Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 13

அலுவலகம் வந்து அமர்ந்த வீராந்தகனுக்கு அடுத்து என்ன செய்வதென்று ஒரே யோசனை. தமிழ்ச்செல்வனைத் தன் சகோதரி பக்கம் வரவிடக் கூடாது. அதற்காக, அவன் படத்தின் தயாரிப்பாளரிடம் தன் ஆட்கள் மூலம் பேசிப் பார்த்தான்.

ஆனால், “அவர் தமிழ்ச்செல்வனை விட்டுக் கொடுக்க மாட்டேங்குறார் சார்” என்கிற பதிலே வந்தது. எரிச்சல் மூண்டது வீராவுக்கு.

அடுத்த முயற்சியாக, அவன் கடன் வாங்கியிருந்த ஆட்கள் மூலம் நெருக்கடி கொடுக்கப் பார்த்தான். அங்கேயோ, கடனையெல்லாம் அவன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

இனி அடுத்த முயற்சியில் இறங்கியே ஆக வேண்டும்! அதற்கு முதல் படியாக, படத்தின் விநியோகஸ்தர்கள் சார்ந்த தகவல்களைச் சேகரிக்கக் கூறியிருந்தான்.



Advertisement

“ரொம்ப யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதே வீரா…” மகன் தோளில் சிறிய தந்தை முரளி கை வைத்தார். வீரா எழுந்து நிற்க, பின்னாலேயே அவன் தந்தை சேந்தனும் வந்தார்.

“யோசிக்காமல் இருக்க முடியலை சித்தப்பா, மண்டைக்குள் குடைச்சல் கொடுத்துட்டே இருக்கான்!” என்றான் எரிச்சலாக.

சேந்தன், “என்னைக் கேட்டால், இதை நாம கொஞ்சம் ஆறப் போடணும் தம்பி” என்றார் சூழலை உணராமல்.

Advertisement

“ஆறப் போடுற நிலைமையில இல்லைப்பா, இன்னைக்கு அவன் நம்ம வீட்டுக்கே வந்துட்டான்!” என்றான் வீரா.

Advertisement

வீரா கூறியதைக் கேட்ட பெரியவர்களுக்கு அதீத அதிர்ச்சி. “வீட்டுக்கா?!” என்று பதறினர்.

“ரெண்டு நாள் முன்னாடியே சென்னைல வச்சுச் சொன்னான் தம்பி, சும்மா சொல்றான்னு நினைச்சேன்.” அன்று தமிழைச் சந்தித்த நிகழ்வை நினைவுகூர்ந்து சேந்தன் கூறினார்.

“வீட்டுக்கு வந்து லெட்டர் கொடுத்துட்டுப் போயிருக்கான். செக்யூரிட்டி என்கிட்டே கொடுத்துட்டுப் போனான். வேற வழி இல்லாமல் அதைப் படிச்சதுக்குத் தண்டனையா, எனக்கு அவனைக் கொன்னு போடுற அளவு கோபம் வந்ததுதான் மிச்சம்!”

Advertisement

அதாவது, அந்த கடிதத்தில் எழுதியிருந்தது:

“வணக்கம் மச்சான்,

எனக்குத் தெரியும் மச்சான், இது உன் கைலதான் வந்து நிக்கும்னு… அதான் மச்சான் உனக்கே லெட்டர் எழுதிட்டேன்.

நல்லா இருக்கியா மச்சான்? என் தங்கச்சி, அத்தைகள், மாமாக்கள், தாத்தா பாட்டி எல்லாரையும் கேட்டதா சொல்லு மச்சான்.

ஆனா, உன்னை எப்பவும் பேர் சொல்லியே கூப்பிட்டுட்டு, இப்போ இப்படி முறை சொல்லி ‘மச்சான்’னு கூப்பிடுறதும் நல்லாத்தான் இருக்கு. கூடிய சீக்கிரம் நேர்ல உன்னைக் கட்டிப்பிடிச்சு உறவு வச்சுக் கூப்பிடுற நாளும் வரும். வர்றேன்டா மச்சான்!

பி.கு: உங்க வீட்டுப் பச்சைக்கிளிக்கு ஏற்கனவே புறா மூலியமா தூது அனுப்பிட்டேன்.”

என்று கடிதத்தை முடித்திருந்தான்.

வீரா, “அத்தனை ‘மச்சான்’ போட்டு எழுதியிருக்கான், கேட்கவே எரிச்சலா வருது! வீடு வரைக்கும் வந்து லெட்டர் கொடுக்குற அளவு அவனுக்குத் தைரியம் வந்திருக்கு” என்று கையை மடித்துக் கோபத்தை அடக்கப் பெரும் பாடு பட்டான்.

முரளி நொந்து போனார். “வேண்டாம்ணே, விட்றலாம்…” என்ற சிறிய தந்தையை வீரா புரியாமல் பார்த்தான்.

“குடும்பத்துக்கு இவ்வளவு அசிங்கத்தைக் கொடுத்து, நம்ம பேச்சைக் கேட்காமல் பிடிவாதமா இருக்கிற பொண்ணு நமக்கு வேண்டாம். அவ இஷ்டப்படியே இருக்கட்டும். அவளுக்கும் நமக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லைன்னு உதறி விட்றலாம்” என்றார் வேதனை பொங்க.

“உதறிவிட்டா எல்லாம் சரியாயிடுமா?” வேலு அவர்கள் உரையாடலில் நுழைந்தார், மகனின் வார்த்தைகள் தனக்குத் திருப்தியைத் தரவில்லை என்கிற பார்வையோடு.

முரளி மௌனமானார். “சொல்லுப்பா…” தந்தை வலியுறுத்த, “எனக்கு என் பொண்ணை அப்படியே விடணும்னு ஆசையாப்பா? வேற வழி இல்லையே!” என்றார்.

வேலு, “வழியை நாமதான் உருவாக்கணும் முரளி. நம்ம பொண்ணு திருவிழாவுல ஆசைப்பட்டுக் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோம், அது விளையாட்டு. இப்பவும் அப்படியே பண்ணிட முடியுமா? இது வாழ்க்கை!” என்றார் தீர்க்கமாக.

சேந்தன், “அவளோட விருப்பம் இல்லாமல் ஒரு விஷயத்துல நாம இப்படி கட்டாயப்படுத்த முடியுமாப்பா? அப்படியே போனாலும் அதுல அவ சந்தோஷமா இருந்துடுவாளா?” சகோதரர்கள் இருவருக்குமே இப்போது அதே பெரிய யோசனைதான் மனதை ஆட்கொண்டிருந்தது.

இருவரையும் பார்த்த வீரா, “நீங்க ரெண்டு பேரும் அப்போ முடிவே…” என இழுக்க, பேரனைத் தடுத்தார் வேலு.

“சரி, நீங்க சொல்ற மாதிரியே விட்றலாம். அவனோட குடும்பம் பற்றி நமக்கு நல்லாவே தெரியும். அதே நிலைமை அவனால நாளைக்கு நம்ம பொண்ணுக்கும் வந்தா என்ன செய்வீங்க?”

சகோதரர்கள் இருவரும் பேச முடியாமல் திணறினர்.

“அவசரத்துல இன்னைக்கு முடிவெடுத்துருவீங்க, நாளைக்கு கத்திமுனையில நிறுத்தும் விதி. அந்த நேரம் நாம என்ன செய்வோம்?” என்றவர் மேலும், “என் பேத்தி காலமெல்லாம் வீட்டோடவே இருந்தாலும் பரவாயில்லை, அவன் வேண்டாம்!” என்றார் உறுதியாக.

அதற்கு மேல் பேச்சில்லை என்பது போல் பேரன் பக்கம் திரும்பியவர், “டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நம்ம செந்திலுக்குத் தெரிஞ்சவர்தான். பேசு. அவன் படம் மட்டும் இல்லை, அவன் படத்தோட போஸ்டர் கூட வெளிய வரக்கூடாது” என்றார்.

வீராந்தகன் தன் தந்தை மற்றும் சிறிய தந்தையைப் பார்த்துவிட்டு, பிறகு தாத்தாவிடம் தலையசைத்தான்.

சரியாக அவர்களின் திட்டப்படியே எல்லாமே நடந்தது. தயாரிப்பாளரின் முயற்சி, பிடிவாதம் எல்லாவற்றையும் தாண்டியும், விநியோகஸ்தர்கள் எல்லாம் ஏதாவது ஒரு காரணம் கூறி நழுவி வந்தனர்.

“இந்த படம் வேண்டாம் சார், வேற படம் கதை சும்மா ஃபார்மாலிட்டிக்குச் சொல்லுங்க, இப்பவே அட்வான்ஸ் போடுறேன்” இவ்வாறு பல விதமான பதில்கள் வந்து விழுந்தன.

எவ்வளவுதான் அவரும் பொறுப்பார்? வேலை சார்ந்த விஷயங்களில் எளிதாகக் கேட்பவரால், தமிழின் சொந்த விஷயங்களில் எளிதாக நுழைய முடியவில்லை. அதுவே ஒரு கட்டத்தில் அவரது சினத்தை அதிகரித்தது.

தமிழை அலுவலகத்திற்கு அழைத்தவர், “அந்தப் பொண்ணைத்தான் விடேன்டா” என்றார் பொறுமையாக.

இவனோ அவரை அதிசயமாகப் பார்த்தான். “எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டான்.

சரத்சந்திரனுக்கு இதை அவனிடம் பேசியிருக்கக் கூடாதோ எனத் தோன்றினாலும், அவருடைய சூழலும் இக்கட்டானதுதான். பணம் போட்டுப் படம் எடுத்தார், அதில் பாதிக்கு மேல் கடன்தான். வேறொரு படம் இன்னும் சற்று அதிக பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் வெளியானால்தான் அடுத்த படம் நிற்காமல் ஓடும்; மிகவும் நெருக்கடியான நிலை! இவனை, இவன் படத்தை நம்பி அந்த மனிதன் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்.

“உனக்குத் தெரியாத மாதிரி பேசாதே தமிழ்.”

“இல்லை, எனக்குத் தெரியும். ஆனால், நீங்க கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம்னு புரியலை” என்றான் தமிழ் புரியாமல்.

“அந்தப் பொண்ணு வீட்டு சைடுல இருந்துதான் இவ்வளவு பிரஷர். பெரிய பெரிய ஆளுங்க மூலியமா எல்லாம் படத்தை பிளாக் பண்றாங்க” என்றார்.

“அதுக்கு?”

இவன் அலட்சியமாகக் கேட்ட கேள்வியில் அவருக்குச் சினம் மூண்டது. “அதுக்கா?! உன்னோட எதிர்காலம் என்னாகுறது?”

“எனக்குன்னு ஒரு எதிர்காலமே இப்போதான் சார் வந்துருக்கு. அதை விடச் சொல்றீங்களே…” எளிதாக அவன் கேட்டுவிட்டான். ஆனால், அவன் கண்களில் தெரிந்த அந்த வேதனையை அவரால் நிராகரிக்க இயலவில்லை; அதே நேரம் அவருக்கும் அது இயலாமைதான்.

“என்னவோ பண்ணு! இதோ உன் கூடச் சுத்துறாங்களே, இவனுங்களுக்குப் பணம் கொடுக்க நான் ஒன்னும் மெஷின் இல்லை. நீயே கொடு! அப்போ தெரியும் உன்னால இங்க எத்தனை பேரோட வாழ்க்கை அந்தரத்துல நிக்குது, எத்தனை பேர் தெருவுல நிக்கப் போறாங்கன்னு…” சினத்தையெல்லாம் கக்கியவர் அங்கிருந்து அகல, அவனோடு வந்து நின்ற அவனது உதவி இயக்குநர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

இருக்கையிலிருந்து எழுந்தவன், கவலையோடு தன்னையே பார்த்து நின்றவர்களிடம், “டேய் போங்கடா… போங்கடா, போய் வேலையைப் பாருங்க” என எளிதாகக் கடந்து சென்றான். அந்தச் சூழலிலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகக் கடந்தவனை அனைவரும் விசித்திரமாகப் பார்த்தனர்.

*******

சக்திக்கு இந்த விழாவிற்குச் செல்வதில் விருப்பமே இல்லை; இருந்தும் போக வேண்டிய கட்டாயம்—நெருங்கிய சொந்தத்தின் திருமணம். இவளை அழைத்துச் செல்ல முதலில் தயங்கிய குடும்பத்தினர், பிறகு இதுவே வெளியில் பேசுபொருளாகிவிடுமோ என யோசித்து அழைத்து வந்திருந்தனர்.

எளிமையான பட்டுப்புடவை உடுத்தி வந்தவளை எப்பொழுதும் பார்த்துப் பூரிக்கும் குடும்பத்தினரின் முகம் இன்று காணாமல் போயிருந்தது. ஏன், அவளிடம் எவரும் பேசக்கூட இல்லை!

“அண்ணி, இப்படி யாரும் பேச மாட்டாங்கன்னா ஏன் என்னை இங்க கூட்டிக்கிட்டு வராங்க?” சக்தி ஆதங்கமாய் அன்பரசியிடம் கேட்டாள்.

அன்பிற்கு அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. “சரி, என் கூடவே இருங்க” என்று அண்ணியின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

வரவேற்பறையில் இவளது செயலைப் பார்த்த ஒரு பெண்மணி, “எந்நேரமும் உன் அண்ணியையே நீ பிடிச்சுட்டுச் சுத்துனா, உன் அண்ணனுக்கு எப்படிப் புள்ள பொறக்கும்?” எனக் கிண்டலாய்ப் பேசி, அன்பரசியிடம் மனதிற்குள்ளேயே அர்ச்சனை வாங்கிவிட்டுச் சென்றார்.

அங்கு நிர்மலாவின் வீட்டினரும் வந்திருக்க, மிகவும் சங்கடமான நிலை நிலவியது. உறவை இப்படியே விட்டுவிட முடியாதே! அதனால் பெண்கள் மூவரும் நிர்மலா மற்றும் அவரது மாமியாரை நோக்கிச் சென்றுவிட, ஆண்கள் நிர்மலா வீட்டின் ஆண்கள் பக்கம் சென்றனர். அங்கு தனித்துவிடப்பட்டது என்னவோ சக்தி மட்டும்தான்.

எவரும் தன்னைத் தப்பித்தவறிக்கூடக் கவனிக்கவில்லை என்கிற எண்ணம், பெண்ணுக்குள் கண்ணீரை முட்டிக்கொண்டு வரச் செய்தது. இந்த உதாசீனம் அவளை வன்மையாகப் பாதித்தது.

எவ்வளவு நேரம் சென்றதென்று தெரியவில்லை, சஞ்சீவ்தான் அவளிடம் வந்தான். “வா, கொஞ்சம் காத்து வாங்கலாம்” என அவளைத் தனியே அழைத்துச் சென்றான்.

“எப்படி நீங்க மட்டும் இவ்வளவு நார்மலா இருக்கீங்க அத்தான்?”

“என்கிட்ட அப்புறம் பேசலாம், முதல்ல அங்க பேசு” எனச் சஞ்சீவ் கை காட்டிய திசையைப் பார்க்க, அங்கு தமிழ்ச்செல்வன் நின்றிருந்தான்!

சக்திக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. “அத்தான்…”

“அப்புறம் ஷாக் ஆகு, வேகமாப் பேசு. அவன் உனக்காக ரெண்டு நாளா சேலத்துல இருக்கான்” என்று கூறி, இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றான் சஞ்சீவ்.

தமிழ், ஒளி மங்கிய ஒரு பகுதியின் நிழலில் நிற்க, அவளோ அவனை நோக்கி வந்தாள். இவளது பார்வை அவனை முழுதாய் ஆராய்ந்தது; மிகவும் வாடிப் போயிருந்தது அவன் தோற்றம். இருந்தும், தன்னவளைப் பார்த்ததும் ஒரு மாயம் போல அவனுடைய களைப்பும் வேதனையும் மறைந்திருந்தது கண்கூடாய்த் தெரிந்தது.

“எப்படி இருக்க செல்வா?”

“மாஸா இருக்கேன்!” என்றவன் கண்கள், அவள் கண்களைச் சந்திக்காமல் தடுமாறின.

“ஆனா, எனக்கு நீ ரொம்ப டல்லா இருக்கிற மாதிரி தெரியுது செல்வா… கண்ணெல்லாம் சிவந்திருக்கு” அவன் கண்களை நேராகப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

தமிழ்ச்செல்வனோ சிரித்துக்கொண்டே, “என்னைப் பற்றித்தான் உனக்கே தெரியுமில்ல… படம் ரிலீஸ் ஆகுற ஸ்டேஜ் வேலை ராத்திரி பகலா ஓடுது, சரியா தூக்கம் இல்லை. அதை விடு, நீ இந்தச் சாரியில டக்கரா இருக்க!” அவளை ரசித்தபடியே கூறினான்.

“தேங்க்ஸ் செல்வா…” அழகிய வெட்கப்புன்னகையை மறைத்தபடியே, “என்ன இந்தப்பக்கம்?” என்ற கேள்வியையும் வைத்தாள்.

“படத்துக்கு லொகேஷன் பார்க்க வந்தேன், அப்படியே உன்னையும் பார்க்கலாம்னுதான்… சஞ்சீவ்தான் ஹெல்ப் பண்ணான்” தூரத்தில் நின்று தங்களுக்காகக் காவல் காத்துக்கொண்டிருந்த சஞ்சீவியைப் பார்த்தபடியே கூறினான்.

ஆனால் உண்மையில் தமிழ் வந்த காரணமே வேறு. சரத்சந்திரன் கோபத்தில் பணத்தை அவனையே ஏற்பாடு செய்யக் கூற, தன் தயாரிப்பாளர் தன்னால் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகத் தானே பணத்தை ஏற்பாடு செய்யத்தான் அவன் இங்கு வந்திருந்தான். கேட்க வேண்டிய இடங்களிலெல்லாம் கேட்டுப் பார்த்தாயிற்று; எவரும் பணம் தர முன்வரவில்லை. இதிலும் தாத்தா வேலுவின் கைவண்ணம் விளையாடியிருந்தது. சக்தியைப் பார்த்தால் மனதிற்குச் சற்று ஆறுதல் கிடைக்கும் என்றுதான் இங்கு வந்திருந்தான்.

“இப்படியா லொகேஷன் பார்க்க வருவாங்க? யாரும் நீ டைரக்டர்னு சொன்னாக்கூட நம்ப மாட்டாங்க” அவனருகே வந்து, அவன் சட்டையின் காலரைச் சரி செய்து கீழே பார்க்க, சட்டையின் ஒரு பட்டன் தளர்ந்து போயிருந்ததைச் சக்தி கவனித்தாள்.

“டைரக்ஷன் சார், ஹீரோ ஹீரோயினுக்கு டிசைனர் வைக்கிறீங்களோ இல்லையோ, உங்களுக்குக் கண்டிப்பா ஒரு ஆள் தேவை. பாருடா, இந்த பட்டன் கழண்டு விழப்போகுது!”

அதனைச் சரி செய்ய முடியாதென உணர்ந்தவள், தன்னுடைய புடவை முந்தானையின் இறுதியில் குத்தியிருந்த பின்னை எடுக்க முயல, அவளையே விழி அகலாது பார்த்துக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், “இருக்கட்டும்… இதுவும் ஒரு தனி ஸ்டைல்தான்” என மறுத்தான்.

“பெரிய மண்ணாங்கட்டி ஸ்டைல்! சும்மா நில்லுடா” என்று சக்தி ஒரு அடி முன்வந்து அவனது சட்டையைப் பின் செய்ய, அவளது உடலின் வாசனை அவன் நாசியில் ஏறிப் புதுப் போதை ஏற்றியது ஒரு பக்கமென்றால், மறுபக்கம் அவளது பாசம் அவனைக் கண்ணைக் கலங்கடிக்கச் செய்தது. வேகமாகத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

தன்னுடைய வேலையைச் சக்தி கவனித்துக்கொண்டே அவன் சட்டையை ஆராய, அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படிந்திருந்த கறைகள், ஏதோ ஒரு பாரத்தை அவளிடம் சொல்லத் துடிப்பது போல் இருந்தது.

சிரித்த முகமாய் தன்னைத் தேற்றியவனிடம், “சிரிச்சாதான் நீ அழகன்டா… ஆனா, ஏன் இந்தச் சிரிப்புக்கு பின்னாடி ஏதோ மறைக்கிற மாதிரி எனக்குத் தோணுது செல்வா? படம் நல்லா வந்துருக்குதானே? ஏன் எதுக்கோ பயப்படுற மாதிரி இருக்க?” எனக் கேட்டாள்.

அவள் கண்களில் தெரிந்த கலக்கம், தன் கண்களையும் மேலும் கலங்கடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் தழுதழுத்த குரலைச் செறுமிக்கொண்டான் தமிழ்.

“பயமா, எனக்கா? நெவர்! வாய்ப்பே இல்லை. படம் மிரட்டலா வந்துருக்கு. பாரு, படத்தைப் பார்த்துட்டு உன் வீட்டு ஆளுங்களே என்னைத் தேடி வந்து, ‘தம்பி, இந்தப் பொண்ணை நீங்களே வச்சுக்கோங்க’னு சொல்லுவாங்க. அய்யா அவ்வளவு பெரிய செலிபிரிட்டி ஆகியிருப்பேன்!” என அத்தனை நம்பிக்கையைத் தன் குரலில் வரவழைத்துக் கூறினான் தமிழ்.

சக்தி சிரித்துக்கொண்டே, “நீ பெரிய செலிபிரிட்டி ஆனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. நிச்சயம் ஆவ. எனக்குத் தெரியும் நீ திறமைக்காரன்டா. நீ எப்படி இருந்தாலும் சக்தி உன் கூடவேதான் இருப்பா!” என்றாள். அவள் கண்களில் தெரிந்த அந்த உறுதி, தமிழ்ச்செல்வனின் இதயத்தை அழுத்திப் பிசைந்தது.

அவள் அவனை எப்படியும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கலாம்; ஆனால் அவளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டுமென அவன் கண்ட கனவுகளெல்லாம், இனி நிறைவேற்ற முடியாதோ என்கிற பயம் மட்டுமே கடந்த சில நாட்களாகத் தமிழை வாட்டி வதைத்தது.

தன்னிடமிருந்த அந்தச் சாக்லேட் ஒன்றை அவனிடம் நீட்டினாள். “ஃபங்க்ஷன்ல கொடுத்தாங்க, சாப்பிடு” என்றாள்.

“இருக்கட்டும், நீ சாப்பிடு சக்தி” என வாங்காமல் மறுத்தான் தமிழ்.

அவள் மனமோ ஏனோ அதை அவனிடம் கொடுக்க வேண்டுமென்று துடித்தது. “நீ எனக்கு அப்புறம் வாங்கிக்கொடு செல்வா, இப்போ இது உனக்கு!” என அவன் முன் நீட்டி, மீண்டும் அவன் முகம் பார்த்தாள்.

தமிழ் அந்த இனிப்பை வாங்கும்போது அவனது கைகள் மெல்ல நடுங்கின. பசியாலும் மன அழுத்தத்தாலும் வந்த நடுக்கம் அது; அவள் அதைக் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக வேகமாக அதை வாங்கிக்கொண்டான்.

“கண்டிப்பா உனக்காக எதுவும் செய்வேன் சக்தி” என்று சிரிப்போடு கூறியவன், “சரி கிளம்பு, வீட்டுல தேடப் போறாங்க” என்றான். பின், சஞ்சீவை அழைத்துத் தன் நன்றியைக் கூற, அவனுக்கோ தமிழைப் பார்க்கவே வேதனையாக இருந்தது.

ஓரளவு சஞ்சீவும் தன்னுடைய வீட்டினரின் செயலையும், அதனால் தமிழ் படும் துன்பங்களையும் அறிந்தே வைத்திருந்தான்.

“பைக்லதானே வந்திருப்ப செல்வா?” சக்தி கேட்க, சட்டென விழித்த தமிழ், உடனே ஆமோதிப்பாய்த் தலையசைத்தான். “பார்த்துப் போயிட்டு வா” என்றவள், சஞ்சீவிடம் ஆனந்தமாய், “போலாம் அத்தான்!” என்றாள். தமிழைப் பார்த்த மகிழ்ச்சி அவள் கண்ணில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

ஆனால், சஞ்சீவுக்குத் தெரியுமே அவன் பைக் இல்லாமல் ஆட்டோவில்தான் வந்திருக்கிறான் என்று!

“நீ போம்மா, நான் வர்றேன்” என அவளை அனுப்பி வைத்தவன், தமிழிடம் திரும்பினான். “அவகிட்ட எதுவும் சொல்லாமல் நீயே எல்லாத்தையும் அனுபவிக்கப் போறியா?” சஞ்சீவ் சற்று கோபமாகக் கேட்டான்.

“அவளும் சோகமாதானேடா இருக்கா? வீட்டுல யாரும் சரியாப் பேசுறது இல்லையோ?” எனத் தமிழ் கேட்க, சஞ்சீவ் ஆமாம் எனத் தலையசைத்தான்.

அவள் சென்ற திசையைப்பார்த்து, “நான் நல்லா இருக்கேன்னு அவளுக்கு ஒரு நம்பிக்கையும், அவ நல்லா இருக்காங்கிற நம்பிக்கை எனக்குள்ளும்… இதைத்தான் இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்துக்க நினைக்கிறோம் போல” என்றான் தமிழ், சஞ்சீவின் முகம் பார்த்தபடியே.

“இப்போ அவ சிரிச்ச முகத்தோட போயிருக்கா, அது போதும் சஞ்சீவ்! இன்னும் எத்தனை பிரச்சனை வந்தாலும் நான் தாங்குவேன்.”

‘என்ன மனிதன் இவன்!’ எனச் சஞ்சீவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “செல்வாவுக்காவது (வண்டிக்காவது) பணம் வச்சிருக்கியா?”

தமிழ் தன்னுடைய சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்தான்; கைகளில் சில சில்லறைகளும் ஒரே ஒரு தாளும் தட்டுப்பட்டன. நூறு சொச்சம் நிச்சயம் இருக்குமெனத் தெரிந்தது; அதோடு கையில் அவள் கொடுத்த அந்த இனிப்பு!

சிரித்துக்கொண்டே சஞ்சீவின் தோளில் தட்டியவன், தான் வந்த வழியிலேயே நடந்து மறைந்தான். பாவம், அவனுக்குத் தெரியவில்லை; இனித்தான் சென்னை நகரம் தன்னுடைய கோரமான முகத்தைச் ‘சினிமா யுத்தம்’ மூலம் அவனுக்குக் காட்டப்போகிறது என்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!