மீனா வாசலைப் பார்த்தே அமர்ந்திருக்க, நேரம் வேற சென்று கொண்டே இருந்தது. ஒரு மாதிரி நெஞ்செல்லாம் படபடப்பாக இருக்க, வெளி வாசலில் நிலையாக அமர்ந்து விட்டாள். கணவனுக்கு போன் போகவில்லை, அவனைப் பார்த்தால் மட்டுமே மனம் நிலைபெறும்.
பெரும் தவிப்போடும் மீனா அமர்ந்திருக்க, பக்கத்து வீட்டு சுகன்யா வேகமாக வந்தாள்.
“ஆமா, மீனா என் வீட்டுக்காரர் அப்படித்தான் சொன்னாரு. குடிச்சுப்புட்டு ஏதோ சண்டை போல ஒருத்தருக்கு ஒருத்தர் வெட்டிக்கிட்டாங்களாம்” என்றதும்,
Advertisement
ஓவென்று நெஞ்சை அடைத்தது. அங்கிருந்து தூணில் கண்மூடி சாய்ந்து கொண்டாள். அப்படி ஒரு படபடப்பும், கிறுகிறுப்பும்.. சுகன்யாவுக்கு அவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அதுவும் வயிற்றுப் பிள்ளைக்காரி கணவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டவள். ஆனால், ஜெகனுக்கு என்று யாரும் இல்லையே.. அவனின் குடும்பம் எல்லாம் மனைவி, மக்கள் தான். அவர்களிடம் மறைக்க முடியாது. இனி, என்னவென்றாலும் மீனா நிமிர்ந்து நிற்கத்தான் வேண்டும்.
“நேரமில்லை மீனா. சீக்கிரம் கிளம்பு” என்று சுகன்யா அவசரப்படுத்த,
புரிந்தாலும் காரியத்தை செயல்படுத்த மீனாவின் உடம்பில் தெம்பில்லை. மீனாவால் இன்னமும் ஜீரணிக்க கூட முடியவில்லை. கணவன் எப்போது வருவான் என்று வாசலை பார்த்து இருக்க இப்படி ஒரு செய்தி அவள் இதயத்தை அழுத்தியது. மீனாவுக்கு அழுகை கூட வரவில்லை. இன்னமும் மனம் திகைத்துப் நின்றாள்.
சுகன்யா அவசரப்படுத்த, சூழல் புரியாமல் ஒரு மயக்கத்திலே எழுந்து நடந்தாள் மீனா. அக்கம் பக்கத்தில் இருப்போர் வந்திருக்க, விஷயம் தெரிந்திருக்க வேண்டும். மீனாவுக்கு மனதின் படபடப்பு மட்டும் குறையவே இல்லை. இருக்கும் கொஞ்சம் பணத்தையும் பீரோவில் இருந்து எடுக்க சாவியை துளையில் போட கை நடுங்கியது. கண்ணை நன்றாக பெரிதாக்கி அழுத்தி சாவியை பீரோவில் வைக்க முடியவில்லை. அவள் உடல் அவள் கட்டுப்பாட்டிலே இல்லை.
அவளின் நிலை புரிந்து சுகன்யா தான் உதவி செய்தது. பீரோவில் இருந்து கொஞ்சம் பணத்தையும் ஜெகனுக்கு உடைகளையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு வெளியில் வர, பிள்ளைகள் உறங்கியிருந்தார்கள்.
அவர்கள் முகத்தைப் பார்த்ததும் மீனாவுக்கு பெரிதான கேவல் வெடித்தது. பசி என்ற மகளுக்கு உணவை கூட ஊட்டவில்லை. மகனை தூக்கிக் கொண்டவள், மகளை எழுப்பினாள். தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல தூக்கத்தில் இருக்க தாய் எழுப்பி நடக்க விடவும் எதுவும் தெரியாமல் அரைகுறையாக நடந்து சென்றாள்.
ஆட்டோ தயாராக நின்றது. மகனை மடியில் வைத்துக் கொண்டு மகளைப் பக்கத்தில் வைத்து உட்கார, துணைக்கு சுகன்யா வந்தாள். சுற்றுப்புறம் யோசனை இன்றி மனம் எல்லாம் கணவனையே சுற்றி வந்தது. ஜெகனை தப்பாக நினைக்கவும் வழியில்லாமல் சமீப நாட்களில் நன்றாகத் தான் இருந்தான். என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல் நடுங்கும் மனதை கையால் பிடித்துக் கொண்டு கடக்க முடியாத தூரத்தை கடப்பது போல் பயணித்தாள்.
தமிழுக்கு மீண்டும் தூக்கம் வந்தது. புகழும் தாயின் மடியிலே தூங்கி விட, வாந்தியும் தல சுத்திலும் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தியது மீனாவுக்கு… சற்று தூரம் தான் அரசு மருத்துவமனை. மீனா அங்க போய் சேர்வதற்கு முன்பே மீனாவின் வீட்டு ஆட்கள் அங்குதான் இருந்தார்கள். முன்பே எல்லோருக்கும் விஷயம் தெரியும் போல கடைசியாக தான் மீனா காதிற்கு வந்திருக்கிறது.
மனம் நொந்து போய் மீனா இறங்க, ஓடி வந்து மகளை கட்டிக்கொண்டு அழுதார் பரமு… தாயின் அழுகை சத்தம் மட்டுமே அவளுக்கு சுரணை வர வைத்தது.
“அம்மா” என்று தாயை கட்டி கொள்ள,
“நான் பெத்த மகளே, உன் விதி இப்படியா ஆகணும். அந்த மனுசன் உயிரோடு இருந்தா உன்னை நாதியத்து விட்டு இருப்பாரா” என்று இறந்து போன கணவனை சொல்லி தாய் அழுக, கட்டுப்படுத்த முடியாமல் மீனாவும் அழுதாள்.
முழுதாக என்ன நடந்தது என்று தெரியாமல் கணவனை பார்ப்பதற்கு ஓட, அங்கே யாரையும் அனுமதிக்கவில்லை. போலீஸ் கேஸ்யாயிருந்தது. “என்னவாம்?”
“ஒருத்தருக்கு ஒருத்தர் வெட்டிக்கிட்டாங்களாம். ரெண்டு பேருக்குமே நல்லா காயம். யார் பொழைப்பா? யார் சாவா? ஒன்னும் தெரியல”
“என்ன காரணம்?”
“குடிகார பயலுகளுக்கு பெருசா என்ன காரணம் இருக்க போகுது. குடியே பெரிய காரணம் தானே. உப்பு இல்லாத காரணத்து கூட குடிகார பயலுக்கு சண்டை போடுவாங்க. இவனுங்களுக்கு என்ன வந்து நிம்மதியா வந்து படுத்துகிட்டாங்க. ரெண்டு குடும்பமில்ல அல்லாடுது”
மீனாவின் காதலும் வார்த்தைகள் விழத்தான் செய்தது. சற்று தள்ளி அமர்ந்த குடும்பத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஜெகனிடம் வெட்டுப்பட்டு மற்றொரு பக்கம் சீரியஸ் ஆக இருக்கும் திவாகரின் மனைவி அவள்.. அவனுக்கும் இரண்டு பிள்ளைகள் இருந்தது. மீனாவைப் போலவே அவன் மனைவி ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தாள்.
மீனாவுக்கு ஜெகனை தூரத்தில் இருந்து கூட பார்க்க முடியவில்லை. என்ன நடக்கும்? நேற்று இந்த நேரம் கூட வீட்டில் தன்னோடு சந்தோஷமாக இருந்த கணவன் எங்கே? சில மணி நேரத்துக்கு முன்பிருந்த நிம்மதி கூட இல்லையே. எல்லோரும் பரபரப்பு அடை சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
மீனாவின் அண்ணன் அண்ணிகள் கூட அங்கு தான் இருந்தார்கள். யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை மீனா. அங்கு கீழே ஒரு ஓரத்தில் சுருண்டு போனாள். நடைபாதை, ஆட்கள் நடந்து போகும் இடம், கீழே அவ்வளவு குப்பை எதுவும் மீனாவின் கவனத்தில் இல்லை. ஒரு தவம் மாதிரி அமர்ந்திருந்தாள்.
நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்று சொல்லிக் காட்டும் யாரும் அன்று அமைதியாகவே இருந்தார்கள். ஏனெனில் விஷயம் வேற மாதிரி இருந்தது. பிழைப்பது சிரமம், போலீஸ் கேஸ்… சாதாரண நடுத்தர வர்க்க மக்களுக்கு இவை எல்லாம் கற்பனையில் கூட நினைக்காதவை..
எல்லோரும் ஒரு மாதிரி பயத்தில் இருக்க யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்த கணத்தை, இந்த நிமிடத்தை இந்த நேரத்தை, மீனாவால் கடக்க தெரியவில்லை. என்னவோ பெரிதாக நடக்கப்போகிறது. ஆனால், என்னவென்று தெரியவில்லை, அப்படி ஒரு படபடப்பும் பயமும் அவளை சுற்றி நின்றது.
மீனாவை சுற்றி இருக்கும் அனைவரும் அவளின் ரத்த சொந்தங்கள் தான். ஆனால், யாராலும் அவளுக்கு ஒரு துளி ஆறுதல் இல்லை. உடலில் அப்படி ஒரு இயலாமை. நெஞ்சில் வலி, திரும்பத் திரும்ப நெஞ்சை அழுத்திவிட்டுக் கொண்டாள் வலி போகவே இல்லை. அந்த நிமிடம் கடந்து விடாதா என்று நினைத்தாள்.
பரபரப்பான சூழல். அவளின் நேரம் மட்டும் கடக்கவே இல்லை. வலியை தாங்க முடியாமல், அடுத்த நாள் வந்து விடாதா என்று யோசித்தாள். இரவு பதினோரு மணி வரை அந்த வளாகத்திலேயே கிடந்தார்கள். ஒரு சொட்டு தண்ணீர் மீனா தொண்டையை நனைக்க வில்லை. மகன், மகள் நினைவு கூட அவளுக்கு இல்லை.
தமிழ் அமுதா குழந்தை. தன்னை சுற்றி இருக்கும் சூழல் புரிய வில்லை. ஜெகன் செய்த தவறை தாண்டி அவன் உயிர் பிழைத்து வர வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால், குழந்தைக்கு நிலை புரியாதே.. பசிக்கு அழுக, மீனாவின் அண்ணி தான் குழந்தை முதுகில் ஒன்று போட்டாள்.
“உங்க அப்பனே சாக கிடக்கான். உங்களுக்கு சோறு ஒன்றுதான் குறை. இருக்கிற நிலைமை தெரியாம நீங்க வேற.. வாய மூடு” என்று பெரிதாக அதட்டல் போட,
குழந்தை முழித்தது திரும்பி தாயைப் பார்க்க, மீனாவுக்கு எதுவும் கவனத்தில் இல்லை. சமீப நாட்களில் தாய் தந்தையின் செல்லத்தில் பசி என்ற ஒன்றையே அறியாத பிள்ளை பசியில் அழுக, அதை கவனிப்பார்தான் யாருமில்லை.
எவ்வளவு நேரம் வெளியவே இருக்க முடியும். அங்கிருக்கும் போலீஸ் காலையில் வர சொல்லி எல்லோரையும் வெளியில் அனுப்பினார். ரெண்டு பக்கமும் சீரியஸ் தான். நிலைமை தெரியவில்லை உறுதியாக யாரும் எதுவும் சொல்லவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேணாலும் நடக்கும்.
மீனாவின் அண்ணன்கள் தான் வற்புறுத்தி அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். யாருக்கும் சாப்பாடு இறங்கவில்லை. யார் கவனத்திலும் பிள்ளைகளும் இல்லை. தந்தையைக் காணம், தாய் தங்களை கண்டு கொள்ளவே இல்லை. யாரிடம் போவார்கள். மற்றவர்களின் இழுப்புக்கு மூன்று, இரண்டு வயதில் இருந்த பிள்ளைகள் இழுபட்டார்கள். பெற்றவர்கள் சரியாக இருக்கும் வரை மட்டுமே பிள்ளைகளுக்கு சுகமான வாழ்வு.
திரும்பவும் ஜெகன், மீனா வாழ்க்கை அலசப்பட்டது. கணவனை விட்டு வரவே மீனாவுக்கு மனதில்லை. போலீஸ் கேஸ் என்பதால் யாரையும் அனுமதிக்கவில்லை. எங்கேயோ ஒரு தனி காட்டில் ஜெகனை விட்டு செல்வது போல மீனாவுக்கு நெஞ்சு நடுங்கியது. தர்மா தான் மீனாவை கையை பிடித்து கூட்டி நடந்தான். மருத்துவமனை வளாகத்தை தாண்டும்போது மீனாவுக்கு அவ்வளவு அழுகை.
“ஐயோ! என் கணவன். அவனை விட்டு நான் எப்படி வாழ்வேன். இனி எனக்கு இங்கே என்ன இருக்கிறது. அவன் இல்லாத வாழ்வில் மூன்று பிள்ளைகளோடு நான் எவ்வாறு இருப்பேன். ஒரு நிமிட நினைப்பே நெஞ்சை அறுத்தது. எங்களுக்கு வாழ்க்கையில் யார் துணை? என்ன பாதுகாப்பு இருக்கும். கணவன் இல்லாத என் வாழ்க்கையில் நிறைவு என்ற ஒன்றை நான் இனி காண முடியுமா?”
“மீனா”
“நான் மட்டும் இங்க இருக்கேன் அண்ணே” என்றாள் அழுகையோடு.
“அப்படியெல்லாம் யாரு இருக்க கூடாது மீனா”
“என் புருசன் ஒத்தையில இருப்பாரே.. அவர தனியா விட்டுட்டு நான் மட்டும் எப்படி வீட்டுக்கு போறது” மீனாவுக்கு ஒரு மாதிரி நெஞ்சு முழுக்க பயம்.
“காலையில வரலாம் மீனா” என்றான் அண்ணன்.
“மாட்டேன் என்ன நடந்தாலும் நான் அவர் பக்கத்துல இருக்கணும்” என்று மீனா அழுக,
அவள் அண்ணங்களுக்கு தாங்க வில்லை. ஒற்றை தங்கை என்று எவ்வளவு செல்லமாக வளர்த்தார் தந்தை. இனி என்ன என்று நினைக்கும் அளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறாள்.
மகளின் பயம் பரமுக்கு புரிய, “ஒன்னும் ஆகாது மீனா நான் சொல்றேன் கேளு, அப்படி ஒரு கஷ்டத்தை எல்லாம் கடவுள் என் மகளுக்கு கொடுக்காது. நீ எதை நினைச்சு பயப்படாதே” என்று சமாதானம் செய்ய,
மீனாவுக்கு கணவனை மட்டும் அந்த அறைக்குள் தனியே விட்டு செல்ல அவ்வளவு பயமாக இருந்தது. எல்லோரும் வற்புறுத்தி தான் அவளை அழைத்துச் சென்றார்கள். எவ்வளவு நேரம் துக்கத்தையே நினைத்து இருக்க முடியும். ஒவ்வொருவராக உட்கார்ந்து இருந்த இடத்திலேயே உறங்க, பொட்டு உறக்கம் அண்டாமல் இருந்தது மீனா மட்டும்தான்.
மாசமாக இருக்கும் பெண் இடுப்பு வலிக்கும் என்று பரமு அவள் முதுகுப்புறம் ஒரு தலையணை வைத்திருக்க, அதில் கணவனின் வாசம். முதல் நாள் அவன் மார்பில் சாய்ந்து உறங்கிய நினைவு.
இந்த தலையணையில் என் மாமன் வாசம் கூட போகவில்லையே.. எப்படி அவரை இழந்து நிற்பேன். இந்த சூழ்நிலையை மீனாவால் எதிர்கொள்ள முடியவில்லை. ஏதேதோ கற்பனை நெஞ்சை நடுங்கச் செய்தது. வலி அவ்வளவு வலி இதயத்தில்.. பேசாமல் ஒரு கத்தி எடுத்து நெஞ்சில் குத்திக் கொண்டால் என்ன?இப்போது வலிக்கும் வலியில் இருந்து விடுதலை கிடைக்குமே!… யார் என்ன சொல்லியும் அவளுக்கு உறக்கம் அண்டவில்லை.
விட்டத்தை பார்த்து அமர்ந்து இருந்தாள். நெஞ்சடைக்க கையால் அழுத்தி கொடுத்தாள். மார்பில் கிடந்த தாலி கனத்தது. தன் மாங்கல்யத்தை வெளியே எடுத்துப் பார்த்தாள்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோர்த்து மஞ்சள் கயிற்றில் அழகாக மின்னியது. நாளை இது நிலைக்குமா?… தன் கழுத்தை தடவி கொண்டாள். கட்டையில் போகும் வரை கழுத்தில் கிடக்க நான் வரம் வாங்கி வரவில்லையோ!…
எல்லோரும் ஒரு மாதிரி அரைகுறை தூக்கத்தில் இருக்க, காலை மூன்று மணிக்கு போன் வந்தது. தர்மன் தான் எடுத்தான். பதறிப் போய் எழுந்தாள் மீனா.
“என்ன ஆச்சு?” தங்கைக்கு பதில் சொல்லாமல் போன் பேசினால் தர்மன். அவன் முகம் அப்பட்டமாக சோகத்தை வெளிப்படுத்தியது.
இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு அண்ணனை பார்க்க, “ மீனா, அந்த பையன் திவாகர் இறந்து விட்டாடானம்”
“என்ன சொல்ற?” இரவு முழுக்க அழுதது. சொட்டு தண்ணீர் கூட தொண்டையில் இறங்காமல் இருந்தது. கழுத்தில் நெறி கட்டிக் கொண்டது. வெறும் காற்று தான் வந்தது. மீனாவுக்கு அழுகைதாங்க வில்லை.
ஒரு குடும்பத்தை அனாதையாகிய பாவத்தை எங்கு போய் தொலைக்க.. தர்மன், தங்கையை பார்த்து நிக்க. மீனா வேகமாக கிளம்பினாள் மருத்துவமனைக்கு… அவளின் துணைக்கு தருமன் மட்டுமே கிளம்பி வந்தான்.
எப்படியும் மணி மூன்று இருக்கும். அவள் அந்த வளாகத்தை தொடும்போதே அழுகை சத்தம் காதை பிளந்தது. அந்த சத்தத்தை கேட்டு திரும்ப அவளால் உள்ளே செல்ல முடியவில்லை. அண்ணனைப் பார்த்தவள்,
“கொஞ்சம் வெளியே போகணும் அண்ணா”
“எங்க மீனா?”
“சொல்றேன்” என்றவள், அங்கிருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றாள். சாமி எல்லாம் தெரியவில்லை. அண்ணாந்து வானத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டவள். தன்னைத்திடமாக்கி கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை கழற்றி கோவில் உண்டியலில் போட்டாள். தர்மன் அதிர்ந்து போய் தங்கையை பார்க்க, எதுவும் பேச வில்லை.
திரும்ப மருத்துவமனைக்கு வரும்போது ஜெகன் சீரியஸ் கண்டிஷனில் தான் இருந்தான். ஆனால், அவனை வேறு இடத்திற்கு மாற்றி இருந்தார்கள். கொஞ்சம் காப்பாற்றவே முடியாது என்ற ஆட்களை மட்டும் அங்கு வைத்திருப்பார்கள் போல…
அப்போதும் கணவனைப் பார்க்க மீனாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஏனெனில் கலவரம் வந்து விடுமோ என்று பயந்தார்கள். இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்றாலும் ஒருவன் இறந்து விட்டான் அல்லவா… அவனை சார்ந்த உறவுகள் எவ்வாறு சும்மா இருப்பார்கள்.
பார்க்க அனுமதிக்கவில்லை என்றதும் தர்மனும், மீனாவும் சற்று தள்ளி நேர் எதிரில் அங்கிருந்து சேரில் அமர்ந்தார்கள். தர்மன் டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க, மீனாவுக்கு உள்ள இறங்கவே இல்லை. அவளுக்கு வாயே திறக்க முடியாத அளவுக்கு தொண்டை முழுக்க அடைத்துக் கொண்டது. அப்படி இருந்தும் ஒரு சொட்டு தண்ணீர் அவள் தொண்டையை நனைக்கவில்லை. என்னவோ மனதில் நினைத்து இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.
காலை வெளிச்சம் பரவும் போது அந்த அறையில் இருந்து ஒருவனை வெளியில் கொண்டு வந்தார்கள். மீனா தடதடக்கும் மனதோடு எழுந்து நிற்க. தருமன் அருகே போனான்.
திவாகரின் மனைவி தரையில் படுத்துக்கொண்டு உருண்டு அழுக, புரிந்து போனது மீனாவுக்கு… தன் நிலையையும் மீறி அந்தப் பெண்ணின் நிலை மீனாவுக்கு பரிதாபத்தை தோற்றுவித்தது. யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. அப்படியே திவாகரின் உடலை அங்கிருந்த பிணவறைக்கு எடுத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து தான் அவனின் மனைவி அந்த கத்து கத்தினாள். எந்த மனைவிக்கும் இது ஒரு பெரிய சாபம். கண் கொண்டு காணக்கூடாத காட்சி.
மீனாவின் கண்கள் பிணவறை என்று எழுதி இருந்த அறையை பார்த்தது. இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் என்றாவது ஒருநாள் அந்த அறையை பார்க்கத்தான் வேண்டும். ஆனால், கற்பனையில் கூட யாரும் நினைக்க மாட்டார்கள். இறந்தவர்கள் உணர மாட்டார்கள். ஆனால், தனக்கு உயிரானவர்களை இழந்தவர்களுக்கு அந்த அறையை பார்க்கும் போது எவ்வாறு இருக்கும்?…
முன்பெல்லாம் மீனா அந்த பக்கம் கடக்கும் போது பார்வையால் கூட அதை பார்க்க மாட்டாள். என்னவோ அதை பார்க்கும்போது மனதில் அவ்வளவு பயமாக இருக்கும். இன்று அந்த அறையின் வாசலில் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். என்ன சொல்ல? இந்த வாழ்க்கை எப்படிப்பட்டது?…
திவாகரின் மனைவி அருகில் இரண்டு பிள்ளைகள் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். இருவரும் சிறு பிள்ளைகள் தான். அவர்களுக்கு இங்க இருக்கும் சூழல் புரியுமா?.. தன்னைப் பெற்ற தந்தை தான் உயிரற்ற உடலாய் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவார்களா?.. இப்படி எல்லாம் இழுபடும் வயதா அவர்களுக்கு?…
மனம் தன் பிள்ளைகளை நோக்கி சென்றது. திவாகரின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்ய ரெடியாக.. ஜெகனின் உடல் முன்னேறிக் கொண்டிருப்பதாக சொல்லி அங்கிருந்து அவனை வேறு அறைக்கு மாற்றினார்கள். இப்போது மீனாவுக்கு கணவனை நினைத்து மகிழ முடியவில்லை. அந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக் கொண்டாள். நெஞ்சை அடைக்கும் துக்கம் இருந்தாலும் வயிற்றில் பிள்ளை இருக்கிறது அல்லவா! வேலையை காட்டியது.
பத்து மணிக்கு மேல் மீனா விட்டு ஆட்கள் எல்லாம் வர, ஜெகனின் உடல்நிலை கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது.
“என்னவோ மீனா நீ செஞ்ச புண்ணியம் உன் புருஷன் பொழைச்சுக்கிட்டான்”
மீனாவின் இதழ்கள் விரக்தி ஆக சிரித்தது, “இனி பிழைத்து என்ன செய்ய?” என்று நினைத்தவள், அங்கிருந்து எட்டி பார்க்க, திவாகரின் மனைவி நெஞ்சில் அடித்து அழுது கொண்டிருக்க, அவளின் பிள்ளைகள் சூழ்நிலை தெரியாமல் அவளின் சேலையைப் பிடித்து அழுது கொண்டிருந்தார்கள்.
இங்கு தன் பிள்ளைகளை பார்க்க, தமிழ் போட்ட உடையை கூட கழட்டவில்லை. முகத்தை கூட கழுவாமல் அப்படியே இழுத்து வந்திருப்பார்கள் போல.. புகழ் ஒன்றரை வயது சிறு பையன் அல்லவா! இன்னும் ஜட்டியை நனைக்கும் பழக்கம் இருக்க, அப்படியே தான் அவனும் வந்திருந்தான். நெற்றி பொட்டில் அடித்தார் போல பிள்ளைகளின் நிலை விளங்கியது.
ஒருவன் உயிரோடு இல்லாமல் அவன் குடும்பத்தை அனாதையாக விட்டான். இவன் உயிரோடு இருந்தும் இவன் குடும்பம் அனாதையாக நின்றது. எத்தனை முறை சொல்லி இருப்பாள். காலில் விழாத குறையாக சொன்னாலே குடியை விட்டுவிட சொல்லி.. கொஞ்சமும் காதில் வாங்காமல் ஆம்பளை என்று திமிர்த்தனத்தில் அலைந்தான் அல்லவா!..
இவன் பேசாமல் படுத்துக் கொண்டான். இவனுக்கான பேச்சுக்களை வாங்குவது யார்?.. திவாகர் இறந்து விட்டான். ஜெகன் உயிரோடு வந்தாலும் இனி மீனாவின் கணவனாக, பிள்ளைகளின் தகப்பனாக அவர்களோடு இருக்க முடியாது. கையில் இருந்த கடைசி பைசா முதற்கொண்டு உள்ளே போட்டு தான் இங்கு வாழ்க்கையை தொடங்கினார்கள்.
இனி இழப்பதற்கு தங்களின் மூன்று உயிர்களைத் தவிர எதுவும் இல்லை. செய்த கொலைக்கு ஜெகன் எப்படியும் ஜெயிலுக்கு போய்விடுவான். இப்போது உடன் இருக்கும் சொந்தங்கள் எல்லாம் இனியும் இருப்பார்களா?… கொலைகாரனின் மனைவி, மக்கள் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இந்த சமுதாயத்தில் தங்களால் நன்றாக வாழ்ந்து விட முடியுமா?…
திவாகரின் மனைவி நிலைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாதது மீனாவின் நிலை. ஆனால் திவாகர் மனைவி மீது காட்டும் அனுதாபமும், பரிதாபமும் அதே நிலையில் பாதிப்படைந்த மீனாவுக்கு கிடைக்காது. கையில் இருக்கும் பிள்ளைகளுக்கே விடை கிடைக்காமல் இருக்கும்போது வயிற்றில் மற்றொரு பிள்ளை. இவனை நம்பி ஏமாந்து வயிற்றிலும் வாங்கிக் கொண்ட தன்னை என்ன செய்ய?…
இவனை கட்டிக் கொண்டதற்காக என் குடும்பம் இவனோடு எவ்வளவு நாளைக்குத்தான் அல்லல் படும். மாலை ஆறு மணிக்கு தான் திவாகரின் உடல் அவர்கள் வீட்டு ஆட்களிடம் கொடுக்கப்பட்டது. அப்போதே ஜெகனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற செய்தி வர, யாராலும் நினைத்து மகிழ முடியவில்லை. அரைகுறை உயிரோடு வந்தவன் வெறும் உடலாக திரும்பிச் சென்றான். தன் கணவனின் உடைத்துப் போட்ட உடலை உயிரற்ற கூடாக பார்த்தாள் திவாகர் மனைவி… ஒரு குடும்பத்தின் தலைவன் அவனையே ஆதாரமாகக் கொண்ட மனைவி மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை பிள்ளைகள். எல்லோரின் வாழ்க்கையையும் அவனைப் போலவே இருளில் தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.
எல்லாம் முடிந்தது. ஜெகன், மீனாவின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து போனது. இனி, அவளால் ஜெகனோடு ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது.