Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 4

அத்தியாயம் 4

“யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க?” என ராமமூர்த்தியின் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றான் ராஜீவன்.

ராமமூர்த்தியும் அவன் கண்களை நேராகப் பார்த்து”யாரைக் கேட்கணும்?” என்றார் அழுத்தமாக.

“இது என் வாழ்க்கை .”



Advertisement

“என் மகன் வாழ்க்கையை நல்ல பாதைக்கு கொண்டு போறது என் பொறுப்பு.”

“நான் பிரியாவைத்தான் கல்யாணம் பண்ணுவே.”

“இந்த ஜென்மத்துல அது நடக்காது.”

Advertisement

அந்த ஒரு வாக்கியம் ராஜீவனின் கோபத்தை இன்னும் தூண்டியது.
“அப்படின்னா… இந்தக் கல்யாணமும் நடக்காது.”

Advertisement

“நடக்கும்.”

“நடக்க விட மாட்டேன்.”

“நடத்தி காட்டுறேன்.”

Advertisement

இருவரின் குரலும் வீட்டையே அதிர வைத்தது.

அடுத்த வெள்ளி அலமேலுவை கோவிலில் பார்த்து, ரஞ்சிதாவை தன் மகன் ராஜீவனுக்கே திருமணம் செய்ய விரும்புவதை கூறினார் ராம மூர்த்தி.

அலமேலு சற்று தயக்கத்தோடு…உன் பையன் என்ஜினீயருக்கு படிச்சிருக்கானு சொல்றே..எம்பேத்தி பனிரெண்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கா மூர்த்தி என்றார்.

குடும்பம் நடத்த படிப்பு முக்கியமல்ல அத்தே. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு விட்டுக் கொடுத்து போனா போதும்.எம்பையன் பாடப் புத்தகத்தை படிச்சிருக்கானா உங்க பேத்தி வாழ்க்கை பாடத்தை படிச்சிருக்கு…அது போதும்.

என் பையன் இப்போ ஊருல சின்ன சின்ன வீடு கட்டிட்டு இருக்கான்.பெரிய வேலைக்கு முயற்சி செய்துட்டு இருக்கான்.கூடிய சீக்கிரம் ஒரு பெரிய வேலைக்கு போய்ருவான். என்னை நம்பி உங்க பேத்தியே என் வீட்டுக்கு மருமகளா அனுப்புங்க…

உங்களுக்கு சம்மதம்னா…அடுத்து வர முகூர்த்த நாள்ல உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வரோம் என்றார்.

“சரிப்பா.உன்னை நம்பி எம்பேத்தியே உன் மகனுக்கு கொடுக்கறே” என வாக்களித்தார் அலமேலு.இருந்தும் இவ்வளவு நாள் பேத்தி பட்ட கஷ்டம் இனி படக் கூடாது என மனதில் வேண்டிக் கொண்டார்.

தன் அண்ணன், அக்கா அவர்களின் வாரிசுகளிடம் ராஜீவனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்திருப்பதாக கூற..அவர்களுக்கு சற்று அதிர்ச்சியே..

ஏனெனில் ராஜீவன், பிரியா காதல் விவகாரம் அவர்களுக்கு தெரியும் அக்கா பார்வதியின் இளைய மகள் ஆர்த்தியை முதலில் ராஜீவனுக்கு கொடுக்கவே ஆசைப்பட்டார்.
இருவரின் காதல் விவகாரம் தெரிய வர…இவரே விலகி ராஜீவனை விட இரண்டு வயது சின்ன பையனான நவீனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
தற்போது அவர்கள் வாழ்வு அன்பு, பண்பு, விட்டுக் கொடுத்தல் என நல்லறமாக போய்க் கொண்டிருக்கிறது.

அனைவரும்,” ஏன் இந்த முடிவு?ராஜீவன் ஏற்றுக் கொண்டானா?”என ஒரு சேர ராம மூர்த்தியை நோக்கி கேள்வி எழுப்பினர்.

அவரும் நடந்த சம்பவங்களை கூற, ராஜீவன் நலன் கருதி ரஞ்சிதாவை திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டனர்.

இன்று ரஞ்சிதாவை பெண் பார்க்க வருவதாக ராம மூர்த்தி கூறிய முகூர்த்த நாள்.. அனைத்து பருவ பெண்களை போலவே திருமணத்தை பற்றிய இயல்பான எதிர்பார்ப்பு ரஞ்சிதாவிடமும் இருந்தது.

காலையிலேயே ஆகாயவண்ண கலரில் மைசூர் சில்க் புடவை,அதற்கு மேட்சிங்காக கண்ணாடி வளையல்கள். கழுத்திற்கு பாட்டியின் சிறிய அட்டிகையும்,அம்மாவின் நீளமான தாமரை டாலர் வைத்த செயினும் அணிந்து கொண்டாள். தலையை பின்னலிட்டு மல்லிகை சரம் சூடி… கண்ணிற்கு மையிட்டுக் கொண்டாள்.

அண்ணி மாதவிக்கு இவளை பெண் பார்க்க வரும்  படலம் சுத்தமாக பிடிக்கவில்லை. அவளின் குடிகாரத் தம்பிக்கு ரஞ்சிதாவின் மேல் ஒரு கண். அவனுக்கு இவளை மணமுடித்து வைக்க ஆசை.அந்த ஆசையில் அலமேலு மண்ணை அள்ளிப்போட்டு விட்டார் என்ற வயிற்றெரிச்சல் வேறு.தன்னால் முடிந்த அளவு தன் கணவன் கார்த்தியிடம் மல்லுக்கட்டி பார்த்தாள்.

மனைவியின் மகுடிக்கு மயங்கிய அவனும் அலமேலுவிடம் கெஞ்சியும் பார்த்தான்.. கொஞ்சியும் பார்த்தான்.. முடியவில்லை பிடிவாதமாக நின்றுவிட்டார் அலமேலு.கணவன் மனைவி இருவரும் வேண்டா வெறுப்பாக இன்றைய வைபவத்தில் பங்கேற்றனர்.

அலமேலு,ரஞ்சிதா,
கார்த்தி,மாதவி அவர்களின் மழலை என அளவான குடும்பம் மட்டுமே… பேரனுக்கும் அவன் மனைவிக்கும் இதில் உடன்பாடு இல்லை என்பதை அறிந்த அலமேலு பக்கத்து வீட்டு கோமதியை உதவிக்கு அழைத்திருந்தார்.

ஏய் ரஞ்சிதா! இங்க வாடி – மாதவி.

சொல்லுங்க அண்ணி.

“இந்தா குழந்தை மோஷன் போய்ட்டா. கிளன் பண்ணி கொடு” என தன் ஒரு வயது மகளை ரஞ்சிதாவின் கைகளில் திணித்தாள்.

இவளும் பொறுமையாக கிளின் செய்து விட்டு..பால் புட்டியில் பாலை ஊற்றி வாயில் வைக்க.. அதை ரஞ்சிதாவின் மேல் துப்பி விட்டாள் அவளின் குட்டி மருமகள்.

“அண்ணி பாப்பாவை கொஞ்ச நேரம் வெச்சிருங்க..அவ பாலை எம்மேல துப்பிட்டா.நான் கிளின் பண்ணிட்டு வந்தறே..மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரமாச்சு” என்றாள்.

“கொஞ்ச நேரம் குழந்தையே கையில வெச்சிருக்க மாட்டியாடி.என்னமோ ஊருல இல்லாத மாப்பிள்ளை…பெரிய சீமத் துறையையாடி உங்க அப்பத்தா உனக்கு பாத்திருக்கு” என பேசிக் கொண்டே அவள் கையிலிருந்து குழந்தையை எடுத்தவாறு..ரஞ்சிதாவின் இடதுகை சுண்டு விரலை பின்புறமாக திருப்பி விட்டாள் மாதவி.

அந்த நொடி உயிரே போவதை போல் நரக வேதனையை அனுபவித்தாள் ரஞ்சிதா.மாதவியிடம் எந்தவித எதிர் வினையையும் காட்டாது..கையை உதறிக் கொண்டே புடவையை தண்ணீரால் சுத்தப்படுத்திவிட்டு வந்து சுண்டுவிரலை பிடித்தபடி கட்டிலின் மீது அமர..

“ரஞ்சிதா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க..ஆனா மாப்பிள்ளைக்கு ஏதோ முக்கிய வேலை இருக்கறதாலே அவரு மட்டும் வரலையாம்” என்றாள் கோமதி.

சிறு ஏமாற்றம்தான் ரஞ்சிதாவிற்கு.. வழக்கம்போல ராஜீவன் பிடிவாதம் பிடித்து வரவில்லை. அம்பிகாவை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார் ராமமூர்த்தி.

வந்தவர்களுக்கு காபி எடுத்துச் சென்று கொடுத்தாள் ரஞ்சிதா.
அனைவருக்கும் அவளைப் பிடித்து விட்டது.ராம மூர்த்தி ஆசையாக மருமகளை தன் வீட்டாருக்கு அறிமுகப்படுத்தினார்.

தீபாவும் ஆர்த்தியும் ரஞ்சிதாவை தனியே அழைத்துச் சென்று சில விசாரிப்புகளோடு…
சினேகமாக ஒட்டிக் கொண்டனர். ஜெகனும் நவீனும் நல விசாரிப்போடு ராஜீவனை பற்றி அவளிடம் பேசினர். பின் தங்கள் ஃபோனில் இருந்த அவன் ஃபோட்டோவை காட்ட… ரஞ்சிதா அதை வாங்கிப் பார்த்தாள்.

அதற்குள் ராமமூர்த்தியும்,
பார்வதியும் அருகே வந்துவிட்டனர்.
ராஜீவனை பிடிச்சிருக்கா?என பார்வதி கேட்க…

கண்களை தாழ்த்தியபடி ‘பிடிச்சிருக்கு!’ என்றாள்.அவளின் அந்த வார்த்தைகளை கேட்ட ராம மூர்த்தியின்  சந்தோசத்திற்கு அளவே இல்லை.

எல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்க…
அலமேலு,”ரஞ்சிதா உன் மாமியாரை வந்து பாரு” என அழைத்துச் சென்றார்.

இறுக்கமான முகத்துடன்…சோஃபாவின் மீது அமர்ந்திருந்த அம்பிகாவின் அருகில் சென்று, “நல்லா இருக்கீங்களா?அத்தே”எனக் கேட்டாள்.

அவள் ரஞ்சிதாவின் முகத்தை கூட பார்க்காது..’நல்லா இருக்கேன்’ என்பதை போல தலையை மட்டும் ஆட்டினாள்.

அம்பிகாவின் பிடித்தமில்லாத செய்கை அவளுக்கு சிறு கவலையை தந்தது.

அன்றே இரண்டு மாதத்தில் முகூர்த்த நாளை குறித்தனர் ராஜசேகரனும்,ராம மூர்த்தியும்….
அதன்பின் வந்த நாட்களில் பத்திரிக்கை அடித்து சொந்தபந்தங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.

விஷயம் பிரியாவிற்கு தெரியவர ஒரே அழுகை.அவளுக்கு ராஜீவன் மீது இருந்தது… உயிரைக் கொடுக்கும் காதல் எல்லாம் அல்ல.

கல்லூரி வயதில் தோழிகள் அனைவரும், “என்னை ஒருத்தன் காதலிக்கிறான்… என் பின்னாடி ஒருத்தன் சுத்துறான்…” என்று பெருமையாகப் பேசிக் கொள்ள…. அந்த வயதிற்கே உரிய ஒப்பீடு, பிரியாவின் மனதிலும் ஒரு சிறிய தாழ்வு மனப்பான்மையை விதைத்தது.

“என்னை யாரும் காதலிக்க மாட்டார்களா? என்னை யாருக்குமே பிடிக்காதா…? நான் அவ்வளவு அழகாக இல்லையா…?” என்ற கேள்வி அவளை அடிக்கடி துரத்தியது.

அந்த நேரத்தில்தான் ராஜீவன் தன் காதலை வெளிப்படுத்தினான். யோசிக்காமல் அவனது காதலை ஏற்றுக் கொண்டாள். அவனை நேசித்ததைவிட… தன்னையும்  ஒருவன் காதலிக்கிறான் என்ற உணர்வைத்தான் அவள் அதிகமாக நேசித்தாள்.

அவளுடைய உலகம் மிகவும் சிறியது. அப்பா சேர்த்து வைத்த சொத்து… வசதியான வாழ்க்கை… எந்த பொறுப்பும் இல்லாத நாட்கள்… இதுவே அவளுடைய வாழ்க்கை. தன் திறமையால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ, இலட்சியமோ அவளிடம் இருந்ததில்லை.

காதலிலும் கூட அவள் மனம் ஆழமாக வேரூன்றியிருக்கவில்லை. வாழ்க்கை ராஜீவனை விட வசதியான ஒரு பாதையை காட்டினால்… அந்தப் பாதையில் செல்லவும் அவள் தயங்க மாட்டாள். ஆனால் இன்று அவன் வேண்டும் என ஒரே பிதற்றல். கந்தசாமி தனது குறுக்குப் புத்தியால் ஒரு சதித்திட்டம் தீட்டினான்.

திருமணத்திற்கு முந்தைய நாள்… கந்தசாமி, சரோஜா, பிரியா மூவரும் ரகசியமாக ராஜீவனை சந்தித்தனர்.

“மாப்ளே, நாளைக்கு உங்க அப்பா  என்ன நடந்தாலும்  கல்யாணத்தை நடத்திருவாரு.
நாமதான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும். நீ இன்னைக்கு ராத்திரி வீட்டை விட்டு வெளியே வந்துரு. நாளைக்கு காலைலே உங்க அப்பா குறிச்ச முகூர்த்ததுல உனக்கும் பிரியாக்கும் கோவில்ல நாங்க கல்யாணம் பண்ணி வெக்கறோம். அதுக்கு அப்பறோம் உங்க அப்பானால ஒன்னும் பண்ண முடியாது.” என்றான் கந்தசாமி.

பிரியா அழுது கொண்டே…”ராஜூ… என்னை விட்டுடாத. நீ இல்லைனா நான் செத்துருவேன்.”என்றாள்.

“நீ வந்தா மட்டும் போதும். மத்ததை நாங்க பாத்துக்கறோம்.” எனக் கூறினாள் சரோஜா.

கந்தசாமி, சரோஜா, பிரியா மூவரும் சென்ற பிறகும், அவர்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் ராஜீவனின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

வீட்டிற்குள் வர அவன் வீடு உறவுகளின் சிரிப்புச் சத்தத்தோடு கல்யாண கொண்டாட்டத்தில் களை கட்டி இருந்தது. ராம மூர்த்தி பந்தல் போடுவது உறவுகளை கவனிப்பது என படு பிசியாக இருந்தார். அம்பிகா எதிலும் கலந்து கொள்ள விருப்பமில்லாது இறுக்கமான முகத்துடன் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார்.

ஒருவித சலிப்புடன் உள்ளே தன்னறைக்குச் சென்று படுக்கையில் படுத்தான் ராஜீவன். அறையில் எந்த லைட்டையும் ஆன் செய்யாமல் இருட்டு அறையில் எதையோ வெறித்தபடி படுத்திருந்தான்.

“இன்னைக்கே வீட்டை விட்டு வெளியே போயிட்டா… நாளைக்கு காலையில பிரியாவோட என் கல்யாணம் முடிஞ்சிரும்…”என ஒரு மனம் சொல்ல…

“அதுக்கப்புறம்…? அப்பா…? அவர் நிலை..? உறவுகள் முன் அவர் எப்படி தலை நிமிர்ந்து நிற்பார்?”என இன்னொரு மனம் எதிர்கேள்வி கேட்டது.

தன் தந்தையோடு எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்…அவரை ஊரார் முன்னிலையில் தலைகுனிய வைக்கும் அளவுக்கு மனம் ஒப்பவில்லை.

வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்வது… அப்பாவின் பிடிவாதத்துக்கு எதிராக தன் காதலில் நிலையாக நின்று  வெற்றி பெறுவது அல்ல…அவர் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். அந்த எண்ணம் வந்தவுடன் ராஜீவனின் மனம் கனத்துப் போனது.

பிரியா வேண்டும்… ஆனால்…அதற்காக அப்பாவின் மரியாதையை இழக்கச் செய்ய வேண்டுமா?என்ற கேள்வி அவனை உள்ளுக்குள் வாட்டியது.

விடியப் போகும் அந்த இரவு… ராஜீவனின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்த தயாராக இருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இரவே மண்டபத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

வாசலில் கார்கள் வந்து நின்ற சத்தம் கேட்டது.அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க…

ராமமூர்த்தி மெதுவாக ராஜீவனின் அறையை நோக்கி நடந்தார்.கதவைத் திறந்து உள்ளே சென்றவர், அறையில் இருள் சூழ்ந்திருப்பதைக் கண்டு சுவிட்சை அழுத்தினார். அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.

கட்டிலில் கண்களை மூடியபடி படுத்திருந்த ராஜீவன், வெளிச்சம் பட்டதும் மெதுவாக கண்களைத் திறந்தான்.

அவனை சில நொடிகள் அமைதியாகப் பார்த்த ராமமூர்த்தி,
“எந்திரிச்சு கிளம்பு… நல்ல நேரம் முடியரதுக்குல்ல மண்டபத்துக்கு போகணும்.” என்றார்.

ராஜீவன் அமைதியாக எழுந்து அமர்ந்தான்.அவன் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. மாறாக ஒரு முடிவு தெரிந்தது.

“நான் வரல.”

ராமமூர்த்தி புருவத்தை  சுருங்கியபடி.
“என்ன சொன்னே?” எனக் கேட்டார்

“நான் வரலேனு சொன்னே..நான் பிரியாவ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.” என்றான்

அந்த ஒரு வாக்கியம்…
ராமமூர்த்தியின் பொறுமையை முற்றிலுமாக உடைத்தது.இதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்தது.

“டேய்!” என்று கர்ஜித்தபடி அவன் சட்டையைப் பிடித்து எழுப்பி,”விடிஞ்சா கல்யாணம்…அந்த வீட்டு சம்பந்தம் வேண்டானு இவ்வளவு தூரம் சொல்லியும்…உனக்கு உன் காதல்தான்  பெருசா? வீட்டுல எத்தனை பேரோட மானமும், மரியாதையும் இந்த கல்யாணத்தோட சேர்ந்திருக்கு தெரியுமா?”

ராஜீவன் சட்டையை விடுவித்துக் கொண்டு,”எனக்கு யாரோட மானமும் மரியாதையும் முக்கியமில்ல. நான் பிரியாவை காதலிக்கிறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.” என்றான் உறுதியாக.

ராமமூர்த்தியின் கண்கள் கோபத்தால் சிவந்தன.இத்தனை வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த மகன் எங்கே தன் கையை விட்டு நழுவிப் போய்விடுவானோ என்ற  பயமும் அவர் கண்களில் தெரிந்தது.
–கவிதை எழுதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!