரு,” உத்ராவின் அறிவிப்பில், குழந்தையுடன் சேர்ந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர் ஷ்ரவனும் தருணும்.

“ஷர்மிலா! நீயா,” ஷ்ரவன் வாயைப்பிளக்க,

“ஆஸ்திரேலியாலேந்து எப்ப வந்தீங்க,” வினவினான் தருண்.

“வந்தவங்கள உள்ள வான்னு கூப்பிடாம அண்ணனும் தம்பியும் வாசல்ல நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டிருக்கீங்க,” அதட்டிய உத்ரா, இருவரையும் உள்ளே செல்லுமாறு உரைத்தாள்.

“ஒருமாசம் வெகேஷன்ல வந்திருக்கோம்டா. ஃபோன் பண்ணி பேசினா, சர்ப்ரைஸா நேருல வந்தே ஆகணும்னு ரம்யாவும் உத்ராவும் ஆர்டர் போட்டுட்டாங்க,” அறிவித்தபடி உள்ளே நுழைந்தாள் ஷர்மிலா.

மரவீட்டின் வேலைபாடுகளை கண்கள் அகல ஏறிட்ட ரஷீத், அறுநூறு சதுரடியில் பிரம்மாண்டமான மாளிகையே கட்டியிருக்கானே என மெச்சினான்.

“இவ என் லிட்டில் ப்ரின்ஸெஸ் ஆச்சே!” மடியில் அமர்ந்திருந்த குழந்தையைக் கட்டியணைத்து முத்தமிட்டான் ஷ்ரவன்.

காபி ட்ரேவுடன் இணைந்துகொண்ட ரம்யாவைக் கண்டதும், “மம்மா காபி… ச்சி…தோ,” பரபரத்தாள் விரூபா.

குழந்தையின் குறிப்பு உணர்ந்தவளாக ரம்யா மில்க் பிகிஸ் பிஸ்கட்டை காபியில் பட்டும்படாமல் தோய்த்து ஊட்டிவிட,

“இது என்ன காபியை இப்படிச் சப்புக்கொட்டி ருசிக்குறா,” வாயடைத்துப்போனாள் ஷர்மிலா.

“காபி என்ன… மேடம் பால்பாயசம், பால்கோவா, 5ஸ்டார்ன்னு பெரியப்பாவுக்குப் போட்டியா வெளுத்துக்கட்டுவாங்க,” போட்டுக்கொடுத்த உத்ரா, ரம்யாவும் ஷ்ரவனும் அவளுக்கு எந்தளவிற்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கிறார்கள் எனப் பொய்யாகச் சலித்துக்கொண்டாள்.

குழந்தை மேல் உயிராய் இருக்கும் இருவரின் பரிபாஷைகளை எண்ணி நெக்குருகினாள் ஷர்மிலா. தத்தெடுக்க மறுக்கும் ஷ்ரவனின் தயக்கத்தையும் ரம்யா சொல்ல அறிந்திருந்தாள்.

“ஷ்ரவன்! நீ எதிர்பாக்குற மாதிரியே உங்க அன்புக்கு அடையாளமா குழந்தை பெத்துக்க ஒரு வழி உண்டுடா,” மெல்லப் பேச்செடுத்தாள்.

மீண்டுமொரு பேரதிசயம் நிகழப் போகிறாதா என ரம்யா, ஷ்ரவன் இருவரின் விழிகளும் தவிப்பில் துடித்தன.

“எப்படின்னு சொல்லுங்க ஷர்மிலா,” இருப்புக்கொள்ளாமல் வினவினான் தருண்.

ரம்யாவின் முகவாயை ஏந்தியவள், “உனக்கு யூட்ரஸ் எடுக்க வேண்டிய அவசியமிருந்துதே தவிர, ஓவரிஸ்ஸ டச் பண்ண வேண்டியிருக்கல. உங்க ரெண்டு பேருக்கும் ஓகேன்னா, வாடகைத்தாய் மூலமா குழந்தை பெற்றெடுக்க முயற்சி செய்யலாமா,” என்றவள்,

ரம்யாவின் கருமுட்டைகளையும் ஷ்ரவனின் விந்தணுக்களையும் கொண்டு பரிசோதனைக்கூட முறையில் சிசு உருவாக்கி, வாடகைத்தாயின் கருப்பையில் வளர்க்கலாம் என விவரித்தாள்.

“அற்புதமான விஷயம் ஷர்மிலா,” உத்ராவும் தருணும் துள்ளியபோதும், பேச வேண்டியவர்கள் மௌனம் சாதிக்கிறார்களே எனக் கவலைக்கொண்ட ஷர்மிலா,

சமீபத்தில்தான் அதைச் சார்ந்த பிரத்யேக கல்வியை முறையாகக் கற்று தேர்ச்சிப் பெற்றிருப்பதாக நம்பிக்கை ஊட்டினாள்.

இருவருக்குமே அதில் விருப்பமில்லை. அக்கறையுடன் பேசுபவளுக்குப் பக்குவமாகப் பதிலளிக்க வேண்டுமே என ரம்யா மனத்தில் அசைபோட,

“பேசாம நீயே வாடகைத்தாயா இருந்து எங்களுக்குக் குழந்தை பெத்துக்கொடுத்துடேன் ஷர்மிலா,” ஷ்ரவன் கேட்க, பெண்கள் மூவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.

“ஷ்ரவன்! இது என்ன அசட்டுத்தனமான பேச்சு?” கண்டித்தாள் ரம்யா.

“இல்லம்மா,” என மனையாளின் தோளினை மிருதுவாக அரவணைத்துக்கொண்டவன்,

“குழந்தை வளர்ந்ததும், உனக்கு ஜெனிடிக்கலி 23 க்ரோமோஸோம்ஸ் தந்து வளர்த்துட்டு வர ரம்யா அம்மா, என் மனைவி; உன்னைக் கருவில் சுமந்த ஷர்மிலா அம்மா என் முன்னாள் காதலின்னு சைன்ஸ் பாடம் எடுக்க வசதியா இருக்கும்ல. அதான் சொல்றேன்,” விளக்கம் தரவும், அவனும் தன்னைப் போலத்தான் எண்ணுகிறான் எனப் பெருமூச்சுவிட்டாள் ரம்யா.

அவன் அப்படி அப்பட்டமாக விளக்கிய பின்தான் தருணுக்கும் உத்ராவுக்கும் அதில் வாய்விட்டுச் சொல்லமுடியாத எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என உரைத்தது.

“உங்க ரெண்டுபேரு மேல இருக்குற அக்கறையில்தானே சொன்னேன். பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்ல வேண்டியதுதானேடா,” பொங்கிய ஷர்மிலா புறப்படுகிறேன் என எழுந்துகொள்ள, அவள் கரம் பிடித்துத் தடுத்தான் ரஷீத்.

“அவர் உன்னை அக்கறை எடுத்தக்கூடாதுன்னு சொல்லவே இல்ல ஷர்மி. டாக்டர் ஷர்மிலாவா யோசிக்காம ஃப்ரெண்ட் ஷர்மிலாவா அக்கறைக் காட்டச் சொல்றாரு,” என்றான்.

தன் எண்ணத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட ரஷீதுக்கு நன்றிகளை உரைத்தான் ஷ்ரவன்.

அப்போதும் பேதை உம்மென்று முகத்தைத் தொங்கப்போட, ஷ்ரவனே அவளிடம் நிதானமாகப் பேசினான்.

“மெடிசன்ல ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை நானும் மதிக்கிறேன் ஷர்மிலா,” என்றவன், அதையும் தாண்டி, இல்லறத்தின் புனிதத்தையும், இறைவன் எழுதியிருக்கும் தலைவிதி மேலும் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறேன் எனத் தன்மையாக விளக்கினான்.

“இதெல்லாம் எங்க கர்மவினைன்னு பக்குவப்பட்டு, பிராயச்சித்தம் தேட ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கோம் ஷர்மிலா. இன்னும் யார்கிட்டயும் சொல்லல,” என்ற ரம்யாவை அனைவருமே வியப்பாய் பார்த்தனர்.

“கன்சீவ் ஆனதும், வேலைக்குப் போக மனசில்லன்னு ஷ்ரவன்கிட்ட குறைபட்டுட்டு இருந்தேன். அப்போதான் ஷ்ரவன், மான்டசரி ஸ்கூலுக்கான பிராஜக்ட் பண்ணிட்டு இருந்தாரு. ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மான்டசரி ஸ்கூல்ல நாமளே ஸ்டார்ட் பண்ணலாமான்னு கேட்டாரு.

பாடம் சொல்லித் தர பிடிக்கும். அதை எந்த வயசு பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்தால் என்னன்னு உடனே ஓகே சொன்னேன்.

ஆனால் பெங்களூர்ல அந்த ஆர்ஃபனேஜ் ஸ்டாஃபோட பேசினதுல, பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்றுத்தர ரெகுலர் ஸ்கூல் கட்டினால் இன்னும் பெட்டரா இருக்கும்னு தோணித்து. எங்களுக்கும் குழந்தைகளோட பழகினா மாதிரி இருக்கும். பொருளாதார குறைபாட்டால் தரமான கல்வி கிடைக்காம கஷ்டப்படுற குழந்தைகளுக்கு உதவினா மாதிரியும் இருக்கும்,” ரம்யா விளக்கவும், நால்வரும் பூரித்தனர்.

“யூ போத் ஆர் ரியலி ட்ருலி மேட் ஃபார் ஈச் அதர்,” ரஷீத் மனமுவந்து பாராட்ட,

“உங்க புண்ணியக் கணக்குல எங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுங்க,” என்ற ஷர்மிலா, வெற்றுக் காசோலை ஒன்றில் கையெழுத்து இட்டு,

“ஷ்காலர்ஷிப் அடிப்படையில் உங்க ஸ்கூல்ல சேர்க்கப் போகும் முதல் குழந்தைக்கான செலவுகள் அத்தனையும் எங்களைச் சேரும்,” என்றாள்.

“ஹேய்! ஸ்கூல் கட்ட இன்னும் லேண்ட் கூடப் பார்க்க ஆரம்பிக்கல. லேண்ட் கிடைச்சு, பிள்டிங் எழுப்பி, ஸ்டாஃப் ரெக்ரூட் பண்ணின்னு குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஆகும்,” மென்னகையுடன் மறுத்தான் ஷ்ரவன்.

“அதனாலதான் பிளாங்க் செக் தந்திருக்கேன். சாக்குச் சொல்லாம வாங்கிக்க,” என அவன் கையில் திணித்தாள்.

ஷ்ரவன் சொன்ன பணித்திட்டத்தை மனத்தில் கணக்கிட்டுக் கொண்டிருந்த உத்ரா, “சபாஷ் அண்ணா! உங்க ஸ்கூல் ரெடியாகுறதுக்கும் விரூகுட்டி எல்.கே.ஜில சேரறுதுக்கும் சரியா இருக்கும்,” குஷியாகி,

“அப்பாடா! நாம அட்மீஷனுக்காக ஸ்கூல் ஸ்கூலா அலைய வேண்டாம்டா,” என தருணின் தோளில் அடித்துக் கிளுகிளுத்தாள்.

“புருஷனையே பக்கத்துல சேர்க்க மாட்டா. உன் பொண்ணுக்கு அட்மீஷன் தந்துடவாளா,” தோழியைச் சீண்டினான் தருண்.

“பால்கோவாவுக்குத் தான் தடா! இந்த மல்கோவாவுக்கு எப்பவுமே இடம் உண்டு,” என மடியில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் ரம்யா.


மறுநாளே தெளிவான பணித்திட்டத்துடன் இருவரின் பெற்றோரிடமும் நற்செய்தியைப் பகிர்ந்தான் ஷ்ரவன்.

பள்ளி கட்டுவதற்கு அங்கீகாரம் பெற, தோதான நிலம் பார்க்க, முதலீடு திரட்ட, என அனைத்திற்கும் தாங்களே இறங்கி வேலை செய்வதாக உற்சாகம் பொங்க உரைத்து வாழ்த்தினர் தாமோதரனும் ரவிச்சந்திரனும்.

“உங்க பேத்தி ஸ்கூலுக்குப் போக அழவே மாட்டாப்பா,” தன் திட்டத்தை விவரித்து துள்ளினாள் உத்ரா.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த சாருலதா, “உன் அப்பாவும் ரம்யா மிஸ் வந்ததுக்கு அப்புறம்தான் அழாம காலேஜுக்குப் போனான் தெரியுமா விரூகுட்டி,” என்றவர்,

தருணைச் சிறுபிள்ளையாய் பாவித்து மகள் விரட்டி விரட்டிப் பாடம் கற்றுத்தந்த அந்தநாள் நினைவுகளைக் கூற, நண்பர்கள் இருவரும் அழகாய் அசடுவழிந்தனர்.

மகள் அருகில் நடந்தவர், “அம்மாவுக்கும் ஆசானுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல ரம்யா. உங்க மனசுக்குப் பிடிச்சத செய்ங்க,” என மனதார வாழ்த்தினார்.

பேரன் பேத்தியைக் கையில் ஏந்தும் நாளுக்காகத் தவம் கிடந்தவர் இத்தனை மனப்பக்குவத்துடன் பேசுவார் என எதிர்பார்க்காத தம்பதிகள் நெக்குருகி நின்றனர்.

வெகுநேரமாக, பார்வையாளராக மட்டுமே இருக்கும் அன்னையின் அருகில் நடந்தான் ஷ்ரவன்.

“அம்மா! நாங்க எடுத்திருக்க முடிவில் உனக்கு சந்தோஷமா?” தன்மையாக வினவினான்.

மருமகளையும் பக்கத்தில் இழுத்துக்கொண்டவர், “கட்டிடக்கலை உன் உயிர் மூச்சு; கல்வி ரம்யாவோட உயிர் மூச்சு. உங்க உழைப்பில் உருவாகப் போகும் இந்தப் பள்ளிக்கூடமும் ஒரு விதத்துல உங்க பெயர் சொல்லப்போகும் பிள்ளைதான்டா. என் பேரப்பிள்ளைக்கு என்ன பேரு செலக்ட் பண்ணி வச்சிருக்கீங்க,” என இருவரின் கன்னங்களையும் மென்மையாக வருடி புன்னகைத்தார் திலகா.

‘பள்ளிக்கூடத்தின் பெயரா?’ யோசித்தவன் ரம்யாவை ஏறிட்டான். உதடு பிரிக்காத புன்னகையுடன் நண்பனை ஏறிட்டாள் அவள்.

தான் அன்று தேர்ந்தெடுத்த ‘வி’ல் தொடங்கும் பெயர்களில் ஒன்றை கேட்டுத் தூதுவிடும் அவள் விழிகளின் மொழிகளை உள்வாங்கியவன்,

“வைஷ்ணவி வித்யாஷ்ரம்!” எனக் கண்சிமிட்டினான்.

தாரியம் ஒன்றே தீர்வு என்று தெளிய,
யாமல் ஒழியாமல் பரிகாரம் தேடி அலைந்தோம்;
ருமித்த மனத்துடன் கண்டறிந்தோம் வழிபாதையை!
யம் ஏன் எனத் தட்டிக்கொடுத்தனர் தந்தைமார்கள்!
கபோகமாய் வாழ்த்தினர் அன்னைமார்கள்!
ட்டாக்கனி என ஏதும் உண்டோ உங்களுக்கு,
க்கமளித்தாள் உடன்பிறவா சகோதரி அவள்!
ற்றதோழன் அவன் கடைக்கண் மொழிகளில் – கனவுகளை
டேற்ற நான் இருக்கிறேன் எனச் சொல்லாமல் சொன்னான்!
ன்னல்களும் இடர்பாடுகளும் என்ன செய்துவிடும்,
ணிவேராய் தாங்கிப் பிடிக்க உறவுகள் இருக்க! – விடை கண்டோம்
ன்பு வாழும் கூடே! நிழலாடும் நின் நினைவில்….

பின்குறிப்பு:

இங்கு கெஸ்ட் அப்பியரன்ஸ் தரும் பூங்கோதை, சுகந்தி, மற்றும் துளசி, என் மற்றொரு நாவலான “கோதையின் பிரேமை’ கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். அவர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தக் கதையில் ரம்யாவும் ஷ்ரவனும் கெஸ்ட் அப்பியரன்ஸ் தருவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!