Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா?… அத்தியாயம் 14

உடைந்த மனங்கள் ஒட்டாதா?…

அத்தியாயம் 14

 ஜெகனுக்கு மனைவியை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. எப்படி அவளை நெருங்க முயற்சித்தாலும், இரும்பாக இருகி நிற்கிறாள். தன் தவறும் புரிகிறது. அதற்காக மனைவியை விட்டு தள்ளி நின்றால் பிள்ளைகள் வளர்கிறார்கள். அவர்களுக்கு முழு விவரம் தெரியும்போது குடும்பமாகத்தான் இருக்க வேண்டும். இனி அவள் அடித்தாலும், கத்தினாலும் அவளோடு தான்.. தள்ளி நிற்பதற்கு பேச்சே கிடையாது. தெளிவாக முடிவெடுத்துக் கொண்டான் ஜெகன். 

அவன் முடிவுக்கு தக்க பிள்ளைகளோடு நெருங்க ஆரம்பித்தான். ஏனெனில் அதுதான் மீனாவின் பலவீனம். அவனை அவனுக்காகவே நேசித்த மனைவி காணாமல் போனால்.. இனி, பிள்ளைகளின் தகப்பன் என்ற முறையில் தான் அவளை நெருங்க முடியும். கொஞ்சமாவது மீனா இளகும் இடம் குழந்தைகளிடம் மட்டும்தான். அதை விட்டுவிட ஜெகன் தயாராக இல்லை. 



Advertisement

பரமு, மகளோடே இருந்து விட்டார். எப்படியாவது அவளை கணவனோடு சேர்த்து வைத்து விடும் முடிவில் இருந்தார். பாறையாக இருந்தாலும் விடாமல் நீர் விழும் போது கரைய தான் வேண்டும். அம்மா, பிள்ளைகள், கணவன் என்று மூன்று பக்கமும் நெருக்க ஆரம்பித்தார்கள்.

ஜெகன் முன்பு போல மனைவியின் இறுகிய முகம் பார்த்து தயங்கி நிற்பதில்லை. அவனின் இருப்பை உணர்த்தினான். கனிக்கு மட்டும் தான் தந்தையை தெரியாது. மற்ற இரு பிள்ளைகளும் தந்தையை அறிவார்களே… சகஜமாக வீட்டிற்குள் வருவான். மீனாவை தொந்தரவு செய்யாமல், பிள்ளைகளோடு ஒன்றி நிற்பான். 

அவனோடு மூன்று பிள்ளைகளை பெற்ற அவளுக்காக கணவனின் குணம் தெரியாது. பிள்ளைகளை வைத்து தான் மனைவியை கவுக்க நினைக்கிறான். அவனாக மனைவிக்கு தன்னை உணர்த்த நினைக்கவில்லை. எப்போதும் போல ஜெகன் தவறுகிறான். மீனா தன்னை பாதிக்காதவளாக காட்டிக் கொள்கிறாள். 

Advertisement

இரவு எட்டு மணி இருக்கும். ஜெகன் சீக்கிரமே வீடு வந்து விட்டான். கொஞ்ச நேரம் பிள்ளைகளோடு செலவிடலாம் அல்லவா… ஆனால், அவன் வந்த போது மீனா வீடு மிக அமைதியாக இருந்தது. எப்போதும் கேட்கும் பிள்ளைகள் சத்தம் கூட கேட்க வில்லை. 

Advertisement

புரியாமல் நின்றவன். சரி, மேலே சென்று வருவோம் என்று நினைத்தான். அப்போது தான் முகம் கழுவி இருப்பான்.. கீழே புகழ் அழுகும் சத்தம் கேட்டது. 

“என்னாச்சு” பதறி போய் கீழே வர, மீனா கத்தி கொண்டிருந்தாள். 

“எவ்வளவு பணம் கட்டி உன்னை படிக்க வைக்கிறேன். என்ன மார்க் எடுத்து இருக்க?.. எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுறேன். உங்களுக்கு என்ன குறை வச்சேன். சொல்லுடா?.. படிக்க மட்டும் தானா அம்மா சொன்னேன்” காதை பிடித்து திருகி, புகழ் காது வலியில் துடித்தான்.

Advertisement

தம்பியின் அழுகை சத்தம், தமிழுக்கும் பயத்தை கொடுத்தது. அவள் கொஞ்சம் தாயை உணருவாள். நன்றாக படித்தால் மட்டுமே மீனாவிடம் நல்ல பிள்ளையாக இருக்க முடியும். ஆனால், புகழ் கொஞ்சம் விளையாட்டு புத்தி…

தாயை அறிந்த தமிழ் தப்பித்து கொள்ள, புகழ் மாட்டி கொண்டான். “ஒவ்வொன்னுக்கும் ஆயிரம் செலவு இருக்கு. உங்களுக்கு செலவு பண்ண நான் என்னைக்காவது கணக்கு பார்த்து இருக்கேனா?.. எனக்கு இருக்கிற நிம்மதியே உங்களோட படிப்பு மட்டும்தான். அதையும் கெடுத்து தத்தி மாதிரி நீ நிப்ப இல்ல” மீனா கோபம் குறைய வில்லை. 

பரமு கூட பேரனை பார்த்து மருகி போய் நின்றார். மகளை தடுக்க முடியாது. அவ்வளவு ஆசையாக பிள்ளைகளை வளர்ப்பாள். ஆனால், இந்த படிப்பு விஷயம் வந்தா மட்டும் மீனா அத்தனை கண்டிப்பு..

“மீனா, அவன் குழந்தை தாண்டி.. இன்னும் பெரிய பையனனா நல்லா படிப்பான். இப்போ அவ்வளவு பக்குவம் கிடையாது மீனா. பாரு, தம்பி பயப்படுறான். இந்த ஒரு தடவை விட்டேன்” தயவாக கேட்டார் தாய்.

“அம்மா, நீ இதுல தலையிடாத.. அவனுக்காக நீ பேசுனா, அவன் தப்பை உணர மாட்டான். வேற எதுலையும் உன்னை ஏதாவது சொல்லி இருக்கேனா?.. நீயும் அவங்களுக்கு செல்லம் கொடுத்து கெடுக்குற.. என்னையாவது கண்டிக்க விடு” என்றவளின் கோபம் மட்டும் குறைய வில்லை. 

புகழும் அழுது கொண்டிருந்தானே தவிர, தன் அக்காவை போல அம்மாவை சரிகட்ட தெரியவில்லை. அவன் பார்வை எல்லாம் தன் அம்மாச்சியையே சுற்றி வந்தது, என்னை காப்பாற்று என்று… 

“இனிமே படிக்கிறேம்மான்னு ஒரு வார்த்தை சொல்றியாடா நீ… அப்படியே அவங்க அப்பன் திமிர்” என்று அவன் காதை திருக, வலியில் சத்தத்தை அதிகமாக்கினான்.

இனி எவ்வாறு பொறுப்பான் ஜெகன். அவசரமாக உள்ளே வந்தவன், மீனா விடமிருந்து பிள்ளையை பிடிங்கி கொண்டான். அவன் வருவான் என்றே அறியாதவள், கணவன் பிள்ளையை பிடிங்கி கொள்ளவும் அதிர்ந்து போனாள். 

“மீனா” என்று ஜெகன் அதட்டல் போட,

அவள் அசரவே இல்லை, “அவனை கீழ இறக்கி விடுங்க” 

“அவன் சின்ன பையன் மீனா, மெதுவா சொல்லி புரிய வை..”

“எம் மகனை எப்படி வளர்க்கணும்ன்னு எனக்கு தெரியும். உன் வேலையை பார்த்துக்கு போ…” குரல் இறுகி போய் மீனா பேச,

“உன் மாகனா?” ஏதேதோ கேட்டு அவள் வாயடைக்க நினைத்தவன். மாமியார், மகள் இருப்பதை கண்டு, நிதானித்து…

“சரி, உன் மகன் தான். ஆனா, சின்ன குழந்தை. நீ அடிக்கிறதால அவனுக்கு பயம் வருமே தவிர, படிப்பு வராது” 

“அம்மா அடிப்பானு பயந்தாலும் படிப்பான் தானே. எனக்கு அதுதான் வேணும்” ஜெகனுக்கு ஆயாசமாக இருந்தது. நீண்ட நாட்கள் சென்று மனைவி முகம் பார்த்து பேசுகிறாள். அது இப்படி வாக்குவாதத்தில் தொடங்கணும்…

“அம்மாவ பாத்து பிள்ளை பையன் தான் உன்கிட்ட ஒட்ட மாட்டான்”

“என்கிட்ட ஒட்டாம கூட போகட்டும். ஆனா, அவன் படிக்கணும்” என்றாள் வீம்பாக,

“மீனா, முட்டாள் மாதிரி பேசாதா” அவளுக்கு புரிய வைக்க முடியாமல் ஜெகன் சொல்ல,

“ஆமா மீனா முட்டாள் தான். அதனால தான் அடுப்பு கறியில வெந்து சாகுறேன். எம் மகனாவது ஆபிஸரா போய் உட்காரட்டுமே!.. எங்கப்பா கூலி வேலை பார்த்தாரு.. ஆனா, நான் நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்னு நினைச்சாரு. எங்க வீட்டிலேயே பொம்பள பிள்ளைன்னு கூட பாக்காம என்னதான் படிக்கவும் வச்சாரு”

“ஆனா, நான் என்ன பண்ணுனேன். கத்துனது எல்லாம் கழுதைக்கு, திட்டுனது எல்லாம் திண்ணைக்குன்னு மயக்கதுல சுட்திட்டு, இன்னிக்கு மசால் அறைக்குற வேலை பார்த்துட்டு இருக்கிறேன்” ஆதங்கமாக மீனா சொல்ல,

 ஜெகன் வந்த புன்னகையை இதழுக்குள் அடக்கினான். யார் மேல் உள்ள மயக்கத்தில் சுற்றினாள்? அவன் அல்லவா… கொஞ்சம் இனிமை தான்.

 தன்னைக் கேலி செய்கிறானோ என்று நினைத்தவள், “சார் மட்டும் அப்படியே படிச்ச படிப்புக்கு தகுந்த வேலைக்கு போயிட்டீங்களாக்கும்? நீங்க ஓடுன ஓட்டத்தை எல்லாம் மறந்துட்டீங்களா?” நேருக்கு நேராக நிமிர்ந்து கேட்க. 

மனம் பாரமானது கணவனுக்கு… உண்மைதான் மீனாவும் சரி ஜெகனும் சரி கல்லூரி எல்லாம் சென்றார்கள். இவ்வளவுக்கும் மீனாவை விட ஜெகன் அதிகம் படித்தவன். ஆனால், என்ன நன்றாக படிக்காதவன். அந்த வயதில் பாஸ் பண்ணியதை பெரிய சாதனையாக இருக்க, எதிர்காலம் குறித்த கவலை இல்லை. படிப்புக்கு தகுந்த வேலையை தேடும் பொழுது தான் தன் லட்சணம் தெரிந்தது. படிப்பு மீதான மனைவியின் அக்கறையெல்லாம் சரிதான். ஆனால் எந்த வயதில் பிள்ளைகளை கண்டிப்பது? 

“நீ சொல்றது சரிதான் மீனா. ஆனா, நம்ம புகழ் சின்ன பையன்” என்று தொடங்கும் போதே, 

“அவன் கண்டிப்பா படிச்சு தான் ஆகணும். அவனுக்கு வேற ஆப்ஷனே நான் கொடுக்கல. எனக்கு கூடத்தான் மலை மாதிரி எங்க அப்பா இருந்தாரு, தூண் மாதிரி எனக்கு மூணு அண்ணன்ங்க இருந்தாங்க. மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளை, சொந்தத்துல கல்யாணம், உள்ளூரிலேயே வீடு. எல்லாம் நிறைவா இருந்தது. வறுமையெல்லாம் எனக்கு வராது என்று தான் நானும் நினைச்சேன். கையில ஒன்னு, இடுப்புல ஒன்னும் வயித்துல ஒன்னுன்னு பசியோட அலையும் போது தான் வறுமை புரிஞ்சது. இத்தனைக்கும் எல்லாரும் இருந்தும் நான் அனாதையாத்தான் நின்னேன். எத்தனை பேர் கையை எதிர்பார்த்தேன் தெரியுமா? நான் மட்டும் வயசுல இந்த காதல் கன்றாவி பக்கமெல்லாம் போகாம படிச்சிருந்தா?.. படிப்புக்கு தகுந்த வேலை இருந்தா?… என்னைக்கோ நிமிர்ந்து நின்னு இருப்பேன். மண்புழு மாதிரி ஒரு காலத்துல நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சா?” என்று முந்தானையில் கண்களை துடைத்துக் கொள்ள,

மீனா என்றான் நெஞ்சடைக்க, 

அவனை சட்டை செய்யவே இல்லை அவள், “இந்த உலகத்துல நாம தனியாத்தான் வந்தோம். எத்தனை சொந்த பந்தம் இருந்தாலும் ஏதோ ஒரு கட்டத்துல இந்த வாழ்க்கையை நாம தனியா போராடித்தான் ஆகணும். முப்பது வயசு கூட ஆகல எனக்கு.. என் வாழ்க்கை ஒரு வட்டத்திலே முடிஞ்சு போச்சு. நான் பாக்குறது அத்த கூலி வேலை தான். இதுல எனக்கு கிடைக்கிற தைரியமும், நிமிர்வும் அதிகம். என்னை விட நீங்க எவ்வளவோ படி உயரத்துல நிக்கிறீங்க”

“மீனா”

“சாதாரண சமையல் வேலை பார்த்து என்னால தன்மானத்தோடு உங்களை எதிர்த்து நிற்க முடியுது. இதுவே என் பிள்ளைக படிச்சு ஒரு நல்ல நிலைமையில் இருந்தா? எங்க அப்பா கூட எனக்கு அவ்வளவு நகை போட்டு சீர் செய்து கல்யாணம் பண்ணி வச்சாரு. கடைசில என் கழுத்துல அரை பவுன் தங்கம் கூட நிலைக்கல. நானும், என் பிள்ளைங்க நல்லா வாழனும்னு தான் நினைக்கிறேன். ஒருவேளை அவங்க விதி என்னை மாதிரி இழுத்துக் கொண்டு வந்து விட்டுட்டா? நான் பட்ட கஷ்டம் அவங்க படக்கூடாது. அதுக்குத்தான் படிக்க சொல்றேன். இவங்க மூணு பேரும் படிச்சு தான் ஆகணும்” என்று உறுதியாக சொல்ல,

ஜெகனுக்கு சொல்ல முடியாத வேதனையும் பெருமூச்சும் எழுந்தது. எங்கு சென்றாலும் அவள் வாழ்க்கையோடையே எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி பார்க்கிறாள். மனைவி சொன்ன இவ்வளவு விளக்கத்தையும் கணவனாக அவன் புரிந்து கொள்ள முடியும். ஐந்து, ஆறு வயதில் இருக்கும் பிள்ளைகள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்.  

இன்னமும் தன் கழுத்தை கட்டிக்கொண்டு அழும் மகனைப் பார்த்தவன், பயந்து போய் நின்று இருந்த மகளையும் அழைத்து கொண்டு மேலே தன் வீட்டுக்கு சென்று விட்டான்.

மீனா அவர்களை தடுக்க வில்லை. நான்கு வருடத்திற்கு பின்னானா கணவனுனான பேச்சும், நேர் கொண்டு அவன் முகத்தை பார்த்ததும் அவளை பாதிக்க செய்தது. 

பிள்ளைகளை சமாதானம் செய்து உறங்க வைத்த ஜெகனுக்கும் மனைவியின் ஞாபகம் தான். அவள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஜெகன் மட்டும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்திருந்தால் இப்படி மனைவியும், மக்களும் கஷ்டப்பட்டு இருக்க தேவையில்லை. வாழ்க்கையை வாழத் தெரியாமல் அலங்கோலம் ஆக்கிக் கொண்டான். 

அதிகாலையிலே ஜெகனுக்கு முக்கிய வேலை இருக்க, உறங்கும் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு கீழே வந்தான். அவன் வரும் போதே மூன்று மணி. எவ்வாறு மனைவியை எழுப்ப என்ற யோசனையில் ஜெகன் கீழே வர,

அதற்கு அவசியமே இல்லை என்பது போல மீனா சமையலுக்கு தேவையான பாத்திரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். பார்த்ததும் ஜெகனுக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அவன் தோல்வியின் பிரதிபலனை மனைவியின் கஷ்டத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான். உள்ளறைக்கு சென்று பிள்ளைகளை உறங்க வைத்தவன் வெளியில் வர, கணவன் அரவம் கண்டாலும் மீனா எதுவும் பேச வில்லை. காய்கறிகளை பிரித்து எடுத்துக் கொண்டிருந்தாள். 

மனிதன் வாழ்வதே மூன்று வேளை நல்ல உணவிற்கும், நல்ல உறக்கத்திற்கும் தான். அதைக் கெடுத்துக் கூட ஒரு பெண் ஓட வேண்டும் என்றால் ஒரு ஆண் சரியில்லாதவன். பிள்ளைகளிடம் மீனா காட்டும் கண்டிப்பின் அவசியத்தை உணர்ந்தான். முன்பும் இதே போல சிரமப்பட்டு இருக்கிறார்கள் தான். ஆனால், அப்போது எல்லாம் தோள் கொடுக்க கணவன் இருந்தான். கணவனும் உடன் இல்லாமல் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வளர்க்கும் பெண்களுக்கு எவ்வளவு வலிமை இருக்க வேண்டும். 

ஜெகன் பார்ப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா. ஆனால், எவ்வளவு நேரத்துக்கு அப்படி இருக்க முடியும். எரிச்சலாக வந்தது. என்னதான் வேணும் இவனுக்கு?.. இவனுக்கு கழுத்தை நீட்டி மட்டும் மர ஊஞ்சலில் வைத்தா ஆட்டி விட்டான். அங்கும் இந்த பொழப்பு தானே. ஏதாவது சூடாக கொடுக்க என்னை திரும்பி பார்க்க, அவள் எண்ணம் புரிந்தவன் ஓடி விட்டான். 

“பரதேசி பைய..” 

சரியாக சாப்பிடும் நேரத்திற்கு தான் ஜெகன் வந்தான். எங்கு சுற்றினாலும் மீனா கையில் தான் உணவு வேண்டும். அதனால் எவ்வளவு தூரம் தள்ளி இருந்தாலும் சாப்பிடும் நேரம் மட்டும் மனைவி கையால் சாப்பிட ஓடி வந்து விடுவான். 

ஒரு காலத்தில் அவனுக்கு பிடித்ததை செய்து வைத்துக் கொண்டும் மாமா மாமா என்று அவன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் முகத்தை தூக்குவதென்ன கழுத்தை திருப்புவதென்ன, உப்பு குறைந்தால் கூட தட்டை பறக்க விடுவாவதென்ன.. வக்கணையாக மனைவி செய்தாலும் அவன் வாயில் ஆயிரம் குறை வரும். இன்னைக்கு ஆயிரத்தெட்டு வேலை கிடைத்தாலும் அதையெல்லாம் தூக்கி கடாசி விட்டு அவள் முறைத்துக் கொண்டே தரும் நாலு இட்லிக்கு முகத்தை தொங்க போட்டு கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். நினைத்ததும் லேசான சிரிப்பு வர, எப்போதும் போல அவனின் சேர் எடுக்க உள்ளே சென்றான். 

அங்கு தமிழ் எழுதிக் கொண்டிருக்க, புகழ் வடைக்கு தகுந்த மாதிரி பேப்பரை வெட்டிக் கொண்டிருந்தான். மகன் வேலை செய்கிறான். அதிர்ந்து போய் மனைவியை பார்த்தான். மீனா பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தாள். 

ஜெகனுக்கு மனைவி கற்பிக்கும் பாடம் புரிந்தது. ஒன்று நன்றாக படிக்க வேண்டும் இல்லையென்றால் நன்றாக உழைக்க வேண்டும். இதில் ஏதோ ஒன்று தெரிந்தால் மட்டும் தான் இந்த உலகத்தில் ஓட முடியும். அதைத்தான் அவள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முயற்சிக்கிறாளா?  

மனது தாங்கவில்லை ஜெகனுக்கு.. மனைவி அநியாயம் செய்வதாகவே உணர்ந்தான். மகனை பார்க்க, சிரித்த முகமாக வேலை செய்தான். 

வேலை கூட செய்கிறேன். படிக்க மாட்டேன் என்கிறான்?.. அடப்பாவி அப்பனுக்கு தப்பாம இருக்கியேடா என்று சலிப்பாக நினைத்துக் கொண்டவன் மகனை தூக்க,

“அப்பா, நானு” என்று பின்னாடியே வந்து விட்டாள் தமிழ். சின்ன சிரிப்போடு இருவரையும் அழைத்துக் கொண்டு மாடி ஏறி விட்டான். 

இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று சுற்று வட்டாரத்தில் தற்போது தெரிந்ததுதான். ஆனாலும், புதுசாக பார்ப்பது போல் ஜெகன் பிள்ளைகளை தூக்கும் போதெல்லாம் பார்த்து வைப்பார்கள். 

இருவரையும் மேலே விட்டவன், மீனாவின் கை காலுக்குள் தவழ்ந்து கொண்டிருந்த கனியை வந்து தூக்க, 

“எட்டே காலுக்கு ஸ்கூல் பஸ் வரும்” என்றாள் அறிவிப்பாக, லேசாக சிரித்தவன் தலையாட்டி மேலே சென்றான். 

தமிழ், புகழ் இருவருக்கும் தந்தை என்று நன்றாகவே அடையாளம் தெரியும். கனிக்கு மட்டும் தான் தெரியாது. ஆனால் தன் அண்ணன், அக்காவை பின்பற்றி ஜெகனோடு நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மீனா தடுப்பாள் சண்டை போடுவாள் என்று ஜெகன் எதிர்பார்க்க, அவ்வாறு இல்லாமல் அவள் கண்டு கொள்ளவே இல்லை. ஒருவேளை தடுத்தால் மட்டும் என்னவாகிவிடப் போகிறது என்று நினைத்தாளோ?…

சிறிது நேரத்திலேயே ஜெகனோடு வேலை பார்ப்பவன் அவசரமாக கீழ இறங்கி சென்றான். மீனா புரிந்து கொண்டாள் பிள்ளைகளுக்கு கண்டதையும் வாங்கி கொடுப்பான் என்று…

சரியாக எட்டு மணிக்கு பிள்ளைகள் குளித்தே வர, உடையை மாற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். அடுத்த அரை மணி நேரம் தீவிரமாக கடை நடக்க, மீனா மேலே ஒரு பார்வை பார்த்து கொண்டாள். ஜெகன் இன்னும் வர வில்லை. ஒருவேளை பிள்ளைகளோடு உண்டு இருப்பான் என்று நினைத்தவள், எடுத்து கடையை ஏற கட்டினாள்.

ஆனாலும், ஒரு மனம் சொன்னது அவன் உன் கையை தாண்டி வேறு எங்கும் உண்ண மாட்டான் என்று.. அசால்டாக தட்டிவிட்டு இருந்த ஐந்து இட்லியை எடுத்து தன் தட்டில் வைக்கப் போக, ஜெகனின் காலடி சத்தம் கேட்டது. அவசரமாக எடுத்ததை பாத்திரத்தில் வைத்து விட்டாள். வந்தவன் வெளியில் யாரும் இல்லாமல் மெல்ல எட்டிப் பார்த்தான், “இன்று என்ன இவ்வளவு சீக்கிரமாக கடையை மூடிவிட்டாள்?”

மீனா மட்டும் ஏதோ வேலை இருக்கிறது போல் அமர்ந்திருக்க, உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் மூடியிருந்த பாத்திரத்தை ஆராய்ந்து. அவனுக்கான உணவு மட்டும் மீதம் இருக்க ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டான். மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்து இருந்தாள். எப்பவும் போல வெளி வாராண்டாவில் சேரை போட்டு உண்டு முடித்தவன், லேசான தலையசைபோடு கிளம்பி விட்டான். இதையெல்லாம் பரமு பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

புருசன் மேல் அக்கறை பாசம் இல்லாமல் எல்லாம் கிடையாது. அப்புறம் ஏன் அவனைக் கண்டால் எரிந்து விழுந்து ஒதுங்கிப் போகிறாள். மகள் மனதில் என்னதான் ஓடுகிறது, புரியாமல் பார்த்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!