ஹரிப்ரசாத், சாம்பவி இருவரும் ஒரே கல்லூரிக்கு வேலைக்கு செல்வதால் காலையிலே இருவரும் ஒன்றாக கிளம்பிவிடுவார்கள். சமையல் செய்யும் அம்மாவே காலை மதியம் இரண்டு வேலையும் சமையலை செய்து கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். சாம்பவிக்கும் பரிமளவிற்கும் நன்றாக ஒத்து போய்விட்டது. அதனால் தனி சமையல் வேண்டாம் என்று பரிமளா கூறிவிட்டார்.
Advertisement
“நாளைக்கு நான் சென்னை கிளம்புறேன்” என்று அறிவித்தார் சுந்தர்ராஜன்.
“அவங்க அங்க நல்லா இருக்காங்க ம்மா. நீ அக்கறையா கேட்கறதே போதும். உள்ள போச்சுங்களே ரெண்டும்.. மணி வந்தா அவ தலையில எல்லா வேலையும் கட்டிட்டு ஜாலியா இருப்பாங்க. என் அனுபவ பாடம் ம்மா. இவங்க கிட்ட இருந்து தூரமா இருந்தா தான் நான் அவளுக்கு ஒரு வழி காட்ட முடியும்”
“எங்க கல்யாணம் வரைக்கும் இங்க தானே இருந்தாங்க. இப்ப அவங்க என்னை பத்தி தப்பா நினைப்பாங்க இல்ல?” என்றாள் சாம்பவி வருத்தமாக.
“அப்படி எல்லாம் இல்ல ம்மா.. நீ எப்ப வேணும்னாலும் போன் பண்ணி மணி கிட்ட பேசேன். மணி சந்தோசப்படும்”
“நீங்க பேசும்போது ஒரு முறை கொடுங்க மாமா. அதுக்கப்புறம் நானே பேசிக்கிறேன்”
“சரிம்மா..”
அப்படி ஆரம்பித்த பேச்சு நாளடைவில் மணிமேகலை சாம்பவி இருவருக்கிடையில் அழகிய நட்பாக மலர்ந்தது.
மணிமேகலையின் அக்கா மகா, தங்கையிடம் அடிக்கடி எல்லாம் பேச மாட்டார். ஆனால் சாம்பவி அவரிடமும் அடிக்கடி பேசினாள். மணிமேகலை பற்றி சாம்பவி மூலம் தெரிந்துகொள்வதை அவர் விரும்பவில்லை. நான் தானே அக்கா, எனக்கு தானே முதல்ல தெரியணும் என்று ஒரு உரிமை எண்ணம் தலை தூக்கியது. அதன் பிறகு அவர் அடிக்கடி அழைத்து தங்கையிடம் பேச ஆரம்பித்தார். மணிமேகலை இப்பொழுது நல்ல மனநிலையில் இருந்ததால் அக்காவிடமும் நன்றாக பேசினார். வளர்ந்த இரண்டு ஆண் பிள்ளைகள், பிஸியான கணவன் என்று ஒருவித தனிமையில் இருந்த மகாவிற்கு இப்பொழுது தங்கையிடம் பேசுவது மிகவும் இதமாக இருந்தது. மணிமேகலை பொதுவாக எப்பொழுதுமே நேர்மறையாகவே பேசுவார். அதுவும் இப்பொழுது சொல்லவே வேண்டாம்.
தம்பி பிள்ளைகளிடமும் ஆசையாக பேசினார் மகா. வராஹியும் சரி மணிமேகலையும் சரி.. அனைவரிடமும் இணக்கமாகவே இருக்க முயற்சித்தனர்.
வல்லபன் அவ்வளவு எல்லாம் யோசிக்க மாட்டான். அவனிடம் பேசினால் அவனும் பேசுவான், அவ்வளவே!
இப்படியாக சென்னை வாழ்க்கை உறவுகளோடு ஒருவித பிணைப்போடு நல்லபடியாகவே சென்றது.
—————-
பத்மப்ரியா அம்மாவும் வந்தியத்தேவனும் இங்கே வந்து இரண்டு வாரங்கள் ஆனது. வந்தியத்தேவன் இங்கே சில தனியார் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசராக அவருக்கு வேலை கிடைத்திருந்தது.
ஆனால் அவர் வேலைக்கு சேர யோசிக்கவே,
“எதுக்கு தேவ் யோசிக்கிற? நல்ல வேலை, நல்ல சம்பளம். கௌரவமான பதவி. இந்த ஊர்லயே வேற கிடைக்குது.. அப்புறம் என்ன?” என்றார் பத்மப்ரியா.
“இல்லம்மா .. உன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் சேரலாம்னானு பார்க்கிறேன்”
“டேய் கண்ணா, உங்க அம்மா இன்னும் படுத்த படுக்கை ஆகல. எனக்கு உடம்புலயும் திடம் இருக்கு மனசுலயும் திடம் இருக்கு. லீவ் அன்னிக்கு நீ கூட வா, மத்த சமயத்துல அம்மா பார்த்துப்பேன். நீ வேலைல சேரு. சும்மா வீட்லயே உன்னாலயயும் இருக்க முடியாது.. உன் மூஞ்சிய பார்த்திட்டே என்னாலயும் இருக்க முடியாது.”
“அதுவும் சரி தான். இருந்தாலும்..”
“இது ஒரு ரெண்டு நாள்ல சரியா போற வியாதி இல்லை. பல மாசம் ஆகும். சில வருஷங்க கூட ஆகும். அதுவரைக்கும் நீ எப்படி சும்மா இருக்க முடியும்?”
பலவாறு பேசி அவரை அந்த வேலையில் சேர்ந்துகொள்ள செய்துவிட்டார்.
இவர்கள் வைத்தியம் பார்க்கும் இடத்திலும் முடிந்தளவு சனி ஞாயிறுகளில் டிரீட்மெண்ட் வைத்துக் கொள்ளுமாறு பேசிக்கொண்டனர்.
வந்தியத்தேவன் புது வேலையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று காலையில் வந்தியத்தேவன் வேலைக்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தார்.
அப்பொழுது , “மேகா .. மேகா ..” என்று மாடியில் இருந்து கீழே குரல் கொடுத்தார்.
வானத்தில் மிதக்கும் மேகத்தை போலவே சந்தோஷத்தில் மிதந்துகொண்டு வந்தார் மணிமேகலை.
“சொல்லுங்க பத்து..” என்று அவரும் கீழே இருந்தே குரல் கொடுத்தார்.
“மதியம் பசங்களுக்கு என்ன லன்ச் சமைக்கிற?”
“இன்னிக்கு புளிசாதமும் வெண்டைக்காய் பொரியலும்”
“சரி அப்ப என் பையனுக்கும் நீயே லன்ச் பேக் பண்ணிடு மேகா.. மதியத்துக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நான் சூடா சாம்பார்சாதம் பண்ணிடறேன்..”
“ஓகே பத்து”, என்று மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.
எதிர்த்த வீட்டில் இருந்து வீர்யா பத்மா அம்மாவை முறைத்து கொண்டிருந்தாள்.
“என்ன முறைப்பு.. முளைச்சு மூனு இலை விடலை முறைப்ப பாரு..” என்று அவளை வம்புக்கு இழுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“ஏம்மா, நான் என்ன ஸ்கூல்கா போறேன்.. லன்ச் எல்லாம் எடுத்திட்டு போக முடியாதுன்னு சொன்னவனை, பல வருஷம் கழிச்சு உனக்கு என் கையால சமைக்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு.. அதை தட்டி பறிக்காதேன்னு வசனம் பேசிட்டு, இப்ப கீழ் வீட்ல எனக்கு சாப்பாடு கட்டி தர சொல்றீங்களே..”
“சும்மா நொச்சு நொச்சுன்னு பேசாமா கிளம்புடா”
“ உங்களுக்கு இது டூ மச் ஆ தெரியல?”
“தெரியல..” என்றார் ஸ்டைலாக.
உங்களோட என்று தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.
காலை உணவிற்கு சிறுதானியம் வைத்து பொங்கலும் சாம்பாரும் செய்திருந்தார்.
அதை சாப்பிட்டு கொண்டிருக்கையிலே வல்லபன் வேகமாக வந்து லன்ச் பாக்ஸை கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.
அவன் அம்மாவை முறைத்து பார்க்கவும், “அந்த எதிர்த்த வீட்டு வாண்டும் இப்படி தான் தேவ் முறைச்சு முறைச்சு பார்க்குது” என்றார்.
“அம்மா, அவ கிட்ட இன்னிக்கும் வம்பு வளர்த்தீங்களா? நீங்க பாட்டுக்கு வம்பு வளர்க்கிறீங்க.. அவ என் வண்டில காத்து பிடிங்கி விடறது நான் போகும்போது குறுக்க நாயை ஓடவிடறதுனு என்னை பழி வாங்குறா?”
“ஹா ஹா ஹா.. சூப்பர் இல்ல?”
“சூப்பர் தான், அவ உங்களை பழி வாங்காம என்னை வாங்குறா இல்ல.. இருங்க நானே இன்னிக்கு அவ கிட்ட சொல்லிட்டு போறேன்..”
“போடா போ…” என்று அசால்ட்டாக கூறி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
சில நாட்களுக்கு முன் “பெரிய, தளபதி பட ரஜினி மம்மூட்டி மாதிரி இவங்க தான் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்ன்னு சுத்திட்டு இருந்தாங்க இல்ல ரகுண்ணா, இப்ப அத்தையும் பத்தும்மாவும் அவங்களை விட திக் ப்ரண்ட்ஸ்ன்னு ஆனப்பறம் தான் கொஞ்சம் அடங்குனாங்க” என்றான் வல்லபன் ரகுநந்தனிடம்.
அதை கேட்டதில் இருந்து தான் வீர்யா பத்தும்மாவை முறைத்து கொண்டு சுற்றுகிறாள்.
உண்மையில், பத்மப்ரியா வந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது என்றால் மணிமேகலையால் நம்பவே முடியாது. அவ்வளவு நெருங்கி இருந்தார் அவர் மணிமேகலையுடன். நட்புக்கு வயது நிறம் மொழி என்ற எந்த வரைமுறையும் இல்லை அல்லவா? அவர் தான் வற்புறுத்தி அவரை பத்து என்று அழைக்க பழக்கி இருந்தார்.
சென்னை வந்ததில் இருந்தே வாழ்க்கையை ரசித்து வாழ தொடங்கி இருந்த மணிமேகலைக்கு பத்மப்ரியாவின் நட்பு மகிழ்ச்சிக்கான திறவுகோலானது.
மாதம் ஒரு முறை கீமோ கொடுக்க வேண்டும். அதிலே முன்னேற்றம் தெரிந்தால், ரேடியோதெரப்பி தேவை இல்லை என்று கூறி இருந்தார்கள் மருத்துவர்கள்.
போர்க்களத்தில் எத்தனையோ எதிரிகளுடன் நிமிர்ந்த நெஞ்சத்துடன் போரிட்டவருக்கு, அம்மாவின் நோயுடன் போராட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
வந்தியத்தேவன் அன்னையை கவனமாக பார்த்துக்கொண்டார் தான். ஆனால் மகனிடம் தன்னுடைய வலிகளை மறைத்துவிடுவார் பத்மப்ரியா. மணிமேகலைதான் அவரின் வலியை சொல்லாமலே புரிந்துகொண்டு ஆறுதலாக உடன் இருந்தார். நல்ல சத்தான உணவுகளை அவரே சமைத்து கொடுத்தார். கீமோ கொடுத்துவிட்டு வரும் நாட்களில் சோர்வாக இருந்தார் பத்மப்ரியா. கலகலப்பாக இருக்கும் அன்னையை அப்படி பார்க்கவே நெஞ்சம் கனத்து போனது வந்தியத்தேவனுக்கு. மணிமேகலையின் துணை அந்த நேரத்தில் மிகவும் தேவையாக இருந்தது. தனியாக அவரால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.
நோயின் தாக்கம் அதிகம் இருந்த போதிலும், அதை ஜெயித்து மீண்டு வரவேண்டும் என்ற அவரது வைராக்கியம் அதைவிட அதிகமாக இருந்தது. மணிமேகலைக்கு பிரமிப்பாக இருந்தது. அதை அவரிடமே ஒருமுறை கேட்டார்.
“முதல்ல ஒவ்வொரு மனுஷங்களும் தங்களை நேசிக்க வேண்டும் மேகா. நம்மளை நாம நேசிக்கலைன்னா வேற யார் நேசிப்பாங்க. சுய மரியாதை ஒருத்தவங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது சுயநேசிப்பு.. ஒரு படத்துல சொல்லுவாங்க காதலிச்சு பாரு, உலகமே அழகா தெரியும்னு.. அந்த காதல் நம்ம மேலே இருந்து தொடங்கினா உலகம் பேரழகா இருக்கும் ”
அம்மா கூறுவதை உள்ளறையில் இருந்த வந்தியத்தேவனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தார். “இந்த அம்மா பேசியே எல்லாரையும் மயக்கிடுவாங்க” என்று நினைத்து சிரித்து கொண்டார்.
“பத்து, நாளைல இருந்து நான் கொஞ்சம் பிசி ஆயிடுவேன்” என்றார் மணிமேகலை கொஞ்சம் சோகமகேவே.
“ஏன் மேகா, படிக்க நிறைய இருக்கா?”
“இல்ல பத்து, நாளைக்கு எங்க அப்பாவோட அம்மாவும் வராங்க”
அப்பா அம்மா வருகிறார்கள் என்ற மகிழ்ச்சியை விட ஒருவித பதற்றம் இருந்தது மணிமேகலையிடம்.
“அவங்க வர்றாங்கன்னு படிக்காம இருக்க கூடாது. இன்னும் ரெண்டு மாசம் தான் பரீட்சைக்கு இருக்கு”
“நீங்க வேற போங்க பத்து. ஏற்கனவே வரா வேற இதையே தான் சொல்லிட்டு இருக்கா.. சரி நான் கிளம்பறேன். இட்லிக்கு ஊற வச்சிருக்கேன். உங்களுக்கும் சேர்த்து தான் போட்டிருக்கேன். அரைச்சதும் பசங்க யார் கிட்டாவது கொடுத்து விடறேன்”
“சரி மேகா..”
மணிமேகலை கிளம்பியதும் தான் அறையில் இருந்து வெளியே வந்தார் வந்தியத்தேவன்.
“என்ன அம்மா உன் ப்ரண்ட் அந்த பொண்ணு ஒரே சோக கீதம் வாசிச்சிட்டு போகுது”
சுருக்கமாக மணிமேகலையின் கதையை கூறினார்.
“என்னம்மா அநியாயம் இது. இப்படி எல்லாமா இன்னும் நடக்குது. இவ தம்பிக்கு பிடிக்கலைன்னு படிப்பை நிப்பாட்டினது எல்லாம் ரொம்பவே அதிகம்”
“அது தெரியவே இந்த பொண்ணுக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கு”
“இந்த வாரம் அவங்க கிட்ட லன்ச் எல்லாம் போட சொல்லாதீங்க. நாமளே சமாளிச்சிப்போம்”
“எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். நீ இதுல எல்லாம் தலையிடாத போடா”
என்ன செய்யப்போறாங்களோ என்ற பீதியுடன் உள்ளே சென்றார் வந்தியத்தேவன்.