Skip to content
Post Views: 92
“என்னது வேலையை விட்டுட்டீங்களா? என்னங்க சொல்றீங்க?” என மதிவதனி கேட்க,
அவனோ அசட்டையாக, “வேலையை விடல, எனக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே நோட்டீஸ் கொடுத்து வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க” என்று சொல்லித் தோள்களைக் குலுக்கினான்.
“அப்போ மூணு மாசமா நோட்டீஸ் பீரியட்லதான் வேலை பார்த்தீங்களா?”
“ஆமா! அதுல வந்த பணத்துலதான் ஹனிமூன் போனோம்… இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?” என எதுவும் நடவாதது போல அவன் கேட்க, கற்பகத்துக்குக் கோபம் வந்துவிட்டது.
Advertisement
“என்ன பிரச்சனையா? வேலை இல்லைன்ற விஷயத்தைச் சொல்லாம ஏன் மறைச்சீங்க? வேலை இல்லைன்னா வேற வேலையைப் பார்க்க வேண்டியதுதானே! இப்படி வீட்டுல தின்னுட்டுத் தூங்குனா யார் வந்து வேலை கொடுப்பா?!” எனத் தன் கோபத்தைக் காட்டினார்.
“வனி! உங்க அம்மா வார்த்தையை விடுறாங்க… பார்த்துப் பேசச் சொல்லு.”
“அம்மா ப்ளீஸ் அமைதியா இரு… நான் கேட்கிறேன். மூணு மாசமா நோட்டீஸ் பீரியட்ல இருந்தீங்க, ஏன் சொல்லல?”
Advertisement
“என் கௌரவம் என்ன ஆகுறதுன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லல… கல்யாணத்துக்கு அப்புறம் சொல்ல வந்தேன், நீ சொல்ல விடல! சரி, வேற வேலை தேடலாம்னு நினைச்சேன், எங்க அக்கா சதியால அதுவும் கிடைக்கல! பிரெண்ட்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். அவனும் சொல்றேன்னு சொல்லியிருக்கான். அதுனால வீட்டுல இருக்கேன், போதுமா?”
Advertisement
“உங்க பிரெண்ட் பார்த்துக் கொடுக்கிற வேலையில மட்டும் உங்க அக்கா சதி பண்ண மாட்டாங்களா மாப்பிள்ளை? வீட்டுலயும் உங்களைச் சேர்த்துக்க மாட்டேங்குறாங்க! இப்படி வேலையும் இல்லாம எத்தனை மாசம் இருக்கப் போறீங்க?”
‘மாப்பிள்ளை’ என்றதோடு மறுவார்த்தை பேசாத மாமியார் இன்று இவ்வாறு கேள்வி கேட்டிட, அவனுக்குக் கோபம் சுள்ளென்று வந்தது.
“இப்போ நான் வேலைக்குப் போய்தான் இந்த வீட்டைக் காப்பாத்தணும்னு எதுவும் அவசியம் இருக்கா என்ன? அதான் ரெண்டு வீட்டு வாடகை வருதுல்ல! பணத்துக்கு ஒன்னும் கஷ்டமில்லையே, அப்புறம் ஏன் இந்த விஷயத்தைப் பெருசுபடுத்துறீங்க?” என்றவனை வெட்டவா, குத்தவா என்ற ரீதியில் பார்த்தார் கற்பகம். வதனியோ கைகளைப் பிசைந்துகொண்டு இருவருக்கும் நடுவில் நின்றாள்.
Advertisement
“மாசம் மாசம் வீட்டுக்குக் காசு வந்தா வேலைக்குப் போகக் கூடாதுன்னு இருக்கா? நல்ல ஆம்பளைக்கு அழகு வேலைக்குப் போய் சம்பாதிச்சுப் பொண்டாட்டியைக் காப்பாத்துறது. பொண்டாட்டி வீட்டுல சொகுசா உட்கார்ந்து சாப்பிடுறது இல்ல” என்று காரசாரமாகக் கேட்டார்.
“அம்மா!” என்றாள் அவனுக்கு முந்திக்கொண்டு. “என்ன பேசிட்டு இருக்க நீ? என் புருஷன்கிட்ட பேசுறேன்னு ஞாபகத்துல வச்சுட்டுப் பேசு.”
“அதுக்காக வேலை வெட்டிக்குப் போகாம வீட்டுல தூங்க, சாப்பிடன்னு இருக்கலாமா? வேலை போச்சுன்னா என்ன, வேற வேலை பார்க்கக் கூடாதுன்னு இருக்கா! இப்போதைக்குக் கிடைக்கிற வேலையைப் பார்க்கக் கூடாதா? மூணு வேளை சாப்பாடு, போன், தூக்கம் இருந்தா சரிவருமா? உங்களுக்குப் பிள்ளை பிறக்கப் போகுது! அதைப்பற்றிக் கவலைப்படாம இப்படி அசட்டையாகப் பதில் சொன்னா என்ன அர்த்தம்?”
“நான் வேலைக்குப் போவேன், போகாமப் போவேன், உங்களுக்கு என்னங்க வந்தது? கேள்வி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று பதிலுக்குக் கேட்டான் அருண்.
“நீங்க இருக்கிறது என் வீடு! நீங்க சொகுசா இருக்க அப்பப்போ பணம் வாங்கி ஊதாரியாச் செலவு பண்றது என் பணம்! நான் கேட்பேன், எனக்கு உரிமை இருக்கு” என்றார் கற்பகம்.
“ஓ… உங்க பணம், உங்க வீடுன்னா கேள்வி கேட்பீங்களா? ஏய் வனி, வாடி போலாம். இனி இங்க ஒரு நிமிஷமும் இருக்கக் கூடாது. ஒரு மாசம்தான் வேலைக்குப் போகல, அதுக்குள்ள உங்க அம்மா இந்தப் பேச்சு பேசுறாங்க… நீயும் கேட்டுட்டு இருக்க! என் வீட்டுல நான் எப்படி ராஜாவா இருந்தேன் தெரியுமா? என் சொத்து, என் வீடு, என் அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு நீதான் வேணும்னு வந்ததுக்கு உங்க அம்மா நல்லாக் கேக்குறாங்க! வா போலாம்! இனி இங்க இருந்து என்னால அவமானப்பட முடியாது” என்று விறுவிறுவெனப் பெட்டியில் துணிகளையெல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
“இப்போ உனக்குச் சந்தோஷமா அம்மா? நான் மட்டுமே முக்கியம்னு எனக்காக வந்தவரை நல்லாவே அசிங்கப்படுத்திட்ட! இனிமே நாங்க இங்க இருக்க மாட்டோம்… நாங்க ரெண்டு பேரும் போறோம்” என்று அவளும் கிளம்ப நினைக்க, கற்பகம் அதிர்ந்து போனார்.
‘வாயும் வயிறுமாக இருக்கும் பொண்ணை இவரை நம்பி எப்படித் தனியாக அனுப்புவது?’ என மனதிற்குள் பயம் கொண்டவர், அதைக் கேட்டும் விட்டார்.
“இவரை நம்பிப் போய் நீ என்னடி பண்ணப் போற? வேலை வெட்டி இல்லாத மனுஷன். நீ வாயும் வயிறுமா இருக்க, எதுவும் வாங்கிக் கொடுக்காம உன்னைச் சாகடிக்கப் போறார். நீ போகாத” என்று தடுத்தார்.
“செத்தாலும் பரவாயில்லை, எனக்கு என் புருஷன்தான் முக்கியம்! அவரோடதான் போவேன். அவரோட நான் போகக் கூடாதுன்னு நினைச்சா, அவர்கிட்ட மன்னிப்புக் கேளு! இனி இப்படிப் பேச மாட்டேன்னு சொல்லி மன்னிப்புக் கேளு! இல்லையா நாங்க போறோம்! எங்களுக்கு ஒரு குடிசை கிடைக்காதா, நாங்க போறோம் மா” என்று பையைத் தூக்கிக் கிளம்பினாள். பதறிப்போனவர் மகளின் கையைப் பற்றி, “எங்கடி போற? இந்த நிலையில எங்க போவ?” என்றார்.
“எங்கேயோ? கூலி வேலை செஞ்சாலும் என் புருஷன் என்னைக் காப்பாத்துவார். ஆனா இப்படி மானங்கெட்டு இங்க இருக்க மாட்டோம்” என்றாள்.
“மதி! போகாத! இனி மாப்பிள்ளையை எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேண்டி. அவர் இங்க எப்படி வேணாலும் இருக்கட்டும். இங்கேயே இருங்க, எங்கேயும் போகாதீங்க.”
“இல்ல! இதுக்கு மேலே இங்க இருந்தா எனக்குத்தான் அவமானம். நீங்க நிச்சயம் இங்க இருந்தா என்னை அவமானப்படுத்துவீங்க, சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பீங்க. அதனால நாங்க கிளம்புறோம்” என்று இன்னமும் முறுக்கிக்கொண்டே இருந்தான் அருண்.
“ஐயோ! மாப்பிள்ளை, இனி நான் எதுவும் பேசல! இங்கிருந்து போகாதீங்க! வாயும் வயிறுமா என் பொண்ணு இருக்கா! வேணாம் மாப்பிள்ளை, போக வேணாம்! இனி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன் மாப்பிள்ளை. வனி! சொல்லுடி!”
“அருண்! அம்மாதான் கெஞ்சுறாங்களே! இங்கேயே இருப்போம். இனி அம்மா உங்களை எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க! எனக்காக இங்க இருக்கலாம்ங்க” எனக் கெஞ்சியதும் மனம் இறங்கியவன்,
“சரி, உனக்காகத்தான் இருக்கேன். இல்லன்னா எப்ப வேணாலும் கிளம்பிப் போயிட்டே இருப்பேன்… இனி என்னை இவங்க கேள்வி கேட்கவே கூடாது” என்று அறைக்குள் அடைந்துகொண்டான்.
“என்னடி இது? வேலைக்குப் போகக் கூடாதான்னு கேட்டது குத்தமா?” என்று கற்பகம் கேட்க,
“குத்தம்தான் மா! அவர் எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கார். அவரை இப்படி வார்த்தையால நோகடிப்பீயா? உன் பேச்சால பாவம் உள்ளுக்குள்ள எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரோ!” எனக் கண்ணீர் வடித்துக்கொண்டே உள்ளே சென்றாள் மதிவதனி.
கற்பகத்துக்கோ ஒன்றும் புரியவில்லை. மகனிடம் இஷ்டத்திற்குப் பேசி வார்த்தையால் நோகடித்தாலும், அவன் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசவே மாட்டான். ஆனால் இன்றோ, தன் சொந்த வீட்டிலேயே பேசும் சுதந்திரத்தை இழந்து தவிக்கிறார்.
வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, தூக்கம் எனப் கர்ப்ப காலத்து உபாதைகள் மதிவதனியை வாட்டி எடுக்க, வீட்டில் ஒரு வேலையும் செய்யாதவள், இதையும் காரணம் காட்டி ஒரு வேலையும் செய்யாமல் மருமகனுக்கு ஈடாகத் தூங்க, தொலைக்காட்சி பார்க்க, அலைபேசி பார்க்க என்றே பொழுதைப் போக்குகிறாள். வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்காததால் எல்லா வேலைகளையும் கற்பகமே செய்கிறார்.
அதிலும் அருண் வேலைக்குச் செல்லவில்லை என்றாலும், வெளியே ஒரு மணி நேரம் சென்று வந்ததுமே துணியை உடனே கழற்றித் துவைக்கப் போட்டுவிடுகிறான். அதை இன்னொரு நாள் அணிந்துகொள்ளும் பழக்கம் அவனுக்கு இல்லையாம்…
அதுவும் வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாதாம்; காலரில் அழுக்கு போகவில்லை என்ற குற்றச்சாட்டுடன், “உங்க அம்மாவைக் கையில துவைக்கச் சொல்லு” என்று கட்டளை வேறு!
பதிலுக்கு எதுவும் பேச முடியாமல், மருமகனின் துணிகளைக் கையில் துவைக்கும் அவல நிலை கற்பகத்துக்கு.
இதில் சமையல் வேறு. அவன் சொல்வதைத் தான் செய்ய வேண்டும்… தினமும் விதவிதமாகச் சமைக்க வேண்டும். பழைய குழம்பையோ, கஞ்சியையோ வைத்துவிடக் கூடாது. முக்கியமாக நேற்று மீதம் மிஞ்சியதை மறுநாள் வைத்துவிடவே கூடாது.
வயதானவர் என்று பார்க்காமல் மகளும் மருமகனும் அவரை நன்றாக வேலை வாங்கினர். மீறிப் பொறுக்காமல் கோபம் கொண்டு எதையாவது கேட்டுவிட்டால் போதும், “வீட்டை விட்டுச் செல்கிறேன்” என்று பயம் காட்டினர்.
பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டவர், அவர்களின் அடுத்தகட்டச் செயலைத்தான் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டார்.
அருண் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது வழக்கமான சோம்பேறித்தனமான பணியைச் செய்து வந்தான். வதனியின் மாதாந்திர மருத்துவப் பரிசோதனைச் செலவைக் கூடக் கற்பகம்தான் பார்க்கிறார். அருண் அவளை மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் செல்லும் வேலையை செய்தாலும், அதற்கும் அவனுக்குக் கூலி கொடுக்கும் நிலை.
வதனி ‘வேலை’ என்று ஆரம்பித்தாலே போதும், ‘உனக்காகத்தான் வீட்டை விட்டு வந்திருக்கேன், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் அக்கா எனக்கு வேலை கிடைக்கவிடாம சதி பண்றா!’ என்று பல்லவியைப் பாடி அவளது வாயை அடைத்துவிடுவான். ‘உன்னை விட்டுச் சென்றுவிடுவேன்’ என்று மிரட்டுவான். அதற்கு அடிபணிந்து போவாள் மதிவதனி!
இது போதாதென்று, நண்பர்கள் சுற்றுலா செல்லத் திட்டமிட, தானும் வருவதாக அருண் சொன்னான்.
“உனக்கே வேலை வெட்டி இல்லை! நீ எப்படி அவ்வளவு காசு கொடுத்து எங்களோட வருவ?” என்று கேட்டு நண்பன் கேலி செய்ய, அவனுக்கோ கோபம், ஈகோ தலைதூக்கியது. எப்படியாவது பணத்தை அவன் முகத்தில் எறிந்துவிட்டுச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று யோசித்தான்.
எதைச் சொன்னாலும் நம்பும் வதனியிடம், “சென்னையில் அக்காவின் சதியால் வேலை கிடைக்கவில்லை. பெங்களூர் சென்று நண்பர்கள் மூலமாக வேலை கிடைக்கிறதா என்று பார்க்கப் போவதாகவும், அதற்குப் பணம் தேவைப்படும்” என்றும் கேட்டான்.
அவளோ தாயிடம் கேட்க, கற்பகம் மறுத்துவிட்டார். கணவனைக் கண்மூடித்தனமாக நம்பியவள், அவனிடம் பணத்தைக் கொடுக்கும் முனைப்போடு, கற்பகம் கேட்கும் முன்னே வீட்டு வாடகைகளை வாங்கி அருணிடம் கொடுக்க, அவனோ கேரளாவிலுள்ள வர்கலா என்ற ஊருக்கு நண்பர்களுடன் சென்றுவிட்டான்.
மதிவதனி பெயரிலும், மதியூரன் பெயரிலும் தான் இரண்டு காலனி வீடுகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. கற்பகம் தன் பெயரில் இருப்பதாகச் சொல்லி வைத்திருக்க, அதை இருவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டுமே காலனி வீடுகள். இரண்டு வீட்டிலும் மொத்தமாகச் சேர்த்தால் இருபது வீடுகள். அவற்றின் வாடகையைக் கற்பகம்தான் வாங்கிக் கொள்வார்.
மாதம் பிறந்தாலே வீட்டு வாடகையைக் கற்பகத்தின் வங்கி கணக்கில் அலைபேசி மூலம் போட்டு விடுவார்கள். சிலர் கையில் வந்து கொடுப்பார்கள்.
இப்படி இருக்க, வாடகை கையில் கொடுப்பவர்களிடம் மதிவதனி கற்பகத்தின் பெயரைச் சொல்லி அந்த வாடகைப் பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு கணவனிடம் கொடுக்க, அவனோ நண்பர்களுடன் சுற்றுலா சென்று குடிக் கூத்தெனத் திரிகிறான்.
கற்பகம் வழக்கமாக வாடகை கேட்டு அலைபேசியில் தொடர்பு கொள்ள, வாடகைக் குடியிருப்பவர்கள் வதனி பணத்தை வாங்கிக்கொண்ட செய்தியைக் சொல்லவே பதறிப்போனார்.
அவளிடம் ஓடிவந்து, “அவ்வளவு பணத்தை என்னடி செஞ்ச?” என்று கேட்க, அவளோ கணவரிடம் கொடுத்ததைச் சொன்னாள். மகளென்று பாராமல் அவளது கன்னத்தில் அறைந்துவிட்டார் கற்பகம்.
“உனக்கு என்ன பைத்தியமா? உண்மையாவே உன் புருஷன் பெங்களூருக்குத்தான் போயிருக்கானா? அதை நம்புறியா?”
“நான் நம்புறேன்! என் புருஷன் வேலை விஷயமாதான் பெங்களூருக்குப் போயிருக்கார். கண்டிப்பா வேலையோடதான் வருவார். அவரோட முதல் மாசச் சம்பளத்தைத் தூக்கி உன் முகத்துல வீசுறேன்.”
“ஓ… வேலை விஷயமா போறேன்னுதானே உன் புருஷன் சொன்னான்? அப்படின்னா ஏன் சர்டிபிகேட் எடுக்காம போயிருக்கான்? சர்டிபிகேட் இல்லாம யாருடி வேலை கொடுப்பா?” என்று கற்பகம் கேட்டதுமே அதிர்ந்துபோனாள் வதனி.
“உன் வீட்டுக்காரர் டிரஸ் மடிச்சு உள்ள வைக்கும்போதுதான் பார்த்தேன். உன் புருஷன் வேலை விஷயமா போகல! ஊர் சுத்தப் போயிருக்கான். உன்னை ஏமாத்திக் காசு வாங்கிட்டுப் போயிருக்கான்.”
“இல்லை, நீ பொய் சொல்ற. என் புருஷன் அப்படிச் செய்ய மாட்டார், வேலை விஷயமாதான் போயிருக்கார்” என்று நம்பாமல் சொல்ல, வேகமாக உள்ளே சென்றவர் அவனது சர்டிபிகேட்டுகளை எடுத்து வெளியே தூக்கி எறிந்தார்.
“இதுக்கு மேலேயும் நீ நம்பலைன்னா உன்னைப்போல முட்டாள் யாரும் இல்லடி… வேலை விஷயமா போனவன் ஏன் இதை எடுத்துட்டுப் போகல?! சரி அதை விடு! உன் புருஷன் போன இடத்துல வேலையோடு வருவான்னு நினைக்கிறியா? அவ்வளவு பெரிய ஊர்ல உன் புருஷனுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும், ஆனா பாரு, வேலை கிடைக்கலன்னு வந்து நிற்பான் பாரு! அப்படி நிக்கலன்னா என் பெயரை நான் மாத்திக்கிறேன்” என்று சபதமிட்டுச் செல்ல, அவளோ கணவனை எண்ணிக் கண்ணீர் வடித்தாள். அவளைப் பொறுத்தவரை கணவனை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, அதே நேரம் அவன் செய்வதில் எரிச்சலாகவும் இருந்தது.
மறுநாள் பையுடன் வீட்டிற்குள் நுழைந்தான் அருண். சந்தோஷமாக மனைவியைக் கட்டியணைத்து முத்தமிட்டான்.
அவளோ எதுவும் தெரியாதது போல, “என்னங்க, வேலை கிடைச்சிருச்சா?” எனக் கேட்டாள்.
“கிடைக்கல வனி! நானும் இந்த அஞ்சு நாளா அலையாத இடமே இல்லை” என்று சோர்வாகச் சொல்ல,
“சர்டிபிகேட் எடுத்துட்டுப் போயிருந்தா வேலை கிடைச்சிருக்குமோ என்னவோ! அதைத்தான் நீங்க மறந்து இங்கேயே வச்சிட்டுப் போயிட்டீங்களே” என நக்கலாகவும் கோபமாகவும் சொன்னாள்.
அவனோ திருட்டு முழி முழிக்க, “உண்மையைச் சொல்லுங்க, எங்க போனீங்க?” என்று சட்டையைப் பற்றிக் கேட்கவும், அவனும் உண்மையை ஒப்புக்கொண்டான். வதனி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
“ஐயோ! இப்படிப் பொறுப்பில்லாம இருக்கீங்களே! உங்களை நம்பி நானும் நம்ம பிள்ளையும் இருக்கோம்னு ஞாபகம் இருக்கா?! எத்தனை நாள் ஓசி சோறு திங்குறது? அவமானமா இருக்கு! நீங்க வேலைக்குப் போனாதான் எனக்குப் பெருமை. இப்போ நான் அம்மாகிட்ட என்ன சொல்வேன்? அவங்க உங்களைச் சரியாக் கணிச்சுச் சொல்லிட்டாங்க! நீங்களும் அதேபோலத்தான் நடந்துக்கிறீங்க! இப்போ நான் அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன்? யார் தருவா? நீங்க சம்பாதிச்சுக் கொடுப்பீங்களா?”
“நாம ஏன் கொடுக்கணும்? அது நம்ம பணம்!”
“அது நம்ம பணமா? அது அம்மா பணம். அந்த வீடு அம்மா பேர்ல இருக்கு! அப்போ அவங்க பணம் தானே.”
“அதுக்காக உனக்குப் பங்கு இருக்கும் தானே? அது எங்கன்னு கேளு? ரெண்டு வீட்டு வாடகை பணத்தையும் அவங்களே வச்சிப்பாங்களா? என்ன நியாயம் இது?”
“என்ன சொல்றீங்க நீங்க?”
“அடியே, உங்க அப்பா உயில் எழுதாமலே போயிருப்பார். மூணு வீடுமே யார் பேர்ல இருக்குன்னு தெரிய வேண்டாமா? உங்க அம்மாவே பணத்தை வாங்கி அவங்களே வச்சுட்டு உன்னையும் உன் அண்ணனையும் நல்லாவே ஏமாத்துறாங்க! உன் பங்கு என்னன்னு கேட்டு வாங்கு! இல்லைன்னா அவங்களே எல்லாத்தையும் அனுபவிப்பாங்க, உனக்குன்னு எதுவும் கொடுக்க மாட்டாங்க.”
“அப்படிலாம் இல்ல, அவங்க வாங்கினாலும் எங்களுக்குத் தானே செஞ்சாங்க! குறிப்பா எனக்குத்தான் நிறைய செஞ்சாங்க! அவங்களைத் தப்பா சொல்லாதீங்க. எங்க அண்ணனை வேணும்னா ஏமாத்தியிருக்கலாம், ஆனா எனக்கு அவங்க நல்லதுதான் செஞ்சாங்க…” என்று விட்டுக்கொடுக்காமல் பேச, அருண் சலிப்பாகத் தலையை ஆட்டினான்.
“சரி ஓகே! உனக்கு நிறையவே செஞ்சிருக்காங்க! ஆனா இப்போ உனக்குக் குடும்பம் வந்திடுச்சுல்ல! உன் பங்கைக் கேளு! எந்த வீடு உனக்கோ, அந்த வீட்டு வாடகையை நாம வாங்கினா என்ன? நமக்குச் செலவு இருக்கு, குழந்தை பிறக்கப் போகுது! அதுக்கு வழியைப் பார்க்கணும்ல?”
“அப்போ நீங்க வேலைக்குப் போக மாட்டீங்களா?” எனக் கேட்டதும் அவன் வாயை மூடிக்கொள்ள, விரக்தியாகச் சிரித்தவள், “கடைசி வரைக்கும் இப்படியே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?” எனக் கேட்கவும் அவன் தலைகுனிந்தான்.
“வேலைக்குப் போகாத எங்க அண்ணனை உங்களை வச்சு அவ்வளவு திட்டினேன்… அதுக்குத் தண்டனை அடுத்த ஜென்மத்துல கிடைக்கும்னு நினைச்சேன். இதோ இந்த ஜென்மத்துலேயே அனுபவிக்கிறேன். இப்ப நீங்க வேலைக்குப் போகல! அவன் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிறான்… என் தலையெழுத்து” என்று வெளியே செல்ல, அவனுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
கற்பகம் ஒரு முடிவாக இருவரையும் கூடத்திற்கு அழைத்தார். இருவரும் வந்து நின்றனர்.
“என்னம்மா?!”
“இனி நீங்க இங்க இருக்கக் கூடாது! வெளிய போங்க! இனி நான் உங்களை வீட்டுல வச்சிருந்தா என் பணத்தையெல்லாம் ஊதாரியாச் செலவு பண்ணிடுவீங்க. பணத்தோட அருமை தெரிய நீங்க வெளிய போய்க் கஷ்டப்படுங்க, அப்பத்தான் புரியும்… உங்களுக்குப் பத்து நாள் டைம், அதுக்குள்ள வீடு பார்த்துட்டுப் கிளம்புங்க” என்றார்.
முதலில் அதிர்ந்த மதிவதனி, பின் தைரியமாக, “சரி மா! நாங்க வெளிய போறோம்… அந்த ஏரியால இருக்கிற வீட்ல ஒரு வீடு காலியா இருக்கு, அங்க போயிடுறோம்… அங்க வர்ற வாடகையை வாங்கிட்டு நாங்க இருந்துக்கிறோம்” என்றதும் கற்பகத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“அது என் வீடு? அங்க இருக்க உனக்கு உரிமை இல்லை” என்றார். அருண் ஏற்றிவிட்டதில், அம்மாவின் பேச்சில் கோபம்கொண்டவள், “சும்மால்லாம் வீட்டை விட்டுப் போக முடியாது! எனக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடு, நான் போறேன்” என்றதும் அதிர்ந்தார்.
“அப்பா உயில்ல எனக்குத் தர வேண்டிய பங்க எழுதி வச்சிருப்பார். அதுபடி என் பங்கை எனக்குப் பிரிச்சுக் கொடு! நான் வீட்டை விட்டுப் போறேன்” என்று பிடிவாதமாகச் சொல்ல, அவரும் வாதாடாமல் “சரி” என்றார்.
“இந்த வீடும் எனக்கு வேணும்!” என்று பேராசையில் வதனி கேட்க, “முடியாது! அப்பா உயில்ல என்ன இருக்கோ அதுபடிதான் சொத்தைப் பிரிக்க முடியும், உன் இஷ்டத்துக்கு முடியாது. எப்படிப் பார்த்தாலும் இந்த வீடு என் பேர்லயோ இல்ல என் மகன் பேர்லயோ இருக்கும். எப்படிப் பார்த்தாலும் இது அவனுக்குத்தான் சொந்தம்…” என்றார் கற்பகம்.
“ஓ… இந்த வீடு என் பேர்ல இருந்தாக் கூட நீ இங்கிருக்கலாம், உன் மகன் பேர்ல இருந்தா உனக்கு வீடே கிடைக்காது, நடுத்தெருவுலதான் நிக்கணும்” என்றாள் வதனி.
“உனக்கு வேலைக்காரியா இருக்கிறதை விட நடுத்தெருவுல நிக்கலாம்டி. அப்புறம் என் புள்ளையை நீ தப்பா பேசாத! அவன் வேலைக்குப் போகாத போது கூட என்னை வேலை வாங்கினது இல்லை! என்னோட வேலைகளையும் சேர்த்து அவன் தான் பார்த்திருக்கான். ஆனா இங்க மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு தூக்கி வச்சு ஆடினதுக்கு என்னை வேலைக்காரியாக்கிட்டீங்களே! என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்ட என் புள்ளை எப்பவும் மாற மாட்டான்டி. அவன் என்னை அவனோடவே வந்திடச் சொல்வான். அங்கயும் என் ராஜ்யம்தான்டி” என்று மார்தட்டிச் சொன்னார்.
“அதைத் தான் பார்ப்போம், முதல்ல உன் பையனை வரச் சொல்லு சொத்துப் பிரிக்க” என்றதும், கனத்த மனத்துடன் மகனுக்கு அழைத்தார் கற்பகம்.
வெகு நாட்களுக்குப் பின் மகனை அழைக்கிறார், கைகள் நடுங்கின! அவனும் அழைப்பை ஏற்றான்.
“மதி…” என்றார் கலங்கிப் போய்.
அவரது கலங்கிய குரலைக் கேட்டதும் பதறியவன், “ம்மா… ஏ… ஏன் உ… உங்க கு… குரல் ஒ… ஒரு மா… மாதிரி இ… இருக்கு? உ… உடம்புக்கு எ… எதுவும் சரியில்லையா? எ… என்னாச்சு?” எனப் பதற்றமாகக் கேட்டதுமே அவர் கண்கலங்கிப் போனார்.
“என்னை மன்னிச்சிடு மதி” என்று அழுதே விட்டார். “எ… என்னம்மா, எ… என்ன பிரச்சனை?!”
அவரும் நடந்த விஷயத்தைச் சொல்லி, “சொத்தைப் பிரிக்கணும்னு சொல்றா! நாளைக்கு நம்ம வக்கீலை வரச் சொல்லியிருக்கேன். நீயும் வந்திடுப்பா” என்றார்.
“சரி” என்று போனை வைத்துவிட்டான் மதியூரன்.
முகம் வாடிப் பக்கத்தில் அமரும் கணவனைப் பார்த்தாள் மதுரா! “என்னாச்சு யூரன்? என்ன பிரச்சனை?” என்று கேட்க, நடந்ததைத் திக்கித் திக்கிச் சொன்னான் மதியூரன்.
“போயிட்டு வாங்க யூரன்! கையோட அத்தையும் அழைச்சிட்டு வாங்க! அவங்களைத் தனியா விட வேண்டாமே” என்றாள்.
“உ… உனக்கு அ… அவங்க மே… மேலே கோ… கோபம் இ… இல்லையா துரா?!”
“இல்லை யூரன்! அவங்க தப்பு பண்ணியிருக்காங்க, என்னை தப்பா பேசியிருக்காங்க! அதுக்காக மோசமான சூழ்நிலையில அவங்க இருக்கும்போது அதைக்காட்டணுமா என்ன? வீட்டுல பெரியவங்க யாருமே இல்லை. அட்லீஸ்ட் நம்ம பிள்ளைக்குப் பாட்டின்ற ஒரு உறவாவது இருக்கட்டுமே!” என்று தன் ஐந்து மாத வயிற்றைத் தடவினாள் மதுரா.
அவளது நெற்றியிலும் வயிற்றிலும் இதழ் முத்தம் வைத்து, “ஐ… ல… லவ் யூ துரா” என்றான். அவளும் அவனது நெற்றியில் இதழ் பதித்து, “லவ் யூ டூ” என்றாள்.
மறுநாள் இருவருமே கற்பகத்தின் வீட்டிற்குச் சென்றனர். கற்பகம் இருவரையும் பாசமாக உள்ளே அழைத்தார். மகனையும் மருமகளையும் கவனித்தார். இங்கிருந்ததை விட இன்னும் பொலிவுடன் இருந்தான் மதியூரன். மருமகளின் வயிற்றைக் கண்டு கற்பகத்தின் மனம் நெகிழ்ந்தது.
இருவருக்கும் ஜூஸ் கொடுத்தார். அவற்றை வன்மத்துடன் பார்த்தான் அருண். தங்களுக்கு வழங்கவில்லை என்ற கோபம், புதிதாக அருணை விட்டுவிட்டு மதியூரனைக் கவனிப்பதில் அவனுக்கு எரிச்சல்.
வக்கீல் வந்து மதியூரனின் தந்தை எழுதி வைத்த உயிலை வாசித்தார். அதில் மதிவதனிக்கு ஒரு நிலமும், ஒரு வீடு மட்டுமே எழுதப்பட்டிருந்தது. மீதி எல்லா சொத்துமே மதியூரன் பெயரில் இருந்தது. அவன் தான் தாயையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது. அதை வாசித்ததுமே வதனிக்கு அத்தனை கோபம். அருணுக்கோ கிடைத்த வரை லாபம் என்று எண்ணிக்கொண்டான்.
“எனக்கு இந்த வீடு வேணும் அண்ணா!” எனத் திமிராகக் கேட்டாள் வதனி.
பதிலுக்கு அவனும், “த… தர்றேன்!” என்றான். மதிவதனிக்கு முகம் மலர்ந்தது.
“ஆ… ஆனா உ… உனக்கு ஒ… ஒதுக்கப்பட்ட வீ… வீட்டை எ… எனக்குத் த… தரணும், சரியா?” என்றதும் அதிர்ந்தாள்.
“அது முடியாது!”
“அ… அப்ப நா… நானும் தர முடியாது… உ… உனக்கு ஒ… ஒரு வீடுதான்” என்று முடித்துக்கொள்ள, அவளோ முகத்தை வெறுப்புடன் திருப்பிக்கொண்டாள்.
“அப்போ அம்மாவை நீ பார்த்துப்பியா?”
“பா… பார்த்துப்பேன். உ… உனக்கு அ… அவங்களைப் ப… பத்தி எ… எந்தக் க… கவலையும் வே… வேண்டாம்…” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டான் மதியூரன். மறுநாள் உயிலில் எழுதியபடியே அண்ணனும் தங்கையும் சொத்தைப் பிரித்துக்கொண்டனர்.
தன் கணவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் வதனி. கற்பகமோ மகன் என்ன சொல்லப் போகிறானோ என்று தயக்கமாக இருந்தார்.
வீட்டிற்கு வந்ததுமே கற்பகம், “நீ, நான், மருமகள் எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கலாம்ப்பா” என்றார்.
அவனோ, “இ… இருக்கலாம்மா! ஆ… ஆனால் அ… அதுக்கு நாளாகட்டும். இ… இப்போதைக்கு நீ… நீங்க இ… இங்கேயே இ… இருங்க. உ… உங்களுக்குத் து… துணைக்கு ஆ… ஆள் வைக்கிறேன். வா… வாரக் கடைசியில நா… நானும் எ… என் ம… மனைவியும் வ… வருவோம், இ… இருந்துட்டுப் போ… போவோம். அ… அந்த வீ… வீட்டு வா… வாடகையை நீ… நீங்களே வா… வாங்கிச் செ… செலவுக்கு வச்சுக்கோங்க! யா… யார்கிட்டயும் நீ… நீங்க கை… கையேந்தி நி… நிக்கக் கூடாது!” என்றான்.
கலங்கிப்போய் மகனைக் கட்டியணைத்தவர், “என்னை மன்னிச்சிடு மதி! என்னை மன்னிச்சிடு, ஓரவஞ்சனையா நடந்துக்கிட்டேன். அவளை மட்டுமே முக்கியமா நான் நினைச்சுட்டேன். மகளைக் கொண்டாடுனதுக்குத்தான் என்னை இப்படி கொடுமை செஞ்சிட்டா! உன்னை பேசக்கூடாத வார்த்தை பேசியும் நீ எனக்காக யோசிக்கிறியே! இப்பவும் என் மதிப்பு குறையக்கூடாதுன்னு என்னை ராணியா இருக்க வச்சிருக்க, எனக்குக் குற்ற உணர்வா இருக்குப்பா! என்னை மன்னிச்சிடுப்பா” என்று கதறியவரைச் சமாதானம் செய்தான். மருமகளின் கையைப் பற்றியும் மன்னிப்புக் கேட்டார்.
“என்னை மன்னிச்சிடுமா! என் பிள்ளை இந்த அளவுக்கு உயர்ந்து நிக்கவே நீதான் காரணம். உன்னைப்போய் தப்பா பேசிட்டேன், என்னை மன்னிச்சிடுமா.”
“விடுங்க அத்தை, பழசை இனி பேச வேண்டாம் எல்லாரும் ஹாப்பியா இருப்போம்” என்றாள் மதுரா.
கற்பகம் கேட்டுக்கொண்டதற்காக இருவரும் அன்று இரவு மட்டும் அங்கே தங்கிக்கொண்டனர்.
மதியூரனின் நெஞ்சில் தலைவைத்து படுத்திருந்தாள் மதுரா. “யூரன்! ஏன் அத்தையை இங்கேயே இருக்கச் சொல்லிட்டீங்க? அவங்களை நம்மளோட இருக்கச் சொல்லியிருக்கலாமே?”
“வே… வே… வேணாம் துரா! இ… இ… இப்படி இருக்கிறதுதான்… ந… நல்லது! அவங்க… அவங்க இப்போ… உ… உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறாங்க…
இ… இதுவே… கூ… கூட இருந்து… அவங்க ப… பழைய குணம் வெளிய வந்து… உன்னை… உன்னை ஒரு… ஒரு வார்த்தை சொன்னாலும்…… எ… என்னால… என்னால தாங்கிக்கவே முடியாது!
அ… அதனால… அவங்க… அவங்க நல்லா இருக்கிற வரைக்கும்… இ… இங்கேயே இருக்கட்டும். அவங்க… க… கடைசி காலத்துல… மு… மு… முடியாம இருக்கும்போது… ந… நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வருவோம்…”என்றான். தனக்காக இவ்வளவு யோசித்திருக்கிறான் என்றதும் நெகிழ்ந்துபோனவள், அவனை வாரி அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள். அவர்களுக்குள் அழகான கூடல் நிகழ்ந்தது. மன நிம்மதியோடு உறங்கிப்போனார் கற்பகம்.
இரண்டு வருடங்களுக்குப் பின்…
மதுராவின் வீட்டில் எதுவும் மாறவில்லை, புதிதாக ஓர் உறவு அவர்களின் வீட்டை வசந்தமாக மாற்றியிருந்தது. அவர்களின் அந்த உலகம் இன்னும் அழகாகியிருந்தது..
‘மது’ என அழைத்துக் கொண்டே மதுரா பின்னே செல்ல, அவளது செல்ல மகளோ அவளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே ஓடினாள். வேலை முடித்துவிட்டு வந்த மதியூரன் அவளை அப்படியே தூக்கிக்கொண்டான்.
“எ… எதுக்கு ஓ… ஓடி வரீங்க செ… செல்லம்?” என்று கேட்டு முத்தம் வைத்தான் அவனது இரண்டு வயது தேவதை மதுமதிக்கு.
“அப்பா!! அந்த அனிமல் படத்தைப் போடச் சொன்னா, அம்மா போட மாட்டேங்குறாங்க!!!”
“அ… அதை எ… எத்தனை வா… வாட்டிதா… தான் பா… பார்ப்பீங்க குட்டி? வே… வேற பார்க்கலாம்” என்றான்.
“ம்கூம், அதுதான் வேணும்” என்று அடம்பிடிக்க, அதையே போட்டுவிட்டான். அது ஒரு ஹாலிவுட் ஃபேண்டஸி படம். அதில் ஹீரோவுக்குத் தமிழ் டப்பிங் கொடுத்தது என்னவோ மதியூரன்தான். ஹாலிவுட் ஃபேண்டஸி படம் ஒன்று ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நெட்ஃபிளிக்ஸில் திரையிடப்படவிருக்க, அதில் தமிழில் ஹீரோவிற்கு குரல் கொடுக்கும் வாய்ப்பை மதியூரன் பெற்றிருந்தான். மதுராவிற்குத் தரையில் கால்களே நிற்கவில்லை… அத்தனை மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரோடு அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
ஹீரோ பேசியதும் மகள் குதித்து, “அப்பா! அப்பா!” எனக் கத்தினாள். மகளைப் போல குதூகலமாகக் குதிக்கவில்லை என்றாலும் கணவரின் குரலை ரசித்துக் கேட்டாள் மதுரா.
“எ… என்னமோ பு… புதுசா கே… கேட்கிறது போ… போல ர… ரசிக்கிறீங்க மேடம்… நூ… நூறு வா… வாட்டி இ… இந்த படத்தைப் பார்த்தாச்சு.”
“ஆமா, நூறு வாட்டி பார்த்தாலும் என் புருஷனோட குரல் எனக்கு ஸ்பெஷல் தானாக்கும். எவ்வளவு கேட்டாலும் எனக்கு புதுசா கேட்பது போல தான் இருக்கும்” என்றாள் மதுரா காதலோடு. மகள் அறியாமல் மனைவிக்கு இதழில் முத்தம் வைத்தான் மதியூரன். இருவரும் காதலோடு பார்த்துக் கொண்டனர். பின் குடும்பமாக அமர்ந்து அந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தனர். இனிமை தூவ நித்தமும் அவர்கள் காதல் மழையில் நனையட்டும்…
முற்றும்
error: Content is protected !!