Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 6

“ஐய்.. அம்மா வந்தாச்சு!”  என்றபடி சந்தோஷ கூச்சலுடன் தன்னை வந்து மீனு கட்டிக் கொண்டதை உணர்ந்து கவிக்கு ஒரே திகைப்பு!

“இல்ல..மீனும்மா” என்று அவள் திரும்பி ஏதோ சொல்ல முயன்ற போது, அதற்குள் தான் மொபெட்டை நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஓடி வந்து விட்ட நந்தினி,

“சாரி டீச்சர்.. தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கே பின்னாடி இருந்து இப்ப உங்கள பார்த்தப்போ அப்படியே மஞ்சு மாதிரி தான் இருந்துச்சு!

மஞ்சு கிட்டயும் இதே மாதிரி நைட்டி இருந்துச்சு!  நீங்களும் அவளும் கிட்டத்தட்ட ஒரே ஹைட் அண்ட் வெயிட் இருக்கீங்க!



Advertisement

இந்த கொண்டை, நைட்டி போட்டுகிட்டு, உங்கள பார்க்கிறப்போ அப்படியே மஞ்சு மாதிரியே தான் இருக்கு பின்னாடி இருந்து பார்க்கிறப்போ!

மஞ்சுவும் இப்படி தான் இங்க வர்ற குருவிகளுக்கு தீனிப் போடுவா!

எனக்கே இப்படி ஒரு செகன்ட் தோனி இருக்கும் போது, பாவம் மீனு..அம்மா எப்ப வருவான்னு காத்திருக்கும் அவள் கண்ணுக்கு நீங்க அவ அம்மாவ போல தெரிஞ்சுருக்கீங்க! அதான் ஓடி வந்து கட்டிகிட்டா! ப்ளீஸ் டீச்சர்!  நீங்க  எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க!”

Advertisement

“ச்சே ச்சே. நான் அப்படி எதுவும் நினைக்கலைங்க. ஆனா பாவம் அவ! இப்பவும் அவ அம்மா வரல. என்னை தான் அவ அம்மாவா நினைச்சு கட்டிப்பிடுச்சுட்டான்னு அவளுக்கு புரியும் போது அவ ரொம்ப ஹர்ட் ஆகிடுவாளே! அதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளைக் கண்டு கொண்ட மீனுவோ, “அப்போ அம்மா இன்னும் வரலையா..?”  என்று உதடு பிதுக்கி  பெரிய குரல் எடுத்து அழவே ஆரம்பித்து விட்டது!

Advertisement

“டேய்.. டேய்.. குட்டிமா.. மீனும்மா.. அம்மா வந்துடுவாங்கடா.. நீ அழாதே.. சீக்கிரமே அவங்க உன்னைத் தேடி வந்துடுவாங்க.. உன்னை ரொம்ப நாள் விட்டுட்டு அவங்களால மட்டும் எப்படி அங்கேயே இருக்க முடியும் சொல்லு!

அழக் கூடாது என்ன?”  என்று அவள் கண்ணீரைத் துடைத்து அவளைத் தூக்கிக் கொண்டாள் கவி!

பக்கத்தில் நின்று கொண்டிருந்த நந்தினியின் கண்களிலும் கண்ணீர்! மீனு இப்படி அழுவதைக் காண முடியாமல்!

Advertisement

“அய்யோ.. நீங்க என்ன நந்தினி.. நீங்களே இப்படி அழுதா.. மீனுவை யாரு சமாதானம் செய்வா?” என்று சொல்லி அவளையும் உள்ளே அழைத்து சென்றாள் அவள்.

உள்ளே வந்த நந்தினி மீண்டும்  மஞ்சு போட்டோ இருக்கும் இடத்தில் போய் நின்று,

“ஏண்டி.. இப்படி படுத்துற? அப்படி எங்க தான் போய் தொலைஞ்ச? சீக்கிரம் வந்து தொலையேன்!

என்னால மீனுவை இப்படி எல்லாம் பார்க்க முடியல! என்னாலையே முடியலன்னா.. ரகு அண்ணனால் எப்படி முடியும்?

அதான் வீட்டுக்கே வர மாட்டேங்குது! நீ அப்படி எங்க தான் இருக்க? சொல்லு.” என்று ஆங்காரமாக கத்திவள்,

தினமும் தான் முயன்று பார்ப்பது போல மஞ்சுவின் நம்பருக்கும், மஞ்சுவிடம் கொடுத்திருந்த தன் போனிற்கும் அந்த வடிவேல் நம்பருக்கும் கூட அடித்து பார்த்தாள்!

வழக்கம் போல அவை எதுவுமே லைன் போகவில்லை!

“ச்..ச்” வெறுப்பாக போனை கட் செய்தாள் நந்தினி!

மீனுவை உள்ளே அழைத்து சென்று ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டி, போனில் கார்ட்டூன் வீடியோ போட்டுக் காட்டி, கையில் சாக்லேட் கொடுத்து அவளை ஒருவாறு அழுகையில் இருந்து மீட்டு விட்டிருந்தாள் கவி!

டீச்சர்ஸ் மேஜிக்!

குழந்தைகள் தாம் அவர்களுக்குப் பிடித்த டீச்சர் எது சொன்னாலும் கேட்பார்களே!

அந்த வகையில் ஒரு வாறு மீனு அழுகையை நிறுத்தியிருந்தாள்!

தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவர்களிடம் வந்த நந்தினி,

“சரிங்க டீச்சர். ரஞ்சிதா மீன் குழம்பு கொடுத்து விட்டுருக்கு. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நாங்க கிளம்புறோம். வா மீனு” என்று அவளை அழைக்க,

“நான் அப்புறம் வர்றேனே அத்தை..”  என்று  அவள் சிணுங்க,

“பாப்பா.. நீ இன்னும் சாப்பிடல. அங்க உன் அத்தை உன்னை இங்க விட்டுட்டு வந்திட்டா என்னை தான் திட்டும்! வா.. போலாம்..” என்க,

“இருக்கட்டுமே நந்தினி.. அவ இங்க ஏன் கூடவே வேணா சாப்பிடட்டும்! எனக்கும் தனியே குரங்கு மாதிரி தனியே உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா தான் இருக்கு!”

“என்னடி சொல்ற?” என்று நந்தினி மீனுவைக் கேட்க,

“ம்ம். சரி.. நான் டீச்சர் கூடவே சாப்பிட்டுக்கிறேன்” என்று தலையாட்டியது அது!

“சரி” என்று சொல்லி விட்டு நந்தினி கிளம்பி விட்டாள்.

“கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு போய்டணும். டீச்சரை ரொம்ப தொந்தரவு செய்யக் கூடாது. சரியா/’ என்றும் மீனுவுக்கும் சொல்லி விட்டு!

“சரி. நாம சாப்பிடுவோமா?’ என்று சொல்லி உள்ளே போய் மீனுவுக்கு சாதம் போட்டு குழம்பு ஊற்றி பிசைந்து கொடுத்தாள். மீன் சாப்பிட உதவினாள்!

குழம்பு மிகவும் ருசியாக தான் இருந்தது!

நந்தினி ஏற்கனவே சொல்லி இருந்தாள். ரஞ்சிதாவின் கைப்பக்குவம் பற்றி!

தாயில்லாத மஞ்சுவும் அவளிடமே சமையல் கற்றுக் கொண்டு அவளும் நன்றாக சமைப்பாளாம்!

ஆனால் ரஞ்சிதாவுக்கு மூட் நன்றாக இல்லா விட்டால் போதும்! சாப்பாட்டில் அது வெளி வந்திடுமாம்! இருவரும் ஒரு பிடி பிடித்தார்கள்!

சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் ஊஞ்சலில் இருவரும் ஆடினார்கள்.

பின் இருவருக்குமே கொஞ்சம் உண்ட மயக்கம் வந்து விட,

“ஒரு குட்டித் தூக்கம் போடுவாமா?” என்று கவி கேட்டாள்.

மீனு சரியென்று சொல்ல, இருவரும் பெட்ரூமுக்கு போய் நன்றாக ஏசியைப் போட்டுக் கொண்டு மதிய உறக்கத்திற்கு தயார் ஆனார்கள்!

கொஞ்ச நேரத்திலேயே மீனு நன்றாக தூங்கி விட்டது!

தூக்கத்தில் காலை கவியின் மேல் போட்டுக் கொண்டு அவளைக் கட்டிக் கொண்டு தூங்கியது!

கவிக்கு அவளை விலக்கி விடவே மனம் இல்லை!

அவள் தலையை வாஞ்சையோடு கோதி விட்டாள்!

அங்கே ஹாலிலோ, இதுவரை நந்தினியும் கவியும் இதுவரை சரியாக கவனிக்காமல் இருந்த, அந்த மஞ்சுவின் போட்டோவில் அவள் கண்களில் இருந்து இது வரை வழிந்து கொண்டே இருந்த கண்ணீர் இப்போது மேல் நோக்கி கண்களை அடைந்து பின் நின்றே விட்டது!

மீனுவைக் கட்டிக் கொண்டு கவியும் சிறிது கண் அயர்ந்தாள்.

—-

இரவு நேரம்! எட்டு மணி.

வானம் இருட்டிக் கொண்டு வந்தது!

அத்துடன் வேகமான காற்று நாலா பக்கமும் சுழற்றி கொண்டு அடித்தது!

வீட்டின் கொல்லைப் புறமாக கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை வேகமாக போய் எடுத்து வந்தாள் கவி.

 பின் கதவை சாத்தி, பூட்டு ஒன்றையும் போட்டு பூட்டி விட்டு சாவியை ஆணியில் மாட்டி விட்டு, முன்னே வந்து இரண்டு கேட்களையும் பூட்டி விட்டு, நிலைக்கதவையும் உள்புறமாக பூட்டு போட்டே பூட்டி விட்டு வந்து படுக்கையில் சாய்ந்தாள்.

இரவு பசியே இல்லை! எனவே இரண்டு ரஸ்க் மட்டும் சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்து இரவு உணவை முடித்துக் கொண்டு விட்டாள்.

மாலையே ரஞ்சிதாவே வந்து மீனுவைக் கூட்டிக்கொண்டு போய் விட்டாள்!

மதியமே தூங்கி விட்டதால் தூக்கம் வரவில்லை!

அம்மாவிடமும் தம்பியிடமும் போனில் பேசினாள்.

அவள் அம்மாவுக்கு தூக்கம் வந்து விட்டது!

தம்பியும் படிக்கிற வேலை இருக்கிறது என்று போனை வைத்து விட்டான்!

கவிக்கு பொழுது போகாமல் இருக்கவே, நந்தினி அவளுக்கு ஷேர் செய்திருந்த மஞ்சுவின் சமூக வலைத்தள பக்கங்களைப் பார்வை இட்டாள்!

விதமான விதமான ரீல்ஸ்! வ்லாக்கள்!

அத்தனையும் தோட்டம் பற்றியும், பூக்களைப் பற்றியும்!

அதற்கு முன் இருந்த பழைய வீடியோக்களில் படிப்படியான அவளது கர்ப்ப கால நிலைகள்!

ரசித்து ரசித்து பிள்ளையை பெற்று இருக்கிறாள் என்பது அந்த ஓவ்வொரு வீடியோக்களையும் பார்க்கும் போது கவிக்குப் புரிந்தது!

பின்னர் அவளது பூக்களைப் பற்றிய வீடியோக்கள்!

“இந்த கலர் பூ ரொம்ப ரேர். அந்த செடியை அப்படி கஷ்டப்பட்டு வாங்கினேன். இந்த செடி எனக்கு என் கணவர் என் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது!

இந்த செடி காதலர் தினப் பரிசு! கணவரின் பரிசு!

அந்த பூச்செடி நான் ஒரு ஹோட்டலில் சுட்டது!” என்று குறும்பாய் சில வீடியோக்கள்!

“இன்று என் கணவர் என் லவ்வை அக்செப்ட் பண்ணிய நாள்! சோ செலிபிரேசன்”! என்று கேக் வெட்டும் வீடியோ!

“இதோ ஹாஸ்பிடல் போறேன்! டெலிவரி முடிஞ்சு வந்து மீட் பண்றேன்” என்று கூட ஒரு வீடியோ!

எல்லா வீடியோக்களிலும் மாமா மாமா என்று ஒரே மாமா புராணம் வேறு!

கவி மேலும் இருந்த சில வீடியோக்களை தள்ளி விட்டு, கடைசியாக அப்லோட் செய்யப்பட்ட வீடியோவை க்ளிக் செய்து பார்த்தாள்!

“உங்களுக்கு மழை பிடிக்குமா? மழை யாருக்கு தான் பிடிக்காது!

எனக்கு மழையையும் பிடிக்கும்! மழை பெய்தால் பூத்துக் குலுங்கும் இந்த ரெயின் லில்லி பூக்களையும் ரொம்ப பிடிக்கும்!

என்கிட்ட ஏகப்பட்ட கலர்களில் பல விதமான ரெயின் லில்லி பூச்செடிகள் இருக்கு!

இதோ இதப் பாருங்க.. இது  ஆப்பிள் ஜேக், இது டபுள் லோட்டஸ், இங்க பாருங்களேன் இது கோல்டன் காம்பஸ்! இதுக்கு பேர் ஆரஞ்ச் ஸ்பை ய்…..

அப்புறம் இவங்க பேர் செக்ஸி! என்கிட்ட இப்படி ஏகப்பட்ட ரெயின் லில்லி கலெக்சன்ஸ் இருக்கு!

எத்தனை கலர்ஸ் இருந்தாலும் என்னோட ஆல்’டைம் ஃபேவரிட் எல்லோ கலர் ரெயின் லில்லி தாங்க!

எனக்கு எல்லோ கலர் தான் ரொம்ப பிடிக்கும்!

இங்க இவ்வளவு கலர்ஸ் பூச்செடி வச்சுருக்கேன்ல. இது எல்லாம் என்னோட வீட்டின் முன்னாடி இருக்கிற தோட்டம்!

ஆனா எனக்கு ரொம்ப ஸ்பெசல், என்னோட மாடித் தோட்டம்!

ஆமா டெரஸ் பூராவும்.. ஃபுல்லாவே வெறும் மஞ்சள் லில்லி பூக்கள் மட்டுமே!

அடுத்த மழை மட்டும் பெய்யட்டும்!

அதில் எல்லாம் பூ பூத்து மாடி பூராவும் அப்படி மஞ்சள் காடா இருக்க போவுது!

அப்புறம் இந்த மஞ்சள் காட்டு மைனாவை.. சாரி சாரி மஞ்சள் காட்டு மஞ்சுவ அடுத்த வீடியோவில் பார்க்கலாம்! இப்போதைக்கு மாமா காலிங்.. சோ.. பை..” என்று கடைசி வீடியோ முடிந்து இருந்தது!

கவிக்கு இப்போது தூக்கம் வந்து விட்டது!

‘மீனு குட்டி இந்நேரம் தூங்கி இருக்குமா? அதுவும் தானே என்னோடு மதியம் தூங்கியது? எனக்கே தூக்கம் வந்துடுச்சே! அப்போ அதுவும் தூங்கி இருக்கும்! டின்னர் சாப்பிட்டு இருக்குமோ இல்லையோ! பேசாமல் அவளை இங்கே நம்மோடு வச்சுருந்து இருக்கலாம்!

ஆனால் அது எப்படி முடியும்?

அவங்க அப்பா வந்து போனில் பேச அழைத்தால்?

ரொம்ப ஆசைப்படாதே கவி! என்ன இருந்தாலும் அவ ஊரான் வீட்டுப் பிள்ளை! ஓரளவு தான் நீ ஆசைப்படலாம்!’

என்று அவளே அவளைத் திட்டிக் கொண்டு கண் மூடினாள்!

வெளியே மழையுடன் காற்றும் போட்டிக் போட்டுக் கொண்டு அடித்துக்கொண்டு இருந்தன!

அடித்த காற்றில் அந்த வீட்டின் மாடியில் ஓரமாக இருந்த குப்பைகள் எல்லாம் மழைத் தண்ணீர் கீழே இறங்கும் குழாய் அருகே குவிந்து இருந்தன!

அதில் உடைந்து போய் இருந்த மொபைல் போன் கேசும்!

அடுத்த மழை வேகமாக அடித்துப் பெய்ய, அந்த பிளாஸ்டிக் துண்டு தண்ணீரில் அடித்துக் கொண்டு போய் கீழே தோட்டத்து செடி அருகே விழுந்து மண்ணில் செருகி கொண்டது!

மேலே மாடியில் ஒரு மண் தொட்டிக்கு  கீழே அந்த தொட்டியின்  விரிந்த விளிம்பு இடைவெளியில் ஒரு பிளாஸ்டிக் கவர் துண்டுக்கு இடையில் ஒரு சிறிய மெமரி கார்ட்!

இத்தனை காற்றுக்கும் மழைக்குமே தப்பித்து அந்த சிறிய புகையிலை கவருக்கு உள்ளே நனையாமல் செருகி இருந்தது!

மாடியில் இருந்த தொட்டிகளில் இருந்த செடிகளில் காய்ந்து போன வெங்காயத் தாள்களைப் போல இருந்த மஞ்சள் லில்லி பூச்செடிகளோ மழையைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில்!

—–

“அம்மா.. அப்பா கிட்ட சொல்லும்மா.. டவுனுக்கு தான் டுயுஷன் அனுப்ப மாட்டேன்கிறார் அப்பா. இங்க உள்ளூர்ல தானேம்மா போக கேக்குறேன்! அதுக்கு கூட அனுப்பலன்னா எப்படிம்மா? அவங்க ஃபீஸ் கூட வாங்க மாட்டாங்கம்மா.” அம்மாவிடம் சிபாரிசுக்கு வந்திருந்தாள் கனிகா.

பத்தாம் வகுப்பு மாணவி!

கவியிடம் டுயுஷன் படிக்க தான் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்!

ஆனால் அவள் அப்பாவோ, “ஃபீஸ் கொடுக்க வக்கு இல்லாம போகல இந்த பண்ணை பரமசிவத்திற்கு!

அங்க.. அந்த வீட்டுக்கு போய் படிக்க வேண்டாம். அவ்வளவு தான்! எல்லாம் வீட்டில் இருந்து என்ன படிச்சு கிழிக்க முடியுமோ அந்த அளவு படி போதும்!”

“ஆனா நீங்க ரொம்ப மோசம்பா.. உங்களுக்கு அஸ்வினி அக்கா தான் எப்போதும் உசத்தி! அவங்கள மட்டும் வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி வச்சுருக்கீங்க! என்னை மட்டும் விடாதீங்க!”

“அவ.. அவ அப்பா வழி சொந்தக்காரங்க வீட்டுக்கு நாக்பூர் போய் இருக்கா! உன்னை அப்படி அனுப்ப முடியுமா?” என்று சொல்லி மகளிடம் கடுப்படித்தார் பரமசிவம்!

அஸ்வினி அவரின் சகோதரியின் மகள்! சகோதரியும் அவள் வடகத்திய கணவனும் கொரோனா காலத்தில் இறந்து விட்டிருக்க, அஸ்வினியை அழைத்து வந்து விட்டார் அவர்!  அவருக்கே விருப்பம் இல்லா விட்டாலும் கூட மனைவியின் வற்புறுத்தலால் அழைத்து வந்திருந்தார்!

மகளிடம் கோபமாக பேசி விட்டு, தன் ரூமுக்குள் போய் கதவை சாத்திக் கொண்டு, போனில் யாரிடமோ பேசினார்.

“எங்கடா இருக்காங்க. ஏதும் துப்புக் கிடைச்சுதா?

இங்க ஊருக்குள்ள எல்லோரும் அந்த பய, அந்த மஞ்சுவ இழுத்துட்டு ஓடிட்டதா பேசிக் கிட்டு இருக்காங்க. அவங்க அப்படியே நினைச்சுகிட்டு இருக்கட்டும்!

அந்த பய கையில் கிடைச்சா வெட்டிப் போட்டுட்டு வந்து ஏன் கிட்ட பேசுங்கடா..” போனில் கோபமாக பேசிக் கொண்டிருந்தார் அவர்

“அவளையா.. அந்த நாயை அடிச்சு இழுத்துட்டு  வாங்க. அப்புறம் நான் பேசிக்கிறேன்! இப்ப சீக்கிரம் அதுங்க ரெண்டையும் பிடிக்கிற வேலையை சீக்கிரம் பாருங்க”. என்று சொல்லி போனை வைத்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் அவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!