Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 17

ஆகாயமே என் ஆதாரமே 17

கிருஷ்ணனுக்கு காலின் எலும்பு முறிவும், அவரது மூன்று மாத  ஒரே அறையின் வாசமும் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது. பிசியோதெரபி பயிற்சிகளின் மூலம் நடக்கவும் தொடங்கி விட்டார். முன்பு போல் வேகமாக நடக்க முடியாவிட்டாலும் ஊன்றுகோலின் உபயத்தில் அவரது கூண்டு புறா போன்ற உணர்விலிருந்து வெளியுலக வாசத்தை சுவாசிக்கவும் ஆரம்பித்து விட்டார். எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இல்லை,வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அப்படி தெரியும் தோற்ற மயக்கமாக கூட இருக்கலாம்.

உண்மையில் இவ்வளவு வருஷங்களாக பெரியதாக ராதா யோசிக்காத விஷயங்கள் இப்போது அவளின் கண்முன் பூதாகரமாக தெரியத் தொடங்கியிருந்தது. முதல் விஷயம்.கணவன் மனைவி இருவருக்கும் கூடியிருக்கும் வயதும் , அது தரும் முதுமையும்.கிருஷ்ணன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று ,கணவனும் மனைவியுமாக கோவில்களுக்கு சென்று வந்ததெல்லாம் சரிதான்.அதற்க்கான பணம்? நிச்சயம் மகள் சீதா கொடுப்பதுதான். பழைய பணப்பற்றாக்குறை வாழ்க்கையிலிருந்து விடுதலை கொடுத்து இந்த ஆடம்பர வாழ்க்கையை அறிமுகம் செய்து வைத்த புண்ணியம் நிச்சயம் அவளைத்தான் சேரும்.

அதுமட்டுமா… ஜானகியின் திருமண செலவுக்கு என்று சில லகரங்கள் , ஜானகியின்  இரண்டு பிள்ளைப்பேற்றிற்கும் ,அது தொடர்ந்து வந்த சீர் , குழந்தைகளுக்கான நகைகள் என்று கிருஷ்ணின் பணத்துடன்,சீதா சேர்ந்து செலவு செய்ததில் தான் கை நோகாமல் சிறப்பாக செய்ய முடிந்தது.இதோ இந்த வீடு கிருஷ்ணின் சம்பாத்தியம் என்றாலும்கூட, தான் வாங்கியிருக்கும் வீட்டின் வாடகை பெற்றவர்களின் மாத செலவுக்கு என்று கொடுத்து விட்டிருந்தாள் பெண்ணரசி. இந்த மூன்று மாதங்களுக்கு சென்னையின் பிரபல மருத்துவமனையில் தான் கிருஷனுக்கு வைத்தியம் பார்க்கப் பட்டது. ஆண்  துணையாளர்கள் இருவருக்குமான சம்பளம் மூன்று மாதங்களின் இரண்டு லட்சத்தை தொட்டிருக்க,பிசியோ தெரபி செலவு ஒரு நாளைக்கு இரண்டாயிரங்கள்.



Advertisement

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தால் யோசிக்கவும் முடியாது .இன்னமும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் கிருஷ்ணின் மனைவியால் இவற்றை யோசிக்கவும் முடியாது. கிருஷ்ணனால் இந்த செலவுகளை ஏற்றிருக்கவும் முடியாது.இன்றைய நிலையில் நடுத்தர மக்களால் யோசிக்க முடியாது எனும் அளவுக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட.( மருத்துவ காப்பீடு பற்றிய தரவுகளை கொண்டு காப்பீடு செய்து கொள்வது நலம்)

அது தவிர அடுத்து பூதாகரமாக மிரட்டும் விஷயம் துணை.நிச்சயம் சீதா திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் வயதான காலத்தில் இருவருக்குமான துணை? ஏற்கனவே ஜானகி கணவன் குழந்தை என்றுதான் இருக்கிறாள்.பெற்றவர்களை வருஷத்திற்கு ஒருமுறை வந்து எட்டிப் பார்ப்பதுடன் சரி.அதற்க்கு மேல் தலையை கொடுக்க நிச்சயம் அவளுக்கு விருப்பம் இல்லை. அவளது மாமியாரே அடிக்கடி பெண் வீட்டுக்கு சென்று அடைக்கலம் ஆவதும்,சென்னையில் வந்து தங்குவதாக இருக்கும் பொழுது, தங்களின் நிலை?இத்தனைக்கும் அந்த அம்மாவுக்கு சொந்த வீடு,நகைகள்,கணவனின் பென்சன் தொகை என்று காசுக்கு பஞ்சம் இல்லை.அப்படி இருக்கும் பொழுதே அவர்கள் சொந்த மகனிடமிருந்து தள்ளி நிற்க வேண்டி இருக்கும் பொழுது , ஜானகி தங்களை பார்த்துக்கொள்வாள் என்று யோசிக்க கூட முடியாது என்பது மறுக்க முடியாத நிஜம்.

அதோடு ஒரு வேலை சீதா திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகு அவள் தங்களை ஆதரிக்கவும், செலவு செய்யவும் மாப்பிள்ளை வீட்டில் மறுத்து விட்டால்,பிறகு எங்களின் கதி?

Advertisement

இது போன்ற பயன்கள் ராதையின் ரத்த அழுத்தத்தை கூட்டியதுடன் , சர்க்கரையின் அளவையும் அதிகரித்தது. தினமும் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும் எனும் அளவுக்கு ராதையின் உடல் நிலை மோசமானது. சதாசர்வ காலமும் இதே யோசனைதான்!

Advertisement

சீதாவுக்கு மனம் பதறியது. திருமணம் ஆகவில்லை சரி.பெற்றவர்களும் இல்லை என்றால் தனது நிலை என்ன என்று கலங்கினாள். ஆதரவு தேடி தோள் சாய ஆளில்லை. கலங்கும் பொழுது ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. இது தவிர அவளது உடல் பிரச்சனைகள் வேறு.தைராயிடு பிரச்சனை.அதற்கான மருந்துகள். முடி உதிர்வு. மாதாந்திர தூரம் ஆவதில் சிக்கல்.

“ஆமா,அப்படியே சரியா தூரம் ஆகி,உடம்பை காப்பாத்தி , பிள்ளை பெத்துக்க போறேன். தூரம் நின்னா நின்னு தொலைக்கட்டும்”என்று தமது தோழியிடம் சொல்லியிருந்தாள் சீதா. அவளது தோழிக்கு சீதாவின் மனம் புரிந்தது.அவள் என்ன செய்ய முடியும்?

“எவனையாவது மனசுக்கு பிடிச்சா ,அவன் நல்லவனா..உன்னை புரிஞ்சுப்பானா…இதை மட்டும் பாரு சீதா. அழகு,சம்பளம்,சொத்து,படிப்பு இதெல்லாம் உன்கிட்டேயே இருக்கு.உனக்கு இப்போ தேவை ஒரு ஆதரவு. பாசம். காதல்… அதை விடவும் சோர்ந்து போகும் சமயத்துல உடலின் தேவை அதிகம். யாருக்காகவும் பாக்காதே!”என்று தனக்கு தெரிந்த அளவில் சொல்லியிருந்தாள் .

Advertisement

தோழி சொல்வதை கேட்டிருந்த சீதாவுக்கு பெருமூச்சு தான் வந்தது. அம்மா தனக்காக மாப்பிள்ளை தேடும் படலத்தை இன்னமும் விடவில்லை.என்னவோ..ஊரில் இல்லாத அற்புத பெண்ணை பெற்றவர்கள் போல ..மாப்பிள்ளை தேடுவதை உச்சகட்ட வெறுப்புடன் சகித்துக் கொண்டிருக்கிறாள் சீதா.

இப்போது எல்லாம் அடிக்கடி “ம்மா…ஏதாவது மாப்பிள்ளை ஜாதகம் செட் ஆகுற மாதிரி இருக்கும்மா..”என்று அம்மாவிடம் ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்பதும், அவள் அம்மாவோ ஒரு நேரத்திற்கு ஒரு பதில்.

“இல்ல அம்மு…ஒன்னும் சரியாய் வரல.மாப்பிள்ளை பையனுக்கு முன்தலைல வழுக்கை பளபளன்னு மின்னுது. என்ன உடம்பு பிரச்சனையோ…”

“இப்போ எதுக்கு கல்யாணம் செஞ்சுக்க அவசரப் படுறே. கொஞ்சம் நிதானமா பார்த்தாலும் நல்ல இடமா பார்த்து தான் கொடுக்க முடியும். எங்கேயோ கொண்டுபோய் தள்ள முடியாது.அவசரத்தில் செஞ்சுட்டு,ஆறஅமர அவதி பட சொல்றியா?”

“அந்த பையனுக்கு சம்பளம் ரொம்ப கம்மி.எப்படி சரியாய் வரும்? நீயே சொல்லு. படிப்பும் வெறும் டிகிரி தான்.”

“அந்த பையனோட அப்பாவுக்கு ,பையனோட அம்மா ரெண்டாவது மனைவியாம் பையன் மூத்த தாரத்து வாரிசாம்..அப்படியெல்லாம் கொடுக்க முடியாது.யாருக்கோ நீ போய் சேவகம் செய்யவா…”

சீதாவுக்கு மனதில் ,”பையனோட  அப்பா பற்றி நமக்கு என்ன? பையனுக்கு நான் முதல் தானே!அப்படியே ரெண்டாவது மனைவியாக வாழ்க்கை பட்டால் தான் என்ன தவறு. குழந்தையுடன் இருந்தால் கூட எனக்கு பிரச்சனை இல்லை. “என்று தோன்றுவது தான்.மனதில் நினைப்பது வாய்விட்டு சொல்லிவிட முடியாது.

பையனுக்கு தொப்பை இருக்கு. ஹைட் உன்னைவிட ஒரு இஞ்சு கம்மியா இருக்கான். சம்பளம் குறைவு. படிப்பு குறைவு.சொந்த வீடு இல்லை. அப்பா வீடுதான் இருக்கு.அதிலேயும் அவனுடைய உடன்பிறப்புக்கு பங்கு உண்டாம் “என்றெல்லாம் எத்தனை விதமான மாப்பிள்ளைகளை வேண்டாம் என்று சொல்வதற்கான சாக்குகள் .

இவளுடன் வேலை பார்க்கும் நிறைய பெண்களுக்கு திருமணம் முடிந்து  பிள்ளைகள் கல்லூரிக்கு, மேல்நிலை பள்ளிக்கு செல்கிறார்கள்.இவளுக்கு இன்னமும் திருமண யோகம் கூட கூடி வரவில்லை.அடிக்கடி கோவில்களுக்கு சுற்ற ஆரம்பித்தாள் சீதா. இதற்க்கு நடுவில் ராகவன் சென்னையில் அடுத்த வீடும் வாங்கி விட்டான். ஜானகியின் மூத்த பெண் இப்போது ஏழாம் வகுப்பிலும், இளையவன் மூன்றாம் வகுப்பிலும் படிக்கிறார்கள்.

இப்போதெல்லாம் சீதாவுக்கு கோவம் அதிகமாக வருகிறது. ஜானகி தனக்கான பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு சுயநலமாக தனது வாழ்க்கையை பற்றி மட்டும் யோசித்து செயல்படுவதாகவும், தனக்கு திருமணம் நடக்காமல் தள்ளிப் போவதற்கு ஜானகியும் ஒரு காரணம் என்றும் தோன்ற ஆரம்பித்து விட்டது. விளைவு..ஜானகியை மன்னிக்கவே முடியாது என்று மனம் அழுத்த சீதா துவண்டு போகிறாள்.மற்றவர்களின் சுயநலத்துக்கு தான் பலியாவதை அவள் மனம் ஏற்க மறுக்கிறது.

வீட்டில் அதிக நேரம் தங்குவது இல்லை. விடுமுறை நாட்களில் கூட வெளியில் எங்காவது கிளம்பி சென்று விடுகிறாள்.அதிகம் வீட்டு மனிதர்களுடன் பேசுவதும் நேரம் செலவழிப்பதும் இல்லை.எதிலும் ஒரு பற்று அற்ற தன்மை.கண்களில் ஜீவன் இல்லை.முகத்தில் எப்போதும் எதையோ இழந்தது போன்ற தோற்றம். வெளிர் நிற ஆடைகள்.உப்பில்லா உணவு என்று என்னென்னவோ…மனதில் இறுக்கம் அதன் வெளிப்பாடு.

எத்தனையோ பெண்களும் ஆண்களும் திருமணம் வேண்டாம் என்று நிற்கிறார்கள். புரட்சிகரமான கருத்துக்களை வைத்திருக்கிறார்கள்.அவர்களை பற்றி நான் பேசவில்லை.திருமணம் மீதான எதிர்பார்ப்பை வளர்ந்திருக்கும் ஆண் -பெண் இரு பாலருக்கும் இருக்கும் பொதுவான உணர்வுகளை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.அவ்வளவுதான். அதோடு எதையோ ஒன்றை வாசகர்களால் புரிந்து கொள்ளவும் முடியும் என்று நம்புகிறேன்.அவ்வளவுதான்.

சீதாவின் பாராமுகம் வேறு ராதையை நிதானம் இழக்க செய்து கொண்டிருந்தது.கிருஷ்னனுக்கு வரு அடிக்கடி உடல்நலம் சீற்றற்று போக,அவரும் முன்பு அளவுக்கு கூட ராதையிடம் பேசுவது இல்லை. சீதாவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்று குற்ற உணர்ச்சியில் இருக்கிறார் கிருஷ்னன்.

ராதா வெகுண்டு விட்டிருந்தாள்.விளைவு,ஜானகிக்கு அழைத்து “நீ என்ன பெத்தவங்கள யோசிக்காம இவ்ளோ சுய நலமா இருக்கே ஜானகி.இங்கே அப்பாவுக்கு உடம்பு சுத்தமா முடியல.சீதா அவள் இப்போதெல்லாம் வீட்டுல அதிகம் இருக்குறது இல்லை. அக்காவும் தங்கச்சியுமா சேர்ந்து ஆட்டம் காட்டறீங்க.அடுத்த பிளைட் பிடிச்சு வந்து சேரு “என்று கத்திவிட்டு வைத்துவிட்டாள் .

ஜானகிக்கு சென்னை என்றவுடனேயே முகம் சுளித்தது.அங்கே போயி இப்போ நா என்ன சேவகம் செய்யணும்!? என்று அலுத்துக்கொண்டே  அடுத்த இரண்டு நாட்களில் சென்னை வந்து சேர்ந்தாள்.ஜானகியின் மாமியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாக பொறுப்பேற்கவும் ஜானகியால் நிம்மதியாக கிளம்ப முடிந்தது.

சென்னையில் வந்து சேர்ந்தாள் ஜானகி.அவளது வெறுப்பு முகத்தில் தெரிந்தது. ராதா அருகே இல்லாத தனிமையில் மகளிடம் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தார் கிருஷ்னன்.அவரது கைகளை ஆதரவாக பற்றி இருந்தாள் ஜானகி.அவளுக்கும் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.தான் சொல்லி எல்லாம் அம்மா எந்த காலத்திலும் கேட்கமாட்டாளே .

அடுத்து இரண்டு நாட்களுக்கு சீதா வீட்டிற்கு வரவில்லை. ஜானகி ராதையிடன் தங்கை பற்றி விசாரிக்கவும்,”அவ இப்போ திருவண்ணாமலை போயிருக்கா.ரமணாஸ்ரமத்துல தங்கி இருக்காளாம் .பெத்தவங்களை சரியா கவனிக்காம சாமிகிட்ட போயி நின்னா ஆச்சா?” என்று இரைந்தார் ராதா.அம்மா பேசுவது கடவுளுக்கு கூட பிடிக்காது  நினைத்த ஜானகி வாய் திறந்து சொல்லவில்லை.சீதா இப்படி ஆனதற்கு காரணமே அம்மா தானே.அப்படி இருக்கும் பொழுது எப்படி நாக்கில் நரம்பு இல்லாமல் பேச முடிகிறது என்று இரவு தனது அப்பாவிடம் தனியாக புலம்பினாள்.

சீதா வீட்டுக்கு வந்தவுடன் குங்கும பிரசாதத்தை சாமி அறையில் வைத்துவிட்டு வேலை செய்வதற்க்காக என்று மடிக்கணினி முன்பு அமர்ந்து விட்டாள் .ஜானகியிடம் கூட ஏதும் பேசவில்லை.ஜானகிக்கு முகத்தில் அறை வாங்கியது போல இருந்தது.தங்கையிடம் நெருங்கவே யோசனையாக இருந்தது.அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே!

சீதா எதையும் கண்டுகொள்ளவில்லை. மதியம் ராதா சமைத்து வைத்திருந்த எதையும் திறந்து கூட பார்க்கவில்லை.தட்டில் சாதம் போட்டு தயிரை விட்டுக்கொண்டாள். உப்பு கூட சேர்க்காமல் குழைத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது அறைக்குள் சென்ற மகளை பார்த்து திட்டிக்கொண்டு இருந்தாள் ராதா.

இரவு பத்துமணிக்கு மேல் தங்கையின் அறைக்கு சென்றாள் ஜானகி. அவளை ஆச்சர்யமாக பார்த்தாள் சீதா.அவள் முகத்தில் அவ்வளவு ஏளனம்.

“ஏன் சீதா வெறும் தயிர் சாதம்.அதுவும் உப்பு கூட இல்லாம?”ஜானகி கேட்க அவளை நேர்கொண்டு பார்த்த சீதா,”அப்படியாவது இந்த உடம்போட,மனசோட தேடல்கள் காணாமல் போகுதான்னு பார்க்கத்தான் ..ஒரு முயற்சி. தங்கையின் பதில் ஒரு திருமணம் ஆகி சந்தோஷமாக வாழும் பெண்ணாக ஜானகிக்கு வலியை கொடுத்தது.

“நீ அம்மாவை இதுக்கு மேலே யோசிக்காத சீதா.யாராவது மனசுக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு. அப்பாவும் நானும்  கல்யாணம் செய்ய விசாரிக்கிறோம் “

அக்காவின் வார்த்தைகளில் ஒருகணம் திகைத்தவள்,”எப்போலேந்து ஜானு நீ உன்னோட தங்கச்சி பக்கம் நின்னு யோசிக்க ஆரம்பிச்ச.ஆரம்பத்திலேந்து நீ உன்னை பத்தி யோசிச்சு தானே பழக்கம்.இப்போ ஒரு சன்யாச வாழக்கையை நா வாழ நீயும் தானே காரணம்.ஒரு வழியா நா கல்யாணத்தை தியாகம் செஞ்சுட்டு உட்கார்ந்திருக்கேன். இப்போ உனக்கு சந்தோஷம்  தானே. நிறைய சொத்து சேர்த்து வச்சிருக்கேன்.என்னோட காலத்துக்கு பிறகு அதெல்லாம் உனக்கும் உன்னோட பிள்ளைகளுக்கும் தான். கவலை படாதே!”என்று சொன்ன சீதாவை ‘இவள் பைத்தியமா’ என்று பார்த்தாள் ஜானகி. அவளுக்கு மனதில் துக்கம் பொங்கியது.தங்கை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது தெளிவாக புரிகிறது.

அடுத்தடுத்த நாட்களில் ராதாவுடன் பேசியதில் சீதாவுக்கு திருமணம் முடித்து அனுப்பும் எண்ணம் இல்லை என்பதை ஜானகி புரிந்து கொண்டாள் .இதற்க்கு தீர்வு என்ன என்று யோசித்தாள் .தங்கையை இப்படியே விட்டால் அவளை முழுதாக இழக்க நேரலாம் என்று ஜானகிக்கு பயம் வந்திருந்தது.இத்தனை வருஷங்கள் திருமணம் செய்து கொண்டு தான் ஆனந்தமாக வாழும் பொழுது, திருமண வாழ்க்கையின் சந்தோச பக்கங்களில் பயணம் செய்யும் பொழுது தங்கையின் தனிமை புரிந்தவளாக  யோசிக்கிறாள் ஜானகி.இப்போது அவளுக்கு தங்கை மீது இருப்பது எதிர்மாறான எந்த உணர்ச்சியும் இல்லை.வன்மம், பொறாமை ,கோவம் எதுவும் இல்லை. சீதாவை நினைத்து பரிதாபம் ,பயம்.

இப்படியே விட முடியாது  என்று  நினைத்தவள் ஊருக்கு கிளம்பினாள். கிளம்பும் முன்னர் சுதா அத்தை வீட்டுக்கு போகலாம் என்று கிருஷ்னன் கேட்க அவரை அழைத்துக்கொண்டு ,அதுவரை சென்றிராத அத்தை வீட்டுக்கு சென்றாள் ஜானகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!