“வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு என்னிக்குமே நா ‘ எஸ்’ சொல்லவே மாட்டேன்”என்று தனது பெற்றவர்களிடம் முடிவாக சொல்லிவிட்டாள் சீதா அவளது அடிபட்ட மனம் இன்னமும் காதல் தோல்வியை ஏற்கமுடியாமல் தவிப்பது அவளது பெற்றவர்களுக்கு நன்றாக தெரியும். மகள் காதலித்ததே தவறு என்ற ரீதியில் இருப்பவர்களிடம் எதை சொல்லி புரியவைக்க முடியும் என்று சீதாவும் அந்த விஷயங்களை பேசாமல் அமைதியாக இருக்கிறாள்.
அவளது மனதின் இன்னொரு பெரிய குழப்பம் அவளும் லியோ ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து சில காலம் வாழ்ந்த விஷயத்தை பற்றி பெண் பார்க்க வரும் பையனிடம் சொல்வதா..வேண்டாமா..என்பது.இதை பற்றி பெற்றவர்களிடம் பேசுவதற்கு அவள் தயாராக இல்லை. எப்பவாவது கொஞ்சம் புரிந்துகொள்ளும் சாத்தியம் உண்டு.அம்மாவுக்கு..ம்ஹும்…நேரம் கிடைக்கும் பொழுதுகளிலும்,அவளது சொற்களுக்கு கீழ் படியாத பொழுதுகளிலும் வார்த்தைகளில் குத்தி கிழித்து விடுவாள்.
சீதாவை பொறுத்தவரை இப்போதும் அந்த பொழுதுகள் பொக்கிஷங்கள் தாம். லியோ அவளை எப்படி தங்கினான் என்பதை வெறும் வார்த்தைகளை விட்டு நிரப்பிவிட முடியாது. அந்த நேரத்தில் சீதா உணர்ந்த விஷயம்,இருவருக்குள்ளும் இருப்பது வெறும் காமம் மட்டும் இல்லை.காதலை சொல்லும் ஒரு ஊடகமாக தான் கலவி பொழுதுகள் இருந்திருக்கிறது. நேராக லியோ தனது பெற்றவர்களை அழைத்து வந்து பெண் கேட்டது அதற்க்கான சாட்சி.பிறகு எதற்காக அவன் வேறு பெண்ணை மணம் முடித்தான் என்பது இன்று வரை சீதாவை பொறுத்தவரை ஒரு கேள்விக்குறியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.சமீபத்தில் லியோவின் முகநூல் பக்கத்தில் அவன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமெரிக்க பயணம் சென்ற பொழுது எடுத்துக்கொண்ட பயணங்களின் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறான்.அவன் முகத்தில் தான் எவ்வளவு சந்தோசம்!
Advertisement
தான் மட்டும் எதற்க்காக இன்னமும் பழைய நாட்களை எண்ணி மருகிக் கிடைக்கவேண்டும்?தனிமையை துக்கமாக ஏற்கவேண்டும் என்று பெரிய கேள்விக்கு தான் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருக்கிறாள்.அவளுக்கும் கணவனுடனான ஒரு அழகான காதல் வாழ்க்கை தேவை. குறைந்தது அக்கா ஜானகியை போல தானும் கூட இரண்டு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள் . பிரான்சில் இருக்கும் மற்றொரு தோழியிடம்,”பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் லியோ குறித்து சொல்லிவிடலாமா’ என்று சீதா கேட்டதற்கு அந்த பெண் பதறிப் போனாள் .
“உனக்கு என்ன பைத்தியமா சீதா? இங்கே நீ இருக்கும் பொழுது நடந்த ஒரு விஷயம்.உன்னை பொறுத்தவரை அழகான,ஆழமான உறவு. வரபோற பையனும் அப்படியே ஏத்துக்கணும்னு எதிர்பாக்குற? அது நடக்காது. எதையாவது உளறி வைக்காதே!என்று புத்தி சொன்னாள் . அதற்குப் பிறகு சீதா அந்த விஷயங்களை மறந்தும் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று உறுதி கொண்டாள் .
ஆனால் எப்படியும் மீண்டும் அயல் நாடு சென்று வாழ்வது பற்றிய எண்ணங்கள் அவளுக்கு ஒருவித சலிப்பை கொடுத்து இருந்தது. ஏற்கனவே பலவருஷங்கள் வெளிநாட்டில், அவ்வப்பொழுது அண்டை மாநிலங்களில் என்று கழித்த அனுபவம் வேறு. இந்தியாவுக்குள் எங்கே என்றாலும் பரவாயில்லை என்பதுதான்.எப்படியும் வேலையை விடும் எண்ணம் இல்லை.இவ்வளவு வருஷங்களாக உழைத்து இப்போது ப்ராஜெக்ட் ஹெட் என்ற நிலைக்கு வந்திருக்கிறாள்.அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு செல்ல முடியாது என்று யோசித்தாள் .
Advertisement
இன்னொரு புறம் ராதா பார்க்கும் வரன்களில் ,நன்றாக படித்து வேலைக்கு செல்லும்,லகரங்களில் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைகளின் எதிர்பார்ப்பும் வேறு மாதிரி இருந்தது. அவர்களுக்கு இன்னமும் சம்பாதிக்க வேண்டும் .வெளிநாடுகளில் சென்று நிரந்தரமாக தங்கிவிடவேண்டும் போன்ற எண்ணங்கள். முதலில் அவர்கள் அனேகமாக தங்கள் பெற்றவர்களையே தங்களுடன் வைத்துக் கொள்ள பிரியம் கொள்ளவில்லை. வரும் மனைவியுடன் தங்கள் உறவு. அதற்குமேல் மற்றவர்கள் எல்லாம் தொல்லை என்பதுபோல சில பையன்கள் .ராதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
Advertisement
மணமகன் தனது பெற்றவர்களை எங்கே வைத்துக்கொள்வது,பராமரிப்பது என்பதெல்லாம் அவர்கள் பாடு.அதுபற்றி நாம் பேச முடியாது.பெண்ணை சார்ந்தவர்களும் தள்ளி நிற்க வேண்டும் என்றால்? அது எப்படி என்று யோசித்தாள் . இவர்களுக்கு பிடித்தால் மணமகன் தரப்பில் வேண்டாம் என்றார்கள்.மணமகன் தரப்பில் சரி என்று சொன்னால் ராதாவுக்கு சுத்தமாக பிடிப்பது இல்லை. கிருஷ்ணன் ஆரம்பத்தில் பெண்ணின் திருமண விஷயத்தில் தலையிட்டார்.பிறகு ராதா அவரின் முகத்துக்கு நேரேயே சொல்லிவிட்டாள் .”உங்களுக்கு நடப்பு புரியல. காலம் மாறி போனதுக்கு ஈடா மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு தெரியல. நெருங்கி வரும்பொழுது பொண்ணுக்கு அப்பாவா, லட்சணமா சபைல வந்து நில்லுங்க.போதும்.”
அதற்குப் பிறகு மறந்தும் சீதாவின் திருமண விஷயத்தில் தலை கொடுப்பது இல்லை.அதற்கும் ராதையிடம் திட்டுக்கள் விழுகிறது. என்னதான் செய்வார் மனிதர் பாவம்!
ஆறு வருஷங்களாக சல்லடை போட்டு தேடியும் ஒரு வரனும் தகையவில்லை. சீதாவுக்கு இப்போது திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகள் மழுங்கத் தொடங்கி விட்டிருந்தது. அதிகமாக வேலை பளு.அதன் காரணமாக முடி உதிர்வு. சரியான உணவு முறை இல்லை. எடை கூடிப் போனது.ஜிம் சென்று பயிற்சி செய்கிறாள். முகத்தில் லேசாக கவனித்தால் மட்டும் தெரியும் அளவுக்கு சுருக்கங்கள் . கண்ணை சுற்றி படர்ந்திருக்கும் கருவளையம். முன்புபோல் இல்லாமல் கொஞ்சம் முடி உதிர்ந்து விட்டது. மேக் அப் சாதனங்களுக்கு நன்றி.அவளது உடல் மாறுதல்களை மாற்றி காட்ட அவைதான் முழு மூச்சில் செயல் படுகின்றன.
Advertisement
நடுவில் கிருஷணன் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.ராதாவும் அவரும் சேர்ந்து இப்போது நிறைய கோவில்களுக்கு சென்று வருகிறார்கள். ராதாவிடம் கேட்டால் பெண்ணுக்கு திருமணம் கூடி வரவில்லை.துக்கம் தாங்காமல் கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறேன் என்கிறாள். கிருஷ்னனின் காரில் தான் சென்று வருகிறார்கள். பெட்ரோல் தண்ணீர் போல செலவாகிறது.பணத்திற்கு குறைச்சல் இல்லை எனும் பொழுது கணக்கு பார்க்கவேண்டியது இல்லையே!
இதற்க்கு நடுவில் ஜானகி -ராகவன் குடும்பத்துடன் இப்போது நாக்பூரிலிருந்து தெலுங்கானா வந்து விட்டார்கள். ராகவன் இப்போது சீதா வாங்கும் சம்பளம் வாங்குகிறான். அவர்களின் வாழ்க்கை தரம் நன்றாகவே கூடி இருந்தது. ஜானகி ,குழந்தைகளின் பள்ளி விடுமுறை சமயங்களின் சென்னை வந்து ஒருமாதம் தங்கிவிட்டு செல்கிறாள். அதுவும் கிருஷ்ணன் அவளுக்கு அலை பேசியில் அழைத்து நிறைய புத்திமதிகள் சொன்ன பிறகுதான். இவள் சென்னை வரும் பொழுது ராகவனின் தங்கை தமது குழந்தைகளுடன் அம்மா அண்ணாவுடன் தங்கிவிட்டு செல்வாள். அவளும் வேலை பார்ப்பதால் ஒருவாரம் தாம் அம்மா வீட்டில் இருக்க முடியும்.அதிலும் அவளது கணவர் இப்போது தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.மாமியார் மாமனார் என்று அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால் அதிகநாட்கள் தங்க முடியாது.
ராகவனின் அம்மா பிள்ளை வீட்டில் சில மாதங்கள் தங்கிவிட்டு ,பெண்ணின் வீட்டில் சில நாட்கள்.பிறகு சென்னையில் சில மாதங்கள் என்று இருக்கிறார். அவர்களுக்குள் உறவு பராமரிப்பு ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கிருஷ்னன் கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்து போனது.
கிருஷ்ணனுக்கு மாவுக்கட்டு போட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். பெரும்பாலும் மருந்தின் வீரியத்தில் உறக்கம்தான். அதனால் வலியின் பாதிப்பு தெரியவில்லை. ஆனால் அவருக்கு இருக்கும் இடத்திற்கு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோய் தரவேண்டும்.இயற்க்கை உபாதை,குளியல் என்று ஆரம்பத்தில் காலையில் ,மாலையில் இரு வேளையும் கவனிக்கவென்று தனித்தனி ஆண் கவனிப்பாளர்களை போட்டு கவனித்துக் கொண்டாள் சீதா. அவளுக்கு நிச்சயம் அலுவலக வேலைகளை தவிர இது போன்ற விஷயங்களை கவனிக்க நேரம் கிடையாது.ராதாவுக்கு ஏற்கனவே வயதும் ஏறுகிறது. அதற்க்கு தகுந்தவாறு சர்க்கரை இருநூறை அனாயசமாக கடந்துவிடும். அதற்க்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதும்,நடைப் பயிற்சி செய்வதுமாக அவரால் தன்னை மட்டும் சீராக கவனித்துக்கொள்ள முடியும்.அவ்வளவுதான்.
குறைந்தது சாதாரண நிலைக்கு கிருஷ்ணன் வந்து எழுந்து நடக்க நான்கு முழு மாதங்கள் தேவை என்றுவிட்டார் மருத்துவர். கிருஷ்ணனுக்கு வீட்டில் சும்மா அமர்ந்திருப்பது வேறு ரத்தக்கொதிப்பை அதிகரித்தது.அவரை பார்க்கவென்று அடிக்கடி சுதாவும் அவளது கணவரும் மட்டும் வருவது. அவர்களின் பிள்ளைகள் இங்கே எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்.ராதா அதற்கும் நொடித்துக் கொள்வது தான். சுதா எதையும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டாள். காலம் மாறும் பொழுது ,புது உறவுகளை சந்தித்து பழகும் பொழுது பழைய உறவுகள் சற்று பின்னே சென்று விடுவது இயல்புதானே.
திரும்ப கேட்க முடியும்,”திருமணம் முடிந்து சென்ற பிறகு ஜானகி எத்தனை முறை மாமா -அத்தையை பார்க்கவென்று அவர்கள் வீட்டுக்கு கணவனோடும், குழந்தைகளை அழைத்துக்கொண்டும் வந்திருக்கிறாள்?அவ்வளவு ஏன்…தனியாக கூட வந்து எட்டிப் பார்ததது இல்லை . எப்போதும் ஒரு ஒதுக்கம் தான். சின்னவள் சீதா நேரில் பார்க்கும் சமயங்களில் அவ்வளவு நன்றாக பழகுவாள்.அவள் கூட இவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தது இல்லை. பிறகு ராதா எப்படி இவர்களையும்,இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் குறை சொல்ல முடியும்?
நான் மேலே சொன்னவற்றை எல்லாம் சுதாவும் அவள் கணவனும் தனியாக தங்கள் அறையில் ஊர் கதை பேசும் சமயங்களில் பேசுவது.மற்றபடிக்கு நேரில் யாரையும் எதுவும் கேட்டுக் கொள்வது கிடையாது.
நடுவில் கிருஷ்ணனுக்கு கால் முறிவு என்று சுதா சொல்லி கேட்டிருந்த ரமணி தில்லியில் இருந்து வந்து பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே நான்கு நெடும் நாட்கள் தங்கியிருந்துவிட்டு சென்றாள் . அவளின் பிள்ளைகள் நல்ல பணியில் இருப்பதாகவும்,மூத்தவன் காதல் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், இப்போது இரண்டாவது பிள்ளை திருமணமே அவசியம் இல்லை என்று மறுப்பதாகவும் சொல்லிக்கொண்டாள்.நிஜம் என்ன என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்.அரசல் புரசலாக ஓரிரு விஷயங்கள் ரமணி குடும்பம் பற்றி காற்றில் கசிவதோடு சரி. மற்றபடிக்கு சொல்லிக்கொள்ளும் படிக்கு பெரிய தொடர்பு இல்லை.
சமீப காலமாக சுதாவோடு அவ்வப்பொழுது அலைபேசியில் ரமணி பேசுகிறாள். சீதா மூலம் கிருஷ்ணனின் குடும்ப நிலை ,அந்தஸ்து உயர்ந்து விட்டதால் அவர் வீட்டில் வந்து தங்கியிருக்கிறாள். அவ்வளவுதான், மற்றபடிக்கு அதே குறையாத அலட்டல்.போதாத குறைக்கு அவளது கணவர் வேறு உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் ஆகி விட்டதால் ரமணியை கையில் பிடிக்க முடியவில்லை. மனிதர்கள் பலவிதம்.
ரமணி தங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொழுது சுதா அவளிடம் வாய் விட்டு புலம்பிய விஷயம்,”அந்த பொண்ணு சீதா நிஜமாவே பேருக்கு ஏத்தா மாதிரி சீதாதேவி தான். இந்த காலத்துல இப்படி பொண்ணு அமையறது கஷ்டம் ரமணி.ஏனோ அண்ணாவும் அண்ணியும் அந்த பொண்ணுக்கு ஒரு வழியை பண்ணாம ஏதோ சொல்லி நாளை கடத்துறாங்க. அண்ணி ,எனக்கு தெரிஞ்சு நம்ம வகைல இருக்குற அத்தனை பையனையும் பார்த்திருப்பா.ஒண்ணு கூடவா அமையல? எவ்ளோ எதிர்பார்ப்பு ராதாவுக்கு?
சீதா கிட்டே பேசினேன். முட்டி வலி வர வயசுல மனைல உக்கார்ந்து என்ன செய்ய அத்தைன்னு கேக்குறா. யாரையாச்சும் காதலிச்சாவது கல்யாணம் செஞ்சுகிட்டு போகவேண்டியது தானே அந்த பொண்ணு.இவ்ளோ ஏமாளியா இருக்கணும்னு அவசியம் இல்லையே!”என்று நொந்து கொண்டாள் தமது தமக்கையிடம். ரமணி சுதாவிடம் இதுபற்றி வேறு எதுவும் பேசவில்லை. மேற்கொண்டு வேறேதோ விஷயங்களை அக்காளும் தங்கையும் பேசினார்கள்.
ராதாவுக்கு பயந்துதான் சுதா தனது பிள்ளைகளுக்கு அண்ணனின் பெண்களை மணம் முடிக்க கேட்கவில்லை. ஜானகி வேறு எப்போதும் ஒரு வகையாகவே இருப்பாள்.ராகவனுடன் அவளுக்கு இவ்வளவுக்கு ஒத்துப்போகும் என்று ஜானகியை அறிந்தவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.