Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ -15

 

 

 

 



Advertisement

அத்தியாயம் :15

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலக அறைக்குள் நிலவிய ஏசி குளிரையும் மீறி, அங்கே ஒரு தணல் எரிந்து கொண்டிருந்தது.  நேற்றைய கல்லூரி சம்பவத்தில் வர்மன் தனது பலமான கைகளால் பிடித்து இழுத்துச் சென்றதில் மீராவின் மணிக்கட்டில் ஏற்பட்டிருந்த மெல்லிய சிவப்புத் தழும்பு, அதையே பார்த்திருந்தாள் மீரா.  அவளது இதயத்தில் ஒரு புது சிலிர்ப்பையும், அதே சமயம் ஒரு குற்ற உணர்ச்சியையும் ஒரு சேர உணர்ந்தாள்.

Advertisement

திடீரென, அறைக்கதவு தட்டப்படாமல் அதிரடியாகத் திறக்கப்பட்டது.உள்ளே நுழைந்தான் எம்.எல்.ஏ கொடிவீரன். நேற்று கல்லூரியில் பார்த்த அதே வெள்ளை வேட்டி, சட்டை, மடிந்த கைகள். ஆனால், அவனது முகத்தில் இப்போது ஒரு மர்மமான புன்னகை குடியேறியிருந்தது. கம்பீரமாக நடந்து வந்து, மீராவின் அனுமதிக்குக் காத்திராமல் அவளுக்கு நேர் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.மீரா சட்டென்று நிமிர்ந்து, தன் கலெக்டர் ஆளுமையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு, “சொல்லுங்க கொடிவீரன், இந்த நேரத்துல என்ன விஷயம்?” என்றாள் குரலில் ஒரு கண்டிப்பைக்காட்டி.
கொடிவீரன் நாற்காலியில் சற்றுப் பின்னோக்கிச் சாய்ந்து, தன் நீண்ட விரல்களால் மேஜையை மெதுவாகத் தட்டினான். அவனது கூர்மையான கண்கள் மீராவின் முகத்தை, அவளது கண்கள் காட்டிய நடுக்கத்தை மிக ஆழமாக ஆராய்ந்தன.

Advertisement

“நான் விஷயத்தைப் பேச வரல கலெக்டர் மேடம்… ஒரு கேள்வியைக் கேட்க வந்தேன்,” என்றான்.  அவனது குரலின் ஏற்ற இறக்கம் அந்த அறையின் தட்பவெப்பத்தையே மாற்றியது.”என்ன கேள்வி?”
கொடிவீரன் தன் உடம்பைத் சற்று முன்னோக்கி நகர்த்தி, மீராவின் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்தான். அவனது கண்கள் அவளது முகத்தில் இருந்து மெல்லக் கீழே இறங்கின. நனைந்த ஈரப்பத கண்கள், கூர் நாசி, தோள்களில் படிந்திருந்த அவளது கூந்தல், அவளது கம்பீரமான தோள்கள், கலெக்டர் உடையில் இருந்த அவளது ஒட்டுமொத்த ஆளுமை என அவளை உச்சி முதல் பாதம் வரை  ஒருவித தீர்க்கமான ரசனையோடு மிக ஆழமாக ரசித்துப் பார்த்தான். அவனது பார்வையில் ஒரு பெண்ணாக அவளது அழகை ஆராதிக்கும் ஒரு கணம் அப்பட்டமாகத் தெரிந்தது.
மீராவுக்கு அந்த பார்வை மாற்றம் புரிவதற்குள்
“காலையில காலேஜ் ஃபங்ஷன்ல… அந்த நடுவரிசையில கருப்புப் புர்கா போட்டுட்டு உட்கார்ந்திருந்தீங்களே… அது எதுக்காக?” என்று நேரடியாகக் கேட்டு மீராவின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சினான்.
மீரா ஓரு கணம் அதிர்ச்சியில் உறைந்தாள்… பின்னர், அவளது கலெக்டர் மூளை விழித்துக்கொண்டது. “நீங்க என்ன பேசுறீங்கனு எனக்குப் புரியல கொடிவீரன். ஒரு பொது நிகழ்ச்சியில சட்டம் ஒழுங்கை கண்காணிக்கிறது கலெக்டரோட கடமை. அதுக்கு நான் புர்கா போட வேண்டிய அவசியம் இல்லை,” என்று மிகத் தந்திரமாகச் சமாளிப்பதாக சமாளித்தாள்.
கொடிவீரன் கலகலவென்று சத்தமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு ஏளனமும், அதே சமயம் ஒரு ஆணழகனுக்கே உரிய மிதப்பும் இருந்தது.
” என்கிட்ட மறைக்காதீங்க மீரா… புர்கா துணி உங்க முகத்தை வேணா மறைச்சிருக்கலாம், ஆனா மாவட்ட கலெக்டரோட அந்த கம்பீரமான பார்வையை என்னால அடையாளம் காணாம இருக்க முடியாது. என் கேள்வி என்னன்னா… எதுக்காக அந்த வேஷம்? ஒரு எம்.எல்.ஏ-வை ரகசியமா வேவு பார்க்கிறதுக்காக எடுத்த ஸ்பை  வேலைதானா அது? இல்ல…” என்று இழுத்த கொடிவீரன், தன் பேச்சைச் சட்டென்று நிறுத்தினான் .
அவன் தன் முகத்தில் ஒரு அப்பட்டமான வசீகரப் புன்னகையை வரவழைத்து, மீராவை நோக்கி ஒரு காந்தப் பார்வையை வீசினான் . அவனது கண்கள் அவளது உதடுகளையும், அவளது கண்கள் காட்டிய தவிப்பையும் மெதுவாகத் துழாவின.
மீராவுக்கு “எல்லாம் போதும்” என்றானது. இதை இப்படியே போக விடக்கூடாது எனத் தோன்ற….
“ஐ ஹாவ் எ ரீசன்..” என்றாள்.
கொடி வீரன் சட்டெனெ எழுந்தான்… அவளுக்கு அருகில் வந்து ” “சொல்லுங்க … என்றான். ஒரு காதலன் காதலியிடம் காதலை யாசிப்பதாக இருந்தது அவன் அவளை ஏறிட்ட விதம்…
” இல்ல.. கொடிவீரன்…. நீங்க மதுரை தான…”
“ஆமா…”
அவன் அதை சொல்லி முடிக்கும் முன்னரே கதவு திறந்தது.
 அங்கே வர்மன் நின்றிருந்தான்!அவனது தோள்பட்டையில் இருந்த வெள்ளை நிறக் கட்டுக்கு மேலே லேசான உறைந்த இரத்தக் கறை தெரிந்தது. அவனது கண்கள் அறையில் இருந்த கொடிவீரனையும், அவனுக்கு மிக அருகில் நின்ற மீராவையும் பார்த்த நொடி… அவனது முகத்தில் ஒரு கொடூரமான ஏமாற்றமும், எல்லையற்ற ஆத்திரமும் ஒன்றாக வெடித்தன.
 விபரீதத்தை உணர்ந்த மீராவுக்கு இதயம் தொண்டைக்குள் வந்தது. வர்மனின் அந்தப் பார்வை அவளை நிலைகுலையச் செய்தது. கொடிவீரனை அங்கே விட்டுவிட்டு, அவள் உடனடியாக “வர்மன்…” என அவனருகே செல்ல
வர்மன் மீராவின் கண்களை நேராகப் பார்த்து, தன் கம்பீரமான குரலைத் தாழ்த்தி, ஆத்திரத்தின் உச்சியில் உடைந்த குரலில் கேட்டான்:
“நான் காலையில அவ்வளவு சொல்லியும்… ஆபத்துன்னு எச்சரித்தும்.. நீ இங்க அவன்கூட இப்படி நின்னுட்டு இருக்கியா மீரா???” என்று அவளது இதயத்தைக் கிழிப்பது போலக் கேட்டான்.
” ஜஸ்ட் லுக் அட் திஸ்…”   என்று தன் கையில் இருந்த தடிமனான ரகசியக் கோப்பை  அவளது மேஜை மீது ஓங்கி எறிந்தான்.
பின்னர்
“அவன போக விட்ராத… அரெஸ்ட் வாரன்ட் வந்துட்டு இருக்கு … வாங்கிட்டு வர்றேன்… “என மெல்லிய குரலில் கர்ஜித்து விட்டு போனான்.
 ஒன்றுமே நடவாததாக கொடிவீரன் இன்னும் அதே குறும்புத்தனமான, வசீகரச் சிரிப்போடு நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் இப்போதும் அந்த மாஸ் ஹீரோவுக்கான மிதப்பு குறையவில்லை .
“என்ன கலெக்டர் மேடம்… உங்க எஸ்பி ஏதோ பெரிய ஆதாரத்தைக் கொண்டு வந்திருக்கிறதா நினைச்சுட்டு சத்தம் போட்டுட்டுப் போறாரு? எடுத்துப் பாருங்க… இந்த கொடிவீரனோட வரலாறுல ஜனங்களோட இரத்தமும் வியர்வையும் மட்டும்தான் இருக்கும்,” என்றான் சென்று சேரில் சாய்ந்து அமர்ந்தபடி.
 மீரா அவனது பேச்சைப் பொருட்படுத்தாமல், தனது இருக்கையில் அமர்ந்தாள் .  வர்மன் எறிந்த அந்த ஃபைலைத் திறந்து பக்கங்களைப் புரட்டினாள்.  முதல் பக்கத்தைப் பார்த்த அடுத்த நொடி… அவளது கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன . அடுத்தடுத்த பக்கங்களில் அவளது முகம் வெளுத்துப் போனது.
” என்ன மேடம்? ஏதோ பேயைப் பார்த்த மாதிரி பாக்குறீங்க?”
கொடிவீரனின் குரலில் லேசான குழப்பம் அரும்பியது.
” வாணிஸ்ரீ சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்… அவங்களுக்கான நீதி… எல்லாம் ஒரு அப்பட்டமான நாடகம்! அந்தப் பிரம்மாண்டமான ஆலையையும், அதைச் சுத்தியிருக்கிற நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தையும் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய்க்குத் தாரை வார்க்க நீ ரகசிய ஒப்பந்தம் பண்ணியிருக்க!
இதோ அந்த டாக்குமென்ட்… (Deliberate motive of grabbing Vanishree Mills).
ப்ளஸ்… தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுக் கலவரம் செஞ்சதே, ஆலை நஷ்டமடைஞ்சதா காட்டி அதை நிரந்தரமா மூட வைக்கிறதுக்குத்தான்!”… அவன் விழித்தான்.
“தோ…. அந்த சித்தாந்தா நிறுவனத்துக்கூட சேர்ந்து வாணிஸ்ரீ ஆலையைக் கைப்பற்ற ரகசியப் பேரம் பேசின அத்தனை போன் ரெக்கார்டிங்ஸ், உன்னோட பினாமி வங்கிப் பரிவர்த்தனை ஆதாரங்கள் இங்க இருக்கு”
ப்ளஸ் …
“அந்த பெட்ரோல் குண்டு  எறிந்த அந்த பசங்க ஒரு நக்ஸல் க்ரூப்… அவங்களும் நீங்க சொல்லி செஞ்சதா குடுத்த வாக்கு மூலம் இது” … கொடிவீரன் எழுந்தான்… முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்பதை போல விறைத்திருந்தான்.
” மீரா மேடம்… நீ பார்க்கிறது வெறும் பேப்பர்ஸ் .. லீகலா நான் செய்தது தப்பா இருக்கலாம்  … பட்… இந்த கொடிவீரனோட நாணயத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்கு. அந்த கார்ப்பரேட் நிறுவனம் எனக்குத் தர்ற பல நூறு கோடி ரூபாயை வச்சு, இந்த மாவட்டத்தில் இருக்குற பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்காக ஒரு பிரம்மாண்டமான இலவசப் பல்கலைக்கழகத்தைக் கட்டப் போறேன்!
” ஒ! எப்படி கட்டப்போறீங்க? ஐந்தாயிரம் ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிச்சா?”
“ஆமா , ஐம்பதாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கத் துணிஞ்சவன் நான்! ஒரு நல்ல காரியத்தைச் செய்ய, எவ்வளவு பெரிய துரோகத்தையும் செய்யலாம்ங்கிறதுதான் என் கொள்கை!” என்று அவளது கண்களை உற்றுப் பார்த்துத் தன் ஆபத்தான ‘கிரே ஷேட்’ நியாயத்தை முழங்கினான்.
 ” பெரிய கொள்கை …உன்னோட சுயநலத்துக்காக அத்தனை குடும்பங்களை நடுத்தெருவுல நிப்பாட்டுறது எந்த விதத்துல நியாயம் மிஸ்டர்    எம். எல். ஏ…?!”
கொடிவீரன் என  அழைத்தவளிடம் மாற்றம்!
மீரா இன்டர்காமை எடுத்துப் போலீஸை அழைக்க முயன்றாள் .
 கொடிவீரன் மின்னல் வேகத்தில் பாய்ந்து, அவளது கையிலிருந்த போனைப் பிடுங்கி எறிந்தான்.
“என்னை என்ன செய்வ மீரா? வெளியில நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் என் ஒரு வார்த்தைக்காகக் காத்துட்டு இருக்காங்க. நான் நினைச்சா இந்தத் தேனி மாவட்டத்தையே எரிக்க முடியும்!”
“முதல்ல…ஒரு அடியாவது நகர்ந்து பாரு… “
அறையின் கதவு மீண்டும் அதிரடியாகத் திறக்கப்பட, உள்ளே கம்பீரமாக நுழைந்தான் எஸ்பி வர்மன்!
அவனுக்குப் பின்னால் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கிகளை நீட்டியபடி அணிவகுத்தனர்.
கொடி வீரனை கைது செய்தனர். ” இனி இவன் என் கஸ்டடி” என்ற படி மீராவை முறைத்த வாறே கொடிவீரனை  அழைத்து கொண்டு சென்று விட்டான் வர்மன்.
 ஒரு மழையடித்து  ஓய்ந்தது போலிருந்தது மீராவுக்கு!
 கொடிவீரன் விலங்குகளுடன் வெளியே இழுத்துச் செல்லப்பட்ட அந்த காட்சி மீண்டும் மீண்டும் மனதில் படமாய் ஓடியது.
அந்த அறையில், நிசப்தம் மீண்டும் குடியேறியது.
 மீராவுக்குள் இப்பொழுது ஒரு பூகம்பம்…ஒரு பத்து நிமிடம் முன்னர்
“இதே கொடிவீரனின் கண்களில் வீராவை தேடிய நான்”… இவன்தான் என் மீட்பனோ என்று ஏங்கிய நான்…”
“சட்டத்திட்டங்களுக்கு முன் அவன் குற்றவாளி என தெரிந்ததும் கிஞ்சித்தும் யோசியாமல் அவனைச் சட்டத்திடம் கையளித்த தன்னை ஒரு நேர்மையானவள் என மெச்சுவதா?”
 “ஒரு வேளை அவன் தான் வீரா எனில்? …What if he is indeed Veera?…தான் காலாதிகாலமாய் எதிர் நோக்கிய வீரா, எனை அந்தச் சிறுவயதில் காப்பாற்றிய அவனுக்கான என் நன்றி என்னானது???”
 மீராவுக்குக் கண்கள் கலங்கியது. கண்ணீர் அவளது பார்வையை மறைத்தது. இல்லை எனத் தலையை உலுக்கி எழுந்தாள். அவளது இதயம் இன்னும் அந்தப் புதிர் அவிழாததை முழுமையாக ஏற்க மறுத்தது. இந்தத் தவிப்புடன் அவளால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. உண்மையை முழுமையாகத் தன் கண்களால் கண்டு, தன் காதுகளால் கேட்டுத் தீர்க்க வேண்டும்.
 விரைந்தாள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் இருந்த தற்காலிக ரகசியக் காவல் விசாரணை அறைக்கு மீரா மிக வேகமாக ஓடினாள். அங்குதான் கொடிவீரனைப் பலத்த பாதுகாப்புடன் அமர வைத்திருந்தார்கள் .அறைக்கு வெளியே எஸ்பி வர்மன் கைகளைக் கட்டிக்கொண்டு, ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் நின்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் .
 மீரா ஓடி வருவதைக் கண்டதும் அவனது கண்கள் இன்னும் சிவந்தன. அவளுக்கு அங்கே என்ன வேலை?”வர்மன்!” மீரா மூச்சிரைக்க அவனருகே வந்து நின்றாள். அவளது கண்களில் இருந்த தவிப்பும், கண்ணீரும் அவனது கோபத்தை இன்னும் தூண்டியது. “ப்ளீஸ் வர்மன்… எனக்குக் கொடிவீரன்கிட்ட ஒரே ஒரு  பைவ் மினிட்ஸ் மட்டும் தனியா பேசணும். நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கணும்!” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
 வர்மன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான். அவளது இந்தத் தேடல் இன்னும் ஓயவில்லையா? தன் உயிரைப் பணயம் வைத்து, அவனது அத்தனை துரோகங்களையும் நிரூபித்த பிறகும், அவளுக்கு இன்னும் அந்த கொடிவீரனிடம் அப்படி என்ன பேச இருக்கிறது ?
“மீரா!!!” என்று வர்மன் அரங்கமே அதிரும் வண்ணம் ஆவேசமாகக் கத்தினான்.
“உனக்கு அறிவு இருக்கா இல்லையா மீரா? அவன் ஒரு இன்டர்நேஷனல் கார்ப்பரேட் கிரைம் பண்ணின குற்றவாளி! . உன்னைத் தன் சுயநலத்துக்காக ஏமாத்தின ஒரு பிராடு! அவன்கிட்ட இன்னும் உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? “
“உன்னை இன்ப்ளூயன்ஸ் பண்ணி தன் கைல வச்சிகிட்டா தன் வேலைகளுக்கு இன்னும் வசதின்னு நினைக்கிறவன்ட்ட இன்னுமா மயங்கி கிடக்க ?”
” ப்ளீஸ் வர்மன்… . ஜஸ்ட் 5  நிமிஷம் மட்டும் அனுமதி கொடுங்க!” என்று மீரா வர்மனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினாள்.வர்மன் அவளது கண்களில் இருந்த மரண தவிப்பைப் பார்த்தான்.  கோபத்தின் உச்சியில் இருந்தாலும், அவளது நிம்மதிக்காக எதையும் செய்யத் துணியும் அவனது காதல் மீண்டும் வென்றது.
அவன் அவளது கைகளைத் தன் தோள்களிலிருந்து மெதுவாக விலக்கினான். அவளது முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவன் போலத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, பற்களைக் கடித்தபடி சொன்னான்:”கெட் இன்!” என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு, கதவைத் திறந்து அவளை உள்ளே அனுமதித்தான்.
 மீரா உள்ளே நுழைய, கதவு அவளுக்குப் பின்னால் பலமாகச் சாத்தப்பட்டது. உள்ளே, இரும்புக் நாற்காலியில் கைகளில் விலங்குடன் அமர்ந்திருந்த கொடிவீரன், மீராவைக் கண்டதும் தன் உதடுகளில் அந்த ஆபத்தான, சாம்பல் நிறப் புன்னகையை மீண்டும் வரவழைத்தான்.
மீரா தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். “கொடிவீரன், நீங்க மதுரைக்காரர்னு தெரிஞ்சுக்கிட்டேன்… நீங்க மதுரை அழகர் திருவிழாவிற்கு வருஷா வருஷம் போவீங்களா?”
அவன் நாற்காலியில் இருந்தபடியே அவளை நிமிர்ந்து பார்த்தான். “இவள் சம்பந்தமே இல்லாமல் எதையோ கேட்கிறாளே…” என்ற குழப்பம் அவனது பார்வையில் மின்னி மறைந்தது. “ஆமா… சின்ன வயசுல இருந்தே நாங்க போவோம்.”
“ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி… அதாவது 2011-ல… அப்போ உங்களுக்கு ஒரு 13 வயசு இருக்கும், அப்போ?” எனத் தன் அடுத்த கேள்வியைத் தொடுத்தாள் மீரா.
“ஆமா, நான் அப்போ ஏழாவது படிச்ச வருஷம். அப்பா அம்மாவோட போயிருந்தோம்…”
மீரா தன் உயிரையே கண்களில் தேக்கி, மூச்சடக்கி அடுத்த கேள்வியைக் கேட்டாள்: “அங்க எதுவும் முக்கியமா, வித்தியாசமா உங்க நினைவில நிற்குற மாதிரி நடந்துச்சா?”
“அப்படி எதுவும் நடக்கலையே…” என்று யோசித்தவன், சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக, “ஆனா, ஒரு விஷயம்… அந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல். ராமநாதபுரம் மகாராணி தன் பேரனோட அழகரைப் பார்க்க வர்றதா ஊர் முழுக்க ஒரே பேச்சு. ஓஹோன்னு இருந்தது.”
“அப்படியா…”
“ஆமா, நானும் என் தம்பியும் அந்த ராணிப் பாட்டியையும், இளவரசன்னு சொல்ற அவங்க பேரனையும் பார்க்கலாம்னு நினைச்சோம் … பட் பார்க்கல.”
மீரா அவனது முகத்தையே உற்றுப் பார்த்தபடி, “நீங்க யாரெல்லாம் போனீங்க?” என்றாள்.
“நான், என் தம்பி, அம்மா, அப்பா…”
“அப்போ… பாட்டி, தாத்தா???” என மீரா இடைமறித்துக் கேட்டாள்.
“இல்லையே… நான் பிறக்கிறப்போவே அவங்க யாரும் எனக்கு இல்லைங்க,” என்றான் கொடிவீரன் சாதாரணமாக.
அந்த நொடி, அவளது நெஞ்சில் பாரமாய் இருந்த ஒரு பெரிய கல் நகர்ந்தது போலிருந்தது!
இவன் ‘வீரன்’ இல்லை… தான் தேடிக் கொண்டிருக்கும் அந்த வீரன் இவன் கிடையாது என்பது அவளுக்குத் தீர்க்கமாகப் புரிந்தது. அவளது மனம் அப்படியே லேசானது.
கொடிவீரனின் பதிலைக் கேட்ட அடுத்த நொடி, மீராவுக்குள் இருந்த அந்தத் தவிப்பும், ‘வீரன்’ இவனாக இருப்பானோ என்ற ஏங்கிய பெண்மையும் முழுமையாக மறைந்து போயின. இப்போது அவள் வெறும் மீரா அல்ல; தேனி மாவட்டத்தின் இரும்பு நிர்வாகி, மாவட்ட ஆட்சியர்  மீரா ஐ.ஏ.எஸ்.
அவளது நிமிர்ந்த தோள்களும், கூர்மையான பார்வையும், சட்டத்தின் அதிகாரத்தை பறைசாற்றிய அவளது உடல் மொழியும் கொடிவீரனை அப்படியே முடக்கியது. இதுவரை மாஸ் ஹீரோவாக, மிதப்போடு குறும்புச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த கொடிவீரன், இனி அவளை ஏறிட்டும் பார்க்கத் துணிவின்றி தன் தலையைக் குனிந்தான்.
“நீங்க.. குற்றத்தை ஒப்புகிட்டு, நிஜமாவே உங்களுக்கு இருக்கிற அறிவிற்கும் மக்கள் செல்வாக்கிற்கும் இனிமேலாவது நல்லவை மட்டுமே யோசிங்க மிஸ்டர் எம்.எல்.ஏ!”
என வார்த்தைகளில் அலாதி கம்பீரத்தோடு சொல்லிவிட்டு, சட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள் மாவட்ட ஆட்சியர் மீரா.
அங்கே, ஆத்திரமும் வேதனையும் கலந்து துவண்டு நின்றிருந்தான் எஸ்பி வர்மன். வெளியே வந்த மீரா, அவனை நேராகப் பார்த்து, இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்து, தன் கையை உயர்த்தி ஒரு ‘தம்ப்ஸ் அப்’ காட்டினாள்.
அவ்வளவுதான்! அதுவரை வர்மனின் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த பாரம் மொத்தமாய் இறங்கியது. அவள் இன்னும் அந்தப் போலி மனிதனின் பிடியில் சிக்கிவிடவில்லை என்ற நிம்மதி அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் அவளிடம் அத்தனை கோபம் வந்தது.. கிறுக்கி கிறுக்கி என உள்ளே திட்டியபடி அவளை முறைத்தான்.
ஆனால், மீரா? அவளது சொந்த இதயம் இப்போது என்ன உணர்கிறது என்பது அவளுக்கே புரியவில்லை.
அவளுக்குள் ஒரு விசித்திரமான அமைதியும், அதே சமயம் ஒரு புரியாத குழப்பமும் குடியேறியிருந்தது.
கொடிவீரன் தான் தேடிய ‘வீரன்’ இல்லை என்பது தெரிந்ததில் அவளுக்கு ஒரு பக்கம் அலாதியான நிம்மதி இருந்தது உண்மைதான். ஆனால், அந்த நிம்மதியின் உண்மையான பின்னணி என்ன?
அவள் தன் மனதிற்குள்ளேயே அந்த கேள்வியைக் கேட்டுக்கொண்டாள்:
“மீரா… கொடிவீரன் ‘வீரன்’ இல்லை என்பதால் நீ சந்தோஷப்படுகிறாயா?” அல்லது…
“உன்னுடைய ‘வீரன்’ இன்னும் குற்றவாளியாக உனக்கு முன்னால் வந்து நிற்கவில்லை, அவன் எங்கோ ஒரு நல்லவனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதால் சந்தோஷப்படுகிறாயா?”
இல்லை
“இது இரண்டையும் விட இன்னும் வர்மனிடம் இருந்து பிரியும் நேரம் வரவில்லை … என குதூகலிக்கிறாய் நீ”
என அவள் மனசாட்சி அவளை குத்திக்காட்ட.. அவள் தன் மனதுக்கே பெப்பே காட்டி வர்மனுக்கு மலர்வுடன் கைகாட்டி சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!