Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்18(2)

அத்தியாயம் – 18-2
எழிலன், நிலா வாழ்க்கை நன்றாகத் தான் சென்றது. அவ்வப்போது எழிலனின் பேச்சில் நிலவன் குறித்து சிறு நக்கல், கேலி இருந்தாலும் நிலா முறைத்தால் விட்டுவிடுவான்.
நிலவன் அன்று வரை கல்லூரிப் பேருந்தில் தான் பேராசிரியர் ஆன பின்பும் சென்று வந்துக் கொண்டிருந்தான். ஒருநாள் வேறு ஏதோ வேலை இருக்கவே, முடித்துவிட்டு கல்லூரி வருவதற்காகத் தன் அப்பாவிடம் புல்லட் கேட்டுக் கொண்டிருந்தான்.  
அப்போதுதான் நிலா தன் அப்பா மூலமாகப் புது புல்லட் வண்டியை வாங்கித் தருவதாகக் கூறினாள். எழிலனுக்கு லேசாகக் கோபம் வந்தாலும், நிலா தாங்கள் பணத்திற்காக யோசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அப்படி இல்லை எனப் புரிந்தால் அதுக் குறித்துப் பேச மாட்டாள் என நினைத்தான். அதையே, அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்பதால் வாங்கவில்லை எனப் புரிய வைத்தான்.


Advertisement

மலர்விழி நிலாவை நன்றாகவே கவனித்துக் கொண்டார். மலர்விழி கல்லூரிக்குச் சென்றாலும், நிலா அதற்கு மேல் தனக்கு மேல் படிப்புச் சம்பந்தமாகத் தேடுவது, அன்னையிடம் அரட்டை என நேரம் போக்கிக் கொண்டிருந்தாள். நிலாவிற்கு தேவையானது எல்லாம் அவளின் குடும்பத்தினரே வாங்கிக் கொடுத்து இருந்தனர். அதனால் பெரிதாக அவளுக்குத் தேவையும் ஏற்படவில்லை.
எழிலனும் திருமணத்திற்கு வாங்கிய புதிது அதிகம் இருந்ததால், பெரிதாக ஷாப்பிங் செல்லவில்லை.
கல்லூரித் தொடங்கிவிட்டதால், விடுமுறை நாட்களில் பக்கத்தில் இருக்கும் கோவில் மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் சென்றான். நிலாவிற்கும்  எல்லா இடமும் சுற்றிப் பார்த்து இருப்பதால், பெரிதாக எதுவும் எதிர்பார்ப்பு இல்லை.

Advertisement

எழிலன் நிலாவை மேலே என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டான். அவளும் கொஞ்சம் பழகியதும் மேலே படிக்கிறேன் என்று தான் கூறினாள். எழிலனும் அவளின் சிரமம் உணர்ந்தான். ஒரு வருடம் கழித்துத் தங்கள் கல்லூரியில் சேர்த்துவிடலாம் என முடிவு செய்துக் கொண்டான்.

Advertisement

இருவரின் திருமணம் முடிந்து சில மாதங்கள் சென்றிருக்க, அன்றைக்கு அவர்களின் மூன்றாவது மாத திருமண நாள். எழிலன் அதை எல்லாம் நினைவில் வைக்கவில்லை. அன்று இரவு நிலா அதைக் கூறவும், ஓ என்றாலும், அவளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க வேண்டும் என்று எல்லாம் தோன்றவில்லை.
நிலாவின் திருமணம் ஆகி நூறாவது நாள் பரிசாக நிலவன் தன் தங்கை மற்றும் கணவன் இருவரும் காஷ்மீர் செல்ல டிக்கெட் அனுப்பி வைத்தான். நூறாவது நாள் அன்று நேரில் வருவதற்குத் திட்டமும் வைத்திருந்தான்.
நிலாவின் கைகளில் டிக்கெட்ஸ் கிடைத்திருக்க, இரவில் அவளால் எழிலனிடம் கூற முடியவில்லை. காலையில் மலரிடம் பேசிக் கொண்டே சொல்லியிருக்க, அவர் ஏதோ யோசித்தாலும், சந்தோஷமேக் கொண்டார்.

Advertisement

எழிலன் காலையில் அவர்கள் வீட்டின் வரவேற்பறை ஸ்பீக்கரில் பாட்டுப் போட்டு விட்டு, ஏதோ மாணவர்களின் அசைன்மெண்ட் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்றைக்குப் பாடல் ‘மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம். பிரிவு என்னும் சொல்லே அறியாதது’ எனப் பாடியது. எழிலனும் பாடிக் கொண்டே வேலைப் பார்த்தான்.
நிலா அதை வேடிக்கைப் பார்க்க, மலர் தான் “நிலவழகி, அவனைப் பார்க்க ஆரம்பிச்சா, நமக்கு வேலை முடியாது. நீ ஏதோ ரெசிபி ட்ரை பண்ணறேன் சொன்னியே. வா” என அழைத்தார்.
“அத்தை, முதலில் உங்க பையன் கிட்டே காஷ்மீர் ட்ரிப் பற்றி சொல்லிட்டு வரேன். அப்புறம் நம்ம ராஜியத்துக்குள் போகலாம்” என்றாள் நிலா.
“சரி சரி. வா” எனக் கூறிவிட்டுச் சென்றார்.
நிலா ஹாலில் இருந்த எழிலன் அருகில் அமர்ந்தாள். எழிலன் என்ன என்பது போலப் பார்க்க, டிக்கெட்ஸ் எடுத்துக் காண்பித்தாள் நிலா. தேதியைப் பார்த்தவன் இரண்டு நாளில் இருந்தது.
“ம்ச். என்னைக் கேட்காம எதுக்கு டிக்கெட்ஸ் போட்ட அழகி? இந்த வாரம் இன்டெர்னல் இருக்கே” என்றான்.
நிலா இதை எதிர்பார்க்கவில்லை. “நீங்க லீவு போட முடியாதா?” எனக் கேட்டாள்.
“இல்லைமா, இந்த வாரம் கோவில் முக்கிய ஃபங்சனுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் போறாங்கனு உனக்குத் தெரியும் தானே. தாத்தா, பாட்டி, ஏற்கனவே போயாச்சு. நாங்க மூணு பேரும் சேர்ந்து லீவு எடுத்தா பிரின்சிபால் திட்டுவார்மா” என்றான் எழிலன்.
ரொம்பவும் தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் மூவரும் ஒரே நேரத்தில் விடுமுறை எடுப்பதில்லை.
நிலாவின் முகம் சின்னதாகப் போயிற்று. “சரி, நான் அண்ணா கிட்டே சொல்லி போஸ்ட்போன் பண்ணச் சொல்றேன்” என்றாள் நிலா.
“இதுக்கு உங்க அண்ணன் வேணும்? நீயே பண்ண மாட்டியா?” என்றான் எழிலன்.
அப்போது சரியாக நிலவன் தன் தங்கையைப் பார்க்க வந்திருந்தான். ஏர்போர்ட்டில் இருந்து வாடகைக் காரில் வந்ததால், வாசலில் அனுப்பி வைத்து விட்டு, நடந்து உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
நிலா எழிலனிடம், “டிக்கெட் அண்ணா தான் புக் பண்ணினான். அதான் அவனுக்குச் சொல்றேன்னு சொன்னேன்” எனக் கூறினாள்.
இது கிட்டத்தட்ட தேன் நிலவு ட்ரிப் எனப் புரிந்தது. அதை நிலவன் புக் செய்ததில் எழிலனுக்குக் கோபம் வந்தது.
“அறிவு இருக்கா நிலா உனக்கு? எதுக்கு உங்க அண்ணனை புக் பண்ணச் சொன்ன? உன்னால் முடியலைனா, என்கிட்டச் சொல்ல வேண்டியது தானே” எனப் பேசும்போது நிலவன் உள்ளே வந்துவிட்டான்.
எழிலன் முதலில் நிலாவைத் திட்டும்போதே நிலவன் கேட்டு விட்டான். தொடர்ந்துப் பேசவும் , அவனும் கோபத்தோடு உள்ளே வந்தான்.
நிலா ஏதோ பதில் சொல்வதற்குள். “என் தங்கை என்கிட்டே கேட்பதில் உனக்கு என்ன பிரச்சினை?” என நிலவன் ஒருமையில் பேசினான். ஏனோ எழிலனுக்கு அந்த இடத்தில் ஒரு மாதிரி ஆகி விட்டது.
எழிலனும் விடாமல் “உன் தங்கைக்குக் கல்யாணமாகி புருஷன் நான் குத்துக் கல்லு மாதிரி நிக்கறேன் தானே. அப்புறம் என்ன உன்கிட்டே கேட்கணும்?” என அவனும் ஒருமையில் பேசிவிட்டான்.
நிலவன் குரல் கேட்டு மலர்விழி வருவதற்குள் இருவரும் பேசிவிட்டனர். நிலா தன் அண்ணனைக் கண்டிக்கும் முன் மலர்விழி தன் மகனைக் கண்டித்தார்.
“எழிலா, வீட்டிற்கு வந்தவங்களை இப்படித் தான் பேசுவியா? மரியாதை தெரியாது உனக்கு?” எனக் கேட்டுவிட்டார்.
எழிலனுக்கு இன்னும் கோபம் ஏறியது. “அம்மா, என்னை உங்க விருந்தாளி ஒருமையில் பேசினாரே அதை கேட்காமல் என்னை மட்டும் பேசறீங்க?” என்றான்.
மலரும் “அதை நிலா சொல்லுவா. அதுக்கு அவளைப் பேசவிடணும்” என்றுவிட்டார்.
நிலாவும் நிலவனிடம் “அண்ணா, நீ பேசினதும் தப்பு. சாரி கேளு” என்றாள்.
நிலவன் எங்கோ பார்த்தபடி “சாரி” எனக் கூறிவிட்டு, “ஆனா என் தங்கச்சிக்கு நான் செய்யறதில் உங்களுக்கு என்ன பிரச்சினைனு எனக்கு இன்னிக்குத் தெரிஞ்சாகனும்” என்றான்.
எழிலனுக்கு அவனின் ஆட்டிட்யூட் கோபம் ஏற்படுத்தியது. “சும்மா, தங்கச்சின்னு ஸீன் போட்டுட்டு இருந்தா எரிச்சல் வருது. இது எங்க பிரைவேட் ட்ரிப். இதில் எங்க ரெண்டு பேருக்குள்ளும் தான் இருக்கணுமே  தவிர, மூணாவது மனுஷன் தேவையில்லை” எனக் கூறிவிட்டான்.
மலர்விழியால் இதில் தலையிட முடியவில்லை. இது எழிலனின் பெர்சனல் என நினைத்தார். ஆனால் நிலவனுக்கு அப்படியில்லை.
“நான் மூணாவது மனுஷனா? அப்போ நாளைக்கு நிலாவுக்கு ஏதும் ஆச்சுனா, உங்களை எதுவும் கேள்வி கேட்கக் கூடாதா?”
மலர்விழி “நிலவன், ஏன் இப்படிப் பேசறீங்க? நிலா மேல் உங்களுக்கும் எல்லா உரிமையும் இருக்கு. அவங்க ரெண்டு பேர் பெர்சனல்னு மட்டும் தான் எழிலன் சொல்றான். நீங்க தப்பா நினைக்காதீங்க?” என்றார்.
“மா, இவருக்கு எல்லாம் புளி போட்டு விளக்க வைக்க முடியாது. என்னப் பேசினாலும், என் தங்கச்சினு பாட்டு பாட்டுவார். விட்டுடுங்க” என்றான் எழிலன்.
“நிலவன், இந்த ட்ரிப் போவது பற்றி நான் பார்த்துக்கறேன். நீங்க இதில் தலையீடாதீங்க” என்றான்.
இப்போது நிலாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவர்கள் வீட்டின் எந்த முடிவும் செழியன் இல்லாமல் எடுப்பார்களா? இதோ இந்த ட்ரிப் போவதாக இருந்தாலும் அவரிடம் கேட்டுவிட்டுத் தானே டிக்கெட் போடுவார். ஆனால் என் அண்ணன் அதைச் செய்தால் என்ன தப்பு என நினைத்தாள்.
“நீங்க என் அண்ணனை மட்டும் சொல்றீங்களா? இல்லை நானும் எதிலும் பேசக் கூடாதா?” எனக் கேட்டாள் நிலா.
“உன் அண்ணன் புராணம் தவிர உனக்கு என்ன தெரியும்? ஏன் இப்போ போக முடியுமானு கூட யோசிக்காம, டிக்கெட்ஸ் அவர் கொடுத்ததும் வாங்கியிருக்க. இன்னும் உலகம் தெரியாம இருந்திட்டு என் உயிரை வாங்கற?” எனப் பேசிவிட்டான் எழிலன்.
நிலாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. மற்ற பிரச்சினைகளுக்கே தாவிக் குதிக்கும் நிலவன்  அதற்கு மேல் நிலாவை அங்கே நிற்கவே விடவில்லை. தன் தங்கையை எப்படிப் பேசலாம் எனப் பெரிதாக எழிலனோடு வாக்குவாதம் செய்தான். சண்டை முற்றிப் போய் எழிலன் “ஏண்டா கல்யாணம் ஒண்ணு பண்ணினோம்னு இருக்கு” என்றான்.
அது நிலாவை வெகுவாகப் பாதித்துவிட “நான் ஒண்ணும் உங்களைக் கேட்கலை. நீங்க தான் அன்னிக்குப் பிரின்சிபால் முன்னாடி கேட்டீங்க.” எனக் கூறிவிட்டாள்.
இது எழிலனுக்கு அவமானமாகி விட “அப்போ உன் அண்ணன் பின்னடியே போ” எனக் கூறிவிட்டு உள்ளேச் சென்று விட்டான். நிலாவும் அண்ணனோடு கிளம்பிவிட்டாள்.
மலர்விழி எவ்வளவோ தடுத்துப் பார்க்க, நிலவன் விடவில்லை. அப்போதே ஃப்ளைட்டில் டிக்கெட் போட்டு அழைத்துச் சென்றுவிட்டான்.

-தொடரும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!