Skip to content
Post Views: 139
அத்தியாயம் – 15 -1
இந்த வருடத்திலிருந்து எழிலன் முதல் வருட மாணவர்களுக்குப் பாடங்கள் எடுக்க ஆரம்பித்தான். அப்போதுதான் மாணவப் பருவத்திலிருந்து வந்திருப்பதால், மாணவர்களோடு எளிதாகக் கலந்தான். அதுவே அவனுக்கு வேறு சிலப் பிரச்சினைகளுக்கும் வழி வகுத்தது. அனுபவம் இல்லாததால், எழிலன் அதில் சிக்கிக் கொண்டான்.
நிலா தனது இரண்டாம் வருடத்தில் இருக்க, எப்போதும் போல படிப்பு, நடனம் எனத் தன் நேரத்தை செலவிட்டாள். நிலவன் கூடவே இல்லாததால், கொஞ்சம் தோழிகளோடு வெளியே கூட சென்று வர ஆரம்பித்திருந்தாள் நிலா. அப்போதும் அண்ணன் அனுமதி பெற்றுத் தான் சென்றாள். அவளுக்கு த் தேவையானவற்றை மாதம் ஒருமுறை நிலவன் வந்து வாங்கிக் கொடுத்து விட்டுத் தான் செல்கிறான். என்றாலும், அவளுக்கும் ஹாஸ்டலில் மட்டுமே இருக்கச் சலிப்பாக இருக்கும் என்பதால் தோழிகளோடு வெளியே சென்று வரத் தொடங்கியிருந்தாள்.
எழிலன் தற்போது ஆசிரியப் பொறுப்பில் இருப்பதால், மாணவர்கள் யாருக்கும் தனிப்பட மெசேஜ் செய்வது கிடையாது. பாட சம்பந்தமான குழுக்களில் மட்டுமே இருக்கிறான். அதைத் தவிர அவனின் நண்பர்கள் தனி குழுவில் இணைந்துள்ளனர்.
Advertisement
இந்த வருட புதிய மாணவர்கள் கொஞ்சம் அடாவடித்தனம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களைக் கண்டித்தால் கேட்பதில்லை. சற்று மென்மையாகப் பேசினால், பாதியாவது கேட்கிறார்கள். இதைப் பழைய பேராசிரியர்களால் கையாள முடியவில்லை. எனவே பாடம் மட்டும் நடத்திவிட்டு மற்ற விஷயங்களுக்கு எழிலனைக் கை காட்டி விடுகின்றனர்.
நிலாவிற்கு வந்தனா என்னும் முதல் வருட மாணவியைக் கைட் செய்யுமாறு மென்டார் பணியிட்டனர். நிலாவும் ஹாய் நான் நிலவழகி என மெசேஜ் அனுப்ப, அந்த பெண் ஓகே என மட்டும் சொன்னாள்.
நிலவழகி என்ற பெயர் பார்த்ததும் யாரோ பட்டிக்காடு என நினைத்துக் கொண்டாள் வந்தனா.
Advertisement
பிரேஷர்ஸ் டே பற்றி சர்க்குலர் வர, வந்தனா தன்னுடைய சந்தேகங்களை எழிலனிடம் கேட்டுக் கொண்டாள். எழிலனும் எல்லாமே சொல்லிக் கொடுத்தான்.
Advertisement
பிரேஷர்ஸ் டே அன்று நிலா என்ன பாடல் ஆடப் போகிறாளோ என எழிலன் ஆர்வமாகக் காத்திருந்தான். அதே நேரம் எழிலனின் பாடலுக்காக நிலா காத்திருந்தாள்.
பிரேஷர்ஸ் டே அன்று வெல்கம் டான்ஸ் பை நிலவழகி என தொகுப்பாளர் அறிவிக்க, எழிலன் மேடை அருகே நின்று கொண்டான்.
கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த வந்தனா “யாருடா அந்த உலகழகி” எனப் பேச, அருகில் இருந்தவர்கள் முகம் சுழித்தனர். எழிலனுக்கும் அது கேட்டது.
Advertisement
நிலா மேடையேறவும், எல்லோரும் அசந்து விட்டனர். இத்தனைக்கும் சாதாரண காட்டன் சுடிதார் தான். அதன் நேர்த்தியும், நிலாவிற்கு பொருந்தியதும் பார்த்து நிச்சயம் உலக அழகி தான் என ஜூனியர் மாணவர்கள் நினைத்தனர். வந்தனாவின் முகம் விழுந்து விட்டது.
நிலா “ஒரு பொன் மானை நான் காண” பாடலுக்கு நடனமாட ஆரம்பிக்க, எழிலன் ரசித்து நின்று விட்டான். ‘பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது” வரிகளில் எழிலனின் மனம் முழுதும் நிலாவின் மணம் தான்.
நிலாவின் நடனம் முடியவும் வழக்கம்போல ஒரு நிமிடம் கைத்தட்டல் தொடர்ந்தது.
அடுத்து எழிலனின் பாடல் அறிவுப்பு வர, இந்த முறை ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ பாடலைப் பாடினான் எழிலன். ‘வழி முழுதும் வனப்பு எனக்கழகைப்பு” எனப் பாட கீழே ஒரு கும்பல் அந்தப் பாடலில் வரும் ஸ்டெப்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். எழிலனுக்கும் அதே கைத்தட்டல் தான்.
அடுத்து புதிய மாணவர்களின் திறமைகள் வெளிவர, நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் எல்லோரும் நட்புணர்வுடன் கலைந்தனர்.
அன்று இரவு எழிலன் ‘மனம் எங்கும் மணம் வீசுது’ சரணத்தை மட்டும் பாடி நிலாவிற்கு அனுப்பி வைத்தான்.
நிலாவோ பூக்களின் படத்தை அனுப்பி வைத்தாள். அன்றைக்கு அவன் பாடியது பூ என முடியும் பாடலை நினைவுப்படுத்தியது.
அடுத்த நாள், எழிலன் தன் வகுப்பிற்கு சென்ற போது, வந்தனா “சர், நான் என்னோட மென்டார் மேலே கம்ப்ளைண்ட் பண்ணனும்” என்றாள்.
எழிலன் யோசனையோடு நிற்க, மற்ற மாணவர்கள் திகைத்துப் பார்த்தனர். கல்லூரி சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சீனியர்ஸ் மேல் கம்ப்ளைண்ட் கொடுப்பது சரியா என யோசித்தனர். இந்தப் பெண்ணிற்கு அறிவு வேலை செய்கிறதா எனச் சந்தேகத்துடன் பார்த்தனர்.
எழிலன் சுதாரித்து “உன் மென்டார் யாருமா?” எனக் கேட்டான்.
“அதான் நேத்திக்கு டான்ஸ் ஆடினாங்களே நிலவழகி. அவங்க தான்”
“ஓ.” என்றவன் “அவங்க மேலே என்ன கம்ப்ளைண்ட்?”
“சர், அவங்களை மென்டாரா எனக்குப் போட்டதுக்குக் காரணமே என்னை கைட் பண்ணத் தானே?”
“ஆமாம்”
“ஆனால் அவங்க இந்த பிரேஷர்ஸ் டே பற்றி எதுவுமே சொல்லலை சர். சொல்லியிருந்தா நானும் என்னோட பெர்ஃபார்மன்ஸ் செய்திருப்பேனே” என்றாள் வந்தனா.
“நீங்க கேட்டீங்களா?”
“எனக்கு எப்படித் தெரியும்? நான் ஏதோ சும்மா இன்ட்ரோ கொடுக்கப் போறாங்கனு நினைச்சேன்” என்றாள் வந்தனா.
“ஆனால் என்கிட்டே நீங்க கேட்ட போது நான் டீடெயில்ஸ் சொன்னேனே”
“ஆமாம் சர். பட் நீங்க என்னை எங்கரேஜ் செய்யத் தான் சொன்னீங்கனு நினைச்சேன். இவ்ளோ தூரம் ஈவண்ட் இருக்கும்னா, நான் அதை மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்” என்றாள் வந்தனா.
“ஓகே. இப்போ என்ன செய்யணும் உங்களுக்கு?”
“அவங்களைக் கூப்பிட்டுக் கேளுங்க சர்” என்றாள் வந்தனா.
எழிலனுக்கு இந்தப் பெண் செய்வது ஓவராகத் தான் தோன்றியது. ஆனால் புரொஃபசர் பதவி ஏற்ற பின் நிலாவைச் சாதாரணமாகச் சந்திக்க முடியவில்லை. அத்தோடு இந்தப் பெண்ணால் நிலாவிற்கும் பிரச்சினை வேண்டாம் என நினைத்தான்.
“பிரேக்லே ஸ்டாஃப் ரூமி வந்து என்னைப் பாருங்க” என வந்தனாவிடம் கூறிவிட்டு தனது வகுப்பைத் தொடர்ந்தான் எழிலன்.
நிலாவை எழிலன் சர் அழைக்கிறார் என ஒரு மாணவன் வந்து கூறவும், அவளுக்கு லேசாகப் பதட்டம் வந்தது. இதுவரை சீனியர் என்ற முறையில் பழகி வந்தவளுக்கு, புரொஃபசராக அவனிடத்தில் நேரடியாகப் பேசுவது இதுதான் முதல் முறை.
சிறு படபடப்புடன் உள்ளே வந்தவளுக்கு, அங்கே வேறு ஒரு பெண்ணும் இருக்க லேசாகப் புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
பின் “சர், நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க?” எனக் கேட்டாள் நிலா.
எழிலனுக்கும் லேசான படபடப்பு தான். இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் “நீங்க மைண்ட் பண்ணற ஜூனியர் யாருனு உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.
இது எதற்கு இவர் கேட்கிறார் என எண்ணியவளாக “பேர் வந்தனானு சொன்னாங்க. நானும் அவங்களுக்கு என்னை இன்ட்ரோ பண்ணி மெசேஜ் போட்டேன். பட் நேரில் மீட் பண்ணியதில்லை” என்றாள் நிலா.
அப்போது “பாருங்க சர். அவங்க என்னை மீட் பண்ணவே இல்லைனு சொல்றாங்க. அப்போ எனக்கு எப்படி சரியா கைட் பண்ணுவாங்க?” என்றாள் வந்தனா.
நிலா அவளை ஏற இறங்கப் பார்த்தாள். பின் “உனக்கு வேணும்னா, நீதான் வந்து பேசணும். நான் எதுக்காக உன்னைத் தேடி வரணும்?” என்றாள்.
எழிலனும் என்னடா இந்த பொண்ணு இப்படிப் பேசுது என வந்தனாவை நினைத்தான். அவனும் “எஸ். அவங்க சொல்றது கரெக்ட். உங்களுக்கு என்ன விஷயத்தில் ஹெல்ப் வேணும்ணு அவங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்.
வந்தனவோ “சர், இந்த காலேஜ் ஸ்பெஷாலிடியே இந்த மாதிரி கைட் பண்ணறது தான் அப்படினு வெளியில் பேசிக்கறாங்க. அதைக் கூட ஒழுங்கா செய்யாத சீனியருக்கு சப்போர்ட் பண்ணறீங்க. நான் இதை மேனேஜ்மெண்ட்டுக்கு கம்ப்ளைண்ட் பண்ணப் போறேன்” என்றாள்.
நிலா “ஹலோ, இப்போ உனக்கு என்ன கைட் பண்ணலை நான். நீ கேட்டா தான் சொல்ல முடியும். எங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கு” எனப் பேச, எழிலன் ஆவெனப் பார்த்தான். இப்படி நிலாவை அவன் பார்த்ததே இல்லை. நிலவன் இருக்கும் தைரியமோ அல்லது தேவைப்படலையோ, நிலா குரல் உயர்த்த வேண்டிய அவசியமே இதுவரை வந்ததில்லை.
வந்தனா இன்னும் பிடிவாதமாக ஏதோ சொல்ல வர, எழிலன் அவளின் ஆட்டிட்யூட் புரிந்து கொண்டு விட்டான். வீண் பிரச்சினைகள் வேண்டாம் என நினைத்து “நிலவழகி, வந்தனாவிற்கு இன்னும் காலேஜ் பழகலை தானே. நீங்க கொஞ்சம் கைட் பண்ணுங்க” என்றான்.
“எதுக்கு கைட் பண்ணனும்னு தெளிவா சொல்லுங்க சர்” என எரிச்சலுடன் நிலா கூறினாள்.
“நேற்றுப் போல எதுவும் ஈவண்ட் என்றால் ஃபர்ஸ்ட் இயர் ரோல் என்ன, யாரை காண்டாக்ட் பண்ணனும்னு இந்த டீடெயில் எல்லாம் தெளிவா சொல்லிக் கொடுங்க” என்றான் எழிலன்.
நிலா “ஓகே சர்” எனக் கூறிவிட்டு “வேறே எதுவும் இருக்கா சர்” எனக் கேட்டாள். அவள் குரலிலேயே கோபம் தெரிந்தது.
எழிலன் பெருமூச்சுடன் இல்லை எனத் தலையசைத்தான். நிலா “நான் வரேன் சர்” எனக் கூறிவிட்டு நடந்தாள்.
எழிலன் வந்தனாவிடம் “வந்தனா, நீங்க சீனியர்ஸ் கிட்டே காட்டற இந்த ஆட்டிட்யூட் ரொம்ப தப்பு. அப்புறம் அவங்களும் அதையேத் திருப்பிப் பண்ணினா உங்களுக்குத் தான் கஷ்டம். பார்த்து நடந்துக்கோங்க. இப்போ கிளம்புங்க” என அனுப்பி வைத்தான்.
வந்தனா தன் வகுப்பிற்குச் சென்று எல்லோரிடமும் நான் சொன்னா எழிலன் சர் கேட்பார். அந்த சீனியரை நல்லாத் திட்டி விட்டார் என்று எல்லாம் கதை அளந்தாள். பல பேர் அதை நம்பவில்லை என்றாலும், ஒரு சிலர் அப்படித்தான் போல் என நினைத்துக் கொண்டனர்.
நிலா அன்று முழுதும் சரியான டென்ஷனில் இருந்தாள். நிலவன் மாலையில் முதல் நாள் நிகழ்ச்சிப் பற்றிக் கேட்கப் ஃபோன் செய்தான். அவளின் அனைத்தையும் அண்ணனிடம் கொட்டித் தானே வழக்கம். அதைக் கொண்டு அந்த ஜூனியர் பெண் செய்ததையும், எழிலன் கூப்பிட்டுப் பேசியதையும் சொல்லி விட்டாள்.
நிலவன் உடனே பிரின்சிபாலிடம் பேசுவதாகக் கூற, பின்னரே தன்னை உணர்ந்தாள். தேவையில்லாமல் எழிலன் பிரச்சினையில் மாட்டிக் கொள்வான் என நினைத்த நிலா “அண்ணா, அது எல்லாம் வேண்டாம். என்னவோ உன்னிடம் சொல்லி விட்டேன் அவ்வளவு தான். அந்த பெண் எல்லாம் நானே பார்த்துக்கறேன். நீ டென்ஷன் ஆகாதே” என வித விதமாகப் பேசி மலையிறக்கினாள்.
நிலவனும் சரி என்று கூறினாலும், எழிலனைத் தனியாகப் போனில் ஒரு பிடி பிடித்தான். அவன் எப்படி ஒரு பக்கம் பயாசாக இருக்கலாம். இரண்டு பக்கமும் கேட்க வேண்டும் தானே. அதிலும் ஜூனியர் முன்னாடி சீனியரைத் திட்டினால், பின் அவள் எப்படி நாளைக்கு மற்ற சீனியர்ஸ் மதிப்பாள் என்று எல்லாம் கேள்வி கேட்டான்.
எழிலனுக்கும் கோபம் வந்தது. அப்படியே நிலா எல்லாவற்றையும் அவள் அண்ணனிடம் கூறுவாளா என நினைத்தான். சின்ன விஷயம். தன்னிடம் தனியாகக் கூறினாலே பிரச்சினை முடிந்திருக்கும். அவள் அண்ணன் வரைப் போக வேண்டுமா என சரியான கடுப்பானான்.
நிலாவிற்கு தேவையில்லாமல் பிரச்சினை வேண்டாம் என நினைத்துத் தான் அப்படிப் பேசினேன் என நிலவனிடம் எழிலன் கூறினான். அது ஓரளவு வேலை செய்ய, நிலவன் மீண்டும் இது போல நடக்கக் கூடாது எனக் கூறி வைத்தான்.
எழிலன் நிலாவிற்கு ஃபோன் செய்து பேசினான். இருவருக்குள்ளும் நேசம் மெலிதாகப் பரவத் தொடங்கிய நேரம், இவர்களின் முதல் பேச்சே சண்டையில் தான் ஆரம்பித்தது.
எழிலன் ஏன் நிலவனிடம் இதைச் சொன்னாள் எனக் கேட்க, நிலாவோ என் அண்ணனிடம் நான் சொல்லத் தான் செய்வேன் என்பதாகப் பதில் கூறினாள். சின்ன விஷயம் கூட கையாளத் தெரியாத கோழை எனக் கூறிவிட்டு எழிலன் போனை வைக்க, நிலாவின் மனது அனிச்சம் மலராக வாடிப் போனது.
இந்த நிகழ்விற்குப் பின் கல்லூரியில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும், வந்தனாவிற்கு அதில் யார் யார் கலந்து கொள்ள வேண்டும், அதற்கு யாரைப் பார்க்க வேண்டும் என மெசேஜ் அனுப்பி வைத்து விடுவாள் நிலா.
வந்தனாவோ அதற்கு ஒரு தாங்க்ஸ் கூட பதில் அனுப்புவது கிடையாது. ம். ஓகே மட்டும் தான். நிலாவிற்கு கோபமாக வரும் . ஆனால் மீண்டும் எழிலன் இதில் தலையிடும்படி இருக்கக் கூடாது எனக் கவனமாக இருந்தாள் நிலா.
நாட்கள் சென்றது. இப்போது எல்லாம் நிலா, எழிலன் இருவரும் பார்ப்பது கூட அரிதாக இருந்தது. மூன்றாம் செமெஸ்டெர் முடிந்து விடுமுறைக்குச் சென்றாள் நிலா.
இந்த முறை எழிலனும் பேப்பர் கரெக்ஷன் எல்லாம் இருக்கவே, தங்கள் பெற்றோர்கள் போல விடுமுறையின் கடைசி சில நாட்கள் மட்டுமே கிராமத்திற்குச் சென்றான்.
எழிலனை அவனின் தாத்தா, பாட்டி பாடச் சொல்லிக் கேட்க, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல் பாடினான். அது பிபிஎஸ் பாடல் என்றாலும், எஸ்பிபி அவர்கள் ஒரு நிகழ்வில் பாடியதையும் ரெகார்ட் செய்து இந்த முறையும் நிலாவிற்கு அனுப்பி வைத்தான்.
நிலா அதை ஆச்சாரியமாகக் கேட்டாலும், ஒரு முறைக்கும் ஸ்மைலி மட்டும் அனுப்பி வைத்தாள் .
இந்த முறை எழிலனின் பிளே லிஸ்ட்டில் நிலா பாடல்கள் அதிகம் இருப்பதை வள்ளி உணர்ந்தார். எப்போதும் நிலா பாடல்கள் எனத் தனியாக இருக்கும் தான். ஆனால் அதை மட்டுமே எழிலன் கேட்டுக் கொண்டிருப்பதாக வள்ளிக்குத் தோன்றியது.
அதிக நாட்கள் தங்காததால், தன்னுடைய சந்தேகத்தை அவரால் தீர்த்துக் கொள்ளவும் முடியவில்லை.
error: Content is protected !!