Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 11

 

அத்தியாயம்– 11


Advertisement

மீராவின் தந்தை மாணிக்கமும், தாய் மரகதமும் மதுரைக்கு அடுத்த பரமக்குடியில் “மீரா டெக்ஸ்டைல்ஸ்” என்ற புகழ்பெற்ற ஜவுளிக்கடையை நடத்தி வந்தனர். ஜவுளிக்கடை அதிபரின் மகள் என்பதால், மீராவின் அலமாரி எப்போதும் வண்ண வண்ண ஆடைகளால் நிறைந்திருக்கும். எந்த ஒரு விசேஷமானாலும், அது கோயிலாகட்டும் அல்லது உறவினர் இல்லத் திருமணமாகட்டும், மரகதம் தன் மகளை ஒரு தேவதை போல அலங்கரிப்பதில்தான் இன்பம் காண்பார்.
“என் மீரா குட்டிக்கு இந்தப் பட்டுப்பாவாடை தான் எடுப்பா இருக்கும்… இதுல அப்படியே ஒரு தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருக்கா பாரு!” என்று சொல்லி,அவளுக்குப் பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து, தலையில் மல்லிகைச் சரம் சூட்டி, கண்ணே பட்டுவிடும் என்பது போலக் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைப்பார். அந்தத் தாயின் கைகள் அவளது ஆடையைச் சரிசெய்யும் போதெல்லாம், மீரா தன்னை ஒரு இளவரசியாகவே உணர்வாள்.
ஆறாம் வகுப்பு… ஒரு சிறுமிக்கு உலகம் என்பது வண்ணத்துப் பூச்சிகளும், பள்ளிக்கூடப் பையும், அம்மாவின் முத்தமும் மட்டுமே நிறைந்த ஒரு களம். மீராவிற்கு கூடுதலாக அந்தப் பருவத்தில் விதவிதமான பட்டுப் பாவாடை சட்டைகளும், அந்தத் துணிக் கடையின் வாசமும் சேர, வாழ்க்கை பொன் வசந்தமாக இருந்தது.

Advertisement

ஆனால், விதி அந்த இளவரசியின் மகுடத்தைச் சிதைக்கக் காத்திருந்தது.

Advertisement

அன்று ஒரு அமாவாசை இரவு. தீபாவளி விற்பனைக்காகப் புதிய ரகப் பட்டுச் சேலைகளைக் கொள்முதல் செய்துவிட்டு, அவர்கள் பரமக்குடிக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். காரின் பின் இருக்கையில், தன் அம்மாவின் மடியில் தலைசாய்த்து உறங்கிக்கொண்டிருந்தாள் மீரா. சட்டென்று, இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு லாரி அவர்கள் மீது பாய்ந்தது. இரும்பு நசுங்கும் அகோரச் சத்தம்… கண்ணாடிச் சில்லுகள் தெறித்து மீராவின் முகத்தில் ரத்தக் கோலமிட்டன.
சிறுமி மீராவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவளது காதுகளில் ஒருவித ரீங்காரம். கண்ணைத் திறந்து பார்த்தபோது, கார்முழுவதும் பட்டுத் துணிகள் சிதறிக் கிடந்தன. ஆனால், அவற்றில் பூவேலைப்பாடுகளுக்குப் பதில் ரத்தக் கறைகள் படர்ந்திருந்தன. எப்போதும் கதகதப்பாக இருக்கும் அம்மாவின் மடி இப்போது சில்லிட்டுப் போய், அசைவற்றுக் கிடந்தது. விபத்தின் ஒரு நொடியில், ஜவுளிக்கடை இளவரசி அநாதையானாள்.
விபத்திற்குப் பிறகு, மதுரைக்கு வந்து சேர்ந்தாள் மீரா. அவளது மாமன் வீட்டில் அவள் வளர்ந்த விதம், அந்த ஒரு வருடம் ஒரு நரகவேதனை. அவளது மாமன் வீட்டில், மீரா ஒரு வேலைக்காரியாகவே நடத்தப்பட்டாள். “ராசி இல்லாதவள்! இவ வந்த நேரம் ஜவுளிக்கடையே ஏலத்துக்குப் போயிடுச்சு… பெத்தவங்களை முழுங்கிட்டு வந்தவளுக்கு எதுக்குடி பட்டுத் துணி?” என்று அத்தை ஒவ்வொரு நாளும் அவளைக் குத்திக் காட்டினாள். பட்டுப் பாவாடை அணிந்து பன்னீர் வாசத்தில் வளர்ந்த அந்தச் சிறுமி, இப்போது பழைய அழுக்குத் துணிகளோடு அந்த வீட்டின் பத்து பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

மாமன் வீட்டின் இருட்டு மூலை அவளது உலகமானது. அந்த நரகத்தில் அவளுக்குக் கிடைத்த ஒரே ஆக்சிஜன் வெற்றிமுருகன்.
வெற்றி, மீராவின் மாமனுக்கு ஒரே மகன். அவளை விட நான்கு வயது சின்னவன். “அக்கா… அக்கா…” என்று அவளைச்சுற்றிச் சுற்றி வருவான். அத்தையின் கொடுமைகளுக்கு நடுவில், மீராவுக்குப் பசிக்கும்போது தன் தட்டில் இருக்கும் உணவை அவளுக்கு மறைத்துக் கொண்டு வந்து கொடுப்பான் அந்தச் சிறுவன். ஆனால், அத்தை பார்த்தால் அவனையும் அடிப்பார் என்பதால், மீரா அவனிடம் பேசவே பயப்படுவாள்.
“வெற்றி, இங்கே வராதே… அத்தை பார்த்தா திட்டுவாங்க,”என்று அவள் விரட்டினாலும், அந்தச் சிறுவன் தன் மழலை மாறாத கண்களால், “அக்கா…நீ ஏன் எப்போவும் அழுற?” என்று கேட்டு அவளது மனதை உருக்குவான். அந்தச் சின்னவயதிலேயே எல்லாம் இழந்த அவளுக்கு கிட்டிய ஒரு ஆறுதல் வெற்றி.
மதுரை சித்திரைத் திருவிழா நெருங்கியது. மீராவின் கண்கள் குளமாயின. முன்பெல்லாம் இதே திருவிழாவிற்கு அப்பாவும் அம்மாவும் வரும்போது, அந்தக் தெருவே அதிரும். கார்களில் மூட்டை மூட்டையாகப் புத்தாடைகளோடு அவர்கள் மாமன் வீட்டிற்குள் நுழையும்போது, அத்தையும் மாமனும் ஓடி வந்து “ராஜ மரியாதை” செய்வார்கள்.உற்சாகமான வரவேற்பு, அறுசுவை உணவு என அந்த வீடே திருவிழாக் கோலம் பூணும். அப்போதெல்லாம் மீரா ஒரு இளவரசியாக அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பாள்.
ஆனால் இன்று? ஊரே திருவிழாவிற்குத் தயாராகிக்கொண்டிருக்க, மீரா மட்டும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். “அம்மாவும் அப்பாவும் இருந்தா, இந்நேரம் எனக்கும் வெற்றிக்கும் புதுத் துணி எடுத்துட்டு வந்திருப்பாங்களே…என்னை அத்தை திருவிழாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்களா?” என்ற ஏக்கம் அவளைக்கொன்றது. கடைசியில், வெற்றியின் பிடிவாதத்திற்காக அத்தை அவளைத் திருவிழாவிற்கு அழைத்துச்சென்றார்.
மதுரையின் வீதிகள் எங்கும் மல்லிகைப்பூக்களின் நறுமணம். தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் அருகே, கையில் தண்ணீர் பீய்ச்சும்தோல் பைகளுடன் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்கள், பன்னீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர். தங்கக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்தப்பிரம்மாண்டமான காட்சி… அது வெறும் திருவிழா அல்ல, மதுரையின் உயிர்நாடி. ஆயிரக்கணக்கான தீவட்டிகள் பகலைத் தோற்கடிக்க, மேள தாளங்கள் அதிர, அழகரின் வருகைக்காகக் காத்திருந்தஅந்த மக்கள் வெள்ளம் ஒரு சமுத்திரத்தைப் போல அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மஞ்சள்ஆடைகள், வேப்பிலை மாலைகள், மற்றும் நெற்றியில் மின்னும் திருநீறு.
ஆனால், இந்த வண்ணமயமான கொண்டாட்டத்திற்கு நடுவே, மீரா என்ற ஒரு சிறுமியின் இதயம் மட்டும் தனிமையில் விம்மிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, மீராவின் பிடி நழுவியது. “அத்தை! மாமா!” என்றுஅவள் அழைத்த குரல் அந்த வாத்தியக் கோஷங்களில் கரைந்து போனது. ஜனத்திரள் அவளை மெல்லமெல்ல ஒரு குறுகிய, இருட்டான சந்துக்குள் தள்ளியது. யானைக்கல் பகுதிக்கு அருகிலிருந்த அந்தச் சந்து, திருவிழாவின் வெளிச்சத்திற்கு நேர் எதிராய் மரண அமைதியுடன் இருந்தது.
அங்கேதான் அந்த இரண்டு ஓநாய்கள் காத்திருந்தன. மதுவும், வக்கிரமும் ஏறிய கண்களுடன் அவர்கள் மீராவைச் சூழ்ந்தனர். “என்ன பாப்பா…தனியா நிக்கிற? அழகரைப் பார்க்கலையா?”  ஒருவனின் அசுரச் சிரிப்பு அந்தச்சந்தின் சுவர்களில் மோதித் திரும்பியது. ஒரு கரடுமுரடான கை அவளது மென்மையான தோளைப்பற்றியது. “விடுங்க… விட்டுடுங்க…” என்று அவள் கதறியபோது, அவளதுவாய் பொத்தப்பட்டது. அந்த இருட்டுச் சந்தின் மௌனத்தைக் கலைத்தது மீராவின் விம்மல் சத்தம்.
அப்போதுதான், இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு கல் வந்து ஒருவனின் மண்டையில் மோதியது! “டேய்! கையை எடுடா!”
ஒரு சிறுவன், அவளது வயதுதான் இருக்கும்…கையில் வேப்பிலை சுற்றிய தடியுடன் அந்தச் சந்துக்குள் பாய்ந்தான்.
அன்று அவள் கண்களுக்கு தெய்வம் போல, அவளைக் காப்பாற்ற வந்த குட்டி அழகராக அந்த பால் முகத்துச்சிறுவன் நின்றான்.
அவன் முட்டாள்தனமாக நேருக்கு நேர் மோதவில்லை. அவனது புத்திசாலித்தனமே அவனது ஆயுதமானது.அந்தச் சந்தின் தரையில் கிடந்த ஒரு கைப்பிடி மணலை மின்னல் வேகத்தில் வாரினான். “மீண்டும் டேய்!”என்று அவன் கத்திய சத்தத்தில் ரவுடிகள் திரும்ப, அவர்களின் கண்கள் இலக்காகின. அவன் வீசிய மணல் அவர்களின் பார்வையை மறைக்க, அவர்கள் கண்கள் எரிச்சலில் துடித்தனர்.
அவனது கண்களில் தெரிந்த வேகம், அழகரின் ஆவேசத்தைப் போலவே இருந்தது. அவன் கையில் இருந்த தடியால் ஒருவனின் தாடையைப் பெயர்த்தெடுத்தான். அடுத்தவன் கத்தியை உருவ, அந்தச் சிறுவனின் முதுகில் ஒரு நீண்டக் கீறல் விழுந்தது. ரத்தம் பீய்ச்சி அடிக்க, அந்த வலியையும் மீறி, “யாராவது ஓடி வாங்க! இங்கே ரவுடிங்க ஒரு பொண்ணை மிரட்டுறாங்க! பிடிங்க அவங்களை!” என்று தன் முழு பலத்தையும் திரட்டி உரக்கக் கத்தினான்.
திருவிழாக் கூட்டத்தின் இரைச்சலையும் மீறி, அவனது குரல் அருகில் இருந்த சிலரை ஈர்த்தது. “யாரது? அங்கே என்ன சத்தம்?”என்று மக்கள் அந்தச் சந்தை நோக்கி நகரத் தொடங்கும் அரவம் கேட்டது. மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அந்த இரு ரவுடிகளும் தட்டுத்தடுமாறி இருட்டுக்குள் ஓடி மறைந்தனர்.
ரவுடிகள் போன பிறகு, அந்தச் சிறுவன் மூச்சிரைக்க அவளருகே வந்தான். சுவரோரம் சரிந்து, தன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு மீரா அங்கே ஒரு கசங்கிய காகிதமாய் துடித்தாள். “அம்மா… வலிக்குதே…” என்று அவள் முணுமுணுத்தாள். அவளது உடலுக்குள் ஏற்பட்ட அந்தப் புதிய மாற்றமும், பாவாடையில் படர்ந்த அந்த உதிரக் கறையும் அவளை ஒரு குற்றவாளியைப் போலக் கூனிக் குறுகச் செய்தது.
அப்போது தான் அந்தச் சிறுவனின் பார்வை அவளது பாவாடையில் இருந்த அந்த ரத்தக் கறையின் மீது விழுந்தது. என்ன புரிந்ததோ… அவனுக்கு! அந்தத் தருணத்தில் அவனது முகத்தில் அப்படி ஒரு முதிர்ச்சி தெரிந்தது. அவன் மெல்லக் குனிந்து அவளது நடுங்கும் கரத்தைப் பற்றினான். அவனது கையின் கதகதப்பு மீராவின் நடுக்கத்தை ஒரு நிமிடம் நிறுத்தியது.
“இங்க பாரும்மா… பயப்படாதே. உனக்கு ஒண்ணும் ஆகல. அமைதியா இரு. நான் இருக்கேன்,” என்று மிக நிதானமான, உறுதியான குரலில் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
அவள் தன் ஆடையை மறைக்கத் தெரியாமல் தவிப்பதைப் பார்த்த அந்த சிறுவன் ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. சட்டென்று தன் சட்டையின் பொத்தான்களைக் கழற்றினான். கடைசிப் பொத்தான் விடுபட்டு அவன் சட்டையை உருவிய அந்த நொடி… மீரா ஏறிட்டுப்பார்த்தாள். அவனது முகத்தில் வழிந்த வியர்வைத் துளிகள் நிலவொளியில் வைரம் போல மின்னின. அவன் உள்ளே ஒரு வெள்ளை நிறப் பனியன் அணிந்திருந்தான்.
சட்டையை அவன் தோள்களில் இருந்து நழுவவிட்டஅந்த நொடி, அவனது பனியனின் அந்தத் திறந்த கழுத்துப் பகுதிக்குச் சற்று மேலே, இடது மார்பின் மேலே… மீராவின் கண்கள் நிலைத்தன. அங்கே, நிலவொளியின் நீல நிறக் கீற்று பட்டுத் தெறித்த அந்த இடத்தில், ஒரு சிறு கருப்புத் துகள் படிந்திருப்பதைப் போல ஒரு தழும்பு. அது ஒரு விபத்தோ அல்லது அடியோ தந்த கரடுமுரடான வடுவைப் போலத் தெரியவில்லை. மாறாக, ஒரு வெண்மையான காகிதத்தில் தற்செயலாக விழுந்த ஒரு ‘மைத்துளி’யைப் போல, அத்தனைத் துல்லியமாக… அத்தனை நுணுக்கமாக இருந்தது.
“இந்தா… இதைக் கட்டிக்கோ. யாரும் பார்க்க மாட்டாங்க. நான் இருக்கும்போது நீ ஏன் அழற?” என்று உருக்கமாகக் கேட்டான்.அவன் அந்தப் பழைய சட்டையை அவளிடம் நீட்டியபோது, அதில் திருவிழாவின் பன்னீர் வாசனையும்,அவனது காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தின் சூடும் கலந்திருந்தது. மீரா நடுங்கும் கைகளால்அந்தச் சட்டையை வாங்கித் தன் இடுப்பில் ஒரு கவசமாகச் சுற்றிக் கட்டிக் கொண்டாள். அந்தப்பால் முகமும், வீரம் சொரிந்த கண்களும் அவளுக்குப் புதுத் தெம்பைத் தந்திருந்தன.
அப்போது, “வீரா… வீரா… எங்கேடா இருக்க?” என்று ஒரு முதிர்ந்த குரல் அந்தச் சந்திற்கு வெளியே கேட்டது. வெள்ளைநிறச் சேலையில் ஒரு பாட்டி அந்தச் சந்துக்குள் நுழைந்தார். “வீரா! இங்க என்னடா பண்ற? நேரமாகுது பாரு!” என்று அவர் அதட்டலாகக் கேட்டபடி அருகில் வர, வீரா நிதானமாகத் திரும்பினான்.
“பாட்டிம்மா… இதோ பாருங்க, இந்தப்பொண்ணு தனியா மாட்டிக்கிச்சு. ரொம்பப் பயந்துப் போய் இருக்கு,” என்று அவன் அந்தப் பாட்டியிடம் மீராவின் மநிலையை மிகக் கண்ணியமாக விளக்கத் தொடங்கினான். மீராவின் அந்தப் பூப்படைந்த நிலையை பாட்டியிடம் ஜாடையாகச் சொல்ல, அந்தப் பாட்டியின் கண்கள் கனிந்தன. “ஐயோ… கண்ணு. நீ ஒண்ணும் பயப்படாதே,” என்று அந்தப் பாட்டி மீராவை நெருங்கினார்.
அப்போதுதான், அந்தச் சந்தின் மௌனத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு சிறுவனின் குரல் கேட்டது. “அக்கா! அக்கா! எங்கே போயிட்ட நீ? உன்னைத் தேடித் தேடி அப்பாவும் அம்மாவும் அலையுறாங்க!”
வெற்றிமுருகன் தான்! மீராவை விட நான்கு வயது சிறிய அந்தச் சிறுவன், மூச்சிரைக்க ஓடி வந்து அவளது கையைப் பற்றிக்கொண்டான். “வா போலாம்,” என்று அவன் அவளை இழுக்க, வீராவின் கண்கள் ஒரு நொடி மின்னின. ‘ஓ…இவளுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது… இவளைக் கவனித்துக் கொள்ள ஒரு தம்பி இருக்கிறான்’என்று வீரா நினைத்துக் கொண்டான். அவனது முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை அரும்பியது.
அவன் அந்தப் பாட்டியுடன் அங்கிருந்து நகரத் தொடங்கினான். சந்தின் முனையை அடையும் போது, வீரா சட்டென்றுத் திரும்பித் தன் இடது கையால் மீராவைப் பார்த்து ஒரு அழகான விடைபெறல் சைகை காட்டினான். முதுகில் கீறலின் ரத்தம், முகத்தல் அந்த இடது கன்னக்குழி புன்னகையுமாய் அவன் கையாட்டி செல்ல, அந்தத் தருணம், மதுரையின் அந்தச் சித்திரை நிலவொளியில், மீராவின் ஆழ் மனதில் ஒரு ‘பொன்னோவியமாக’ பதிந்தது.
மீரா இப்போது ரஞ்சுவிடம் சொன்னாள்: “ரஞ்சு…அவனோட அந்தப் பால் முகமும், கண்கள்ல தெரிஞ்ச அந்தப் பயமில்லாத வீரமும் தான் இன்னைக்கு வரைக்கும் எனக்குள்ள ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியோட (IAS) கம்பீரத்தைத் தந்துட்டுஇருக்கு.”
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கியா மீரா? என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள் ரஞ்சனா. அவளது கண்களும் கலங்கியிருந்தன.
மீரா ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தேனியின் பனி மூட்டம் அவளது கண்களை மறைக்கவில்லை, மாறாக அந்த மதுரையின் சித்திரை நிலவைத் தான் அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தது.
“ரஞ்சு… நமக்கெல்லாம் சின்ன வயசுல சிண்ட்ரெல்லா கதை சொல்லித் தருவாங்கள்ள?” – மீராவின் குரலில் ஒருவிதமான ஏக்கமும், வலியும் கலந்திருந்தது. “அந்தக் கதையில சிண்ட்ரெல்லா அந்த அரண்மனை ஆட்டத்துல இருந்து பாதியிலேயே ஓடிப்போயிருவா. அவளோட ஒரு கால் செருப்பு மட்டும் அங்கே விழுந்து கிடக்கும். அதை வச்சு அந்த ராஜகுமாரன் தேசம் தேசமா அலைஞ்சு அவளைத் தேடிப் பிடிச்சுருவான்…”
மீரா மெல்லத் திரும்பி ரஞ்சுவைப் பார்த்தாள். அவளது கண்களில் இப்போது ஒரு சொட்டுக் கண்ணீர் திரண்டு நின்றது. “ஆனா இங்கே பாரு ரஞ்சு… அந்தக் கதையோட ஒரு தலைகீழ் மாற்றமா நான் இங்கே நிக்கிறேன். அன்னைக்கு அந்த யானைக்கல் சந்துல, சிண்ட்ரெல்லாவா நான் ஓடி வரல… என் ராஜகுமாரன் வீராதான் அந்தஇருட்டுல ஓடிப் போயிட்டான்! அவன் விட்டுட்டுப் போனது ஒரு கால் செருப்பை இல்ல… என் மானத்தைக் காப்பாத்தின அவனோட அந்தப் பழைய சட்டையை!”
அவள் தன் மேஜை இழுப்பறையை மெல்லத் திறந்து, ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய சட்டையை வருடினாள். “ராஜகுமாரன் சிண்ட்ரெல்லாவைத் தேடித் திரிஞ்ச மாதிரி, நான் இங்கே என் ராஜகுமாரனைத் தேடித் திரியுறேன் ரஞ்சு. வருஷங்கள் ஓடிப் போச்சு… நான் இப்போ ஊருக்கே மாவட்ட ஆட்சியரா இருக்கலாம். ஆனா அந்த வீரா முன்னாடி நான் இன்னும் அந்தப் பயந்துப்போன பதிமூன்றுவயது மீராதான்.”
“என்னைக்காவது ஒரு நாள்… என்னைக்காவது ஒரு நாள் நான் அவனைப் பார்ப்பேனா? அவன் என் முன்னாடி வந்து நிப்பானா? ‘மீரா பயப்படாதே, நான் இருக்கேன்’னு ஒருவாட்டி சொல்லுவானா? அந்தக் கனவுல தான் நான் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்! “
மீரா இப்போது அழுதுகொண்டிருக்கவில்லை. அவளது இதயம் அருவியாக வழிந்து கொண்டிருந்தது. இத்தனை ஆண்டு காலம் ஒரு பெட்டகத்திற்குள் பூட்டி வைத்திருந்த அந்தப் பெரும் ரகசியம், இன்று ரஞ்சனாவிடம் பகிர்ந்த பிறகு, அவளது ஆன்மா மெல்ல இலகுவானது. ஒரு பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போன்றதொரு ஆறுதல் அவளது முகத்தில் தெரிந்தது.
ரஞ்சனாவிற்குள் இப்போது ஒரு இனம் புரியாத பாரம் ஏறிக் கொண்டது.
“ஐயோ! அப்போ வர்மன் நிலை?’
” வீராவோட அந்த முகம் என் கண்ணுல அப்படியே வந்து நிக்குது ரஞ்சு. அந்தப் பொன்னோவியத்தை எரிக்கறதுக்கு என்னால முடியலடி . அதுதான் இன்னைக்கு வர்மனுக்கும் எனக்கும் நடுவுல ஒரு பெரிய சுவரா நிக்குது!”
“நான் வீராவைத் தேடிப் போற இந்த பயணத்துல வர்மன் ஒரு அழகான வழிப்போக்கன் அவ்வளவுதான்!”
மீரா தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்தப் பழைய சட்டையை மீண்டும் பத்திரமாக மடித்து வைத்தாள். அவளது முகம் ஒரு தெளிவைப்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!