Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா?.. அத்தியாயம் 22.

உடைந்த மனங்கள் ஒட்டாதா?…

அத்தியாயம் 22

  மீனா, தற்போது முழு அமைதியாகிவிட்டாள். ஜெகனின் வரைவை அவள் எந்த விதத்திலும் தடுக்கவில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து நிற்பதை கூட பிடிக்கவில்லை என்று முகத்தில் கூட காட்ட வில்லை. தான் எல்லோர் பார்வையிலும் வீம்புகாரியாக, பொல்லாதவளாக போனோம் என்றே நினைத்தாள். 

மீனாவின் சிறு வயதில் தந்தையோடு வயலுக்கு செல்லும் போதெல்லாம் பார்ப்பாள், “அவள் தந்தை நீர் வரும் மடையை மாற்றி விடுவதை.. அவர் எந்தப் பக்கம் மடை மாற்றி விடுகிறாரோ அந்தப் பக்கம் எல்லாம் நீரின் பாதை ஓடும் . அது போல தன் வாழ்க்கையும் மாறிப்போனது. எந்தப் பக்கம் எல்லாம் விதி அவளை இழுத்துச் செல்கிறதோ, சலிக்காமல் மீனாவும் அந்தப் பக்கம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறாள்.



Advertisement

இதுவரை ஜெகன் பிள்ளைகளோடு மாடியில் உறங்கி கொள்ள, தாயும், மகளும் மட்டும் கீழே உறங்குவார்கள். பரமு ஊருக்கு சென்று விட்டதால், மீனா தனியாக இருக்க.. பிள்ளைகளோடு ஜெகன் வந்து விட்டான். மீனா எதையும் கண்டு கொள்ளாதவளாக வேலையை பார்க்க, அவள் மெளனத்தையே சம்மதமாக எடுத்து கொண்டவன், அங்கேயே இருந்து கொண்டான். முன்பே முடிவெடுத்தது போல விதியின் போக்குக்கு அமைதியாகி விட்டாள்.

மீனாவுக்கு ஆச்சரியம் எப்படித்தான் பிள்ளைகளுக்கு தன் பெற்றவர்களை அறிவார்களோ!.. மீனா எவ்வளவு தான் ஜெகனை விட்டு பிள்ளைகளை விலக்கி வைத்திருந்தாலும், ஒரு இடைவெளியில் தந்தையோடு ஐக்கியமாகி விட்டார்கள். அடுத்த நாளுக்கு தேவையானவற்றை மீனா எடுத்து வைக்க, பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். அவர்களை பார்த்தே மீனா தன் மனதை அமைதி படுத்த முயன்றாள். 

மீனா, வருவதற்கு முன்பாகவே ஜெகன் படுக்கை அறையில் குழந்தைகளோடு ஐக்கியமாகி விட்டான். அவனுக்கு மனதில் ஒரு பயம். பரமுவும் ஊருக்கு சென்றபின் எளிதாக மீனா, ஜெகனை விரட்டி விடுவாள் என்று… ஆனால், மீனாவின் முடிவை அவன் அறிய வில்லை. 

Advertisement

புருசன் இல்லாமல் தனித்து வாழ்வது கூட ஒரு நிமிர்வை காட்டும். ஆனால், புருசன் உடன் இருந்தும் அவனோடு வாழ மாட்டேன் என்று வைராக்கியமாக நிற்பது அவள் மனதிற்கு நியாயமாக படலாம். ஆனால், மற்றவர்கள் பார்வையில்?…

Advertisement

இப்போது ஜெகன் நல்லவன், நல்ல தொழில், சம்பாத்தியம், நேர்த்தி என்று ஒழுங்காக வாழ்பவன். அப்படிப்பட்ட ஒருவனை ஒதுக்கி வைப்பவள் எப்படிப்பட்டவள்?… மூன்று பிள்ளைகளுக்கு பின் கணவனோடு வாழாமல், வேற யார் கூட வாழ்வாள். அப்படி தானோ.. அதனால் தான் திருந்தி வந்தவனை விரட்டி அடிக்கிறாளா?… நரம்பில்லாத மனித நாக்கு எப்படியும் சுழலும். ஒரு நிலையான இடத்தில் நிற்க, மீனா பட்ட பாடு அவளுக்கு மட்டும் தான் தெரியும். திரும்பியும் ஊர் ஊராக அலைய முடியாது.

காலம் கடந்த பின் எந்த மன வலியும் அர்த்த மற்றது. தன் பிள்ளைகள் முகம் பார்க்கும் போது தன் வலியும் நியாயமற்றது தான். அப்படி தான் மீனா யோசித்தாள். அதை தாண்டி தாய் சொல்வது போல, கணவன் வேற ஒரு பெண்ணை தன் இடத்தில் கொண்டு வந்து விடுவான் என்ற ஐயமெல்லாம் கிடையாது. அந்த ஒன்றில் ஜெகன் மிக நல்ல கணவன். தான் எப்படி இருந்தாலும், தலைகீழாக உருண்டாலும் மீனாவை தாண்டி ஒரு நொடி கூட யோசிக்க மாட்டான். அதை எண்ணி பூரித்ததெல்லாம் ஒரு காலம்.

ஒரு பெரு மூச்சு விட்டு தன்னை திடப்படுத்தி கொண்டு மீனா உள்ளே வர, ஜெகன் ஒரு மூலையில் முடங்கி இருந்தான் பாவமாக.. இதை பார்த்து மனம் உருகியதெல்லாம் அன்று.. இன்று அவன் இருப்பை கண்டு கொள்ளவே இல்லை. ஓரளவு நல்ல கூடம் என்பதால், ஐந்து பேர் தாராளமாக படுத்து உறங்கலாம். ஜெகனும், மீனாவும் ஆளுக்கொரு மூலையில் முடங்கி கொள்ள, மலர் குட்டி தாயிடம் அண்டி கொண்டாள். புகழ் தந்தையை விட்டு நகரவில்லை. தமிழ் நடுவில் படுத்திருக்க, மூத்த மகளை பார்த்து ஜெகன் மனம் கனிந்தது. மற்ற பிள்ளைகள் போல தாய், தந்தையை நாடவில்லை. அவர்களின் இருப்பை மட்டுமே விரும்புகிறாள். பெற்றவர்களை ஒட்டி உரசிக்கொண்டு கை, கால்களை தூக்கிப்போட்டு உறங்கவெல்லாம் அவள் விரும்பவில்லை. தன் கையை நீட்டி மகளின் தலையை வருடி விட்டான். மனதில் அவ்வளவு திருப்தி. இதற்காக தான் அவ்வளவு ஏங்கினான்.

Advertisement

முதலில் ஐந்து பேர் உறங்கும் அளவுக்கு மெத்தை எடுக்க வேண்டும். அவனுக்கே மெத்தை இல்லாமல் தரையில் படுப்பது உடம்பு வலிக்க, தன் பிள்ளைகளை நினைத்து மனம் குற்ற உணர்வில் தவித்தது. எப்படியெல்லாம் அவர்களை நன்றாக வாழ வைத்திருக்க வேண்டும். தன் ஒருவரின் சரியில்லாத நடத்தை, தன்னோடு சேர்த்து தன் குடும்பத்தையும் புதை குழிக்குள் தள்ளி விட்டதே.. மனம் குத்த, திரும்பி மனைவியை பார்த்தான் மகளை அணைத்து பிடித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். உழைப்பின் அயர்ச்சி உறக்கத்தை கொடுத்தது.  

காலையில் வழக்கம் போல மீனா விரைவில் எழுந்து கொள்ள, ஜெகன் நல்ல உறக்கத்தில்.. உதட்டை சுழித்து ஒதுக்க நினைத்தாலும் நீண்ட நாட்களுக்கு பின் குடும்பமாக கூடத்தில் இருப்பது மனதிற்கு நிறைவை கொடுத்தது. என்ன தான் தள்ளி வைத்து எட்டி நின்றாலும், பிள்ளைகளோடு கணவனின் இருப்பை மனம் விரும்பியது. 

 அவர்களின் உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கதவை சாத்திவிட்டு எப்போதும் போல தன் வேலையை தொடங்கி விட்டாள். ஜெகன் தாமதமாகத்தான் எழுந்தான். அப்போதுதான் மீனா முன்பே எழுந்து வேலையை தொடங்கிவிட்டதை உணர்ந்து கொண்டவன் தலையில் கை வைத்து விட்டான். ஓரளவு அவளை சமாதானம் செய்யும் வேலையில் இறங்க வேண்டாமா? அவளோடு, அவளுக்கு உறுதுணையாக நின்றால் தானே தன்னை புரிய வைக்க முடியும். அதை விட்டு சொகுசாக படுத்து உறங்கி விட்டு, அவள் வேலைகளை முடித்த பின் அவள் முகம் பார்த்து என்ன செய்ய?… மீனா இன்னும் அடுப்படி வேலையில் இருக்க, பிள்ளைகள் கவனிப்பை ஜெகன் எடுத்துக் கொண்டான். முன்பெல்லாம் அடுப்பில் கிண்டி கொண்டே பிள்ளைகளை ஒரு பார்வை பார்ப்பவள்.. இப்போது முழு நேரமும் சமையல் கூடத்தில் முடங்கிப் போக, ஜெகன் பிள்ளைகளை கவனித்துக் கொண்டான். 

மீனா கணவனுக்கு என்று ஸ்பெஷலாக எல்லாம் எதுவும் செய்யவில்லை. வீட்டில், கடையில் எப்போதும் என்ன நடைமுறையோ அதுதான் அவனுக்கும்… ஜெகனுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. முன்பு போல கடையின் வாடிக்கையாளராக உணவை வாங்காமல், வீட்டினளாக இருப்பதையே விரும்பினான். என்ன இருக்குகோ அதை செய்து வைத்துவிடுவாள் மீனா. கணவனுக்கு போட்டுக் கொடுப்பதோ, பரிமாறுவதோ கிடையாது. உன் விருப்பம், வேண்டுமானால் உண்ணு என்ற தோனி இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பின்னான வீட்டு வாசம் மனைவி பிள்ளைகள் என்று மனம் அவனுக்கு நிறைவாகத்தான் இருந்தது. முன்பு போல எல்லாவற்றுக்கும் மனைவி தன் முகம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஓரளவு சரி செய்து வாழ்ந்தால் கூட போதும் என்ற மனநிலை தான்.

பொதுவாக ஜெகன் வீடு வந்த பின் மேல் அறைக்கு சென்று குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு தான் பிள்ளைகள் பார்ப்பான். அன்று அவ்வாறு குளித்து உடை மாற்றும் போதே மீனா கத்தும் சத்தம் கேட்க, என்னவோ என்று அவசரமாக ஓடி வந்தான். 

பதறிப் போய் வந்து பார்த்தால், மீனா பெரிய மகளை பார்த்து திட்டி கொண்டு இருந்தாள். தமிழ் அழுது கொண்டிருக்க, மற்ற இருவரும் சுவரோடு ஒட்டி நின்று இருந்தனர். 

“என்ன ஆச்சு மீனா” என்றான், அவள் கணவன் பக்கம் திரும்ப கூட இல்லை.

“என்னடா தமிழ்” என்று மகளை பார்த்து கேட்க.

அவளும் தந்தை கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுது கொண்டிருக்க, புரியாமல் மகனை பார்த்தான். 

“அக்கா காசை தொலைச்சுட்டா” என்றான் புகழ்.

“என்ன காசு” என்றவன் பெரிய மகளை பார்த்தான்,

“பார்க் போக ஸ்கூல்ல கொண்டு வர சொன்னாங்க. பேக்ல வச்சு இருந்தேன். லஞ்ச் முடிச்சுட்டு பார்த்தா இல்லை” மகள் பாவமாக சொல்ல, உருகி போனான் ஜெகன்.

“எவ்வளவு பணம் தமிழ்?”

 “ஐநூறு ரூபாய் ப்பா” என்றதும்,

ஊப்ஸ் என்று மூச்சு விட்டவன். அவ்வளவு தானா.. இதுக்கா இவ்வளவு வாக்குவாதம். நான் கூட அதிக அமௌன்டுன்னு பயந்திட்டேன் என்று மனதில் நினைத்தவன் வாய் வார்த்தையாக சொல்ல வர,

“ஐநூறு ரூபாய்ன்னா உனக்கு சாதாரணமா போச்சா.. அவ்வளவு ஈசியா ஒன்னும் உன் அம்மா சம்பாதிச்சு கொடுக்கல” என்றவள், மகள் அருகே வந்து அவள் முழங்கையை பிடித்து,

“காலையில ஸ்கூல் போகும் போதே எவ்வளவு தடவை சொல்லி அனுப்பினேன். கிளாஸ் போனதும் மிஸ் கிட்ட பணம் கொடுத்துட்டுன்னு.. அப்படி என்னடி உனக்கு அஜாக்கிரதை. என்ன அசால்ட். அம்மா சொல்றதை கேட்க வேணாம்?” என்று அதட்டி கையை அழுத்த,

“மீனா..” சத்தமாக அதட்டினான் ஜெகன். 

அவள் கணவனை கண்டு கொள்ளவே இல்லை. பிள்ளை வலியில் முகம் சுருக்க, பட்டென்று அவள் கையை தட்டி விட்டவன் மகளை தன் பக்கம் இழுத்து கொண்டான். அவனை குறைத்து பார்த்தவள், தள்ளி வந்து அமர்ந்து கொண்டாள். 

ஜெகனுக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம் பிள்ளைகள் மீது கை வைப்பது. மனைவியை கடுமையாக பார்த்தவன்,

“வா தமிழ் வெளிய போகலாம்” என்று அழைக்க, மகள் நகராமல் அழுது கொண்டிருந்தாள். ஜெகன் தூக்கியும் அவனோடு வர வில்லை.

அவன் மனைவியை பார்க்க, அவள் நிமிர்ந்து அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். 

“அம்மா கோபமா இருக்கா.. அப்புறம் வீட்டுக்கு போகலாம்” என்று சமாதானம் செய்தம், தாயை பார்த்து அழுது கொண்டிருந்தாளே தவிர, தந்தையோடு ஒன்றவில்லை. 

ஜெகன், தன் மகளையே பார்த்திருந்தான். தன் பிள்ளைகள் தான். அவர்கள் சுபாவம் தெரிய வில்லை. மீனாவே சமாதானம் செய்யு வேண்டும் போல… 

ஆனால், புகழெல்லாம் அப்படி கிடையாது. அவன் தாய் அடிக்க கை ஓங்கும் போது கத்திக் கொண்டு தந்தையிடம் ஓடி வந்து விடுவான். மீனா கூட அப்படித்தான் சின்ன வயதில் ஏதாவது சேட்டை செய்து பரமு அடிக்க வந்தால் தெருவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கத்தி ஊரைக் கூட்டுவாள். நிறைய முறை இவன் வீட்டிற்கு வந்து ஒளிந்து கொள்வாள். ஜெகன் தான் காப்பாற்றி விடுவான். அப்போதெல்லாம் மீனா சிறுபிள்ளை, பின்னாளில் அவளை தான் கை பிடிக்க போகிறோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. அந்த நினைவில் ஜெகன் முகம் புன்னகை பூக்க, அவனின் எண்ணவோட்டத்தை அறிந்து முறைத்துப் பார்த்தவள்.. 

மகளை அருகில் அழைத்து, “தப்பு உன் மேல தான் தமிழ். அம்மா அத்தனை தடவை சொல்லியும் நீ அசால்டா இருந்திருக்க.. இதுக்கு நீ தான் பொறுப்பு” என்று கண்டிப்பாக சொல்ல, மகள் தலையாட்டிக் கொண்டாள்.

அப்போது ஜெகன் அதை பெருசாக எடுக்கவில்லை. ஆனால், மறுநாள் தான் விஷயம் புரிந்தது. என்ன நினைத்தும் ஜெகனால் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்து வந்தான். வந்து பார்த்தால், மணி ஐந்து. பிள்ளைகள் உறங்கும் இடத்தில் தமிழ் இல்லாமல் போக, புரியாமல் வெளியில் வந்து பார்த்தான்.

மீனா இட்லி அவித்து கொண்டே வடையை தட்டி போட, தன் குட்டி கரங்களில் சூடான வடையை கரண்டியில் எடுத்து தனித்தனியாக பேப்பரில் பார்சல் கட்டி கொண்டிருந்தாள் தமிழ்.

பார்த்ததும் கோபம் வர, பட்டென்று வடையை தட்டி விட்டவன், வேகமாக பிள்ளையை தூக்கி வைத்து கையை பார்த்தான். லேசாக சிவந்து போயிருந்தது. அதற்கே ஜெகன் கண்கள் கலங்க, உக்கிராக மனைவியை பார்த்தவன்,

“என்ன பண்ற?” என்றான் அடிக்குரலில்… 

“இவளோட பொறுப்பு இல்லாம தான் பணம் தொலைஞ்சு போச்சு” 

“அதுக்கு?…” 

“இவதான் காரணம்” 

“அதனால என்ன பண்ணனும்” என்றான் இன்னும் கோபம் ஏற… 

“ஒரு வடைக்கு அஞ்சு ரூபா. ஐநூறு ரூபாய்க்கு வடையை எடுத்து வைக்கணும்” என்றதும் ஜெகனின் கண்களில் கண்மண் தெரியாத கோபம் வந்தது. 

“மீனா…” என்றான் கோபம் குறையாமல், அவன் அதட்டலுக்கெல்லாம் பயப்படாமல் நிக்க…

அது இன்னும் ஜெகனுக்கு கோபத்தை கொடுத்தது, “உன் மனசு என்ன கல்லாடி. சின்ன பிள்ளை மேல என்ன கோபம். வெறும் ஐநூறு ரூபாய்க்கு இவ்வளவு கொடுமை படுத்துவியா?…” 

“என்ன கொடுமை? வெறும் ஐநூறு ரூபாயா? இந்த காசை சம்பாதிக்க அம்மா எவ்வளவு கஷ்ட பட்டான்னு அவளுக்கு புரிய வேணாம்?.. இவளுக்கு அப்புறம் ரெண்டு பேர் இவளை பார்த்து தான் வளருவாங்க. மூத்தது பொறுப்பா இருந்தா, அடுத்த ரெண்டு பேரும் நல்லா வளருவாங்க”

“எதுக்கு இவ்வளவு கஷ்டபடனும் என் பிள்ளைக. நான் உயிரோட தான் இருக்கேன்”

“நான் இவங்களை இப்படி வளர்க்க காரணமே பெத்த தகப்பன் சரியில்லாமல் போனதால தான். யாரையும் நம்பி இருக்க வேணாம், சுயமா நிக்க பழகி வைக்கிறேன்”

“வீணா பழசை புடிச்சு தொங்காத மீனா. இப்போ நடைமுறை என்ன?.. நான் நல்லா இருக்கேன். என் பிள்ளைகளை நல்லா வளர்ப்பேன்” என்றவன், 

மகளின் கையை விரித்து மனைவி முன் காட்டி, “ பாரு எப்படி சிவந்து போய் இருக்குன்னு.. இதை பார்த்தும் நான் எப்படி அமைதியா இருப்பேன் மீனா” என்றான் ஜெகன்.

“வலிக்குதா… லேசா தான் சிவந்து இருக்கு. வலி எல்லாம் இருக்காது” என்றவள், அவன் முன் தன் ரெண்டு கையை விரித்து காட்டினாள். 

“மீனா..” என்றான் தவித்து போய்… 

“என் கையை பார்த்தீங்களா?.. கொதிக்கிற சுடு தண்ணில கை விட்டாலும் எனக்கு சூடு தெரியாது. அந்த அளவுக்கு காய்ச்சு போச்சு. நான் எவ்வளவு பாடு பட்டு இருப்பேன். எங்க அப்பா கூட என்னை தவமிருந்து தான் பெத்தார். மூணும் பசங்களா போக, ஆசைக்கு அழகு பார்க்க பொண்ணு வேணும்ன்னு வரம் வாங்கி வந்தேன் நான்… என் விதி என்னன்னு பார்த்தீங்களா?..”

“என்னை சின்ன பிள்ளையில இருந்து உங்களுக்கு தெரியும் தான.. எந்த வீட்டு வேலையாவது நான் செஞ்சு பார்த்து இருக்கீங்களா?.. வெயில்ல நடக்க விடமாட்டார் எங்க அப்பா.. உனக்கு கழுத்தை நீட்டி நான் படாதா கஷ்டமா?.. என் விதி.. என் மகளுக்கு என்ன காத்திருக்கோ” என்றதும்,

“மீனா” என்றான் அதட்டி..

அவள் விலகி கொண்டாள். அதன் பின் அவனோடு பேச வில்லை. என்னவோ மனதில் பெரிய ஏமாற்றம். மகளை பார்க்கிறவன். தன்னை பார்க்க வில்லையே.. இன்னமுமா தன் மனம் அவனை எதிர் பார்க்கிறது. 

அவன் முன் நிமிர்ந்து நிற்பதை விட்டு, என் கஷ்டத்தை பார்க்க வில்லை என்று குறை சொல்கிறேனா? அவனுக்கு எப்பவுமே நான் ஒரு பொருட்டு அல்ல.. மனம் வேதனையாக நினைத்தது. ஆனால், வெளியில் எப்பவும் போல இறுகி கொண்டாள். 

ஜெகனும் மனைவியை தொந்தரவு செய்யாமல் தன் குற்ற உணர்ச்சியிலே மறுகி கொண்டிருந்தான். எப்படி அவளை இதிலிருந்து வெளி கொண்டு வர.. மறக்கவே மாட்டாளா? இதையெல்லாம் கடந்து நாங்கள் நன்றாக வாழவே மாட்டோமா?.. ஏக்கமாக இருந்தது.

“ஜெகன்” என்ற சத்தம் கேட்க.

யார் என்று பார்த்தான், வெண்பா.

“வா க்கா. என்ன இவ்வளவு சீக்கிரம்”

“கடைக்கு போனேன். நீ வீட்டுல இருக்கிறதா சொன்னாங்க. கடைக்கு போகலையா?” என்றாள் வெண்பா.

“இனி தான்” என்றவன், “மீனா” என்று சத்தம் கொடுத்தான்.

என்னவாம் என்று வந்தவள் வெண்பாவை எதிர் பார்க்க வில்லை. முதலில் புரியாமல் பார்த்தாலும், தன் வீடு வந்திருப்பதால்,

“வாங்க அண்ணி” சம்பிரதாயத்துக்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள்.

“எப்படி இருக்க மீனா?”

“நல்லா இருக்கேன் அண்ணி” 

“பிள்ளைக எங்க மீனா?”

“பெருசு ரெண்டும் ஸ்கூல் போயாச்சு. சின்ன குட்டி தூங்குது” என்றதும், உள் அறைக்கு சென்று மருமகளை பார்த்து வந்தாள்.

“ஜெகன், அப்படியே நம்ம ஆச்சி மாதிரி” என்று சிரிக்க, இவங்களுக்கு இப்போது தான் கண்ணு தெரிந்தது போல.. பிள்ளை பிறந்து மூன்று வருடம் கழித்து தம்பி மகளை பார்க்கிறார். தன் தாய் சொன்னதும் இதை தான். இந்த சொந்தமெல்லம் எதற்கு?…

அக்காவும், தம்பியும் பேசிக் கொள்ள, மீனா காபி கலந்தாள். எடுத்து போய் நாத்துனாருக்கு கொடுக்க,

“அவன் கிட்ட நல்லா அறிவுரை சொல்லி இருக்கேன் மீனா. இனி ஒழுங்கா இருப்பான்” என்று வெண்பா சொன்னதும்,

இப்போ எதற்கு இந்த பேச்சு என்று அதிருப்தியாக ஜெகன் பார்க்க, “ மூணு பிள்ளைக இருக்கு. அதிலும் ரெண்டு பெண் பிள்ளைக வச்சு இருக்க, பொறுப்பா இரு மீனா. இவன் கெட்டதுக்கு ஒரு வகையில நீயும் தான் காரணம்”

“நானா?” என்று திகைப்பாக பார்க்க,

“என்னவோ நடந்து போச்சு. நீ கொஞ்சம் அவனை இழுத்து பிடிச்சு இருக்கணும். யார் கூட போறான், வரான்னு கவனிக்காம விட்டுட்ட..” வெண்பா சொன்னதும்,

மனைவி முகம் பார்த்தே அக்கா என்று நிறுத்த பார்த்தான்.

“ என்னடா அக்கா. நீ வெட்டு பட்டு செத்து பிழைத்து வந்த.. நீ செஞ்சது தப்பாவே இருந்தாலும் அந்த நிலைமையில உன்னை விட்டுட்டு வரலாமா?.. எந்த பிரச்சனையிலும் சிக்க கூடாதுன்னு மீனா பிள்ளைகளை கூட்டிட்டு ஓடி வந்துட்டா. ஆனாலும், நீ பொண்டாட்டி, பிள்ளைக தான் முக்கியம்ன்னு நிக்கிற” என்ற வெண்பா பேச்சு..

மனதில் சாம்பல் மறைத்த கங்கை விசிறி விட்டது போல ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!