Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 07

 

அகல்கவி சிலையமுதே 07

 



Advertisement

 

ஒரு வாரமும் உருண்டோடி நாளை நிச்சயதார்த்தம் என்றிருக்க, இன்று யுவனின் வீட்டில்,

 

Advertisement

நாளை நிச்சயதார்த்திற்கு நாளை காலையில் ஊருக்கு புறப்பட்டால் களைப்பு தொற்றிவிடும் என்று எண்ணி இன்று மதியமே வெளியேறி ஊரிலிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு சொந்தங்களோடு வந்திறங்கினான் யுவனாதித்.

Advertisement

 

“அப்பாடா! வந்தாச்சு… எல்லாரும் போய் நல்லா ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு அதுஇதுன்னு சாக்குபோக்கு சொல்ல கூடாது புரியுதா..” என்று சாரதா சொல்லிக்கொண்டே அறையிலிருந்த கட்டிலில் அமர்ந்தபடி, “டேய் யுவா, இந்த கட்டில் மெத்தை நல்லா புசுபுசுன்னு இருக்குல்ல, உன் கல்யாணத்துக்கு இது மாதிரிதான் வாங்கணும். இப்போவே பார்த்து வச்சாதான் உண்டு” என்று பேசிக்கொண்டே போனார்.

 

Advertisement

ஆனால், அவனோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கட்டிலில் சாய்ந்திருந்தபடி தாய் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவனின் முகம் தன்னவளுடனான திருமணத்தையும் கூடலையும் எண்ணி வெட்கத்தில் சிவந்திருக்க, இதழிலும் அதே வெட்கப் புன்னகை.

 

சிறுவயதிலிருந்து அவளைப் பார்க்கிறான். இந்த ஒரு நாளுக்காக எத்தனை வருடங்கள் தவம் இருந்திருப்பான்.

 

நாளை அனைத்தும் கூடி வரப் போகிறதென்ற சந்தோஷம் அவனுக்குள் பொங்கி வழிந்தது.

 

சிவலிங்கமோ வந்திருக்கும் அவரின் சொந்தபந்தங்கள் குறை பிடித்திடக் கூடாதென்றே இரவுணவிலிருந்து அனைத்தையும் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டிருக்க, பயணக் களைப்பில் அமர்ந்த நிலையிலேயே சுவற்றோடு சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டார் சாரதா.

 

ஆழ்ந்த தூக்கத்திற்கு கூட சென்றிருக்க மாட்டார், அவரின் தூக்கத்தை கலைப்பது போல் அவர் அலைப்பேசி அலறியது.

 

“ச்சே! நிம்மதியா தூங்க கூட முடியாது போல” எரிச்சல்பட்டு முணங்கியவாறு அலைப்பேசி திரையை பார்த்தவர், ‘அண்ணன் எதுக்கு இந்த நேரத்துல கால் பண்றாரு?’ என்று திரையில் தெரிந்த சங்கரபாண்டியின் எண்ணைப் பார்த்து யோசித்தபடி அழைப்பையேற்று காதில் வைத்தார்.

 

“அண்ணே…” என்று சாரதா அழைத்ததும், “அது சாரதா.. ஊருக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்டார் சங்கரபாண்டி திக்கித்திணறியபடி.

 

சாரதாவுக்கு அண்ணனின் குரலில் ஏதோ மாற்றம் தெரிந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல், “ஆமா அண்ணே இங்க வந்து அரைமணி நேரம் இருக்கும்.. ஏன் கேக்குறீங்க?” என்று புரியாமல் கேட்க, “அது வந்தும்மா… அது.. மித்ரா..” எப்படி சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார் சங்கரபாண்டி.

 

சாரதாவுக்கு அந்த தடுமாற்றமே இதயத்தின் படபடப்பை கூட்ட, இத்தனைநேரம் சாய்ந்தபடி தாயின் முகபாவனைகளை உற்று கவனித்துக்கொண்டிருந்த யுவன் அவர் முகத்தில் தெரிந்த பதட்டத்தைப் பார்த்து வேகமாக அவரருகே வந்தான்.

 

“என்னாச்சும்மா?” என்று யுவன் சைகையில் கேட்க, ‘கொஞ்சம் இருடா!’ என்று பதிலுக்கு சைகை செய்தவர் அடுத்து சங்கரபாண்டி சொன்ன செய்தியில் ஆடிப்போய் விட்டார்.

 

“என்ன.. என்ன அண்ணே சொல்றீங்க?” சாரதாவின் குரலில் பதட்டம் உச்சத்தை தொட, அதற்குமேல் பொறுமையின்றி தாயின் கரத்திலிருந்த அலைப்பேசியை பிடுங்கியெடுத்து காதில் வைத்தான் யுவன்.

 

“என்னை மன்னிச்சிரும்மா… மித்ரா இப்படியொரு காரியத்த பண்ணுவான்னு நாங்களும் எதிர்பார்க்கல, அவ காலேஜ்ல படிக்குற பையனோட ஊரை விட்டே போயிட்டா.. மன்னிச்சிரும்மா சாரதா..”

 

என்று வேதனை நிறைந்த குரலில் அவர் பேசிக்கொண்டே போக, ஒருகணம் உலகமே தலைகீழாக சுற்றிவிட்டது அவனுக்கு.

 

கையிலிருந்த அலைப்பேசி நழுவி தரையில் விழ, சாரதாவோ மகனைப் பிடித்து அழுத அழுகை சத்தம் கேட்டு பக்கத்து அறைகளிலிருந்த சொந்தபந்தங்களோ இவர்களின் அறைக்கு ஓடி வந்தனர்.

 

சிவலிங்கமும் பதட்டமாக வந்தவர், மனைவி தலையிலடித்து அழுவதைப் பார்த்து “என்னாச்சு, டேய் யுவா என்னன்னு சொல்லுடா!” என்று மகனை உலுக்க, எதையும் உணரும் நிலையிலில்லை அவன்.

 

‘ஏன் மித்து இப்படி பண்ண, அப்போ நெஜமாவே நீ என்னை காதலிக்கலயா?’

 

மானசீகமாக கேட்டுக்கொண்டவனுக்கு இதயத்தை கசக்கிப் பிழிவது போன்ற வலியெடுத்தது.

 

“எங்கள இப்படி ஏமாத்திட்டாளே பாவி! அவ நல்லா இருப்பாளா.. என் புள்ளையோட வாழ்க்கைய கெடுத்துட்டாளே! அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்? இவ்வளவு தூரம் கொண்டு வந்து எங்கள ஏமாத்தியிருக்கா..” என்று சாரதா அழுதுக்கொண்டே புலம்ப, சிவலிங்கத்திற்கு தன் மனைவி  மகனை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.

 

வந்திருக்கும் சொந்தங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்!

 

வாய்க்கு வந்ததைப் பேசி எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றும் வேலையை சிறப்பாக செய்ய, சிவலிங்கமோ ஒரு முடிவு எடுத்தவராக மகனையும் மனைவியையும் மட்டும் அழைத்துக்கொண்டு சங்கரபாண்டியின் வீட்டை நோக்கிச் சென்றார்.

 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஹாலில் அத்தனை பேரும் கூடியிருக்க, ஆளுக்காள் பேச, அந்த வீடே கலவரமாக இருந்தது.

 

“பொண்ண ஒழுங்கா வளர்த்திருக்கணும், இப்போ பாருங்க. என் பையனோட வாழ்க்கைல்ல நாசமா போயிருச்சு”

 

“நாங்களே நொந்து போயிருக்கோம், நீங்க மேல இப்படி பேசி எங்கள நோகடிக்காதீங்க..”

 

“அந்த பையன் பெரிய இடத்தாளாமே! கொஞ்சநாளா உங்க பொண்ணு அவன் கூட சுத்திட்டு இருந்ததை நிறைய பேர் பார்த்திருக்காங்க..  இங்க யாரையும் நம்ப முடியாது. எப்படி வேணா மனசு மாறும்”

 

என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்க, யுவனோ ஒரு வார்தைத்க் கூட பேசவில்லை.

 

கைகளைக் கோர்த்து முட்டியில் ஊன்றி தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் அவன்.

 

“என் பையனுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும், உங்களுக்கு ஏற்கனவே இந்த கல்யாணத்துல பிடித்தம் இல்ல. ஒருவேள நீங்கதான் உங்க பொண்ண…” என்று சிவலிங்கம் சங்கரபாண்டியை கூரிய பார்வைப் பார்த்தபடி பேச, அவரோ தன் மச்சானை தீயாய் முறைத்தார்.

 

“வார்த்தைய அளந்து பேசுங்க.. நான்தான் என் பொண்ண கூட்டி கொடுத்தேன்னு சொல்றீங்களா..” அவர் பதிலுக்கு கோபமாகக் கத்த, இருவருக்குமிடையிலான வாக்குவாதம் வெடித்தது.

 

“இதுல ஆரம்பத்துலயிருந்து எனக்கு விருப்பம் இல்லதான். ஒன்னுமே இல்லாத இவனுக்கு பொண்ண கொடுக்க எனக்கு பிடிக்கல, அதை பத்தி என் பொண்ணுகிட்ட கூட பேசினேன்.. அதுக்காக அவள இன்னொருத்தன் கூட ஓடி போக சொல்ற அளவுக்கு கேவலங்கெட்ட அப்பன் இல்ல நானு..”

 

சங்கரபாண்டி உச்சஸ்தானியில் கத்த, இத்தனை நேரம் அமைதியாக அமர்ந்திருந்த யுவனோ தன் மாமாவின் வார்த்தைகளில் நிமிர்ந்து அவரை வலி நிறைந்த ஒரு பார்வைப் பார்த்தான்.

 

ஏற்கனவே நொந்துப் போய் கிடப்பவனின் ரணத்தை மேலும் குத்திக் கிழிப்பது போல அவனுக்குள் வலித்தது.

 

கண்களிலிருந்து கண்ணீர் வழிய, ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்தவனுக்கு இவர்களின் சம்பாஷனைகளை கேட்கவும் முடியவில்லை.

 

“போதும்…” அவனின் அந்த ஒரு கத்தல் அந்த இடத்தை மயான அமைதியாக்க, “இங்கயிருந்து போலாம்” என்று தன் ததையை பார்த்து சொன்னபடி வெளியேறி நடந்தான்.

 

மேகலையோ தன் மகள் செய்த காரியத்தை நினைத்து நினைத்து ஒரு மூலையைப் பிடித்து அழுது கரைய, சோஃபாவில் தொப்பென்று அமர்ந்த சங்கரபாண்டிக்கு அவமானத்தில் முகம் கறுத்துப்போய் இருந்தது.

 

இத்தனை நேரம் நடப்பதை ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த முத்துப்பாண்டியோ மெல்ல மனைவியின் காதருகே குனிந்து, “எல்லாமே நமக்கு சாதகமா அமையுதுல்ல, கடவுள் நம்ம பக்கம் இருக்கான் போல..” என்றார் வெற்றிக் களிப்பில்.

 

உடனே சுற்றிமுற்றி பார்த்துவிட்டு முழங்கையால் கணவனின் வயிற்றில் குத்திய பொன்னி, விழிகளாலே அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு தன் சந்தோஷத்தை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டார்.

 

அதன் பிறகு வந்த நாட்களில் மித்ராவைப் பற்றிய பேச்சு வார்த்தை வெகுவாக குறைந்துப் போயிருக்க, யுவனின் நாட்களோ உயிர்ப்பே இல்லாமல் சென்றுக்கொண்டிருந்தன.

 

காலை வேலைக்கு செல்வதும் வருவதும் பின் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுமாக அவன் தன்னைத்தானே ஒடுக்கிக்கொள்ள, தன் மகனின் நிலையில் பரிதவித்துப் போய்விட்டார் சாரதா.

 

வேதனையில் புலம்புவதும் மித்ராவை கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சரிப்பதுமாக அவர் தன் மன ஆதங்கத்தை கொட்ட முயற்சிக்க, சிவலிங்கமும் மகனின் இயந்திர வாழ்க்கையை கவனிக்காமல் இல்லை.

 

எப்போதும் முகத்தில் ஒரு மென்மையும் கூடவே சிறு புன்னகையோடும் வலம் வருபவனின் முகத்தில் இப்போது மருந்துக்கும் புன்னகையில்லை.

 

யாருடனும் பேசாது ஒதுங்கிச் செல்பவனை அவ்வப்போது அரவிந்த் மட்டும் வெளியில் எங்கேயாவது இழுத்துக்கொண்டு செல்வான்.

 

இப்படியே நாட்கள் ஓடி கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில், அன்று..

 

வழக்கம் போல் இரவுணவை முடித்துவிட்டு அறைக்குள் முடங்கிக்கொண்டவன் கட்டிலில் படுத்தபடி அலைப்பேசியை நோண்டிக்கொண்டிருக்க, சரியாக அந்த பெயர் தெரியாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தது.

 

“குட் நைட், இனிமே உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்” என்றொரு குறுஞ்செய்தி..

 

அதைப் பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட, அதற்கு பதில் அனுப்பச் சென்றவன் பின் என்ன நினைத்தானோ!

 

அலைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

 

அடுத்தநாள் மாலை வேலை முடித்துவிட்டு தன்னை சந்திக்க வந்த அரவிந்தை அழைத்துக்கொண்டு வீதியோரமாக இருந்த இட்லி பெட்டி கடையொன்றில் அமர்ந்துக்கொண்டான் யுவன்.

 

இரண்டு தட்டுகளில் சுடச்சுட சம்பார் ஊற்றப்பட்ட இட்லி இவர்களின் கைக்கு வர, அதை ஒரு வாய் பிய்த்து சாப்பிட்டபடி தன் நண்பனை குறுகுறுவென்று பார்த்தான் அவன்.

 

அரவிந்தும் சாப்பிட்டவாறு யுவனின் பார்வையில் ஜெர்க்காகி, “என்னாச்சுடா மச்சான் எதுக்கு என்னை இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க?” என்று புரியாமல் கேட்க, “உண்மைய சொல்லு, அது நீதானே?” என்று கேட்டான் யுவன் பதிலுக்கு.

 

தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவன் கேட்ட கேள்வி அரவிந்துக்கு சுத்தமாக புரியவில்லை.

 

“எது நான்தானே?” புரியாமல் அவன் நண்பனின் பதில் வர, “எனக்கு ராத்திரி பொண்ணுங்க மாநிரி மெசேஞ் பண்ற கபோதி நீதானேடா, என்னை ப்ரேன்க் பண்றியா என்ன?” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான் அவன்.

 

‘ஙே’ என யுவனை மெலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்து வைத்த அரவிந்த், “அடிங்க.. என்னை என்னடா நினைச்சுட்டு இருக்க? எனக்கு வேற வேலை இல்லை பாரு..” என்றான் சிலிப்பிக்கொண்டு.

 

யுவனின் புருவங்கள் யோசனையை தத்தெடுக்க, உதட்டை சுழித்து தீவிரமாக யோசித்தவன், தன் அலைப்பேசியை எடுத்து அந்த எண்ணிலிருந்து வந்திருந்த வாட்சப் குறுஞ்செய்திகளை அரவிந்திடம் காண்பிக்க, அவனும் யோசனையோடு அதை பார்த்தான்.

 

“இந்த நம்பர்க்கு கால் பண்ணுடா, யாருன்னு தெரிஞ்சிரும்” என்று அவன் தன் யோசனையை சொல்ல, “அதெல்லா பண்ணிட்டேன், கால் ஆன்சர் பண்ண மாட்டேங்குறாங்க..” என்று சலிப்பாக சொன்ன மற்றவன் அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாக, “டேய் உன்கிட்ட ட்ரூ கால்லர் இருக்குல்ல, அதுல போட்டு பாரு தெரிஞ்சிரும்” என்றான் வேகமாக.

 

அரவிந்தும் அவன் கொடுத்த எண்ணை சேமித்துவிட்டு யாருடைய எண்ணென்று  அந்த ட்ரு காலர் ஆப்பில் பார்க்க, அடுத்தநொடி அவனுடைய புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.

 

“பொதுவா ட்ரூ கால்லர்ல ஒரு நம்பர ஆளுங்க அதிகமா எப்படி சேவ் பண்ணி வச்சிருக்காய்ங்களோ அந்த நேம்தான் காமிக்கும்.. ஆனா இதுல… இப்படியெல்லா கூடவா சேவ் பண்ணுவாய்ங்க” அரவிந்த் சிறு அதிர்ச்சியோடுக் கேட்க, உடனே அலைப்பேசியை பிடுங்கிப் பார்த்தவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

 

நீண்ட நாட்கள் கழித்து அவனுடைய இதழ்கள் புன்னகையில் விரிய, ‘நீதானா..’ என்று நினைத்துக்கொண்டவன் உண்டு முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

 

குளித்து உடை மாற்றி கட்டிலில் தொப்பென்று விழுந்தவனுக்கு களைப்பில் தானாக விழிகள் மூடிக்கொள்ள, சட்டென குறுஞ்செய்தி வந்த ஒலி..

 

கொடுப்புக்குள் சிரித்தவாறு அலைப்பேசியை எடுத்தவன், “குட் நைட், நல்லதே நடக்கும்,  சீக்கிரம் சந்திக்கலாம்” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்து இதழில் உறைந்த புன்னகையோடு, “அது எப்போன்னு நீயே சொல்லு அகலு” என்றான் பதிலுக்கு.

 

இங்கு மறுமுனையிலோ அவனின் பதில் குறுஞ்செய்தியைப் பார்த்த அகல்யா ‘மாட்டிக்கிட்ட பரட்ட’ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டவாறு தலையிலடித்துக்கொண்டாள்.

 

“எப்படி கண்டுபிடிச்சீங்க மாமா?” என்று அவள் புரியாது கேட்க, “ட்ரூ காலர்ல கண்டுபிடிச்சேன். இது மாமாவோட பழைய நம்பர் போல, ஊர்ல பாதி பேரு கஞ்சபயலுன்னு தான் சேவ் பண்ணியே வச்சிருந்திருக்காய்ங்க..” என்று சொல்லி சிரிக்கும் எமோஜி முகத்தை அனுப்பினான்.

 

அதைப் பார்த்து நாக்கைக் கடித்துக்கொண்டவளுக்கே சிரிப்புதான் வந்தது.

 

அவளும் பதிலுக்கு சிரிப்பது போல அனுப்பி வைத்து, “குட் நைட் மாமா” என்று சொல்ல, அதற்கு பதில் வந்தால்தானே!

 

அவன்தான் அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியோடே உறங்கிவிட்டானே!

 

அடுத்து வந்த நாட்களும் அகல்யா இந்த ‘குட் நைட்’ மெசேஜை மட்டும் விடவே இல்லை.

 

அவன் பதில் சொல்கிறானோ இல்லையோ தன் ஆசைக்கு அனுப்பிவிட்டு இருந்துவிடுவாள்.  கூடவே, அவனும் ஒருசில வார்த்தைகள்தான் பேசுவான்.

 

தற்போதிருக்கும் அவனின் மனநிலை அவளுக்கு புரியாமல் இல்லை. அவனுடைய வார்த்தைகள் தன்னிடமும் வெகுவாக குறைந்திருப்பதை அவள் உணராமலும் இல்லை.

 

அவனின் மனநிலை புரிந்தே மித்ரா பற்றி கேட்பதை முற்றாக தவிர்த்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

அன்று சாரதா சீரியலை பார்த்தவாறு உடைகளை மடித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருக்க, ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த சிவலிங்கமோ தன் மனைவியை அதே யோசனையோடு பார்த்தார்.

 

“சாரதா..” அவர் அழைக்கவும் திரும்பியவர், “என்னங்க?” என்று புரியாமல் கேட்க, “அது.. நான் ஒன்னு யோசிச்சேன்..” என்று வார்த்தைகளை இழுத்தார் சிவலிங்கம்.

 

அவர் மனைவியோ கேள்வியாகப் பார்த்துக்கொண்டிருக்க, “பேசாம யுவனுக்கு அகல்யாவ கட்டி வச்சிருவோமா?” என்று அவர் கேட்டதும்தான் தாமதம், தான் மடித்து வைத்திருந்த உடைகளை கோபத்தில் தூக்கியெறிந்தார் சாரதா..

 

அதுவோ அப்போதுதான் அறையிலிருந்து வெளியே வந்த யுவனின் காலடியில் சென்று விழ, தன் தாயின் கோபத்திற்கான காரணம் புரியாமல் விழித்தான் அவன்.

 

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!