Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 06

அகல்கவி சிலையமுதே 06

 



Advertisement

“ஏங்க, இன்னைக்கு அண்ணியும் அவங்க புருஷனும் வர்றாங்களாம், மித்ராவ பொண்ணு பார்த்து பூ வைக்க போறதா சொல்றாங்க.. சீக்கிரமா போய் இந்த லிஸ்ட்ல இருக்குறத வாங்கிட்டு வாங்க.. ஏலே மித்து போய் குளிச்சிட்டு இருக்குறதுல நல்ல சேலையா எடுத்து கட்டிக்கோ.. எழுந்துருடீ!”

 

என்று மேகலை கணவனிடம் ஒரு லிஸ்ட்டை கொடுத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்த மித்ராவின் முதுகில் தட்டினார்.

Advertisement

 

Advertisement

ஏனோ சங்கரபாண்டிக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனால் மித்ரா எந்த பதிலும் சொல்லாததில் அவரும் அமைதியாக இருக்க, தாய் சொன்னதைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள் மித்ரா.

 

“என்ன சொல்றீங்க, மாமா என்கிட்ட இதை பத்தி சொல்லவே இல்லயே..” என்று சொல்லிக்கொண்டே தன் அலைப்பேசியை பார்த்தவள் வழக்கம் போல் திரையில் தெரிந்த யுவனின் ஏகப்பட்ட அழைப்புக்களை பார்த்து சலிப்பாக விழிகளை உருட்டினாள்.

Advertisement

 

“அடியே இங்க நான் காட்டு கத்து கத்திட்டு கெடக்கேன், நீ பல்ல கூட வெளக்காம எழுந்ததுமே அந்த ஃபோன நோண்டிக்கிட்டு இருக்க. இப்போ மட்டும் எழுந்திருக்கல…” என்றுக்கொண்டே மேகலை ஒரு அடி முன்னே வைக்க, “ச்சே” என்று எரிச்சல்பட்டவாறு குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டாள் அவள்.

 

அவசர அவசரமாக அவள் ஒரு எண்ணிற்கு அழைக்க, மறுமுனையில் அவள் அழைப்புக்களை ஏற்றபாடில்லை.

 

சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவள் வேறு வழியில்லாமல் குளித்து முடித்து தயாராக, சரியாக சங்கரபாண்டியின் வீட்டிற்குள் நுழைந்தார் முத்துப்பாண்டியும் பொன்னியும்.

 

“அகல் எங்க, பின்னாடி வர்றாளா என்ன..” என்று மேகலை எட்டிப் பார்த்தபடி கேட்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் இருவரும்.

 

“இல்ல அக்கா, அகலுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. வர முடியாதுன்னு சொல்லிட்டா. அதான்…” பொன்னி தயக்கமா இழுக்க, “ஓ… கல்யாணம் வரைக்கும் வந்து நின்னா எந்த பொண்ணுக்குதான் கஷ்டமா இருக்காது. அவளுக்கும் சரி குடும்பத்துக்கும் சரி பெருத்த அவமானம்தான். அகலோட ராசி அப்படியோ என்னவோ! எல்லாருக்கும் நினைச்ச மாதிரி எல்லாமே அமைஞ்சிருமா என்ன!” என்று வார்த்தைகளை விட்டார் சங்கரபாண்டி.

 

முத்துப்பாண்டிக்கு அந்த வார்த்தைகளில் ஒரு மாதிரியாகிப் போனது.

 

மனைவியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அமைதியாக, சரியாக வீட்டு வாசலில் வந்து நின்ற காரிலிருந்து கையில் தட்டோடு இறங்கினார் சாரதா.

 

கூடவே பின்னால் கருப்பு நிற பேன்ட் அடர்நீல நிற ஷர்ட் அணிந்து முகத்தில் தன்னவளை நினைத்து யோசனை மிதந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு உள்ளே வந்தான் யுவனாதித்.

 

பின்னால் சிவலிங்கத்தின் ஒருசில உறவினர்களும் சொந்தபந்தங்கள் என சொல்லிக் கொள்வதற்காகவே வந்திருக்க, அனைவரையும் வரவேற்று அமர வைத்து உபசரித்தனர் சங்கரபாண்டியும் மேகலையும்.

 

“மித்து எப்போ கல்யாணம் பண்ணுவீங்க மாமான்னு ஆசையா கேட்டுட்டு இருப்பா அதான் அவளுக்கு கூட சொல்லாம எல்லா ஏற்பாட்டையும் பண்ணோம். என்ன அண்ணே உங்க பொண்ணுக்கு இப்போ சந்தோஷமா?”

 

என்று சாரதா முகம் முழுக்க சந்தோஷத்தோடு கேட்க, சங்கரபாண்டியின் முகத்தில் எரிச்சல் மண்டியிருந்தது.

 

“அப்படிதான் நினைக்கிறேன்” என்று அலட்சியமாக ஒரு பதிலை சொன்னவர், “என்ன யுவா, இன்னும் அதே ஃபேக்டரிலதான் வேலையா? சம்பளம் ரொம்ப கம்மின்னு கேள்விப்பட்டேன்” என்று குத்தலாகக் கேட்க, “என்னங்க…” என்று கணவனை மெல்ல அதட்டினார் மேகலை.

 

ஆனால் யுவன் தடுமாறவில்லை.

 

“ஆமா மாமா, இப்போ கம்மிதான். பட் கூடிய சீக்கிரம் சம்பளத்த கூட்டுறதா சொல்லியிருக்காங்க. மித்துக்கு எந்த குறையும் இருக்காது, அவள ராணி மாதிரி பார்த்துக்குவேன்” என்றான் அவன் புன்னகையோடு.

 

அவனின் வார்த்தைகளில் சங்கரபாண்டியின் முகம் இறுக, “பொண்ண அழைச்சுட்டு வா!” என்று மனைவியிடம் சொல்ல, அடுத்த ஐந்தே நிமிடங்களில் அரக்கு நிற சேலையில் யுவன் முன்னே வந்து நின்றாள் மித்ரா.

 

அவள் முகத்தில் மருந்துக்கும் சந்தோஷத்திற்கான சாயல் இல்லை. அதை யுவனும் கவனிக்கத்தான் செய்தான்.

 

“மித்ரா இவன பார்க்குறது ஒன்னும் புதுசில்ல இருந்தாலும் கேக்குறேன்.. மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?” என்று சாரதா கேலியாகக் கேட்க, விழிகளை மட்டும் நிமிர்த்து யுவனைப் பார்த்தாள் அவள்.

 

அவள் யுவனை காதலித்தாள்தான். ஆனால் இப்போது அவளுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.

 

வரவழைக்கப்பட்ட புன்னகைப் புரிந்தவாறு, “ம்ம்..” என்று மட்டும் அவள் சொல்ல, ஆடவனோ விழிகளை கூர்மையாக்கி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

பொன்னியும் முத்துப்பாண்டியும் எந்த பேச்சு வார்த்தைகளிலும் தலையிடவில்லை. கூடவே சிவலிங்கமும்.

 

நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் நடந்து முடிந்து, கொண்டு வந்த மல்லிகை சரத்தையும் மித்ராவுக்கு சூடி விட்டு யுவனின் பக்கத்தில் அவளை அமர வைத்தார் சாரதா.

 

“மாமா.. மாமா..” என்று செல்லம் கொஞ்சுபவள் இன்று முகத்தில் யோசனையை தத்தெடுத்தது போல அமரர்ந்திருக்க, “நீ நெஜமாவே சந்தோஷமாதான் இருக்கியா மித்து?” என்று அவளின் காதருகே மெல்ல குனிந்து கேட்டான் யுவன்.

 

அவனை திரும்பியும் பார்க்காது அவள் தலையை மட்டும் ஆட்டி வைக்க, “ஒருவேள உனக்கு சொல்லாம பண்ணேன்னு கோபமா இருக்கியா?” என சட்டென்று கேட்டான் அவன்.

 

அதற்கும் வாயைத் திறக்காது இல்லையெனும் விதமாக அவள் தலையாட்ட, சுற்றிமுற்றி ஒரு பார்வை பார்த்தவன், “பட்… ஏன் என்கூட பேச மாட்டேங்குற மித்து? நான் ஏதாச்சும் தப்பு பண்ணேனா, என்னன்னு சொல்லு கண்டிப்பா நான் உனக்கக எதுன்னாலும் செய்வேன்” என்றான் தழுதழுக்கும் குரலில்.

 

அவனுடைய இடக்கரம் அவளின் வலது கரத்தை யாசிப்பது போல பற்றியிருக்க, சடாரென அவனை திரும்பிப் பார்த்த மித்ராவுக்கு தன்னை மீறி ஒரு குற்றவுணர்ச்சி உள்ளுக்குள் எழுந்தது.

 

அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் அவள் விழிகள் அலைபாய, அதேநேரம் தனதறையில் தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் அகல்யா.

 

விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் தடம் கன்னத்தில் காய்ந்துப் போயிருக்க, தொண்டையை அடைத்துக்கொண்டிருந்த அழுகையை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

 

அழுது அழுது ஓய்ந்து போய் உடல் திராணியின்றி இருக்க, இன்னமும் மனம் முழுக்க வேதனைதான்..

 

யாரிடமும் சொல்லி அழக் கூட முடியாத நிலை..

 

ஆனால் அந்த ஒருவனோடு இணைவது என்பது இனி நடக்காத காரியமும் கூட..

 

தற்கொலை செய்ய மனம் சொன்னாலும் மூளை தைரியத்தை மட்டும் வரவழைக்க மறுத்தது.

 

தனக்குள்ளேயே தன் நினைவுகளையும் வேதனையையும் அடைத்தபடி அகல்யா இருக்க, நாட்களும் ஓடியது.

 

அன்று..

 

“இன்னும் ஒரு வாரத்துல மித்ரா யுவனோட நிச்சயதார்த்தம் இருக்கு அகல், காசு இல்லன்னு சாரதா சொன்னா, ஆனா மகனோட விசேஷத்த பெருசா பண்ணணும்னு ஆசை வேற.. நீ.. நீ வருவியா?”

 

என்று பொன்னி சமையலை கவனித்தபடி மகளிடம் கேட்க, காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தவளின் விரல்கள் ஒருசில கணங்கள் வேலை நிறுத்தம் செய்தது.

 

“ம்ம்..” என்று மட்டும் அவள் சொல்லிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர, “மறுபடியும் நின்னு போன உன் கல்யணத்த பத்தி எனக்கு பேச விருப்பம் இல்லைதான். ஆனா.. நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா அகல்?” என்று கேட்டார் பெரியவர்.

 

அவளோ மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது போல அமைதியாக இருக்க, “அது… மண்டபத்துக்கு வரதுக்கு முன்னாடி மாப்பிள்ள உன்கூட பேசணும்னு உன் ரூமுக்கு வந்தாருல்ல, அதுக்கப்பறம்தான் அவர் கல்யாணத்தையே வேணாம்னு சொல்லியிருக்காரு. அப்படி என்னாச்சு?” என்று கேட்டார் அவர்.

 

அகல்யாவோ தன் தாயை சிறு அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்க, அவரோ குறுகுறுவென்று தன் மகளைதான் சந்தேகப் பார்வை பார்த்தபடி நின்றிருந்தார்.

 

“அது.. அது வந்து.. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொன்னேன். அம்புட்டுதான்” அவள் சொல்லிவிட்டு தலையை குனிந்துக்கொள்ள, ‘ஒருவேள அதுவா இருக்குமோ!’ என்று ஏதோ ஒரு விஷயத்தை தனக்குள் நினைத்துக்கொண்டவர் அதற்குமேல் கேள்வி கேட்காமல் அங்கிருந்து நகர, திடீரென வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

 

பொன்னிதான் சென்று பார்த்தார்.

 

வாசலில் புன்னகையோடு நின்றிருந்தவனைப் பார்த்தவர், “யுவா தம்பி வா வா, உள்ள வா.. என்ன இந்த பக்கம்?” என்று உற்சாகமாக கேட்டுக்கொண்டே அவனை நோக்கிச் செல்ல, “இங்க பக்கத்துல என் ஃப்ரென்ட்ட பார்க்க வந்தேன், அதான் அப்படியே உங்ளையும் அகலையும் பார்த்துட்டு போகலாமேன்னு…” என்று இழுத்தவாறு சோஃபாவில் அமர்ந்துக்கொண்டான் யுவன்.

 

அகல்யாவோ ஹாலை எட்டிப் பார்த்தவள் சத்தம் எழுப்பாமல் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துக்கொள்ள, அவனோ அகல்யாவைத் தேடி வீட்டை சுற்றி முற்றிப் பார்த்தான்.

 

“அத்தை, அகல் இல்லையா, எங்கேயாச்சும் வெளியில போயிருக்காளா என்ன?” என்று அவன் அவளைத் தேடியவாறுக் கேட்க, “ச்சே ச்சே! உள்ளதான் இருக்கா தம்பி” என்ற பொன்னி, “அகலு.. அடியே அகலு..” என்று குரல் எழுப்பினார்.

 

உள்ளே எட்டிப் பார்த்தவன், “அத்தை அது வந்து.. அகல் இப்போ ஓகேதானே, நடந்ததையே நினைச்சுட்டு இருக்காளா?” என்று தயக்கமாகக் கேட்க, “அதெல்லா இல்ல யுவா தம்பி, ஆனா நான்… நான் உன்கிட்ட ஒன்னு…” என்று ஆரம்பித்த பொன்னியின் வார்த்தைகள் கையில் ஜூஸ் க்ளாஸோடு வந்த அகல்யாவை பார்த்ததும் சட்டென நின்றது.

 

அவளோ தன் தாயை சந்தேகமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு யுவனிடம் குனிந்து தட்டை நீட்ட, அவனும் அவளைப் பார்த்து புன்னகையோடு க்ளாஸை எடுத்துக்கொண்டான்.

 

“அகல், அன்னைக்கு நீ ஏன் வரல? என்கேஜ்மென்ட்டுக்கு கண்டிப்பா வரணும் புரியுதா..” என்று கேட்டவன் ஏதோ ஞாபகம் வந்தவனாக, “எதுக்காக வந்தேன்னே மறந்துட்டேன் பாரேன்.. இது உனக்காகதான்” என்று அவளிடம் ஒரு பார்சலை நீட்டினான்.

 

அகல்யாவோ கேள்வியாக அவனைப் பார்த்தபடி அதை வாங்கிக்கொண்டவள், பார்சலை பிரித்துப் பார்த்துவிட்டு அவனை புரியாமல் பார்த்தாள்.

 

“மித்ராவோட நான் எந்தளவுக்கு பாசமோ அதே மாதிரிதான் நீயும்.. யுகா..” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து முகம் சிவக்க தன் வார்த்தைகளை அவன் நிறுத்திக்கொள்ள, அகல்யாவின் முகமும் இறுகிப் போனது.

 

“அது.. அது வந்து.. எங்க ஃபங்ஷனுக்கு இதைதான் நீ கட்டிக்கணும்” அவனுடைய வார்த்தைகள் தடுமாறின.

 

பொன்னியோ நிலைமையை மாற்றும் பொருட்டு, “அட யுவா.. அகலுக்கு மட்டும்தானா, இந்த அத்தைக்கு எதுவும் இல்லயா?” என்று பொய்யாய் குறை பிடிக்க, “அய்யோ அத்தை அப்படிலாம் இல்ல..” என்று சமாளிக்க முயன்றான் அவன்.

 

“சும்மா ஜோக்கு ஜோக்கு.. அத்தை உன் கூட விளையாடினேன். சரிப்பா, சமையல் முடிச்சாச்சு, எந்த காரணமும் சொல்லாம சாப்பிட்டுதான் போகணும்” என்ற பெரியவர், “நீங்க பேசிட்டு இருங்க, இதோ வர்றேன்..” என்றுவிட்டு  உள்ளே செல்ல, இப்போது அந்த இடத்தில் இருவர் மட்டுமே..

 

அகல்யாவோ அமைதியாக ஒரு இடத்தையே வெறித்தவாறு அமர்ந்திருக்க, கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருந்தவனுக்கு இப்போது என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

 

அவன் ஒருபக்கம் பார்க்க இவள் இன்னொரு பக்கம் பார்க்க என்று நிமிடங்களும் கடக்க, வழக்கத்திற்கு மாறாக மௌனத்தை கலைத்தது அகல்யாதான்.

 

“மாமா..” அவள் அழைக்கவும் வெடக்கென்று திரும்பிப் பார்த்தவன், “சொல்லு அகல்..” என்று வேகமாகக் கேட்டான்.

 

“அது வந்து மாமா.. மித்து அக்காவ உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று அவள் கேட்ட கேள்வியில் புருவத்தை நெறித்தான் யுவன்.

 

“என்.. என்ன மாதிரியான கேள்வி இது? நா.. நானும் அவளும் சின்ன வயசுலயிருந்து காதலிக்கிறோம். உனக்கு தெ.. தெரியும்ல” யுவனின் வார்த்தைகள் அவளின் கேள்வியில் உண்டான அதிர்ச்சியில் தடுமாற, “ஓ..” என்றதோடு முடித்துக்கொண்டவள் மீண்டும் தரையை வெறித்தபடி அமர்ந்துக்கொண்டாள்.

 

யுவனும் அவளை சந்தேகமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேக்க வர, அதற்குள் அவனுக்கொரு அழைப்பு.

 

திரையைப் பார்த்தவன் புருவ முடிச்சுகளோடு வாசல் புறம் சென்று நின்று அழைப்பையேற்று காதில் வைத்தான்.

 

“ஹெலோ சொல்லுங்க சார்…” அவன் பவ்வியமாக பேச, மறுமுனையில் அவனுடைய மேனேஜர் சுந்தரம்தான்.

 

“கொஞ்சம் இருப்பா, ஐயா உன் கூட பேசணுமாம்” அவர் சொல்லிவிட்டு அலைப்பேசியை அந்த ஃபேக்டரி ஓனர் ராஜேந்திரனிடம் கொடுக்க, யுவனுக்கு பக்கென்று இருந்தது.

 

‘எதுக்கு இவர் பேசணும்னு சொல்றாரு.. ஒருவேள நான் அன்னைக்கு பண்ண வேலைய இந்த மங்கூஸ் மண்டையன் போட்டு கொடுத்திருச்சோ.. ஒருவேள நம்மள வேலைய விட்டு தூக்க போறாரோ.. அய்யய்யோ! இந்த வேலையும் போச்சுன்னா சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்’

 

அவனுடைய மூளை எக்குத்தப்பாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.

 

இதயம் படபடக்க, “ஹெ.. ஹெலோ சார்..” என்று அவன் வார்த்தைகளைக் கோர்த்து சொல்ல, “ஹெலோ..” என்ற கணீர் குரல் மறுமுனையில்.

 

“தம்பி, அன்னைக்கு நீ மிஷின ரிப்பேர் பண்ணல்ல, உனக்கு அந்த வேலைங்க கூட தெரியுமா?” என்று அவர் கேட்க, “அது.. ஆமா சார் நான் இன்ஜினியரிங்தான் படிச்சேன்.. டுபாய்ல இந்த மிஷின் ரிப்பேரிங் கம்பனி ஒன்னுலதான் அஞ்சு வருஷமா வேலை பார்த்தேன். அதனால கொஞ்சோன்னு தெரியும்.. அதை வச்சுதான் அன்னைக்கு அந்த மிஷின சரிபார்த்தேன்.. ஏ.. ஏன் கேக்குறீங்க சார்?”

 

அவனுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது.

 

“அது வந்து தம்பி, நீ நல்ல காரியம் பண்ணியிருக்க. அந்த மிஷின் கூட இப்போ நல்லாவே வேலை பார்க்குது..  அதான் நான் உனக்கு ஒரு ஆஃபர் கொடுக்கலாம்னு இருக்கேன்…” என்று ராஜேந்திரன் இழுக்க, யுவனுடைய புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.

 

அவரும் ஆழ்ந்த மூச்செடுத்து, “எனக்கு சொந்தமா பல பிஸ்னஸ் இருக்கு. அதுல ஒன்னுதான் மிஷின் ரிப்பேரிங் கம்பனி.. ரொம்பநாளா அந்த கம்பனியில வேலைக்கு ஆள் தேடிட்டு இருக்கேன். நீ வேணா அந்த கம்பனில ஜாய்ன் பண்றியா? இப்போ எடுக்குற சம்பளத்த விட டபுளா வேணா கூட்டி கொடுக்குறேன்.. என்ன சொல்ற” என்று கேட்டுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்க, அதிர்ந்துவிட்டான் யுவன்.

 

“என்ன சார் சொல்றீங்க.. நெஜமாவா?” என்று அதிர்ச்சி குறையாத குரலில் அவன் கேட்க, “ஆமா தம்பி.. நான் உன்ன வற்புறுத்தல, உன்னோட விருப்பம். நல்லா யோசிச்சு சொல்லு..” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.

 

யுவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

 

இத்தனைநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த அகல்யா புருவ முடிச்சுகளோடு அவனருகே வந்து, “என்னாச்சு மாமா, ஏதாச்சும் பிரச்சனையா?” என்று புரியாமல் கேட்க, அவளை வேகமாகத் திரும்பிப் பார்த்தான் யுவன்.

 

அவன் முகத்தில் தெரிந்த பாவனையில் அவள் விழிக்க, அடுத்தகணம் ஆடவனோ அவளே எதிர்பார்க்காது சந்தோஷத்தில் அவளை தாவி அணைத்துக்கொ ண்டான்.

 

“அகலு எனக்கு ஆஃபர் கிடைச்சிருக்கு” அவன் உற்சாகக் குரலில் கத்த, அவன் அணைப்புக்குள் சிறைப்பட்டிருந்தவளின் விழிகளோ சாரசர் போல் விரிந்திருந்தன.

 

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!