இமயமலை ட்ரெக்கிங்கிற்குப் பிறகு, அந்த பௌன்டேஷன் கோர்ஸ் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே மிச்சமிருந்தன. ஆனால், அதற்குள் மீரா முற்றிலுமாக மாறிப்போயிருந்தாள். அது ஒரு சாதாரண மாற்றமல்ல, ஒரு வசந்தகாலம் திடீரென இலையுதிர் காலத்திற்கு மாறியது போன்றதொரு நிசப்தம்.
Advertisement
முன்பு கேண்டீன் காபிக்காக ரஞ்சனா, வர்மன், அர்ஜுன், மூவரையும் தேடுவாள்.
ட்ரெக்கிங்கிற்கு பிறகு கால்கள் சோர்ந்து போனாலும், “இன்னும் ஒரே ஒரு போட்டோ மட்டும்!” என்று அந்தப் பனிமலையை விடவும் பிரகாசமாகச் சிரிப்பாள். ஆனால் இப்போது?
அவள் எல்லோருடனும் இருந்தாள்.ஆனால்… யாருடனும் இல்லை!
Advertisement
வர்மன், வந்தால், அவள் வேறொரு க்ரூப்க்கு போய்விடுவாள்.பேச வந்தால், “பிஸி” என்று நகர்ந்துவிடுவாள்.
Advertisement
அந்தத் தூரம், வர்மனின் இதயத்தை ஒரு கூர்மையான ஊசியால் தைப்பது போல் இருந்தது.
லால் பகதூர் சாஸ்திரி அகாடமியின் பரந்த மைதானம் இந்திய மூவர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் “இந்தியாடே” கொண்டாட்டம். இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வந்திருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் மாநில கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். அங்கங்கே சிரிப்புகள்… தபேலா சத்தம்… ஹிந்தி,தமிழ், பஞ்சாபி, மலையாளம் என மொழிகள் சங்கமிக்கும் ஒரு குட்டி இந்தியா அங்கே உயிர்பெற்றிருந்தது. வட இந்தியர்களின் ‘பங்க்ரா’, கேரளாவின் ‘திருவாதிர களி’, வடகிழக்கின் நாட்டுப்புற நடனங்கள் என அகாடமியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த ஆரவாரத்திற்கு நடுவில் மீரா ஒரு இயந்திரத்தைப் போல இயங்கிக் கொண்டிருந்தாள். அவளது சிரிப்பில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. நார்த் இன்டியன் பாட்ச்இடம் கர்பா கற்றுக்கொள்கிறாள்.கேரளா குழுவிற்கு ப்ராப்ஸ் அரேஞ்ச் செய்து தருகிறாள்.பஞ்சாபி குழுவின் ஒத்திகையில் உற்சாகமாக விசிலடிக்கிறாள்.
Advertisement
ஆனால், வர்மன் அவள் நிழலை நெருங்கினாலும், திசை மாறிப் போய்விடுகிறாள்.
அர்ஜுன் இதைக் கவனித்துக் கொண்டே இருந்தான்.”டேய் வர்மா… இது நார்மல் இல்லடா,” என்றான் கவலையுடன்.
வர்மன் பதில் சொல்லவில்லை. பால்கனி கைப்பிடியில் சாய்ந்து கொண்டு, கீழே ஒத்திகை மைதானத்தில் வண்ணத்துப் பூச்சியாய் அலைந்து கொண்டிருந்த மீராவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது சிரிப்பு அவனுக்கு மட்டும் வலியாகத் தெரிந்தது.
அர்ஜுன் ஸ்பீக்கர் உடன் மல்லு கட்டிக்கொண்டிருந்தான். மீரா கடந்ததாக தோன்ற
“டீய் ரஞ்சு, மீரா வந்துட்டாளா?”
அந்த நேரம் காரிடாரில் மீரா நடந்து சென்றாள்.
ரஞ்சனா உடனே வெளியே ஓடினாள்.
“மீரா!”
மீரா நின்றாள்.
“மீரா! வாடி, நாம இன்னும் அந்த ஃபியூஷன் பரதநாட்டியம் பிராக்டிஸ் முடிக்கலையே…” என்று கூப்பிட, “அப்புறம் பார்த்துக்கலாம் ரஞ்சு,” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு மீரா நகர்ந்த விதம், அங்கிருந்த சூழலையேசங்கடப்படுத்தியது. ரஞ்சனா அங்கேயே பரிதாபமாக நின்றாள்.
இவற்றையெல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் வர்மன்.
அவன் முகம் இறுகியது.
இந்தியா டே கொண்டாட்டத்திற்காக அகாடமி உறங்காமல் விழித்திருந்தது. திறந்தவெளி அரங்கின் மின் விளக்குகள் நிலவின் ஒளியைத் திருடிக்கொண்டிருந்தன. ஒரு பக்கம் தேசபக்திப் பாடல்கள், மறுபக்கம் நடனப் பாதணிகளின் சத்தம்.
குளிர் காற்று மெல்லத் தழுவினாலும், பயிற்சியாளர்களின் உற்சாகம் தணியவில்லை.
வர்மனின் பார்வை மட்டும் மேடை மேலேயே நிலைகுத்தியிருந்தது.
அங்கே மீரா ஒரு குழுவிற்கு நடனம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.
சிரிக்கிறாள். கைத்தட்டுகிறாள். வர்மனுக்குள் ஒரு விசித்திரமான எரிச்சல். அனைவருடனும் காஷவலாக பேசுகிறாள்.
ஆனால் அவள் கண்களில் மட்டும் சோர்வு.
வர்மன் அதை கவனித்தான்.
அடுத்த நாள்… அகாடமி முழுமைக்கும் எதிர்பார்க்கப்பட்ட அந்த ‘இந்தியா டே’ பிறந்தது.
நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருந்தன.வர்மன் கூட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாலும், அவனது கண்கள் மேடைக்கும் திரைக்குமான இடைவெளியையே துழாவிக் கொண்டிருந்தன. திடீரென மேடையில் அறிவிப்பு ஒலித்தது
“Next performance… A Bharatanatyam fusion by Meera Rajan IAS from Tamil Nadu cadre!”
அர்ஜுன் திகைப்புடன் மேடையைப் பார்த்துக்கொண்டே,”ஏன் ரஞ்சனா ஆடல?” என்று தன்னிச்சையாக வாய்விட்டுக் கேட்க..
மரூன் பார்டர் கொண்ட அந்த ஆஃப்-வைட்(Off-white) சேலையில், மீரா ஒரு ரவிவர்மன் ஓவியம் போல் நின்று தெரிந்தாள். தோள்களில் புரளும் விரித்தகூந்தல், தலையில் ஜாதி மல்லி சரம், கண்களில் லேசாகத் தீட்டப்பட்ட காஜல், என அவளது தோற்றம் வர்மனின் இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தியது.
பின்னணியில் அந்தப் புகழ்பெற்ற பாடல் மெல்லத் தாளங்களுடன் ஒலிக்கத் தொடங்கியது…
“சினேகிதனே சினேகிதனே… ரகசிய சினேகிதனே…”
சாதனா சர்கமின் அந்தக் காந்தக் குரல்காற்றில் மிதந்து வந்த அந்த நொடி, வர்மனுக்கு உடலெங்கும் சிலிர்த்தது. இத்தனை நாட்களாகத் தன்னைத் தள்ளி வைத்திருந்தவள், இப்போது இந்த நடனத்தின் வாயிலாகத் தன்னைத் தேடி வருவது போன்ற ஒரு உணர்வு அவனுக்குள் உயிர்த்தெழுந்தது. அவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
மேடையில் மீரா அபிநயம் பிடிக்கத் தொடங்கிய விதம் அத்தனை அழகு! ஒரு மெல்லிசைப் பாடலுக்கு இவ்வளவு நேர்த்தியாக, இலக்கணச் சுத்தமாகப் பரதம் ஆட முடியுமா என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அவளது அசைவுகள் இருந்தன.
ஒரு வண்ண மயில் போலத் துள்ளிக் குதித்தும்.. பின்னர் ஒரு கனத்த மழையைச் சுமந்திருக்கும் மேகத்தைப் போல மெதுவாகவும், ஆழமான உணர்ச்சிகளுடனும் அசைந்து இசைந்தாள்.
அவள் கைகளால் காட்டிய ஒவ்வொரு முத்திரையும், விழிகளால் பேசிய ஒவ்வொரு சொல்லும் ஒரு ரகசியக் கவிதையாய் வர்மனைச் சென்றடைந்தது.
“நேற்று முன் இரவில் உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவதெனோ.. உயிர் கலந்து களித்திருந்தேன்”
இந்த வரிகள் ஒலிக்கும்போது, மீரா தன்கைகளை மெல்ல மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு, கண்களை மூடினாள்.
நேற்று வர்மனுக்கும் அவளுக்கும் இடையே நடந்த அந்த நெருக்கமான, வலி நிறைந்த நிமிடங்கள் அவன் நினைவில் வந்து போயின.
“இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல் மனம் கலங்கி புலம்புகிறேன்” மீரா மேடையின் தரையில் அமர்ந்து, தன் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி, எதையோ இழந்து விட்டது போலத் தவித்தாள்.
அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர், ஸ்பாட்லைட் ஒளியில் வைரம் போல மின்னிக் கீழே விழுந்தது.
“கூந்தல் நெளிவில் எழில் குழல் ச்சரிவில் ….கர்வம் அழிந்ததடி. என் கர்வம் அழிந்ததடி…”
“மொத்தமா உன்கிட்ட என்னைத் தொலைச்சுட்டேனேடி…” என ஓர் அநாதையைப் போன்ற மனதுடன், அந்தச் சூழலில் மனதுள் அரற்றினான் வர்மன்.
கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற, அகாடமியின் அந்தப் பிரம்மாண்டமான தளம் இப்போது ஒரு உற்சாகமான பார்ட்டி மைதானமாக மாறியிருந்தது. கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் விமரிசையாக ஆரம்பித்தது.
அரங்கெங்கும் மெல்லிய வண்ண விளக்குகள் சுழன்று கொண்டிருந்தன. பின்னணியில் துள்ளலான இசை (Peppy Tracks) அதிர்ந்துகொண்டிருக்க, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சியாளர்கள் என்ற அதிகாரத் தோரணையைத் தூக்கி எறிந்துவிட்டு, அனைவரும் சக மனிதர்களாக மாறி அந்த இரவைக் கொண்டாடினர்.
அதிகாரிகள் தங்கள் கைகளில் தட்டுகளை ஏந்தியபடி, ஒரு கையில் குளிர்பானக் கிளாஸுடன் சிறு சிறு குழுக்களாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
நடுவில் மேடையில் ஒரு பெரிய பகுதி நடனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே மாநிலப் பாகுபாடின்றி அனைவரும் வட்டமாக நின்று ஆடினர். இப்போது நவீன தாளங்களுக்கு ஏற்ப உடலை அசைத்துச் சிரிக்கும் இளைஞர்களின் கூட்டம் அது.
மேடையில் மீராவும் ரஞ்சனாவும் இருந்தனர். மீராவிற்கு மிக அருகிலேயே அந்த ஆண் கேடர் அபிஷேக் நின்றிருந்தான். ஏதோ அவனிடம் சரியில்லை என தோன்றியும் முதல்முறை வர்மன் அதை சாதாரணமாக விட்டான்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவன் மீராவின் இடுப்பைப் பிடித்து ” come on lets dance” என ஆரம்பித்த போது, வர்மனின் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது.
மீரா அசௌகரியமாக விலகியும், அவன் “ரிலாக்ஸ் மீரா, இது ஜஸ்ட் டான்ஸ் தான்” என்று மீண்டும் நெருங்கினான்.
ஒரு கட்டத்தில் அவன் அவளைச் சுழற்ற முயல, மீரா நிலை தடுமாறியபோது அவன் அவளைப் பிடித்துக் கொண்ட விதம்… அவன் கை தேவையில்லாத இடத்தில் ஒரு நொடி தங்கியது.
அடுத்த நொடி, வர்மன் மேடையில் இருந்தான்.
கும்!
“டேய்—” அர்ஜுன் அதிர்ந்தான்.
முழு அரங்கமும் உறைந்தது. வர்மனின் பலமான குத்து அபிஷேக்கின் முகத்தில் விழ, அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
“வர்மன்!” என்று ரஞ்சனா கத்தினாள். ஆனால் வர்மன் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
அவன் அபிஷேக்கின் சட்டையைப் பிடித்துத் தூக்கி, கர்ஜனை செய்யும் குரலில் சொன்னான்: “அவளைத் தொடாதடா! டான்ஸ்ங்கிற பேர்ல அட்வான்டேஜ் எடுக்கிறியா?”.
மற்றவர்கள் ஓடிவந்து அவனைப் பிடிப்பதற்குள், வர்மனின் கண்களில் தெரிந்த அந்த ஆக்ரோஷம் அனைவரையும் நடுங்க வைத்தது. மீரா அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். “Hey! Mind your—”
மீண்டும் ஒரு குத்து.
இந்த முறை ட்ரெய்னீஸ் எல்லோரும் ஓடி வந்து வர்மனைப் பிடித்தார்கள்.
பின்னாலிருந்தது அந்த நீண்ட காரிடார்.
வெளியில் ஒத்திகை மீண்டும் ஆரம்பித்த சத்தம்.
மீரா வேகமாக நடந்து சென்றாள்.
“மீரா!”
வர்மன் பின்னால் வந்தான்.
அவள் திடீரென திரும்பினாள்.
கண்கள் சிவந்து இருந்தது.
“உனக்கு என்ன பிரச்சனை?!”
வர்மன் இன்னும் கோபத்திலேயே இருந்தான்.
“அவன் உன்னை எப்படித் தொட்டான் பார்த்தியா மீரா?” என்று வர்மன்
“அதுக்காக அவனை அடிப்பியா?”
“அவன் வேணும்னு…”
“நான் ஹான்டில் பண்ணிருப்பேன்!”
அந்த வார்த்தை வர்மனை நிறுத்தியது.
“இல்லமா . . . “.
மீராவின் குரல் உடைந்தது.
“எனக்கு உன் ப்ரொடெக்ஷன்(Protection) தேவையில்லை வர்மா! நீ எல்லார் முன்னாடியும் என்னை எப்படி ஃபீல் பண்ண வச்சிருக்க தெரியுமா? அவள் கண்களில் கண்ணீர் தேங்கியது.
“நான் உன்னை காப்பாத்த—”
“நான் வீக் இல்ல!”
அந்த வார்த்தை எதிரொலித்தது.
வர்மன் மெதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் சொல்லொண்ணா வலி இருந்தது. “அப்படியா? சரி… அப்போ ஏன் என்னைத் தவிர்க்கிற?ஏன் என்கிட்ட இருந்து ஓடுற?”
மீராவிடம் பதில் இல்லை. அவள் பின்வாங்கினாள், ஆனால் சுவர் அவளைத் தடுத்தது. வர்மன் மிக அருகே வந்தான். இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
அந்த நெருக்கத்தில், அந்த நிலவொளிச் சிதறலில், மீரா தன் கண்களை மூடிக்கொண்டாள். அந்த மௌனமான அனுமதி வர்மனுக்குப் போதுமானதாக இருந்தது. அவன் நடுங்கும் விரல்களால் அவள் முகத்தைத் தாங்கி, மிக மென்மையாக அவள் இதழ்களை முத்தமிட்டான். அவள் உயிரும் உருகும்படியான ஒரு முத்தம்!
அந்த முத்தத்தில் காமமில்லை; பல நாட்களாகச் சேர்த்து வைத்த வலி இருந்தது, ஏக்கம் இருந்தது, “என்னை விட்டுப் போகாதே” பஎன்ற வேண்டுதல் இருந்தது.
ஒரு கணம்…
அவளும் அந்த முத்தத்தில் தொலைந்தாள்.
ஆனால், அந்த மாயம் ஒரு நொடிதான் நீடித்தது. திடீரென நிஜ உலகம் ஞாபகம் வர, அவனைப் பலமாகத் தள்ளிவிட்டாள் மீரா.
“என்னை விட்டுரு என்ன விட்டு போயிடு” என அவள் கையெடுத்து கும்பிட, தாளாது அங்கிருந்து வெளியேறினான் வர்மன். இருளுக்குள் மறைந்தான்!
வர்மன் போன திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மீரா திரும்ப அங்கே ரஞ்சனா நின்றிருந்தாள்.
ரஞ்சனாவைக் கண்டதும் சட்டென உடைந்து போனாள். ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டாள். ரஞ்சனா அவளை ஒரு தாயைப் போலத் தாங்கிக்கொண்டாள். அந்தப் பார்ட்டியின் ஆரவாரங்களுக்கு நடுவே, மீராவின் அழுகை மட்டும் ரஞ்சனாவின் தோள்களில் மௌனமாக நனைந்து கொண்டிருந்தது.
அறைக்கு வந்து சேர்ந்த பின்பும் அவளது அழுகை ஓயவில்லை. சேலை கலைந்து, ஜாதி மல்லி சிதறி, மீரா கட்டிலில் சுருண்டு கிடந்தாள்.
அன்று போன வர்மன் தான் இன்று ஆறு வருடங்களுக்கு பிறகு இப்படி பூம்பாறை கிராமத்தில் வந்திருக்கிறான்.
இன்று இவளின் முகம் பார்த்து இன்னும் காத்திருக்கிறான்.