சின்னஞ் சிறு பூவே 21.1
பூவே 21.1
‘தான் காண்பது உண்மைதானா… இல்லை கனவா?’ என்ற குழப்பத்துடன் இதுவரை தள்ளி நின்றிருந்த மயிலம்மா, மெல்ல அவளருகே வரவும்.
Advertisement
வேல்விழியின் முகத்தில் தெரிந்த சோர்வையும், உடலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தையும் கண்டவர், மெதுவாக பார்வை கீழே இறங்கியது,
Advertisement
அந்த ஒரு நொடி, ‘பேத்தியின் முதல் பருவம். சொல்லாமல் சொல்லி சென்றது’. என்ற உண்மையை கண்டவருக்கு..
Advertisement
இதுவரை நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த கவலை, காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்து போனது.
Advertisement
அளவில்லா நிம்மதியும் சந்தோஷமும் கண்ணீராகக் கண்களில் பெருகு, தன் முந்தானையில் கண்களை துடைத்துக்கொண்டு மெல்ல அறையை விட்டு வெளியே வர,
வெளியே காளியம்மா பதற்றத்துடன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருக்க.
ராமைய்யா பேச முடியாததால், பார்வையாலேயே மனைவியை முறைத்துக் கொண்டிருந்தார்.
அவர்களுடன் சரசுவும் அமைதியாக நின்றிருக்க,
மூவரையும் பார்த்த மயிலம்மா, தொண்டையைச் செருமிக் கொண்டு,
“வேலு… வயசுக்கு வந்துட்டா…” என்றார்.
அந்த ஒரு வார்த்தையில் ராமைய்யாவின் முகம் புன்னகைக்க.
சரசுவின் முகத்தில் அதிருப்தி படர்ந்தது.
காளியம்மாவோ சிலையாக நின்றுவிட்டார்.
நேற்று இரவு மகன் நடந்துகொண்ட விதமே இன்னும் அவரது மனதை எரித்துக் கொண்டிருந்தது.
அதற்குள் வேல்விழி வயதுக்கு வந்துவிட்டாள் என்ற செய்தி, அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல், அவரது உள்ளம் கோபத்தில் கொதித்தது.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத மயிலம்மா,
“அடுத்து என்ன பண்ணலாம்யா?” என்று மகனைப் பார்த்துக் கேட்க.
ராமைய்யா சைகையால், “உங்க விருப்பம் ம்மா…” என்றார்.
அதைப் பார்த்த காளியம்மாவின் பொறுமை எல்லையை கடந்தது..
“எது உங்க விருப்பம்? இந்த வூட்டுல நானும் ஒருத்தி இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் மறந்து போச்சா..?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
“என்னடி கேக்கச் சொல்லுற? எம்பேத்திக்கு சடங்கு செய்யணும்னு பேசுறோம். அதுல என்ன தப்பு?” என்று மயிலம்மாவும் பதில் கொடுத்தார்.
“தப்பு தான்.. எல்லாமே தப்பு தான் அத்தை, மொதல்ல அவ ஆத்தாளை வளர்த்து ஆளாக்கின பாவத்துக்கு தான்.. என் பொண்ணு தள்ளி இருக்கா, இப்ப இவளை ஆளாக்கி காலத்துக்கும் என் தலையில தீரா சுமையா இருக்க நா விரும்பல,” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் காளியம்மா.
“எது! உன் தலையில ஒக்காந்தால எம்பேத்தி,” என்றவர்..
மருமகளின் முகத்தைத் திருப்பி, “நல்லா கேட்டுக்க எம்பேத்திக்கு சடங்கு செய்ய சொல்லி உங்கிட்ட சொல்லல,” என்றார் மயிலம்மாவும் கோவமாக,
“நீங்க செய்ய சொல்லி சொன்னாலும், நான் செய்ய மாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் எந்தத் தைரியத்துல அவளுக்குச் சடங்கு பத்தி பேசுறீங்க?” என்று காளியம்மா கடுமையாகக் கேட்டார்.
அந்த வார்த்தையைக் கேட்ட சரசுவைத் தவிர, மற்ற இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ராமைய்யா கோபமாக மனைவியை நோக்கி முன்னேறினார்.
“ஏய்யா… இரு. முதல்ல அவ என்ன சொல்லுறான்னு கேப்போம்…” என்று மகனின் கையைப் பிடித்து தடுத்தார் மயிலம்மா.
“நான் சொல்லுறது ஒண்ணுதான் அத்தை.
அவளுக்கு இந்த வீட்டுல எந்த விசேஷமும் நடக்க நான் விடமாட்டேன்.
அவளுக்குன்னு ஆத்தா இருக்கா இல்லையா? அவக்கிட்ட போய் என்ன வேணும்னாலும் நடத்திக்கோங்க.
இது என் வீடு.
என்னை மீறி அவளுக்கு விசேஷம் செய்யணும்னு நினைச்சீங்கன்னா…
என் பொணத்தைத்தான் பார்ப்பீங்க!” என்று ஆவேசமாகக் கூறினார்.
மருமகளிடம் இருந்து இப்படிப்பட்ட எதிர்ப்பை மயிலம்மா எதிர்பார்க்கவே இல்லை.
ஏதாவது சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவாள் என்று நினைத்திருந்தவர், காளியம்மாவின் வார்த்தைகளில் ஒரு கணம் திகைத்துப் போனார்.
ராமைய்யாவும் மனைவியின் இந்த முகத்தை முதன்முறையாகப் பார்ப்பது போல உறைந்து நின்றார்.
சரசு மட்டும், ‘அப்படிப் போடும்மா… இவளுக்கு என் பொண்ணுங்களுக்கு சமமா விழா நடத்துவாங்களா?’ என்று உள்ளுக்குள் திருப்தியடைந்தாள்.
வெளியே நடந்த ஒவ்வொரு பேச்சும், உள்ளே இருந்த வேல்விழியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
உடல் சோர்வில் தட்டுத்தடுமாறி எழுந்து கதவருகே வந்து நின்றாள். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அமைதியாகக் கேட்டவளின் நெஞ்சில் அது ஈட்டியாகப் பாய்ந்தது.
தன்னைப் பற்றிய பேச்சே இந்த அளவுக்கு சண்டையாக மாறியிருப்பதை உணர்ந்தவளின் மனம் தாங்காமல்,
மெல்ல கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அதிர்ச்சியில் நின்ற மயிலம்மாவின் கைகளைப் பிடித்து,
“பாட்டி…”
“என்னத்தா” என்று பேத்தியின் முகத்தை கைகளில் தாங்கிக் கேட்க,
“எனக்கு எதுவும் செய்ய வேணாம் பாட்டி, ஏற்கனவே எனக்காக சின்ன விஷயம் செய்யணும்னாலே எவ்வளவு போராட வேண்டியதா இருக்கு…
இந்த வீட்டுல நான் வேண்டாதவளாதான் இருக்கேன்…
எனக்காக இனிமேலும் யாரும் சண்டை போட வேண்டாம் பாட்டி…” என்றாள்.
வேல்விழியின் வார்த்தைகளைக் கேட்ட மயிலம்மாவின் நெஞ்சில் ஊசி குத்தியது.
நெஞ்சில் கை வைத்து நீவி விட்டவர், கலங்கிய கண்களுடன்,
“ஏந்தா… இப்படி ஒரு வார்த்தை சொல்லிப்புட்ட…” என்றார் உடைந்த குரலில்.
“பாட்டி…” என்று அவரது கைகளை இறுகப் பிடித்தாள் வேல்விழி. அவளின் கண்களும் கண்ணீரால் நிரம்பின.
அந்த நேரத்தில்,
“என்ன காலையிலேயே அழுகை சத்தமா இருக்கு?” என்றபடி வெற்றி உள்ளே வந்தான்.
வீட்டில் நிலவிய பதற்றமான சூழலைக் கண்டவன், அங்கிருந்த அனைவரையும் மாறிமாறிப் பார்த்தான்.
“என்ன அப்பத்தா ஆச்சு? முகம் ஏன் இப்படி இருக்கு?” என்று மயிலம்மாவைப் பார்த்து கேட்க,
அவரும் பேரனை கண்ட நிம்மதியில் இதுவரை நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தார்.
அதைக் கேட்ட வெற்றியின் பார்வை மெதுவாகத் தன் அன்னை மீது திரும்பியது.
“எதுக்கும்மா அப்படி பேசுனீங்க?” என்று அமைதியாகக் கேட்டான்.
“நான் என்ன தப்பா பேசிட்டேன்?” என்று காளியம்மா அலட்சியமாகச் சொன்னாள்.
“தப்புதான் ம்மா… நேத்து ராத்திரியிலிருந்து அவ என்ன மனநிலையில இருக்கான்னு உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இப்ப அவ இருக்குற நிலைமையையும் நீங்க பார்த்துக்கிட்டிருக்கீங்க. அடுத்தது அவளுக்கு என்னன்னு பாக்குறதை விட்டுட்டு காலையிலேயே பிரச்சினை பண்ணுறீங்க,” என்றான்.
அவன் சத்தம் போட்டு பேசவில்லை. ஆனா குரலில் இருந்த அழுத்தம் காளியம்மாவுக்கு ஒரு நொடி திக்கென்ற நிலையை கொடுத்தது.
இருந்தும் தன் நிலையிலிருந்து மாறாமல்,
“நா என்ன இல்லாததை சொல்லிட்டேன்னு ஆளாளுக்கு என்னை நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்க,” என்றாள்.
“இப்ப கூட நீங்க என்ன பண்ணுறீங்கன்னு தெரியலம்மா,” என்று சொல்லும் போதே அவன் குரல் உடைந்தது.
அங்கிருந்த அனைவருக்கும் அவன் குரல் மாற்றம் தெரிந்தது.
அவன் அன்னைக்கு மட்டும் அது புரிந்தாலும், வீம்புக்கு நிற்பவரை என்ன செய்தாலும் மாற்ற முடியாது.
“இங்க பாருய்யா, நா சொன்னது சொன்னதுதான். அவளுக்காக பேசிட்டு யாரும் என்கிட்ட வராதிங்க,” என்று வாசலை கடக்க பார்த்தாள்.
“ஊரை கூட்டி விசேஷம் தானே பண்ணக்கூடாது… வீட்டோட முடிக்கக்கூடாதாம்மா?” என்ற வெற்றியின் வார்த்தை அவள் காதில் மோதி நின்றது.
மகன் சொன்னதை கேட்ட காளியம்மாவுக்கு இதுவரை அடக்கி வைத்த கோபம் தலைக்கேறியது.
“என்னைய்யா சொன்ன, அவளுக்கு விசேஷத்தை வீட்டோட முடிக்குறளவுக்க உனக்கு தைரியம் இருக்கா?” என்றாள்.
“இதுக்கு தைரியம் தேவையில்லை ம்மா. அவளும் இந்த வீட்டுல பொறந்த பொண்ணு. அவளுக்கு இவங்க பக்கம் தான் வாழ்க்கைன்னு வரமா வரலம்மா,” என்றான்.
“இப்ப என்னதான் சொல்ல வர நீ?” என்றாள்.
“அவளுக்கு புட்டு சுத்த வேணாம். இப்ப அவளோட தேவை என்னன்னு பண்ணுங்கம்மா,” என்றான்.
அவன் குரலில் இருந்த மாற்றம் மற்றவர்களுக்கு புரியவில்லை. ஆனா மகனை மட்டும் பார்த்திருந்த காளியம்மாவுக்கு அவன் உள்ளுக்குள்ள இருக்குற வேதனை புரிந்தது.
“இங்க பாருய்யா, நா சொன்னது சொன்னதுதான்,” என்று மீண்டும் சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி நடந்தாள்.
வாசலில் சலசலப்பு சத்தம் கேட்க, வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே வந்தனர்.
காளியம்மா முதலில் வெளியே வந்தாள்.
“என்னாச்சு? எல்லாரும் காலையிலேயே என் வூட்டு வாசலுக்கு வந்திருக்கிங்க?” என்றாள்.
“உனக்கு என்னத்தா ஆச்சு? பொழுது விடிஞ்சும் வாசல் தெளிக்காம இருக்கீங்க. வீட்டுல யாருக்கோ முடியல போலன்னு நாங்க ஓடி வந்தா, நீ எங்களையே கேள்வி கேக்குற?” என்றார் சரளா.
“அது… அது…” என காளியம்மா தயங்கி நின்றாள்.
பேத்தியை உள்ளே இருக்க சொல்லி மெல்ல நடந்து வந்த மயிலம்மா,
“வாங்கத்தா… உங்களுக்கே சேதி சொல்ல இருந்தோம், நீங்களே வந்துட்டிங்க,” என்றார்.
“அப்படி என்ன சேதி சொல்ல போறீங்க அம்மாச்சு?” என்று வைதேகி கேட்டாள்.
“வேலு பெரியமனிஷி ஆகிட்டா… தண்ணீ ஊத்த மாமன் பொண்டாட்டி நீங்க தானே வரணும்,” என்று சொன்னார் மயிலம்மா.
“அட சந்தோஷமான சேதி தான்…” என்றார் சரளா.
“ஆமாத்தா… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வாங்க,” என்று அனுப்பி வைத்தார் மயிலம்மா.
மொத்த ஊருக்கும் வேல்விழி வயசுக்கு வந்த செய்தி பரவியது..
உள்ளே தனித்து நின்ற வெற்றியும் வேல்விழியும்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வேல்விழி, நேற்றைய நாளின் முடிவையும் இன்றைய நாளின் ஆரம்பத்தையும் ரொம்பவே வெறுத்தாள்.
வெற்றியின் பார்வை முழுவதும் அவளிடமே இருந்தது.
